Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

‘உன்னையும் உனக்குச் செவிகொடுப்போரையும் இரட்சித்துக்கொள்வாய்’

‘உன்னையும் உனக்குச் செவிகொடுப்போரையும் இரட்சித்துக்கொள்வாய்’

‘உன்னையும் உனக்குச் செவிகொடுப்போரையும் இரட்சித்துக்கொள்வாய்’

“உனக்கும் உன் போதகத்துக்கும் இடைவிடாமல் கவனம் செலுத்து. . . . இப்படி செய்வதால் உன்னையும் உனக்குச் செவிகொடுத்துக் கேட்போரையும் இரட்சித்துக்கொள்வாய்.”1 தீமோத்தேயு 4:16, NW.

1, 2. உயிரைக் காக்கும் ஊழியத்தைத் தொடர்ந்து செய்யும்படி உண்மைக் கிறிஸ்தவர்களை எது தூண்டுகிறது?

 யெகோவாவின் சாட்சிகளில் ஒரு தம்பதி, சமீபத்தில் லேஹூ என்ற மொழியை கற்றனர். இந்த மொழியை பேசும் மலைஜாதியினர், வட தாய்லாந்தில் ஒதுக்குப்புறமான ஒரு கிராமத்தில் வாழ்கின்றனர். இந்தப் பழங்குடி மக்களுக்கு கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியை சொல்ல அந்த தம்பதியினர் முயற்சிக்கின்றனர்.

2 “சுவாரஸ்யமான இந்த ஜனங்களுக்கு நற்செய்தியை சொல்வதில் எங்களுக்கு கிடைத்த மகிழ்ச்சியையும் மனதிருப்தியையும் விவரிக்க வார்த்தைகளே இல்லை,” என்று கணவர் விளக்குகிறார். “‘சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும் பாஷைக்காரருக்கும்’ மகிழ்ச்சிதரும் செய்தி அறிவிக்கப்பட வேண்டியதை வெளிப்படுத்துதல் 14:6, 7 சொல்கிறது. இதன் நிறைவேற்றத்தில் நாங்களும் பங்கு கொள்கிறோம் என்பது எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. நற்செய்தி இன்னும் எட்டாத பிராந்தியங்கள் சில உள்ளன. அதில் இதுவும் ஒன்று. எங்களால் நடத்த முடியாத அளவுக்கு நிறைய பைபிள் படிப்புகள் இங்கு இருக்கின்றன.” தங்களை மட்டுமல்லாமல், தங்களுக்குச் செவிகொடுப்போரையும் இரட்சிக்க வேண்டும் எனும் நோக்கத்தோடு இந்தத் தம்பதியினர் செயல்படுகின்றனர். கிறிஸ்தவர்களாக, நாம் எல்லாருமே அவ்வாறு செய்கிறோமா?

“உனக்கு இடைவிடாத கவனம் செலுத்து”

3. மற்றவர்களை இரட்சிப்பதற்கு நாம் முதலாவதாக என்ன செய்ய வேண்டும்?

3 “உனக்கும் உன் போதகத்துக்கும் இடைவிடாமல் கவனம் செலுத்து” என்று தீமோத்தேயுவுக்கு அப்போஸ்தலனாகிய பவுல் அறிவுரை கொடுத்தார். அந்த அறிவுரை கிறிஸ்தவர்கள் எல்லாருக்கும் பொருந்துகிறது. (1 தீமோத்தேயு 4:16, NW) மற்றவர்கள் இரட்சிப்படைய உதவி செய்ய வேண்டுமென்றால், முதலாவதாக நம்மீது நாம் கவனம் செலுத்த வேண்டும். இதை நாம் எவ்வாறு செய்யலாம்? முதலில் நாம் வாழும் காலங்களைக் குறித்து தொடர்ந்து விழிப்புள்ளோராய் இருக்க வேண்டும். “இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவு”க்கு அடையாளமாக பல சம்பவங்களை, தம்மைப் பின்பற்றியவர்களுக்கு இயேசு கொடுத்தார். எனினும், முடிவு எப்போது வரும் என்பதை திட்டவட்டமாக அவர் சொல்லவில்லை. (மத்தேயு 24:3, 36) இந்த உண்மைக்கு நாம் எவ்வாறு பிரதிபலிக்க வேண்டும்.

4. (அ) இந்த ஒழுங்குமுறைக்கு மீந்திருக்கிற காலத்தை குறித்ததில் என்ன மனப்பான்மையை நாம் ஏற்க வேண்டும்? (ஆ) என்ன மனப்பான்மையை நாம் தவிர்க்க வேண்டும்?

