‘யெகோவாவுக்கு நான் என்ன கைமாறு செய்வேன்?’
வாழ்க்கை சரிதை
‘யெகோவாவுக்கு நான் என்ன கைமாறு செய்வேன்?’
மாரியா கெராசினிஸ் சொன்னது
அப்போது எனக்கு 18 வயது; தங்கள் மனதை சுக்குநூறாக்கிவிட்ட பாவி மகளென்று அப்பா அம்மா என்னை கருதினார்கள்; என் குடும்பத்தார் அனைவருமே என்னை வெறுத்து ஒதுக்கினார்கள்; அதுமட்டுமல்ல, ஊர் ஜனங்கள்கூட என்னை கேலி கிண்டல் செய்தார்கள். கடவுளிடமிருந்த என் உத்தமத்தை முறித்துப் போடுவதற்காக என் குடும்பத்தார் என்னிடம் கெஞ்சிப் பார்த்தார்கள், கட்டாயப்படுத்திப் பார்த்தார்கள், பயமுறுத்திப் பார்த்தார்கள்—ஆனால் நான் எதற்கும் அசையவில்லை. பைபிள் சத்தியத்தை உண்மையுடன் கடைப்பிடிக்கும்போது ஆன்மீக நன்மைகள் கிடைக்குமென்ற முழு நம்பிக்கை எனக்கு இருந்தது. யெகோவாவுக்கு சேவை செய்த கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலான அந்தக் காலப் பகுதியை பின்னிட்டுப் பார்க்கும் இவ்வேளையில், சங்கீதக்காரனின் வார்த்தைகளையே நானும் ஒத்துக்கொள்கிறேன்: “யெகோவா எனக்கு செய்த எல்லா நன்மைகளுக்காகவும் அவருக்கு நான் என்ன கைமாறு செய்வேன்?”—சங்கீதம் 116:12, NW.
நான் பிறந்த வருடம்: 1930; பிறந்த ஊர்: அன்ஜெலோகாஸ்ட்ரா என்ற கிராமம்; கொரிந்துவின் பூசந்திக்கு கிழக்கே அமைந்திருந்த கெங்கிரேயாவின்—முதல் நூற்றாண்டில், உண்மை கிறிஸ்தவர்களின் ஒரு சபை இங்கு நிறுவப்பட்டிருந்தது—துறைமுகப் பகுதியிலிருந்து சுமார் 20 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ளது அந்தக் கிராமம்.—அப்போஸ்தலர் 18:18; ரோமர் 16:1.
எங்கள் குடும்பத்தில் அமைதி தவழ்ந்தது. என் அப்பா ஊர் தலைவராக இருந்தார்; எல்லாரும் அவரை உயர்வாக மதித்தார்கள். ஐந்து பிள்ளைகளில் நான் மூன்றாவது. அப்பா அம்மா எங்களை கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சர்ச்சில் முழு ஈடுபாடுள்ளவர்களாக வளர்த்தார்கள். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தவறாமல் சர்ச் பூசையில் கலந்துகொண்டேன். உருவப்படங்கள் முன் விழுந்து வணங்கி, வாய் ஓயாமல் பிரார்த்தனை செய்தேன். கிராமப்புற சர்ச்சுகளில் மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்தேன்; அதுமட்டுமல்ல, எல்லா வகையான உபவாசங்களையும் கடைப்பிடித்தேன். ஒரு கன்னியாஸ்திரீ ஆகிவிடலாமா என்றும்கூட அடிக்கடி யோசித்திருக்கிறேன். ஆனால், கொஞ்ச நாளுக்குள்ளேயே அப்பா அம்மாவின் மனதை உடைத்துப் போட்ட முதல் பிள்ளையானேன்.
