கிறிஸ்தவ மேய்ப்பர்களே, “உங்கள் இதயக் கதவுகளைத் திறந்து வையுங்கள்”!
கிறிஸ்தவ மேய்ப்பர்களே, “உங்கள் இதயக் கதவுகளைத் திறந்து வையுங்கள்”!
“யெகோவா என் மேய்ப்பர், எனக்கு ஒன்றும் குறைவில்லை.” தாவீது தன் கடவுள் மேல் வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கையை இந்த வார்த்தைகள் எவ்வளவு அழகாய் படம்பிடித்து காட்டுகின்றன! ஆவிக்குரிய கருத்தில் யெகோவா அவரை ‘புல்லுள்ள இடங்களிலும், தண்ணீர்களண்டையிலும் வழிநடத்தி, நீதியின் பாதைகளில் நடத்தினார்.’ எதிரிகள் தாவீதை சூழ்ந்துகொண்டபோதிலும் அவருக்கு உதவியும் உற்சாகமும் கிடைத்தன. அதனாலேயே அவர் யெகோவாவிடம் இவ்வாறு கூறினார்: “பொல்லாங்குக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடுகூட இருக்கிறீர்.” தாவீதுக்கு இவ்வளவு உன்னதமான மேய்ப்பர் இருந்த காரணத்தாலேயே அவர் ‘யெகோவாவின் வீட்டிலே சதாகாலமும் நிலைத்திருக்க’ தீர்மானமாய் இருந்தார்.—சங்கீதம் 23:1-6, தி.மொ.
கடவுளுடைய ஒரேபேறான குமாரனும்கூட யெகோவாவின் அன்பையும் கரிசனையையும் அனுபவித்து மகிழ்ந்தார். அவர் பூமியில் இருக்கையில் தம் சீஷர்களிடமும் இதேபோன்ற அன்பை அப்படியே காண்பித்தார். அதனால்தான் பைபிள் அவரை, “நல்ல மேய்ப்பன்,” ‘பெரிய மேய்ப்பர்,’ “பிரதான மேய்ப்பர்” என்றெல்லாம் அழைக்கிறது.—யோவான் 10:11; எபிரேயர் 13:20; 1 பேதுரு 5:2-4.
யெகோவாவும் இயேசு கிறிஸ்துவும் தங்களை நேசிப்பவர்களை இன்றும் மேய்த்து வருகிறார்கள். அவர்கள் சபைகளை மேய்ப்பதில் ஒரு வழி, ஒவ்வொரு சபையிலும் மூப்பர்கள் என்ற அன்பான ஏற்பாட்டை செய்திருப்பதன் மூலமாகும். இப்படிப்பட்ட மூப்பர்களிடமே பவுல் பின்வருமாறு கூறினார்: “ஆகையால், உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய [“தம் குமாரனுடைய,” NW] சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்த ஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள்.”—அப்போஸ்தலர் 20:28.
யெகோவாவையும் கிறிஸ்து இயேசுவையும் போலவே அருமையான விதத்தில் மந்தையை மேய்ப்பது சுலபமான காரியமல்ல என்பது உண்மையே. ஆனால் முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு அது இன்று அவசியமாக இருக்கிறது. ஏனெனில், கடந்த மூன்று ஆண்டுகளுக்குள் பத்து லட்சத்திற்கும் அதிகமான சாட்சிகள் முழுக்காட்டுதல் பெற்றிருக்கிறார்கள்! அவர்களைப் பற்றி கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். பல வருடம் ஊழியம் செய்வதால் கிடைக்கும் பலமான ஆவிக்குரிய அஸ்திவாரம் இந்தப் புதியவர்களிடம் இல்லை. அதோடு, சிறு பிள்ளைகளும் வாலிபர்களும்கூட சபைகளில் இருக்கிறார்களே! இவர்களுக்கு பெற்றோரின் கவனிப்பு மட்டுமல்ல சபையிலுள்ள மூப்பர்களின் ஆதரவும் தேவை.
