அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு
அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு
பழங்கால பழமொழி ஒன்று கூறுகிறது: “செல்வராக வேண்டுமென்று பாடுபட்டு உருக்குலைந்து போகாதே. அதனால் உனது அறிவை இழந்துவிடாதே. இல்லாமற்போகும் பொருள்மேல் நீ கண்ணும் கருத்துமாய் இருப்பானேன்? கழுகுபோல அது தனக்குச் சிறகுகளை வளர்த்துக்கொண்டு வானத்தில் பறந்து போகுமன்றோ?” (நீதிமொழிகள் 23:4, 5, பொது மொழிபெயர்ப்பு) வேறுவிதமாக சொன்னால், எப்படியாவது கோடீஸ்வரனாகிவிட வேண்டும் என்ற சிரமத்தில் தொய்ந்து போவது புத்திசாலித்தனமல்ல. ஏனெனில் செல்வம் எந்த நிமிடத்திலும் ஒருவரது கையைவிட்டு போய்விடலாம்.
செல்வம் எந்த நேரத்திலும் மறைந்துவிடலாம் என பைபிள் சொல்வது சரியே. இயற்கை பேரழிவு, பொருளாதார வீழ்ச்சி அல்லது எதிர்பாராத சம்பவங்களால் செல்வம் ஒரே இரவில் பறிபோய் விடுவதால் பலர் வேதனை அடையலாம். ஆனால் பணத்திலே மிதப்பவர்கள்கூட வேதனையோடுதான் வாழ்கிறார்கள் ஏன்? உதாரணத்திற்கு ஜான் என்பவரை எடுத்துக்கொள்ளுங்கள். அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், விஐபி-க்கள் போன்றோருக்கு பொழுதுபோக்கு ஏற்பாடுகளை செய்துகொடுப்பதுதான் அவருடைய வேலை.
ஜான் கூறுகிறார்: “எப்போதும் வேலை, வேலை என வேலையில் மூழ்கினேன். அதனால் பணம் குவிந்தது; பெரிய பெரிய சொகுசு ஓட்டல்களில் தங்கினேன்; சிலசமயங்களில் வேலைக்கு தனி விமானத்தில்கூட பறந்திருக்கிறேன். ஆரம்பத்தில் அந்த வாழ்க்கை எனக்கு ருசித்தது. ஆனால் போகப் போக சப்பென்றாகிவிட்டது. நான் பழகினவர்கள் அனைவரும் பார்ப்பதற்குத்தான் சந்தோஷமாக தோன்றினார்களே தவிர உண்மையில் அப்படி இல்லை. வாழ்க்கை சூனியமாக தெரிந்தது.”
நிலையான மகிழ்ச்சியை அடைவது எப்படி என்பதை இயேசு கிறிஸ்து தம்முடைய மலைப் பிரசங்கத்தில் கூறினார்: “ஆவிக்குரிய தேவையை குறித்து உணர்வுடையவர்கள் சந்தோஷமுள்ளவர்கள்; பரலோக ராஜ்யம் அவர்களுக்கே சொந்தம்.” (மத்தேயு 5:3, NW) ஆகவே, ஆன்மீக விஷயங்கள் வாழ்க்கையில் முதலிடம் வகிக்க வேண்டும் என்பதை இது தெளிவாக காட்டுகிறது. ஆன்மீக விஷயங்களுக்கு சற்றும் மதிப்புக்கொடுக்காத வாழ்க்கை மன அமைதி தராது என்பதை ஜான் உணர்ந்தார். ஆனால் வாழ்க்கையை சுவைத்து மகிழ்வதற்கு இன்னும் எவ்வளவோ இருக்கின்றன.
உங்கள் குடும்பமும் நண்பர்களும்
குடும்பத்தில் ஒட்டு உறவு இல்லாமல், உற்ற நண்பர்கள் இல்லாமல் இருந்தால் வாழ்க்கை ருசிக்குமா? கண்டிப்பாக ருசிக்காது. நாம் உண்டாக்கப்பட்டிருக்கும் விதத்தைப் பாருங்கள். அன்பைக் காட்டி, அன்பை பெற்று சந்தோஷமாக வாழவேண்டும் என்பதற்காவே கடவுள் நம்மை மத்தேயு 22:39) குடும்பம் கடவுள் கொடுத்த பரிசு. சுயநலமற்ற அன்பை காட்டுவதற்கு ஏற்ற இடம் குடும்பமே.—எபேசியர் 3:14, 15.
