உங்களுடைய ஜெபங்கள் பலன் தருமா?
உங்களுடைய ஜெபங்கள் பலன் தருமா?
சமாளிக்க முடியாத இக்கட்டான ஒரு சூழ்நிலைமையை எதிர்ப்படாதவர்கள் யாராவது இருக்கிறார்களா? ஜெபம் செய்வதால் அப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலைமை மாறும் என்பதை அப்போஸ்தலன் பவுல் அறிந்திருந்தாரென பைபிள் காட்டுகிறது.
அநியாயமாக குற்றம் சுமத்தப்பட்டு ரோம சிறையில் தள்ளப்பட்டபோது, தனக்காக ஜெபம் செய்யும்படி சக விசுவாசிகளிடம் பவுல் கேட்டுக்கொண்டார். “நான் அதி சீக்கிரமாய் உங்களிடத்தில் வரும்படிக்கு நீங்கள் இப்படி வேண்டிக்கொள்ளும்படி அதிகமாய்க் கேட்டுக்கொள்ளுகிறேன்” என்றும் அவர் சொன்னார். (எபிரெயர் 13:18, 19) மற்றொரு சந்தர்ப்பத்தில், தனக்கு சீக்கிரமாய் விடுதலை கிடைக்க வேண்டுமென செய்த ஜெபங்களுக்கு கடவுள் நிச்சயம் பதிலளிப்பார் என்பதில் பவுல் நம்பிக்கையை வெளிப்படுத்தினார். (பிலேமோன் 22) அதன்படி விரைவிலேயே அவருக்கு விடுதலை கிடைத்தது, அவரும் தன் மிஷனரி பயணத்தை மீண்டும் தொடங்கினார்.
ஆனால் ஜெபம் செய்வது உங்களுடைய பிரச்சினைகளுக்கு உண்மையிலேயே பலனளிக்குமா? பலனளிக்கலாம். என்றாலும், ஜெபம் என்பது சடங்காசார விஷயமல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். வானாதி வானங்களில் வீற்றிருக்கும் வல்லமை பொருந்திய நம் அன்பான தகப்பனோடு உண்மையில் பேச்சுத்தொடர்பு கொள்வதே ஜெபம். நம் ஜெபங்களில் பிரச்சினைகளை திட்டவட்டமாக குறிப்பிட நாம் தயங்கக் கூடாது; அதன் பிறகு யெகோவாவின் பதிலுக்காக பொறுமையோடு காத்திருக்க வேண்டும்.
ஒருவேளை எல்லா ஜெபங்களுக்கும் கடவுள் நேரடியாக பதிலளிக்காமல் இருக்கலாம், அல்லது எப்போதுமே நாம் கேட்ட விதத்திலோ நாம் எதிர்பார்த்த சமயத்திலோ பதிலளிக்காமல் இருக்கலாம். உதாரணமாக, தன் ‘மாம்சத்திலுள்ள முள்’ சம்பந்தமாக பவுல் அடிக்கடி ஜெபம் செய்துகொண்டே இருந்தார். பவுலுக்கிருந்த அந்தப் பிரச்சினையை கடவுள் நீக்கிவிடவில்லை. அது எப்படிப்பட்ட பிரச்சினையாக இருந்தபோதிலும், “என் கிருபை உனக்குப் போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்” என்று சொல்லி பலப்படுத்தும் வார்த்தைகளால் பவுலுக்கு ஆறுதலளித்தார்.—2 கொரிந்தியர் 12:7-9.
குறிப்பிட்ட ஒரு பிரச்சினையை கடவுள் நம்மைவிட்டு நீக்காவிட்டாலும் அதைத் ‘தாங்கத்தக்கதாக அதற்கு தப்பிக்கொள்ளும்படியான போக்கை உண்டாக்குவார்’ என்பதில் நாமும் நிச்சயமாக இருக்கலாம். (1 கொரிந்தியர் 10:13) மனிதகுலத்தின் துன்பங்கள் அனைத்தையும் கடவுள் சீக்கிரத்தில் நீக்கிவிடுவார். அதுவரையில், ‘ஜெபத்தை கேட்கிறவரிடம்’ வேண்டுவது பலனளிக்கலாம்.—சங்கீதம் 65:2.