வேற்றுமொழி சபையோடு சேவை செய்தல்
வேற்றுமொழி சபையோடு சேவை செய்தல்
‘வேறொரு தூதன் வானத்தின் மத்தியிலே பறக்கக் கண்டேன்; அவன் பூமியில் வாசம்பண்ணுகிற சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும் அறிவிக்கத்தக்கதாக நித்திய சுவிசேஷத்தை உடையவனாயிருந்தான்’ என அப்போஸ்தலன் யோவான் எழுதினார். (வெளிப்படுத்துதல் 14:6) இந்தத் தீர்க்கதரிசனக் காட்சியின் நிறைவேற்றமாக, கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தி உலகெங்கும் பல்வேறு மொழிகளில் பிரசங்கிக்கப்பட்டு வருகிறது. இம்மொழிகளில் பெரும்பாலானவை, சொந்த நாட்டைவிட்டு வேறு நாடுகளில் குடியேறினவர்கள் பேசும் மொழிகளாகும். இவர்களும்கூட, நற்செய்தியைக் கேட்கிறார்கள்; இதற்காக யெகோவாவின் சாட்சிகள் வேறொரு மொழியைக் கற்றுக்கொண்டு ஆர்வமாக பிரசங்கிக்கிறார்கள்.
யெகோவாவின் சாட்சிகளுடைய வேற்றுமொழி சபையில் சேவை செய்கிறவர்களில் நீங்களும் ஒருவரா? அல்லது, ஒருவேளை அப்படிப்பட்ட சபையில் சேவை செய்வது பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறவரா? ஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்ளும் உங்கள் முயற்சியில் வெற்றிகாண்பதற்கு, சுயநலமற்ற உள்நோக்கமும், சரியான மனநிலையும் அவசியம். கடவுளுடைய வார்த்தையிலிருந்து பிறருக்கு சத்தியத்தைக் கற்றுக்கொடுப்பதே உங்களுடைய லட்சியம் என்றால், உங்களுக்கு மிகச் சிறந்த உள்நோக்கம் இருக்கிறது—கடவுள் மீதும் அயலார் மீதும் அன்பு இருக்கிறது. (மத்தேயு 22:37-39; 1 கொரிந்தியர் 13:1) பிற நாட்டவரிடம் அல்லது இனத்தவரிடம் பழகுவது, அவர்களுடைய உணவை ருசிப்பது, கலாச்சாரத்தைத் தெரிந்துகொள்வது ஆகியவை நமக்குச் சந்தோஷத்தை அளித்தாலும், கடவுளைப் பற்றி அறிந்துகொள்ள பிறருக்கு உதவ வேண்டுமென்ற விருப்பமே நம் உள்நோக்கத்திற்குப் பெரும் தூண்டுதலாய் அமைகிறது. வேறொரு மொழியைக் கற்றுக்கொள்வது பற்றி நினைத்தாலே மலைப்பாக இருக்கிறதா? அப்படியானால், சரியான கண்ணோட்டத்தை வளர்த்துக்கொள்வது உங்களுக்கு உதவியாக இருக்கும். “ஒரு மொழியைக் கற்பதை நினைத்து மலைத்துவிடாதீர்கள்” என சொல்கிறார் ஜாப்பனீஸ் மொழியைக் கற்றுக்கொண்ட ஜேம்ஸ். நிறைய பேர் ஏற்கெனவே இதில் வெற்றிகண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ளும்போது, முயற்சியை நாம் கைவிடாதிருப்போம், தொடர்ந்து நம்பிக்கையான மனநிலையோடும் இருப்போம். சரி, ஒரு புதிய மொழியை எப்படிக் கற்றுக்கொள்ளலாம்? அந்த மொழியைப் பயன்படுத்துகிற சபையோடு அனுசரித்துப்போக எது உங்களுக்கு உதவும்? ஆன்மீக ரீதியில் பலமுள்ளவர்களாய் நிலைத்திருக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
மொழிப் பிரச்சினையைச் சமாளித்தல்
