கடவுளின் தீர்க்கதரிசன வார்த்தையில் விசுவாசம் வையுங்கள்!
கடவுளின் தீர்க்கதரிசன வார்த்தையில் விசுவாசம் வையுங்கள்!
“அதிக உறுதியான தீர்க்கதரிசன வசனமும் நமக்கு உண்டு.”—2 பேதுரு 1:19.
1, 2. பதிவாகியுள்ள முதல் தீர்க்கதரிசனம் எது, அது எழுப்பும் கேள்விகளில் ஒன்று என்ன?
பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தீர்க்கதரிசனத்தை உரைத்தவர் யெகோவாவே. ஆதாம் ஏவாள் பாவம் செய்த பிறகு, “உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்” என்று கடவுள் சர்ப்பத்தினிடம் சொன்னார். (ஆதியாகமம் 3:1-7, 14, 15) அந்தத் தீர்க்கதரிசன வார்த்தைகளைத் தெளிவாக புரிந்துகொள்வதற்கு பல நூற்றாண்டுகள் எடுத்தன.
2 பாவம் செய்த மனித குலத்திற்கு இந்த முதல் தீர்க்கதரிசனம் உண்மையிலேயே நம்பிக்கை அளித்தது. பிசாசாகிய சாத்தானே அந்தப் ‘பழைய பாம்பு’ என்பதை பின்னர் பைபிள் அடையாளம் காட்டியது. (வெளிப்படுத்துதல் 12:9) வாக்குப்பண்ணப்பட்ட அந்த வித்து யார்?
வித்தைக் கண்டறிதல்
3. முதன்முதலில் உரைக்கப்பட்ட தீர்க்கதரிசனத்தை ஆபேல் எப்படி விசுவாசித்தார்?
3 கடவுள் பக்திமிக்க ஆபேல், தன் தகப்பனைப் போல் இருக்கவில்லை; அவருக்கு அந்த முதல் தீர்க்கதரிசனத்தில் நம்பிக்கை இருந்தது. பாவ நிவிர்த்தியாக இரத்தம் சிந்தப்பட வேண்டும் என்பதை ஆபேல் அறிந்திருந்தார். அவருக்கிருந்த விசுவாசமே கடவுளுக்கு ஏற்கத்தக்க மிருக பலியை செலுத்தும்படி அவரைத் தூண்டியது. (ஆதியாகமம் 4:2-4) இருப்பினும் வாக்குப்பண்ணப்பட்ட வித்து யார் என்பது இன்னும் புரியாப் புதிராகவே இருந்தது.
4. ஆபிரகாமுக்கு கடவுள் என்ன வாக்குறுதியளித்தார், வாக்குப்பண்ணப்பட்ட வித்துவைக் குறித்து அது எதைக் காட்டியது?
4 ஆபேலுக்குப் பின்பு சுமார் 2,000 வருடங்கள் கழித்து கோத்திரத் தகப்பனாகிய ஆபிரகாமுக்கு, யெகோவா இந்தத் தீர்க்கதரிசன வாக்குறுதியை அளித்தார்: “நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போல . . . பெருகவே பெருகப்பண்ணுவேன் . . . உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும்.” (ஆதியாகமம் 22:17, 18) இந்த வார்த்தைகள் முதல் தீர்க்கதரிசன நிறைவேற்றத்திற்கும் ஆபிரகாமுக்கும் தொடர்பு இருந்ததைக் காட்டின. இவை பிசாசின் செயல்களை அழிக்கப் போகும் வித்து ஆபிரகாமின் வம்சாவளியில் வருவார் என காட்டின. (1 யோவான் 3:8) “தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் குறித்து அவன் [ஆபிரகாம்] அவிசுவாசமாய்ச் சந்தேகப்பட”வில்லை; அவ்வாறே “வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதை அடையாமற்போன” பூர்வ கால யெகோவாவின் சாட்சிகளும் சந்தேகப்படவில்லை. (ரோமர் 4:20, 21; எபிரெயர் 11:39) மாறாக, கடவுளின் தீர்க்கதரிசன வார்த்தையில் அவர்கள் விசுவாசம் வைத்தனர்.
5. கடவுள் வாக்குறுதியளித்த அந்த வித்து யார், அவ்வாறு பதிலளிக்க காரணம் என்ன?