பைபிள் சத்தியம் மெய் சிலிர்க்க வைத்தது
அப்போது எனக்கு ஏறக்குறைய 18 வயது; பக்கத்து ஊரிலிருந்த காட்டீனா—என் அக்காவின் கணவருடைய சகோதரி—யெகோவாவின் சாட்சிகளது பிரசுரங்களைப் படித்துக் கொண்டிருந்ததாகவும் சர்ச்சுக்கு போவதை நிறுத்திவிட்டதாகவும் கேள்விப்பட்டேன். இதை அறிந்து ரொம்பவும் சங்கடப்பட்டேன். எனவே, சரி என நான் நினைத்திருந்த பாதைக்கு அவளை மறுபடியும் கொண்டு வர வேண்டும் என்று தீர்மானித்தேன். அதனால், ஒருமுறை அவள் எங்கள் வீட்டிற்கு வந்தபோது, பாதிரி வீட்டுக்கு எப்படியாவது அவளை கூட்டிப்போக வேண்டும் என்ற எண்ணத்துடன், என்னோடு ‘வாக்கிங்’ வருமாறு அழைத்தேன். அந்தப் பாதிரி எடுத்தவுடனேயே யெகோவாவின் சாட்சிகளை தாக்கு தாக்கு என்று தாக்கிப் பேசினார். அவர்களை, காட்டீனாவை மோசம் போக்கிய மதபேதவாதிகள் என்று குறிப்பிட்டார். அடுத்தடுத்து மூன்று இரவுகளுக்கு விவாதம் தொடர்ந்தது. நன்கு தயாரித்திருந்த பைபிள் விவாதங்களை பயன்படுத்தி அவருடைய எல்லா குற்றச்சாட்டுகளையும் பொய்யென காட்டீனா நிரூபித்தாள். கடைசியில், அந்தப் பாதிரி காட்டீனாவிடம் என்ன சொன்னார் தெரியுமா? ‘இவ்வளவு அழகு அறிவெல்லாம் உனக்கு இருக்கு. அதனால உன்னோட இளமையை வீணடிச்சிராதே; கடவுளைப் பத்தியெல்லாம் வயசான காலத்திலே பாத்துக்கலாம்’ என்றார்.
பாதிரியோடு நடத்திய அந்தக் கலந்துரையாடலைப் பற்றி அப்பா அம்மாவிடம் நான் மூச்சுவிடவில்லை; என்றாலும், அதற்கடுத்த ஞாயிற்றுக்கிழமை நான் சர்ச்சுக்கு போகாமலேயே இருந்துவிட்டேன். அன்று மத்தியான வேளையில், அந்தப் பாதிரி சரசரவென்று நேராக எங்கள் கடைக்கே வந்துவிட்டார். அப்பாவுக்கு உதவியாக கடையிலே இருக்க வேண்டியிருந்ததால்தான் சர்ச்சுக்கு வரமுடியவில்லை என்று ஒரு காரணத்தை சொல்லி மழுப்பினேன்.
அதற்கு அந்தப் பாதிரி, “நிஜமாவே அதுதான் காரணமா, இல்ல . . . அந்தப் பொண்ணு உன்னையும் கெடுத்துட்டாளா?” என என்னிடம் கேட்டார்.
“நம்ம நம்பிக்கைகளைவிட அந்த ஜனங்களோட நம்பிக்கைகள் எவ்வளவோ மேல்” என்று பட்டென்று பதிலளித்தேன்.
அப்போது அவர் என் அப்பாவை பார்த்து, “மிஸ்டர் இக்கானாமாஸ், உங்க சொந்தக்கார பொண்ணை உடனடியா வீட்டைவிட்டு துரத்திடுங்க; அவ உங்க வீட்டுக்கே உலை வைச்சிட்டா” என்றார்.
என் குடும்பம் என்னை எதிர்த்தது
1940-களின் இறுதிப் பகுதி அது; கிரீஸ் நாடு உள்நாட்டுப் போரினால் படு பயங்கர பாதிப்புகளை சந்தித்து வந்த சமயம். கொரில்லா படையினர் எங்கே என்னை பிடித்துக்கொண்டு போய்விடுவார்களோ என்று பயந்த அப்பா, பக்கத்து கிராமத்திலிருந்த அக்கா வீட்டுக்கு என்னை அனுப்பி வைத்தார்; அந்தக் கிராமத்தில்தான் காட்டீனா வசித்து வந்தாள். இரண்டு மாதத்திற்கு அங்கேயே தங்கினேன்; அந்த சமயத்தின்போது பைபிளிலுள்ள ஏராளமான விஷயங்களைப் பற்றி கற்றுக்கொண்டேன். ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் அநேக கோட்பாடுகள் வேதப்பூர்வமற்றவை என்பதை தெரிந்துகொண்டபோது என் மனம் உடைந்துபோனது. உருவப்படங்களை வைத்து வணங்கும் வணக்கத்தை கடவுள் ஏற்றுக்கொள்வதில்லை என்று அறிந்துகொண்டேன்; அதோடு, பல்வேறு பாரம்பரிய மதப் பழக்கவழக்கங்கள்—சிலுவையை வணங்குவது போன்ற மத பழக்கவழக்கங்கள்—கிறிஸ்தவ மதத்திலிருந்து தோன்றவில்லை என்பதையும், கடவுளை பிரியப்படுத்த வேண்டுமானால் “ஆவியோடும் உண்மையோடும்” மட்டுமே அவரை தொழுதுகொள்ள வேண்டும் என்பதையும் தெரிந்துகொண்டேன். (யோவான் 4:23; யாத்திராகமம் 20:4, 5) எல்லாவற்றிற்கும் மேலாக, பூமியில் என்றென்றும் வாழப்போகும் ஒளிமயமான எதிர்காலத்தைப் பற்றி பைபிள் நம்பிக்கை அளிக்கிறதென்று கற்றுக்கொண்டேன். ஆரம்பத்தில் யெகோவாவிடமிருந்து நான் தனிப்பட்ட விதத்தில் பெற்றுக்கொண்ட நன்மைகளில் இத்தகைய மதிப்புமிக்க பைபிள் சத்தியங்களும் அடங்கும் என்றே சொல்வேன்.