ஒரு மொழியைக் கற்றுக்கொள்வதற்கு பல வழிகள் இருக்கின்றன. மாணவர்களும் சரி, ஆசிரியர்களும் சரி, கற்றுக்கொள்கிற முறைகளிலும் கற்றுக்கொடுக்கிற முறைகளிலும் நபருக்கு நபர் வித்தியாசப்படுகின்றனர். என்றாலும், திறமையான ஆசிரியர் ஒருவர் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கும்போது, ஒருசில வகுப்புகள் நடத்துவதற்குள்ளாகவே அவர்கள் மிக வேகமாகவும் மிக எளிதாகவும் கற்றுக்கொள்கிறார்கள். பைபிளையும் பைபிள் பிரசுரங்களையும் நீங்கள் கற்றுக்கொள்கிற புதிய மொழியில் வாசிப்பதும், அந்த மொழியில் ஏதாவது ஒலிப்பதிவுகள் இருந்தால் அவற்றைக் கேட்பதும் உங்களுடைய சொல்வளத்தை அதிகரிக்கும்; அதோடு சபையில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளின் பேரில் உங்களுடைய அறிவையும் விரிவாக்கும். ரேடியோ, டிவி, வீடியோ போன்றவற்றில் தரமான நிகழ்ச்சிகளைக் கவனிப்பதும்கூட அந்த மொழியையும் கலாச்சாரத்தையும் பற்றிக் கூடுதலாக அறிந்துகொள்ள உதவும். எப்போதாவது ஒருமுறை நீண்ட நேரம் சிரமப்பட்டு படிப்பதைவிட தினமும் கொஞ்சம் கொஞ்சமாய்ப் படிப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஒரு மொழியைக் கற்றுக்கொள்வது, நீச்சல் கற்றுக்கொள்வதைப் போன்றது. வெறுமனே ஒரு புத்தகத்தில் வாசித்து நீச்சலைக் கற்றுக்கொள்ள முடியாது. தண்ணீரில் இறங்கி நீச்சலடிக்க வேண்டும். ஒரு மொழியைக் கற்றுக்கொள்வதும் அப்படித்தான். படிப்பதனால் மட்டுமே அதைக் கற்றுக்கொள்ள முடியாது. சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் மற்றவர்களிடம் தொடர்புகொள்வது
அவசியம்—அவர்கள் பேசும்போது கவனியுங்கள், அவர்களோடு நேரம் செலவிடுங்கள், எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களிடம் பேசுங்கள்! கிறிஸ்தவ நடவடிக்கைகள் இதற்கு மிகச் சிறந்த வாய்ப்பை அளிக்கின்றன. பெரும்பாலும், கற்றவற்றை உடனடியாக ஊழியத்தில் பயன்படுத்த முயலுங்கள். “பயமாக இருக்கலாம், ஆனால் சாட்சிகளான நாம் பேசுவதற்கு கடுமையாக முயலுகிறோம் என்பதை வீட்டுக்காரர் புரிந்துகொள்வார். இது நாம் சொல்வதைக் கேட்கும்படி வீட்டுக்காரரைத் தூண்டலாம். ‘உங்களைப் பார்த்ததில் ரொம்ப சந்தோஷம்’ என்று அவர்களுடைய மொழியில் சொன்னாலே போதும், அவர்களுடைய முகம் பளிச்சிடுவதைக் காணலாம்!” எனக் குறிப்பிடுகிறார் சீன மொழியைக் கற்றுவருகிற மிடோரி.கிறிஸ்தவக் கூட்டங்களும்கூட பேருதவி புரிகின்றன. ஒவ்வொரு கூட்டத்திலும் குறைந்தபட்சம் ஒரு பதிலாவது சொல்வதற்கு முயலுங்கள். ஆரம்பத்தில் மனம் எவ்வளவு படபடத்தாலும் கவலைப்படாதீர்கள். நீங்கள் வெற்றிகாண வேண்டுமென்றே சபையார் விரும்புகிறார்கள்! கொரியன் மொழியைக் கற்றுவருகிற மானிஃபா இவ்வாறு கூறுகிறாள்: “சபை கூட்டங்களின்போது என் பக்கத்தில் உட்கார்ந்து, சில வார்த்தைகளின் அர்த்தத்தை எழுதித் தருகிற ஒரு சகோதரிக்கு மிக நன்றியுள்ளவளாக இருக்கிறேன். அவர் அன்பாகவும் பொறுமையாகவும் சொல்லித்தருவது எனக்கு உண்மையிலேயே உதவியாய் இருக்கிறது.” உங்களுடைய சொல்வளம் அதிகரிக்க அதிகரிக்க, அந்தப் புதிய மொழியில் நீங்கள் சிந்திக்கத் தொடங்கலாம்—ஒவ்வொரு வார்த்தையையும் மனதில் மொழிபெயர்ப்பதற்குப் பதிலாக அவை எவற்றைக் குறிக்கின்றனவோ அவற்றோடு நேரடியாகத் தொடர்புபடுத்திப் பார்க்கலாம்.
