Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவை சேவிக்க எளிய வாழ்க்கை

யெகோவாவை சேவிக்க எளிய வாழ்க்கை

வாழ்க்கை சரிதை

யெகோவாவை சேவிக்க எளிய வாழ்க்கை

க்ளாரா கெர்பர் மாய்யர் என்பவரால் சொல்லப்பட்டது

வயதோ 92. நடக்க முடியாமல் படுக்கையில் முடங்கிக் கிடக்கிறேன். ஆனால், மனதோ முடங்கிப்போகவில்லை. தெளிவாக சிந்திக்கும் திறன் இருக்கிறது. என் சிறுபிராயம் முதல் யெகோவாவை சேவிக்கும் மாபெரும் பாக்கியத்தை பெற்றிருக்கிறேன். அதற்காக என் கோடானுகோடி நன்றிகள் யெகோவாவுக்கே! இந்தப் பொக்கிஷம் என் வசம் கிடைத்ததற்கு முக்கிய காரணம் சிக்கலற்ற, எளிய வாழ்க்கையே.

அமெரிக்க ஐக்கிய மாகாணங்களிலுள்ள ஒஹாயோவில் இருக்கும் அலையன்ஸில் 1907, ஆகஸ்ட் 18-⁠ம் தேதி பிறந்தேன். ஐவரில் மூத்த மகள் நான். எட்டு வயதாய் இருக்கும்போது, முழுநேர ஊழியர் ஒருவர் எங்கள் பால் பண்ணைக்கு சைக்கிளில் வந்தார். அவர் ஒரு பைபிள் மாணாக்கர். யெகோவாவின் சாட்சிகள் அப்போது அவ்வாறே அழைக்கப்பட்டனர். அவர் என் அம்மாவை சந்தித்தார். அம்மாவின் பெயர் லாரா. தீயகாரியங்கள் ஏன் அனுமதிக்கப்பட்டிருக்கின்றன என அவர் அம்மாவிடம் கேட்டார். அதைப் பற்றி அம்மா எப்போதுமே யோசித்துக் கொண்டிருந்தவர்கள்தான்.

அந்த சமயத்தில் அப்பா களஞ்சியத்தில் இருந்தார். அதனால் அவர் வந்தவுடன் அவருடைய அனுமதியோடு, வேதாகமங்களில் படிப்புகள் (ஆங்கிலம்) என்ற புத்தகத்தின் ஆறு தொகுப்புகளையும் அம்மா வாங்கினார்கள். அந்த புத்தகங்களை பேரார்வத்துடன் படித்தார்கள். அதில் கற்ற பைபிள் சத்தியங்கள் அம்மாவின் இருதயத்தை தொட்டன. புதிய சிருஷ்டிப்பு என்ற ஆறாவது தொகுப்பை படித்ததும், தண்ணீர் முழுக்காட்டுதல் கிறிஸ்தவர்களுக்கு அவசியம் என்பதை தெளிவாக புரிந்துகொண்டார்கள். ஆனால், பைபிள் மாணாக்கர்களை எங்கே தேடுவது என தெரியவில்லை. அதனால், எங்கள் பண்ணையில் இருந்த ஒரு சிறு ஓடையில் தன்னை முழுக்காட்டும்படி அப்பாவிடம் கேட்டார்கள். இது நடந்தது குளிர்காலமாகிய மார்ச் 1916-⁠ல்.

இது நடந்து கொஞ்ச நாட்களில், செய்தித்தாளில் ஓர் அறிவிப்பை அம்மா பார்த்தார்கள். அலையன்ஸில் உள்ள டாட்டர்ஸ் ஆஃப் வெடரன்ஸ் ஹாலில் ஒரு பேச்சு கொடுக்கப்பட இருக்கிறது என்பதற்கான விளம்பரமே அது. பேச்சின் தலைப்பு, “காலங்களின் தெய்வீக திட்டம்.” அந்தப் பேச்சு அம்மாவை வெகுவாக பாதித்தது. ஏனென்றால், வேதாகமங்களில் படிப்புகள் என்ற புத்தகத்தின் முதல் தொகுப்பின் தலைப்பும் அதுவே. குதிரைவண்டி பூட்டப்பட்டது. முழு குடும்பமும் எங்களுடைய முதல் கூட்டத்திற்கு குதிரைவண்டியில் போனோம். அதுமுதல் ஞாயிறு, புதன் மாலைகளில் சகோதரர்களின் வீடுகளில் நடந்த கூட்டங்களுக்கு தொடர்ந்து சென்றோம். பின் கொஞ்ச நாட்களிலேயே, அம்மா மறுபடியும் முழுக்காட்டுதல் எடுத்தார்கள். ஆனால், இந்த முறை கிறிஸ்தவ சபையிலுள்ள ஒரு பிரதிநிதியால் முழுக்காட்டப்பட்டார்கள். பண்ணை வேலையிலேயே மூழ்கி இருந்த அப்பாவும், காலப்போக்கில் பைபிள் படிப்பில் ஆர்வம் காட்டினார். சில ஆண்டுகளுக்குப் பின், முழுக்காட்டுதல் எடுத்தார்.

