Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுளுக்கு உகந்த பலிகள்

கடவுளுக்கு உகந்த பலிகள்

கடவுளுக்கு உகந்த பலிகள்

“ஒவ்வொரு பிரதான ஆசாரியனும் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்தும்படி நியமிக்கப்படுகிறான்.”எபிரெயர் 8:3.

1. கடவுளுடைய உதவியை ஜனங்கள் நாடுவது ஏன்?

 “ஜெபிப்பதைப் போலவே பலி செலுத்த வேண்டியதும் மனிதனுக்கு அவசியம். பலிசெலுத்துவது தன்னைப் பற்றி அவன் உணருவதையும், ஜெபிப்பது கடவுளைப் பற்றி அவன் உணருவதையும் சொல்லாமல் சொல்கிறது” என்று பைபிள் சரித்திராசிரியர் ஆல்ஃபர்ட் எடர்ஷீம் எழுதுகிறார். இந்த உலகத்திற்குள் பாவம் காலடி எடுத்து வைத்ததிலிருந்தே மனிதன் கடவுளிடமிருந்து விலக்கப்பட்டு, உதவியின்றி, குற்றவுணர்வோடு தவித்து வந்திருக்கிறான். இவற்றிலிருந்து விடுபட நாம் விரும்புகிறோம். இத்தகைய நம்பிக்கையற்ற நிலையில் ஜனங்கள் கடவுளின் உதவியை நாடுவது ஏன் என்பது தெளிவாக தெரிகிறது.—ரோமர் 5:12.

2. முதன் முதலாக கடவுளுக்கு செலுத்தப்பட்ட காணிக்கைகளைப் பற்றிய என்ன பதிவு பைபிளில் காணப்படுகிறது?

2 காயீன், ஆபேல்தான் முதன் முதலில் கடவுளுக்குக் காணிக்கைகள் செலுத்தினதாக பைபிள் குறிப்பிடுகிறது. “சில நாள் சென்ற பின்பு காயீன் நிலத்தின் கனிகளில் சிலவற்றை யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தான். ஆபேலோ தன் மந்தையின் தலையீற்றுகளில் கொழுமையான பாகங்களைக் கொண்டுவந்தான்” என நாம் வாசிக்கிறோம். (ஆதியாகமம் 4:3, 4, தி.மொ.) அடுத்தபடியாக, “நோவா, யெகோவாவுக்கு ஒரு பலிபீடம் கட்டி, . . . பலிபீடத்தின்மேல் தகனபலி” செலுத்தினார். பொல்லாத மக்கள்மீது கொண்டுவரப்பட்ட ஜலப்பிரளயத்திலிருந்து தன்னைப் பாதுகாத்ததற்காக கடவுளுக்கு இவ்வாறு நன்றிசெலுத்தினார். (ஆதியாகமம் 8:20, தி.மொ.) அடுத்ததாக நாம் கடவுளின் உண்மையுள்ள ஊழியரும் நண்பருமாகிய ஆபிரகாமைப் பற்றி வாசிக்கிறோம். அநேக சந்தர்ப்பங்களில், கடவுளுடைய வாக்குறுதிகளும் ஆசீர்வாதங்களும், ‘யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி அவருடைய நாமத்தை தொழுதுகொள்ளும்படி’ அவரை தூண்டியிருக்கின்றன. (ஆதியாகமம் 12:8; 13:3, 4, 18, தி.மொ.) ஒருமுறை தன் குமாரனாகிய ஈசாக்கை தகனபலி செலுத்தும்படி யெகோவா ஆபிரகாமிடம் சொன்னார்; அதுவே அவருடைய விசுவாசத்திற்கு வந்த மாபெரும் சோதனை. (ஆதியாகமம் 22:1-14) இந்த விவரப் பதிவுகள் ரத்தின சுருக்கமாக இருந்தாலும் பலி சம்பந்தமாக அதிகத்தை புலப்படுத்துகின்றன. அவற்றை இப்போது சிந்திக்கலாம்.

3. வணக்கத்தில் பலிகள் என்ன பாகத்தை வகிக்கின்றன?

