யெகோவா—மிகுந்த வல்லமையுடையவர்
யெகோவா—மிகுந்த வல்லமையுடையவர்
“அவர் மகா பலமும் மிகுந்த வல்லமையும் உள்ளவராயிருப்பதால் அவற்றில் ஒன்றும் குறையாதிருக்கிறது.”—ஏசாயா 40:26, தி.மொ.
1, 2. (அ) உயிர்வாழ்வதற்கு இன்றியமையாத எந்த இயற்கை சக்தியை நாம் எல்லாரும் சார்ந்திருக்கிறோம்? (ஆ) ஆனால் முடிவில் யெகோவாவே எல்லா வல்லமைக்கும் ஊற்றுமூலர் என்று எப்படி சொல்லலாம்?
சக்தி என்பது நம்மில் அநேகர் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாத ஒன்று. உதாரணமாக, மின்சக்தி நமக்கு ஒளியையும் வெப்பத்தையும் அளிக்கிறது. அல்லது எந்தவொரு மின்சாதனத்தையும் உடனடியாக இயங்க வைக்கிறது. இதையெல்லாம் நாம் நேரமெடுத்து சிந்தித்துப் பார்ப்பதே கிடையாது. திடீரென மின் தடை ஏற்படும்போதுதான் மின்சக்தியின்றி நகரமே ஸ்தம்பித்துவிடும் என்பதை உணர்கிறோம். மின்சாரத்தையே நம்பி வாழும் நமக்கு கிடைக்கிற மின்சக்தியில் பெரும்பகுதி, சக்தியின் ‘வங்கி’யாக திகழும் சூரியனிலிருந்தே கிடைக்கிறது. a வெப்பத்தை கக்கும் இந்த இயற்கை ‘ஹீட்டர்,’ ஒவ்வொரு விநாடியிலும் ஐம்பது லட்சம் டன் நியூக்ளியர் எரிபொருளை ‘விழுங்கி’ உயிரைக் காக்கும் ஆற்றலை பூமியின்மீது பொழிகிறது.
2 இந்த சூரிய ஆற்றல் எல்லாம் எங்கிருந்து வருகிறது? வானத்திலுள்ள இந்த ஆற்றல் நிலையத்தை உண்டாக்கியவர் யார்? யெகோவா தேவனே. அவரைப் பற்றி சங்கீதம் 74:16 இவ்வாறு சொல்கிறது: “தேவரீர் ஒளியையும் சூரியனையும் படைத்தீர்.” ஆம் யெகோவா ஜீவஊற்றாக இருப்பது போலவே, எல்லா சக்திக்கும் அவரே ஊற்றுமூலர். (சங்கீதம் 36:9) அவருடைய சக்தியை நாம் துச்சமாய் எடைபோட்டு விடக்கூடாது. கண்ணைப் பறிக்கும் வண்ணப் பூக்களாக வானில் சிதறியிருக்கும் சூரியன், நட்சத்திரங்கள் போன்ற விண்மீன்களை அண்ணாந்து பார்த்து, அவை எவ்வாறு உண்டாயின என்பதை சிந்தித்துப் பார்க்கும்படி தீர்க்கதரிசியாகிய ஏசாயாவின் மூலம் யெகோவா நம்மை நினைப்பூட்டுகிறார். “உங்கள் கண்களை ஏறெடுத்துப் பாருங்கள்; அவைகளைச் சிருஷ்டித்தவர் யார்? அவர் அவைகளின் சேனையை இலக்கத்திட்டமாகப் புறப்படப்பண்ணி, அவைகளையெல்லாம் பேர்பேராக அழைக்கிறவராமே; அவருடைய மகா பெலத்தினாலும், அவருடைய மகா வல்லமையினாலும், அவைகளில் ஒன்றும் குறையாமலிருக்கிறது.”—ஏசாயா 40:26; எரேமியா 32:17.
3. யெகோவாவின் வல்லமையால் நாம் எவ்வாறு பயனடைகிறோம்?