‘எளிதில் புரிந்துகொள்ளும் விதமாய்ப் பேசுவதே’ மொழியைக் கற்றுக்கொள்வதில் உங்களுடைய முதல் இலக்காக இருக்க வேண்டும். (1 கொரிந்தியர் 14:8-11, NW) நீங்கள் கஷ்டப்பட்டுப் பேசுவதை ஒருவேளை மற்றவர்கள் புரிந்துகொள்ளலாம்; ஆனால், ஏதேனும் வார்த்தைகளைத் தவறாகச் சொன்னால், அல்லது தவறாக உச்சரித்தால் நீங்கள் சொல்லும் செய்தியிடமிருந்து அவர்களுடைய கவனம் சிதறடிக்கப்படலாம். சரியான உச்சரிப்புக்கும் இலக்கணத்திற்கும் ஆரம்பத்திலிருந்தே கவனம் செலுத்தினால், சில தவறுகள் நம் பேச்சில் பழக்கமாகிவிடுவதைத் தவிர்க்க முடியும், இல்லையெனில் அப்பழக்கங்களை மாற்றுவது கடினமாகிவிடும். ஸ்வாஹிலி மொழியைக் கற்றுக்கொண்ட மார்க் இவ்வாறு ஆலோசனை தருகிறார்: “பேசும்போது ஏற்படுகிற பெரிய பெரிய தவறுகளைத் திருத்துமாறு அந்த மொழியை நன்கு பேசுபவர்களிடம் கேளுங்கள், திருத்தியதற்கு நன்றி சொல்லுங்கள்!” ஆம், உங்களுக்காக நேரத்தையும் சக்தியையும் செலவிட்டு உதவி செய்பவர்களை நினைத்துப்பார்க்க மறந்துவிடாதீர்கள். நீங்கள் தயாரித்த குறிப்புகளைப் பார்க்குமாறு யாரிடமாவது கேட்கலாம்; என்றாலும், ஏற்கெனவே அறிந்த அல்லது பிரசுரத்தில் பார்த்த வார்த்தைகளைப் பயன்படுத்தி உங்களுடைய பேச்சுகளையும் குறிப்புகளையும் தயார்செய்ய முயலுங்கள். இது வேகமாகக் கற்றுக்கொள்வதற்கும் நம்பிக்கையோடு பேசுவதற்கும் உதவும்.
தொடர்ந்து முன்னேறுங்கள்
“மற்றொரு மொழியைக் கற்றுக்கொள்வதற்குள் பாடாய்ப் பட்டுவிட்டேன். கற்பதை நிறுத்திவிட வேண்டுமென்றுகூட பலமுறை யோசித்திருக்கிறேன். ஆனால், நான் பேசுகிற சாதாரண கொரியன் மொழியில் ஆழமான ஆன்மீக சத்தியங்களைக் கேட்பதற்கு பைபிள் மாணாக்கர் எவ்வளவு ஆசைப்படுகிறார் என்பதை அப்போது நினைத்துப் பார்ப்பேன்; நான் கொஞ்சம் முன்னேறினால்கூட சகோதரர்கள் சந்தோஷப்படுவதையும் நினைத்துப் பார்ப்பேன்” என்று சொல்கிறாள் மானிஃபா. குறிப்பு என்னவென்றால், நிறுத்திவிட வேண்டுமென்று சட்டென முடிவெடுத்துவிடாதீர்கள். உயிர்காக்கும் பைபிள் சத்தியங்களைப் பிறருக்குக் கற்றுக்கொடுப்பதற்குத் தகுதியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதுதான் உங்கள் இலக்கு. (1 கொரிந்தியர் 2:10) ஆகவே, வேற்றுமொழியில் பைபிளைப் போதிக்கக் கற்றுக்கொள்வதற்கு முழு கவனமும் நீண்டகால முயற்சியும் தேவை. அவ்வாறு கற்றுவருகையில், மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்த்து உங்கள் முன்னேற்றத்தை மட்டமாக எடைபோடாதீர்கள். புதிய மொழியைக் கற்றுக்கொள்பவர்கள் வித்தியாசமான அளவுகளிலும் வித்தியாசமான வழிகளிலும் முன்னேறுகிறார்கள். என்றாலும், நீங்கள் எந்தளவு முன்னேறியிருக்கிறீர்கள் என்பதைத் தெரிந்துவைப்பது பயனுள்ளது. (கலாத்தியர் 6:4) “ஒரு மொழியைக் கற்றுக்கொள்வது, மாடிப்படிகளில் ஏறுவதைப் போன்றது. அப்படிக் கற்றுக்கொள்வதில் நீங்கள் தேறாததுபோல் உணரும்போது, நீங்கள் முன்னேறியிருப்பதை சட்டென புரிந்துகொள்வீர்கள்” என குறிப்பிடுகிறார் ஜூன்.
ஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வது வாழ்நாள் முழுவதும் தொடர்கிற பயணத்தைப் போன்றது. ஆகவே, அந்தப் பயணத்தில் இன்பம் காணுங்கள், நூற்றுக்கு நூறு சரியாகப் பேச வேண்டுமென எதிர்பார்க்காதீர்கள். (சங்கீதம் 100:2) தவறுகள் வரத்தான் செய்யும். தவறுகள் ஏற்படாமல் கற்றுக்கொள்ளவே முடியாது. ஒரு கிறிஸ்தவர் இத்தாலியன் மொழியில் பிரசங்கிக்க ஆரம்பித்த சமயத்தில், வீட்டுக்காரர் ஒருவரிடம் இவ்வாறு கேட்டார்: “வாழ்க்கையின் துடைப்பம் என்னவென்று தெரியுமா?” ஆனால், அவர் சொல்ல வந்தது “வாழ்க்கையின் நோக்கம்.” போலிஷ் கற்றுக்கொண்டிருந்த ஒரு யெகோவாவின் சாட்சி, சபையாரிடம் பாட்டு பாடுங்கள் என்று சொல்வதற்குப் பதிலாக நாய் பாடுங்கள் என்று சொன்னார். சைனீஸ் மொழி கற்றுக்கொண்டிருந்த ஒருவர், சபையாரிடம் இயேசுவின் மீட்கும்பலியில் விசுவாசம் வைக்கும்படி சொல்வதற்குப் பதிலாக புத்தக அலமாரியில் விசுவாசம் வைக்கும்படி சொன்னார்; இதற்குக் காரணம் தொனியில் ஏற்பட்ட சிறு மாற்றமாகும். தவறுகள் ஏற்படுவதால் கிடைக்கும் நன்மை என்னவென்றால், அப்படித் திருத்திக்கொண்ட சரியான வார்த்தைகள் ஒருபோதும் மறக்கவே மறக்காது.
சபையாருடன் வேலை செய்தல்
ஜனங்களைப் பிரிப்பது மொழிகள் மட்டுமே அல்ல. கலாச்சாரம், இனம், தேசம் ஆகியவற்றிலுள்ள வித்தியாசங்கள்கூட மனிதகுலத்தைப் பிரிக்கின்றன. என்றாலும், இந்தத் தடைகளெல்லாம் தகர்க்க முடியாதவை அல்ல. யெகோவாவின் சாட்சிகள் “தேசிய எல்லைகளுக்கு அப்பாற்பட்டவர்கள்” என ஐரோப்பாவிலுள்ள சீன மொழி மதத் தொகுதிகளைப் பற்றி ஆராய்கிற ஓர் அறிஞர் குறிப்பிட்டார். யெகோவாவின் சாட்சிகள் மத்தியில் “இனத்திற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை, மொழியைக்கூட, கடவுளுடைய வார்த்தையைப் புரிந்துகொள்வதற்கு ஒரு வழியாக மட்டுமே பயன்படுத்துகிறார்கள்” என்றும் அவர் குறிப்பிட்டார். ஆம், பைபிள் நியமங்களைக் கடைப்பிடிப்பது தேசிய வேற்றுமைகளை முறியடிக்க உண்மைக் கிறிஸ்தவர்களுக்கு உதவுகிறது. ‘புதிய சுபாவத்தைத்’ தரித்துக்கொள்கிறவர்களுக்கு ‘கிரேக்கனென்றும் யூதனென்றுமில்லை, புறதேசத்தானென்றுமில்லை.’—கொலோசெயர் 3:10, 11; NW.