முன்நின்று நடத்துவோரை சந்தித்தல்

ஜூன் 10, 1917. உவாட்ச் டவர் சொஸைட்டியின் தலைவராக அப்போது இருந்த ஜே. எஃப். ரதர்ஃபர்ட், அலையன்ஸுக்கு வந்தார். “தேசங்கள் ஏன் போரிடுகின்றன?” என்ற தலைப்பில் ஒரு பேச்சு கொடுத்தார். அப்போது எனக்கு ஒன்பது வயது. நானும் என்னுடைய தம்பிமார்கள் வில்லீயும் சார்ல்ஸும் பெற்றோரோடு சேர்ந்து அந்தப் பேச்சிற்கு சென்றோம். கொலம்பியா தியேட்டரில் அந்தப் பேச்சு கொடுக்கப்பட்டது. அதற்கு நூறு பேருக்கும் அதிகமானோர் வந்திருந்தனர். சகோதரர் ரதர்ஃபர்டுடைய பேச்சு முடிந்ததும், அதற்கு வந்திருந்தவர்களில் பெரும்பாலானோர் அந்த தியேட்டருக்கு வெளியே நின்று ஒரு ஃபோட்டோ எடுத்துக்கொண்டார்கள். அதற்கு அடுத்த வாரம், அதே இடத்தில் ஏ. ஹெச். மாக்மில்லன், “வருகிற கடவுளுடைய ராஜ்யம்” என்ற தலைப்பில் ஒரு பேச்சு கொடுத்தார். எங்களுடைய சிறிய பட்டணத்திற்கு இந்த சகோதரர்கள் வந்தது நாங்கள் செய்த பாக்கியமே.

நினைவை விட்டு நீங்காத ஆரம்பகால மாநாடுகள்

1918-⁠ல், ஒஹாயோ, ஏட்வாடரில் நடந்த மாநாட்டிற்கு சென்றேன். அதுதான் நான் சென்ற முதல் மாநாடு. அலையன்ஸிலிருந்து ஒருசில கிலோமீட்டர் தொலைவில் நடந்தது அந்த மாநாடு. நான் முழுக்காட்டுதல் எடுக்கலாமா என அங்கு வந்திருந்த சங்கத்தின் பிரதிநிதியை அம்மா கேட்டார்கள். கடவுளுடைய சித்தத்தை செய்வதற்காக நான் தகுந்தமுறையில் ஒப்புக்கொடுத்தலை செய்திருப்பதாக நான் உணர்ந்தேன். எனவே, நான் முழுக்காட்டுதல் எடுக்க அனுமதிக்கப்பட்டேன். அதே நாளில், அருகிலுள்ள ஒரு பெரிய ஆப்பிள் தோட்டத்தில் உள்ள ஓர் ஓடையில் முழுக்காட்டுதல் பெற்றேன். உடை மாற்றுவதற்காக சகோதரர்கள் ஒரு கூடாரத்தை போட்டிருந்தார்கள். முழுக்காட்டுதல் எடுக்கும்போது போட்டிருந்த பழைய முரடான நைட்கவுனை அங்கே மாற்றிக்கொண்டேன்.

1919, செப்டம்பரில் நானும் பெற்றோரும் ஒஹாயோவில் இருக்கும் எரீ ஏரிக்கரையில் உள்ள ஸான்டுஸ்கிக்கு ரயிலில் சென்றோம். அங்கிருந்து ஒரு படகில் ஏரியைக் கடந்து சிறிது நேரத்தில், சீடர் பாயின்ட் என்ற இடத்தை அடைந்தோம். எங்கள் நினைவை விட்டு நீங்காத மாநாடு அங்குதான் நடந்தது. படகிலிருந்து இறங்கியதும், துறையில் இருந்த ஒரு சிறிய கடையிலிருந்து மாட்டிறைச்சி சான்ட்விச் ஒன்றை எனக்கு வாங்கிக் கொடுத்தார்கள். அந்த நாட்களில், உண்மையிலேயே அது அரிய பண்டம் எனக்கு. சுவையோ சொல்லி முடியாது! எட்டு நாட்கள் நடந்த அந்த மாநாட்டிற்கு வந்திருந்தவர்களின் உச்ச எண்ணிக்கை 7,000. ஒலிப்பெருக்கி சாதனங்கள் ஏதுமில்லை. அதனால், மிக உன்னிப்பாக காதுகொடுத்து கேட்க வேண்டியதாயிற்று.

