பரிபூரண வாழ்க்கை கனவல்ல!
பரிபூரண வாழ்க்கை கனவல்ல!
முழு உலகமே பரிபூரணமாக இருந்தால் எப்படியிருக்கும்? குற்றச்செயல், போதைப்பொருள் துஷ்பிரயோகம், பஞ்சம், வறுமை, அநீதி என எதுவுமே இல்லாத மனித சமுதாயம் அது. உள்ளத்திலும்சரி, உடலிலும்சரி எல்லாருக்கும் பூரண சுகம். கவலைக்கு இடமில்லை, ஏனென்றால் மரணமும் இருக்காது. இப்படிப்பட்ட உலகிற்கு ஏங்குவது நியாயமானதா?
மனிதன் விஞ்ஞானத்திலும் தொழில்நுட்பத்திலும் பல சாதனைகளை படைத்திருப்பது உண்மையே. இருந்தாலும், அவன் தன் அறிவினால் அல்லது திறமையால் சமாதானமும் சந்தோஷமும் நிறைந்த பரிபூரண உலகை உருவாக்க முடியாது என்பதே பெரும்பான்மையரின் கருத்து. இருப்பினும், நிலைமைகளை மேம்படுத்தவும் குறைகளை நீக்கவுமே மனிதன் விரும்புகிறான், அதுவே அவன் இயல்பு என்பதில் சந்தேகமே இல்லை. அதேசமயம் அவ்வாறு விரும்பி மனக்கோட்டை கட்டுவதால் மட்டுமே, வீடில்லாதவர்களின் கவலையும் வறுமையில் வாடுபவர்களின் பசியும் தீர்ந்துவிடாது, துயரத்திலிருந்து மீளத் துடிக்கும் ஊனமுற்றோருக்கும் வியாதியஸ்தருக்கும் பரிகாரம் அளிக்காது. எனவே மனிதனால் பரிபூரண உலகை உருவாக்க முடியாது. ஆனாலும் பரிபூரண உலகம் வெகு சீக்கிரத்தில் வரப்போகிறது! இன்று கடுந்துயரமும், அட்டூழியங்களும் இருந்தாலும் இதை நிச்சயம் நம்பலாம். ஆம், நம்புவதற்கு நியாயமான காரணங்கள் இருக்கின்றன.
பரிபூரண வாழ்க்கை வாழ்ந்தவர் என சொன்னாலே சட்டென உங்களுக்கு இயேசு கிறிஸ்துதான் நினைவுக்கு வருவார். பூமியில் பரிபூரண வாழ்க்கை வாழ்ந்தவர் அவர் மட்டுமல்ல. கடவுளுடைய சாயலில் படைக்கப்பட்ட ஆதாமும் ஏவாளும்கூட பரதீஸில் பரிபூரண வாழ்க்கையை அனுபவித்து மகிழ்ந்தனர். இருந்தாலும், பரலோக தகப்பனுக்கு எதிராக கலகம் செய்ததால் அந்த அருமையான வாழ்க்கையை இழந்தனர். (ஆதியாகமம் 3:1-6) இருப்பினும், என்றென்றும் வாழும் விருப்பம் மனிதரின் மனதில் தொடர்ந்து இருந்துவருகிறது. பிரசங்கி 3:11 இதை ஆமோதிக்கிறது: “அவர் [கடவுள்] சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்; உலகத்தையும் [“நித்தியகால நினைவையும்,” NW] அவர்கள் உள்ளத்திலே வைத்திருக்கிறார்; ஆதலால் தேவன் ஆதிமுதல் அந்தம் மட்டும் செய்துவரும் கிரியையை மனுஷன் கண்டுபிடியான்.”