படைத்திருக்கிறார். இதனால்தான் ‘நாம் நம்மில் அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவதன்’ முக்கியத்துவத்தை இயேசு சிறப்பித்துக் காட்டினார். (அப்படியானால் நமது குடும்பம் ஆனந்தமான வாழ்க்கையை அள்ளித் தருமா? எப்படி? ஒன்றுபட்ட குடும்பத்தை ஓர் அழகிய தோட்டத்திற்கு ஒப்பிடலாம். அத்தோட்டத்தில் சிறிது நேரம் அமர்வது அன்றாட கவலைகளை மறக்கச் செய்வதோடு புத்துணர்ச்சியையும் தருகிறது. குடும்ப நந்தவனத்திலும் நட்பு மலர்களின் மத்தியில் அதே ஆனந்தத்தை அனுபவிக்கலாம். தனிமையின் கொடுமையை அது விரட்டிவிடும். ஆனால் மந்திரத்தில் மாங்காய் காய்ப்பது போல் குடும்பம் தானாகவே பூங்காவனமாக மாறிவிடாது. குடும்ப அங்கத்தினர் ஒவ்வொருவரும் குடும்பம் என்ற செடிக்கு பாச மழை பொழியும் போதுதான் நட்பு மலர் பூத்துக்குலுங்கும். இதுவே ஆனந்தம் தவழும் குடும்பம். உதாரணமாக, தம்பதிகளுக்கு மத்தியில் அன்பும் மதிப்பும் அவசியம். இதற்காக நீங்கள் செலவழிக்க வேண்டியது கொஞ்சம் நேரம், கொஞ்சம் கவனம், அப்புறம் பாருங்கள் உங்கள் குடும்பத்தில் ஆனந்த மழைதான்.—எபேசியர் 5:33.
நமக்கு மழலை செல்வங்கள் இருந்தால், அவர்கள் வளர்வதற்கு ஏற்ற குடும்பச் சூழலை உருவாக்கிக் கொடுப்பது நம் கடமை. அவர்கள் உங்களிடம் மனம்விட்டு பேசுவதற்கு ஏற்ற சூழ்நிலையையும் உருவாக்கித் தரவேண்டும். ஆன்மீக விஷயங்களை கற்றுத்தரவும்தான். இதற்காக நீங்கள் செலவிடும் நேரமும் செய்யும் முயற்சியும் வீணாகாது. பெற்றோராகிய உங்களுக்கு கூடவே போனஸாக கிடைப்பது பரம திருப்தி. இவ்வாறு வளர்த்த பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை கடவுள் கொடுத்த சொத்தாகவும் ஆசீர்வாதமாகவும் கருதுகிறார்கள். ஆகவே பிள்ளைகளை நன்றாக பராமரித்து வளர்க்க வேண்டியது பெற்றோரின் கடமையாகும்.—சங்கீதம் 127:4.
நல்ல நண்பர்களும்கூட ஆனந்தமான வாழ்க்கைக்கு ஆதரவளிக்கின்றனர். (நீதிமொழிகள் 27:9) மற்றவர்களின் உணர்ச்சிகளை மதித்து நடந்தால் அநேக நண்பர்கள் கிடைப்பார்கள். (1 பேதுரு 3:8) நமக்கு உதவித் தேவைப்படும்போது நிச்சயம் ஓடிவந்து உதவுவார்கள். (பிரசங்கி 4:9, 10) “உண்மையான தோழன் . . . கஷ்டம் வரும்போது உதவுவதற்குப் பிறந்திருக்கிற ஒரு சகோதரன் போன்றவன்.”—நீதிமொழிகள் 17:17, NW.
உண்மையான சிநேகம் எந்தளவுக்கு ஆத்ம திருப்தியளிக்கிறது! நண்பர் உடனிருக்கையில் அமாவாசைக்கூட அழகாக தெரிகிறது. உணவும் அமிர்தமாய் ருசிக்கிறது. காற்றின் ஓசையும் சங்கீதமாய் ஒலிக்கிறது. நெருங்கிய குடும்ப அங்கத்தினர்களும், உற்ற சிநேகிதர்களும் மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கு இரண்டு தூண்கள். ஆனால் வாழ்க்கையை அனுபவிக்க கடவுள் செய்திருக்கும் மற்ற ஏற்பாடுகள் என்னென்ன?