3 யெகோவா மிகுந்த சக்தியுடையவராக இருப்பதனால், அவர் படைத்த சூரியன் நாம் உயிர் வாழ்வதற்கு இன்றியமையாத ஒளியையும் வெப்பத்தையும் நமக்கு தொடர்ந்து அள்ளி வழங்கும் என்றும் நம்பிக்கையோடு இருக்கலாம். எனினும், நம் சரீரத்திற்கான அடிப்படை தேவைகளைப் பார்க்கிலும் இன்னும் மிக அதிகமானவற்றிற்கு நாம் கடவுளுடைய சக்தியை சார்ந்திருக்கிறோம். பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் நாம் மீட்கப்படுதல், எதிர்காலத்திற்கான நம் நம்பிக்கை, யெகோவாவில் நம் திடநம்பிக்கை ஆகியவற்றிற்கும் யெகோவாவின் வல்லமைக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. (சங்கீதம் 28:6-9; ஏசாயா 50:2) படைத்தல், மீட்டல், காத்தல், அழித்தல் ஆகியவற்றில் யெகோவாவுக்கு இருக்கும் சக்திக்கு தேவையான சான்றுகள் பைபிளில் குவிந்திருக்கின்றன.
சிருஷ்டிப்பில் வெளிப்படும் கடவுளுடைய வல்லமை
4. (அ) இரவில் வானத்தைக் கூர்ந்து கவனித்த தாவீது எதைப் புரிந்துகொண்டார்? (ஆ) கடவுளுடைய வல்லமையைப் பற்றி இவை எதை வெளிப்படுத்துகின்றன?
4 நம்முடைய சிருஷ்டிகரின் ‘நித்திய வல்லமை, உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே தெளிவாய்க் காணப்படும்’ என்று அப்போஸ்தலன் பவுல் விளக்கினார். (ரோமர் 1:20) நூற்றாண்டுகளுக்கு முன்பாக, சங்கீதக்காரனாகிய தாவீது மேய்ப்பராக இருந்தபோது இரவில் வானத்தை அடிக்கடி நோக்கிப் பார்த்து, இப்பிரபஞ்சத்தின் மகத்துவத்தையும் அதை உண்டாக்கினவரின் வல்லமையையும் கூர்ந்து கவனித்திருக்க வேண்டும். அவர் எழுதினார்: “உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது, மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன்.” (சங்கீதம் 8:3, 4) வானத்திலுள்ள கோளங்களைப் பற்றிய அவருடைய அறிவு மட்டுப்பட்டதாக இருந்தபோதிலும், மிகப் பரந்த சர்வலோகத்தின் சிருஷ்டிகருடன் ஒப்பிடுகையில், தான் ஒன்றுமேயில்லை என்பதை தாவீது புரிந்துகொண்டார். இன்று, வானியலாளர்கள் சர்வலோகத்தின் எல்லையற்ற பேரளவையும் அதற்கு ஆதாரம் தந்து தாங்கும் வல்லமையையும் பற்றி இன்னும் மிக அதிகம் அறிந்திருக்கிறார்கள். உதாரணமாக, ஒவ்வொரு விநாடியும் சூரியன் 1,00,000 மில்லியன் மெகா டன் எடையுள்ள டிஎன்டி வெடிக்குச் சமமான ஆற்றலை வெளியிடுகிறது என்று அவர்கள் சொல்கிறார்கள். b அந்த ஆற்றலில் மிகச் சிறிய அளவானதே பூமியை எட்டுகிறது; எனினும் நம்முடைய கிரகத்தின்மீதுள்ள எல்லா உயிரையும் காத்து வருவதற்கு அது போதுமானது. இருப்பினும், வானங்களில் சூரியன் மட்டுமே மிக வல்லமைவாய்ந்த நட்சத்திரம் என்று சொல்ல முடியாது. ஒரு நாள் முழுவதிலும் சூரியன் வெளிப்படுத்தும் ஆற்றலை சில நட்சத்திரங்கள் ஒரே விநாடியில் வெளிப்படுத்துகின்றன. அப்படியானால், இவற்றையெல்லாம் சிருஷ்டித்தவருக்கு எவ்வளவு வல்லமை இருக்கும் என்பதை கற்பனைசெய்து பாருங்கள்! சரியாகவே எலிகூ இவ்வாறு வியந்து கூறினார்: “சர்வவல்லவரை நாம் கண்டறியவில்லை; அவர் வல்லமையில் உயர்ந்தவர்.”—யோபு 37:23, NW.
5. யெகோவாவின் பலத்துக்கு என்ன அத்தாட்சியை நாம் அவருடைய படைப்பில் காண்கிறோம்?