4 நாம் ஒவ்வொருவரும் இவ்வாறு கேட்டுக்கொள்ளலாம்: ‘இந்த ஒழுங்குமுறைக்கு மீந்திருக்கும் காலத்தை, என்னையும் எனக்குச் செவிகொடுப்போரையும் இரட்சித்துக்கொள்ளும்படி நான் பயன்படுத்துகிறேனா? அல்லது “முடிவு எப்போது வரும் என்று நாம் திட்டவட்டமாய் அறியாததால், அதைப் பற்றி நான் கவலைப்படப் போவதில்லை” என்று நினைக்கிறேனா? இரண்டாவது சொல்லப்பட்ட மனப்பான்மை ஆபத்தானது. இது இயேசுவின் இந்த அறிவுரைக்கு நேர்மாறாக இருக்கிறது: “நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்.” (மத்தேயு 24:44) யெகோவாவின் சேவையில் நம் ஆர்வத்தை இழப்பதற்கோ அல்லது பாதுகாப்புக்காகவும் நிம்மதிக்காகவும் உலகத்தை நாடுவதற்கோ இது சமயமல்ல.—லூக்கா 21:34-36.

5. கிறிஸ்தவ காலத்திற்கு முன்பிருந்த யெகோவாவின் சாட்சிகள் என்ன முன்மாதிரி வைத்தார்கள்?

5 நமக்கு கவனம் செலுத்துகிறோம் என்பதைக் காட்டும் இன்னொரு வழி, கிறிஸ்தவர்களாக உண்மையுடன் நிலைத்திருப்பதாகும். கடந்த காலத்தில் கடவுளுடைய ஊழியர்கள், உடனடியான விடுதலையை எதிர்பார்த்தாலும் எதிர்பார்க்காவிடினும் தொடர்ந்து சகித்து நிலைத்திருந்தார்கள். கிறிஸ்தவ காலத்திற்கு முன்னிருந்த அத்தகைய சாட்சிகளாகிய ஆபேல், ஏனோக்கு, நோவா, ஆபிரகாம், சாராள் ஆகியோரின் உதாரணங்களை எடுத்துக் குறிப்பிட்ட பின்பு, பவுல் இவ்வாறு சொன்னார்:இவர்களெல்லாரும், வாக்குத்தத்தம் பண்ணப்பட்டவைகளை அடையாமல், தூரத்திலே அவைகளைக் கண்டு, நம்பி அணைத்துக்கொண்டு, பூமியின்மேல் தங்களை அந்நியரும் பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு, விசுவாசத்தோடே மரித்தார்கள்.” சொகுசான வாழ்க்கைக்குரிய எந்த இச்சைகளுக்கும் அவர்கள் இடமளிக்கவில்லை, தங்களைச் சுற்றியிருந்த ஒழுக்கக்கேட்டிலும் அவர்கள் வீழ்ந்துவிடவில்லை. ஆனால், ‘வாக்குத்தத்தம் பண்ணப்பட்டவைகளின்’ நிறைவேற்றத்திற்காக ஆவலுடன் எதிர்நோக்கினார்கள்.—எபிரெயர் 11:13; 12:1.

6. இரட்சிப்பைப் பற்றிய முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களின் கருத்து, அவர்கள் வாழ்க்கை முறையை எவ்வாறு பாதித்தது?

6 முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள், இந்த உலகத்தில் தங்களை ‘அந்நியர்கள்’ எனவும் கண்டார்கள். (1 பேதுரு 2:11) பொ.ச. 70-ல் எருசலேமின் அழிவிலிருந்து காக்கப்பட்ட பின்பும், உண்மையான கிறிஸ்தவர்கள் பிரசங்கிப்பதை நிறுத்திவிடவில்லை அல்லது உலக வாழ்க்கைக்கு திரும்பி சென்றுவிடவில்லை. உண்மையுடன் நிலைத்திருப்போருக்கு மகத்தான இரட்சிப்பு காத்திருந்ததென்று அவர்கள் அறிந்திருந்தார்கள். இதை அறிவுறுத்தி, பொ.ச. 98-ல் அப்போஸ்தலன் யோவான் இவ்வாறு எழுதினார்: “உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.”—1 யோவான் 2:17, 28.

7. இன்று யெகோவாவின் சாட்சிகள் எவ்வாறு சகிப்புத்தன்மையைக் காட்டியிருக்கிறார்கள்?