ஆன்மீகப் பசிக்கு உணவு
மகிழ்ச்சிக்கும் ஆன்மீக விஷயங்களை தேடுவதற்கும் தொடர்பு இருப்பதாக இயேசு கூறினார். நாம் ஆன்மீக பசியோடும், ஒழுக்கத்தை விரும்பும் குணத்தோடும் படைக்கப்பட்டிருக்கிறோம். ஆகவேதான், நம் ஒவ்வொருவருடைய ‘இருதயத்தில்’ ‘ஆவிக்குரிய ஆள்’ ‘மறைந்திருப்பதாக’ பைபிள் குறிப்பிடுகிறது.—1 கொரிந்தியர் 2:15; 1 பேதுரு 3:3, 4.
டபிள்யு. இ. வைன் எழுதிய புதிய ஏற்பாட்டு சொற்களின் விளக்க அகராதி சொல்வதாவது: ஒருவரது இதயமே, “அவரது சிந்தனைக்கும், நடத்தைக்கும், உணர்ச்சிகளுக்கும் இருப்பிடம்.” இதையே வைன் மேலும் தெளிவாக இவ்வாறு விளக்கினார்: “இதயத்தில் தான் ஒருவருடைய அடிப்படை குணங்கள் எல்லாம் மறைந்திருக்கின்றன.” அதே அகராதி மேலும் கூறுவதாவது: “இதயத்தின் ஆழத்தில் ஒளிந்திருக்கும் ‘மனிதனே’ உண்மையான மனிதன்.”
‘இதயத்தில் மறைந்திருக்கிற’ ஆன்மீக தேவைகளை நிறைவு செய்வது எப்படி? முதலில் நாம் தேவனை அறிந்துகொண்டு அவருடைய பாதையில் செல்ல வேண்டும். அதற்காக பைபிளின் சங்கீதக்காரன் எழுதிய பின்வரும் புத்திமதியை கேட்க வேண்டும்: “கர்த்தரே தேவனென்று அறியுங்கள்; நாம் அல்ல, அவரே நம்மை உண்டாக்கினார்; நாம் அவர் ஜனங்களும், அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாயிருக்கிறோம்.” (சங்கீதம் 100:3) இவ்வாறு அவருடைய ‘ஜனங்களும் அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாயிருக்க’ விரும்பினால் கடவுளுடைய வார்த்தைக்கு இசைவாக நடப்போம். நாம் எதை செய்தாலும் கடவுளுக்கு கணக்கு கொடுக்க வேண்டியவர்கள் என்பதை மறக்கமாட்டோம்.
இது வீணான லட்சியமா? இல்லவே இல்லை. ஏனெனில், நாம் கடவுளுடைய வார்த்தைக்கு இசைவாக நடக்க வேண்டுமென்றே கடவுள் விரும்புகிறார். அதனால் நம் வாழ்க்கையில் மகிழ்ச்சி கூடத்தான் செய்யுமே ஒழிய குறைவுபடாது. அதுமட்டுமின்றி நாம் சிறந்த ஆட்களாவதற்கு நம்மை அது ஊக்குவிக்கிறது. ஆகவே, இது வீணானதல்ல, நன்மை பயக்கும் ஒன்றே. சங்கீதம் 112:1 கூறுகிறது: “கர்த்தருக்குப் பயந்து, அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.” கடவுளுக்குப் பயந்து நடக்கும்போதும், அவரது கற்பனைகளுக்கு உண்மையாகவே கீழ்ப்படியும்போதும் நம் வாழ்க்கை ருசிக்கும்; சந்தோஷமும் பெருகும்.
கடவுளுக்குக் கீழ்ப்படிவது ஏன் மனநிறைவளிக்கிறது? கடவுள் ஒவ்வொரு மனிதனுக்கும் மனசாட்சியை கொடுத்திருக்கிறார். இது மனிதனுக்கு அவர் தந்த பரிசு. இந்த மனசாட்சி, நல்லது கெட்டதை மனிதனுக்கு உணர்த்துகிறது. தவறு செய்கையில் நம்மை உறுத்தும் மனசாட்சி நன்மை செய்யும்போது “சபாஷ்” என்று நம்மை தட்டிக்கொடுக்கிறது. (ரோமர் 2:15) உதாரணத்திற்கு, கடவுளிடமும் மற்றவர்களிடமும் தன்னலமின்றி நடந்துகொள்கையில் நமக்கு ஆத்ம திருப்தி கிடைப்பதும் இந்த மனசாட்சியால்தான். ‘வாங்குகிறதைப் பார்க்கிலும் கொடுக்கிறதில்’ அதிக மகிழ்ச்சி இருப்பதாக பைபிள் கூறுகிறது. (அப்போஸ்தலர் 20:35) ஏன்?
