Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஜெபங்களுக்கு கடவுள் பதிலளிக்கிறார்

ஜெபங்களுக்கு கடவுள் பதிலளிக்கிறார்

ஜெபங்களுக்கு கடவுள் பதிலளிக்கிறார்

கொர்நேலியு என்ற மனிதன் கடவுளுடைய தயவை நாடுவதற்கு அடிக்கடி இருதயப்பூர்வமாக ஜெபம் செய்தார். அது மட்டுமல்ல, ஒரு ராணுவ அதிகாரி என்ற தன் பதவியை மற்றவர்களுக்கு உதவும் வண்ணம் நல்ல விதத்தில் பயன்படுத்தி வந்தார். அவர் தேவையிலுள்ள ஜனங்களுக்கு ‘இரக்கச் செயல்களைச் செய்தார்’ என பைபிள் அவரைப் பற்றி சொல்கிறது.​—அப்போஸ்தலர் [திருத்தூதர் பணிகள்] 10:1, 2, பொது மொழிப்பெயர்ப்பு.

அந்தச் சமயத்தில் கிறிஸ்தவ சபையில் விசுவாசமுள்ள யூதர்களும் மதமாறிய புறஜாதிகளும் சமாரியர்களும் இருந்தனர். கொர்நேலியுவோ விருத்தசேதனம் பண்ணப்படாத புறஜாதியானும் கிறிஸ்தவ சபையின் பாகமல்லாதவருமாக இருந்தார். அப்படியென்றால் அவர் செய்த ஜெபங்கள் எல்லாமே வீண் என்று இது அர்த்தப்படுத்துகிறதா? இல்லை. கொர்நேலியுவையும் ஜெபத்துடன் அவர் செய்த நல்ல காரியங்களையும் யெகோவா தேவன் கவனித்தார் என்பதில் சந்தேகமில்லை.​—அப்போஸ்தலர் 10:4.

தேவதூதரின் வழிநடத்துதல் காரணமாக கொர்நேலியுவிற்கு கிறிஸ்தவ சபையுடன் தொடர்பு ஏற்பட்டது. (அப்போஸ்தலர் 10:30-33) அதன் விளைவாக, அவரையும் அவருடைய வீட்டாரையும் கிறிஸ்தவ சபை ஏற்றுக்கொண்டது. விருத்தசேதனம் செய்யப்படாத புறஜாதியாரிலிருந்து முதன்முதலாக கிறிஸ்தவர்களாக மாறும் பாக்கியத்தைப் பெற்றவர்கள் இவர்களே. கொர்நேலியுவின் தனிப்பட்ட அனுபவத்தைக்கூட பைபிள் பதிவில் சேர்ப்பதை தகுதியானதாக யெகோவா தேவன் கருதினார். கொர்நேலியு, கடவுளுடைய தராதரங்களுக்கு இசைவாக தன்னுடைய முழு வாழ்க்கையையும் சரிசெய்வதற்கு பல மாற்றங்கள் செய்தார் என்பதில் சந்தேகமில்லை. (ஏசாயா 2:2-4; யோவான் 17:16) இன்று கடவுளுடைய தயவைப் பெற நாடும் எல்லா தேசத்து மக்களுக்கும் கொர்நேலியுவின் இந்த அனுபவம் அதிக ஊக்கமளிப்பதாய் இருக்க வேண்டும். சில உதாரணங்களை கவனியுங்கள்.

நவீன நாளைய உதாரணங்கள்

இந்தியாவில் ஓர் இளம் விதவை தேற்றுவார் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தார். 21 வயதில் திருமணமான இவருக்கு இரண்டு குழந்தைகள் இருந்தார்கள். இரண்டாவது குழந்தை பிறந்து சிறிது நாட்களுக்குள்ளாகவே அவருடைய கணவன் இறந்து விட்டார். 24 வயதுடைய இந்த இளம் விதவையின் மூத்த மகன் 22 மாத குழந்தை. இரண்டாவது பெண் குழந்தையோ பிறந்து இரண்டு மாதங்கள் தான் ஆகியிருந்தன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் கண்டிப்பாக தேற்றுவார் தேவை, இல்லையா! அவர் யாரிடம் உதவி கேட்பார்? ஒரு நாள் இரவு மிகுந்த துயரத்தால், “பரலோக பிதாவே உம்முடைய வார்த்தையால் என்னைத் தேற்றும்” என்று சொல்லி ஜெபம் செய்தார்.