காவற்கோபுரம் பத்திரிகையின் கூட்டுப் பத்திரிகை த கோல்டன் ஏஜ் (இப்போது விழித்தெழு!) அந்த மாநாட்டில் வெளியிடப்பட்டது. அந்த மாநாட்டிற்கு செல்வதற்காக, ஒரு வாரம் ஸ்கூலுக்கு செல்லவில்லை. ஆனால், அதைவிட பல மடங்கு பலன்களை மாநாட்டில் பெற்றேன். சீடர் பாய்ன்ட், சுற்றுலாப் பயணிகள் தங்குமிடம். அதனால், அங்கிருந்த ரெஸ்டாரண்டுகளில் சமைப்பதற்கு ஆட்கள் இருந்தனர். மாநாட்டிற்கு வந்திருந்த வெளிநாட்டு பிரதிநிதிகளுக்காக அவர்கள் உணவு தயாரித்தனர். ஆனால், ஏதோ காரணத்திற்காக, சமையல்காரர்களும் பரிமாறுபவர்களும் வேலைநிறுத்தம் செய்தனர். எனவே, சமையல் பற்றி ஓரளவு தெரிந்திருந்த சில கிறிஸ்தவ சகோதரர்கள் சமையல் களத்தில் புகுந்தனர். வந்திருந்தவர்களுக்காக சமைத்தனர். அதன்பின் அநேக ஆண்டுகளுக்குப் பிறகு, யெகோவாவின் மக்கள், மாநாடுகளில் தாங்களாகவே சாப்பாடு தயார் செய்துகொள்ள ஆரம்பித்தனர்.

1922, செப்டம்பரில் மறுபடியும் சீடர் பாயின்டில் நடந்த ஒன்பதுநாள் மாநாட்டிற்கு செல்லும் அரும்பாக்கியம் எங்களுக்கு கிடைத்தது. அந்த மாநாட்டிற்கு வந்திருந்தோரின் உச்ச எண்ணிக்கை 18,000-⁠க்கும் அதிகம். அதில்தான், சகோதரர் ரதர்ஃபர்ட் “ராஜாவையும் ராஜ்யத்தையும் விளம்பரப்படுத்துங்கள், விளம்பரப்படுத்துங்கள், விளம்பரப்படுத்துங்கள்” என எங்களை உற்சாகப்படுத்தினார். எனினும், அதற்கு பல வருடங்களுக்கு முன்பே, துண்டுப்பிரதிகளையும் த கோல்டன் ஏஜ் பத்திரிகையையும் விநியோகிப்பதன்மூலம் என்னுடைய ஊழியம் ஆரம்பித்துவிட்டது.

ஊழியத்திற்கான போற்றுதல்

1918-⁠ன் துவக்கத்தில், பாபிலோனின் வீழ்ச்சி (ஆங்கிலம்) என்ற துண்டுப்பிரதியை பக்கத்து பண்ணைகளில் உள்ளோருக்கு விநியோகிப்பதில் நான் கலந்துகொண்டேன். சீதோஷ்ண நிலை மிகவும் குளிராக இருந்ததால், வீட்டிலேயே விறகடுப்பில் மாக்கல்லை சூடுபண்ணி, குதிரைவண்டியில் எடுத்துச் செல்வோம். அதன்மூலம் எங்கள் பாதங்களை சூடாக்கிக்கொள்வோம். கனமான கோட்டுகளையும் தொப்பிகளையும் அணிந்துகொள்வோம். ஏனென்றால், குதிரைவண்டியின் பக்கவாட்டிலும் மேல் பக்கமும் திரைச்சீலைதான் இருந்தது. ஹீட்டர் இல்லை. ஆனால், அவை மிகவும் மகிழ்ச்சியான காலங்கள்.

ZG என்றழைக்கப்பட்ட, நிறைவேறித்தீர்ந்த இரகசியம் (ஆங்கிலம்) என்ற புத்தகத்தின் சிறப்புப் பதிப்பு பத்திரிகை வடிவில் 1920-⁠ல் தயாரிக்கப்பட்டது a நானும் என் பெற்றோரும் இந்தப் பத்திரிகையோடு அலையன்ஸில் ஊழியத்திற்கு சென்றோம். அந்த நாட்களில், வீட்டுக்கு வீடு ஊழியம் தனியாகத்தான் செய்தனர். எனவே, ஒரு வீட்டின் வராந்தாவில் உட்கார்ந்திருந்த பலரை சந்திக்க பயந்துகொண்டு தயக்கத்துடன் சென்றேன். நான் என்னுடைய பிரசங்கத்தை முடித்ததும், “அருமையான சின்ன ஒரு பேச்சை தந்தாள் அல்லவா” என ஒரு பெண்மணி சொன்னார். பத்திரிகையையும் ஏற்றுக்கொண்டார். மொத்தத்தில், அந்தப் பத்திரிகையில் 13 நான் கொடுத்தேன். வீட்டுக்குவீடு ஊழியத்தில் நான் நீண்ட பிரசங்கம் கொடுத்தது அதுவே முதல் தடவை.

நான் 15 வயதாய் இருக்கும்போது, அம்மா நிமோனியாவால் பாதிக்கப்பட்டார்கள். ஒரு மாதத்திற்குமேல் படுத்த படுக்கையாகி விட்டார்கள். என்னுடைய தங்கை, ஹேஸல், அப்போது கைக்குழந்தை. அதனால், பண்ணை வேலையையும் பார்த்துக்கொண்டு பிள்ளைகளையும் கவனிக்க வேண்டியிருந்ததால், ஸ்கூலிலிருந்து நின்றுவிட்டேன். இதன் மத்தியிலும், எங்கள் குடும்பம் பைபிள் சத்தியத்தை முக்கியமானதாய் கருதியது. சபை கூட்டங்கள் எல்லாவற்றிற்கும் தவறாமல் சென்றோம்.