மற்றவர்களின் விருப்பங்களையும் தேவைகளையும் அறிந்து உதவி செய்வதில் மகிழ்ச்சி காணும்படி படைப்பாளர் நம்மை படைத்திருக்கிறார். அதனால்தான் மற்றவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுகையில் நம் உள்ளம் தானாகவே பூரிப்படைகிறது. அதுமட்டுமா, உதவி தேவைப்படுபவர்களுக்கு நாம் இரக்கம் காட்டினால் அதை தமக்கு செய்த உதவியாக கடவுள் கருதுகிறார் என பைபிள் நமக்கு உறுதியளிக்கிறது.—நீதிமொழிகள் 19:17.
ஆன்மீக விஷயங்களுக்கு கவனம் செலுத்துவது ஆத்ம திருப்தி அளிப்பதோடு, நடைமுறையில் நமக்கு உதவுமா? மத்திய கிழக்கு தேசத்தைச் சேர்ந்த ரேமண்ட் என்ற தொழிலதிபர் முழுக்க முழுக்க இதை நம்புகிறார். அவர் சொல்கிறார்: “பணம் சம்பாதிப்பதே என் லட்சியமாக இருந்தது. ஆனால், கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றும் அவருக்கு என்னவெல்லாம் விருப்பம் என பைபிள் குறிப்பிடுகிறது என்றும் நான் எப்போது என் இருதயத்தில் ஏற்றுக்கொண்டேனோ அப்போதே என் லட்சியத்தை மாற்றினேன். இப்போது என் வாழ்க்கையில் பணத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. கடவுளை பிரியப்படுத்த விரும்புவதால் குரோதத்தை என் மனதிலிருந்து ஒழித்துவிட்டேன். அதனால்தான் என் அப்பாவை கொன்றவர்களை பழிவாங்கும் எண்ணம் இப்போது எனக்கு இல்லை.”
ஆன்மீக தேவைகளை பூர்த்திசெய்வதில் முழு கவனத்தையும் செலுத்தினால், மனதில் ஆறாத ரணங்கள் தானாக ஆறிவிடும் என்பதை ரேமண்ட் கண்டுணர்ந்தார். ஆனால் வாழ்க்கை என்றால் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். நாம் ஒரேயடியாக மனம் உடைத்து உட்கார்ந்துவிடாமல், அவற்றை சவாலாக எடுத்துக்கொண்டு சமாளித்தால், கஷ்டத்திலும் வாழ்க்கை ருசிக்கும்.
“தேவ சமாதானம்”
இந்த பிஸியான உலகில் ஒரு நாளை நிம்மதியாக கழிப்பதே சிரமம். ஏனெனில் விபத்துக்கள், நினைத்தது நடக்காமல் போய்விடுவது, நம்பிக்கை துரோகம் போன்றவை நம்முடைய மகிழ்ச்சியை குலைத்துவிடலாம். ஆனால் யெகோவா தேவனை சேவிப்பவர்களுக்கோ பைபிள் வாக்குறுதியளிக்கும் ஆத்ம திருப்தியாகிய “தேவ சமாதானம்” கிடைக்கிறது. இந்த சமாதானத்தை நாம் எப்படி அடையலாம்?
அப்போஸ்தலன் பவுல் எழுதினார்: “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக் கொள்ளும்.” (பிலிப்பியர் 4:6, 7) நம்முடைய பிரச்சினைகளை நாமே சுமப்பதற்குப் பதிலாக அவற்றை கடவுள் மீது வைத்துவிட்டு, விடாது ஜெபம் செய்ய வேண்டும். (சங்கீதம் 55:22) நாம் ஆன்மீக காரியங்களில் தேர்ச்சியடைந்தால் கடவுள் எவ்வாறு நமக்கு உதவுகிறார் என்பதை தெளிவாக உணர்ந்துகொள்வோம்; அப்போது, இயேசு கிறிஸ்து மூலமாக ஏறெடுக்கப்படும் ஜெபத்தை அவர் கேட்கிறார் என்ற விசுவாசம் இன்னும் திடமாகும்.—யோவான் 14:6, 14; 2 தெசலோனிக்கேயர் 1:3.