7 இன்றும் யெகோவாவின் சாட்சிகள், கொடிய துன்புறுத்துதலை அனுபவித்திருக்கின்றனர். என்றபோதிலும், விடாமுயற்சியுடன் கிறிஸ்தவ ஊழியத்தில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் சகித்து நிலைத்திருப்பது வீணா? நிச்சயமாகவே இல்லை. ஏனெனில் இயேசு நமக்கு இவ்வாறு உறுதிகூறினார்: “முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.” அது, இந்தப் பழைய ஒழுங்குமுறையின் முடிவு வரையாகவோ அல்லது ஒருவருடைய மரணம் வரையாகவோ இருக்கலாம். மரித்த தம்முடைய உண்மையுள்ள ஊழியர்கள் எல்லாரையும் உயிர்த்தெழுதலில் யெகோவா நினைவுகூர்ந்து பலனளிப்பார்.மத்தேயு 24:13; எபிரெயர் 6:10.

8. கடந்தகால கிறிஸ்தவர்கள் சகித்து நிலைத்ததை நன்றியோடு மதிக்கிறோம் என்பதை நாம் எவ்வாறு காட்டலாம்?

8 மேலும், கடந்த கால உண்மைக் கிறிஸ்தவர்கள், தங்கள் சொந்த இரட்சிப்பில் மாத்திரமே குறியாய் இருக்கவில்லை. அவர்களுடைய முயற்சிகள் நமக்கும் பலனளித்திருக்கின்றன. எப்படி? “நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, . . . நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள்” என இயேசு கட்டளையிட்ட இந்த வேலையை செய்வதில் அவர்கள் சகித்து நிலைத்திருந்தனர். (மத்தேயு 28:19, 20) அதனால்தான் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி இப்போது நாம் கற்றுக்கொள்ள முடிந்திருக்கிறது. இதற்காக நாம் அவர்களுக்கு நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம். வாய்ப்பு இருக்கும் வரையில் நற்செய்தியை இன்னும் கேட்டிராத மற்றவர்களுக்குப் பிரசங்கிப்பதன்மூலம் நம் நன்றியுணர்வை காட்டலாம். என்றாலும், பிரசங்கிப்பது, சீஷராக்குவதற்கான முதற்படியாகவே இருக்கிறது.

‘உன் போதகத்துக்குக் கவனம் செலுத்து’

9. நம்பிக்கையுடன் நோக்கும் மனப்பான்மை, பைபிள் படிப்புகளைத் தொடங்க நமக்கு எவ்வாறு உதவி செய்யலாம்?

9 நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள ஊழிய பொறுப்பு, பிரசங்கிப்பதை மட்டுமல்லாமல், போதிப்பதையும் உட்படுத்துகிறது. தாம் கட்டளையிட்ட எல்லாவற்றையும் கைக்கொள்ளும்படி ஜனங்களுக்குப் போதிக்க வேண்டிய பொறுப்பை இயேசு நமக்கு அளித்தார். சில பிராந்தியங்களில், யெகோவாவைப் பற்றி கற்க விரும்புவோர் வெகு சிலரே என்பது உண்மைதான். ஆனால் அந்தப் பிராந்தியத்தைப் பற்றி எதிர்மறையான கருத்து கொண்டிருப்பது, பைபிள் படிப்புகளைத் தொடங்கும் நம் முயற்சிகளுக்குத் தடையாக இருக்கலாம். ஒரு பலனுமில்லை என சிலர் அழைத்த ஒரு பிராந்தியத்தில் பயனியராக இருப்பவர் ஈவட். ஆனால் வெளியூரிலிருந்து வந்த சாட்சிகள் அதே பிராந்தியத்தில் வீட்டு பைபிள் படிப்புகளை ஆரம்பித்தனர். அதைக் கவனித்த ஈவட்டும் அவர்களைப் போல அதிக நம்பிக்கையான மனப்பான்மையை வளர்த்துக் கொண்டபோதோ, பைபிளை படிக்க விரும்பிய ஜனங்களை கண்டுபிடித்தாள்.

10. பைபிள் போதகர்களாக நம் அடிப்படை கடமை என்ன?

10 கிறிஸ்தவர்கள் சிலர், பைபிள் படிப்பை நடத்த தங்களால் முடியாதென உணர்கின்றனர். இதனால் செய்திக்கு ஆர்வம் காட்டுவோரிடம் பைபிள் படிப்பு பற்றி சொல்ல ஒருவேளை தயங்கலாம். எல்லோரிடமும் ஒரே அளவு திறமைகள் இல்லை என்பது உண்மைதான். ஆனால், கடவுளுடைய வார்த்தையைப் போதிப்பதில் நாம் வெற்றிபெற, விசேஷ திறமை ஏதும் அவசியமில்லை. பைபிளின் தூய்மையான செய்தி வல்லமை வாய்ந்தது. மேலும், செம்மறியாட்டைப் போன்றவர்கள் உண்மையான மேய்ப்பனின் குரலை கேட்கையில் அதை அறிந்துகொள்வார்கள் என்று இயேசு சொன்னார். ஆகையால், நல்ல மேய்ப்பராகிய இயேசுவின் செய்தியை முடிந்தளவு தெளிவாக அறிவிப்பதே நம்முடைய வேலை.—யோவான் 10:4, 14.