1928-⁠ல், கிறிஸ்துவின் மரண நினைவு ஆசரிப்பின்போது, “மற்ற ஒன்பது பேர் எங்கே?” (ஆங்கிலம்) என்று தலைப்பிடப்பட்ட துண்டுப்பிரதி ஒன்று எல்லாருக்கும் கொடுக்கப்பட்டது. லூக்கா 17:11-19 வரையுள்ள வசனங்களை அது சிந்தித்தது. சுத்தமாக்கப்பட்ட பத்து குஷ்டரோகிகளில் ஒருவன் மாத்திரமே தான் அற்புதமாக குணமாக்கப்பட்டதற்காக இயேசுவுக்கு தாழ்மையோடு நன்றி சொன்னான் என்ற பைபிள் பதிவை அந்தத் துண்டுப்பிரதி விவரித்தது. அது என் நெஞ்சைத் தொட்டது. ‘நான் எந்தளவு நன்றியுடையவளாய் இருக்கிறேன்?’ என்ற கேள்வியை என்னை நானே கேட்டுக்கொண்டேன்.

இதற்குள் வீட்டில் நிலைமைகள் இயல்பான நிலைக்கு திரும்ப ஆரம்பித்து விட்டன. எனக்கு நல்ல உடல்நிலை இருந்தது. மேலும், என்னைத் தடைசெய்யும் பொறுப்புகளும் ஏதுமில்லை. எனவே, வேறு இடத்தில் சென்று பயனியர் ஊழியத்தை ஆரம்பிக்க தீர்மானித்தேன். முழுநேர ஊழியம் அவ்வாறே அழைக்கப்படுகிறது. என் பெற்றோரும் என்னை உற்சாகப்படுத்தினார்கள். எனவே, நானும் என் பார்ட்னர் ஆக்னஸ் அலீட்டாவும் எங்கள் ஊழிய நியமிப்பை பெற்றோம். 1928 ஆகஸ்ட் 28, இரவு ஒன்பது மணிக்கு நாங்கள் ரயில் ஏறினோம். இரண்டு பேரும் ஒரு சூட்கேஸும் பைபிள் புத்தகங்களை வைக்கும், தோளில் மாட்டிக்கொள்ளும் ஒரு சிறிய பையும் வைத்திருந்தோம். எங்களை வழியனுப்ப வந்த என் தங்கைகளும் பெற்றோரும் ஸ்டேஷனில் அழுதனர். நாங்களும்தான். அவர்களை மறுபடியும் பார்க்கவே முடியாது என்று நான் நினைத்தேன். ஏனென்றால், அர்மகெதோன் வெகு சீக்கிரத்தில் இருக்கிறதென நாங்கள் நம்பினோம். அடுத்த நாள் காலை, எங்களுடைய ஊழிய நியமிப்பு இடமாகிய, கென்டகியில் உள்ள ப்ரூக்ஸ்வில் நகரத்தை அடைந்தோம்.

விடுதியில் ஒரு சிறிய அறை எடுத்துத் தங்கினோம். இடியாப்பங்களை வாங்கி, ஸான்ட்விச்சுகளை நாங்களே செய்து கொண்டோம். ஒவ்வொரு நாளும் வேறு வேறு இடங்களுக்கு தனித்தனியே சென்று பிரசங்கித்தோம். ஐந்து புத்தகங்களை 1.98 டாலர் நன்கொடைக்கு அளித்தோம். பைபிளில் ஆர்வம் காட்டும் மக்களை சந்தித்தோம். இப்படியாக முழு நகரத்தையும் ஊழியம் செய்து முடித்தோம்.

சுமார் மூன்றே மாதங்களில், ப்ரூக்ஸ்வில் மற்றும் ஆகஸ்டா பட்டணங்களிலும் அவற்றை சுற்றியுள்ள இடங்களிலும் உள்ள எல்லா மக்களுக்கும் பிரசங்கித்துவிட்டோம். எனவே, மேஸ்வில், பாரிஸ், ரிச்மான்ட் பட்டணங்களில் ஊழியம் செய்ய சென்றோம். அடுத்த மூன்று வருடங்களில், கென்டகியிலுள்ள பல மாகாணங்களை முடித்தோம். அந்த மாகாணங்களில் சபைகளே இல்லை. எங்களுக்கு ஊழியத்தில் கைகொடுத்து உதவ அடிக்கடி எங்கள் குடும்ப அங்கத்தினர்களும் நண்பர்களும் ஒஹாயோவிலிருந்து வந்தனர். ஒரு வாரமோ அல்லது அதற்கும் மேலோ தங்கியிருந்து எங்களோடு ஊழியம் செய்தனர்.