5 தாவீது செய்ததுபோல் நாம் கடவுளின் ‘செயல்களை ஆராய்ந்தால்,’ அவருடைய வல்லமையின் அத்தாட்சியை—காற்றிலும் அலைகளிலும் இடிமுழக்கத்திலும் மின்னலிலும் புரண்டோடும் நதிகளிலும் கம்பீரமான மலைகளிலும்—எங்கும் காண்போம். (சங்கீதம் 111:2; யோபு 26:12-14) மேலும், யோபுக்கு யெகோவா நினைப்பூட்டியதுபோல், மிருகங்களும் அவருடைய பலத்திற்குச் சாட்சிபகருகின்றன. இவற்றில் ஒன்றுதான் பெகேமோத் அல்லது நீர்யானை. யோபிடம் யெகோவா சொன்னார்: ‘அதினுடைய பலம் அதன் இடுப்பிலே, . . . அதன் விலா எலும்புகள் இருப்புக் கம்பிகள் போன்றவை.” (யோபு 40:15-18, தி.மொ.) காட்டெருதின் பயங்கர வல்லமையும், பைபிள் காலங்களில் நன்றாய் அறியப்பட்டிருந்தது. ‘சிங்கத்தின் வாய்க்கும் காட்டெருதின் கொம்புகளுக்கும்’ அகப்படாமல் தன்னை காக்கும்படி தாவீது ஜெபித்தார்.—சங்கீதம் 22:21, தி.மொ.; யோபு 39:9-11, தி.மொ.
6. பைபிளில் காளை எதற்கு அடையாளமாக இருக்கிறது, ஏன்? (அடிக்குறிப்பைக் காண்க.)
6 காளை பலமுள்ளதாக இருப்பதால், யெகோவாவின் வல்லமையை அடையாளமாக குறிப்பதற்கு பைபிளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. c யெகோவாவின் சிங்காசனத்தைப் பற்றிய அப்போஸ்தலன் யோவானின் தரிசனத்தில், நான்கு ஜீவன்கள் படமாக குறிப்பிடப்படுகின்றன; அவற்றில் ஒன்றுக்கு காளையைப் போன்ற முகம் இருந்தது. (வெளிப்படுத்துதல் 4:6, 7) யெகோவாவின் நான்கு முக்கிய பண்புகளில் ஒன்றாகிய வல்லமை, இந்தக் கேருபீன்களால் குறிப்பிடப்படுவதாக தெரிகிறது. அன்பு, ஞானம், நீதி ஆகியவை அவருடைய மற்ற பண்புகள். வல்லமை கடவுளுடைய பண்பியல்பின் ஒரு முக்கிய அம்சம். ஆகவே அவருடைய வல்லமையையும், அதை அவர் எவ்வாறு பயன்படுத்துகிறார் என்பதையும் தெளிவாக புரிந்துகொள்வது நம்மை அவரிடம் நெருங்கிவரச் செய்யும். மேலும், அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றி, நம்மிடம் இருக்கும் எந்த வல்லமையையும் நல்ல முறையில் பயன்படுத்தும்படி நமக்கு உதவிசெய்யும்.—எபேசியர் 5:1.
‘சேனைகளின் யெகோவா, வல்லவர்’
7. தீமையை நன்மை வெல்லும் என்று நாம் ஏன் நிச்சயமாக இருக்கலாம்?
7 வேதாகமத்தில் யெகோவா “சர்வவல்லமையுள்ள தேவன்” என்று அழைக்கப்படுகிறார். ஒருபோதும் அவருடைய வல்லமையைக் குறைவாக மதிப்பிடக் கூடாது, சத்துருக்களை வென்றொழிக்கும் அவருடைய திறமையைச் சந்தேகிக்கவும் கூடாது என்பதை இந்தச் சிறப்புப் பெயர் நமக்கு நினைப்பூட்டுகிறது. (ஆதியாகமம் 17:1; யாத்திராகமம் 6:3) சாத்தானின் பொல்லாத உலகம் பாதுகாப்பாய் இருப்பதாக தோன்றலாம். ஆனால் யெகோவாவின் கண்களில், “ஜாதிகள் ஏற்றச்சாலில் தொங்கும் துளிபோலவும், தராசிலே படியும் தூசிபோலவும் எண்ணப்படுகிறார்கள்.” (ஏசாயா 40:15) கடவுளுடைய இத்தகைய வல்லமையை கருத்தில் கொள்கையில், தீமையை நன்மை வெல்லும் என்பதில் சந்தேகமில்லை. தீமை மிதமீறி மேலோங்கும் சமயத்தில், ‘சேனைகளின் யெகோவாவும் இஸ்ரவேலின் வல்லவருமானவர்’ அதை என்றும் ஒழித்துக்கட்டுவார் என்பதை அறிந்து ஆறுதல் அடையலாம்.—ஏசாயா 1:24, NW; சங்கீதம் 37:9, 10.