5 “ஆபிரகாமுக்கும் அவனுடைய சந்ததிக்கும் வாக்குத்தத்தங்கள் பண்ணப்பட்டன; சந்ததிகளுக்கு என்று அநேகரைக் குறித்துச் சொல்லாமல், உன் சந்ததிக்கு என்று ஒருவனைக்குறித்துச் சொல்லியிருக்கிறார், அந்தச் சந்ததி கிறிஸ்துவே” என எழுதுகையில் கடவுளின் வாக்குப்பண்ணப்பட்ட வித்து யார் என அப்போஸ்தலனாகிய பவுல் அடையாளம் காட்டினார். (கலாத்தியர் 3:16) சகல ஜாதியாரையும் ஆசீர்வதிக்க பயன்படுத்தப்பட்ட வித்து, ஆபிரகாமின் சந்ததியினர் அனைவரையும் குறிக்கவில்லை. மனித குலத்தை ஆசீர்வதிப்பதற்கு ஆபிரகாமின் குமாரனாகிய இஸ்மவேலின் சந்ததியாரையும், கேத்தூராளின் மூலம் பெற்ற குமாரர்களையும் கடவுள் பயன்படுத்தவில்லை. அவருடைய குமாரனாகிய ஈசாக்கின் வாயிலாகவும் பேரனாகிய யாக்கோபின் வாயிலாகவுமே வித்துவின் ஆசீர்வாதம் கிடைத்தது. (ஆதியாகமம் 21:12; 25:23, 31-34; 27:18-29, 37; 28:14) யூதா கோத்திரத்தின் ஷைலோவிற்குள் ஜனங்கள் கூட்டிச் சேர்க்கப்படுவார்கள் என யாக்கோபு காட்டினார்; பின்னர் தாவீதின் வம்சாவளியில்தான் அந்த வித்து வரும் என்று திட்டவட்டமாக அறியப்பட்டது. (ஆதியாகமம் 49:10, NW; 2 சாமுவேல் 7:12-16) மேசியா அல்லது கிறிஸ்து வருவார் என முதல் நூற்றாண்டு யூதர்கள் எதிர்பார்த்திருந்தனர். (யோவான் 7:41, 42) வித்துவைப் பற்றிய கடவுளின் தீர்க்கதரிசனம் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவில் நிறைவேறியது.
மேசியா வருகிறார்!
6. (அ) 70 வாரங்கள் பற்றிய தீர்க்கதரிசனத்தை நாம் எவ்வாறு புரிந்துகொள்ள வேண்டும்? (ஆ) இயேசு எப்போது, எப்படி ‘பாவங்களைத் தொலைத்தார்’?
6 மேசியாவைப் பற்றிய முக்கிய தீர்க்கதரிசனத்தை தானியேல் தீர்க்கதரிசி பதிவுசெய்தார். மேதியனாகிய தரியு அரசாண்ட முதலாம் வருடத்தில் எருசலேமின் 70 வருட பாழ்க்கடிப்பு முடிவடையப் போவதை தானியேல் அறிந்திருந்தார். (எரேமியா 29:10; தானியேல் 9:1-4) தானியேல் ஜெபிக்கையில் வந்த காபிரியேல் தூதன், ‘பாவங்களைத் தொலைக்கிறதற்கு எழுபது வாரங்கள் குறிக்கப்பட்டதை’ அவருக்குத் தெரிவித்தார். அந்த 70-வது வாரத்தின் மத்திபத்தில் மேசியா சங்கரிக்கப்படுவார். ‘எழுபது வார-வருடங்கள்’ பொ.ச.மு. 455-ல் ஆரம்பமாயின; அப்போது முதலாம் அர்தசஷ்டா ‘எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக் கட்டுகிறதற்கு கட்டளையிட்டார்.’ (தானியேல் 9:20-27; நெகேமியா 2:1-8) மேசியா 7 + 62 வாரங்களுக்குப் பின் வரவிருந்தார். இந்த 483 வருடங்கள் பொ.ச.மு. 455-லிருந்து பொ.ச. 29 வரை நீடித்தன; அந்த கடைசி வருடத்தில்தான் இயேசு முழுக்காட்டுதல் பெற்றார், கடவுள் அவரை மேசியா அல்லது கிறிஸ்துவாக அபிஷேகம் செய்தார். (லூக்கா 3:21, 22) இயேசு பொ.ச. 33-ல் தம்முடைய ஜீவனைக் கிரய பலியாக கொடுத்து, ‘பாவங்களைத் தொலைத்தார்.’ (மாற்கு 10:45) கடவுளின் தீர்க்கதரிசன வார்த்தையில் விசுவாசம் வைப்பதற்கு என்னே சிறந்த காரணங்கள்! a
7. மேசியானிய தீர்க்கதரிசனங்களை இயேசு எப்படி நிறைவேற்றினார் என்பதை வசனங்களிலிருந்து காண்பியுங்கள்.