இதற்கிடையே, சாப்பாட்டு வேளைகளின்போது நான் சிலுவைக் குறி போடாததையும் உருவப்படங்களை வணங்காததையும் என் அக்காவும் அவர் கணவரும் கவனித்தார்கள். அதனால் ஒரு நாள் இராத்திரி இருவரும் சேர்ந்து என்னை அடித்தார்கள். அடுத்த நாளே அவர்கள் வீட்டைவிட்டு வெளியேற தீர்மானித்தேன்; அங்கிருந்து என் சித்தி வீட்டுக்குப் போனேன். என் அக்காவின் கணவர் இந்த விஷயத்தை அப்பாவுக்கு தெரியப்படுத்தினார். அதன்பின் சீக்கிரத்திலேயே அப்பா என்னை பார்க்க வந்தார்; கண்ணீர் வடித்து என் மனதை மாற்ற முயன்றார். என் அக்கா கணவரோ எனக்கு முன் மண்டியிட்டு தன்னை மன்னிக்குமாறு கெஞ்சினார்; அதன்படியே அவரை மன்னித்தேன். பிரச்சினைக்கு தீர்வாக, என்னை திரும்பவும் சர்ச்சுக்கு வந்துவிடுமாறு அழைத்தார்கள்; ஆனால் என் தீர்மானத்தில் உறுதியாக இருந்தேன்.
அப்பாவின் கிராமத்திற்கு நான் திரும்பி சென்றபோது, பிரச்சினைகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தன. காட்டீனாவோடு எவ்விதத்திலும் என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை, படிப்பதற்கு எந்தப் பிரசுரமும் என் கைவசம் இருக்கவில்லை, பைபிள்கூட இருக்கவில்லை. என் பெரியப்பா மகள் எனக்கு உதவி செய்ய முயன்றபோது, ரொம்பவே சந்தோஷப்பட்டேன். அவள் கொரிந்து பட்டணத்திற்கு சென்றிருந்த சமயத்தில், யெகோவாவின் சாட்சி ஒருவரை சந்தித்து, “தேவனே சத்தியபரர்” (ஆங்கிலம்) என்ற புத்தகத்தையும் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் ஒரு பிரதியையும் எனக்காக வாங்கி வந்தாள்; அவற்றை யாருக்கும் தெரியாமல் ஒளித்து ஒளித்து வாசிக்க ஆரம்பித்தேன்.
வாழ்க்கையில் திடீர் திருப்பம்
மூன்று வருடங்களுக்கு கடும் எதிர்ப்பு தொடர்ந்தது. யெகோவாவின் சாட்சிகளோடு எனக்கு எந்தத் தொடர்பும் வைக்க முடியவில்லை, அவர்களுடைய எந்தப் பிரசுரங்களையும் பெற்றுக்கொள்ளவும் முடியவில்லை. என்றாலும், எனக்குத் தெரியாமலேயே, என் வாழ்க்கையில் பெரும் மாற்றங்கள் சீக்கிரத்தில் நிகழ இருந்தன.
தெஸ்ஸலோனிகியிலிருந்த என் மாமா வீட்டுக்கு என்னை போகும்படி அப்பா என்னிடம் சொன்னார். அங்கு போவதற்கு முன், கோட் ஒன்று தைப்பதற்காக கொரிந்துவிலிருந்த ஒரு டெய்லர் கடைக்கு போனேன். என்ன ஆச்சரியம், அந்தக் கடையில் காட்டீனா வேலை பார்த்துக் கொண்டிருந்தாள்! நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒருவரையொருவர் பார்த்தபோது, சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போனோம்.