8. யெகோவா எப்படிப்பட்ட பரலோக சேனைகளை ஏவுகிறார், அவற்றின் வல்லமைக்கு எடுத்துக்காட்டு எது?
8 கடவுளுடைய வல்லமையை நினைப்பூட்டும் மற்றொரு சொற்றொடர், “சேனைகளின் யெகோவா.” இது பைபிளில் 285 தடவை வருகிறது. இங்கு குறிப்பிடப்படுகிற “சேனைகள்,” யெகோவா தம் சேவையில் வைத்துள்ள திரளான ஆவி சிருஷ்டிகளைக் குறிக்கிறது. (சங்கீதம் 103:20, 21; 148:2) எருசலேமை அழிக்க வந்த 1,85,000 அசீரிய வீரர்களை இந்தத் தூதர்களில் ஒருவரே ஒரே இரவில் அழித்தார். (2 இராஜாக்கள் 19:35) யெகோவாவின் விண்ணுலக சேனைகளின் வல்லமையை நாம் மனதில் வைப்போமானால், எதிரிகளின் பயமுறுத்துதலுக்கு எளிதில் பணிந்துவிட மாட்டோம். தீர்க்கதரிசியாகிய எலிசா தன்னை கொல்வதற்கு வந்த ஒரு முழு சேனையால் சூழப்பட்டிருந்தபோது, பயமில்லாமல் இருந்தார். ஏனெனில் தனக்கு ஆதரவாக இருந்த பெரும் பரலோக சேனையைத் தன் விசுவாசக் கண்களால் பார்த்தார். ஆனால் அவருடைய ஊழியக்காரனுக்கோ அதைக் காண முடியவில்லை.—2 இராஜாக்கள் 6:15-17.
9. இயேசுவைப் போலவே நமக்கும் கடவுளுடைய பாதுகாப்பில் ஏன் திட நம்பிக்கை இருக்க வேண்டும்?
9 அவ்வாறே இயேசு, கெத்செமனே தோட்டத்தில், பட்டயங்களுடனும் தடிகளுடனும் வந்த கலகக்காரக் கூட்டத்தை எதிர்ப்பட்டபோது, தேவதூதரின் ஆதரவு இருப்பதை அறிந்திருந்தார். பட்டயத்தை உறையில் போடும்படி பேதுருவுக்குச் சொன்ன பின்பு, தமக்கு வேண்டுமானால், “பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை” அனுப்பும்படி பிதாவிடம் கேட்க முடியும் என்று சொன்னார். (மத்தேயு 26:47, 52, 53) கடவுளுடைய அதிகாரத்திலுள்ள பரலோக சேனைகளைப் பற்றி அதே மதித்துணர்வு நமக்கு இருந்தால், நாமும் கடவுளுடைய உதவியில் முழு நம்பிக்கையுடன் இருப்போம். அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “இவைகளைக் குறித்து நாம் என்ன சொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?”—ரோமர் 8:31.
10. யார் சார்பாக யெகோவா தம்முடைய வல்லமையைப் பிரயோகிக்கிறார்?
10 அப்படியானால், யெகோவாவின் பாதுகாப்பில் நம்பியிருப்பதற்கு எல்லா காரணமும் நமக்கு இருக்கிறது. அவர் எப்போதும் தம் வல்லமையை நன்மையுண்டாகவும், நீதி, ஞானம், அன்பு ஆகிய தம்முடைய மற்ற பண்புகளுக்கு ஒத்திசைவாகவும் பயன்படுத்துகிறார். (யோபு 37:23; எரேமியா 10:12) வல்லமைவாய்ந்த மனிதர்கள், தன்னல லாபத்திற்காக ஏழைகளையும் தாழ்ந்தவர்களையும் ஒடுக்குகிறார்கள். யெகோவாவோ, “பலவீனனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்,” காப்பாற்றுவதற்கு ‘மகத்தான வல்லமை’ நிரம்பியவராகவும் இருக்கிறார். (சங்கீதம் 113:5-7; ஏசாயா 63:1) பணிவும் அடக்கமும் நிறைந்த, இயேசுவின் தாய் மரியாள் சொன்னபடி, “வல்லமையுடையவர்” தமக்குப் பயந்திருப்போரின் சார்பாக தம்முடைய வல்லமையை தன்னலமின்றி பிரயோகிக்கிறார். அகந்தையுள்ளவர்களைத் தாழ்த்தி, தாழ்மையுள்ளவர்களை உயர்த்துகிறார்.—லூக்கா 1:46-53.
