பைபிள் வாழ்க்கைக்கு ஒரு பாடபுத்தகம்
பைபிள் வாழ்க்கைக்கு ஒரு பாடபுத்தகம்
“தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையுமுள்ளதாயும் இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், . . . இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.” (எபிரெயர் 4:12) கடவுளுடைய வார்த்தையைப் பற்றிய இந்த வருணனை, பைபிள் வெறுமனே நல்ல புத்தகம் என்பதைவிட இதில் அதிகம் அடங்கியிருக்கிறது என்பதற்கு முத்திரை குத்துகிறது.
“மூச்சு விடுவது நாம் உயிர்வாழ எவ்வளவு முக்கியமோ, அதைப் போலவே பைபிளிலுள்ள செய்தியும் நம் வாழ்க்கைக்கு அவ்வளவு முக்கியம்” என சமய எழுத்தாளர் ஒருவர் சுருக்கமாக கூறினார். பின்னர் அவர் மேலும் கூறினார்: “இன்று மனிதர் எதிர்ப்படும் பிரச்சினைகளையெல்லாம் ஒவ்வொன்றாக எண்ணிப்பார்த்து, அவற்றுக்கு என்னதான் நிவாரணம் என்ற தவிப்புடன் பைபிளை வாசிக்கையில், அது தரும் பலன்கள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.” பிரகாசமாய் எரியும் ஒரு விளக்கைப் போல பைபிள் அறிவொளி வீசுகிறது. அது, நவீன நாளைய வாழ்க்கையில் எழும் கேள்விகளுக்கும் பிரச்சினைகளுக்கும் விடையளிக்கிறது.—சங்கீதம் 119:105.
பைபிளில் காணப்படும் ஞானம், நம்முடைய எண்ணங்களை வடிவமைக்கும் வலிமை பெற்றது. பிரச்சினைகளைத் தீர்க்க வல்லது, நம்முடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த வல்லது, நம்மால் மாற்றமுடியா சூழ்நிலைமைகளைச் சமாளிக்க தேவையான திறமைகளை தர வல்லது. எல்லாவற்றிற்கும் மேலாக, கடவுளை அறிந்துகொள்ளவும் அவரை நேசிக்கவும் நமக்கு பைபிள் உதவுகிறது.
நோக்கமளிக்கும் ஒரு புத்தகம்
பைபிளின் நூலாசிரியர் யெகோவா தேவன், ‘நம்முடைய வழிகளெல்லாவற்றையும் அறிவார்.’ நம்முடைய சரீர, உணர்ச்சிப்பூர்வ, ஆன்மீக தேவைகளைப் பற்றி நாம் அறிந்திருப்பதைவிட அவர் அதிகம் அறிந்திருக்கிறார். (சங்கீதம் 139:1-3) மிகவும் யோசனையோடு மனித நடத்தைக்கு தெளிவான வரம்புகளை வைத்திருக்கிறார். (மீகா 6:8) அந்த வரம்புகளையும் வழிநடத்துதல்களையும் புரிந்துகொண்டு அதற்கேற்ப வாழ கற்றுக்கொள்வது புத்திசாலித்தனமாகும். ‘யெகோவாவுடைய வேதத்தில் பிரியமாயிருக்கும்’ மனுஷன் சந்தோஷமுள்ளவன் என சங்கீதக்காரன் சொல்கிறார். ‘அவன் செய்வதெல்லாம் வெற்றிபெறும்.’ (சங்கீதம் 1:1-3, NW) இப்படியெல்லாம் பலன் கிடைக்குமென்றால் நாம் பைபிளை ஆராய்வது நிச்சயமாகவே பயனுள்ளது.
ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர் மாரிஸ், பைபிளுக்கு வரலாற்று சிறப்பும் இலக்கிய சிறப்பும் இருப்பதை எப்போதும் நம்பி வந்தார். ஆனால் இது கடவுளுடைய ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்டிருக்குமா என்பதில் அவருக்கு சந்தேகமிருந்தது. கடவுள் ஏன் மனிதர்களுக்கு தமது புத்தகத்தை கொடுத்திருக்கிறார் என்பதற்கான விளக்கத்தை கேட்ட பிறகு, மாரிஸ் பல்வேறு பைபிள் தீர்க்கதரிசனங்களை கூர்ந்து ஆராய ஆரம்பித்தார். பண்டைய வரலாறு, இலக்கியம், அறிவியல், நிலவியல் ஆகிய பாடங்களை இள வயதில் அவர் படித்திருந்தார். தனக்குத்தான் இதெல்லாம் தெரியுமே என்ற பெருமையில், பைபிள் நம்பகமானது என்பதை ஆதரிக்கும் எண்ணிலடங்கா உதாரணங்களை கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டதை இப்போது ஒப்புக்கொள்கிறார். “வாழ்க்கையில் வசதியையும் பணத்தையும் இன்பத்தையும் அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் நான்
மூழ்கிப்போயிருந்தேன். இதுவரை எழுதப்பட்ட புத்தகத்திலேயே மகத்தான புத்தகத்தின் இனிமையும் உண்மைத்தன்மையும் எனக்குத் தெரியாமலே இருந்தது வருந்தத்தக்கது.”இப்போது மாரிஸுக்கு 70 வயதுக்கு மேல் ஆகிவிட்டது. அப்போஸ்தலன் தோமாவுக்கு இயேசு அளித்த காட்சியைப் பற்றிய பதிவை உதாரணமாக பயன்படுத்தி மிகவும் நன்றியோடு இவ்வாறு கூறுகிறார். “‘இரத்தம் சொட்டும் அந்தக் காயத்தில்’ என் கையை வைத்துப் பார்த்தேன், பைபிளில் இருப்பது அனைத்தும் உண்மையா என்பதைப் பற்றி எனக்கிருந்த எல்லா சந்தேகங்களும் என் மனதிலிருந்து பறந்தே போய்விட்டன.” (யோவான் 20:24-29) பைபிள் ஒருவருடைய உள்ளத்தில் மறைந்திருக்கும் எண்ணங்களை வெளிப்படுத்தி வாழ்க்கைக்கு அர்த்தத்தைக் கொடுக்கிறது என்று அப்போஸ்தலன் பவுல் சரியாகவே சொன்னார். உண்மையிலேயே அது வாழ்க்கைக்கு ஒரு பாடபுத்தகம்தான்.
கொந்தளிக்கும் வாழ்க்கையில் ஒரு பிடிப்பு
தீய பழக்கங்களை ஒழித்துவிடுவதற்கு உதவும் ஆலோசனைகளையும் பைபிள் தருகிறது. இதனால் டேனியேலால் புகைபிடிக்கும் கெட்ட பழக்கத்தை விடமுடிந்தது, கட்டுப்பாடில்லா பார்ட்டிகளுக்குச் செல்வதையும் போதைப்பொருள் துஷ்பிரயோகத்தையும் நிறுத்த முடிந்தது. (ரோமர் 13:13; 2 கொரிந்தியர் 7:1; கலாத்தியர் 5:19-21) சொல்லப்போனால், இப்படிப்பட்ட பழக்கங்களை வேரோடு களைந்துவிட்டு “புதிய ஆளுமையைத்” தரித்துக்கொள்வதற்கு மனதில் உறுதியோடு முயற்சி செய்வது அவசியமாகும். (எபேசியர் 4:22-24, NW) “நாம் அபூரணராக இருப்பதால் இது மிகவும் கஷ்டம்” என்று டேனியேல் கூறுகிறார். ஆனாலும் அவர் இதில் வெற்றி பெற்றார். இப்போது டேனியேல் கடவுளுடைய வார்த்தையை தினந்தோறும் வாசிக்கிறார், அது யெகோவாவிடம் நெருக்கமாக இருக்க அவருக்கு உதவியாக இருக்கிறது.
டேனியேல் சிறுபிராயத்தில் பைபிளை ஒருபோதும் வாசிக்காவிட்டாலும் அதன்மீது அதிகம் மதிப்பு வைத்திருந்தார். கடவுளிடம் ஒவ்வொரு நாள் இரவும் ஜெபித்து வந்தார். ஆனாலும் ஏதோவொன்று குறைவுபட்டது. மனதில் மகிழ்ச்சி இல்லை. பைபிளில் கடவுளுடைய பெயரை முதல் முறையாக பார்த்தது அவருடைய வாழ்க்கையில் திருப்பு கட்டமாக அமைந்தது. (யாத்திராகமம் 6:3; சங்கீதம் 83:17) அதன் பின்பு, ஜெபிக்கும்போதெல்லாம் யெகோவா என்ற பெயரை பயன்படுத்தினார். அவருடைய தனிப்பட்ட உணர்வுகளை ஜெபத்தில் வெளிப்படுத்தினார். “யெகோவா எனக்கு மிகவும் நெருக்கமான நபராகிவிட்டார், இன்னும் அவரே என்னுடைய மிக நெருங்கிய நண்பர்.”