நினைவிலிருக்கும் மற்ற மாநாடுகள்

1931, ஜூலை 24-30, ஒஹாயோ, கொலம்பஸில் நடந்த மாநாடு உண்மையிலேயே மறக்க முடியாத ஒன்று. பைபிள் அடிப்படையிலான யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயரால் அழைக்கப்படுவோம் என்ற அறிவிப்பு செய்யப்பட்ட மாநாடு அதுவே. (ஏசாயா 43:12) அதற்குமுன், நீங்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்கள் என ஜனங்கள் கேட்டால், நாங்கள் “சர்வதேச பைபிள் மாணாக்கர்கள்” என்று சொல்வோம். ஆனால், வித்தியாசமான, பல மதப் பிரிவுகளைச் சேர்ந்த பைபிள் மாணாக்கர்களும் அப்போது இருந்தனர். அதனால், அந்தப் பெயர் உண்மையிலேயே எங்களை வேறுபடுத்திக் காட்டவில்லை.

என்னுடைய பயனியர் பார்ட்னர் ஆக்னஸ் திருமணமாகி சென்றுவிட்டதால், நான் தனியாக இருந்தேன். ஒரு பயனியர் பார்ட்னர் வேண்டுமென நினைப்பவர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தெரிவிக்க வேண்டுமென அறிவிப்பு கொடுக்கப்பட்டது. அப்போது உண்மையிலேயே நான் மிகவும் கிளர்ச்சியடைந்தேன். அங்கேதான், பெர்தா கார்ட்டியையும் எல்ஸி கார்ட்டியையும் பெஸீ என்ஸ்மிங்கரையும் சந்தித்தேன். அவர்கள் இரண்டு கார் வைத்திருந்தார்கள். அவர்களோடு ஊழியம் செய்ய நான்காவது பயனியர் சகோதரிக்காக காத்திருந்தனர். நாங்கள் ஒருவரையொருவர் இதுவரை சந்தித்ததே கிடையாது. இருந்தாலும், மாநாடு முடிந்ததும் நாங்கள் நால்வரும் சேர்ந்து புறப்பட்டோம்.

கோடையில், பென்ஸில்வேனியா மாகாணம் முழுவதும் ஊழியம் செய்தோம். பிறகு, குளிர்காலம் நெருங்கும்போது, வட கரோலினா, வர்ஜீனியா, மேரிலாந்து போன்ற உஷ்ணமான தென் மாகாணங்களில் ஊழியம் செய்ய நியமிப்பு தரும்படி கேட்டுக் கொண்டோம். இளவேனில் காலத்தின்போது, வடக்குப் பகுதிக்கு மறுபடியும் வந்து ஊழியம் செய்தோம். அப்போது, பயனியர்கள் வழக்கமாக அப்படித்தான் செய்வார்கள். இதே வழக்கத்தை பின்பற்றி, 1934-⁠ல், ஜான் பூத், ரூடால்ஃப் அப்பூல் என்பவர்கள் ரால்ஃப் மாய்யரையும் அவரது தம்பி வில்லர்ட் என்பவரையும் கூட்டிக் கொண்டு கென்டகியிலுள்ள ஹேஸர்ட் நகரத்திற்கு சென்றனர்.

இதற்கு முன் அநேக சந்தர்ப்பங்களில் நான் ரால்ஃபை சந்தித்திருக்கிறேன். 1935, மே 30-ஜூன் 3, வாஷிங்டன், டி.சி.-⁠ல் நடந்த பெரிய மாநாட்டின்போது நாங்கள் நெருங்கிப் பழக வாய்ப்பு கிட்டியது. “திரளான ஜனங்கள்” அல்லது “திரள் கூட்ட”த்தைப் பற்றிய பேச்சு கொடுக்கப்பட்டபோது, ரால்ஃபும் நானும் பால்கனியில் உட்கார்ந்திருந்தோம். (வெளிப்படுத்துதல் 7:9-14) திரள்கூட்டமான ஜனங்களும் பரலோக வகுப்பை சேர்ந்தவர்கள் என்றே அதுவரை நாங்கள் நம்பிக்கொண்டிருந்தோம். இவர்கள், 1,44,000 பேரைவிட விசுவாசத்தில் சற்றுக் குறைந்தவர்கள் என்றும் நம்பியிருந்தோம். (வெளிப்படுத்துதல் 14:1-3) அதனால், அவர்களில் ஒருவராக இருக்க நான் விரும்பவில்லை!

திரள்கூட்டமான ஜனங்கள் பூமிக்குரிய நம்பிக்கை உடையவர்கள் என்றும் அர்மகெதோனை தப்பிப்பிழைக்கும் விசுவாசமுள்ள மக்கள் என்றும் சகோதரர் ரதர்ஃபர்ட் விளக்கினார். அதைக் கேட்ட அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். திரள் கூட்டத்தைச் சேர்ந்த எல்லாரையும் எழுந்து நிற்கும்படி சகோதரர் ரதர்ஃபர்ட் அழைப்பு விடுத்தார். நான் நிற்கவில்லை. ஆனால், ரால்ஃப் எழுந்து நின்றார். பிறகுதான், இந்த விஷயத்தை சரியாக புரிந்துகொண்டேன். எனவே, அதுவரை கிறிஸ்துவின் மரண ஆசரிப்பின்போது அப்பத்திலும் திராட்சை ரசத்திலும் பங்கெடுத்துக் கொண்டிருந்தேன். ஆனால், 1935-⁠ம் வருடத்தோடு அதை நிறுத்திவிட்டேன். எனினும், அம்மா சாகும்வரை, அதாவது நவம்பர் 1957 வரை தொடர்ந்து அதில் பங்கெடுத்து வந்தார்கள்.

