Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஜெபத்தின் வல்லமை

ஜெபத்தின் வல்லமை

ஜெபத்தின் வல்லமை

மத்திய கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது நாகோர் பட்டணம். கதிரவன் கிடுகிடுவென அடிவானத்தில் ஓடி மறைந்து கொண்டிருந்த நேரம். சீரியா நாட்டு மனிதன் எலியேசர் பத்து ஒட்டகங்களுடன் அப்பட்டணத்திற்கு புறம்பே இருக்கும் கிணற்றருகே வந்து சேருகிறார். பயண களைப்பும் தொண்டையில் வறட்சியும் அவரை வாட்டின. என்றாலும், எலியேசர் மற்றவர்களுடைய தேவைகளில் அதிக அக்கறை உடையவராய் இருக்கிறார். அவர் தன் எஜமானின் மகனுக்கு பெண் பார்க்கத்தான் வேறொரு தேசத்திலிருந்து இங்கு வந்திருக்கிறார். அதுமட்டுமல்ல, இந்தப் பெண்ணை அவர் தன்னுடைய எஜமானின் சொந்தக்காரர்கள் மத்தியிலிருந்துதான் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த இக்கட்டான வேலையை அவர் எப்படி செய்து முடிப்பார்?

ஜெபத்திற்கு அதிக வல்லமை இருக்கிறது என்பதில் எலியேசருக்கு திடமான நம்பிக்கை உண்டு. ஆகவே, அவர் சூதுவாதறியாத குழந்தையின் விசுவாசத்தைப்போன்று தாழ்மையுடன் இவ்வாறு வேண்டுகிறார்: “என் எஜமானாகிய ஆபிரகாமுக்கு தேவனாயிருக்கிற கர்த்தாவே, இன்றைக்கு நீர் எனக்குக் காரியம் சித்திக்கப்பண்ணி, என் எஜமானாகிய ஆபிரகாமுக்குத் தயவுசெய்தருளும். இதோ, நான் இந்தத் தண்ணீர்த் துரவண்டையிலே நிற்கிறேன், இந்த ஊராருடைய பெண்கள் தண்ணீர் மொள்ளப் புறப்பட்டு வருவார்களே. நான் குடிக்க உன் குடத்தைச் சாய்க்கவேண்டும் என்று நான் சொல்லும்போது: குடி என்றும், உன் ஒட்டகங்களும் குடிக்கும்படி வார்ப்பேன் என்றும் சொல்லும் பெண் எவளோ, அவளே நீர் உம்முடைய ஊழியக்காரனாகிய ஈசாக்குக்கு நியமித்தவளாயிருக்கவும், என் எஜமானுக்கு அநுக்கிரகம் செய்தீர் என்று நான் அதினாலே அறியவும் செய்தருளும்.”​—ஆதியாகமம் 24:12-14.

ஜெபத்தின் வல்லமையில் எலியேசருக்கு இருந்த நம்பிக்கை வீண்போகவில்லை. கிணற்றருகே வருகிற அந்த முதல் பெண் ஆபிரகாமின் சகோதரனுடைய பேத்தி! அவள் பெயர் ரெபெக்காள். அவள் மணமாகாதவள், கற்புள்ளவள், பேரழகானவள். எலியேசர் நினைத்தபடியே அவள் அவருக்கும் தண்ணீர் குடிக்கக் கொடுத்து ஒட்டகங்களின் தாகம்தீர அவைகளுக்கும் தண்ணீர் கொடுத்தாள். அதற்குப்பின் அவள் குடும்பத்தாருடன் எலியேசர் கலந்து பேசிய பிறகு, ரெபெக்காள் அவருடன் அந்த தூர தேசத்திற்குச் சென்று ஆபிரகாமின் மகனாகிய ஈசாக்கை மணந்துகொள்ள மனப்பூர்வமாக சம்மதிக்கிறாள். எலியேசரின் ஜெபத்திற்கு என்னே ஒரு தெளிவான பதில் கிடைத்தது! ஆனால் அந்தக் காலமோ கடவுள், மனிதனுடைய விவகாரங்களில் நேரடியாகவும் அற்புதகரமாகவும் தலையிடாமல் இருந்த சமயமாகும்.

எலியேசரின் ஜெபத்திலிருந்து நாமும்கூட அதிகத்தை கற்றுக்கொள்ள முடியும். இந்த ஜெபம் அவருடைய குறிப்பிடத்தக்க விசுவாசத்தையும், மனத்தாழ்மையையும் மற்றவர்களுடைய தேவைகளில் அவர் சுயநலமற்ற அக்கறை வைத்திருந்ததையும் காட்டியது. யெகோவா மனிதர்களை நடத்தும் விதத்திற்கு எலியேசர் கீழ்ப்பட்டு நடந்ததையும்கூட அவருடைய ஜெபம் காண்பித்தது. ஆபிரகாமுடன் கடவுள் வைத்திருந்த நெருக்கமான பிணைப்பையும், எல்லா மனிதருக்கும் எதிர்கால ஆசீர்வாதங்கள் ஆபிரகாமின் மூலமாகத்தான் கிடைக்கும் என்ற அவருடைய வாக்குறுதியையும் நன்றாக அறிந்திருந்தார். (ஆதியாகமம் 12:3) அதனால்தான் எலியேசர் தன்னுடைய ஜெபத்தை இவ்விதமாக ஆரம்பித்தார்: “என் எஜமானாகிய ஆபிரகாமுக்கு தேவனாயிருக்கிற கர்த்தாவே.”