பைபிளைப் பற்றி அறிந்துகொள்வதற்கு முன்பு டேனியேலுக்கு எதிர்காலத்தைப் பற்றி எந்த நம்பிக்கையுமில்லை. “உலகம் கீழ்நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது என்பதை எந்தவொரு பாமரனும் சொல்ல முடியும். எனக்கு பயமாக இருந்தது, அதை மறப்பதற்காக நான் எதையாவது செய்துகொண்டு என்னை சுறுசுறுப்பாக வைத்துக்கொண்டேன்” என்று அவர் கூறுகிறார். அதன் பிறகு சுத்திகரிக்கப்பட்ட பூமியில் கடவுள் நீதியை நிலைநாட்டப்போகிறார், கீழ்ப்படிதலுள்ள மனிதர்கள் அங்கே நித்திய சமாதானத்தையும் மகிழ்ச்சியையும் அனுபவித்துக் களிக்கலாம் என்பதை கற்றுக்கொண்டார். (சங்கீதம் 37:10, 11; தானியேல் 2:44; வெளிப்படுத்துதல் 21:3, 4) இப்போது டேனியேலுக்கு நிச்சயமான ஒரு நம்பிக்கை இருக்கிறது. வாழ்க்கையில் நம்பிக்கையான மனநிலையைக் காத்துக்கொள்ள இந்த உறுதியான நம்பிக்கை உதவுகிறது.
உணர்ச்சிப்பூர்வ பிரச்சினைகளை சமாளிக்க உதவி
ஜார்ஜின் அம்மா இறந்துபோகையில் அவனுக்கு ஏழு வயது. இரவில் தூங்கப் போவதற்கு அவனுக்கு பயம். தூங்கிவிட்டால் காலையில் எழுந்திருப்போமா மாட்டோமா என்று அவன் யோசித்தான். அதன்பிறகு மரணத்தைப் பற்றியும் உயிர்த்தெழுதலைப் பற்றியும் இயேசு சொன்ன காரியங்களை அவன் வாசித்தான்: “கல்லறைகளில் உள்ளோர் அனைவரும் அவரது [இயேசுவின்] குரலைக் கேட்டு வெளியே வருவர்.” இயேசுவின் இந்த வார்த்தைகள் அவனை நெகிழ வைத்தன: “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்.” (யோவான் 5:28, 29, பொது மொழிபெயர்ப்பு; 11:25) இந்த வார்த்தைகள் பகுத்தறிவுக்கு ஏற்றதாயும் நியாயமாயும் ஆறுதலாயும் தொனித்தன. “இந்த சத்தியம் மனதை கவருவதோடு இதயத்தையும் நெகிழச் செய்கிறது” என்று ஜார்ஜ் கூறுகிறார்.
முன்னால் கூறப்பட்ட டேனியேலுக்கும் பயம் இருந்தது. அவனுடைய அம்மாவால் தனியாக அவனை வளர்க்க முடியவில்லை, ஆகவே பல்வேறு காப்பகங்களில் அவனை சேர்த்துவிட்டார்கள். எப்போதும் ஏதோ மூன்றாம் மனுஷன்போல் அவன் உணர்ந்தான். அன்பான ஒரு குடும்பத்தில் பாதுகாப்பாக வாழும் வாழ்க்கைக்காக அவன் மனம் ஏங்கியது. கடைசியாக ஒரு பைபிள் படிப்பின் மூலமாக அவன் தேடியது அவனுக்கு கிடைத்தது. டேனியேல் யெகோவாவின் சாட்சிகளுடைய கிறிஸ்தவ சபையோடு கூட்டுறவுகொள்ள ஆரம்பித்து, அது முதல் ஓர் ஆவிக்குரிய குடும்பத்தின் அங்கமாக ஆனான். இங்கே அவன் விரும்பிய விதமாகவே மற்றவர்கள் அவனை ஏற்றுக்கொண்டார்கள்,
மற்றவர்களுடைய பாசமும் இவனுக்குக் கிடைத்தது. ஆம், பைபிள் நடைமுறையிலும் உணர்ச்சிப்பூர்வமான தேவைகளை நிறைவுசெய்வதிலும் மிகவும் பயனுள்ளது.யெகோவா நம்முடைய இருதயத்தில் என்ன இருக்கிறது என்பதைப் பார்க்கிறார், நாம் எதற்காக தேடிக்கொண்டிருக்கிறோம் என்பது அவருக்குத் தெரியும். கடவுள் ‘இருதயங்களை நிறுத்துப்பார்த்து’ ‘அவனவன் வழிகளுக்கு தக்கதைக்’ கொடுக்கிறார்.—நீதிமொழிகள் 21:2; எரேமியா 17:10.
