Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சிறிய உடல், பெரிய மனசு

சிறிய உடல், பெரிய மனசு

சிறிய உடல், பெரிய மனசு

சுமார் இரண்டரை அடி உயரமே உள்ள ஒருவர் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி முன்பின் அறிமுகமில்லாதவர்களிடம் பேசுவது என்றால் எப்படி இருக்கும்? லாரா சொல்வதை கவனியுங்கள். 33 வயது நிரம்பிய லாராவின் உயரம் வெறும் 76 சென்டிமீட்டர் தான். 24 வயது நிரம்பிய லாராவின் சகோதரி மரியாவின் உயரம் 86 சென்டிமீட்டர். இவர்கள் ஈக்வடாரிலுள்ள குய்ட்டோ நகரைச் சேர்ந்தவர்கள். கிறிஸ்தவ ஊழியத்தில் அவர்கள் எதிர்ப்பட்ட இடையூறுகளை இதோ அவர்கள் வாயாலேயே சொல்கிறார்கள்.

“நாங்கள் ஊழியத்திற்கோ கிறிஸ்தவ கூட்டங்களுக்கோ செல்ல வேண்டும் என்றால் சுமார் அரை கிலோமீட்டர் தூரம் நடந்துபோய்தான் பஸ் பிடிக்க வேண்டும். அந்த பஸ்ஸிலிருந்து இறங்கி பழையபடி அரை கிலோமீட்டர் தூரம் நடந்து அடுத்த பஸ் பிடிக்க வேண்டும். போகும் வழியில் ஐந்து மூர்க்கமான நாய்கள் வேறு. நாய்கள் என்றாலே எங்களுக்கு ரொம்ப பயம். ஏனென்றால், அவைகள் பார்ப்பதற்கு குதிரைகள் போல பெரிதாக இருக்கும். அவற்றை விரட்ட ஒரு கம்பையும் எடுத்துச் செல்வோம். பஸ் வருவது தெரிந்ததும் அருகில் எங்காவது அதை ஒளித்து வைப்போம். ஏனெனில் நாங்கள் வீடு திரும்பும்போது தேவைப்படும் என்பதற்காக!

“பஸ்ஸில் ஏறுவது என்றால் எங்களுக்கு ஒரு மலை ஏறுவதுபோல் இருக்கிறது; அதன் படிகள் உயரமாக இருப்பதால் எங்களால் ஏறமுடியாது. எளிதில் ஏறுவதற்கு வசதியாக பஸ் ஸ்டாப்பின் அருகில் உள்ள குப்பைமேட்டின் மேல் ஏறி நிற்கிறோம். சில டிரைவர்கள் பஸ்ஸை அந்த குப்பைமேட்டின் பக்கமாக ஒதுக்கி நிறுத்துவார்கள். ஆனால் மற்றவர்கள் அவ்வாறு நிறுத்த மாட்டார்கள். அந்த சமயத்தில் உயரமான மரியா உயரம் குறைந்த லாரா ஏறுவதற்கு உதவி செய்கிறாள். அடுத்த பஸ் பிடிப்பதற்கு ஒரு ஜன நெருக்கடியான நெடுஞ்சாலையை கடக்க வேண்டும். எங்கள் குட்டி கால்களால் சாலையை கடப்பது உண்மையிலேயே ஒரு சாதனை. குள்ளமாக இருப்பதால் அதிக புத்தகங்களைக் கொண்ட கனமான ‘பேக்’கை சுமந்து செல்வது என்பது அடுத்த சவால். சுமையை குறைப்பதற்காக பாக்கெட் சைஸ் பைபிளை பயன்படுத்துகிறோம், குறைந்தளவு புத்தகங்களையே எடுத்துச் செல்கிறோம்.