ஏன், ஒவ்வொரு கிறிஸ்தவருமே இந்த உலகத்திலிருந்து பல பிரச்சினைகளை எதிர்ப்படுகிறார். நண்பர்கள் தரும் தொல்லை அதில் ஒன்று மட்டுமே! சுயநலப்போக்கில் அதிகமதிகமாக மூழ்கிவரும் இந்த உலகம், தன்னோடு சேர்ந்துகொள்ளும்படி கிறிஸ்தவர்களையும் கவர்ந்திழுக்க முயலுகிறது. அதை எதிர்க்க அனைவருமே கடினமாக போராடுகிறார்கள். சில நாடுகளில் தங்கள் பிரசங்க வேலைக்கு நல்ல பலன்கள் கிடைக்காததால் ராஜ்யத்தைப் பிரசங்கிப்பவர்கள் சோர்ந்துபோகலாம். அதோடுகூட, அநேக பிரஸ்தாபிகளின் உடல்நிலையும் மோசமாகிக்கொண்டே போகிறது. மற்றவர்களுக்கோ பணக் கஷ்டம் ஏற்படுகிறது. இதனால் ராஜ்யத்தை முதலாவது தேட வேண்டும் என்ற அவர்களுடைய ஆர்வம் தணிந்துபோகிறது. உண்மையைச் சொன்னால், நம் அனைவருக்குமே அன்பான மேய்ப்பர்களின் உதவி தேவை, அதைப் பெற நாம் அனைவருமே தகுதியானவர்களும்கூட. நீண்டகாலம் சத்தியத்தில் இருப்பவர்கள் மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன? இல்லையே! அவர்களுக்கும் இந்த உதவி தேவை.
சரியான உள்நோக்கம் அவசியம்
“இதயக் கதவுகளைத் திறந்து வையுங்கள்” என்ற அறிவுரை முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்கு கொடுக்கப்பட்டது. (2 கொரிந்தியர் 6:11-13, பொ.மொ.) விசேஷமாக, மேய்ப்பர்களாய் சேவிக்கையில் கிறிஸ்தவ மூப்பர்கள் இந்த ஆலோசனையை பின்பற்றுவது மிக அவசியம். அதை அவர்கள் எவ்வாறு செய்யலாம்? எதிர்காலத்தில் மேய்ப்பர்கள் ஆகப்போகிற உதவி ஊழியர்களும்கூட இதை எப்படி செய்ய முடியும்?
கிறிஸ்தவ மூப்பர்கள் மந்தைக்கு ஆசீர்வாதமாக இருக்கவேண்டும் என்றால் அவர்கள் மேய்க்கும் வேலையை வெறுமனே கடமைக்காக செய்தால் போதாது. அவர்களுக்கு சரியான உள்நோக்கமும் இருக்கவேண்டும். அதனால்தான் பேதுரு அவர்களுக்கு பின்வரும் அறிவுரை தருகிறார்: ‘உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாயும், அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, உற்சாக மனதோடும்’ மேய்த்திடுங்கள். (1 பேதுரு 5:2) ஆகவே, மேய்ப்பர்கள் தங்கள் வேலையை திறமையுடன் செய்ய வேண்டுமென்றால் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற மனப்பூர்வமான விருப்பமும் உற்சாக மனதும் அவர்களுக்கு தேவை. (யோவான் 21:15-17) அதாவது ஆடுகளின் தேவைகளைக் கண்டுணர்ந்து, உடனே உதவிட வேண்டும். மேலுமாக, மற்றவர்களோடு உள்ள உறவுகளில் அருமையான கிறிஸ்தவ குணங்களையும் அவர்கள் வெளிக்காட்ட வேண்டும். இந்தக் குணங்களையே கடவுளுடைய ஆவியின் கனிகள் என பைபிள் அழைக்கிறது.—கலாத்தியர் 5:22, 23.
மேய்க்கும் வேலை என்றால் சில சமயங்களில் சகோதரர்களுடைய வீட்டிற்கு சென்று சந்திப்பதும் அவசியம். a ஆனால், ‘இதயக் கதவுகளை திறந்து வைக்கும்’ மூப்பர்கள் எல்லா சமயங்களிலும் தங்களையே மனமுவந்து அளிக்கிறார்கள். அதாவது, எப்போதாவது ஒருசமயம் மேய்க்கும் சந்திப்பு செய்வதோடு அவர்கள் நிறுத்திக்கொள்வதில்லை. மந்தையில் உள்ளவர்களை மேய்ப்பதற்கு கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் முழுமையாக பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
மேய்ப்பர்களாக மற்றவர்களை பயிற்றுவியுங்கள்
“சபையைக் கண்காணிக்கும் பொறுப்பை நாடுகிற” ஒரு சகோதரருக்கு என்ன வயதாக இருந்தாலும் அவர் “மேன்மையானதொரு பணியை விரும்புகிறார்.” (1 தீமோத்தேயு 3:1, பொ.மொ.) அநேக உதவி ஊழியர்கள், கூடுதலான பொறுப்புகளைப் பெற வாஞ்சையை வெளிக்காட்டியிருக்கிறார்கள். ஆகவே ‘சபையைக் கண்காணிக்கும் பொறுப்பை நாடும்’ அதிமுக்கியமான இந்த படியை எடுக்க மூப்பர்கள் இவர்களுக்கு சந்தோஷமாக உதவுகிறார்கள். அதாவது, திறம்பட்ட மேய்ப்பர்களாவதற்கு பயிற்சி கொடுக்கிறார்கள்.