யெகோவா வல்லமையைத் தம் ஊழியர்களுக்கு வெளிப்படுத்துகிறார்
11. கடவுளுடைய வல்லமைக்கு என்ன அத்தாட்சியை பொ.ச.மு. 1513-ம் ஆண்டில் இஸ்ரவேலர் கண்டார்கள்?
11 பல சந்தர்ப்பங்களில், யெகோவா தம்முடைய வல்லமையைத் தம் ஊழியர்களுக்கு வெளிப்படுத்தினார். இத்தகைய சந்தர்ப்பங்களில் ஒன்று, பொ.ச.மு. 1513-ல் சீனாய் மலையில் நிகழ்ந்தது. அந்த ஆண்டில் இஸ்ரவேலர், கடவுளுடைய வல்லமையின் அத்தாட்சியை குறிப்பிடத்தக்க விதத்தில் கண்டிருந்தார்கள். பத்து கொடிய வாதைகள் யெகோவாவின் அபார சக்தியையும் எகிப்திய தெய்வங்களின் கையாலாகாத்தனத்தையும் அம்பலப்படுத்தியது. கொஞ்ச நாளிலேயே செங்கடலை அற்புதமாய் கடந்ததும், பார்வோனின் சேனையின் அழிவும், கடவுளுடைய வல்லமைக்கு மேலுமான நிரூபணத்தை அளித்தன. மூன்று மாதங்களுக்குப் பின், சீனாய் மலையின் அடிவாரத்தில், யெகோவா இஸ்ரவேலரை, ‘சகல ஜனங்களிலும் விசேஷித்த உடைமையாகும்படி’ அழைத்தார். “யெகோவா சொன்னவற்றை எல்லாம் செய்வோம்” என்று அவர்கள் வாக்கு கொடுத்தார்கள். (யாத்திராகமம் 19:5, NW) பின்பு யெகோவா, எழுச்சியூட்டும் வகையில் தம் வல்லமையை வெளிக்காட்டினார். இடிமுழக்கமும் மின்னலும் உரத்த எக்காள சத்தமும் உண்டாகி, இவற்றின் மத்தியில் சீனாய் மலை புகைந்து அதிர்ந்தது. சிறிது தூரத்தில் நின்றுகொண்டிருந்த ஜனங்கள் திகிலடைந்தார்கள். ஆனால் இந்த அனுபவம், தேவ பயத்தை அவர்களில் உண்டாக்க வேண்டுமென்று மோசே சொன்னார். இப்படிப்பட்ட பயம், சர்வவல்லமையுள்ளவரும் ஒரே உண்மையான கடவுளுமான யெகோவாவுக்குக் கீழ்ப்படியும்படி அவர்களை உந்துவிக்கும்.—யாத்திராகமம் 19:16-19; 20:18-20.
12, 13. என்ன சூழ்நிலைமைகள், எலியா தனக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பை விட்டு ஓடும்படி வழிநடத்தின, ஆனால் யெகோவா அவரை எவ்வாறு பலப்படுத்தினார்?
