“யெகோவாவையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்”
“யெகோவாவையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்”
“முழு இருதயத்தோடும் தம்மோடு இசைந்திருக்கிறவர்களுக்குத் தமது வல்லமையை விளங்கப்பண்ணும்படி யெகோவாவின் கண்கள் பூமியெங்கும் சுற்றிப்பார்த்துக் கொண்டிருக்கின்றன.”—2 நாளாகமம் [தினவர்த்தமானம்] 16:9, தி.மொ.
1. வல்லமை என்பது என்ன, மனிதர் அதை எவ்வாறு கையாண்டிருக்கின்றனர்?
வல்லமை பல அம்சங்களில் வெளிப்படுகிறது: மற்றவர்களை கட்டுப்படுத்துவது, அதிகாரம் அல்லது செல்வாக்கு செலுத்துவது; செயல்படும் அல்லது ஒரு விளைவை உண்டாக்கும் திறமை; உடல் பலம்; மன அல்லது ஒழுக்கத் திறன். வல்லமை செலுத்தும் விஷயத்தில், மனிதருக்கு நல்ல பெயர் இல்லை. அரசியல்வாதிகளின் கைக்குள் இருக்கும் வல்லமையை பற்றி பேசுகையில், சரித்திராசிரியர் ஆக்டன் பிரபு இவ்வாறு சொன்னார்: “வல்லமை கெடுக்கும் போக்குடையது, முழுமையான வல்லமை முழுமையாக கெடுக்கிறது.” ஆக்டன் பிரபுவின் வார்த்தைகளில் இருக்கும் பொதுவான உண்மைக்கு தற்கால சரித்திரத்தில் ஏராளமான உதாரணங்கள் இருக்கின்றன. இந்த 20-ம் நூற்றாண்டில், சரித்திரம் காணா வகையில், ‘மனுஷன் தனக்கே கேடுண்டாக வேறொரு மனுஷனை ஆண்டிருக்கிறான்.’ (பிரசங்கி 8:9) மோசமான சர்வாதிகாரிகள் தங்கள் வல்லமையை பயங்கரமாக துஷ்பிரயோகம் செய்து லட்சக்கணக்கில் மனித உயிர்களை மாய்த்திருக்கின்றனர். அன்பு, ஞானம், நீதி ஆகியவற்றால் கட்டுப்படுத்தப்படாத வல்லமை ஆபத்தானது.
2. யெகோவா தமது வல்லமையைப் பயன்படுத்தும்போது தம்முடைய மற்ற பண்புகளுக்கு இசைவாக எவ்வாறு நிறைவேற்றுகிறார் என்பதை விளக்குங்கள்.
2 பெரும்பாலான மனிதரைப் போல் அல்லாமல், கடவுள் தம்முடைய வல்லமையை எப்போதும் நன்மைக்காகவே பயன்படுத்துகிறார். “முழு இருதயத்தோடும் தம்மோடு இசைந்திருக்கிறவர்களுக்குத் தமது வல்லமையை விளங்கப்பண்ணும்படி யெகோவாவின் கண்கள் பூமியெங்கும் சுற்றிப்பார்த்துக் கொண்டிருக்கின்றன.” (2 தினவர்த்தமானம் 16:9, தி.மொ.) யெகோவா தம்முடைய வல்லமையை கட்டுப்பாடான முறையில் செலுத்துகிறார். பொல்லாதவர்கள் மனந்திரும்ப வாய்ப்பளிக்கும் வகையில், பொறுமையை காட்டுகிறார். இதுவே அவர்களுடைய அழிவை நிறுத்தி வைத்திருக்கிறது. நீதிமான்களும் அநீதிமான்களுமான எல்லா மனிதர்மீதும் சூரியனை பிரகாசிக்கச் செய்வதற்கு அவருடைய அன்பே காரணம். மரணத்திற்கு வழிநடத்தும் பிசாசாகிய சாத்தானை ஒழித்துக்கட்டுவதற்கு, யெகோவா தம்முடைய வல்லமையைப் பயன்படுத்த நீதியே அவரை உந்துவிக்கும்.—மத்தேயு 5:44, 45; எபிரெயர் 2:14; 2 பேதுரு 3:9.
3. நமது பரலோக தகப்பனின் சர்வ வல்லமையை வைத்தே அவரது வாக்குறுதிகளையும் பாதுகாப்பையும் ஏன் நம்பலாம்?