“சிறு வயதிலிருந்தே நாங்கள் இருவரும் யாருடனும் அதிகம் பழகுவதில்லை. அதனால் பழக்கமில்லாதவர்களிடத்தில் நாங்கள் எப்போதும் பயந்து பயந்துதான் பேசுவோம் என்று அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு நன்றாகத் தெரியும். ஆகவே, அவர்களுடைய வீட்டு கதவுகளைத் தட்டும்போது அவர்களாலேயே நம்ப முடியாமல் ஸ்தம்பித்து நிற்கிறார்கள். பொதுவாக நாங்கள் சொல்வதை காதுகொடுத்து கேட்கிறார்கள். ஆனால் முன்பின் தெரியாதவர்களிடத்தில் பேசும்போதோ அவர்கள் எங்களை ஒரு வேடிக்கை பொருளாக பார்ப்பார்களே ஒழிய நாங்கள் சொல்லும் செய்தியை கவனிப்பதில்லை. இருந்தாலும் யெகோவாவின் அன்பை ருசித்துப் பார்ப்பதால் எங்களுடைய சுவிசேஷ வேலையைத் தொடர அது எங்களை ஊக்குவிக்கிறது. நீதிமொழிகள் 3:5, 6 வசனங்களை தியானிப்பதும்கூட எங்களுக்கு மனவலிமையைத் தருகிறது.”

சரீரப்பிரகாரமான இடையூறுகளின் மத்தியிலும் விடாமுயற்சியுடன் இருப்பதன்மூலம் கடவுளை மகிமைப்படுத்த முடியும் என்பதற்கு லாராவும் மரியாவும் நடமாடும் உதாரணங்கள். அப்போஸ்தலனாகிய பவுல் தன் “மாம்சத்திலே ஒரு முள்[ளை]” எடுத்துப்போடும்படி ஜெபித்தார். அது சரீரப்பிரகாரமான குறைபாடாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் கடவுள் அவரிடம் இவ்வாறு சொன்னார்: “என் கிருபை உனக்குப் போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்.” ஆம், கடவுளை சேவிப்பதற்கு நம்முடைய சரீரப்பிரகாரமான தடங்கல்களை நீக்க வேண்டிய அவசியமில்லை. கடவுள்மீது முற்றிலும் சார்ந்திருப்பது எப்படிப்பட்ட சூழ்நிலையையும் திறம்பட பயன்படுத்திக்கொள்ள நமக்கு உதவுகிறது. ஏனென்றால் பவுல் தன் ‘மாம்சத்தில் இருந்த முள்ளைப்’ பற்றி இவ்வாறு சொல்ல முடிந்தது: “நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்.” (2 கொரிந்தியர் 12:7, 9, 10) சில வருடங்கள் கழித்து பவுல் இவ்வாறு எழுதினார்: “என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு.”​—பிலிப்பியர் 4:13.

நவீன காலங்களில், கடவுள் ஒரு மாபெரும் வேலையை தமக்கு முழுவதுமாக ஒப்புக்கொடுத்த ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மூலம் நிறைவேற்றி வருகிறார். அவர்களில் அநேகருக்கு ஏதாவது ஒரு வழியில் உடல் குறைபாடு இருக்கவே செய்கிறது. இவர்கள் அனைவரும் கடவுளுடைய ராஜ்யத்தின்கீழ் தெய்வீக சுகப்படுத்துதலின் நம்பிக்கையை உடையவர்கள். இருந்தபோதிலும் தங்கள் குறைபாட்டை முதலில் கடவுள் சரிசெய்யட்டும்; அப்புறம் அவருக்கு ஊழியம் செய்வதைப் பற்றி நினைக்கலாம் என்று அவர்கள் காத்துக்கொண்டிருப்பதில்லை.

ஏதாவது உடல் பலவீனத்தால் நீங்கள் கஷ்டப்படுகிறீர்களா? கவலைப்படாதீர்கள்! உங்கள் விசுவாசத்தின்மூலம் பவுல், லாரா, மரியாவைப்போல் நீங்களும் இருக்கலாம். பூர்வ கால ஆண்களையும் பெண்களையும் போல இவர்களைக் குறித்ததிலும் இவ்வாறு சொல்லப்படலாம்: ‘பலவீனத்தில் பலங்கண்டார்கள்.’

[பக்கம் 8-ன் படம்]

மரியா

லாரா

[பக்கம் 9-ன் படம்]

லாரா பஸ் ஏறுவதற்கு மரியா உதவுகிறாள்

[பக்கம் 9-ன் படம்]

“நாய்கள் என்றாலே எங்களுக்கு ரொம்ப பயம். ஏனென்றால், அவை பார்ப்பதற்கு குதிரைகள் போல பெரிதாக இருக்கும்”

கீழே: லாராவும் மரியாவும் தங்களுடன் பைபிள் படித்தவர்களுடன்