ஆபிரகாமின் வம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவின் மூலமே கீழ்ப்படிதலுள்ள எல்லா மனிதரும் ஆசீர்வதிக்கப்படுவார்கள். (ஆதியாகமம் 22:18) இன்றைய நாட்களிலும்கூட நம்முடைய ஜெபங்கள் கேட்கப்பட வேண்டுமானால் கடவுள் தம்முடைய குமாரன் மூலமாக மனிதரிடம் வைத்துள்ள செயல் தொடர்புகளை தாழ்மையுடன் அங்கீகரிப்பது அவசியம். இயேசு கிறிஸ்து இவ்வாறு சொன்னார்: “நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்.”​—யோவான் 15:⁠7.

மேலே சொல்லப்பட்ட வார்த்தைகளின் உண்மையை நன்கு அறிந்தவர் கிறிஸ்துவின் சீஷனாகிய அப்போஸ்தலன் பவுல். ஜெபத்தின் வல்லமையில் அவருக்கு இருந்த நம்பிக்கை வீண்போகவில்லை. ஆகவே, உடன் கிறிஸ்தவர்கள் தங்களுடைய எல்லா கவலைகளையும் கடவுளிடம் ஜெபத்தில் தெரிவிக்கும்படி ஊக்குவித்து இவ்வாறு வலியுறுத்தினார்: “என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு.” (பிலிப்பியர் 4:6, 7, 13) பவுலின் எல்லா வேண்டுதல்களுக்கும் விடையளிக்கப்பட்டது என்பதாக இது அர்த்தப்படுத்துகிறதா? நாம் பார்க்கலாம்.

எல்லா வேண்டுதல்களுக்கும் பதில் கிடைப்பதில்லை

பவுலுடைய சுயநலமற்ற ஊழியத்தில் அவருக்கு இருந்த கஷ்டத்தை ‘மாம்சத்திலுள்ள ஒரு முள்’ என்பதாக விவரித்தார். (2 கொரிந்தியர் 12:7) இது எதிரிகளாலும் ‘கள்ள சகோதரர்களாலும்’ மனதின் பிரகாரமாகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் அவருக்கு நேர்ந்த இன்னல்களாக இருக்கலாம். (2 கொரிந்தியர் 11:26; கலாத்தியர் 2:4) அல்லது நீண்ட காலமாக இருந்துவந்த கண்பார்வை குறைபாடாகவும் இருக்கக்கூடும். (கலாத்தியர் 4:15) எதுவாயிருந்தாலும், ‘மாம்சத்திலுள்ள இந்த முள்’ பவுலை வெகுவாக பலவீனப்படுத்தியது. அவர் இவ்வாறு எழுதினார்: “அது என்னைவிட்டு நீங்கும்படிக்கு, நான் மூன்றுதரம் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொண்டேன்.” என்றாலும் பவுலின் வேண்டுதல் நிறைவேற்றப்படவில்லை. அவர் கடவுளிடமிருந்து ஏற்கனவே பெற்ற ஆவிக்குரிய நன்மைகள்​—⁠அதாவது சோதனைகளை சகித்துக்கொள்வதற்கான வல்லமை போன்ற நன்மைகள்​—⁠போதுமானது என்பதாக பவுலுக்கு விளக்கப்பட்டது. கடவுள் கூடுதலாக அவருக்குச் சொன்னார்: “பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்.”​—2 கொரிந்தியர் 12:8, 9.

எலியேசர், பவுல் இவர்களின் உதாரணங்களிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? யெகோவாவை தாழ்மையுடன் சேவித்துவருபவர்களின் ஜெபத்தை அவர் உண்மையில் கேட்கிறார். அதே சமயத்தில் அவர்களுடைய எல்லா வேண்டுதல்களையும் அவர் நிறைவு செய்கிறார் என்றும் அர்த்தப்படுத்துகிறதில்லை. ஏனென்றால் கடவுள் எல்லாவற்றையும் நீண்ட கால கண்ணோட்டத்தில் பார்க்கிறார். நமக்கு மிகச் சிறந்தது எது என்று நம்மைவிட அவர் நன்றாக அறிவார். அதிமுக்கியமாக பைபிளில் பதிவு செய்யப்பட்டுள்ள அவருடைய நோக்கங்களுக்கு இசைவாகவே அவர் எப்போதும் செயல்படுகிறார்.