யெகோவாவின் கிறிஸ்தவ சபையிலுள்ளவர்கள் அவருடைய உயர்ந்த தராதரங்களை அச்சு பிசகாமல் பின்பற்றுவதால், எசேக்கியேல் 34:2-6-ல் விவரிக்கப்பட்டுள்ளதைப் போன்ற போலி மேய்ப்பர்களால் சபைக்கு தீங்கு ஏற்படுவதில்லை. அந்தப் போலி மேய்ப்பர்கள் யெகோவாவின் பார்வையில் அருவருப்பானவர்களாக இருந்தனர். ஏனெனில் அவர்கள் மந்தையை போஷிப்பதற்கு பதிலாக தங்களையே நன்றாய் போஷித்துக் கொண்டனர். அவர்கள் வியாதிப்பட்டதை குணமாக்கவில்லை, துன்பப்பட்டதை பலப்படுத்தவில்லை, எலும்பு முறிந்ததை காயங்கட்டவில்லை, காணாமல்போனதை அல்லது துரத்துண்டதை திருப்பிக் கொண்டுவரவும் இல்லை. அவர்கள் மேய்ப்பர்களாக அல்ல, ஓநாய்களைப் போலத்தான் இருந்தார்கள். அவர்கள் ஆடுகளை பயங்கரமாக ஒடுக்கினார்கள். ஆடுகளை கவனிப்பார் இல்லாததால் அவை சிதறுண்டு போயின. அவற்றை தேடுவார் இல்லாததால் அவை நோக்கமற்று அலைந்து திரிந்தன.—எரேமியா 23:1, 2; நாகூம் 3:18; மத்தேயு 9:36.
கிறிஸ்தவ மேய்ப்பர்களோ அந்தப் போலி மேய்ப்பர்களைப் போலல்ல, அவர்கள் யெகோவாவை அப்படியே பின்பற்றுகிறார்கள். ஆவிக்குரிய ‘புல்லுள்ள இடங்களிலும், தண்ணீர்களண்டையிலும்’ ஆடுகளை வழிநடத்திச் செல்கிறார்கள். யெகோவாவின் வார்த்தையை தெளிவாக புரிந்துகொள்ளவும் அதைத் தங்கள் வாழ்க்கையில் பொருத்தவும் உதவுவதன் மூலம் அவற்றை ‘நீதியின் பாதைகளில் நடத்திச்செல்ல’ முயலுகிறார்கள். அவர்கள் “கற்பிக்கும் ஆற்றல்” உடையோராய் இருப்பதால் இதை மிகவும் நன்றாகவே செய்ய முடிகிறது.—1 தீமோத்தேயு 3:2, பொ.மொ.
மூப்பர்கள், சபை கூட்டங்களில் மேடையிலிருந்தே அதிகமாக போதித்தாலும் தனிப்பட்ட விதமாகவும் போதிக்கிறார்கள். சில மூப்பர்கள் தனி நபர்களுக்கு போதிப்பதில் அதிக திறம்பட்டவர்கள், மற்றவர்களோ மேடைப் பேச்சுகள் கொடுப்பதில் வல்லவர்கள். இந்த இரண்டு விதமான போதிக்கும் கலைகளில் ஏதாவது ஒன்றில் ஒருவர் குறைவுபடுவதால் போதகராக இருக்கவே அவருக்கு தகுதியில்லை என்று அர்த்தமாகிவிடாது. மேய்க்கும் வேலை உட்பட கிடைக்கும் எல்லா சந்தர்ப்பங்களையும் பயன்படுத்தி மூப்பர்கள் போதிக்கிறார்கள். முன்னதாகவே ஏற்பாடு செய்யப்பட்ட மேய்ப்பு சந்திப்புகள் இந்த மேய்க்கும் வேலையில் ஒரு சிறு பகுதியே. ஆனால் மற்ற சமயங்களிலும்கூட இந்த மேய்க்கும் வேலையை அவர்களால் நல்லவிதமாக செய்யமுடியும். இதுவும்கூட அதிக நன்மையில் விளைவடைகிறது.