நிரந்தர பார்ட்னர்

ரால்ஃபும் நானும் தொடர்ந்து கடிதத் தொடர்பு வைத்திருந்தோம். நியூ யார்க்கில் உள்ள லேக் ப்ளேஸட் நகரத்தில் ஊழியம் செய்து வந்தேன். ரால்ஃப் பென்ஸில்வேனியாவில் ஊழியம் புரிந்து வந்தார். 1936-⁠ல், ஒரு சிறிய ட்ரெய்லரை அமைத்து, அதனைத் தன் காரோடு இணைத்தார். பென்ஸில்வேனியாவிலுள்ள பாட்ஸ்டவுன் என்ற இடத்திலிருந்து நியூ ஜெர்ஸியிலிருக்கும் நேவார்க் என்ற இடத்திற்கு அதில் சென்றார். அக்டோபர் 16-18 அங்கு மாநாடு நடந்தது. ஒரு நாள் மாலை, நிகழ்ச்சிநிரலுக்குப் பிறகு, பயனியர்களில் பலர் ரால்ஃபுடைய புதிய ட்ரெய்லரை பார்க்க சென்றோம். ட்ரெய்லரின் உள்ளே கட்டப்பட்டிருந்த சிறிய ஒரு பேஸின் பக்கத்தில் நானும் ரால்ஃபும் நின்று கொண்டிருந்தோம். அப்போது அவர் என்னிடம், “உனக்கு இந்த ட்ரெய்லர் பிடித்திருக்கிறதா?” என்று கேட்டார்.

நான் ஆமாம் என்று தலையாட்டினேன். உடனே அவர், “இதில் இருக்க உனக்கு இஷ்டமா?” என்று கேட்டார்.

“ஆமாம்” என்று நான் சொன்னதும் அவர் என்னை கனிவாக முத்தமிட்டார். அதை என்னால் எப்போதுமே மறக்க முடியாது. சில நாட்களுக்குப் பிறகு, திருமண லைசென்ஸை நாங்கள் பெற்றோம். அக்டோபர் 19, மாநாட்டிற்கு அடுத்த நாள், நாங்கள் புரூக்லின் சென்றோம். உவாட்ச் டவர் சொஸைட்டியின் பிரிண்டிங் பிரஸ்களை சுற்றிப் பார்த்தோம். ஊழிய நியமிப்புக்கான பிராந்தியத்தை நாங்கள் கேட்டோம். பிராந்தியங்களைப் பற்றிய காரியங்களை கண்காணித்துக் கொண்டிருந்தவர் க்ராண்ட் சூட்டர். யார் பயனியர் செய்யப் போகிறார்கள் என அவர் கேட்டார். “நாங்கள் திருமணம் செய்து கொள்ள முடியும் என்றால் நாங்கள் தயார்” என்று ரால்ஃப் சொன்னார்.

“சாயந்திரம் 5 மணிக்கு நீங்கள் திரும்பி வந்தால், நாங்கள் ஏற்பாடு செய்கிறோம்” என சகோதரர் சூட்டர் சொன்னார். எனவே, அன்று மாலையே நாங்கள் திருமணம் செய்துகொண்டோம். புரூக்லின் ஹைட்ஸ் என்ற இடத்திலுள்ள ஒரு சாட்சியின் வீட்டில் எங்கள் திருமணம் நடந்தது. அங்கே இருந்த ஒரு ரெஸ்டாரண்டில் சில நண்பர்களோடு சேர்ந்து சாப்பிட்டுவிட்டு, ரால்ஃபுடைய ட்ரெய்லர் இருந்த நேவார்க்கிற்கு வந்து சேர்ந்தோம்.

சிறிது நாட்களிலேயே, எங்களுடைய பயனியர் நியமிப்பு இடத்தை நோக்கி பிரயாணப்பட்டோம். வர்ஜீனியாவிலுள்ள ஹீத்ஸ்வில் கிராமமே எங்கள் முதல் நியமிப்பு. நார்தம்பர்லாந்து மாவட்டம் முழுவதிலும் ஊழியம் செய்தோம். பின், பென்ஸில்வேனியாவிலுள்ள ஃபல்ட்டன் மற்றும் ஃப்ராங்க்ளின் மாவட்டங்களுக்கு சென்றோம். 1939-⁠ல், பிரயாண வேலைக்காக ரால்ஃப் அழைக்கப்பட்டார். சபைகளை சந்திக்கும் இந்த சேவையில் டென்னெஸீ மாகாணத்திலுள்ள சபைகளுக்கு சென்றோம். அடுத்த வருடம், எங்கள் மகன் ஆலன் பிறந்தான். எனவே, 1941-⁠ல் எங்கள் பிரயாண வேலையை நிறுத்தினோம். வர்ஜீனியாவிலுள்ள மேரியன் நகரத்திற்கு விசேஷ பயனியர்களாக நியமிக்கப்பட்டோம். அப்போது, இந்த ஊழியத்தில் மாதத்திற்கு 200 மணிநேரம் செலவழிக்க வேண்டும்.