அபூரணமும் பாவமும் மனிதவர்க்கத்தை “மாயைக்கு[ம்]” “அழிவுக்குரிய அடிமைத்தனத்திற்கும்”தான் வழிநடத்தியிருக்கிறது. இருப்பினும், அப்போஸ்தலன் பவுலின் வார்த்தைகள் ஆறுதலளிக்கின்றன: “தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்குச் சிருஷ்டியானது மிகுந்த ஆவலோடே காத்துக்கொண்டிருக்கிறது. ரோமர் 8:19-21) பரிபூரண வாழ்க்கையை நமக்குத் தருவதற்காகவே இயேசு கிறிஸ்துவின் மூலம் கடவுள் ஏற்பாடுகளை செய்திருக்கிறார் என பைபிள் சொல்கிறது.—யோவான் 3:16; 17:3.
அதேனென்றால் சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும் என்கிற நம்பிக்கையோடே, அந்தச் சிருஷ்டியானது சுய இஷ்டத்தினாலே அல்ல, கீழ்ப்படுத்தினவராலேயே மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது.” (எதிர்காலத்தில் இப்படிப்பட்ட பரிபூரண வாழ்க்கையை பெறும் அருமையான நம்பிக்கை இருப்பதோடுகூட, இப்போதும் ஆன்மீக ரீதியில் முன்னேற நம் அனைவருக்கும் திறமை இருக்கிறது. அந்த முன்னேற்றத்தை இப்போது வெளிக்காட்டவும் முடியும்.
அளவுக்குமீறி எதிர்பார்க்காதீர்கள்
பரிபூரணமாய் இருப்பதன் முக்கியத்துவத்தை இயேசு கிறிஸ்து ஒருமுறை வலியுறுத்திக் கூறினார். அவர் சொன்னார்: “பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்.” (மத்தேயு 5:48) அப்படியென்றால் இப்போதே நாம் குறைவற்றவர்களாய் இருக்க வேண்டும் என இயேசு எதிர்பார்த்தாரா? இல்லை. நாம் அடிக்கடி தவறு செய்பவர்கள் என்றாலும், உதாரகுணம், தயவு, அன்பு போன்ற குணங்களை கஷ்டப்பட்டு வளர்க்க வேண்டியது அவசியம். இயேசுவின் அப்போஸ்தலர்களில் ஒருவர் இவ்வாறு எழுதினார்: “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். நாம் பாவஞ்செய்யவில்லை என்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது.”—1 யோவான் 1:9, 10.
இருந்தாலும், நம்மையும் மற்றவர்களையும் கருதும் விதத்தையும் நடத்தும் முறையையும் மாற்றிக்கொண்டு, மிதமிஞ்சிய எதிர்பார்ப்பை தவிர்க்கலாம். சமநிலையோடும் நியாயமாகவும் இருப்பதற்கு கடவுளுடைய வார்த்தையாகிய பைபிள் தரும் ஆலோசனைகளைவிட சிறந்தவை வேறு ஏதேனும் உண்டா? சந்தோஷமும் நிதானமும் இருந்தால், நம்முடன் வேலை செய்வோரோடும்சரி, மணத்துணைவரோடும்சரி, பெற்றோரோடும்/பிள்ளைகளோடும்சரி ஒத்துப்போவது சுலபம். அப்போஸ்தலன் பவுல் கிறிஸ்தவர்களுக்கு இவ்வாறு அறிவுரை கூறினார்: “கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன். உங்கள் சாந்தகுணம் [“நியாயத்தன்மை,” NW] எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக.”—பிலிப்பியர் 4:4, 5.
நியாயத்தன்மையின் நன்மைகள்
பரிபூரணவாதத்தால் உங்களையே வேதனைப்படுத்திக்கொண்டும் உங்களுக்கே தோல்வியை வரவழைத்துக்கொண்டும் இருப்பதற்கு பதிலாக நியாயத்தன்மையோடு நடந்துகொண்டால், உங்களுக்கும் நன்மை, மற்றவர்களுக்கும் நன்மை. உங்களது உண்மையான திறமை என்ன என்பதை அறிந்து செயல்பட வேண்டும். திறமைக்கு மிஞ்சியதை செய்ய முற்படாமல் எதார்த்தமாகவும் நியாயமாகவும் திட்டமிட வேண்டும். பூமியில் வாழ்ந்து நமக்கும் மற்றவர்களுக்கும் நன்மைதரும் பிரயோஜனமான வேலையில் திருப்தி அடையவே கடவுள் நம்மை படைத்தார்.—ஆதியாகமம் 2:7-9.