7 கடவுளின் தீர்க்கதரிசன வார்த்தையில் விசுவாசம் வைப்பது மேசியாவை அடையாளம் கண்டுகொள்ள உதவுகிறது. எபிரெய வேதாகமத்தில் அநேக மேசியானிய தீர்க்கதரிசனங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன; அவற்றில் பெரும்பாலானவற்றை கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் எழுத்தாளர்கள் நேரடியாக இயேசுவுக்குப் பொருத்திக் காட்டினர். உதாரணங்கள்: கன்னியிடத்தில் இயேசு பெத்லகேமில் பிறந்தார். (ஏசாயா 7:14; மீகா 5:2; மத்தேயு 1:18-23; லூக்கா 2:4-11) அவர் எகிப்திலிருந்து வரவழைக்கப்பட்டார்; அவர் பிறந்தபின் பிள்ளைகள் கொல்லப்பட்டனர். (எரேமியா 31:15; ஓசியா 11:1; மத்தேயு 2:13-18) இயேசு நம்முடைய நோய்களை ஏற்றுக்கொண்டார். (ஏசாயா 53:4; மத்தேயு 8:16, 17) முன்னுரைத்தபடி, கழுதைக் குட்டியின்மீது அமர்ந்தவராய் எருசலேமுக்குள் பிரவேசித்தார். (சகரியா 9:9; யோவான் 12:12-15) இயேசு கழுமரத்தில் அறையப்பட்டதற்குப் பின்பு, சேவகர்கள் அவருடைய வஸ்திரங்களைப் பங்கிட்டு, அவருடைய அங்கியின்மீது சீட்டு போடுகையில் சங்கீதக்காரனின் வார்த்தைகள் நிறைவேறின. (சங்கீதம் 22:18; யோவான் 19:23, 24) அவருடைய எலும்புகள் முறிக்கப்படாதது, அவர் குத்தப்பட்டது ஆகிய தீர்க்கதரிசனங்களும் நிறைவேறின. (சங்கீதம் 34:20; சகரியா 12:10; யோவான் 19:33-37) எழுதும்படி கடவுள் வழிநடத்திய பைபிள் எழுத்தாளர்கள் இயேசுவுக்குப் பொருத்தின மேசியானிய தீர்க்கதரிசனத்திற்கு சில உதாரணங்கள் இவை. b
மேசியானிய ராஜாவை வாழ்த்துங்கள்!
8. ‘நீண்ட ஆயுசுள்ளவர்’ யார், தானியேல் 7:9-14-லுள்ள தீர்க்கதரிசனம் எவ்வாறு நிறைவேற்றமடைந்தது?
8 பாபிலோன் ராஜாவாகிய பெல்ஷாத்சாரின் முதலாம் வருஷத்திலே யெகோவா தம்முடைய தீர்க்கதரிசியாகிய தானியேல் ஒரு கனவையும் விசேஷித்த தரிசனங்களையும் காணும்படி செய்தார். முதலாவதாக நான்கு பெரிய மிருகங்களை அந்தத் தீர்க்கதரிசி கண்டார். அவை ‘நான்கு ராஜாக்களையும்,’ அடுத்தடுத்து வரும் உலக வல்லரசுகளையும் அடையாளம் காட்டுவதாக கடவுளுடைய தூதன் சொன்னார். (தானியேல் 7:1-8, 17) அடுத்து ‘நீண்ட ஆயுசுள்ளவராகிய’ யெகோவா மாட்சிமை பொருந்தியவராய் சிங்காசனத்தில் வீற்றிருப்பதை தானியேல் பார்த்தார். அவர் மிருகங்களுக்கு எதிராக தண்டனை தீர்ப்பளித்து அவற்றினிடமிருந்து ஆட்சி செய்யும் அதிகாரத்தை நீக்கியபின், அந்த நான்காவது மிருகத்தை அழித்துப்போடுகிறார். ‘ஜனங்களையும் தேசத்தாரையும், பாஷைக்காரரையும்’ நித்தியமாய் ஆளும் உரிமை ‘மனுஷகுமாரனுடைய சாயலான ஒருவருக்கு’ அப்போது கொடுக்கப்பட்டது. (தானியேல் 7:9-14, NW) பரலோகத்தில் 1914-ல் “மனுஷகுமாரனாகிய” இயேசு கிறிஸ்து சிங்காசனத்தில் அமர்த்தப்படுவதுடன் சம்பந்தப்பட்ட என்னே அற்புதமான தீர்க்கதரிசனம்!—மத்தேயு 16:13.