ஆகவே, சபையின் ஒற்றுமையைப் பலப்படுத்துவதற்கு சபையார் எல்லாரும் உழைக்க வேண்டும். அதற்காக, புதிய கோணங்களில் சிந்திப்பதற்கும், உணர்வதற்கும், காரியங்களைச் செய்வதற்கும் ஒருவர் மனமுள்ளவராய் இருக்க வேண்டும். சொந்த விருப்பங்களுக்கு அளவுக்குமீறி கவனம் செலுத்தாமல் இருந்தால் நம் மத்தியிலுள்ள வேற்றுமைகள் பிரிவினைகளாக மாறிவிடுவதைத் தடுக்க முடியும். (1 கொரிந்தியர் 1:10; 9:19-23) எல்லாக் கலாச்சாரங்களிலும் உள்ள சிறந்த அம்சங்களிலிருந்து நன்மை பெற கற்றுக்கொள்ளுங்கள். நட்புக்கும் உண்மையான ஒற்றுமைக்கும் தன்னலமற்ற அன்பே முக்கியம் என்பதை நினைவில் வையுங்கள்.
பெரும்பாலான வேற்றுமொழி சபைகள் முதலில் சிறிய தொகுதிகளாகவே ஆரம்பிக்கப்படுகின்றன; பொதுவாக, புதிய மொழியைக் கற்றுக்கொள்பவர்களே அங்கு அதிகமாய் இருப்பார்கள், புதிதாக பைபிள் படிக்க ஆரம்பித்த சிலரும் இருப்பார்கள். இதனால், பெரிய சபைகளைவிட இப்படிப்பட்ட சிறிய தொகுதிகளில் கருத்து வேற்றுமைகள் ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது. ஆகவே, முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்கள் சபையின் உறுதியைக் காப்பதற்கு கடினமாக உழைக்க வேண்டும். அன்பு, இரக்கம் ஆகிய குணங்களைச் சொல்லிலும் செயலிலும் காட்டுவது, புதியோர் ஆன்மீக ரீதியில் வளருவதற்கு ஏற்ற நல்ல சூழலை சபையில் உருவாக்க உதவும்.
வேற்றுமொழி சபையில் மனமுவந்து சேவை செய்ய விரும்புகிறவர்கள், பிறரிடம் அதிகத்தை எதிர்பார்க்காமல் இருப்பதும் அவசியம். அப்படிப்பட்ட ஒரு சபையின் மூப்பரான ரிக் இவ்வாறு சொல்கிறார்: “சமீபத்தில் யெகோவாவின் சாட்சிகளாக ஆன சிலர், ஒழுங்கமைக்கும் திறமைகளில் உள்ளூர் மொழி சபையாரின் அளவுக்கு பயிற்சி பெற்றிருக்க மாட்டார்கள். அந்தத் திறமை அவர்களுக்கு இல்லாவிட்டால்கூட, அதை அன்பாலும் ஊக்கத்தாலும் ஈடுசெய்கிறார்கள். இதனால், ஆர்வமுள்ள அநேகர் சத்தியத்திற்கு வந்துகொண்டிருக்கிறார்கள்.” புதிய மொழியை நீங்கள் கற்றுவருகிற அதே சமயத்தில், கூட்டங்களுக்குத் தவறாமல் வந்து சபை காரியங்களில் ஈடுபடுவதன் மூலமும், உங்களால் முடிந்த விதங்களில் உதவுவதன் மூலமும் சபையாருக்கு உண்மையிலேயே நீங்கள் நன்மை செய்கிறீர்கள். ஒன்றுசேர்ந்து உழைத்தால் எல்லாராலுமே சபையின் ஆன்மீக முன்னேற்றத்திற்கு உதவ முடியும்.