11. பைபிள் படிப்பவருக்கு, நீங்கள் எவ்வாறு மிகச் சிறந்த முறையில் உதவலாம்?

11 இயேசுவின் செய்தியை மிகச் சிறந்த முறையில் நீங்கள் எவ்வாறு அறிவிக்கலாம்? முதலாவதாக, சிந்திக்கப்படும் விஷயத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்பதை நீங்கள் தெளிவாக தெரிந்துகொள்ளுங்கள். மற்றவர்களுக்கு போதிப்பதற்கு முன்பு நீங்கள்தாமே அதை சரியாக புரிந்துகொண்டிருக்க வேண்டும். மேலும் படிப்பு நடத்தும்போது கண்ணியமாக, அதேசமயத்தில் சிநேகப்பான்மையோடு இருங்கள். சிறுவர்கள் உட்பட, அனைவருமே இப்படிப்பட்ட சூழலில் அதிகம் கற்றுக்கொள்ள முடியும். மேலும், போதிப்பவர் அவர்களுக்கு மரியாதையையும் தயவையும் காட்டுகையில் கற்றுக்கொள்வது எளிது.—நீதிமொழிகள் 16:21.

12. நீங்கள் போதிப்பதை, படிப்பவர் புரிந்துகொள்கிறார் என்பதை நீங்கள் எவ்வாறு நிச்சயப்படுத்திக் கொள்ளலாம்?

12 படிப்பவர் அர்த்தம் விளங்காமல் ஏதோ மனப்பாடமாய் பதிலை ஒப்பிக்கும்படி நீங்கள் கடமைக்கு சத்தியத்தை போதிக்க விரும்பமாட்டீர்கள். கற்பதைப் புரிந்துகொள்ள அவருக்கு உதவிசெய்யுங்கள். படிப்பவரின் கல்வியறிவு, வாழ்க்கை அனுபவம், பைபிள் அறிவு ஆகியவற்றை பொறுத்தே அவரது புரிந்துகொள்ளும் சக்தியும் இருக்கும். ஆகவே ‘கொடுக்கப்பட்டிருக்கும் வசனங்களின் உட்கருத்தை அவர் புரிந்துகொள்கிறாரா?’ என்று உங்களை நீங்கள் கேட்டுக்கொள்ளலாம். வெறுமென ஆம் அல்லது இல்லை என்ற பதிலோடு முடித்துவிடாமல் அவருடைய மனதில் உள்ளதை சொல்ல வைக்கும் கேள்விகளைக் கேட்கலாம். (லூக்கா 9:18-20) படிப்போர் சிலர், போதிப்பவரிடம் கேள்வி கேட்கத் தயங்குகிறார்கள். அதனால் சரியாக புரிந்துகொள்ளாமலே தொடர்ந்து படிக்கலாம். ஆகையால் படிப்பவர் கேள்விகள் கேட்கும்படியும், எந்த குறிப்பு அவருக்கு சரியாக புரியவில்லையோ அதை தைரியமாக கேட்கும்படியும் உற்சாகப்படுத்துங்கள்.—மாற்கு 4:10; 9:32, 33.

13. படிப்பவர் போதகராகும்படி நீங்கள் அவருக்கு எவ்வாறு உதவி செய்யலாம்?

13 படிப்பவரும் எதிர்காலத்தில் ஒரு நல்ல போதகராக வேண்டும் என்பதே பைபிள் படிப்பு நடத்துவதன் முக்கிய நோக்கம். (கலாத்தியர் 6:6) இந்த நோக்கத்துடன், நீங்கள் படிப்பதில் ஒரு குறிப்பை, முதல் தடவை கேள்விப்படும் ஒருவருக்கு விளக்குவதுபோல், எளிய வார்த்தைகளில் சொல்லும்படி அவரைக் கேட்கலாம். பின்னால், ஊழியத்தில் பங்குகொள்ள அவர் தகுதிபெறும்போது, பிராந்தியத்தில் உங்களோடு வரும்படி அவரை நீங்கள் அழைக்கலாம். உங்களோடு சேர்ந்து ஊழியம் செய்வதில் அவருக்கு சங்கடம் எதுவும் இருக்காது. காலப்போக்கில், அவராகவே ஊழியத்திற்கு சங்கோஜமின்றி செல்ல தேவையான தைரியத்தையும் அனுபவத்தையும் இது அவருக்கு தரும்.