9, 10. (அ) சொப்பன சிலையின் வெவ்வேறு பாகங்கள் எவற்றை அர்த்தப்படுத்துகின்றன? (ஆ) தானியேல் 2:44-ன் நிறைவேற்றத்தை நீங்கள் எப்படி விவரிப்பீர்கள்?
9 கடவுள், “ராஜாக்களைத் தள்ளி, ராஜாக்களை ஏற்படுத்துகிறவர்” என்பதை தானியேல் அறிந்திருந்தார். (தானியேல் 2:21) “மறைபொருள்களை வெளிப்படுத்துகிற” யெகோவாவிடத்தில் விசுவாசம் வைத்திருந்ததால், பாபிலோனின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் சொப்பனத்தில் கண்ட பெரிய சிலையின் அர்த்தத்தை தீர்க்கதரிசி வெளிப்படுத்தினார். பாபிலோன், மேதிய-பெர்சியா, கிரீஸ், ரோம் போன்ற பல்வேறு உலக வல்லரசுகளின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் அச்சிலையின் வெவ்வேறு பாகங்கள் குறித்துக் காட்டின. ஆனால் நம்முடைய நாளிலும் அதற்கு பின்னரும் நிகழவிருக்கும் சம்பவங்களைக் குறிப்பாக தெரிவிக்கவும் கடவுள் தானியேலை உபயோகித்தார்.—தானியேல் 2:24-30.
10 “அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை; . . . அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்” என்பதே அந்தத் தீர்க்கதரிசனம். (தானியேல் 2:44) “புறஜாதியாரின் காலம்” 1914-ல் முடிவடைந்தபோது கிறிஸ்துவின் தலைமையில் கடவுள் பரலோக ராஜ்யத்தை ஸ்தாபித்தார். (லூக்கா 21:24; வெளிப்படுத்துதல் 12:1-5) கடவுளுடைய சர்வலோக அரசதிகாரம் எனும் “மலை”யிலிருந்து மேசியானிய ராஜ்யம் எனும் “கல்” தெய்வீக சக்தியால் பெயர்ந்து உருண்டோடி வந்தது. அந்தக் கல் அர்மகெதோன் யுத்தத்தில் அந்தச் சிலையை நொறுக்கி, தூள் தூளாக்கும். அந்த மேசியானிய ராஜ்யம் “பூமியையெல்லாம்” ஆதிக்கம் செலுத்தும் ஓர் உலகளாவிய அரசாங்கமாக என்றென்றும் நிலைத்து நிற்கும்.—தானியேல் 2:35, 45; வெளிப்படுத்துதல் 16:14, 16. c
11. இயேசுவின் மறுரூபம் எதற்கு முன்காட்சியாய் உள்ளது, பேதுருவின் மனதில் அந்தத் தரிசனம் எவ்வளவு ஆழமாய் பதிந்தது?
11 ராஜ்ய ஆட்சியை மனதில் வைத்தே இயேசு தம்முடைய சீஷர்களிடத்தில் இவ்வாறு சொன்னார்: “இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனுஷ குமாரன் தம்முடைய ராஜ்யத்தில் வருவதைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லை.” (மத்தேயு 16:28) ஆறு நாட்களுக்குப் பிறகு, பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோருடன் இயேசு உயரமான மலையின்மீது ஏறினார்; அங்கு அவர்களுக்கு முன் அவர் மறுரூபமானார். அப்போது, பிரகாசமான மேகம் அந்த அப்போஸ்தலர்களை மறைக்கையில், “இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள்” என கடவுள் அறிவித்தார். (மத்தேயு 17:1-9; மாற்கு 9:1-9) கிறிஸ்துவின் ராஜ்ய மகிமைக்கு என்னே ஓர் முன்காட்சி! “அதிக உறுதியான தீர்க்கதரிசன வசனமும் நமக்கு உண்டு” என கண்ணைப் பறிக்கும் பிரகாசமான அந்தத் தரிசனத்தைப் பற்றி பேதுரு குறிப்பிட்டதில் ஆச்சரியமேதுமில்லை.—2 பேதுரு 1:16-19. d
12. கடவுளின் தீர்க்கதரிசன வார்த்தையில் நம்முடைய விசுவாசத்தை வெளிக்காட்டுவதற்கு ஏன் இதுவே சமயம்?