3 இவையும் பைபிளின் மற்ற விவரப் பதிவுகளும், வணக்கத்தின் முக்கிய பாகமாக ஏதேனும் ஒரு வகை பலி செலுத்தப்பட்டு வந்ததைக் காட்டுகின்றன; பலிகள் சம்பந்தமாக திட்டவட்டமான சட்டங்களை யெகோவா கொடுப்பதற்கு வெகு காலத்திற்கு முன்பிருந்தே இந்தப் பழக்கம் இருந்து வந்தது. “பலி செலுத்துவது மத சடங்காகும். மனிதன் தெய்வத்தோடு நல்ல உறவை ஏற்படுத்திக்கொள்வதற்கு, காத்துக்கொள்வதற்கு, அல்லது மீண்டும் நிலைநாட்டிக்கொள்வதற்கு ஏதோவொன்றை அர்ப்பணிக்கும் சடங்கு அது” என ஒரு புத்தகம் விளக்கமளிக்கிறது. ஆனால் இது சில முக்கிய கேள்விகளை எழுப்புகிறது: வணக்கத்தில் பலி ஏன் அவசியம்? என்ன வகையான பலிகளை கடவுள் ஏற்றுக்கொள்கிறார்? பூர்வகால பலிகள் இன்று நமக்கு எதை அர்த்தப்படுத்துகின்றன?

பலி ஏன் தேவை?

4. ஆதாமும் ஏவாளும் பாவம் செய்ததால் வந்த விளைவு என்ன?

4 ஆதாம் அறிந்தே பாவம் செய்தான். நன்மைதீமை அறியத்தக்க மரத்திலிருந்த அந்தக் கனியை அவன் வாங்கி புசிக்கையில் வேண்டுமென்றே கீழ்ப்படியாமல் போனான். அந்தக் கீழ்ப்படியாமைக்கு தண்டனை மரணம். “அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய்” என கடவுள் தெளிவாகவே கூறியிருந்தார். (ஆதியாகமம் 2:17) முடிவில், ஆதாமும் ஏவாளும் பாவத்தின் சம்பளத்தை பெற்றனர், மரணத்தைத் தழுவினர்.—ஆதியாகமம் 3:19; 5:3-5.

5. ஆதாமின் சந்ததியாருக்காக யெகோவாதாமே ஏன் முதலாவதாக நடவடிக்கை எடுத்தார், அவர்களுக்காக அவர் என்ன செய்தார்?

5 அப்படியானால், ஆதாமின் சந்ததியாரின் நிலை என்ன? ஆதாமிலிருந்து பாவத்தையும் அபூரணத்தையும் சொத்தாக பெற்றனர்; அந்த முதல் மனித ஜோடியைப் போலவே கடவுளை விட்டு விலகியிருக்கின்றனர், நம்பிக்கை இழந்த நிலையில் உள்ளனர், மரணத்தையும் சந்திக்கின்றனர். (ரோமர் 5:14) எனினும், யெகோவா நீதியும் வல்லமையுமுள்ள கடவுள் மட்டுமல்ல, அவரிடம் உயர்ந்தோங்கி நிற்கும் குணம் அன்பு. (1 யோவான் 4:8, 16) ஆகையால், இந்த முறிந்த உறவை சரிப்படுத்த முன்வந்து அவரே நடவடிக்கை எடுத்தார். அதனால்தான், “பாவத்தின் சம்பளம் மரணம்” என குறிப்பிட்ட பிறகு “தேவனுடைய கிருபைவரமோ [“பரிசோ,” NW] நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்” என பைபிள் சொல்லுகிறது.—ரோமர் 6:23.

6. ஆதாமின் பாவத்தால் ஏற்பட்ட இழப்பைக் குறித்ததில் யெகோவாவின் சித்தம் என்ன?

6 அந்தப் பரிசுக்கான உத்தரவாதமாக, ஆதாமின் மீறுதலினால் விளைந்த இழப்பை சரிக்கட்டும் ஒன்றை இறுதியில் யெகோவா தேவன் அளித்தார். எபிரெயுவில் காஃபர் என்ற சொல் முதலில், “மூடு” அல்லது ஒருவேளை “ஒழித்துக்கட்டு” என்பதாக அர்த்தப்படுத்தியிருக்கலாம். இது ‘பிராயச்சித்தம் செய்தல்’ என்றும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. a வேறு விதமாக சொன்னால், ஆதாமிலிருந்து சுதந்தரித்த பாவத்தை மூடிப்போடவும், அதன் விளைவாக உண்டான துயரத்தை ஒழித்துக்கட்டவும் யெகோவா பொருத்தமான ஏற்பாட்டை செய்தார்; அது அந்தப் பரிசுக்குத் தகுதியுள்ளவர்கள் தண்டனைத் தீர்ப்பாகிய பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுதலையாவதற்கு வழிவகுத்தது.—ரோமர் 8:20, 21.