3 நமது பரலோக தகப்பனின் சர்வ வல்லமையே அவரது வாக்குறுதிகளையும் பாதுகாப்பையும் நம்புவதற்கு காரணமளிக்கிறது. ஒரு சிறு பிள்ளை தன் தகப்பனின் கையை இறுகப் பற்றியிருக்கையில், அந்நியர் மத்தியில் இருந்தாலும் பாதுகாப்பாக உணருகிறது. தனக்கு எந்தத் தீங்கும் நேரிட தன் தகப்பன் விடமாட்டார் என்று அறிந்திருப்பதால் அத்தகைய உணர்வு ஏற்படுகிறது. அதே போலவே, நம் பரலோக தகப்பனுடன் நடந்தால், காப்பாற்றுவதற்கு ‘மகத்தான வல்லமை’ படைத்த அவர், நிலையான எந்தத் தீங்கும் வராமல் நம்மை பாதுகாப்பார். (ஏசாயா 63:1; மீகா 6:8) ஒரு நல்ல தகப்பனைப்போல், யெகோவா தம்முடைய வாக்குறுதிகளை எப்போதும் நிறைவேற்றுகிறார். அவருடைய வார்த்தை, “அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்” என்று அவருடைய ஈடற்ற வல்லமை உறுதியளிக்கிறது.—ஏசாயா 55:11; தீத்து 1:3.
4, 5. (அ) அரசனாகிய ஆசா முழுமையாக யெகோவாவில் நம்பிக்கை வைத்திருந்தபோது என்ன பலன் கிடைத்தது? (ஆ) நாம் பிரச்சினைகளை எதிர்ப்படுகையில் தீர்வுகளுக்காக மனிதரை நாடித்தேடினால் என்ன நடக்கலாம்?
4 நம்முடைய பரலோகத் தகப்பனின் பாதுகாப்பு உண்டு என்பதை எப்பொழுதும் மறக்காமல் உறுதியோடிருப்பது ஏன் அவ்வளவு முக்கியம்? ஏனெனில், சந்தர்ப்ப சூழ்நிலைமைகளால் மன அமைதி கெட்டு, குழம்பிப்போய், நம்முடைய மெய்யான பாதுகாப்பு எங்குள்ளது என்பதையே மறந்துவிடலாம். பொதுவாக யெகோவாவில் நம்பிக்கையோடு இருந்த அரசராகிய ஆசா இதற்கு ஓர் உதாரணம். ஆசா ஆட்சி செய்தபோது, பத்து லட்சம் பேர் அடங்கிய எத்தியோப்பியரின் இராணுவ சேனை யூதாவை தாக்கியது. சத்துருக்கள் படைபலம் மிக்கவர்கள் என்பதை உணர்ந்து, ஆசா இவ்வாறு ஜெபித்தார்: “கர்த்தாவே [யெகோவாவே], பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவி செய்கிறது உமக்கு லேசான காரியம்; எங்கள் தேவனாகிய கர்த்தாவே, எங்களுக்குத் துணைநில்லும்; உம்மைச் சார்ந்து உம்முடைய நாமத்தில் ஏராளமான இந்தக் கூட்டத்திற்கு எதிராக வந்தோம்; கர்த்தாவே, நீர் எங்கள் தேவன்; மனுஷன் உம்மை மேற்கொள்ளவிடாதேயும்.” (2 நாளாகமம் 14:11) ஆசாவின் வேண்டுகோளை ஏற்று, யெகோவா அவருக்கு பெரும் வெற்றியை தந்தார்.
5 எனினும், பல ஆண்டுகள் உண்மையுடன் சேவித்த ஆசாவுக்கு, யெகோவாவின் காப்பாற்றும் வல்லமையில் அவருக்கு இருந்த நம்பிக்கை ஆட்டம் கண்டது. இஸ்ரவேலின் வட ராஜ்யத்திலிருந்து வந்த இராணுவ அச்சுறுத்தலை தடுத்து நிறுத்த உதவிகேட்டு சீரியாவிடம் சென்றார். (2 நாளாகமம் 16:1-3) உண்மைதான், சீரியாவின் அரசன் பென்னாதாத்திற்கு அவர் கொடுத்த லஞ்சம், இஸ்ரவேல் யூதாவுக்கு விரோதமான அச்சுறுத்தலை ஒழிக்க உதவியது. ஆனால் சீரியாவுடன் ஆசா செய்த உடன்படிக்கை அவருக்கு யெகோவாவில் நம்பிக்கை இல்லை என்பதை படம்பிடித்துக் காட்டியது. உள்ளத்தைத் தொடுமாறு தீர்க்கதரிசி அனானி அவரை இவ்வாறு கேட்டார்: “மிகவும் ஏராளமான இரதங்களும் குதிரை வீரருமுள்ள எத்தியோப்பியரும் லூபியரும் மகா சேனையாயிருந்தார்கள் அல்லவா? நீர் கர்த்தரைச் [யெகோவாவை] சார்ந்து கொண்டபோதோவெனில், அவர்களை உமது கையில் ஒப்புக்கொடுத்தாரே.” (2 நாளாகமம் 16:7, 8) எனினும், ஆசா இந்தக் கடிந்துகொள்ளுதலை புறக்கணித்தார். (2 நாளாகமம் 16:9-12) ஆகவே, நாம் பிரச்சினைகளை எதிர்ப்படுகையில், பரிகாரத்திற்காக மனிதரை நாடாமல் கடவுளில் நம்பிக்கை வைப்போமாக. ஏனெனில் மனித வல்லமையில் நம்பிக்கை வைத்தால் ஏமாற்றமே மிஞ்சும்.—சங்கீதம் 146:3-5.