12 எபிரெய வேதாகமத்திலுள்ள மேசியாவைப் பற்றிய தீர்க்கதரிசனங்களைத் தவிர, “வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும்” வருவதாக இயேசு சொன்னதும் “தீர்க்கதரிசன வார்த்தை”யில் அடங்கும். (மத்தேயு 24:30) கிறிஸ்து ராஜ்ய வல்லமையில் மகிமையோடு வருவதைப் பற்றிய தீர்க்கதரிசன வார்த்தையை மறுரூபக் காட்சி உறுதிப்படுத்தியது. அவர் வெகு சீக்கிரத்தில் மகிமையோடு வருகையில் விசுவாசமற்றவர்களுக்கு அழிவையும் விசுவாசிப்பவர்களுக்கு ஆசீர்வாதத்தையும் பலனாக தருவார். (2 தெசலோனிக்கேயர் 1:6-10) பைபிள் தீர்க்கதரிசன நிறைவேற்றம் இவற்றை ‘கடைசி நாட்கள்’ என நிரூபிக்கிறது. (2 தீமோத்தேயு 3:1-5, 16, 17; மத்தேயு 24:3-14) யெகோவாவின் சார்பில் நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுபவரான மிகாவேல், அதாவது இயேசு கிறிஸ்து, “மிகுந்த உபத்திரவ”த்தின்போது இந்தப் பொல்லாத ஒழுங்குமுறைக்கு முடிவைக் கொண்டுவர தயாராக இருக்கிறார். (மத்தேயு 24:21; தானியேல் 12:1) நிச்சயமாகவே, கடவுளின் தீர்க்கதரிசன வார்த்தையில் விசுவாசத்தை வெளிக்காட்ட இதுவே சமயம்.
கடவுளின் தீர்க்கதரிசன வார்த்தையில் விசுவாசத்தைக் காத்துக்கொள்ளுதல்
13. கடவுளிடமுள்ள நம் அன்பை காத்துக்கொள்ளவும் அவருடைய வார்த்தையின் மீதுள்ள நம் விசுவாசம் எனும் ஒளி மங்காதிருக்கவும் எது நமக்கு உதவும்?
13 கடவுளின் தீர்க்கதரிசன வார்த்தை எவ்வாறெல்லாம் நிறைவேறியுள்ளது என்பதைப் பற்றி நாம் முதன் முதலில் கற்றறிந்தபோது மெய்சிலிர்த்துப் போனோம் என்பது உண்மையே. ஆனால், அப்போதிருந்து நம்முடைய விசுவாசம் மெல்ல மெல்ல குறைந்து நம் அன்பு தணிந்துவிட்டதா? ‘ஆரம்பத்தில் வைத்திருந்த அன்பை விட்டுவிலகின’ எபேசுவிலிருந்த கிறிஸ்தவர்களைப் போல் நாம் ஒருபோதும் ஆகிவிடக் கூடாது. (வெளிப்படுத்துதல் 2:1-4, NW) எவ்வளவு காலமாக நாம் யெகோவாவை சேவித்து வந்தாலும், பரலோகத்திலே பொக்கிஷத்தை சேர்த்துவைப்பதற்காக ‘முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தொடர்ந்து தேட’வில்லை என்றால், அவர்களைப் போலவே நாமும் அன்பை இழந்துவிட வாய்ப்பிருக்கிறது. (மத்தேயு 6:19-21, 31-33) ஊக்கமாக பைபிள் படிப்பதும், தவறாமல் கிறிஸ்தவ கூட்டங்களுக்குச் செல்வதும், ராஜ்ய பிரசங்க ஊழியத்தில் வைராக்கியத்தோடு ஈடுபடுவதும் யெகோவாவிடமும், அவருடைய குமாரனிடமும், பைபிளிடமும் இருக்கும் அன்பை காத்துக்கொள்ள நமக்கு உதவும். (சங்கீதம் 119:105; மாற்கு 13:10; எபிரெயர் 10:24, 25) இவ்வாறு செய்வது கடவுளின் வார்த்தையின் மீதுள்ள நம் விசுவாசம் எனும் ஒளி மங்காதிருக்கச் செய்யும்.—சங்கீதம் 106:12.
14. யெகோவாவின் தீர்க்கதரிசன வார்த்தையில் விசுவாசம் வைத்ததற்கு அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு கிடைத்த பரிசு என்ன?