நாங்கள் இருவரும் கடையைவிட்டு வெளியே வந்த சமயத்தில், மிக இனிய சுபாவமுள்ள இளைஞர் ஒருவரை சந்தித்தோம்; அவர் தன் வேலையை முடித்துவிட்டு, சைக்கிளில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அவருடைய பெயர் காராலாம்பூஸ். நாங்கள் ஒருவரையொருவர் புரிந்துகொண்ட பிறகு, திருமணம் செய்துகொள்ள தீர்மானித்தோம். கிட்டத்தட்ட அதே சமயத்தில்தான், ஜனவரி 9, 1952-ல், யெகோவாவுக்கு என்னை ஒப்புக்கொடுத்ததன் அடையாளமாக முழுக்காட்டுதல் பெற்றேன்.காராலாம்பூஸ் ஏற்கெனவே முழுக்காட்டுதல் பெற்றிருந்தார். அவரும்கூட தன் குடும்பத்தாரிடமிருந்து எதிர்ப்பை சந்தித்திருந்தார். அவர் மிகவும் வைராக்கியமுள்ளவராக இருந்தார். சபை ஊழியருக்கு உதவியாளராக சேவை செய்தார்; அதோடு அநேக பைபிள் படிப்புகளையும் நடத்தினார். சீக்கிரத்திலேயே அவருடைய அண்ணன்மாரும் சத்தியத்தை ஏற்றுக்கொண்டார்கள்; இன்று அவர்களுடைய குடும்பங்களிலுள்ள பெரும்பாலோரும் யெகோவாவை சேவிக்கிறார்கள்.
என் அப்பாவுக்கு காராலாம்பூஸை ரொம்பவே பிடித்துப்போனதால், எங்கள் திருமணத்திற்கு அவர் ஒத்துக்கொண்டார்; ஆனால் அம்மாவை அவ்வளவு சுலபமாக சம்மதிக்க வைக்க முடியவில்லை. இருந்தாலும், மார்ச் 29, 1952-ல், எங்கள் திருமணம் நடந்தது. என்னுடைய மூத்த அண்ணனும் ஒன்றுவிட்ட சகோதரர்களில் ஒருவரும் மட்டுமே எங்கள் திருமணத்திற்கு வந்திருந்தார்கள். காராலாம்பூஸ் எனக்கு எப்பேர்ப்பட்ட ஒப்பற்ற ஆசீர்வாதமாக—யெகோவாவிடமிருந்து கிடைத்த மெய்யான பரிசாக—இருக்கப் போகிறார் என்பதை அப்போது நான் கொஞ்சமும் அறிந்திருக்கவில்லை! அவருடைய துணையாக, நான் என் வாழ்க்கையில் யெகோவாவின் சேவையை மையமாக வைக்க முடிந்தது.
சகோதரர்களை பலப்படுத்துதல்
1953-ல், நானும் காராலாம்பூஸும் ஏதன்ஸ் நகருக்கு குடிபெயர்ந்து செல்ல முடிவு செய்தோம். பிரசங்க வேலையில் அதிகமாக ஈடுபட வேண்டும் என காராலாம்பூஸ் விரும்பினார்; அதனால் தன் குடும்பத் தொழிலை விட்டுவிட்டு, பகுதிநேர வேலையை செய்ய ஆரம்பித்தார். மதிய வேளைகளில், நாங்கள் இருவரும் கிறிஸ்தவ ஊழியத்தை சேர்ந்து செய்தோம்; ஏராளமான பைபிள் படிப்புகளை நடத்தினோம்.