யெகோவா அருளும் வல்லமையை நாடுங்கள்
6. நாம் ஏன் ‘யெகோவாவையும் அவருடைய வல்லமையையும்’ நாட வேண்டும்?
6 யெகோவா தம்முடைய ஊழியர்களுக்கு வல்லமையை அருளவும் அவர்களை பாதுகாக்கவும் முடியும். “யெகோவாவையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்” என்று பைபிள் நம்மை உந்துவிக்கிறது. (சங்கீதம் 105:4, NW) ஏன்? ஏனெனில், காரியங்களை நாம் கடவுளுடைய பலத்தில் செய்தால், நம்முடைய வல்லமை, மற்றவர்களின் தீமைக்காக அல்ல, நன்மைக்காகவே பயன்படுத்தப்படும். இதற்கு சிறந்த முன்மாதிரியை வேறு எங்குமல்ல, இயேசு கிறிஸ்துவிடமே காண்கிறோம். அவர் “யெகோவாவின் வல்லமையில்” பல அற்புதங்களை நடப்பித்தார். (லூக்கா 5:17, NW) பணத்திற்கும் புகழுக்கும் அரச பதவிக்கும் இயேசு அடிமையாகியிருக்கலாம். (லூக்கா 4:5-7) ஆனால் அவரோ பயிற்றுவிக்கவும் போதிக்கவும் உதவிசெய்யவும் சுகப்படுத்தவுமே கடவுள் தமக்குக் கொடுத்த வல்லமையைப் பயன்படுத்தினார். (மாற்கு 7:37; யோவான் 7:46) நமக்கு என்னே ஒரு சிறந்த முன்மாதிரி!
7. எதைச் செய்தாலும் நம்முடைய சொந்த பலத்தில் செய்யாமல், கடவுளுடைய பலத்தில் செய்கையில் என்ன முக்கியமான பண்பை வளர்ப்போம்?
7 மேலும், ‘தேவன் தந்தருளும் பெலத்தில்’ நாம் காரியங்களைச் செய்கையில், மனத்தாழ்மையுடன் இருப்பதற்கு இது நமக்கு உதவும். (1 பேதுரு 4:11) தங்களுக்கு வலிமையைத் தேடும் மனிதர் அகம்பாவம் பிடித்தவர்களாகிறார்கள். உதாரணமாக, அசீரிய அரசன் எஸர்-ஹாடன் இவ்வாறு அகந்தையுடன் சொன்னான்: “நான் வலிமைமிக்கவன், நான் எல்லாம் வல்லவன், நான் மாவீரன், நான் மிகப் பெரியவன், நான் பேருருவம் படைத்தவன்.” இதற்கு நேர்மாறாக யெகோவா, “பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி . . . உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார்.” இவ்வாறு, உண்மையான கிறிஸ்தவன் பெருமைபாராட்டினால், யெகோவாவில் பெருமைபாராட்டுகிறான், ஏனெனில் தான் சாதித்தது தன் சொந்த பலத்தினால் அல்ல என்பதை அறிந்திருக்கிறான். ‘கடவுளுடைய வல்லமையான கையின்கீழ் நம்மை தாழ்த்தினால்,’ மெய்யாகவே உயர்வோம்.—1 கொரிந்தியர் 1:26-31; 1 பேதுரு 5:6, தி.மொ.
8. யெகோவாவின் வல்லமையைப் பெற முதலாவதாக நாம் என்ன செய்ய வேண்டும்?