14 கடவுளின் தீர்க்கதரிசன வார்த்தை முற்காலங்களில் நிறைவேறியதைப் போலவே எதிர்காலத்தைப் பற்றி முன்னுரைப்பவையும் நிறைவேறும் என்பதில் நம்பிக்கை வைக்கலாம். உதாரணத்திற்கு, ராஜ்ய மகிமையில் கிறிஸ்துவின் வந்திருத்தல் பற்றிய தீர்க்கதரிசனம் இன்று நிஜமாகிவிட்டது; “ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக் கொடுப்பேன்” என்ற தீர்க்கதரிசன வாக்குறுதி, மரணம் வரை விசுவாசத்தைக் காத்துக்கொண்ட அபிஷேகம் செய்யப்பட்டவர்களிடம் நிறைவேறியுள்ளது. (வெளிப்படுத்துதல் 2:7, 10; 1 தெசலோனிக்கேயர் 4:14-17) இவ்வாறு வெற்றி சிறந்தவர்களுக்கு, கடவுளுடைய பரலோக பரதீஸிலிருக்கும் ‘ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கும்’ பாக்கியத்தை இயேசு அளிப்பார். ‘யுகங்களின் ராஜாவும், அழிவில்லாதவரும் காணப்படாதவருமாகிய ஒரே கடவுளாகிய’ யெகோவா அருளும் நித்திய வாழ்வையும் அழியாமையையும் இயேசு கிறிஸ்துவின் மூலம் அவர்கள் தங்கள் உயிர்த்தெழுதலின்போது பெறுவர். (1 தீமோத்தேயு 1:17, தி.மொ.; 1 கொரிந்தியர் 15:50-54; 2 தீமோத்தேயு 1:10) கடவுள்மீதுள்ள அன்பு தணியாமல் இருந்ததற்கும் அவருடைய தீர்க்கதரிசன வார்த்தையில் அசைக்க முடியாத விசுவாசம் வைத்ததற்கும் எவ்வளவு பெரிய பரிசு!
15. எவரில் ‘புதிய பூமிக்கான’ அஸ்திவாரம் போடப்பட்டது, அவர்களுடைய கூட்டாளிகள் யார்?
15 விசுவாசிகளாய் மரித்த அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் ‘தேவனுடைய பரதீசிற்கு’ உயிர்த்தெழுப்பப்பட்ட பின்பு வெகு சீக்கிரத்தில், பூமியிலுள்ள ஆவிக்குரிய இஸ்ரவேலரில் மீதமிருந்தவர்கள் பொய் மத உலகப் பேரரசாகிய “மகா பாபிலோ”னிலிருந்து விடுவிக்கப்பட்டனர். (வெளிப்படுத்துதல் 14:8, NW; கலாத்தியர் 6:16) அவர்களில்தான் ‘புதிய பூமிக்கான’ அஸ்திவாரம் போடப்பட்டது. (வெளிப்படுத்துதல் 21:1) “ஒரு தேச ஜனம்” பிறந்தது; அது ஆவிக்குரிய பரதீஸாக வேகமாக வளர்ந்து, இன்று முழு பூமியையும் நிரப்பியிருக்கிறது. (ஏசாயா 66:8, தி.மொ.) இந்தக் “கடைசிநாட்களில்” ஆவிக்குரிய இஸ்ரவேலரின் கூட்டாளிகளான செம்மறியாடுகளைப் போன்றவர்கள் இந்த ஆவிக்குரிய பரதீசிற்குள் இப்போது திரள் திரளாக வந்த வண்ணம் இருக்கின்றனர்.—ஏசாயா 2:2-4; சகரியா 8:23; யோவான் 10:16; வெளிப்படுத்துதல் 7:9.
கடவுளின் தீர்க்கதரிசன வார்த்தையில் முன்னுரைக்கப்பட்ட மனிதவர்க்கத்தின் எதிர்காலம்
16. அபிஷேகம் செய்யப்பட்டவர்களை மனமார ஆதரிப்பவர்களுக்கு என்ன எதிர்காலம் இருக்கிறது?
16 அபிஷேகம் செய்யப்பட்டவர்களை மனமார ஆதரிப்பவர்களுக்கு என்ன எதிர்காலம் இருக்கிறது? அவர்களுக்கும் கடவுளின் தீர்க்கதரிசன வார்த்தையில் விசுவாசம் இருக்கிறது; ஆனால் பூமிக்குரிய பரதீஸில் வாழப்போவதே அவர்களது நம்பிக்கை. (லூக்கா 23:39-43) ‘ஜீவத்தண்ணீருள்ள நதி’யிலிருந்து அவர்கள் குடிப்பார்கள்; அதன் கரைகளில் நடப்பட்டிருக்கும் “விருட்சத்தின் இலைக”ளினால் ஆரோக்கியமடைவார்கள். (வெளிப்படுத்துதல் 22:1, 2) உங்களுக்கும் அத்தகைய அருமையான நம்பிக்கை இருந்தால், யெகோவாவிடமும் அவருடைய தீர்க்கதரிசன வார்த்தையிடமும் ஆழமான அன்பை தொடர்ந்து வெளிக்காட்டுங்கள். பரதீஸிய பூமியில் நித்திய ஜீவனின் ஈடற்ற சந்தோஷத்தை அனுபவிப்பவர்களில் நீங்களும் ஒருவராகலாம்.