மாற்றங்களை செய்தல்

1943-⁠ல், விசேஷ பயனியர் ஊழியத்தை நான் நிறுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. சிறிய ட்ரெய்லரில் இருந்துகொண்டு, கைக்குழந்தையையும் கவனித்துக்கொண்டு, சமையல், துணி துவைப்பது என எல்லா வேலையையும் பார்க்க வேண்டியதாய் இருந்தது. அதனால், ஊழியத்தில் என்னால் சுமார் 60 மணிநேரம்தான் செலவிட முடிந்தது. ஆனால், ரால்ஃப் விசேஷ பயனியராக தொடர்ந்து செயல்பட்டார்.

1945-⁠ல், ஒஹாயோவிலுள்ள அலையன்ஸுக்கு திரும்பி சென்றோம். ஒன்பது வருடங்களுக்கு எங்கள் வீடாக இருந்துவந்த ட்ரெய்லரை விற்றோம். பண்ணை வீட்டில் என் பெற்றோரோடு சேர்ந்திருந்தோம். அந்த வீட்டின் முன்வராந்தாவில்தான் எங்கள் மகள் ரெபெக்கா பிறந்தாள். ரால்ஃப் பகுதி நேர வேலை ஒன்றை செய்துகொண்டே ஒழுங்கான பயனியராக சேவை செய்தார். நான் பண்ணையில் வேலை செய்தேன். ரால்ஃப் பயனியர் சேவையை தொடர்ந்து செய்வதற்கு என்னாலான எல்லா உதவியையும் அளித்தேன். என் குடும்பத்தார் ஒரு வீட்டையும் நிலத்தையும் எங்களுக்கு இலவசமாக கொடுக்க முன்வந்தார்கள். ஆனால், ரால்ஃப் வேண்டாமென மறுத்துவிட்டார். சிக்கல்கள் இல்லாத வாழ்க்கையை தொடரத்தான் ரால்ஃப் விரும்பினார். அப்போதுதான், ராஜ்ய காரியங்களை அதிக அளவில் தொடர்ந்து செய்ய முடியும்.

1950-⁠ல், பென்ஸில்வேனியாவில் உள்ள பாட்ஸ்டவுனுக்கு சென்றோம். அங்கே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தோம். ஒரு மாத வாடகை 25 டாலர். அடுத்த 30 வருடங்களில், வாடகை 75 டாலரே உயர்ந்தது. எங்கள் வாழ்க்கையை எளிமையாக வைத்துக் கொள்ள யெகோவா எங்களுக்கு உதவுவதை நாங்கள் உணர்ந்தோம். (மத்தேயு 6:31-33) வாரத்தில் மூன்று நாட்கள் முடி வெட்டும் வேலையை ரால்ஃப் செய்தார். எங்கள் பிள்ளைகள் இருவரோடும் சேர்ந்து ஒவ்வொரு வாரமும் பைபிளை படித்தோம். சபை கூட்டங்களுக்குச் சென்றோம். ராஜ்ய நற்செய்தியை பிரசங்கிக்கும் வேலையில் குடும்பமாக கலந்து கொண்டோம். உள்ளூர் சபையில் நடத்தும் கண்காணியாக ரால்ஃப் சேவை செய்தார். எங்கள் வாழ்க்கையை எளிமையாக வைத்துக் கொண்டதனால், யெகோவாவின் சேவையில் எங்களால் அதிகத்தை செய்ய முடிந்தது.

என்னருமை துணைவரின் இழப்பு

1981, மே 17. ராஜ்ய மன்றத்தில் பொதுப் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தோம். திடீரென்று ரால்ஃபுக்கு என்னவோ செய்தது. மன்றத்தின் பின்னால் சென்றார். அவர் வீட்டிற்கு செல்வதாக ஒரு அட்டெண்டன்ட்டிடம் சொல்லிவிட்டு போனார். ரால்ஃப் அப்படி ஒருபோதும் போனதில்லை. அதனால், யாராவது என்னை வீட்டில் கொண்டுபோய் விடும்படி கேட்டுக் கொண்டு, நானும் வீட்டிற்கு சென்றேன். மிகவும் கடுமையான மாரடைப்பால் ஒரு மணிநேரத்திற்குள் ரால்ஃப் இறந்தார். அன்று காலை காவற்கோபுர படிப்பு முடிந்ததும், ரால்ஃப் இறந்துவிட்டாரென சபைக்கு அறிவிக்கப்பட்டது.

அந்த மாதம், ரால்ஃப் ஏற்கெனவே ஊழியத்தில் 50 மணிநேரத்திற்கும் மேல் செலவிட்டிருந்தார். 46 வருடங்களுக்கும் மேலாக அவர் முழுநேர ஊழியத்தை செய்தார். நூறுக்கும் அதிகமானோரோடு பைபிள் படிப்பை நடத்தினார். அவர்கள் யெகோவாவின் சாட்சிகளாக முழுக்காட்டுதலும் பெற்றனர். இந்த வருடங்களினூடே நாங்கள் எவ்வளவோ தியாகங்களை செய்திருக்கிறோம். ஆனால், நாங்கள் பெற்ற ஆவிக்குரிய ஆசீர்வாதங்களோடு ஒப்பிடுகையில் அவையெல்லாம் ஒன்றுமே இல்லை.