7. (அ) சாத்தானுக்கான கடவுளுடைய தீர்ப்பில் என்ன நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது? (ஆ) பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் மனிதகுலத்தை மீட்க என்ன விலை செலுத்தப்பட வேண்டும்?

7 முதல் மனித ஜோடி பாவம் செய்த உடனடியாகவே பாவம், மரணம் ஆகியவற்றின் பிடியிலிருந்து விடுதலை பெறுவதற்கான நம்பிக்கை குறிப்பாய்த் தெரிவிக்கப்பட்டது. சாத்தானை பிரதிநிதித்துவம் செய்த சர்ப்பத்திடம் யெகோவா தம்முடைய தீர்ப்பைக் கூறினார்: “உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்.” (ஆதியாகமம் 3:15) அந்த வாக்குறுதியில் விசுவாசம் வைப்போர் யாவருக்கும், அந்தத் தீர்க்கதரிசனம் நம்பிக்கையின் ஒளியைத் தந்தது. எனினும் அந்த மீட்புக்கு விலையைச் செலுத்த வேண்டும். வாக்குப்பண்ணப்பட்ட வித்து தோன்றியதும் சாத்தானை அழித்துவிட மாட்டார். அதற்கு முன்பாக அந்த வித்துவின் குதிங்கால் நசுக்கப்பட வேண்டும், அதாவது அந்த வித்து மரணத்தை சந்திக்க வேண்டும், எனினும் அது தற்காலிக மரணம்தான்!

8. (அ) காயீன் எவ்வாறு ஏமாற்றத்தை அளித்தான்? (ஆ) ஆபேலின் பலி ஏன் கடவுளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது?

8 வாக்குப்பண்ணப்பட்ட அந்த வித்தின் அடையாளத்தைக் குறித்து ஆதாமும் ஏவாளும் அதிகம் யோசித்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஏவாள் தன் முதற்பேறான குமாரனாகிய காயீனைப் பெற்றபோது, “யெகோவாவின் உதவியால் ஒரு மனிதனைப் பெற்றேன்” என சொன்னாள். (ஆதியாகமம் 4:1, NW) தன் குமாரனே அந்த வித்து என அவள் ஒருவேளை நினைத்திருப்பாளோ? அவள் அவ்வாறு நினைத்திருந்தாலும் சரி, நினைத்திராவிட்டாலும் சரி, காயீனும் அவனுடைய சந்ததியாரும் ஏமாற்றத்தையே அளித்தனர். மறுபட்சத்தில், அவனுடைய சகோதரனாகிய ஆபேல் கடவுளுடைய வாக்குறுதியில் விசுவாசம் வைத்தார்; தன் மந்தையில் தலையீற்றுகள் சிலவற்றை யெகோவாவுக்கு பலிசெலுத்தினார். “விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியிலும் மேன்மையான பலியை தேவனுக்குச் செலுத்தினான்; அதினாலே அவன் நீதிமானென்று சாட்சிபெற்றான்” என வாசிக்கிறோம்.—எபிரெயர் 11:4.

9. (அ) ஆபேல் எதில் விசுவாசம் வைத்தார், அதை எவ்வாறு வெளிக்காட்டினார்? (ஆ) ஆபேலின் பலி எதை விளக்கியது?

9 கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று மட்டுமே ஆபேல் நம்பவில்லை; அப்படிப்பட்ட நம்பிக்கை காயீனுக்குக்கூட ஓரளவு இருந்ததே. உண்மையுள்ள மனிதருக்கு இரட்சிப்பை அளிக்கப் போகிற வித்துவைப் பற்றிய கடவுளுடைய வாக்குறுதியில் ஆபேலுக்கு நம்பிக்கை இருந்தது. அது எப்படி நிறைவேறும் என்பது அவருக்கு வெளிப்படுத்தப்படவில்லை. ஆனால் யாரோ ஒருவருடைய குதிங்கால் நசுக்கப்படும் என்பதை கடவுளுடைய வாக்குறுதியிலிருந்து ஆபேல் அறிந்திருந்தார். ஜீவனை மீண்டும் பெற இரத்தம் சிந்த வேண்டும் என்ற முடிவுக்கு அவர் வந்திருப்பதாகத் தெரிகிறது. பலியின் நோக்கமும் அதுவே. உயிரின் மூலகாரணருக்கு உயிரையும் இரத்தத்தையும் காணிக்கையாக ஆபேல் செலுத்தினார். இது, யெகோவாவினுடைய வாக்குறுதியின் நிறைவேற்றத்தினிடம் அவருக்கிருந்த ஆர்வத்திற்கும், எதிர்பார்ப்புக்கும் அடையாளமாக இருந்திருக்கலாம். இப்படி விசுவாசத்தை வெளிக்காட்டியதே ஆபேலின் பலியை யெகோவா ஏற்கும்படி செய்தது. மேலும், பலியின் அர்த்தத்தை அது ஓரளவு விளக்கியது. அதாவது, யெகோவாவுக்கு பலி செலுத்தினால், பாவிகளான மனிதர் அவரை அணுகி தயவைப் பெற வழிபிறக்கும் என்பதே அந்த அர்த்தம்.—ஆதியாகமம் 4:4; எபிரெயர் 11:1, 6.