17. பூமிக்குரிய பரதீஸில் என்னென்ன சந்தோஷம் நிலவும்?
17 வரவிருக்கும் பூமிக்குரிய பரதீஸில் வாழ்க்கை எப்படி இருக்கும் என அபூரண மனிதர்களால் விவரிக்க முடியாது; ஆனால், அப்போது கீழ்ப்படிதலுள்ள மனிதகுலத்திற்கு எப்படிப்பட்ட ஆசீர்வாதங்கள் காத்திருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்வதற்கு கடவுளின் தீர்க்கதரிசன வார்த்தை உட்பார்வை அளிக்கிறது. எதிர்த்து நிற்போர் யாருமின்றி கடவுளின் ராஜ்ய ஆட்சி தொடருகையில், பரலோகத்தில் செய்யப்படுவதைப் போல அவருடைய சித்தம் பூமியிலேயும் செய்யப்படும். ‘தீங்குசெய்யவோ கேடுசெய்யவோ’ கொடூரமான மனிதரோ, ஏன் மிருகமோகூட இருக்காது. (ஏசாயா 11:9; மத்தேயு 6:9, 10) சாந்தகுணமுள்ளவர்கள் பூமியில் குடியிருந்து, “மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.” (சங்கீதம் 37:11) பசிக்கொடுமையால் வாடும் மனிதகுலம் இருக்காது; ஏனெனில், “பூமியிலே தானியம் மிகுந்திருக்கும்; மலைகளின் உச்சிகளில் அது நிரம்பி வழியும்.” (சங்கீதம் 72:16, NW) துயரத்தால் இனி கண்ணீர் சிந்த வேண்டாம். இனி வியாதி இல்லை, மரணமும் சுவடு தெரியாமல் நீக்கப்படும். (ஏசாயா 33:24; வெளிப்படுத்துதல் 21:4) டாக்டர்கள் இல்லை, மருந்துகள் இல்லை, மருத்துவமனைகளோ மனநோய் இல்லங்களோ இல்லை, சவ அடக்கம் இல்லை. இவற்றையெல்லாம் நினைத்துப் பார்ப்பதே இன்பம் தரவில்லையா? அருமையான எத்தனை எத்தனை எதிர்பார்ப்புகள்!
18. (அ) தானியேலுக்கு எது உறுதியளிக்கப்பட்டது? (ஆ) தானியேலின் ‘சுதந்தர வீதம்’ என்ன?
18 இறந்தவர்கள் எல்லாரும் உயிர்த்தெழுப்பப்பட்ட பின்பு மனிதகுலத்தின் பொது கல்லறை காலியாகிவிடும். நீதிமானாகிய யோபுவுக்கும் அந்த நம்பிக்கை இருந்தது. (யோபு 14:14, 15) தீர்க்கதரிசியாகிய தானியேலுக்கும் அந்த நம்பிக்கை இருந்தது; ஏனெனில் யெகோவாவின் தூதன் பின்வரும் ஆறுதலான நம்பிக்கையை உறுதியளித்தார்: “நீயோவென்றால் முடிவு வருமட்டும் போயிரு; நீ இளைப்பாறிக்கொண்டிருந்து, நாட்களின் முடிவிலே உன் சுதந்தர வீதத்துக்கு எழுந்திருப்பாய்.” (தானியேல் 12:13) தானியேல் தன் இறுதி மூச்சு அடங்கும் வரை கடவுளுக்கு உண்மையுள்ளவராய் வாழ்ந்தார். இப்போது அவர் மரணத்தில் துயில்கொண்டிருக்கிறார்; கிறிஸ்துவின் ஆயிரவருட ஆட்சியில், “நீதிமான்களின் உயிர்த்தெழுதலில்” அவர் ‘எழுந்திருப்பார்.’ (லூக்கா 14:14) தானியேலின் ‘சுதந்தர வீதம்’ என்ன? பாரபட்சமற்ற, நியாயமான விதத்தில் பிரித்துக் கொடுக்கப்படும் தேசத்தில் யெகோவாவின் ஜனத்தார் அனைவருக்கும் இடமிருக்கும் என பரதீஸிய நிறைவேற்றத்தைப் பற்றிய எசேக்கியேல் தீர்க்கதரிசனம் குறிப்பிடுகிறது. (எசேக்கியேல் 47:13-48:35) எனவே பரதீஸில் தானியேலுக்கு இடமுண்டு; அவருடைய சுதந்தர வீதம் தேசத்தில் அவருக்கு கிடைக்கும் பங்கு மட்டுமல்ல. யெகோவாவின் நோக்கத்தில் அவருடைய பங்கையும் அது உட்படுத்தும்.