12 பல நூற்றாண்டுகளுக்குப் பின்பு, எலியாவின் காலத்தில், தேவ வல்லமையின் மற்றொரு வெளிக்காட்டை சீனாய் மலை கண்டது. கடவுளுடைய வல்லமையான கிரியையை இந்தத் தீர்க்கதரிசி ஏற்கெனவே கண்டிருந்தார். இஸ்ரவேல் ஜனத்தின் விசுவாச துரோகத்தால், கடவுள் மூன்றரை ஆண்டுகளுக்கு ‘வானங்களை அடைத்தார்.’ (2 நாளாகமம் 7:13) அதன் விளைவாக உண்டான வறட்சியின்போது, கேரீத் ஆற்றண்டையில் காகங்கள் எலியாவுக்கு உணவைக் கொண்டுவந்தன. பின்னால், அவருக்கு உணவளிக்கும்படி, ஒரு விதவையிடம் மீந்திருந்த கொஞ்சம் மாவும் எண்ணெய்யும் செலவழிந்துபோகாமல் அற்புதமாய் நீடித்திருக்கச் செய்யப்பட்டது. இந்த விதவையின் குமாரனை உயிர்த்தெழுப்பும்படியும் எலியாவுக்கு யெகோவா வல்லமை அளித்தார். கடைசியாக, கர்மேல் பர்வதத்தில், கடவுள் யார் என்பதை நிரூபித்துக் காட்டும் ஒரு சோதனையில், வானத்திலிருந்து அக்கினி இறங்கி எலியாவின் பலியை பட்சித்தது. (1 இராஜாக்கள் 17:4-24; 18:36-40) அதன் பின்னரோ, எலியாவை யேசபேல் கொல்லப்போவதாக பயமுறுத்தியபோது அவர் பயமடைந்து மனமுடைந்து போனார். (1 இராஜாக்கள் 19:1-4) தீர்க்கதரிசியாக தன் வேலை முடிந்துவிட்டது என்று எண்ணி, நாட்டை விட்டு ஓடினார். அவருக்குத் திரும்பவும் நம்பிக்கையூட்டி பலப்படுத்துவதற்காக யெகோவா தயவோடு தம் வல்லமையை தனிப்பட வெளிக்காட்டினார்.
13 எலியா ஒரு குகையில் ஒளிந்திருக்கையில், யெகோவாவின் கட்டுப்பாட்டிலுள்ள மூன்று இயற்கை சக்திகளின் பிரமிக்கத்தக்க வெளிக்காட்டை கண்டார். அவை: பலத்த பெருங்காற்று, பூமியதிர்ச்சி, கடைசியாக அக்கினி. எனினும், ‘அமர்ந்த மெல்லிய சத்தத்தில்’ எலியாவிடம் யெகோவா பேசினார். எலியாவுக்கு மேலுமான வேலையை அவர் நியமித்து, தம்மை உண்மையுடன் வணங்குகிற இன்னும் 7,000 பேர் தேசத்தில் இருந்தார்கள் என்பதைத் தெரிவித்தார். (1 இராஜாக்கள் 19:9-18) நம்முடைய ஊழியத்தில் பலன்கள் இல்லாததால் நாம் எப்போதாவது எலியாவைப்போல் மனம் தளர்ந்துபோனால், ‘இயல்புக்கு அப்பாற்பட்ட வல்லமைக்காக’—தளராமல் நற்செய்தியைத் தொடர்ந்து பிரசங்கிக்கும்படி நம்மைப் பலப்படுத்தக்கூடிய வல்லமைக்காக—நாம் யெகோவாவை வேண்டிக்கொள்ளலாம்.—2 கொரிந்தியர் 4:7, NW.
யெகோவாவின் வல்லமையே அவருடைய வாக்குறுதிகளின் நிறைவேற்றத்திற்கு உத்தரவாதம்
14. யெகோவாவின் தனிப்பட்ட பெயர் வெளிப்படுத்துவது என்ன, அவருடைய வல்லமை அவருடைய பெயருடன் எவ்வாறு இணைக்கப்பட்டிருக்கிறது?
14 யெகோவாவின் வல்லமை, அவருடைய பெயருடனும் அவருடைய சித்தத்தை நிறைவேற்றுவதுடனும் நெருங்கி இணைக்கப்பட்டிருக்கிறது. “ஆகும்படி செய்பவர்” என்று அர்த்தப்படுகிற யெகோவா என்னும் ஈடிணையற்ற இந்தப் பெயர், வாக்குறுதிகளை நிறைவேற்றுபவராகும்படி தன்னை செய்விக்கிறார் என்று தெரிவிக்கிறது. கடவுள் தம்முடைய நோக்கங்களை நிறைவேறச் செய்வதை எதுவும் அல்லது எவரும் தடுக்க முடியாது, அவை நடக்க வாய்ப்பே இல்லை என சந்தேகவாதிகள் கருதினாலும். இயேசு தம்முடைய அப்போஸ்தலரிடம் ஒரு சமயம் சொன்னபடி, “தேவனாலே எல்லாம் கூடும்.”—மத்தேயு 19:26.
15. யெகோவாவால் கூடாத காரியம் எதுவுமே இல்லை என்று ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் எவ்வாறு நினைப்பூட்டப்பட்டது?