ஆன்மீக ரீதியில் பலப்படுதல்
வேற்றுமொழி சபைக்கு புதிதாகச் செல்லும் ஒரு சகோதரருக்கு, ஒரு தாயும் அவளுடைய பிள்ளையும் பேசிக்கொள்வது காதில் விழுந்தது. “சின்ன பதிலா சொல்லித்தாங்க மம்மி!” என்று அந்தப் பிள்ளை கெஞ்சியது. அதற்கு அந்தத் தாய், “இல்ல கண்ணு, சின்ன பதிலையெல்லாம், பாஷைய கத்துக்கிறவங்க சொல்றதுக்கு விட்டுடணும்” என்று சொன்னார்.
வயதுவந்த ஒரு நபருக்கு, பல மாதங்களாகியும் ஏன் பல வருடங்களாகியும் மற்றவர்களிடம் சரளமாகப் பேச முடியாமற்போனால் அவர் மனோ ரீதியிலும் உணர்ச்சி ரீதியிலும் ஆன்மீக ரீதியிலும் பலவீனமாகி விடலாம். “என்னுடைய வரம்புகளை நினைத்து அடிக்கடி வேதனைப்பட்டேன்” என சொல்கிறாள் ஜானட்; அவள் இப்போது ஸ்பானிஷ் மொழியைச் சரளமாகப் பேசுகிறாள்.
ஆங்கிலத்தைக் கற்றுக்கொண்ட ஹிரோகோ தான் இவ்வாறு நினைத்ததாகக் கூறுகிறாள்: ‘இந்தப் பகுதியிலுள்ள நாய்களும் பூனைகளும்கூட என்னைவிட நன்றாக ஆங்கிலத்தை புரிந்துகொள்கின்றன.’ கேத்தி இவ்வாறு சொல்கிறாள்: “ஸ்பானிய சபைக்கு நான் மாறிச்சென்றபோது, நிறைய பைபிள் படிப்புகளையும் மறுசந்திப்புகளையும் நடத்திவந்த எனக்கு ஒன்றுகூட இருக்கவில்லை. அதனால், எதுவுமே செய்யாததுபோல் உணர்ந்தேன்.”இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் நாம் நம்பிக்கையான மனநிலையை வளர்த்துக்கொள்ள வேண்டும். மனமொடிந்துபோயிருந்த ஹிரோகோ, “மற்றவர்களால் கற்றுக்கொள்ள முடியுமென்றால் என்னாலும் முடியும்” என்று யோசித்தாள். கேத்தி சொல்கிறாள்: “நான் என்னுடைய கணவரை நினைத்துப் பார்த்தேன்; அவர் நல்ல முன்னேற்றம் செய்கிறார், சபையிலும் நிறைய காரியங்கள் செய்கிறார். இதெல்லாம் எனக்கிருந்த தடையை மேற்கொள்ள உதவியது. மொழியைக் கற்பது ஒரு பெரிய வேலைதான், ஆனாலும் அந்த மொழியிலேயே பிரசங்கிப்பதற்கும், கற்றுக்கொடுப்பதற்கும் கொஞ்சம் கொஞ்சமாக திறமையை வளர்த்து வருகிறேன், அது எனக்கு சந்தோஷம் தருகிறது.” அவளுடைய கணவர் ஜெஃப் இவ்வாறு கூறுகிறார்: “சபை அறிவிப்புகளிலும் மூப்பர்களுடைய கூட்டத்திலும் சொல்லப்படுகிற எல்லாவற்றையும் புரிந்துகொள்ள முடியாமல் போகும்போது சிலசமயம் எரிச்சலாக இருக்கும். ஆனால், விவரத்தைச் சொல்லும்படி சகோதரர்களிடம் தாழ்மையாகக் கேட்கிறேன், அவர்களும் சந்தோஷமாகச் சொல்கிறார்கள்.”