ஆவிக்குரிய சுகப்படுத்தலுக்கான காலம்

பூமியில் தம்முடைய குமாரனின் ஆயிர வருட ஆட்சியின் சமயத்தில் மனிதவர்க்கத்தின் சரீரப்பிரகாரமான, மனதின்பிரகாரமான, உணர்ச்சிப்பூர்வமான எல்லா நோய்நொடிகளையும் குணப்படுத்துவார் என்பதாக கடவுள் வாக்குக்கொடுக்கிறார். (வெளிப்படுத்துதல் 20:1-3; 21:3-5) இதை நடப்பிப்பதற்கு கடவுளுக்கு இருக்கும் வல்லமையில் முழு விசுவாசத்துடன், உண்மை கிறிஸ்தவர்கள் இந்த வாக்குப்பண்ணப்பட்ட எதிர்காலத்திற்காக ஆவலோடு காத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட அற்புத சுகப்படுத்தலை இப்போதே எதிர்பார்க்காவிட்டாலும் சோதனைகளை சமாளிக்க பலத்திற்காகவும் ஆறுதலுக்காகவும் அவர்கள் கடவுளிடம் ஜெபம் செய்கிறார்கள். (சங்கீதம் 55:22) நோய்வாய்ப்படுகையில் தங்கள் பண வசதிக்குட்பட்ட சிறந்த மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு கடவுளின் வழிநடத்துதலுக்காகவும் அவர்கள் ஜெபம் செய்யலாம்.

சில மதங்கள் இப்போதே சுகம்பெற ஜெபிக்கும்படி நோயாளிகளை ஊக்குவிக்கிறார்கள். இயேசுவும் அவருடைய அப்போஸ்தலர்களும் அற்புதமாக சுகப்படுத்தியதை இதற்கு ஆதாரமாக சுட்டிக்காட்டுகின்றனர். ஆனால் அப்படிப்பட்ட அற்புதங்கள் குறிப்பிட்ட நோக்கத்திற்காக செய்யப்பட்டன. அதாவது, இயேசு கிறிஸ்துவே உண்மையான மேசியா என்று நிரூபிப்பதற்காகவும் கடவுளுடைய தயவு யூத ஜனத்தாரிடமிருந்து எடுக்கப்பட்டு புதிய கிறிஸ்தவ சபைக்கு கொடுக்கப்பட்டது என்பதை காட்டுவதற்காகவுமே இந்த அற்புதங்கள் செய்யப்பட்டன. புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட கிறிஸ்தவ சபையின் விசுவாசத்தை பலப்படுத்துவதற்கு அப்போது அற்புத வரங்கள் தேவைப்பட்டன. இந்த புதிய சபை காலூன்றி நின்று ஸ்திரப்பட்டபோது அற்புத வரங்களெல்லாம் ‘ஒழிந்துபோயின.’​—1 கொரிந்தியர் 13:8, 11.

இந்த நெருக்கடியான காலத்தில் யெகோவா தேவன் தம்முடைய வணக்கத்தாரை அதி முக்கிய வேலையாகிய ஆவிக்குரிய சுகப்படுத்தும் வேலைசெய்ய வழிநடத்துகிறார். ஜனங்களுக்கு அவகாசம் இன்னும் இருக்கையில் அவர்கள் இந்த வேண்டுகோளுக்கு கவனம் செலுத்த வேண்டியது மிக மிக அவசரம்: “கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்; அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள். துன்மார்க்கன் தன் வழியையும், அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும் விட்டு, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவன்; அவர் அவன்மேல் மனதுருகுவார்; நம்முடைய தேவனிடத்திற்கே திரும்பக்கடவன்; அவர் மன்னிக்கிறதற்குத் தயை பெருத்திருக்கிறார்.”​—ஏசாயா 55:6, 7.

கடவுளுடைய ராஜ்யத்தைக் குறித்த நற்செய்தியை பிரசங்கிப்பதன்மூலம் மனந்திரும்பும் பாவிகளின் ஆவிக்குரிய குணப்படுத்தல் நிறைவேற்றப்பட்டு வருகிறது. (மத்தேயு 24:14) இந்த உயிர்காக்கும் வேலையை செய்து முடிப்பதற்கு தம்முடைய ஊழியர்களுக்கு அதிகாரம் அளிப்பதன்மூலம் எல்லா தேசங்களிலுமுள்ள லட்சக்கணக்கான ஜனங்கள் தங்கள் பாவங்களிலிருந்து மனந்திரும்பி இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவிற்கு முன் கடவுளுடன் ஒரு நல்ல உறவுக்குள் வருவதற்கு யெகோவா தேவன் உதவுகிறார். அப்படிப்பட்ட ஆவிக்குரிய குணப்படுத்தலுக்காக உண்மையுடன் ஜெபம் செய்யும் அனைவருடைய ஜெபங்களும் அந்த சுகப்படுத்தும் வேலையை செய்வதற்கு உதவிக்காக ஜெபம் செய்வோருடைய ஜெபங்களும் உண்மையில் பதிலளிக்கப்படுகின்றன.

[பக்கம் 3-ன் படத்திற்கான நன்றி]

எலியேசரும் ரெபெக்காளும்/The Doré Bible Illustrations/Dover Publications