Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அவர்களுடைய விசுவாசம் பலனளிக்கப்பட்டது

அவர்களுடைய விசுவாசம் பலனளிக்கப்பட்டது

ராஜ்ய அறிவிப்பாளர் அறிக்கை

அவர்களுடைய விசுவாசம் பலனளிக்கப்பட்டது

விசுவாசத்திற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் அப்போஸ்தலனாகிய பவுல். அவரைப் போலவே சக விசுவாசிகளும் தங்கள் விசுவாசத்தை வளர்ப்பதற்கு அவர் ஊக்கப்படுத்தினார். அவர் இவ்வாறு சொன்னார்: “தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்க வேண்டும்.” (எபிரெயர் 11:6) யெகோவா உறுதியான விசுவாசத்திற்கு பலனளித்து, உருக்கமான ஜெபங்களுக்கு பதிலளிக்கிறார் என்பதை மொஸாம்பிக்கிலிருந்து வரும் பின்வரும் அனுபவங்கள் காட்டுகின்றன.

வடக்கிலுள்ள மாகாணமான நியாஸாவிலுள்ள ஒரு விதவை சகோதரி, தானும் தன் ஆறு குழந்தைகளும் “கடவுள் காட்டும் ஜீவ வழி” என்ற மாநாட்டுக்கு எப்படிப் போகப் போகிறார்கள் என்பது பற்றி அதிக கவலையோடு இருந்தார்கள். அவர்களுக்கு இருந்த ஒரே வருமானம் பக்கத்திலுள்ள மார்கெட்டில் பொருட்களை விற்பதுதான். மாநாட்டு நாளும் நெருங்கிவிட்டது. அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் மாநாட்டுக்கு செல்வதற்கு மட்டுமே பணம் இருந்தது. திரும்பி வருவதற்கு பணம் இல்லை. எதுவாயினும், யெகோவா தேவைகளை கவனித்துக்கொள்வார் என்ற நம்பிக்கையை விட்டுவிடாமல் மாநாட்டில் ஆஜராவதற்கு தயாராகி விட்டார்கள்.

தன்னுடைய ஆறு குழந்தைகளுடன் அவர்கள் ரயிலில் ஏறிவிட்டார்கள். பயணத்தின்போது கண்டக்டர் பயணச்சீட்டு கேட்டு வந்தார். அவர்கள் அணிந்திருக்கும் அடையாள அட்டையைப் பார்த்த அந்த கண்டக்டர் என்ன அடையாள அட்டை அணிந்திருக்கிறீர்கள் என்று விசாரித்தார். யெகோவாவின் சாட்சிகளுடைய மாவட்ட மாநாட்டின் பிரதிநிதிகளை அடையாளப்படுத்தும் அட்டை என்று அந்தச் சகோதரி சொன்னார். “இந்த மாநாடு எங்கு நடக்கும்?” என்று அந்தக் கண்டக்டர் கேட்டார். சுமார் 300 கிலோமீட்டர் தூரத்திலுள்ள நாம்புலா மாகாணத்தில்தான் இந்த மாநாடு நடக்கிறது என்பதை அறிந்தபின், எதிர்பாராத விதமாக அவர், சாதாரண கட்டணத்தில் பாதியே அவர்களிடம் வசூலித்தார்! மீதமுள்ள பாதி பணத்திற்கு திரும்பி வருவதற்கான பயண சீட்டுகளையும் அவர் அவர்களிடம் கொடுத்தார். யெகோவாவில் நம்பிக்கை வைத்ததால் அவர்கள் எவ்வளவாக மகிழ்ச்சியடைந்தார்கள்!​—சங்கீதம் 121:1, 2.

மதப்பற்றுள்ள ஒரு பெண் சுமார் 25 வருடங்களாக கடவுளை வணங்குவதற்குச் சரியான பாதையை காட்டும்படி கடவுளிடம் ஜெபம் செய்தாள். அவள் சென்றுகொண்டிருந்த சர்ச், மதச் சடங்காசாரங்களை பாரம்பரிய சடங்குகளோடு இணைத்ததால் இப்படிப்பட்ட வணக்கமுறை கடவுளை பிரியப்படுத்துமா என்ற கேள்வி அவள் மனதில் உதித்தன.

அவள் இவ்விதமாக சொல்கிறாள்: “மத்தேயு 7:7-⁠ல் பதிவு செய்யப்பட்டுள்ள, ‘கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்,’ என்ற இயேசுவின் வார்த்தைகள் எப்போதுமே என் ஞாபகத்தில் இருந்தன. இந்த வசனத்தை என் மனதில் வைத்து சத்தியத்தினிடம் என்னை வழிநடத்தும் என்று விடாது ஜெபம் செய்தேன். ஒரு நாள் எங்கள் சர்ச் பாஸ்டர் மார்கெட்டில் வேலை பார்க்கும் அனைவரும் குறிப்பிட்ட அளவு பணமும் தங்களுடைய சில பொருட்களும் அவருக்கு கொண்டுவர வேண்டும், அப்போது அவர்களை அவர் ஆசீர்வதிப்பார் என்று சொன்னார். இது வேதப்பூர்வமற்ற வேண்டுகோள் என்பதாக நான் நினைத்தேன். ஆகவே நான் எதையும் கொண்டு செல்லவில்லை. நான் எந்த ‘காணிக்கையையும்’ கொண்டு வராததை பாஸ்டர் கண்டபோது எல்லா சர்ச் அங்கத்தினர்கள் முன்பாக என்னை இழிவாக பேச ஆரம்பித்தார். அன்றைய தினமே இது கடவுள் விரும்பும் வணக்கமுறை அல்ல என்பதை உணர்ந்து சர்ச்சைவிட்டு வெளியேறினேன். அதே சமயத்தில் சத்தியத்தைக் கண்டடைவதற்கு விடாமல் ஜெபம் செய்தேன்.

“கடைசியாக, நான் தைரியத்துடன் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரான என் உறவினருடன் தொடர்பு கொண்டேன். அவர் ஒரு துண்டுப்பிரதியை எனக்கு அளித்தார். அதை வாசிக்கிறபோதே கடவுள் என் ஜெபங்களுக்கு பதிலளிக்கிறார் என்பதை உணர்ந்தேன். என்னோடு வாழ்ந்துகொண்டிருந்தவரும் காலப்போக்கில் பைபிள் சத்தியத்திற்கு மதிப்பு காட்ட ஆரம்பித்தார். பிறகு நாங்கள் சட்டப்பூர்வமாக திருமணம் செய்தோம். என்றாலும் சிறிது காலத்திற்குள் என் கணவன் சுகவீனமாகி விட்டார். ஆனால் அவருடைய மரணம் வரையாக, சத்திய பாதையில் தொடர்ந்திருக்கும்படியும் அதன் மூலம் நாம் மீண்டும் பரதீஸில் சந்திக்கலாம் என்றும் அவர் என்னை உற்சாகப்படுத்தினார்.

“யெகோவா என் ஜெபங்களுக்கு பதிலளித்ததற்காகவும் அவரை வணங்குவதற்கு சரியான பாதையை காண்பித்ததற்காகவும் நான் என்றென்றும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். என் ஜெபங்களுக்கு பதிலளித்ததன் விளைவாகத்தான் என்னுடைய எட்டு குழந்தைகளும் யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்த ஊழியர்களாக இருக்கிறார்கள்.”