19. பூமிக்குரிய பரதீஸில் வாழ என்ன தேவை?
19 உங்களுக்கும் சுதந்தர வீதம் உண்டா? கடவுளின் வார்த்தையாகிய பைபிளில் உங்களுக்கு விசுவாசம் இருந்தால், பூமிக்குரிய பரதீஸில் வாழ ஓர் இடம் கிடைக்காதா என நீங்களும் ஏங்குவீர்கள். பரதீஸில் இருப்பதாகவும், அது வாரி இறைக்கும் ஆசீர்வாதங்களை அனுபவித்து மகிழ்வதாகவும், பூமியைப் பராமரிப்பதாகவும், இறந்தவர்கள் உயிரோடு எழுந்து வருகையில் மகிழ்ச்சி பொங்க வரவேற்பதாகவும் இப்போதே நீங்கள் கற்பனை செய்து பார்க்கலாம். என்ன இருந்தாலும் பரதீஸிற்கு உரிமையுடையவர்கள் மனிதர்கள். இப்படிப்பட்ட இடத்தில் வாழ்வதற்கே கடவுள் முதல் மனித ஜோடியைப் படைத்தார். (ஆதியாகமம் 2:7-9) கீழ்ப்படிதலுள்ளவர்கள் பரதீஸில் நித்தம் வாழ வேண்டுமென்பதே அவருடைய விருப்பம். இறுதியில் பரதீஸிய பூமியில் வாழப்போகும் கோடிக்கணக்கானோரில் ஒருவராய் இருப்பதற்கு பைபிளுக்கு இசைவாய் நடப்பீர்களா? உங்கள் பரலோக தகப்பனாகிய யெகோவாவிடம் உண்மையான அன்பும் கடவுளின் தீர்க்கதரிசன வார்த்தையிடம் உறுதியான விசுவாசமும் உங்களுக்கு இருந்தால் அங்கு நீங்களும் வாழலாம்.
[அடிக்குறிப்புகள்]
a தானியேல் தீர்க்கதரிசனத்திற்கு செவிசாயுங்கள்! புத்தகத்தில் 11-ம் அதிகாரத்தையும், “எழுபது வாரங்கள்” பற்றி அறிய வேதாகமத்தின்பேரில் உட்பார்வை (ஆங்கிலம்) புத்தகத்தையும் காண்க; இவை உவாட்ச்டவர் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் பிரசுரிக்கப்பட்டவை.
b உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்ட ‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’ (ஆங்கிலம்) புத்தகத்தில் பக்கங்கள் 343-4-ஐக் காண்க.
d காவற்கோபுரம், ஏப்ரல் 1, 2000 என தேதியிட்ட இதழில், “கடவுளின் தீர்க்கதரிசன வார்த்தைக்கு கவனம் செலுத்துங்கள்” என்ற கட்டுரையைக் காண்க.
எப்படி பதிலளிப்பீர்கள்?
• முதல் தீர்க்கதரிசனம் எது, வாக்குப்பண்ணப்பட்ட வித்து யார்?
• இயேசுவில் நிறைவேற்றமடைந்த சில மேசியானிய தீர்க்கதரிசனங்கள் யாவை?
• எப்படி தானியேல் 2:44, 45 நிறைவேற்றமடையும்?
• கீழ்ப்படிதலுள்ள மனிதகுலத்திற்கு எப்படிப்பட்ட எதிர்காலம் இருப்பதாக கடவுளின் தீர்க்கதரிசன வார்த்தை சுட்டிக்காட்டுகிறது?
[கேள்விகள்]
[கேள்விகள்]
[பக்கம் 18-ன் படம்]
பூமிக்குரிய பரதீஸில் வாழ ஓர் இடம் கிடைக்காதா என ஏங்குகிறீர்களா?