10. ஈசாக்கை பலியிடும்படி யெகோவா ஆபிரகாமிடம் சொன்னதில், பலியின் முக்கியத்துவம் எப்படி தெளிவாக்கப்பட்டது?

10 ஆபிரகாம் தன் குமாரனாகிய ஈசாக்கைத் தகனபலியாக செலுத்தும்படி யெகோவா கட்டளையிட்டபோது, பலியைப் பற்றிய அடிப்படை அர்த்தம் குறிப்பிடத்தக்க விதத்தில் தெளிவாக்கப்பட்டது. அந்தப் பலி அப்போது செலுத்தப்படவில்லை. ஆனாலும் யெகோவாதாமே என்ன செய்யப்போகிறார் என்பதை, அதாவது மனிதகுலத்தினிடம் தம் நோக்கத்தை நிறைவேற்றுவதில் தம்முடைய ஒரேபேறான குமாரனை ஒப்பற்ற பலியாக செலுத்தப் போவதை அது சித்தரித்தது. (யோவான் 3:16) மோசேயின் நியாயப்பிரமாணத்திலுள்ள பலிகளையும் காணிக்கைகளையும் யெகோவா தீர்க்கதரிசன மாதிரிகளாக வைத்தார். பாவங்களுக்கு மன்னிப்பையும், இரட்சிப்புக்கான உறுதியான நம்பிக்கையையும் பெற என்ன செய்ய வேண்டும் என்பதை இவற்றின் வாயிலாக யெகோவா தமது ஜனங்களுக்கு போதித்தார். இவற்றிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

யெகோவா ஏற்கும் பலிகள்

11. என்ன இரண்டு வகை பலிகளை இஸ்ரவேலின் பிரதான ஆசாரியன் செலுத்தினார், என்னென்ன நோக்கங்களுக்காக?

11 “ஒவ்வொரு பிரதான ஆசாரியனும் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்தும்படி நியமிக்கப்படுகிறான்” என்று அப்போஸ்தலனாகிய பவுல் சொல்லுகிறார். (எபிரெயர் 8:3) பூர்வ இஸ்ரவேலின் பிரதான ஆசாரியன் செலுத்தியவற்றை, ‘காணிக்கைகள்’ என்றும் ‘பலிகள்’ அல்லது ‘பாவங்களுக்காக பலிகள்’ என்றும் இரண்டு வகையாக பவுல் பிரிப்பதைக் கவனியுங்கள். (எபிரெயர் 5:1) பொதுவாக மக்கள் பாசத்தையும் போற்றுதலையும் வெளிக்காட்டவும், நட்பை வளர்க்கவும், தயவை பெறவும் அல்லது அங்கீகரிக்கப்படவும் வெகுமதிகளை (காணிக்கைகளை) கொடுக்கின்றனர். (ஆதியாகமம் 32:20; நீதிமொழிகள் 18:16) அவ்வாறே, நியாயப்பிரமாணம் செலுத்தும்படி கட்டளையிட்ட பல பொருட்களை, கடவுளுடைய அங்கீகாரத்தையும் தயவையும் பெறுவதற்காக செலுத்தப்பட்ட ‘காணிக்கைகளாக’ கருதலாம். b அதே சமயத்தில், நியாயப்பிரமாணத்தை மீறுகையில், மீண்டும் தயவைப் பெற, “பாவங்களுக்காக பலிகள்” செலுத்தப்பட்டன. பைபிளின் முதல் ஐந்து ஆகமங்கள், முக்கியமாய் யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம் ஆகியவை வெவ்வேறு வகை பலிகளையும் காணிக்கைகளையும் பற்றி விலாவாரியான விவரங்களைத் தருகின்றன. எல்லா விவரங்களையும் புரிந்துகொண்டு நினைவில் வைப்பது கடினம் என்றாலும், அவற்றைப் பற்றிய சில முக்கிய குறிப்புகளை கவனிப்பது அவசியம்.