ஊழியத்திற்கு அரசாங்கத் தடைகள் இருந்ததால், நாங்கள் சமயோசிதமாக நடந்துகொள்ள வேண்டியிருந்தது. உதாரணத்திற்கு, காவற்கோபுரம் பத்திரிகையின் ஒரு பிரதியை, எல்லாரும் பார்க்கும் விதத்தில் ஏதன்ஸ் நகரின் மையப் பகுதியிலிருந்த பெட்டிக்கடை ஒன்றில்—அங்குதான் என் கணவர் பகுதிநேர வேலை பார்த்து வந்தார்—வைக்க வேண்டும் என்று தீர்மானித்தோம். அந்தப் பத்திரிகை தடை செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் எங்களிடம் சொன்னார். என்றபோதிலும், அந்தப் பத்திரிகையை பற்றி இன்னுங்கொஞ்சம் விசாரிப்பதற்காக பாதுகாப்பு அலுவலகத்திற்கு எடுத்துச் செல்ல தனக்கு ஒரு பிரதியை தருமாறு கேட்டார். அந்தப் பத்திரிகை சட்டப்பூர்வமானதுதான் என்று பாதுகாப்பு அலுவல் அதிகாரிகள் ஊர்ஜிதப்படுத்தியதும், அதைப் பற்றி சொல்வதற்காக எங்களிடம் திரும்பி வந்தார். பெட்டிக்கடைகளை வைத்திருந்த சகோதரர்கள் இதைக் கேள்விப்பட்டதும், தங்கள் கடைகளிலும் காவற்கோபுரம் பத்திரிகையின் பிரதிகளை எல்லாரும் பார்க்கும் விதத்தில் வைக்க ஆரம்பித்தார்கள். எங்கள் பெட்டிக்கடையிலிருந்து காவற்கோபுரம் பத்திரிகையை பெற்றுக்கொண்ட ஒருவர், பிற்பாடு யெகோவாவின் சாட்சியானார், இப்போது அவர் ஒரு மூப்பராக சேவை செய்து வருகிறார்.
என்னுடைய கடைசி தம்பி சத்தியத்தை கற்றுக்கொண்டதை காணும் பாக்கியமும் எங்களுக்கு கிடைத்தது. வணிகக் கப்பல்துறைக் கல்லூரியில் பயில்வதற்காக அவன் ஏதன்ஸ் நகருக்கு வந்திருந்தான்; அப்போது நடைபெற்ற ஒரு மாநாட்டிற்கு எங்களோடு அவனையும் அழைத்து சென்றோம். மாநாடுகள் அச்சமயத்தில் காட்டுப் பகுதிகளில் இரகசியமாக நடத்தப்பட்டன. அங்கு கேட்ட விஷயங்கள் அவனுக்கு பிடித்திருந்தது, ஆனால் அதன்பின் சீக்கிரத்திலேயே வணிகக் கப்பல் மாலுமியாக அவன் வெவ்வேறு இடங்களுக்கு பயணிக்க வேண்டியிருந்தது. அப்படி அவன் பயணித்தபோது, ஒருமுறை அர்ஜென்டினாவிலிருந்த துறைமுகம் ஒன்றை அடைந்தான். அங்கே சாட்சி கொடுப்பதற்காக ஒரு மிஷனரி சகோதரர் அந்தக் கப்பலில் ஏறினார். அப்போது என் தம்பி அவரிடமிருந்து பத்திரிகைகளை கேட்டு வாங்கிக்கொண்டான். பிற்பாடு, அவனிடமிருந்து எங்களுக்கு ஒரு கடிதம் வந்தது, அதில்: “சத்தியத்தை நான் கண்டடைந்துவிட்டேன். தயவுசெய்து அந்தப் பத்திரிகைகளை எனக்கு தொடர்ந்து அனுப்பி வையுங்கள்” என்று எழுதியிருந்தான். அதைப் படித்ததும் சந்தோஷத்தில் எங்களுக்கு தலைகால் புரியவில்லை. இன்று, அவனும் அவன் குடும்பத்தாரும் யெகோவாவை உண்மையோடு சேவித்து வருகிறார்கள்.
1958-ல், என் கணவர் வட்டாரக் கண்காணியாக சேவை செய்ய அழைக்கப்பட்டார். அங்கு பிரசங்க வேலை தடையுத்தரவின் கீழ் இருந்ததாலும், நிலைமை கடுமையானதாக இருந்ததாலும், வட்டாரக் கண்காணிகள் பொதுவாக தங்கள் மனைவிகளை எல்லா இடங்களுக்கும் கூடவே கூட்டிக்கொண்டு போகவில்லை. ஆனால், நான் என் கணவரோடு போவதற்காக அக்டோபர் 1959-ல், கிளை அலுவலகத்தில் பொறுப்பு வகித்த சகோதரர்களிடம் அனுமதி கேட்டோம். அதற்கு அவர்கள் ஒத்துக்கொண்டார்கள். நாங்கள் கிரீஸ் நாட்டின் மத்திபப்
பகுதியிலும் வடக்கிலும் இருந்த சபைகளை சந்தித்து, அவற்றை பலப்படுத்த வேண்டியிருந்தது.அந்தப் பயணங்கள் படு சிரமமாக இருந்தன. வெகு சில இடங்களில் மட்டுமே ரோடுகள் போடப்பட்டிருந்தன. எங்களுக்கு கார் இல்லாததால், நாங்கள் பொது வாகனங்களிலோ அல்லது கோழி மற்றும் இதர சாமான்களை ஏற்றி சென்ற ட்ரக்குகளிலோதான் வழக்கமாக பயணித்தோம். சேறும் சகதியும் நிறைந்த பாதைகளில் நடந்து செல்வதற்கு வசதியாக ரப்பர் பூட்ஸுகளை அணிந்துகொண்டோம். ஒவ்வொரு கிராமத்திலும் ஆயுதம் ஏந்திய சில ஆட்கள் காவல் காத்து வந்ததால், அவர்களுடைய விசாரணைகளை தவிர்ப்பதற்காக நன்கு இருட்டின பிறகே கிராமங்களுக்குள் நுழைந்தோம்.
