அன்புக் கடவுளை அறிதல்
ராஜ்ய அறிவிப்பாளர் அறிக்கை
அன்புக் கடவுளை அறிதல்
பதினாறு வயதிலேயே பிரேஸிலைச் சேர்ந்த அன்டோனியோவுக்கு வாழ்க்கை வெறுத்தது, சூனியம் அவரை சூழ்ந்தது. எனவே, மதுவிலும் போதை மருந்திலும் காலத்தை ஓட்டிய அவர் கடைசியில் தற்கொலை முடிவுக்கு சென்றுவிட்டார். அந்த சமயத்தில்தான், அவரது அம்மாவின் வார்த்தைகள் நினைவுக்கு வந்தன: ‘கடவுள் அன்பானவர்.’ (1 யோவான் 4:8) ஆனால், இந்த அன்புள்ள கடவுள் எங்கே இருக்கிறார்?
போதை மருந்து பழக்கத்தை விட்டுவிட விரும்பி, அன்டோனியோ சர்ச் பாதிரியின் உதவியை நாடினார். படிப்படியாக, கத்தோலிக்க சர்ச்சில் மிகவும் ஈடுபாடு கொண்டார். ஆனாலும் அவர் மனதில் இன்னும் பல கேள்விகள் பதில் கிடைக்காமலேயே ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தன. உதாரணமாக, “சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” என்ற இயேசுவின் வார்த்தைகள் அவருக்கு புரியவில்லை. (யோவான் 8:32) இயேசு என்ன விதமான விடுதலையை தரப்போவதாக வாக்கு கொடுத்தார்? அவருடைய கேள்விகளுக்கு திருப்தியளிக்கும் எந்த பதிலையும் சர்ச்சால் கொடுக்க முடியவில்லை. கடைசியில், அன்டோனியோ சர்ச்சிலிருந்து விலகி, பழைய வாழ்க்கைக்கே திரும்பினார். அவருடைய போதைப் பழக்கமும் மிதமிஞ்சிப்போனது.
இந்த சமயத்தில்தான், அன்டோனியோவின் மனைவி மரீயா, யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளை படிக்க ஆரம்பித்தாள். அவளுடைய படிப்பை அன்டோனியா எதிர்க்காவிட்டாலும், “அமெரிக்க சக்கரவர்த்தி ஆட்சியை ஆதரிக்கும் அமெரிக்க மதம்” என்று யெகோவாவின் சாட்சிகளை அவர் ஒதுக்கினார்.
ஆனால் இதற்கெல்லாம் மரீயா சளைக்கவில்லை. ஆர்வத்தைத் தூண்டும் கட்டுரைகளைக் கொண்ட காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை கணவனின் கண்ணில் படுமாறு வைத்தாள். படிப்பதில் ஆர்வமுள்ள அன்டோனியோ, தன் மனைவி வீட்டில் இல்லாத நேரங்களில் எப்போதாவது அந்தப் பத்திரிகைகளை புரட்டிப் பார்ப்பார். அவருடைய பைபிள் கேள்விகளுக்கு முதன்முதலாக பதில்களை அவற்றில் கண்டார். “என் மனைவியும் சாட்சிகளும் என்மீது காட்டும் அன்பையும் இரக்கத்தையும் நான் உணர ஆரம்பித்தேன்” என அவர் சொல்கிறார்.
1992-ம் வருடத்தின் மத்தியில், யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளை படிக்க அன்டோனியோ தீர்மானித்தார். என்றாலும், போதை மருந்துகளை உபயோகிப்பது மற்றும் வெறிக்குமளவுக்கு குடிப்பது போன்றவற்றை விடவில்லை. ஒரு நாள் நள்ளிரவில், ஒரு குடிசைப் பகுதியிலிருந்து அன்டோனியோவும் அவருடைய நண்பரும் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது, போலீஸ் அவர்களை வழிமறித்தனர். அன்டோனியோவிடம் கொகேய்ன் இருப்பதை அறிந்த போலீசார் அவரை அடிக்க ஆரம்பித்தனர். ஒரு போலீஸ்காரர் அவரை சேற்றில் தள்ளி, அவரது முகத்துக்கு நேரே துப்பாக்கியை நீட்டினார். “சுட்டுத்தள்ளு அவனை!” என்று மற்றொரு போலீஸ்காரர் கத்தினார்.
அன்டோனியோ சேற்றில் கிடக்கையில், அவரது வாழ்க்கை மனக்கண்முன் வந்தது. அவருடைய குடும்பமும் யெகோவாவும் மாத்திரமே அவருடைய நினைவுக்கு வந்த நல்ல விஷயங்கள். உடனே மனதிற்குள்ளேயே சிறு ஜெபத்தை செய்தார். யெகோவாவின் உதவிக்காக மன்றாடினார். எதனாலென்று தெரியவில்லை, அந்தப் போலீஸ்காரர்கள் அவரை விட்டுவிட்டு சென்றனர். யெகோவாவே தன்னை காப்பாற்றினார் என்ற உறுதியோடு வீடு திரும்பினார்.
புதுப்பெலத்தோடு பைபிளை படிக்க ஆரம்பித்தார் அன்டோனியோ. யெகோவாவை பிரியப்படுத்துவதற்காக படிப்படியாக மாற்றங்களை செய்தார். (எபேசியர் 4:22-24) தன்னடக்கம் வளர்ந்ததால் போதை மருந்துகளை உபயோகிப்பது குறைந்தது. இருந்தபோதிலும், மருத்துவ உதவியும் அவருக்கு தேவைப்பட்டது. இரண்டு மாதங்கள் சீரமைப்பு மையத்தில் இருந்தார். அங்கிருந்தது நல்லதாகிவிட்டது; எப்படியென்றால், நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு உட்பட, பைபிள் பிரசுரங்கள் பலவற்றை அவரால் படிக்க முடிந்தது. அங்கிருந்த மற்ற நோயாளிகளிடம் தான் கற்றவற்றை பகிர்ந்துகொண்டார்.
அந்த மையத்தை விட்டு வீடு திரும்பியதும், தன் பைபிள் படிப்பை சாட்சிகளோடு தொடர்ந்தார். அன்டோனியோ, மரீயா, அவர்களுடைய இரு மகள்கள், அன்டோனியோவின் அம்மா அனைவரும் சந்தோஷமுள்ள, ஐக்கியமான குடும்பமாக இன்று யெகோவாவை சேவித்து வருகின்றனர். “‘கடவுள் அன்பானவர்’ அப்படிங்கறதோட உண்மையான அர்த்தத்த இப்ப நான் புரிஞ்சுக்கிட்டேன்” என அன்டோனியோ குறிப்பிடுகிறார்.
[பக்கம் 8-ன் படம்]
ரியோ டி ஜெனிரோவில் பிரசங்கித்தல்