8 கடவுளிடமிருந்து பலத்தை நாம் எப்படி பெறுகிறோம்? முதலாவது, அதற்காக நாம் ஜெபிக்க வேண்டும். பரிசுத்த ஆவியை வேண்டுவோருக்கு தம்முடைய பிதா அதை கொடுப்பார் என்று இயேசு தம்முடைய சீஷர்களுக்கு உறுதியளித்தார். (லூக்கா 11:10-13) இயேசுவைப் பற்றி சாட்சிகொடுப்பதை நிறுத்தும்படி கட்டளையிட்ட மதத் தலைவர்களுக்கு கீழ்ப்படியாமல் கிறிஸ்துவின் சீஷர்கள் கடவுளுக்கே கீழ்ப்படிந்தபோது, இது அவர்களை வல்லமையால் ஊக்குவித்ததை கவனியுங்கள். யெகோவாவின் உதவிக்காக அவர்கள் ஜெபித்தபோது, அவர்களுடைய உள்ளப்பூர்வமான ஜெபம் பதிலளிக்கப்பட்டது; நற்செய்தியை தைரியத்துடன் தொடர்ந்து பிரசங்கிக்க பரிசுத்த ஆவி அவர்களுக்கு பலமளித்தது.—அப்போஸ்தலர் 4:19, 20, 29-31, 33.
9. ஆவிக்குரிய பலத்தைப் பெற இரண்டாவதாக என்ன செய்ய வேண்டும், அது பலன் தரும் என்பதைக் காட்டுவதற்கு வேதப்பூர்வ உதாரணம் ஒன்றை குறிப்பிடுங்கள்.
9 இரண்டாவதாக, பைபிளிலிருந்து ஆவிக்குரிய பலத்தை நாம் பெறலாம். (எபிரெயர் 4:12) அரசனாகிய யோசியாவின் நாட்களில், கடவுளுடைய வார்த்தையின் வல்லமை தெளிவாக தெரிந்தது. இந்த யூதேய அரசன் தேசத்திலிருந்து புறமத விக்கிரகங்களை ஏற்கெனவே அகற்றியிருந்தபோதிலும், ஆலயத்தில் யெகோவாவின் நியாயப்பிரமாணத்தை எதிர்பாராமல் கண்டெடுத்தது, இந்தச் சுத்திகரிக்கும் திட்டத்தை இன்னும் தீவிரமாக்க அவரை உந்துவித்தது. a ஜனங்களுக்கு நியாயப்பிரமாணத்தை யோசியாவே வாசித்துக் காட்டிய பின்பு, அந்த முழு ஜனமும் யெகோவாவுடன் ஓர் உடன்படிக்கை செய்தது; விக்கிரக வணக்கத்தை ஒழிக்க அதிமும்முரமான இரண்டாவது நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. யோசியாவின் சீர்திருத்த நடவடிக்கையின் சிறந்த பலனாக, “அவன் உயிரோடிருந்த நாளெல்லாம் அவர்கள் தங்கள் பிதாக்களின் கடவுளாகிய யெகோவாவைவிட்டு விலகவில்லை.”—2 தினவர்த்தமானம் 34:33, தி.மொ.
10. யெகோவாவிடமிருந்து பலத்தைப் பெற மூன்றாவதாக என்ன செய்ய வேண்டும், அது ஏன் இன்றியமையாதது?
10 மூன்றாவதாக, கிறிஸ்தவக் கூட்டுறவினால் யெகோவாவிடமிருந்து வல்லமையை பெறுகிறோம். ‘அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படுவதற்கும்,’ ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துவதற்கும், கிறிஸ்தவர்கள் தவறாமல் கூட்டங்களுக்கு வரும்படி கிறிஸ்தவர்களை பவுல் உந்துவித்தார். (எபிரெயர் 10:24, 25) பேதுரு அற்புதமாய் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டபோது, அவர் தம்முடைய சகோதரர்களுடன் இருக்க விரும்பி, நேராக யோவான் மாற்குவினுடைய தாயின் வீட்டுக்குச் சென்றார்; அங்கு, “அநேகர் கூடி ஜெபம்பண்ணிக் கொண்டிருந்தார்கள்.” (அப்போஸ்தலர் 12:12) நிச்சயமாகவே, அவர்கள் எல்லாரும் அவரவர் வீட்டிலேயே ஜெபித்திருக்கலாம்; ஆனால் அந்த இக்கட்டான சமயத்தின்போது, ஒன்றாக கூடிவந்து ஜெபிக்கவும் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தவும் விரும்பினார்கள். ரோமுக்கு பவுல் மேற்கொண்ட நெடுந்தொலைவானதும் ஆபத்தானதுமான பயணம் முடியவிருந்தபோது, புத்தேயோலியில் சில சகோதரரை கண்டார்; பின்பு, அவரை சந்திக்க அங்கு வந்திருந்த மற்றவர்களையும் கண்டார். அவருடைய பிரதிபலிப்பு? ‘அவர்களைப் பவுல் கண்டு, தேவனை ஸ்தோத்திரித்துத் தைரியமடைந்தார்.’ (அப்போஸ்தலர் 28:13-15) உடன் கிறிஸ்தவர்களோடு இருப்பதற்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்ததால் பலப்படுத்தப்பட்டார். நாமுங்கூட உடன் கிறிஸ்தவர்களுடன் கூட்டுறவு கொள்வதிலிருந்து பலம் பெறலாம். ஒருவரோடொருவர் கூட்டுறவுகொள்ள நமக்கு சுதந்திரம் இருக்கும் வரையில், ஜீவனுக்கு வழிநடத்தும் இடுக்கமான பாதையில் தனிமையாக நடக்க நாம் முயற்சி செய்யக்கூடாது.—நீதிமொழிகள் 18:1; மத்தேயு 7:14.