15 உதாரணமாக, ஆபிரகாம் சாராளின் சந்ததியாரை ஒரு பெரிய ஜனமாக்குவதாக யெகோவா ஒரு சமயம் வாக்குறுதி அளித்தார். எனினும், பல ஆண்டுகளாக அவர்களுக்குக் குழந்தையில்லை. அந்த வாக்கு நிறைவேறவிருப்பதாக யெகோவா சொன்னபோது, அவர்கள் மிக வயோதிபராக இருந்தார்கள், சாராள் சிரித்தாள். அதற்கு, தேவதூதன்: “யெகோவாவினால் ஆகாத காரியம் உண்டோ?” என்று சொன்னார். (ஆதியாகமம் 12:1-3; 17:4-8; 18:10-14, தி.மொ.) நான்கு நூற்றாண்டுகளுக்கு பிறகு, ஒரு பெரிய தேசமாகிவிட்டிருந்த ஆபிரகாமின் சந்ததியாரை மோசே மோவாப் சமவெளிகளில் கூடிவரச் செய்தபோது, கடவுள் தம்முடைய வாக்குத்தத்தத்தை நிறைவேற்றியிருந்ததை அவர்களுக்கு நினைப்பூட்டினார். மோசே சொன்னார்: “அவர் உன் பிதாக்களில் அன்பு கூர்ந்தபடியால், அவர்களுடைய பின்சந்ததியைத் தெரிந்துகொண்டு, உன்னிலும் பலத்த பெரிய ஜாதிகளை உனக்கு முன்னின்று துரத்தவும், உன்னை அழைத்துக் கொண்டுபோய், இந்நாளில் இருக்கிறதுபோல, அவர்கள் தேசத்தை உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கவும், உன்னைத் தமது முகத்துக்குமுன் தமது மிகுந்த வல்லமையினால் எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்.”—உபாகமம் 4:37, 38.
16. மரித்தோர் உயிர்த்தெழுதலை சதுசேயர் ஏன் மறுதலித்தார்கள்?
16 பல நூற்றாண்டுகளுக்கு பிறகு, உயிர்த்தெழுதலில் நம்பிக்கை இல்லாத சதுசேயரை இயேசு கண்டனம் செய்தார். மரித்தோரை திரும்ப உயிரடையச் செய்வதாக கடவுள் கொடுத்த வாக்குறுதியை அவர்கள் ஏன் நம்ப மறுத்தார்கள்? இயேசு அவர்களிடம் சொன்னார்: “நீங்கள் வேதவாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியாமல்” இருக்கிறீர்கள். (மத்தேயு 22:29) “ஞாபகார்த்தக் கல்லறைகளிலுள்ள அனைவரும் மனுஷகுமாரனின் குரலைக் கேட்டு வெளிவருவார்கள்.” (யோவான் 5:27-29, NW) உயிர்த்தெழுதலைப் பற்றி பைபிள் சொல்வதை நாம் அறிந்திருந்தால், கடவுள் தம் வல்லமையால் மரித்தோரை உயிர்த்தெழுப்புவார் என்பதை உறுதியாக நம்புவோம். கடவுள் ‘மரணத்தை என்றுமாக விழுங்குவார்; . . . யெகோவாவே இதைச் சொல்லியிருக்கிறார்.’—ஏசாயா 25:8, தி.மொ.
17. எதிர்காலத்தில் எப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் யெகோவாவில் பிரத்தியேகமாக நம்பிக்கை வைக்க வேண்டிவரும்?
17 வெகு சீக்கிரத்தில், யெகோவாவின் காப்பாற்றும் வல்லமையில் நாம் ஒவ்வொருவரும் விசேஷித்த முறையில் நம்பிக்கை வைக்க வேண்டிய கட்டம் வரும். பாதுகாப்பு இல்லாதவர்களாக தோன்றுகிற கடவுளுடைய ஜனங்களை பிசாசாகிய சாத்தான் தாக்க வருவான். (எசேக்கியேல் 38:14-16) அப்போது கடவுள் நம்முடைய சார்பில் தம்முடைய மகா வல்லமையை வெளிப்படுத்துவார், அவரே யெகோவா என்று எல்லாரும் அறிய வேண்டும். (எசேக்கியேல் 38:21-23) அந்த நெருக்கடியான சமயத்தில் நாம் தடுமாறாமல் இருப்பதற்கு, சர்வவல்லமையுள்ள கடவுளில் நம் விசுவாசத்தையும் நம்பிக்கையையும் இப்போதே கட்டியெழுப்ப வேண்டும்.