12. பலிகளைப் பற்றிய பொதுவான குறிப்புகளை பைபிளில் எங்கே நாம் காணலாம்?

12 லேவியராகமம் முதல் ஏழு அதிகாரங்கள் முக்கியமான ஐந்து வகை பலிகளைப் பற்றி குறிப்பிடுவதை நாம் கவனிக்கலாம். அவை: சர்வாங்க தகனபலி, போஜனபலி [“தானிய பலி,” NW], சமாதானபலி, பாவநிவாரண பலி, குற்றநிவாரண பலி. இவற்றில் சில சேர்த்தே செலுத்தப்பட்டாலும், தனித்தனியாகவே விவரிக்கப்படுகின்றன. மேலும், இந்த அதிகாரங்களில் இந்த பலிகள், இருமுறை வெவ்வேறு நோக்கங்களுடன் விவரிக்கப்படுவதையும் காண்கிறோம்: (1லேவியராகமம் 1:2-லிருந்து 6:7 வரையில் உள்ள விவரப்பதிவு பலிபீடத்தில் என்ன செலுத்தப்பட வேண்டும் என்பதைப் பற்றி சொல்கிறது, (2லேவியராகமம் 6:8-லிருந்து 7:36 வரையில் உள்ள விவரப்பதிவு ஆசாரியர்களுக்கும் பலிசெலுத்துபவருக்கும் ஒதுக்கிவைக்கப்பட வேண்டிய பாகங்களை பற்றி குறிப்பிடுகிறது. பின்பு, எண்ணாகமம் 28, 29 அதிகாரங்களில் தினந்தோறும், வாரந்தோறும், மாதந்தோறும் செலுத்த வேண்டிய பலிகளையும், வருடாந்தர பண்டிகைகளில் செலுத்த வேண்டிய பலிகளையும் பற்றிய விவரமான அட்டவணையை நாம் காண்கிறோம்.

13. கடவுளுக்குக் காணிக்கையாக, மனமுவந்து செலுத்தப்பட்ட பலிகளைப் பற்றி விவரியுங்கள்.

13 மனமுவந்த காணிக்கைகளாக அல்லது கடவுளுடைய தயவைப் பெறுவதற்காக அளிக்கப்பட்டவை சர்வாங்க தகனபலிகளும், போஜன பலிகளும், சமாதான பலிகளும் ஆகும். ‘சர்வாங்க தகனபலிக்குரிய’ எபிரெய பதம் “மேலெழும்பும் பலி” என்ற அர்த்தத்தைத் தருவதாய் சில நிபுணர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். இந்தப் பெயர் பொருத்தமானது; ஏனெனில் சர்வாங்க தகனபலியாக செலுத்தப்பட்ட மிருகம் பலிபீடத்தின்மீது தகனிக்கப்பட்டது, அப்போது அந்த சுகந்த வாசனை கடவுளிடமாக மேலெழும்பியது. பலிபீடத்தைச் சுற்றிலும் அதன் இரத்தம் தெளிக்கப்பட்ட பின்பு அந்த மிருகம் முழுமையாக கடவுளுக்காக தகனிக்கப்பட்டது; இதுவே சர்வாங்க தகனபலியின் குறிப்பிடத்தக்க அம்சமாகும். ஆசாரியர்கள் அவற்றையெல்லாம் ‘பலிபீடத்தின்மேல் சர்வாங்க தகனபலியாகத் தகனித்தனர். இது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியானது.’லேவியராகமம் 1:3, 4, 9; ஆதியாகமம் 8:21.

14. தானிய பலி எவ்வாறு செலுத்தப்பட்டது?