வேற்றுமொழி சபையாருடன் நீங்கள் சேவைசெய்யும்போது, ஆன்மீக ரீதியில் சோர்ந்துவிடாதிருக்க, உங்களுடைய ஆன்மீக ஆரோக்கியத்திற்கு முதலிடம் கொடுக்க வேண்டும். (மத்தேயு 5:3) போர்ச்சுகீஸ் பிராந்தியத்தில் பல வருடங்கள் சேவைசெய்த காஸூயூகி இவ்வாறு சொல்கிறார்: “போதுமான ஆன்மீகப் போஷாக்கை நாம் பெற்றுக்கொள்வது முக்கியம். அதனால்தான், நாங்கள் குடும்பமாகப் படிக்கிறோம், எங்களுடைய தாய் மொழியிலும் போர்ச்சுகீஸ் மொழியிலும் கூட்டங்களுக்குத் தயாரிக்கிறோம்.” ஆன்மீக ரீதியில் சோர்வுறாமல் இருப்பதற்கு சிலர் அவ்வப்போது தங்களுடைய தாய்மொழியில் நடத்தப்படும் கூட்டங்களுக்குச் செல்கிறார்கள். அதுமட்டுமல்ல, போதிய ஓய்வு எடுப்பதும் அத்தியாவசியம்.—மாற்கு 6:31.
செலவைக் கணக்குப்பார்த்தல்
வேற்றுமொழி சபைக்கு மாறிச்செல்வது பற்றி யோசிக்கிறீர்களென்றால், அதற்கான ‘செலவைக்’ கண்டிப்பாக நீங்கள் கணக்குப்பார்க்க வேண்டும். (லூக்கா 14:28, 30) இது சம்பந்தமாக, நீங்கள் சிந்தித்துப்பார்க்க வேண்டிய முக்கிய விஷயங்கள்: ஒன்று, உங்களுடைய ஆன்மீக நலன், மற்றொன்று யெகோவாவோடுள்ள உங்கள் உறவு. ஜெபத்துடன் உங்களுடைய சூழ்நிலையைச் சீர்தூக்கிப்பாருங்கள். உங்களுடைய மனைவி பிள்ளைகளையும் கவனத்தில் கொள்ளுங்கள். ‘இப்படிப்பட்ட நீண்டகால திட்டத்தை ஏற்றுக்கொள்வதற்கு என் சூழ்நிலைகள் அனுமதிக்கின்றனவா, ஆன்மீக ரீதியிலும் உணர்ச்சி ரீதியிலும் தேவையான பலம் எனக்கு இருக்கிறதா?’ என உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். ஆன்மீக ரீதியில் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் மிகச் சிறந்ததைச் செய்வதே ஞானமான செயல். ராஜ்யத்தைப் பற்றி நீங்கள் எங்கு பிரசங்கித்தாலும், செய்வதற்கு அதிகம் இருக்கிறது, அதில் அதிக சந்தோஷத்தையும் நீங்கள் கண்டடையலாம்.
வேற்றுமொழி சபையில் சேவை செய்ய முடிந்தவர்களுக்கு பெரும் ஆசீர்வாதங்கள் உள்ளன. தன் கணவரோடு ஸ்பானிய மொழி சபைக்கு மாறிச்சென்ற பார்ப்ரா இவ்வாறு கூறுகிறார்: “எனக்கு இது மிக மகிழ்ச்சியான ஓர் அனுபவமாயிருக்கிறது. பைபிள் சத்தியத்தை மீண்டும் கற்றுக்கொள்வதுபோல் இருக்கிறது. மற்றொரு நாட்டில் மிஷனரிகளாக நாங்கள் சேவை செய்ய முடியாதென்றாலும் இப்படியொரு சந்தர்ப்பம் கிடைத்ததற்காக நான் அதிக நன்றியுள்ளவளாய் இருக்கிறேன்.”
உலகம் முழுவதிலும், பலதரப்பட்ட வயதிலுள்ள ஆயிரக்கணக்கான சாதாரண ஜனங்கள் நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்காக மற்றொரு மொழியைக் கற்றுக்கொள்கிறார்கள். அவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், சுத்தமான உள்நோக்கமும் சரியான மனநிலையும் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, உங்களுடைய முயற்சிகளை யெகோவா ஆசீர்வதிப்பார் என்ற நம்பிக்கையோடு இருங்கள்.—2 கொரிந்தியர் 4:7.
[பக்கம் 18-ன் படம்]
தகுதிபெற்ற ஆசிரியர் நடத்துகிற வகுப்புகளில் கலந்துகொண்டால் மொழியை வேகமாயும் எளிதாயும் கற்றுக்கொள்ளலாம்
[பக்கம் 20-ன் படம்]
வேற்றுமொழியைக் கற்றுக்கொள்கையில் உங்களுடைய ஆன்மீக ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது