சமநிலை ஏன் அவசியம்?
சமநிலை ஏன் அவசியம்?
யெகோவா சமநிலைக்குத் தலைசிறந்த முன்மாதிரி. “அவருடைய செயல் பூரணமானது.” அவர் ஒருபோதும் ஈவிரக்கமின்றி நியாயம் வழங்குபவர் அல்ல; மாறாக, இரக்கத்தோடு நியாயம் வழங்குபவர். (உபாகமம் 32:4, NW) அவர் எப்போதும் நீதி நெறி வழுவாமல் அன்பு காட்டுபவர்; ஏனெனில் அவர் தம்முடைய பூரண சட்டதிட்டங்களுக்கு இசைய செயல்படுகிறவர். (சங்கீதம் 89:14; 103:13, 14) எல்லா விஷயங்களிலும் சமநிலை காக்கும் விதத்தில்தான் நம் முதல் பெற்றோரைக் கடவுள் படைத்தார். சமநிலை தவறும் மனச்சாய்வு அவர்களுக்கு இருக்கவில்லை. ஆனால், அவர்கள் முதன்முதலில் பாவம் செய்தபோது ‘குறைவுள்ளவர்களாக,’ அதாவது அபூரணர்களாக ஆகிவிட்டார்கள்; அதன் விளைவாகவே சமநிலையை இழந்தார்கள்.—உபாகமம் 32:5, NW.
அதை இவ்வாறு விளக்கலாம்: பெரிதாகப் புடைத்திருக்கும் டயரையுடைய காரிலோ சைக்கிளிலோ நீங்கள் சென்றிருக்கிறீர்களா? இந்தக் குறைபாட்டைப் பொருட்படுத்தாமல் சென்றால், பயணம் ஆட்டி அலைக்கழிப்பதாய் இருக்கும், ஆபத்தானதாயும் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு டயர் இன்னும் மோசமடைவதற்கு முன் அல்லது அதிலிருந்து காற்று முற்றிலும் இறங்கிவிடுவதற்கு முன் அதை ரிப்பேர் செய்ய வேண்டும். அதுபோலவே, நம்முடைய அபூரண சுபாவத்தினால் குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. “புடைப்புகள்” போன்ற இத்தகைய குறைபாடுகளை அப்படியே விட்டுவிட்டால், நம்முடைய வாழ்க்கைப் பயணம் ஆட்டி அலைக்கழிப்பதாயும் ஏன், ஆபத்தானதாயும்கூட ஆகிவிடலாம்.
சில சமயங்களில் நம்மிடமுள்ள நல்ல இயல்புகள், அதாவது நல்ல அம்சங்கள் மிதமிஞ்சிப் போய்விடலாம். உதாரணமாக, இஸ்ரவேலர் அணிந்த வஸ்திரங்களின் ஓரங்களில் தொங்கல்கள் இருக்க வேண்டுமென நியாயப்பிரமாணத்தில் சொல்லப்பட்டிருந்தது; இயேசுவின் நாளிலிருந்த பரிசேயரோ, ஜனக்கூட்டத்தாரிடமிருந்து தங்களை வித்தியாசப்படுத்திக் காட்ட “வஸ்திரங்களின் தொங்கலைப் பெரிதாக்கி” மிதமிஞ்சி நடந்துகொண்டார்கள். சக மனிதரைவிட தாங்கள் பரிசுத்தமானவர்கள் எனக் காட்டுவதே அவர்களுடைய உள்நோக்கமாய் இருந்தது.—மத்தேயு 23:5; எண்ணாகமம் 15:38-40.
இன்றோ, சிலர் ஏதாவதொரு விதத்தில், ஏன் மற்றவர்களை வியக்க வைப்பதன் மூலமும்கூட தங்களிடம் கவனத்தை ஈர்க்க முயலுகிறார்கள். “என்னைப் பாருங்கள்! நானும் ஒரு மனுஷன்/மனுஷி தான்!” என்று சொல்லி தன் மனதிலுள்ள தீவிரமான ஆசையை வெளிப்படுத்துவதாகவே இது உள்ளது. ஆனால் உடை, எண்ணம், செயல் ஆகிய விஷயங்களில் மிதமிஞ்சிச் செல்வது ஒரு கிறிஸ்தவரின் நிஜ தேவைகளைத் திருப்தி செய்யாது.
