‘அவருடைய மதத்தை மதிக்க எங்களுக்கு கற்பித்தார்’
‘அவருடைய மதத்தை மதிக்க எங்களுக்கு கற்பித்தார்’
இத்தாலியில் ரோவிகோ மாகாணத்தைச் சேர்ந்த ஒரு பெண் தனக்கு புற்றுநோய் கட்டி இருப்பதை அறிந்தார். அவர் ஒரு யெகோவாவின் சாட்சி. இந்நோயால் அவருடைய உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. சிகிச்சைக்காக பல முறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சமயங்களில் தனக்கு இரத்தமேற்றாமல் சிகிச்சை அளிக்கும்படி கேட்டுக்கொண்டார். பிற்பாடு, புற்றுநோயாளிகளைப் பராமரிக்கும் நர்ஸுகளின் உதவியால் வீட்டிலிருந்தே சிகிச்சை பெற்றார்.
இந்த 36 வயது நோயாளியின் அசைக்க முடியாத விசுவாசமும் ஒத்துழைக்கும் தன்மையும் அவருக்கு சிகிச்சையளித்த டாக்டர்கள் மற்றும் நர்ஸுகளை மிகவும் கவர்ந்தன. அவர் இறப்பதற்கு சற்று முன்பு அவரைப் பராமரித்து வந்த ஒரு நர்ஸ், ஆன்ஜேலா என்ற அந்த நோயாளியைப் பற்றிய அனுபவத்தை நர்ஸிங் சம்பந்தப்பட்ட ஒரு பத்திரிகையில் எழுதினார்.
“ஆன்ஜேலா உயிர்த்துடிப்பு மிக்கவர், வாழ வேண்டுமென்ற மன உறுதி படைத்தவர். தன்னுடைய நிலைமையைப் பற்றியும் தனக்கு வந்திருக்கும் தீராத வியாதியைப் பற்றியும் அவர் நன்கு அறிந்திருக்கிறார். எல்லாரையும் போல அவரும் ஒரு நிவாரணத்தை அதாவது மருந்தை தேடுகிறார். . . . நர்ஸ்களாகிய நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவரோடு ஒன்றி விட்டோம். நாங்கள் அளிக்கும் உதவியை அவர் எதிர்ப்பதில்லை. மாறாக, ஒளிவுமறைவின்றி பேசுவதால் எல்லாவற்றையும் நாங்கள் எளிதாக செய்ய முடிகிறது. அவரை சந்திக்கப் போகும்போதெல்லாம் எங்கள் மனதுக்கு சந்தோஷமாக இருக்கிறது. ஏனென்றால், உண்மை மனமுள்ள ஒருவருக்கு பணிவிடை செய்து அதன் மூலம் நன்மையடைய போகிறோம் என்பதை உணர்ந்திருக்கிறோம். . . . ஆனால் அவருக்கு சிகிச்சை அளிப்பதற்கு அவருடைய மதம் ஒரு தடையாக இருக்கப் போவதை நாங்கள் உடனடியாக புரிந்துகொண்டோம்.” இதுவே அந்த நர்ஸினுடைய கருத்தாக இருந்தது; ஏனென்றால் நோயாளிக்கு இரத்தமேற்ற வேண்டுமென அவர் நினைத்தார், ஆனால் ஆன்ஜேலாவோ அதை மறுத்தார்.—அப்போஸ்தலர் 15:28, 29.
“உடல்நல பராமரிப்பு நிபுணர்களாகிய நாங்கள் ஆன்ஜேலாவின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை அவரிடம் சொன்னோம். ஆனாலும் உயிரை அவர் எந்தளவுக்கு அருமையானதாய் நேசிக்கிறார் என்பதை அவரே எங்களுக்குப் புரிய வைத்தார். அவரும் அவருடைய குடும்பத்தாரும் தங்கள் மதத்தை எவ்வளவு உயர்வாக மதிக்கிறார்கள் என்பதையும் நாங்கள் புரிந்துகொண்டோம். ஆன்ஜேலா நம்பிக்கையை கைவிடாமல் இருக்கிறார். தனக்கு வந்திருக்கும் வியாதியை கண்டு பயப்படாமல் இருக்கிறார். அவர் தைரியமானவர். அவர் வாழவே விரும்புகிறார், தொடர்ந்து வாழ போராடுகிறார். தன்னுடைய உறுதியான தீர்மானத்தையும் நம்பிக்கையையும் பற்றி அவர் சொல்லியிருக்கிறார். பெரும்பாலும் எங்களிடம் இல்லாத அசாதாரண உறுதி அவரிடம் உள்ளது, அதுதான் அவருடைய விசுவாசம், எங்களுடைய விசுவாசம் அந்தளவுக்கு உறுதியாய் இல்லை. . . . அவருடைய மதத்தை நாங்கள் ஏன் மதிக்க வேண்டும் என்பதை ஆன்ஜேலா எங்களுக்கு கற்பித்திருக்கிறார். அது எங்களுடைய தொழில் சார்ந்த தத்துவங்களிலிருந்து முற்றிலும் வித்தியாசப்பட்ட ஒன்று. . . . ஆன்ஜேலா மதிப்புமிக்க விஷயங்களையே எங்களுக்கு கற்பித்திருக்கிறார் என்று அறிவோம். அதற்குக் காரணம், நாங்கள் பலதரப்பட்ட ஆட்களையும், வெவ்வேறு சூழ்நிலைகளையும், வித்தியாசமான மதத்தாரையும் எதிர்ப்படுகிறோம், இவர்கள் எல்லாரிடமிருந்தும் நாங்கள் கற்றுக்கொள்ள முடிகிறது, கற்ற சில விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளவும் முடிகிறது.”
அடுத்ததாக, அந்தக் கட்டுரை இத்தாலிய நர்ஸுகளுக்காக தொகுக்கப்பட்ட தொழில் நன்னெறிகளை சிறப்பித்துக் காட்டியது; 1999-ல் அங்கீகாரம் பெற்ற அந்த நன்னெறிகளைப் பற்றி அது இவ்வாறு கூறுகிறது: “தனி நபரின் மத, தார்மீக, கலாச்சார மதிப்பீடுகளையும், அதோடு அவரது இனத்தையும், அவர் ஆணா பெண்ணா என்பதையும் மனதில் வைத்து ஒரு நர்ஸ் தன் கடமைகளை நிறைவேற்றுகிறார்.” சில சமயங்களில், நோயாளியின் மத நம்பிக்கைகளுக்கு மரியாதை காட்டுவது டாக்டர்களுக்கும் நர்ஸுகளுக்கும் சிரமமாக இருக்கலாம், ஆனால் அவ்வாறு மரியாதை காட்டுகிறவர்கள் நிச்சயமாகவே மதித்துப் போற்றப்படுகிறார்கள்.
யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய ஆரோக்கியத்தையும் சிகிச்சையையும் குறித்ததில் தீர யோசித்தே தீர்மானங்களை எடுக்கிறார்கள். வேதவசனங்கள் சொல்வதை அவர்கள் கவனமாக ஆராய்ந்து பார்க்கிறார்கள்; ஆன்ஜேலாவின் விஷயத்தில் பார்த்தது போல் அவர்கள் மதவெறியர்கள் அல்லர். (பிலிப்பியர் 4:5) பூமி முழுவதிலும் அதிகமதிகமான உடல்நல பராமரிப்பு நிபுணர்கள் தாங்கள் சிகிச்சை அளிக்கும் யெகோவாவின் சாட்சிகளுடைய மனசாட்சிக்கு மதிப்பு கொடுக்க மனமுள்ளவர்களாய் இருக்கிறார்கள்.