படிப்பவர் யெகோவாவின் நண்பராகும்படி உதவுங்கள்

14. போதிப்பவராக உங்கள் முக்கிய இலக்கு என்ன, அதை அடைய எது உங்களுக்கு உதவிசெய்யும்?

14 யெகோவாவின் நட்பை பெறும்படி படிப்பவருக்கு உதவி செய்வது, கிறிஸ்தவ போதகர் ஒவ்வொருவரின் முக்கிய நோக்கமாகும். இதை, உங்கள் வார்த்தைகளினால் மட்டுமல்லாமல், உங்கள் முன்மாதிரியாலும் நிறைவேற்றுவீர்கள். முன்மாதிரியின் மூலம் போதிப்பது, படிப்போரின் இருதயத்தில் ஆழமாகப் பதியும். வார்த்தைகளைவிட செயல்களே அதிக சக்திமிக்கவை. முக்கியமாய், ஒழுக்கப் பண்புகளைப் படிப்படியாக அறிவுறுத்தி வருகையிலும், படிப்பவரில் ஆர்வத்தைத் தூண்டுகையிலும் அவ்வாறுள்ளது. யெகோவாவுடன் நல்ல உறவில் இருப்பதே, உங்கள் வார்த்தைகளுக்கும் செயல்களுக்கும் காரணம் என்று அவர் புரிந்துகொண்டால், அவரும் அப்படிப்பட்ட உறவை வளர்க்க தூண்டப்படுவார்.

15. (அ) யெகோவாவைச் சேவிப்பதற்கு சரியான உள்நோக்கத்தை படிப்பவர் வளர்ப்பது ஏன் முக்கியம்? (ஆ) தொடர்ந்து ஆவிக்குரிய முன்னேற்றம் செய்யும்படி, படிப்பவருக்கு நீங்கள் எவ்வாறு உதவி செய்யலாம்?

15 அர்மகெதோனில் அழிந்துவிடக்கூடாது என்ற காரணத்திற்காக மட்டுமல்ல, அன்பினிமித்தமாகவும் யெகோவாவைச் சேவிக்க உங்கள் பைபிள் மாணாக்கர் முன்வர வேண்டும் என நீங்கள் விரும்புவீர்கள். இப்படிப்பட்ட தூய்மையான உள்நோக்கத்தை வளர்க்கும்படி அவருக்கு உதவுங்கள். அப்போதுதான், விசுவாச பரீட்சைகளை வெல்லும், நெருப்பினால் அழியாத பொருட்களைக் கொண்டு கட்டுவோராக இருப்பீர்கள். (1 கொரிந்தியர் 3:10-15) மாணாக்கருக்கு ஒரு தவறான உள்நோக்கம் இருந்தால், உதாரணமாக உங்களை அல்லது வேறொருவரை அபிமான தலைவர்போல் பின்பற்றினால், கிறிஸ்தவத்திற்கு எதிரான செல்வாக்குகளை எதிர்த்து நிற்பதற்கான பலமோ சரியானதைச் செய்யும்படியான தைரியமோ அவருக்கு இருக்காது. நிரந்தரமாக நீங்கள் அவருடைய போதகராக இருக்கப்போவதில்லை என்பதை நினைவில் வையுங்கள். எனவே, தினந்தோறும் கடவுளுடைய வார்த்தையை வாசித்து, சிந்தித்து வருவதன்மூலம் யெகோவாவோடு ஒரு நெருக்கமான உறவை வளர்த்துக்கொள்ளும்படி, படிப்பு நடத்தும்போதே அவரை நீங்கள் ஊக்குவிக்கலாம். இவ்வாறு செய்தால், நீங்கள் அவரோடு படிப்பை முடித்த பின்பும், “ஆரோக்கியகரமான வார்த்தைகளின் மாதிரியை,” பைபிளிலிருந்தும் பைபிள் சார்ந்த பிரசுரங்களிலிருந்தும் தொடர்ந்து கிரகித்துக்கொள்வார்.—2 தீமோத்தேயு 1:13, தி.மொ.

16. இருதயத்திலிருந்து ஜெபிக்கும்படி, படிப்பவருக்கு நீங்கள் எவ்வாறு போதிக்கலாம்?