18. (அ) யெகோவாவின் வல்லமையின்பேரில் ஆழ்ந்து சிந்தனை செய்வதிலிருந்து என்ன நன்மைகளை நாம் பெறுகிறோம்? (ஆ) அடுத்த கட்டுரையில் என்ன கேள்வி சிந்திக்கப்படும்?
18 யெகோவாவின் வல்லமையைப் பற்றி சிந்தித்து பார்ப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. அவர் தம் வல்லமையை மிகுந்த ஞானத்தோடும் அன்போடும் பயன்படுத்துகிறார். ஆகவே அவருடைய கிரியைகளை நாம் கூர்ந்து ஆராய்கையில், நன்றியோடு சிரம்தாழ்த்தி அவரை போற்றிப் புகழ தூண்டப்படுகிறோம். சேனைகளின் யெகோவாவில் நாம் நம்பிக்கை வைத்திருந்தால், ஒருபோதும் அஞ்ச மாட்டோம். அவருடைய வாக்குகளில் நம் விசுவாசம் உறுதியாயிருக்கும். எனினும், நாம் கடவுளுடைய சாயலில் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை நினைவில் வையுங்கள். ஆகையால், நமக்கும் ஓரளவு சக்தியிருக்கிறது. அதை பயன்படுத்துவதில் நாம் எவ்வாறு கடவுளின் மாதிரியை பின்பற்றலாம்? இதை அடுத்த கட்டுரை விளக்கும்.
[அடிக்குறிப்புகள்]
a ஆற்றல் நிலையங்களுக்கு முக்கிய ஆற்றல் மூலங்களாக இருந்த பெட்ரோலியம், நிலக்கரி போன்ற எரிபொருட்கள், அவற்றின் ஆற்றலை சூரியனிலிருந்து பெறுவதாக பரவலாக கருதப்பட்டது.
b இதற்கு மாறாக, சோதிக்கப்பட்ட எல்லாவற்றிலும் மிக அதிக வல்லமைவாய்ந்த நியூக்ளியர் அணுகுண்டின் வெடி சக்தியோ வெறும் 57 மெகா டன் எடையுள்ள டிஎன்டி-க்கு சமமானதுதான்.
c பைபிளில் குறிப்பிடப்படுகிற இந்தக் காட்டெருது அரோக்ஸ் (aurochs) (லத்தீனில் யூரஸ்) என்ற மிருகமாக இருக்கலாம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த மிருகங்கள் கால் நாட்டில் (இப்போது ஃபிரான்ஸ்) காணப்பட்டன. அவற்றை பற்றிய பின்வரும் விவரிப்பை ஜூலியஸ் ஸீஸர் எழுதினார்: “இந்த யூரி, பருமனில் யானைகளைப் போன்றவை. ஆனால், அவற்றின் இயல்பிலும், நிறத்திலும், தோற்றத்திலும் அவை காளைகள். பலத்திலும் வேகத்திலும் நிகரற்றவை. மனிதனையோ மிருகத்தையோ ஒருமுறை கண்டுவிட்டால், தப்ப விடுகிறதில்லை.”
இதற்கு பதிலளிக்க முடியுமா?
• சிருஷ்டிப்பு, எவ்வாறு யெகோவாவின் வல்லமைக்குச் சாட்சி பகருகிறது?
• தம்முடைய ஜனங்களுக்கு ஆதரவளிக்கும்படி எந்த சேனைகளை யெகோவா பயன்படுத்தலாம்?
• யெகோவா தம்முடைய வல்லமையை வெளிப்படுத்திக் காட்டின சில சந்தர்ப்பங்கள் யாவை?
• யெகோவா தாம் வாக்கு கொடுத்தவற்றை நிறைவேற்றுவார் என்பதற்கு என்ன உத்தரவாதம் நமக்கு இருக்கிறது?
[கேள்விகள்]
[பக்கம் 10-ன் படங்கள்]
“உங்கள் கண்களை ஏறெடுத்துப் பாருங்கள்; அவைகளைச் சிருஷ்டித்தவர் யார்?”
[படத்திற்கான நன்றி]
Photo by Malin, © IAC/RGO 1991
[பக்கம் 13-ன் படங்கள்]
யெகோவாவினுடைய வல்லமையின் வெளிக்காட்டுகளை ஆழ்ந்து சிந்திப்பது, அவருடைய வாக்குறுதிகளில் நம்பிக்கையைக் கூட்டுகிறது