14 லேவியராகமம் இரண்டாம் அதிகாரம் போஜன பலியை [“தானிய பலி,” NW] பற்றி விவரிக்கிறது. இது மனமுவந்து செலுத்தும் காணிக்கை ஆகும். பொதுவாய் எண்ணெயில் பிசைந்த மென்மையான மாவுடன் சாம்பிராணியும் சேர்த்து செலுத்தப்பட்டது. “ஆசாரியன் அந்த மாவிலும் எண்ணெயிலும் ஒரு கைப்பிடி நிறைய தூபவர்க்கம் எல்லாவற்றோடும் எடுத்து, அதைப் பலிபீடத்தின்மேல் ஞாபகக்குறியாகத் தகனிக்கக்கடவன்; அது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி.” (லேவியராகமம் 2:2) ஆசரிப்புக் கூடாரத்தில் அல்லது ஆலயத்தில் தூபவர்க்க பலிபீடத்தின்மேல் எரிக்கப்பட்ட பரிசுத்த தூபவர்க்க கலவையின் பாகம்தான் இந்த சாம்பிராணி. (யாத்திராகமம் 30:34-36) “என் விண்ணப்பம் உமக்கு முன்பாகத் தூபமாகவும், என் கையெடுப்பு அந்திப்பலியாகவும் இருக்கக்கடவது” என தாவீது ராஜா சொன்னபோது இதை மனதில் வைத்தே சொல்லியிருக்க வேண்டும்.சங்கீதம் 141:2.

15. என்ன நோக்கத்திற்காக சமாதான பலி செலுத்தப்பட்டது?

15 மனமுவந்து அளிக்கப்பட்ட மற்றொன்று சமாதான பலி ஆகும். இது லேவியராகமம் மூன்றாம் அதிகாரத்தில் விவரிக்கப்படுகிறது. “சமாதானத்திற்காக செலுத்தும் காணிக்கை” எனவும் இதன் பெயரை மொழிபெயர்க்கலாம். எபிரெயுவில், “சமாதானம்” என்ற வார்த்தை, போர் அல்லது அமளி இல்லாமல் இருப்பதை மட்டுமே அர்த்தப்படுத்தவில்லை. “பைபிளில் இவ்வார்த்தை இதையும் குறிக்கிறது, கடவுளுடன் சமாதான நிலையில் அல்லது உறவில் இருப்பது, செழுமை, மகிழ்ச்சி, சந்தோஷம் ஆகியவற்றையும் குறிக்கிறது” என்று ஸ்டடீஸ் இன் த மொசேயிக் இன்ஸ்டிட்யூஷன்ஸ் என்ற புத்தகம் குறிப்பிடுகிறது. ஆகவே, கடவுளைச் சாந்தப்படுத்தி அவருடன் சுமுகமாவதற்காக சமாதான பலிகள் செலுத்தப்படவில்லை. மாறாக, கடவுளால் அங்கீகரிக்கப்படுவோர் தங்கள் ஆசீர்வாதமிக்க சமாதான நிலைக்கு நன்றியை அல்லது போற்றுதலைத் தெரிவிப்பதற்கு அவற்றை செலுத்தினர். இரத்தமும் கொழுப்பும் யெகோவாவுக்குச் செலுத்தப்பட்ட பின்பு, ஆசாரியர்களும் பலி செலுத்தியவரும் அந்தப் பலியில் கொஞ்சத்தை புசித்தனர். (லேவியராகமம் 3:17; 7:16-21; 19:5-8) அடையாள அர்த்தத்தில், பலி செலுத்தியவரும், ஆசாரியர்களும், யெகோவா தேவனும் சேர்ந்து உணவைப் புசித்தனர்; அது, அவர்கள் மத்தியில் நிலவும் சமாதான உறவை அருமையாக படம்பிடித்துக் காட்டியது.

16. (அ) பாவநிவாரண பலி, குற்றநிவாரண பலி ஆகியவற்றின் நோக்கம் என்ன? (ஆ) இவை சர்வாங்க தகனபலியிலிருந்து எவ்வாறு வேறுபட்டன?

16 பாவ மன்னிப்பைப் பெறுவதற்கு அல்லது நியாயப்பிரமாணத்திற்கு எதிரான மீறுதல்களுக்கு செலுத்தப்பட்ட பலிகளில் பாவநிவாரண பலியும் குற்றநிவாரண பலியும் அடங்கும். இந்த பலிகளும் பலிபீடத்தில் தகனிக்கப்பட்டன; எனினும் தகனபலியைப் போல் முழு மிருகத்தையும் கடவுளுக்குச் செலுத்தாமல், அதன் கொழுப்பும் குறிப்பிட்ட பாகங்களும் மட்டுமே செலுத்தப்பட்டன. இந்த விதத்தில் அவை தகனபலியிலிருந்து வேறுபட்டன. அந்த மிருகத்தின் மீதிபாகங்கள் பாளையத்துக்குப் புறம்பே எரிக்கப்பட்டன அல்லது சில சந்தர்ப்பங்களில் ஆசாரியர்கள் அவற்றைப் புசித்தனர். இந்த வேறுபாட்டில் அதிக அர்த்தம் புதைந்திருந்தது. சர்வாங்க தகனபலி, கடவுளை அணுக வழிதிறக்கும் காணிக்கையாக அவருக்குச் செலுத்தப்பட்டது; ஆகையால் முழுக்க முழுக்க அது அவருக்கே அர்ப்பணிக்கப்பட்டது. பாவ நிவாரணபலி அல்லது குற்றநிவாரண பலி செலுத்தப்படுவதற்கு முன்பு பொதுவாக தகனபலி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. காரணம், பாவம் செய்த ஒருவனின் பலியைக் கடவுள் ஏற்றுக்கொள்வதற்கு பாவ மன்னிப்பு தேவைப்பட்டதை அது சுட்டிக் காட்டியது.—லேவியராகமம் 8:14, 18; 9:2, 3; 16:3, 5.