11. “இயல்புக்கு அப்பாற்பட்ட வல்லமை” தேவைப்படும் சில சந்தர்ப்பங்களைக் குறிப்பிடுங்கள்.
11 தவறாமல் ஜெபம் செய்வது, கடவுளுடைய வார்த்தையைப் படிப்பது, உடன் கிறிஸ்தவர்களோடு கூட்டுறவு கொள்வது ஆகியவற்றின் மூலம் நாம் ‘கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுகிறோம்.’ (எபேசியர் 6:10) சந்தேகமில்லாமல் நம் அனைவருக்கும் ‘கர்த்தரில் வல்லமை’ தேவை. நோய்களால் பலவீனமடைவதால் சிலர் அவதிப்படுகின்றனர், இன்னும் சிலர் முதிர்வயதினால் உண்டாகும் பாதிப்புகளால், அல்லது வாழ்க்கைத் துணையின் இழப்பால் துன்பப்படுகின்றனர். (சங்கீதம் 41:3) இன்னும் மற்றவர்கள் சத்தியத்தில் இல்லாத துணையின் எதிர்ப்பை சகிக்கின்றனர். பெற்றோர், அதுவும் தனிமரமாய் விடப்பட்ட பெற்றோர், வேலையும் செய்துகொண்டு அதே சமயத்தில் பிள்ளைகளையும் வளர்த்து ஆளாக்கி குடும்பத்தைக் கவனிப்பது என்பது முழு பலத்தையும் உறிஞ்சிவிடும் பொறுப்பு. கிறிஸ்தவ இளைஞர்கள் தங்களுடைய சகாக்களின் வற்புறுத்துதலுக்கு இடமளிக்காமல் உறுதியாய் நின்று, போதைப் பொருட்களையும் ஒழுக்கக்கேட்டையும் வேண்டாமென மறுக்க அவர்களுக்குப் பலம் தேவைப்படுகிறது. இத்தகைய சவால்களை சமாளிக்க, ‘இயல்புக்கு அப்பாற்பட்ட வல்லமைக்காக’ யெகோவாவிடம் கேட்பதற்கு ஒருவரும் தயங்கக்கூடாது.—2 கொரிந்தியர் 4:7, NW.
“சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பலம் கொடுக்கிறார்”
12. கிறிஸ்தவ ஊழியத்தில் யெகோவா நமக்கு எவ்வாறு பலம் தருகிறார்?
12 மேலும், தம்முடைய ஊழியர்கள் தங்கள் பிரசங்க வேலையை செய்கையில் யெகோவா அவர்களுக்கு வல்லமை அளிக்கிறார். ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தில் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பலம் கொடுக்கிறார், சக்தியில்லாதவனுக்கு வல்லமையைப் பெருகப்பண்ணுகிறார். . . . யெகோவாவுக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பலம் அடைந்து கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.” (ஏசாயா 40:29-31, தி.மொ.) அப்போஸ்தலன் பவுல் தன்னுடைய ஊழியத்தை செய்வதற்கு தனிப்பட்ட விதத்தில் வல்லமையை பெற்றார். இதனால், அவருடைய ஊழியம் பலன் தந்தது. தெசலோனிக்கேயிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு இவ்வாறு எழுதினார்: “எங்கள் சுவிசேஷம் உங்களிடம் பேச்சில் மாத்திரமல்ல வல்லமையிலும் பரிசுத்த ஆவியிலும் பூரண நிச்சயத்தோடு வந்ததே.” (1 தெசலோனிக்கேயர் 1:5, தி.மொ.) அவருடைய பிரசங்கமும் போதகமும், அவருக்குச் செவிகொடுத்தோரின் வாழ்க்கையில் பெரும் மாற்றங்களைச் செய்வதற்கு வல்லமையுடையதாக இருந்தன.
13. எதிர்ப்பின் மத்தியிலும் விடாது நிலைத்திருக்க எது எரேமியாவை பலப்படுத்தியது?