மேய்ப்பர்களும் போதகர்களும் —24 மணிநேரமும்
ஒரு டாக்டர் கைதேர்ந்தவராய் இருக்க அவருக்கு அறிவும் அனுபவமும் அவசியம். ஆனால் பரிவு, தயவு, இரக்கம், கரிசனை போன்ற குணங்களும் அவருக்கு இருந்தால் அவரிடம் வரும் நோயாளிகள் அதிக சந்தோஷப்படுவார்கள் அல்லவா? இந்தக் குணங்கள் அவருடைய ஆள்தன்மையின் பாகமாயிருக்க வேண்டும். அதைப்போலவே, ஒருவர் நல்ல மேய்ப்பராகவும் போதகராகவும் இருக்க இதே போன்ற குணங்கள் அவசியம். அவை அவருடைய இரத்தத்தில் ஊறிப்போயிருக்க வேண்டும். ஒரு திறம்பட்ட போதகர், தேவை ஏற்படும்போதெல்லாம் போதிக்க தயாராய் இருக்கிறார். “ஏற்றகாலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது!” என நீதிமொழிகள் 15:23 சொல்வது முற்றிலும் உண்மையே! அந்த ‘ஏற்றகாலம்’ எப்போது வேண்டுமானாலும் வரலாம். மேடையிலிருந்து பேச்சு கொடுக்கும்போதோ, வீட்டுக்கு வீடு ஊழியம் செய்யும்போதோ, ராஜ்ய மன்றத்தில் மற்றவர்களோடு சம்பாஷிக்கும்போதோ, தொலைபேசியில் பேசும்போதோ ஏற்ற சமயம் வரலாம். அதைப்போலவே, ஒரு திறம்பட்ட மேய்ப்பர் மேய்ப்பு சந்திப்புகளின்போது மட்டுமல்ல, மாறாக எல்லா சமயங்களிலும் அன்பான, அருமையான குணங்களை வெளிக்காட்ட கடினமாய் உழைக்கிறார். அவர் தன் ‘இதயக் கதவுகளைத் திறந்து வைத்திருப்பதால்’ எல்லா சந்தர்ப்பங்களிலும் ஆடுகளை மேய்க்க தயாராய் இருக்கிறார். ஏற்ற சமயத்திலே அவற்றிற்கு தேவையான கவனத்தைக் கொடுக்கிறார். இப்படிப்பட்ட மேய்ப்பர்களைத்தான் ஆடுகள் பிரியமாய் நேசிக்கின்றன.—மாற்கு 10:43.
ஓர் உதாரணத்தை கவனியுங்கள். தற்போது மூப்பராக சேவிக்கும் வுல்ஃப்காங் என்பவரின் குடும்பத்தை ஒரு உதவி ஊழியரும் அவருடைய மனைவியும் சென்று சந்தித்தனர். அது சாதாரண ஒரு சந்திப்புதான். ஆனால் அதைப் பற்றி வுல்ஃப்காங் கூறுவதாவது: “அவர்கள் எங்கள் பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கவனம் செலுத்தியதால் பிள்ளைகளுக்கு ஒரே குஷி. நாங்களும் அந்தச்
சமயத்தை அனுபவித்து மகிழ்ந்தோம். இந்நாள் வரைக்கும் எங்கள் பிள்ளைகள் அதைப் பற்றிதான் பேசுகிறார்கள்.” அவர்கள் மேல் தனக்கு கரிசனை இருப்பதை அந்த உதவி ஊழியர் செயலில் காண்பித்தார். ஆம், அவர் தன் ‘இதயக் கதவுகளை அகலமாக திறந்து வைத்தார்.’‘இதயக் கதவுகளை அகலமாக திறந்து வைக்க’ மற்ற வழிகளும் உள்ளன. உதாரணமாக, சுகமில்லாதவர்களை சென்று சந்திக்கலாம், உற்சாகமூட்டும் ஒரு கடிதம் அனுப்பலாம் அல்லது தொலைபேசியில் அவர்களோடு பேசலாம். உங்களுக்கு அவர்கள் மேல் கரிசனை இருப்பதை ஏதாவது ஒரு வழியில் தெரியப்படுத்துங்கள். தேவை ஏற்பட்டால் உதவி செய்யுங்கள். அவர்கள் ஏதாவது சொல்ல விரும்புகிறார்களா, காதுகொடுத்து கேளுங்கள். உள்ளூரிலோ உலகின் மற்ற பாகங்களிலோ ஏற்பட்ட அருமையான, உற்சாகமூட்டும் அனுபவங்களை அவர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள். யெகோவாவை நேசிப்பவர்களுக்காக அவர் ஏற்பாடு செய்திருக்கும் மகத்தான எதிர்காலத்தை மனதில் தெளிவாக வைக்க அவர்களுக்கு உதவிடுங்கள்.—2 கொரிந்தியர் 4:16-18.