இவ்வாறு சபைகளை சந்தித்ததை சகோதரர்கள் பெரிதும் போற்றினார்கள். அவர்களில் பெரும்பாலோர் வயல்களில் மாடாய் உழைத்துவிட்டு வந்தாலும், இரவு நெடுநேரம் கழித்து வெவ்வேறு வீடுகளில் நடைபெற்ற கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக தங்களாலான அத்தனை முயற்சிகளையும் செய்தார்கள். அதோடு சகோதரர்கள் எங்களை மிகவும் உபசரித்தார்கள்; அவர்களிடம் இருந்ததே கொஞ்சம்தான், ஆனாலும் அவர்களிடமிருந்த மிகச் சிறந்தவற்றையே எங்களுக்கு கொடுத்தார்கள். சில வேளைகளில், முழு குடும்பத்தாரோடு சேர்ந்து நாங்கள் ஒரே அறையில் படுத்து உறங்கினோம். சகோதரர்களுடைய விசுவாசமும், சகிப்புத்தன்மையும், வைராக்கியமும் உண்மையிலேயே எங்களுக்கு இன்னுமொரு பெரிய நன்மையாக அமைந்தது.
சேவையை விரிவாக்குதல்
பிப்ரவரி, 1961-ல், ஏதன்ஸ் நகரிலிருந்த கிளை அலுவலகத்தை நாங்கள் சுற்றிப்பார்க்க சென்றிருந்தபோது, பெத்தேலில் சேவை செய்ய எங்களுக்கு விருப்பமிருக்கிறதா என்று கேட்டார்கள். “இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும்” என ஏசாயா தீர்க்கதரிசி சொன்னது போலவே நாங்களும் சொன்னோம். (ஏசாயா 6:8) இரண்டு மாதம் கழித்து, எங்களுக்கு ஒரு கடிதம் வந்தது; எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பெத்தேலுக்கு வருமாறு அதில் எழுதப்பட்டிருந்தது. இதனால், மே 27, 1961-ல், எங்கள் பெத்தேல் சேவையை தொடங்கினோம்.
எங்களுடைய புதிய நியமிப்பை மிகவும் விரும்பி செய்தோம்; பழக்கப்பட்ட இடத்தில் இருந்ததைப் போல அப்போதே உணர ஆரம்பித்தோம். என் கணவர் சர்வீஸ் டிப்பார்ட்மென்ட்டிலும் சந்தா டிப்பார்ட்மென்ட்டிலும் சேவை செய்தார்; பிற்பாடு கொஞ்ச காலத்திற்கு கிளை அலுவலக குழுவிலும் சேவித்தார். ஹோம் டிப்பார்ட்மென்ட்டில் பல்வேறு வேலைகளை நான் செய்ய வேண்டியிருந்தது. அப்போது பெத்தேலில் 18 பேர் இருந்தார்கள், ஆனால் மூப்பர்களுக்கான பள்ளி ஒன்று பெத்தேலில் நடத்தப்பட்டதால் ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளுக்கு மொத்தம் சுமார் 40 பேர் அங்கு தங்கியிருந்தார்கள். காலை நேரங்களில், நான் பாத்திரங்களை கழுவினேன், சமையல் செய்துவந்த சகோதரருக்கு கூடமாட ஒத்தாசை புரிந்தேன், 12 படுக்கைகளை ரெடி செய்தேன், அதோடு மதிய உணவுக்காக டேபிள்களை தயார் செய்தேன். மத்தியான வேளைகளில், துணிகளுக்கு இஸ்திரி போட்டேன், கழிவறைகளையும் ரூம்களையும் சுத்தம் செய்தேன். வாரத்திற்கு ஒரு முறை லாண்டிரியிலும் வேலை பார்த்தேன். பெத்தேலில் ஏகப்பட்ட வேலை இருந்தது என்னவோ உண்மைதான், ஆனால் அங்கு சேவை செய்ய முடிந்ததற்காக சந்தோஷப்பட்டேன்.