13 இருப்பினும், எந்தப் பலனுமின்றி நாம் மறுபடியும் மறுபடியும் பல ஆண்டுகள் பிரசங்கித்திருக்கும் ஒரு பிராந்தியத்தில், ஆர்வமற்ற ஜனங்களை சந்திக்கையில் நாம் ஒருவேளை சோர்ந்து போகலாம். எரேமியாவுங்கூட எதிர்ப்பு, பரிகாசம், அக்கறையின்மை ஆகியவற்றால் மனமுடைந்து போனார். “ஆதலால் நான் அவரைப் பிரஸ்தாபம்பண்ணாமலும் இனிக் கர்த்தருடைய நாமத்திலே பேசாமலும் இருப்பேன்” என்று தனக்குள் சொல்லிக்கொண்டார். ஆனால் அவரால் பேசாமல் இருக்க முடியவில்லை. கடவுளுடைய செய்தி அவருடைய “எலும்புகளில் அடைபட்டு எரிகிற அக்கினியைப்போல் . . . இருந்தது.” (எரேமியா 20:9) மிகுந்த துன்பத்தின் மத்தியிலும் எது அவருக்குப் புதுப் பெலனை தந்தது? “யெகோவாவோ என்னோடிருக்கிறார், அவர் வல்லமை மிகுந்த பராக்கிரமசாலி” என்று எரேமியா சொன்னார். (எரேமியா 20:11, தி.மொ.) தான் சொன்ன செய்தி, கடவுளால் அருளப்பட்ட தன் ஊழிய பொறுப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எரேமியா மதித்துணர்ந்தார், அதனால்தான் யெகோவா கொடுத்த உற்சாகத்தை ஏற்று அவரால் செயல்பட முடிந்தது.
புண்படுத்தும் வல்லமையும் புண்ணை ஆற்றும் வல்லமையும்
14. (அ) நாவு எப்படிப்பட்ட சக்திவாய்ந்த கருவி? (ஆ) நாவின் சேதப்படுத்தும் இயல்பை காட்டுவதற்கு உதாரணங்களைக் கொடுங்கள்.
14 நமக்கு இருக்கும் எல்லா வல்லமையும் கடவுளிடமிருந்து வருகிறதில்லை. நாவு சின்னஞ்சிறியது. அது புண்படுத்தவும் செய்யும், புண்ணை ஆற்றவும் செய்யும். “மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்” என்று சாலொமோன் எச்சரிக்கிறார். (நீதிமொழிகள் 18:21) வார்த்தைகள் எந்தளவு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதை ஏவாளுடன் சாத்தானின் சுருக்கமான உரையாடலின் விளைவுகள் காட்டுகின்றன. (ஆதியாகமம் 3:1-5; யாக்கோபு 3:5) நாமுங்கூட நாவினால் மிகுந்த சேதத்தை உண்டாக்கிவிடலாம். ஓர் இளம் பெண் குண்டாயிருப்பதை குத்திக்காட்டுவது, அவளை மனச்சோர்வடையச் செய்து பசியில்லா உளநோய்க்கு ஆளாக்கலாம். சிந்திக்காமல் திரும்பத் திரும்ப எவரையாவது புறங்கூறுவது, நீடித்த நட்பைக் கெடுத்துப் போடலாம். ஆம், நாவை அடக்கி வைக்க வேண்டும்.
15. கட்டியெழுப்பவும் காயமாற்றவும் நம்முடைய நாவை நாம் எவ்வாறு பயன்படுத்தலாம்?
15 எனினும், நாவு தீங்கு மட்டுமே செய்வதாயில்லாமல், கட்டியெழுப்பவும் செய்யும். பைபிள் நீதிமொழி இவ்வாறு சொல்கிறது: “யோசனையின்றிப் பேசிப் பட்டயம்போற் குத்துவோருண்டு, ஞானமுள்ளோரின் நாவு காயமாற்றும்.” (நீதிமொழிகள் 12:18, தி.மொ.) சோர்வுற்றோரையும் துக்கிப்போரையும் ஆறுதல்படுத்துவதற்கு, ஞானமுள்ள கிறிஸ்தவர்கள் தங்கள் நாவின் வல்லமையைப் பயன்படுத்துகிறார்கள். சகாக்களின் கெட்ட பழக்கவழக்கங்களுக்கு எதிராக போராடுகிற டீனேஜ் பிள்ளைகளிடம் பரிவிரக்கத்தோடு பேசும்போது அவர்கள் உற்சாகமடையலாம். பிறர் நிலையை எண்ணிப் பார்த்து பேசும் சிந்தனையுள்ள நாவு, வயதான சகோதரர்களும் சகோதரிகளும் இன்னும் தேவையானவர்கள் என்றும் நேசிக்கப்படுகிறார்கள் என்றும் அவர்களுக்குத் திரும்பவும் உறுதியளிக்கலாம். கனிவான வார்த்தைகள் நோயுற்றிருப்போருக்கு புத்துணர்ச்சி அளிக்கலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, வல்லமைவாய்ந்த ராஜ்ய செய்தியை செவிகொடுத்துக் கேட்கும் எல்லாரிடமும் பகிர்ந்துகொள்வதற்கு நம்முடைய நாவை பயன்படுத்தலாம். கடவுளுடைய வார்த்தையை நம்முடைய இருதயத்தில் தியானித்தால், அதை யாவரறிய அறிவிக்கும் வல்லமை நமக்கிருக்கும். பைபிள் இவ்வாறு சொல்கிறது: “நன்மை செய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதை செய்யத் தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே.”—நீதிமொழிகள் 3:27.