17, 18. பாவநிவாரண பலி எதற்காக செலுத்தப்பட்டது?

17 நியாயப்பிரமாணத்திற்கு எதிராக, மாம்ச பலவீனத்தினாலும் அறியாமலும் செய்த பாவத்திற்காக மாத்திரமே பாவநிவாரண பலி ஏற்றுக்கொள்ளப்பட்டது. “செய்யக்கூடாதென்று யெகோவா விலக்கிய யாவற்றிலும் ஏதாவதொன்றை ஒருவன் அறியாமல் செய்து பாவத்துக்குட்பட்டால்” பாவம் செய்தவன், தன் சமுதாய அந்தஸ்துக்கேற்ப பாவநிவாரண பலியைச் செலுத்த வேண்டும். (லேவியராகமம் 4:2, 3, 22, 27, தி.மொ.) மறுபட்சத்தில், மனந்திரும்பாத பாவிகள் கொல்லப்பட்டார்கள்; அவர்களை மீட்க எந்த பலிகளும் இல்லை.—யாத்திராகமம் 21:12-15; லேவியராகமம் 17:10; 20:2, 6, 10; எண்ணாகமம் 15:30; எபிரெயர் 2:2.

18 குற்றநிவாரண பலியின் அர்த்தமும் நோக்கமும் லேவியராகமம் 5, 6 அதிகாரங்களில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. ஒருவன் அறியாமல் பாவம் செய்திருக்கலாம். இருப்பினும், அவனுடைய பாவம் உடன்தோழனுடைய அல்லது யெகோவா தேவனுடைய உரிமைகளுக்கு எதிரான குற்றமாயிருக்கலாம்; அந்தத் தவறு நிரூபிக்கப்பட வேண்டும் அல்லது சரிசெய்யப்பட வேண்டும். பல வகைப்பட்ட பாவங்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. சில தனிப்பட்ட பாவங்கள் (5:2-6), சில ‘யெகோவாவுக்கென்று பிரதிஷ்டை பண்ணப்பட்டவை சம்பந்தப்பட்ட விஷயத்தில்’ செய்யப்பட்ட பாவங்கள் (5:14-16, தி.மொ.), மேலும் சில, முற்றிலும் அறியாமையினால் நிகழாவிடினும், தவறான இச்சைகளினால் அல்லது மாம்ச பலவீனங்களினால் விளைந்த பாவங்கள் (6:1-3). தவறு செய்தவன், இத்தகைய பாவங்களை அறிக்கை செய்வதோடுகூட, தக்க நஷ்ட ஈட்டையும், யெகோவாவுக்கு குற்ற நிவாரணபலியையும் செலுத்தும்படி கட்டளையிடப்பட்டான்.—லேவியராகமம் 6:4-7.

மேம்பட்ட ஒன்று வரவிருக்கிறது

19. நியாயப்பிரமாணமும் பலிகளும் இருந்தபோதிலும், இஸ்ரவேலர் ஏன் கடவுளுடைய தயவை இழந்தனர்?