‘ஜெபத்தைக் கேட்கிற’ யெகோவா தேவனில் நம் நம்பிக்கை வளர்ந்த பின்பு, நம்மை தீண்டும் தீரா வியாதி, வயோதிபம், அன்பானவரின் இழப்பு போன்ற சோதனைகளையும் நம்மால் எளிதாக சமாளிக்க முடிகிறது. (சங்கீதம் 65:2) இருந்தாலும், உண்மையிலேயே நாம் வாழ்க்கையை ருசித்து மகிழ வேண்டுமெனில் எதிர்காலத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எதிர்காலத்தை எண்ணி களிகூருங்கள்
நீதியாக அரசாளும் பரலோக அரசாங்கத்தை “புதிய வானங்கள்” என்றும், அந்த அரசாங்கத்திற்கு கீழ்ப்படியும் மனிதர்களை “புதிய பூமி” என்றும் பைபிள் விவரிக்கிறது. (2 பேதுரு 3:13) இந்தப் புதிய உலகம் ஏதோ மின்னலென கண்ணில் தோன்றி மறையும் காட்சி அல்ல. இது கடவுள் வாக்குறுதி தந்திருக்கும் உலகம். இதில் அமைதி தவழும், நீதி நிரந்தரமாக குடியிருக்கும், போருக்கு சமாதி கட்டப்படும், அநீதியின் அடிச்சுவடு அழிக்கப்படும். இதில் நாம் வைக்கும் நம்பிக்கை வீண் போகாது. நாளுக்கு நாள் நம் விசுவாசம் வளரும். இத்தகைய எதிர்காலத்தை எண்ணி எண்ணி நாம் களிகூருவோமாக!—ரோமர் 12:12; தீத்து 1:3.
இக்கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்த ஜான், இப்போது வாழ்க்கையை அனுபவிப்பதாக கூறுகிறார்: “எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு; ஆனால் நான் ஒருபோதும் மதத்தில் அந்தளவுக்கு பற்றுதலாக இருந்ததில்லை. யெகோவாவின் சாட்சிகளில் இருவர் என்னை சந்திக்கும் வரையிலும் என் நம்பிக்கை உறங்கிய நிலையில்தான் இருந்தது. நான் அவர்களிடம் ‘வாழ்க்கையின் நோக்கம் என்ன? நம்முடைய எதிர்கால நம்பிக்கைகள் என்ன? போன்ற பல கேள்விகளை கேட்டேன். ஒவ்வொன்றுக்கும் பைபிளிலிருந்தே கொடுத்த பதில்கள் என் நம்பிக்கைக்கு விழிப்பூட்டின. அதன் பிறகுதான், வாழ்க்கைக்கு ஒரு நோக்கம் இருக்கிறது என்ற மின்னல் கீற்று என் மனக்கண்ணில் பளிச்சிட்டது. பைபிள் சத்தியத்தை மேலும் மேலும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற எனது ஆர்வம், என் வாழ்க்கையை முழுமையாக மாற்ற உதவியது. நான் இப்போது பணக்காரனாக இல்லாவிட்டாலும், ஆன்மீக ரீதியில் ஓர் கோடீஸ்வரன்தான்!”
ஒருவேளை ஜானைப் போன்று நீங்களும் ஆன்மீக செயல்களில் பல வருடங்களாகவே மந்தமாக இருந்திருக்கலாம். ‘ஞானமுள்ள இருதயத்தை’ வளர்ப்பதன்மூலம் உங்கள் ஆன்மீக வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்கலாம். (சங்கீதம் 90:12) திடதீர்மானமும் முயற்சியும் இருந்தால் உங்களுக்கு உண்மையான சந்தோஷமும், சமாதானமும், நம்பிக்கையும் கிடைக்கும். (ரோமர் 15:13) உங்கள் வாழ்க்கைக்கு அர்த்தமிருக்கிறது!
[பக்கம் 6-ன் படம்]
ஜெபம் ‘தேவ சமாதானத்தை’ தருகிறது
[பக்கம் 7-ன் படங்கள்]
திருப்திகரமான குடும்ப வாழ்க்கையை உருவாக்குவது எது?