பெத்தேல் நியமிப்புகளிலும், வெளி ஊழியத்திலும் படு மும்முரமாக ஈடுபட்டோம். அநேக முறை கிட்டத்தட்ட ஏழு பைபிள் படிப்புகள் வரை நடத்தினோம். வார இறுதிநாட்களில், பேச்சுகள் கொடுப்பதற்காக காராலாம்பூஸ் பல்வேறு சபைகளுக்கு சென்றபோதெல்லாம் நானும் கூடவே சென்றேன். நாங்கள் இணைபிரியா தம்பதிகளாக இருந்தோம்.
கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சர்ச்சோடு நெருங்கிய கூட்டுறவு வைத்திருந்த ஒரு தம்பதியினரோடு நாங்கள் பைபிள் படிப்பு நடத்தினோம்; மதபேதவாதிகளை கண்டுபிடிக்கும் சர்ச் குழுவுக்கு தலைமை தாங்கிய பாதிரிக்கு இவர்கள் நெருக்கமான நண்பர்களாக இருந்தார்கள். இவர்களுடைய வீட்டில் ஒரு அறை முழுக்க உருவப்படங்களை வைத்திருந்தார்கள்; அந்த அறையில் எப்போது பார்த்தாலும் சாம்பிராணிப் புகை போடப்பட்டிருந்தது, அதோடு பூர்வ கிரேக்க பக்திப்பாடல்கள் நாள் பூராவும் ஒலித்துக்கொண்டிருந்தது. கொஞ்ச காலத்திற்கு, இந்தத் தம்பதியை நாங்கள் வியாழக்கிழமைகளில் சந்தித்து பைபிள் படிப்பை நடத்தினோம். அவர்களுடைய பாதிரி நண்பரோ வெள்ளிக்கிழமைகளில் அவர்களை சந்தித்தார். ஒருநாள், கண்டிப்பாக தங்கள் வீட்டிற்கு வருமாறு எங்களை அழைத்தார்கள், எங்களுக்கு ஏதோவொரு இன்ப அதிர்ச்சி கொடுக்கப்போவதாக சொன்னார்கள். அவர்கள் வீட்டிற்கு சென்றதுமே, முதலில் எங்களுக்கு அந்த அறையை காண்பித்தார்கள். அந்த அறையே காலியாக இருந்தது, எல்லா உருவப்படங்களையும் எடுத்துவிட்டு, அந்த அறையையே புதிதாக்கியிருந்தார்கள். இந்தத் தம்பதி பிறகு மேலுமான முன்னேற்றங்களை செய்து, முழுக்காட்டுதலும் பெற்றார்கள். நாங்கள் பைபிள் படிப்பு நடத்தியவர்களில் சுமார் 50 பேர் தங்கள் வாழ்க்கையை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் பெற்றதை காணும் சந்தோஷத்தை நாங்கள் அடைந்திருக்கிறோம்.
அபிஷேகம் செய்யப்பட்ட சகோதரர்களோடு கூட்டுறவு கொண்டது நான் அனுபவித்த ஒரு விசேஷ நன்மையாக இருந்தது. ஆளும் குழு அங்கத்தினர்களான சகோதரர்கள் நார், ஃபிரான்ஸ், ஹென்ஷெல் போன்றோர் எங்களை சந்தித்தபோது, நாங்கள் அளவிலா ஊக்கத்தை பெற்றோம். பெத்தேலில் சேவை செய்வதை பெரும் மதிப்புமிக்க பாக்கியமாக கருதுகிறேன்—இந்தச் சேவையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நான் செலவிட்ட பிறகும்கூட அப்படித்தான் உணருகிறேன்.