குடும்ப வாழ்க்கைக்கு நடைமுறை ஆலோசனை
மனித உறவுகள் சம்பந்தமாக பைபிள் நடைமுறையான ஆலோசனைகளை அள்ளி வழங்குகிறது. ஜார்ஜ் இவ்வாறு கூறுகிறார்: “வாழ்க்கையில் ஏற்படும் பிணக்கங்களே அல்லது மனஸ்தாபங்களே அதிகமான அழுத்தத்தை கொண்டுவருகின்றன.” அவற்றை எப்படி அவர் சமாளிக்கிறார்? “யாருக்காவது என்மேல் வருத்தம் என்றால், ‘முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகு’ என்று மத்தேயு 5:23, 24-ல் உள்ள நேரடியான புத்திமதியின்படி செய்கிறேன்: பிரச்சினையை நேரில் பேசித் தீர்த்துக்கொள்வதால் பலன் கிடைக்கிறது. பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் தேவ சமாதானத்தை என்னால் உணர முடிகிறது. அது பயனுள்ளது, நடைமுறையானது.”—பிலிப்பியர் 4:6, 7.
கணவனுக்கும் மனைவிக்குமிடையே கருத்து வேறுபாடு வரும்போது இருவரும் “கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்க” வேண்டும். (யாக்கோபு 1:19) இதனால் பேச்சுத்தொடர்பு கொள்வது எளிதாகிறது. ஜார்ஜ் மேலும் கூறுகிறார்: “என்னை நேசிப்பதைப் போல் என் மனைவியை நான் நேசித்து நடத்த வேண்டும் என்ற புத்திமதியைப் பின்பற்றும்போது உடனடியாக பலன்கள் கிடைப்பது தெரிகிறது. எனக்கு மரியாதை காட்டுவது அவளுக்கு எளிதாக இருக்கிறது.” (எபேசியர் 5:28-33) ஆம், நம்முடைய சொந்த அபூரணங்களை ஒப்புக்கொண்டு, அவற்றை எவ்வாறு மேற்கொள்ளலாம் என்பதையும் மற்றவர்களுடைய அபூரணங்களால் நாம் எதிர்ப்படும் பிரச்சினைகளை சமாளிப்பதில் எவ்வாறு வெற்றி காணலாம் என்பதையும் பைபிள் நமக்கு போதிக்கிறது.
காலங்காலமாக நிலைத்திருக்கும் ஆலோசனை
ஞானமுள்ள சாலொமோன் அரசன் இவ்வாறு சொன்னார்: “உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் [“யெகோவாவில்,” NW] நம்பிக்கையாயிருந்து உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.” (நீதிமொழிகள் 3:5, 6) அந்த வார்த்தைகள் எத்தனை எளிமையாக, அதே சமயத்தில் ஆழ்ந்த கருத்துள்ளதாக இருக்கின்றன!
பைபிள் நன்மை பயக்கும் சக்தி படைத்தது. கடவுளை நேசிப்போர் அவருடைய சித்தத்துக்கு இசைவாக தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொண்டு ‘கர்த்தருடைய வேதத்தின்படி நடப்பதில்’ சந்தோஷம் காண உதவுகிறது. (சங்கீதம் 119:1) நம்முடைய சூழ்நிலைமைகள் என்னவாக இருந்தாலும் நமக்கு தேவையான அறிவுரையும் ஆலோசனையும் பைபிளில் இருக்கிறது. (ஏசாயா 48:17, 18) தினந்தோறும் அதை வாசித்து, தியானம் செய்து அதைப் பின்பற்றுங்கள். உங்களுடைய மனம் சலனமில்லாமல் தெள்ளிய நீரோடையாக இருக்கும். தூய விஷயங்களின் மீது, ஆரோக்கியமான விஷயங்களின் மீது உங்கள் கவனம் ஒருமுகப்பட்டிருக்கும். (பிலிப்பியர் 4:8, 9) எப்படி வாழ்வது, எப்படி வாழ்வை அனுபவிப்பது என்பதை மட்டுமல்லாமல் உயிரின் படைப்பாளரை எப்படி நேசிப்பது என்பதையும் கற்றுக்கொள்வீர்கள்.
இப்படி செய்வதால் லட்சக்கணக்கான மற்ற அநேகருக்கு இருப்பது போல, பைபிள் வெறுமென நல்ல ஒரு புத்தகமாக மட்டுமில்லாமல் வாழ்க்கைக்கு ஒரு பாடபுத்தகமாக இருக்கும்!
[பக்கம் 6-ன் படம்]
தீய பழக்கங்களை மேற்கொள்வதற்கு ஒருவர் எடுக்கும் தீர்மானத்தை பைபிள் பலப்படுத்துகிறது
[பக்கம் 7-ன் படம்]
கடவுளிடம் எவ்வாறு நெருங்கிவரலாம் என்பதை பைபிள் உங்களுக்கு கற்பிக்கிறது