வல்லமையை சரியான முறையில் பயன்படுத்துதல்
16, 17. கடவுளால் கொடுக்கப்பட்ட தங்கள் அதிகாரத்தைச் செலுத்துகையில், மூப்பர்களும் பெற்றோர்களும் கணவர்களும் மனைவிகளும் எவ்வாறு யெகோவாவின் மாதிரியைப் பின்பற்றலாம்?
16 யெகோவா சர்வவல்லவராக இருந்தாலும், சபையை அன்பினால் ஆளுகிறார். (1 யோவான் 4:8) அவருடைய மாதிரியைப் பின்பற்றி, கிறிஸ்தவக் கண்காணிகள் தங்கள் அதிகாரத்தைத் தவறாக அல்லாமல், கடவுளுடைய மந்தையை அன்புடன் கவனிப்பதற்குப் பயன்படுத்துகிறார்கள். கண்காணிகள் சில சமயங்களில், ‘கண்டனம்பண்ணி, கடிந்துகொண்டு, புத்திசொல்ல’ வேண்டியது உண்மையே; ஆனால், “எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும்” [“போதிக்கும் கலையோடும்,” NW] செய்யப்படுகிறது. (2 தீமோத்தேயு 4:2) ஆகையால், சபையில் அதிகாரமுள்ளவர்களுக்கு அப்போஸ்தலன் பேதுரு எழுதிய இந்த வார்த்தைகளை மூப்பர்கள் எப்போதும் ஆழ்ந்து சிந்திக்கிறார்கள்: “உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாயும், அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, உற்சாக மனதோடும் [கடவுளுடைய] சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாகவும், கண்காணிப்பு செய்யுங்கள்.”—1 பேதுரு 5:2, 3; 1 தெசலோனிக்கேயர் 2:7, 8.
17 பெற்றோர்களுக்கும் கணவர்களுக்கும்கூட, யெகோவாவால் அருளப்பட்ட அதிகாரம் உள்ளது. இந்த அதிகாரம், உதவி செய்வதற்கும், அன்போடு பயிற்றுவிப்பதற்கும் கவனித்துக்கொள்வதற்கும் பயன்படுத்தப்பட வேண்டும். (எபேசியர் 5:22, 28-30; 6:4) அதிகாரம் பயன்தரத்தக்க அன்புள்ள முறையில் செலுத்தப்படலாம் என்பதை இயேசுவின் முன்மாதிரி காட்டுகிறது. சிட்சையை மிதமாகவும் பொருத்தமாகவும் கொடுக்கையில் பிள்ளைகள் நொந்துபோவதில்லை. (கொலோசெயர் 3:21) கிறிஸ்தவ கணவர்கள் கடவுளால் அருளப்பட்ட தங்கள் தலைமை ஸ்தானத்தை அன்புடன் வகிக்கும்போதும், மனைவிகள் தங்கள் காரியம் ஆகவேண்டும் என்பதற்காக கடவுள் கொடுத்த வரம்பை மீறி தங்கள் கணவர்களின்மீது செல்வாக்கு செலுத்தாமல் தங்கள் கணவர்களின் தலைமை ஸ்தானத்துக்கு ஆழ்ந்த மதிப்பு கொடுக்கும்போதும், அந்த திருமண பந்தம் உறுதிப்படுத்தப்படுகிறது.—எபேசியர் 5:28, 33; 1 பேதுரு 3:7.
18. (அ) நம்முடைய கோபத்தை அடக்குவதில் யெகோவாவின் முன்மாதிரியை நாம் எவ்வாறு பின்பற்ற வேண்டும்? (ஆ) பொறுப்பேற்று நடத்துபவர்கள், தங்கள் கவனிப்பில் இருப்பவர்களிடம் எதை படிப்படியாக அறிவுறுத்த முயற்சி செய்ய வேண்டும்?