வியாதியையும் இழப்பையும் சமாளித்தல்
1982-ல், என் கணவரிடம் அல்ஸைமர் நோயிற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்தன. 1990-க்குள் அவருடைய உடல்நிலை படு மோசமானது, அதன்பின் அவருக்கு தொடர்ச்சியான கவனிப்பு தேவைப்பட்டது. அவருடைய வாழ்க்கையின் அந்தக் கடைசி எட்டு வருடங்களில் நாங்கள் பெத்தேலைவிட்டு வெளியே எங்கும் போகவில்லை. பெத்தேலில் இருந்த அநேக அன்பான சகோதரர்களும் பொறுப்புகளிலிருந்த கண்காணிகளும் எங்களுக்கு உதவுவதற்காக ஏற்பாடுகள் செய்தார்கள். அவர்களுடைய அன்பான உதவி கிடைத்தபோதிலும், என் கணவரை கவனித்துக்கொள்வதற்காக இராப்பகலாக நான் கண் விழித்திருக்க வேண்டியிருந்தது. சில சமயங்களில் காரியங்களை என்னால் கொஞ்சம்கூட சமாளிக்க முடியாதளவுக்கு கஷ்டமாக உணர்ந்திருக்கிறேன், எத்தனையோ இரவுகளை உறங்காமல் கழித்திருக்கிறேன்.
ஜூலை 1998-ல், என் பிரியமான கணவர் இறந்துபோனார். அவருடைய இழப்பு தாங்க முடியாததாக இருந்தாலும், இப்போது அவர் நல்ல கைகளில் இருக்கிறார் என்பதை அறிந்து ஆறுதலடைகிறேன்; ஆம், உயிர்த்தெழுதலின்போது, மற்ற கோடானுகோடி ஜனங்களோடு என் கணவரையும் யெகோவா நினைவுகூருவார் என்று எனக்கு நன்றாக தெரியும்.—யோவான் 5:28, 29.
யெகோவா கொடுத்துள்ள நன்மைகளுக்கு நன்றி
என் கணவரை இழந்துவிட்டிருந்தாலும், இப்போது நான் ஒரு தனிமரமாக இல்லை. பெத்தேலில் சேவை செய்யும் சிலாக்கியம் இன்னமும் எனக்கு இருக்கிறது; முழு பெத்தேல் குடும்பத்தின் அன்பையும் ஆதரவையும் நான் ரொம்பவே அனுபவித்து மகிழ்கிறேன். என்னுடைய “பெரிய” குடும்பத்திலுள்ள ஆவிக்குரிய சகோதர சகோதரிகள் கிரீஸ் எங்கும் இருக்கிறார்கள். இப்பொழுது எனக்கு 70 வயதுக்கு மேலாகிறது, ஆனாலும் பெத்தேல் கிச்சனிலும் டைனிங் ரூமிலும் முழு நாளும் என்னால் வேலை செய்ய முடிகிறது.
நியு யார்க்கிலுள்ள யெகோவாவின் சாட்சிகளது தலைமை அலுவலகத்தை போய் பார்க்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவாக இருந்தது, அந்தக் கனவு 1999-ல் நனவானது. அப்போது நான் எப்படி உணர்ந்தேன் என்பதை விவரிக்க வார்த்தைகளே கிடையாது. என்னை பலப்படுத்திய, மறக்க முடியாத ஒரு அனுபவமாக அது இருந்தது.
கடந்த காலத்தை பின்னிட்டுப் பார்க்கையில், என்னுடைய வாழ்க்கையை மிகச் சிறந்த விதத்தில் பயன்படுத்தியிருப்பதாகத்தான் உளமாற நம்புகிறேன். யெகோவாவுக்கு முழுநேரம் சேவை செய்வதே மிகச் சிறந்த வாழ்க்கை பணியென்று சொல்வேன். எனக்கு எந்தக் குறையும் இருந்ததில்லை, ஆம் இதை என்னால் நம்பிக்கையோடு சொல்ல முடியும். என் கணவரையும் என்னையும் ஆவிக்குரிய பிரகாரமாகவும் சரீரப் பிரகாரமாகவும் யெகோவா அன்போடு கவனித்துக்கொண்டார். “யெகோவா எனக்கு செய்த எல்லா நன்மைகளுக்காகவும் அவருக்கு நான் என்ன கைமாறு செய்வேன்?” என்று சங்கீதக்காரன் ஏன் சொன்னார் என்பதை என் சொந்த அனுபவத்திலிருந்து புரிந்திருக்கிறேன்.—சங்கீதம் 116:12, NW.
[பக்கம் 26-ன் படம்]
நானும் காராலாம்பூஸும் இணைபிரியா தம்பதிகளாக இருந்தோம்
[பக்கம் 27-ன் படம்]
என் கணவர், கிளை அலுவலகத்திலிருந்த அவரது ஆபீஸில்
[பக்கம் 28-ன் படம்]
பெத்தேல் சேவையை பெரும் மதிப்புமிக்க பாக்கியமாக கருதுகிறேன்