மேய்ப்பு சந்திப்புகளில் மட்டுமல்ல
மேய்ப்பு சந்திப்புகள் செய்வது முக்கியமே. ஆனாலும், ஆடுகளை மேய்ப்பதன் முக்கிய நோக்கத்தை மனதில் வைத்திருந்தால் முன்னேற்பாடு செய்து சகோதரர்களுடைய வீடுகளுக்கு சென்று சந்திப்பது, மேய்க்கும் வேலையில் ஒரு பாகம் மட்டுமே என்பதை நீங்கள் தெளிவாக காண்பீர்கள். ஓர் அன்புள்ள மேய்ப்பர் தன் ‘இதயக் கதவுகளை எப்போதுமே திறந்து வைத்திருக்கிறார். எப்படியென்றால், எந்தச் சந்தர்ப்பத்திலும் எந்தச் சமயத்திலும் அவரை சுலபமாக அணுகி பேசமுடியும். அவர் தன் சகோதரர்களோடு கனிவான ஓர் பந்தத்தை வளர்த்துக்கொள்கிறார், அது அவர்களுக்கு பாதுகாப்பான உணர்வை கொடுக்கிறது. அந்த அன்பான கிறிஸ்தவ மேய்ப்பர் அவர்கள்மீது சங்கீதம் 23:4.
அக்கறை வைத்திருப்பதால் அவர்களுக்கு துன்பம் நேர்ந்தாலும் பயப்படமாட்டார்கள்.—ஆகவே கிறிஸ்தவ மேய்ப்பர்களே, நீங்கள் அனைவரும் உங்கள் ‘இதயக் கதவுகளை அகலமாக திறந்து வையுங்கள்.’ உங்கள் சகோதரர்கள்மீது உள்ளப்பூர்வமான அன்பை வெளிக்காட்டுங்கள். உங்களால் முடிந்த எல்லா விதங்களிலும் அவர்களை உற்சாகப்படுத்துங்கள், புத்துணர்ச்சி அளியுங்கள், ஆவிக்குரிய விதத்தில் பலப்படுத்துங்கள். விசுவாசத்தில் உறுதியாய் நிலைத்திருக்க அவர்களுக்கு உதவுங்கள். (கொலோசெயர் 1:22) ‘தங்கள் இதயக் கதவுகளைத் திறந்து வைக்கும்’ அருமையான கிறிஸ்தவ மேய்ப்பர்கள் சபைக்கு ஆசீர்வாதமாக இருக்கையில் ஆடுகளுக்கு என்ன குறை இருக்க முடியும்? அப்போது, தாவீதைப் போலவே அவர்களும் யெகோவாவின் வீட்டிலே சதாகாலமும் நிலைத்திருக்க தீர்மானமாய் இருப்பார்கள். (சங்கீதம் 23:1, 6) அன்புள்ள ஒரு மேய்ப்பர் விரும்புவதும் இதைத்தானே?
[அடிக்குறிப்பு]
a மேய்க்கும் சந்திப்பு சம்பந்தப்பட்ட ஆலோசனைகளுக்கு பின்வரும் காவற்கோபுர பிரதிகளைக் காண்க: செப்டம்பர் 15, 1993, பக்கங்கள் 20-3; மார்ச் 15, 1996, பக்கங்கள் 24-7.
[பக்கம் 30-ன் பெட்டி]
கிறிஸ்தவ மேய்ப்பர்கள்
• மனப்பூர்வமாகவும் உற்சாக மனதோடும் சேவிக்கிறார்கள்
• மந்தையை போஷித்து, கவனித்துக் கொள்கிறார்கள்
• மேய்ப்பர்களாவதற்கு மற்றவர்களை பயிற்றுவிக்கிறார்கள்
• வியாதிப்பட்டவர்களை சந்தித்து, அவர்களை கவனித்துக் கொள்கிறார்கள்
• எந்தச் சமயத்திலும் சகோதரர்களுக்கு உதவ தயாராய் இருக்கிறார்கள்
[பக்கம் 31-ன் படங்கள்]
வெளி ஊழியமோ, கூட்டங்களோ, மற்ற சந்தர்ப்பங்களோ, எப்போதும் மூப்பர்கள் மேய்ப்பர்களே