உங்கள் திறமைக்கு மிஞ்சியதையே செய்ய முற்பட்டிருக்கிறீர்களா? கடவுளிடம் ஜெபியுங்கள். கடவுளுடைய தயவு உங்களுக்கு பேருதவியாக இருக்கும். நாம் அபூரணர்கள் என்பது யெகோவாவுக்கு நன்றாகவே தெரியுமாதலால், பிரியப்படுத்த முடியாதளவுக்கு அவர் நம்மிடம் அளவுக்கு அதிகமாக எதிர்பார்ப்பதில்லை. “தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார். நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்; நாம் மண்ணென்று நினைவுகூருகிறார்” என சங்கீதக்காரன் நமக்கு உறுதியளிக்கிறார். (சங்கீதம் 103:13, 14) மனிதரிடம் இந்தளவு இரக்கத்தோடு நடந்துகொள்ளும் கடவுளிடம் நாம் எந்தளவுக்கு நன்றியுள்ளவர்களாய் இருக்க வேண்டும்! நம் குறைகளை அறிந்திருந்தாலும் பாசத்திற்குரிய பிள்ளைகளாக அவரது கண்மணியைப் போல் கருதுகிறார்
பரிபூரணவாதத்தை தவிர்த்து, பகுத்தறிவோடும் சமநிலையோடும் இருப்பது எவ்வளவு நல்லது! கடவுளுடைய ராஜ்யத்தில் பரிபூரண வாழ்க்கையை யெகோவா நமக்கு உறுதியளித்திருக்கிறார். அதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. அப்படியானால், பரிபூரண வாழ்க்கை என்பது என்ன?
பரிபூரணவாதத்தைவிட பரிபூரண வாழ்க்கை மேம்பட்டது
பரிபூரண வாழ்க்கை என்பது பரிபூரணவாதியாக இருப்பதை அர்த்தப்படுத்தாது. கடவுளுடைய ராஜ்ய ஆட்சியில் பரதீஸிய பூமியில் வாழப்போகிறவர்கள் நிச்சயமாகவே மிதமிஞ்சி எதிர்பார்க்கும் சுய-நீதிமான்களாக இருக்க மாட்டார்கள். மிகுந்த உபத்திரவத்தில் தப்பிப்பிழைப்பதற்கு இயேசுவின் கிரய பலியில் முழுமையாய் நம்பிக்கை வைக்க வேண்டும். அப்போஸ்தலன் யோவான் விவரித்தபடி, உலகம் முழுவதிலுமுள்ள திரள் கூட்டத்தினர் இதை மதித்துப் போற்றுகின்றனர்: “இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக.” (வெளிப்படுத்துதல் 7:9, 10, 14) நெருங்கிவரும் மிகுந்த உபத்திரவத்தைத் தப்பிப்பிழைப்பவர்கள், தங்களுக்காகவும் மற்றவர்களுக்காகவும் உயிரையே கொடுத்த கிறிஸ்துவுக்கு அதிக நன்றியோடு இருப்பார்கள். அவருடைய அன்பான பலியே அவர்களை அபூரணத்திலிருந்தும், பலவீனங்களிலிருந்தும் முற்றிலும் விடுவிக்கப்போகிறது.—யோவான் 3:16; ரோமர் 8:21, 22.