16 மேலும், இருதயத்திலிருந்து ஜெபிக்கும்படி போதிப்பதன்மூலம், யெகோவாவிடம் நெருங்கி வரும்படி படிப்பவருக்கு நீங்கள் உதவிசெய்யலாம். இதை நீங்கள் எவ்வாறு செய்யலாம்? இயேசுவின் மாதிரி ஜெபத்தையும், அதோடுகூட சங்கீதம் போன்ற பைபிள் புத்தகங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ள இருதயப்பூர்வமான பல ஜெபங்களையும் அவருடைய கவனத்திற்கு நீங்கள் கொண்டுவரலாம். (சங்கீதங்கள் 17, 86, 143; மத்தேயு 6:9, 10) கூடுதலாக, படிப்பைத் தொடங்கும்போதும் முடிக்கும்போதும் நீங்கள் ஜெபிப்பதை உங்கள் மாணாக்கர் கேட்கையில், யெகோவாவிடம் உங்களுக்கு இருக்கும் உணர்ச்சிகளை அவர் உணருவார். இதனால், உங்கள் ஜெபங்கள் எப்போதும் உள்ளப்பூர்வமாகவும், எதார்த்தமாகவும் இருக்க வேண்டும். அதோடுகூட படபடப்பின்றி நிதானமாகவும், ஆவிக்குரிய முதிர்ச்சியை வெளிப்படுத்துவதாகவும் இருக்க வேண்டும்.

உங்கள் பிள்ளைகளை இரட்சிப்பதற்கு உழைத்தல்

17. இரட்சிப்பின் பாதையில் நிலைத்திருக்க, பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு எவ்வாறு உதவிசெய்யலாம்?

17 நம்முடைய குடும்ப அங்கத்தினர்களும் இரட்சிப்பை பெறவேண்டும் என்று அனைவரும் விரும்புகிறோம். கிறிஸ்தவ பெற்றோர்களையுடைய பிள்ளைகளில் அநேகர், உண்மையுள்ளோராயும் ‘விசுவாசத்தில் உறுதியாயும்’ இருக்கிறார்கள். எனினும், சிலருடைய இருதயங்களில் இன்னும் சத்தியம் ஆழமாய் வேரூன்றவில்லை. (1 பேதுரு 5:9; எபேசியர் 3:17; கொலோசெயர் 2:7) இந்த இளைஞர்கள் பலர், வாலிப பருவத்தை நெருங்குகையில், கிறிஸ்தவ வழியை விட்டு விலகிவிடுகின்றனர். நீங்கள் ஒரு பெற்றோராக இருந்தால், இத்தகைய விளைவுகளைத் தடுக்க என்ன செய்யலாம்? முதலாவதாக, அமைதலான குடும்ப சூழ்நிலையை உண்டாக்குவதற்கு நீங்கள் பிரயாசப்படலாம். ஒரு நல்ல குடும்ப வாழ்க்கை, அதிகாரத்திற்கு மரியாதை காண்பிப்பதற்கும், சரியான நெறிமுறைகளை உணர்ந்து போற்றுவதற்கும், மற்றவர்களுடன் சந்தோஷமான உறவுகளுக்கும் அஸ்திபாரத்தைப் போடுகிறது. (எபிரெயர் 12:9) இவ்வாறு, பாசத்தால் கட்டப்பட்ட குடும்பம், பிள்ளைகள் யெகோவாவுடன் நட்பை வளர்த்துக்கொள்ள உதவும். (சங்கீதம் 22:10) உறுதியான குடும்பங்கள் ஒன்றுபட்ட தொகுதியாக காரியங்களைச் செய்கிறார்கள். சொந்த காரியங்களுக்காக பயன்படுத்தக்கூடிய தங்கள் நேரத்தை பெற்றோர் அர்ப்பணம் செய்ய வேண்டியதாக இருந்தாலும் அதைச் செய்கிறார்கள். இவ்வாறு, உங்கள் பிள்ளைகள் வாழ்க்கையில் சரியான தீர்மானங்களைச் செய்ய உங்கள் முன்மாதிரியின்மூலம் கற்பிக்கலாம். பெற்றோரே உங்களிடமிருந்து உங்கள் பிள்ளைகளுக்கு மிக அதிகமாய்த் தேவைப்படுவது, பணமோ பொருளோ அல்ல நீங்களே—உங்கள் நேரமும், ஊக்கமும், அன்புமே அவர்களுக்குத் தேவை. இவற்றை நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்குக் கொடுக்கிறீர்களா?

18. என்ன வகையான கேள்விகளுக்குப் பதில்களைத் தங்கள் பிள்ளைகள் தீர்மானிக்க பெற்றோர் உதவிசெய்ய வேண்டும்?