நான் பெற்ற பாக்கியங்களுக்காக நன்றி

கடந்த 18 வருடங்களாக, நான் தனிமையில் வாழ்கிறேன். கூட்டங்களுக்கு செல்வதாக இருந்தாலும்சரி, எப்போதெல்லாம் முடிகிறதோ அப்போதெல்லாம் பிரசங்கிக்க செல்வதாக இருந்தாலும்சரி, கடவுளுடைய வார்த்தையை படிப்பதாக இருந்தாலும்சரி தனியாகத்தான் செய்கிறேன். வேலையிலிருந்து ஓய்வுபெற்ற வயதானவர்களுக்காக கொடுக்கப்படும் ஒரு அபார்ட்மெண்ட்டில் இப்போது இருக்கிறேன். என்னிடம் இருப்பதெல்லாம் ஒருசில சாமான்களே. டிவியும்கூட நான் வேண்டாமென தீர்மானித்தேன். ஆனால், என் வாழ்க்கை திருப்தியாக இருக்கிறது. ஆவிக்குரிய விதத்தில் பணக்காரியாக இருக்கிறேன். என் பெற்றோரும், இரண்டு தம்பிமார்களும் இறக்கும்வரை விசுவாசத்தை நிரூபித்தனர். என் இரு தங்கையும் சத்திய மார்க்கத்தில் தொடர்ந்து இருக்கிறார்கள்.

என் மகன், ஆலன், கிறிஸ்தவ மூப்பராக சேவை செய்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. பல வருடங்களாக, ராஜ்ய மன்றங்களை கட்டுவதிலும் அசெம்பிளி ஹாலில் ஒலிபெருக்கி சாதனங்களை அமைப்பதிலும் சேவை செய்திருக்கிறான். கோடைகால மாநாடுகளில் ஒலிபெருக்கி கருவிகளை நிறுவும் டிபார்ட்மெண்டில் சேவை செய்திருக்கிறான். அவனுடைய மனைவியும் கடவுளுடைய உத்தமமான ஊழியக்காரி. அவர்களுடைய இரு மகன்கள் மூப்பர்களாக சேவை செய்கின்றனர். என் மகள், ரெபெக்கா கேரஸ், முழுநேர ஊழியத்தில் 35 வருடங்களுக்கும் அதிகமாக செலவிட்டிருக்கிறாள். புரூக்லினில் உள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய உலக தலைமை அலுவலகத்தில் அவள் சேவை செய்த நான்கு வருடங்களும் இதில் அடங்கும். ஐக்கிய மாகாணங்களின் பல்வேறு இடங்களில் பிரயாண வேலையில் அவளும் அவளுடைய கணவரும் கடந்த 25 வருடங்களை செலவிட்டிருக்கின்றனர்.

இயேசு, பரலோக ராஜ்யத்தை நிலத்தில் புதைத்திருக்கிற பொக்கிஷத்துக்கு ஒப்பிட்டு பேசினார். அதை தேடிக் கண்டுபிடிக்க முடியும். (மத்தேயு 13:44) அநேக வருடங்களுக்கு முன்னதாகவே, என் குடும்பம் அந்தப் பொக்கிஷத்தை தேடிக் கண்டுபிடித்ததற்காக நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். கடவுளுக்கு ஒப்புக்கொடுத்து சேவை செய்த கடந்த 80 ஆண்டுகளை ஒருகணம் யோசித்துப் பார்க்கிறேன். வருத்தம் சிறிதும் இல்லை! எப்படிப்பட்ட பாக்கியம் இது! நான் மறுபடியும் என் வாழ்க்கையை ஆரம்பிக்க முடியுமானால், இதே வாழ்க்கையைத்தான் நான் வாழ்வேன். ஏனென்றால், ‘ஜீவனைப்பார்க்கிலும் கடவுளுடைய கிருபையே நல்லது.’​—சங்கீதம் 63:⁠3.

[அடிக்குறிப்புகள்]

a வேதாகமங்களில் படிப்புகள் என்ற தலைப்பிடப்பட்ட புத்தகங்களின் ஏழாவது தொகுப்பே நிறைவேறித்தீர்ந்த இரகசியம் புத்தகம். இதன் முதல் ஆறு தொகுப்புகள் சார்ல்ஸ் டேஸ் ரஸல் அவர்களால் எழுதப்பட்டது. நிறைவேறித்தீர்ந்த இரகசியம் புத்தகம் ரஸலுடைய மரணத்திற்குப்பின் பிரசுரிக்கப்பட்டது.

[பக்கம் 23-ன் படம்]

ஒஹாயோ, அலையன்ஸில் 1917-⁠ல் சகோதரர் ரதர்ஃபர்டின் பேச்சை நாங்கள் கேட்டோம்

[பக்கம் 23-ன் படம்]

ரால்ஃப் அமைத்த ட்ரெய்லரின் முன்னே நாங்கள் இருவரும்

[பக்கம் 24-ன் படம்]

என் இரு பிள்ளைகளோடு இன்று