அப்படியானால், பரிபூரண வாழ்க்கை எப்படி இருக்கும்? போட்டி, புகழுக்கான ஆசை ஆகியவை மறைந்து, அன்பும் தயவும் குடிகொள்ளும்; வீண் கவலைகள் பறந்துவிடும்; தாழ்வு மனப்பான்மைக்கு இடமிருக்காது. இதனால் வாழ்க்கை இனிக்கும். இப்படிப்பட்ட பரிபூரண வாழ்க்கையில் சலிப்போ சோர்வோ இருக்காது. பரதீஸிய வாழ்க்கையைப் பற்றி பைபிள் எல்லாவித நுணுக்கமான விவரங்களையும் அளிக்கவில்லை என்பது உண்மைதான்; ஆனாலும், எப்படிப்பட்ட வாழ்க்கையை எதிர்பார்க்கலாம் என்பதை விவரிக்கிறது: “வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள், திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைப் புசிப்பார்கள். அவர்கள் கட்டுகிறதும், வேறொருவர் குடியிருக்கிறதும், அவர்கள் நாட்டுகிறதும், வேறொருவர் கனிபுசிக்கிறதுமாயிருப்பதில்லை; ஏனெனில் விருட்சத்தின் நாட்களைப்போல என் ஜனத்தின் நாட்களிருக்கும்; நான் தெரிந்து கொண்டவர்கள் தங்கள் கைகளின் கிரியைகளை நெடுநாளாய் அநுபவிப்பார்கள். அவர்கள் விருதாவாக உழைப்பதில்லை; அவர்கள் துன்பமுண்டாகப் பிள்ளைகளைப் பெறுவதுமில்லை.”—ஏசாயா 65:21-23.
பொழுதுபோக்க வழி இருக்குமா, கடைகண்ணி இருக்குமா, புதுப்புது தொழில்நுட்பம் இருக்குமா, போக்குவரத்து வசதி இருக்குமா என யோசிப்பதற்கு பதிலாக பின்வரும் வசனம் நிஜமாவதை கற்பனை செய்து பாருங்கள்: “ஓனாயும் ஆட்டுக்குட்டியும் ஒருமித்து மேயும்; சிங்கம் மாட்டைப்போல வைக்கோலைத் தின்னும்; புழுதி சர்ப்பத்துக்கு இரையாகும்; என் பரிசுத்த பர்வதமெங்கும் அவைகள் தீங்குசெய்வதுமில்லை, கேடுண்டாக்குவதுமில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்.” (ஏசாயா 65:25) இன்று தேடினாலும் கிடைக்காத குறைவற்ற வாழ்க்கை அது! அங்கு வாழப் போகிறவர்களில் நீங்களும் ஒருவரா? கவலையே வேண்டாம், அன்புள்ள பரலோக தகப்பன் உங்களையும் உங்கள் முழு குடும்பத்தையும் பார்த்துக்கொள்வார் என்பது உறுதி. “கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்.”—சங்கீதம் 37:4.
ஆகவே, பரிபூரண வாழ்க்கை என்பது கனவல்ல. மனிதவர்க்கத்திற்கான யெகோவாவின் அன்பான நோக்கம் முற்றுமுழுக்க நிறைவேறும். கடவுளுடைய புதிய உலகில் என்றென்றும் பரிபூரணமாக வாழப்போகிறவர்களில் உங்கள் முழு குடும்பமும் இருக்கலாமே! “நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்” என பைபிள் முன்னறிவிக்கிறது.—சங்கீதம் 37:29.
[பக்கம் 6-ன் படம்]
மிதமிஞ்சி எதிர்பார்ப்பதை தவிர்த்து நம்மையும் மற்றவர்களையும் பற்றிய கருத்தை மாற்றிக்கொள்ளலாம்
[பக்கம் 7-ன் படம்]
நீதியும் சமாதானமும் நிலவும் பரதீஸில் இப்போதே வாழ்வதைப் போல் ஏன் கற்பனை செய்யக்கூடாது?