அடுத்த நாள் காலையில் அவருடைய வீட்டிற்கு ஒருவர் வந்திருந்தார். அவர் ஒரு யெகோவாவின் சாட்சி. அன்றைய தினம் அவர் செய்த வீட்டுக்குவீடு ஊழியம் மிகச் சிரமமாக இருந்தது. ஏனென்றால் ஒருசிலரே அவருக்குச் செவி கொடுத்தனர். சோர்வுற்று களைப்படைந்த நிலையில் வீட்டிற்கு போய்விடலாம் என நினைத்தார். ஆனால் இன்னும் ஒரேயொரு வீட்டை மட்டும் சந்தித்துவிட்டு போகலாம் என்ற ஏதோ உணர்வு அவருக்கு ஏற்பட்டது. அதுதான் அந்த இளம் விதவையின் வீடு. அவர் அந்த சாட்சியை வீட்டிற்குள் அழைத்து பைபிள் விளக்கங்கள் அடங்கிய பிரசுரத்தையும் பெற்றுக்கொண்டார். அந்தப் பிரசுரத்தை வாசித்ததிலிருந்தும் அந்தச் சாட்சியுடன் கலந்து பேசியவற்றிலிருந்தும் அந்தப் பெண் அதிகமான ஆறுதலை அடைந்தார். மரித்தவர்களை உயிர்த்தெழுப்பும் கடவுளுடைய வாக்குறுதியையும் சீக்கிரத்தில் இந்தப் பூமியைப் பரதீஸாக்கும் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றியும் கற்றுக்கொண்டார். எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களுடைய ஜெபத்திற்கு பதிலளித்த மெய் கடவுளாகிய யெகோவாவைப் பற்றி அறிந்து கொண்டு அவரை நேசிக்க ஆரம்பித்தார்.

தென் ஆப்பிரிக்காவிலுள்ள ஜார்ஜ் நகரத்தில் வாழ்ந்துவரும் நோரா முழுநேர ஊழிய வேலையில் கலந்து கொள்வதற்காக ஒரு மாதம் முழுவதையும் ஒதுக்கி வைத்தாள். தன் வேலையைத் தொடங்குவதற்கு முன்பாக, பைபிளைப் படிக்க உண்மையிலேயே ஆர்வம் உள்ள ஒருவரை கண்டுபிடிக்க உதவுமாறு யெகோவாவிடம் உருக்கமாக ஜெபித்தாள். ஊழியம் செய்வதற்காக அவளுக்கு நியமிக்கப்பட்ட அந்தப் பிராந்தியத்தில் இதற்குமுன் சந்தித்தபோதெல்லாம் நோராவிடம் முரட்டுத்தனமாக நடந்துகொண்ட ஒருவரின் வீடும் இருந்தது. இந்த முறையும் நோரா தைரியத்துடன் அந்த வீட்டிற்குச் சென்றாள். ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் அந்த வீட்டில் இப்போது நோலீன் என்ற வேறொரு பெண் குடிவந்திருந்தாள். அதுமட்டுமல்ல நோலீனும் அவளுடைய தாயும் பைபிளை படித்து புரிந்துகொள்ள உதவும்படி ஜெபித்துக்கொண்டிருந்திருக்கிறார்கள். நோரா இவ்விதமாக சொல்கிறாள்: “நான் அவர்களுக்கு பைபிள் படிப்பு நடத்துகிறேன் என்று கூறியபோது அவர்கள் அதிக மகிழ்ச்சியடைந்தார்கள்.” நோலீனும் அவளுடைய தாயும் வேகமாக முன்னேற்றம் செய்தனர். காலப்போக்கில், அவர்கள் இருவரும் நோராவுடன் சேர்ந்து ஆவிக்குரிய சுகப்படுத்தும் வேலையில் பங்கு கொள்ள ஆரம்பித்தனர்.