18 குடும்பத்திலும் சபையிலும் பொறுப்பேற்று நடத்துபவர்கள் தங்கள் கோபத்தை அடக்குவதற்கு கவனம் செலுத்த வேண்டும்; ஏனெனில், கோபமுள்ள இடத்தில் பயம்தான் குடிகொள்ளும்; அன்போ பறந்துவிடும். நாகூம் தீர்க்கதரிசி இவ்வாறு சொன்னார்: “யெகோவா நீடிய சாந்தமும் மிகுந்த வல்லமையுமுள்ளவர்.” (நாகூம் 1:3, தி.மொ.; கொலோசெயர் 3:19) நம் கோபத்தை அடக்குவது பலத்திற்கு ஓர் அடையாளம், அதை அடக்க தவறுவது பலவீனத்திற்கு அடையாளம். (நீதிமொழிகள் 16:32) குடும்பமானாலும் சபையானாலும் அன்பை அறிவுறுத்துவதே நம் லட்சியம். இந்த அன்பு, யெகோவாவிடமும் உடன் சகோதர சகோதரிகளிடமும் காட்டப்படுவதோடு நேர்மையுள்ள நியமங்களை நேசிப்பதிலும் காட்டப்படுகிறது. அன்பே மிக உறுதிவாய்ந்த பந்தமாகவும், சரியானதை செய்வதற்கு எல்லாவற்றையும்விட மிகத் திடமான உந்துவிப்பாகவும் உள்ளது.—1 கொரிந்தியர் 13:8, 13; கொலோசெயர் 3:14.
19. என்ன ஆறுதலான உறுதியை யெகோவா அளிக்கிறார், நாம் எவ்வாறு பிரதிபலிக்க வேண்டும்?
19 யெகோவாவை அறிவதென்பது அவருடைய வல்லமையைப் புரிந்துகொள்வதை அர்த்தப்படுத்துகிறது. ஏசாயாவின் மூலம் யெகோவா இவ்வாறு சொன்னார்: “பூமியின் கடையாந்திரங்களைச் சிருஷ்டித்த யெகோவாவாகிய அநாதி கடவுள் சோர்ந்து போவதுமில்லை, இளைப்படைவதுமில்லை; இதை நீ அறிந்ததிலையோ, இதை நீ கேட்டதிலையோ?” (ஏசாயா 40:28, தி.மொ.) யெகோவாவின் வல்லமை தீராதது. நம்மீது அல்ல, அவர்மீது நம்பிக்கை வைத்திருந்தால் அவர் நம்மை கைவிடமாட்டார். அவர் நமக்கு இவ்வாறு உறுதியளிக்கிறார்: “நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.” (ஏசாயா 41:10) அவருடைய அன்புள்ள கவனிப்புக்கு நாம் எவ்வாறு பிரதிபலிக்க வேண்டும்? யெகோவா நமக்கு அருளும் எந்த வல்லமையையும், இயேசுவைப்போல், உதவிசெய்வதற்கும் உற்சாகப்படுத்துவதற்கும் எப்பொழுதும் பயன்படுத்துவோமாக. நம்முடைய நாவு புண்படுத்துவதாக இராமல், புண்ணை ஆற்றுவதாக இருப்பதற்கு அதை நாம் கட்டுப்படுத்துவோமாக. மேலும், ஆவிக்குரிய வகையில் நாம் எப்பொழுதும் விழித்திருந்து, விசுவாசத்தில் உறுதியாய் நிலைத்திருந்து, நம்முடைய மகத்தான சிருஷ்டிகராகிய யெகோவா தேவனின் வல்லமையில் பெருகுவோமாக.—1 கொரிந்தியர் 16:13.
[அடிக்குறிப்புகள்]
a பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் ஆலயத்தில் வைக்கப்பட்ட மோசேயின் நியாயப்பிரமாணத்தின் மூலப் பிரதியை யூதர்கள் கண்டுபிடித்ததாக தெரிகிறது.
உங்களால் விளக்க முடியுமா?
• யெகோவா தம்முடைய வல்லமையை எவ்வாறு பயன்படுத்துகிறார்?
• என்னென்ன வழிகளில் நாம் யெகோவாவின் வல்லமையைப் பெற முடியும்?
• நாவின் வல்லமையை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்?
• கடவுளால் அருளப்பட்ட அதிகாரம் எவ்வாறு ஓர் ஆசீர்வாதமாக இருக்கலாம்?
[கேள்விகள்]
[பக்கம் 15-ன் படம்]
இயேசு பிறருக்கு உதவ யெகோவாவின் பலத்தைப் பயன்படுத்தினார்
[பக்கம் 17-ன் படங்கள்]
கடவுளுடைய வார்த்தையை நம் இதயத்தில் தியானித்தால், அதை யாவரறிய அறிவிக்கும் வல்லமை நமக்கிருக்கும்