19 மோசேயின் நியாயப்பிரமாணத்தில் பல பலிகளும் காணிக்கைகளும் குறிப்பிடப்பட்டிருந்தன. இது, வாக்குப்பண்ணப்பட்ட வித்து வரும் வரையில், கடவுளுடைய தயவையும் ஆசீர்வாதத்தையும் பெறவும் காத்துக்கொள்ளவும் இஸ்ரவேலருக்கு உதவின. யூதனாய் பிறந்த அப்போஸ்தலனாகிய பவுல் இதைக் குறித்து சொன்னதாவது: “நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படுவதற்கு நியாயப்பிரமாணம் நம்மைக் கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துகிற உபாத்தியாய் இருந்தது.” (கலாத்தியர் 3:24) ஒரு ஜனமாக இஸ்ரவேலர் அந்தப் பாதுகாப்புக்குட்பட்ட நிலையை சந்தோஷமாக ஏற்றுக்கொள்ளாதது வருந்தத்தக்க விஷயம். அத்தோடு அந்தச் சிலாக்கியத்தைத் தவறாகவும் பயன்படுத்திக் கொண்டனர். இதனால், அவர்கள் எவ்வளவுதான் பலி செலுத்தினாலும், அவை யாவும் யெகோவாவுக்கு அருவருப்பூட்டின. “ஆட்டுக்கடாக்களின் தகனபலிகளும், கொழுத்த மிருகங்களின் நிணமும் எனக்கு அரோசிகமாயிருக்கிறது; காளைகள், ஆட்டுக்குட்டிகள், கடாக்களுடைய இரத்தத்தின்மேல் எனக்குப் பிரியமில்லை” என அவர் சொன்னார்.ஏசாயா 1:11.

20. நியாயப்பிரமாணத்திற்கும் பலிகளுக்கும் பொ.ச. 70-ல் என்ன நேர்ந்தது?

20 பொ.ச. 70-ல், ஆலயமும் ஆசாரியத்துவமும் கொண்ட யூத காரிய ஒழுங்குமுறை முடிவுக்கு வந்தது. அதன் பின்பு, நியாயப்பிரமாணத்தில் குறிப்பிடப்பட்டிருந்த விதமான பலிகளுக்கு இனிமேலும் அவசியமில்லாமல் போனது. நியாயப்பிரமாணத்தின் முக்கிய அம்சமான அந்தப் பலிகள் இன்று கடவுளது வணக்கத்தாருக்கு எந்த அர்த்தத்தையும் தருவதில்லையா? இதை அடுத்த கட்டுரையில் நாம் ஆராய்வோம்.

[அடிக்குறிப்புகள்]

a உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியால் ஆங்கிலத்தில் பிரசுரிக்கப்பட்ட வேதாகமங்களின்பேரில் உட்பார்வை புத்தகத்தில் இவ்வாறு விளக்கப்பட்டிருக்கிறது: “பைபிளின்படி ‘பிராயச்சித்தம்’ என்பது, ‘மூடுதல்’ அல்லது ‘பரிமாற்றம்’ என்ற அடிப்படை கருத்தைத் தருகிறது. மேலும் மற்றொன்றுக்குப் பரிமாற்றமாக அல்லது ‘மூடுவதற்காக’ கொடுக்கப்படும் அந்தப் பொருள், அச்சு மாறாமல் அதைப் போலவே இருக்க வேண்டும். . . . ஆதாம் இழந்த பரிபூரண மனித உயிருக்கு சரிசம மதிப்புள்ள பாவநிவாரண பலி செலுத்தப்பட வேண்டும்.”

b கொர்பான் என்ற எபிரெய சொல்லே அடிக்கடி “காணிக்கை” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. வேதபாரகர், பரிசேயர் ஆகியோரின் நியாயமற்ற ஒரு செயலை இயேசு கண்டித்ததைப் பற்றி மாற்கு பதிவுசெய்கையில், “கொர்பான்” என்பது “கடவுளுக்குக் காணிக்கை” என்று விளக்கினார்.—மாற்கு 7:11, பொ.மொ.

உங்களால் விளக்க முடியுமா?

• யெகோவாவுக்கு பலிகளைச் செலுத்தும்படி, பூர்வ காலத்தில் உண்மையாய் வாழ்ந்தவர்களை எது தூண்டியது?

• பலிகள் ஏன் தேவைப்பட்டன?

• நியாயப்பிரமாணத்தின்கீழ் என்ன முக்கிய பலிகள் செலுத்தப்பட்டன, அவற்றின் நோக்கம் என்ன?

• பவுலின்படி, நியாயப்பிரமாணமும் பலிகளும் என்ன நோக்கத்தைச் சேவித்தன?

[கேள்விகள்]

[பக்கம் 14-ன் படம்]

ஆபேலின் பலி பிரியமானதாய் இருந்தது, ஏனெனில் அது யெகோவாவின் வாக்குறுதியில் அவருக்கிருந்த விசுவாசத்தை வெளிக்காட்டியது

[பக்கம் 15-ன் படம்]

இந்தக் காட்சியின் உட்கருத்தை நீங்கள் மதித்துணருகிறீர்களா?