18 கிறிஸ்தவ பெற்றோர், தங்கள் பிள்ளைகளும் தாங்களாகவே கிறிஸ்தவர்களாவார்கள் என்று ஒருபோதும் கருதிக்கொள்ளக்கூடாது. ஒரு மூப்பராகவும், ஐந்து பிள்ளைகளுக்குத் தகப்பனாகவும் இருக்கும் டானியல் இவ்வாறு சொல்கிறார்: “பிள்ளைகள் பள்ளியிலும் மற்ற இடங்களிலும் கற்றுக்கொள்ளும் காரியங்கள் அவர்கள் மனங்களில் சந்தேகம் எனும் களையை விதைத்துவிடுகின்றன. இவற்றைப் போக்க பெற்றோர் உதவ வேண்டும். இதற்காக நேரத்தை ஒதுக்க வேண்டும். பின்வரும் கேள்விகளுக்குப் பதில்களைக் கண்டுபிடிக்க, பொறுமையுடன் தங்கள் பிள்ளைகளுக்கு அவர்கள் உதவிசெய்ய வேண்டும்: ‘நாம் உண்மையில் முடிவு காலத்தில் வாழ்கிறோமா? ஒரே ஒரு உண்மை மதம்தான் இருக்கிறதா? நல்ல பள்ளித்தோழனாக தோன்றுகிற அவன் ஏன் நல்ல நண்பன் அல்ல? திருமணத்திற்கு முன்பாக பாலுறவு கொள்வது எப்போதும் தவறா?’” பெற்றோரே உங்கள் முயற்சிகளை யெகோவா ஆசீர்வதிக்கும்படி நீங்கள் நிச்சயமாய் எதிர்பார்க்கலாம்; ஏனெனில், உங்கள் பிள்ளைகளின் சுகநலத்தில் அவரும் அக்கறையுடையவராக இருக்கிறார்.

19. பெற்றோர்தாமே தங்கள் பிள்ளைகளுடன் படிப்பது ஏன் மிகச் சிறந்தது?

19 தங்கள் சொந்த பிள்ளைகளுடன் படிப்பதைக் குறித்ததில், பெற்றோர் சிலர் போதிய திறமையற்றவர்களாக உணரலாம். எனினும், நீங்கள் அவ்வாறு உணர வேண்டியதில்லை; ஏனெனில், உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல முறையில் போதிக்க உங்களைவிட வேறு யாராலும் முடியாது. (எபேசியர் 6:4) பிள்ளைகளுடன் படிப்பது, அவர்களுடைய இருதயத்திலும் மனதிலும் என்ன இருக்கிறது என்பதை நீங்கள் அறிந்துகொள்ள உதவும். அவர்கள் சொல்பவை இருதயப்பூர்வமாக இருக்கின்றனவா அல்லது மேலோட்டமாக இருக்கின்றனவா? கற்பதை அவர்கள் உண்மையில் நம்புகிறார்களா? யெகோவா அவர்களுக்கு மெய்யானவராக இருக்கிறாரா? உங்கள் பிள்ளைகளுடன் நீங்களே படித்தால்தான், இவற்றிற்கும் முக்கியமான இன்னும் பல கேள்விகளுக்கும் பதில்களை கண்டுபிடிக்கலாம்.—2 தீமோத்தேயு 1:5.

20. குடும்பப் படிப்பை மகிழ்ச்சியும் நன்மையும் தரும் ஒன்றாக எவ்வாறு பெற்றோர் செய்யலாம்?

20 உங்கள் குடும்பப் படிப்பு திட்டத்தை ஒருமுறை நீங்கள் தொடங்கிய பின்பு, அதை எவ்வாறு விடாமல் தொடர்ந்து நடத்தி வரலாம்? பருவ வயது மகளையும் மகனையும் உடைய ஜோஸப் என்ற மூப்பர் இவ்வாறு சொல்கிறார்: “பைபிள் படிப்புகள் எல்லாவற்றையும் போல், குடும்பப் படிப்பும், மகிழ்ச்சி தருபவையாக, எல்லாரும் ஆவலோடு எதிர்பார்க்கும் ஒன்றாக இருக்க வேண்டும். ஆகவே எங்கள் குடும்பத்தில் நேரத்தைக் குறித்ததில் அதிக கண்டிப்பாக இருக்க மாட்டோம். எங்கள் படிப்பு ஒரு மணி நேரம் நீடித்திருக்கலாம், ஆனால், எப்போதாவது, எங்களுக்குப் பத்து நிமிடம் மாத்திரமே இருந்தாலும், அப்போதும் நாங்கள் படிக்கிறோம். என்னுடைய பைபிள் கதை புத்தகத்திலிருந்து a காட்சிகளை நடிப்பதே எங்கள் குடும்ப படிப்பில் பிள்ளைகளுக்கு ரொம்பப் பிடித்த ஐட்டம். இது விஷயங்களை மனதில் ஆழமாக பதிய வைக்கிறது, சரியாக புரிந்துகொள்ளவும் உதவுகிறது. எத்தனை பாராக்களை படித்து முடிக்கிறோம் என்பதைவிட இதுவே மிக முக்கியம்.”

21. பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு எப்போது போதிக்கலாம்?

21 படிப்பு நேரத்தில் மட்டும்தான் உங்கள் பிள்ளைகளுக்கு போதிக்க வேண்டும் என்பதில்லை. (உபாகமம் 6:5-7) தொடக்கத்தில் குறிப்பிடப்பட்ட தாய்லாந்தில் இருக்கும் அந்த சாட்சி இவ்வாறு சொல்கிறார்: “ஊழியத்துக்காக எங்கள் சபை பிராந்தியத்தில் தூர இடங்களுக்கு எங்களை சைக்கிளில் அப்பா அழைத்துச் சென்றது இப்போதும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. எங்கள் பெற்றோரின் சிறந்த முன்மாதிரியும், எல்லா சந்தர்ப்பத்திலும் எங்களுக்கு அவர்கள் போதித்ததுமே, முழுநேர ஊழியத்தை செய்ய தீர்மானிக்க எங்களுக்கு உதவிசெய்தது. அவர் சொல்லிக்கொடுத்த அனைத்தும் என் மனதில் அவ்வளவு ஆழமாக பதிந்திருப்பதால்தான் நான் இன்னும் இந்த ஒதுக்குப்புறமான கிராமத்தில் ஊழியம் செய்கிறேன்!”

22. நீங்கள் ‘உங்களுக்கும் உங்கள் போதகத்துக்கும் இடைவிடாமல் கவனம் செலுத்துவதால்’ என்ன பலன் உண்டாகும்?

22 சீக்கிரத்தில் ஒரு நாள், சரியான நேரத்தில், இந்த ஒழுங்குமுறையின்மீது கடவுளுடைய நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுவதற்கு இயேசு வருவார். அந்தப் பெரிய சம்பவம் சர்வலோக சரித்திரத்தில் விரைவில் சம்பவிக்கும். ஆனால் யெகோவாவின் உண்மையுள்ள ஊழியர்கள், நித்திய இரட்சிப்பை மனதில் வைத்து, விடாது தொடர்ந்து அவரைச் சேவிப்பார்கள். நீங்கள் உங்கள் பிள்ளைகளோடும் பைபிள் படிப்போரோடும்கூட அவர்களில் ஒருவராக இருக்க விரும்புகிறீர்களா? அப்படியானால், இதை நினைவில் வையுங்கள்: “உனக்கும் உன் போதகத்துக்கும் இடைவிடாமல் கவனம் செலுத்து, இந்தக் காரியங்களில் நிலைத்திரு. இதைச் செய்வதன்மூலம் உன்னையும் உனக்குச் செவிகொடுத்துக் கேட்போரையும் இரட்சித்துக்கொள்வாய்.”—1 தீமோத்தேயு 4:16, NW.

[அடிக்குறிப்புகள்]

a உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இன்டியா பிரசுரித்தது.

உங்களால் விளக்க முடியுமா?

• கடவுளுடைய நியாயத்தீர்ப்பின் காலத்தை நாம் திட்டமாக அறியாவிட்டாலும், நம் மனப்பான்மை என்னவாக இருக்க வேண்டும்?

• என்ன வழிகளில் நாம் ‘நம் போதகத்துக்குக் கவனம் செலுத்தலாம்’?

• படிப்பவர் யெகோவாவின் நண்பராகும்படி நீங்கள் எவ்வாறு உதவலாம்?

• பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்குப் போதிக்க நேரம் ஒதுக்குவது ஏன் முக்கியம்?

[கேள்விகள்]

[கேள்விகள்]

[பக்கம் 15-ன் படம்]

கண்ணியமிக்க ஆனால் சிநேகப்பான்மையுமான சூழ்நிலை கற்பதை சிறப்பாக்குகிறது

[பக்கம் 18-ன் படம்]

இரண்டு வேசிகளுக்கு சாலொமோன் தீர்ப்பு வழங்குவது போன்ற பைபிள் கதைகளை நடித்துக் காண்பிப்பது, குடும்பப் படிப்புகளை சுவாரஸ்யமாக்குகிறது