ஜெபத்தின் வல்லமையை மெய்ப்பித்துக் காட்டும் மற்றொரு உதாரணமும் இருக்கிறது. அது தென் ஆப்பிரிக்காவிலுள்ள ஜோஹன்ஸ்பர்க்கிலுள்ள ஒரு தம்பதியின் அனுபவமாகும். 1996-⁠ம் வருடம் ஒருநாள் சனிக்கிழமை இரவு டென்னிஸ், கரோல் ஆகிய இருவருடைய திருமண பந்தமும் முறிவுறும் நிலையில் இருந்தது. கடைசியாக அவர்கள் உதவிக்காக ஜெபம் செய்ய தீர்மானித்தார்கள். அவர்கள் திரும்பத்திரும்ப விடாமல் இரவு வெகு நேரம் வரையில் ஜெபம் செய்தார்கள். மறுநாள் காலை 11 மணியளவில் இரண்டு யெகோவாவின் சாட்சிகள் அவர்கள் வீட்டின் கதவை தட்டினார்கள். டென்னிஸ் கதவைத் திறந்துவிட்டு, தன் மனைவியை அழைத்து வரும்வரை சற்று பொறுக்கும்படி அவர்களிடம் சொன்னார். பிறகு, டென்னிஸ் தன் மனைவி கரோலிடம் யெகோவாவின் சாட்சிகளை உள்ளே அழைத்தால் அவர்களை திரும்ப இங்கிருந்து கிளப்புவது கஷ்டம் என்று எச்சரித்தார். ஆனால் கரோல், அவர்கள் உதவிக்காக ஜெபம் செய்து கொண்டிருந்ததை டென்னிஸுக்கு நினைப்பூட்டி, இது அவர்களுடைய ஜெபங்களுக்கு பதிலாகக்கூட இருக்கலாம் என்பதாகச் சொன்னாள். ஆகவே அவர்கள் வீட்டிற்குள் அழைக்கப்பட்டு நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு என்ற புத்தகத்திலிருந்து பைபிள் படிப்பும் ஆரம்பிக்கப்பட்டது. டென்னிஸும் கரோலும் அந்தப் படிப்பிலிருந்து கற்றுக்கொண்டவற்றால் பரவசமடைந்தனர். அன்று பிற்பகல் யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றத்தில் நடைபெறும் கூட்டத்தில் முதன் முதலாக கலந்து கொண்டார்கள். டென்னிஸும் கரோலும் பைபிளிலிருந்து கற்றுக்கொண்ட அறிவை பொருத்தி, தங்கள் குடும்ப பிரச்சனைக்கு தீர்வை கண்டடைந்தனர். அவர்கள் இப்போது அதிக மகிழ்ச்சியாகவும், யெகோவாவைத் துதிக்கும் முழுக்காட்டப்பட்ட கிறிஸ்தவர்களாகவும், தங்கள் அயலகத்தாருடன் பைபிள் சார்ந்த நம்பிக்கைகளை தவறாமல் சொல்லிக்கொண்டும் வருகிறார்கள்.

ஜெபம் செய்வதற்கே தகுதியற்றவராக உணருகிறீர்களா?

தங்களுடைய கெட்ட வாழ்க்கை போக்கின் காரணமாக உண்மை மனமுள்ள சில ஆட்கள் ஜெபம் செய்வதற்கே லாயக்கற்றவர்களாக உணரலாம். அவ்விதமாக நினைத்த இழிவாக கருதப்பட்ட வரி வசூலிப்பவனின் கதையை இயேசு கிறிஸ்து சொன்னார். ஆலய பிரகாரத்திற்குள் நுழைந்த இவர், வழக்கமாக ஜெபம் செய்யும் இடத்திற்குக்கூட செல்ல தகுதியற்றவராக உணர்ந்தார். “தூரத்திலே நின்று, . . . தன் மார்பிலே அடித்துக் கொண்டு: தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான்.” (லூக்கா 18:13) இயேசு சொன்னபடி இந்த மனிதனுடைய ஜெபம் கேட்கப்பட்டது. யெகோவா உண்மையிலேயே கிருபை பொருந்தியவர் என்றும் உள்ளப்பூர்வமாக மனந்திரும்பும் பாவிகளுக்கு உதவ விருப்பமுள்ளவர் என்றும் இக்கதை நிரூபிக்கிறது.

தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பால் என்ற இளம் மனிதனை கவனியுங்கள். சிறுவனாக இருக்கையில் பால் அவருடைய அம்மாவுடன் கிறிஸ்தவ கூட்டங்களுக்குச் சென்றிருக்கிறார். ஆனால் உயர்நிலைப்பள்ளி படிப்பின்போது, கடவுளுடைய வழிகளைப் பின்பற்றாத பருவ வயதினரிடம் சகவாசம் வைத்துக்கொள்ள ஆரம்பித்தார். பள்ளிப் படிப்பை முடித்தபின் அவர் தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் இனவெறி அரசாங்கத்தின் ராணுவத்தில் சேர்ந்தார். அதற்குப்பின் எதிர்பாராத விதமாக அவருடைய காதலி தன் நட்பை முறித்துக்கொண்டாள். இந்த மனநிறைவற்ற வாழ்க்கைப்போக்கு பாலை மிகவும் மனச்சோர்வடையச் செய்தது. அவர் இவ்வாறு நினைவுபடுத்தி சொல்கிறார்: “நான் உள்ளப்பூர்வமாக கடவுளிடம் ஜெபம் செய்து பல வருடங்களாகிவிட்ட போதிலும் ஒரு நாள் மாலையில், யெகோவாவிடம் உதவிக்காக ஜெபம் செய்தேன்.”

இந்த ஜெபத்திற்குப்பின் சிறிது காலத்திற்குள்ளாகவே, பாலின் அம்மா கிறிஸ்துவின் மரண நினைவு ஆசரிப்பு கூட்டத்திற்கு வரும்படி அழைத்தார்கள். (லூக்கா 22:19) இவ்வளவு காலமாக தாறுமாறாக நடந்து பைபிளில் கொஞ்சம்கூட அக்கறை காட்டாமல் இருந்த பாலிடம் கூட்டத்திற்கு வரும்படி அம்மா அழைத்ததை அவரால் நம்ப முடியவில்லை. “என்னுடைய ஜெபத்திற்கு யெகோவாவின் பதிலாகத்தான் இந்த அழைப்பை கருதினேன். ஆகவே அதை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும் என்று உணர்ந்தேன்.” அன்று முதல் பால் கிறிஸ்தவ கூட்டங்களில் தவறாமல் கலந்துகொள்ள ஆரம்பித்தார். நான்கு மாத பைபிள் படிப்புக்குப்பின் முழுக்காட்டுதலுக்கு தகுதி பெற்றார். அது மட்டுமல்ல, தன்னுடைய பொறியியல் படிப்பை நிறுத்திவிட்டு முழுநேர ஊழியத்தைத் தேர்ந்தெடுத்தார். இன்று பால் அதிக மகிழ்ச்சியுள்ள ஒருவராக இருக்கிறார். அவருடைய கடந்தகால வாழ்க்கையைக் குறித்து மனச்சோர்வடைவதில்லை. கடந்த 11 வருடங்களாக அவர் தென் ஆப்பிரிக்க உவாட்ச் டவர் சொஸைட்டியின் கிளை காரியாலயத்தில் சேவை செய்திருக்கிறார்.

யெகோவா தேவன் உண்மையில் இரக்கத்தோடே ஜெபங்களுக்கு பதிலளிக்கிறார். ‘தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவராயும்’ இருக்கிறார். (எபிரெயர் 11:6) விரைவில் வரவிருக்கும் யெகோவாவின் மகா நாள் இந்த எல்லா துன்மார்க்கத்தையும் முடிவுக்குக் கொண்டுவரும். அதே சமயத்தில் அவருடைய மக்கள் மிக முக்கிய சாட்சி பகரும் வேலையில் வைராக்கியமாக ஈடுபடுகையில் பலத்திற்காகவும் வழிநடத்துதலுக்காகவும் செய்யப்படும் அவர்களுடைய ஜெபங்களுக்கு யெகோவா பதிலளிக்கிறார். இவ்விதமாக, எல்லா தேசங்களில் இருந்து வரும் லட்சக்கணக்கானவர்கள் கிறிஸ்தவ சபையுடன் தொடர்பு கொண்டு நித்திய ஜீவனுக்கு வழிநடத்தும் பைபிள் அறிவினால் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்.​—யோவான் 17:⁠3.

[பக்கம் 5-ன் படம்]

கொர்நேலியுவின் இருதயப்பூர்வமான ஜெபம் அப்போஸ்தலனாகிய பேதுரு அவரை சந்திக்க வழிவகுத்தது

[பக்கம் 6-ன் படங்கள்]

கஷ்ட காலங்களின்போது ஜெபம் பலருக்கு தக்க உதவியாக இருந்திருக்கிறது

[பக்கம் 7-ன் படங்கள்]

பைபிளை புரிந்து கொள்ள உதவும்படி ஜெபம் செய்வது மிகச்சிறந்தது

திருமணமானவர்கள் தங்கள் திருமண பந்தத்தை பலப்படுத்த உதவும்படி ஜெபம் செய்யலாம்