வேலையில் சமநிலை
நாம் யாராக இருந்தாலும் சரி எங்கு வாழ்ந்தாலும் சரி, பயன்தரும் ஒரு வேலை இருப்பது நம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குகிறது. அத்தகைய வேலையில் திருப்தி காணும் விதத்தில்தான் நாம் படைக்கப்பட்டோம். (ஆதியாகமம் 2:15) அதன் காரணமாகவே சோம்பேறித்தனத்தை பைபிள் கண்டனம் செய்கிறது. இதுபற்றி அப்போஸ்தலன் பவுல் தெள்ளத்தெளிவாகச் சொன்னதாவது: ‘ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாது.’ (2 தெசலோனிக்கேயர் 3:10) சொல்லப்போனால், வேலை செய்யாமல் சோம்பேறியாய் இருப்பது, வறுமைக்கும் அதிருப்திக்கும் வழிவகுக்கலாம்; அதோடு, கடவுளுடைய வெறுப்புக்கு ஆளாகும்படியும் செய்துவிடலாம்.
மறுபட்சத்தில் அநேகர் வேலைப் பித்தர்களாகி விடுகிறார்கள், மனதார வேலைக்கு அடிமையாகிவிடுகிறார்கள். வேலைக்காக காலையில் வீட்டைவிட்டு கிளம்பினால் இரவுதான் வீடு திரும்புகிறார்கள்; குடும்பத்துக்காகவே இப்படி உழைப்பதாக அவர்கள் நியாயப்படுத்தலாம். இருந்தாலும், இப்படி வேலையே கதியென கிடப்பதால் உண்மையில் பாதிக்கப்படுகிறவர்கள் அவர்களுடைய குடும்பத்தாரே. அடிக்கடி ‘ஓவர் டைம்’ செய்கிற தன் கணவரைப் பற்றி ஓர் இல்லத்தரசி இவ்வாறு கூறுகிறார்: “என் கணவர் என்னோடும் பிள்ளைகளோடும் நேரம் செலவிட வேண்டுமென்றே ஏங்குகிறேன்; அதற்காக, ஆடம்பரமான இந்த வீட்டிலுள்ள எதை வேண்டுமானாலும் தருவதற்கு நான் தயாராய் இருக்கிறேன்.” மாய்ந்து மாய்ந்து வேலை பார்க்கிறவர்கள் சாலொமோன் ராஜாவுடைய சொந்த அனுபவத்தைக் கவனத்தில்கொள்வது பிரசங்கி 2:11.
மிக முக்கியம். “என் கைகள் செய்த சகல வேலைகளையும், நான் பட்ட எல்லாப் பிரயாசத்தையும் கண்ணோக்கிப் பார்த்தேன்; இதோ, எல்லாம் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருந்தது.”—உண்மைதான், நாம் சோம்பேறிகளாகவும் இருக்கக்கூடாது, வேலைப் பித்தர்களாகவும் இருக்கக்கூடாது. நாம் கடின உழைப்பாளிகளாய் இருக்கலாம், ஆனால், வேலைக்கு அடிமையாகிவிட்டோமெனில் நம் சந்தோஷம் பறிபோய்விடும், இன்னும் பல கெடுதல்களையும் சந்திக்க நேரிடும் என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.—பிரசங்கி 4:5, 6.
இன்பங்களை நாடுவதில் சமநிலை
நம் காலத்தவரைப் பற்றி பைபிள் இவ்வாறு முன்னறிவித்தது: ‘மனுஷர்கள் . . . தேவப்பிரியராய் இராமல் சுகபோகப்பிரியராய் இருப்பார்கள்.’ (2 தீமோத்தேயு 3:2, 4) ஆம், கடவுளிடமிருந்து மக்களை விலக்குவதற்கு சாத்தான் பயன்படுத்தி வருகிற திறம்பட்ட கண்ணிகளில் ஒன்றுதான் இன்பங்களை நாடுவது. ஆபத்து விளைவிக்கும் ‘த்ரில்’ விளையாட்டுகள் போன்ற பொழுதுபோக்குகளிலும் கேளிக்கைகளிலும் மக்கள் ஈடுபடுவது இன்று பிரபலமாகி வருகிறது. அவற்றில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது; அத்தகைய பொழுதுபோக்குகளின் பட்டியலும் நீண்டுகொண்டே செல்கிறது. இவ்வாறு ஈடுபடுவதற்குக் காரணம் என்ன? வாழ்க்கையில் சலிப்புற்ற அநேகர், இன்பத்தில் திளைக்க விரும்பி த்ரில்லான பொழுதுபோக்குகளை நாடுகிறார்கள். இவ்வாறு மேன்மேலும் த்ரில்லை நாடும்போது ஆபத்து மேன்மேலும் அதிகரிக்கிறது. மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு நடக்கும் கிறிஸ்தவர்களோ, உயிருக்கும் அதைப் பரிசாக அளித்தவருக்கும் மதிப்பு கொடுத்து அத்தகைய ஆபத்தான விளையாட்டுகளைத் தவிர்க்கிறார்கள்.—சங்கீதம் 36:9.
முதல் மனித தம்பதியரை கடவுள் படைத்தபோது அவர்களை எங்கே குடிவைத்தார்? ஏதேன் தோட்டத்தில் குடிவைத்தார். மூல மொழியில் ஏதேன் என்ற வார்த்தையின் அர்த்தம் “இன்பம்,” அல்லது “மகிழ்ச்சி” என்பதாகும். (ஆதியாகமம் 2:8) மனிதர்கள் இன்பமாக, மகிழ்ச்சியாக வாழ வேண்டுமென்பது யெகோவாவுடைய நோக்கத்தின் பாகமாயிருந்தது என்பதை இது காட்டுகிறது.
இன்பத்தை நாடுவதில் நாம் சமநிலையான கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பதற்கு இயேசு சிறந்த முன்மாதிரி வைத்தார். அவர் யெகோவாவின் சித்தத்தைச் செய்வதில் முழு மூச்சாய் ஈடுபட்டார்; எப்போதுமே கடவுளுடைய சட்டங்களின்படியும் நியமங்களின்படியும் வாழ்ந்தார். களைப்பாய் இருந்த சமயத்திலும்கூட, பிறருடைய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு நேரம் செலவிட்டார். (மத்தேயு 14:13, 14) அதேசமயத்தில், அவர் விருந்துகளில் கலந்துகொண்டார், ஓய்வெடுப்பதற்கும் புத்துணர்ச்சி பெறுவதற்கும் நேரத்தை ஒதுக்கினார். அதைக் கண்ட அவருடைய விரோதிகளில் சிலருங்கூட அவரைப் பற்றி இவ்வாறு குறைகூறினார்கள்: “இதோ, போஜனப்பிரியனும் மதுபானப்பிரியனுமான மனுஷன்.” (லூக்கா 7:34; 10:38; 11:37) இதை இயேசு அறிந்திருந்தபோதிலும், எல்லாவிதமான இன்பங்களையும் துறந்தால்தான் உண்மையான பக்திமானாக வாழ முடியும் என்று நம்பவில்லை.
ஆக, பொழுதுபோக்குகளைக் குறித்ததில் சமநிலை காப்பது ஞானமானதென இதிலிருந்து தெளிவாகிறது. இன்பத்தை நாடுவதும் பொழுதுபோக்குகளில் ஈடுபடுவதுமே வாழ்க்கை எனக் கருதினால் நாம் உண்மையான மகிழ்ச்சியை இழந்துவிடுவோம். கடவுளோடு வைத்திருக்கிற பந்தம் உட்பட அதிமுக்கியமான காரியங்களையும் ஒதுக்கித் தள்ளிவிடுவோம். எனினும், எல்லாவிதமான இன்பங்களையும் நாம் அறவே தவிர்க்கவோ, மற்றவர்கள் பொழுதுபோக்குகளில் சமநிலையாக ஈடுபடுவதைக் குறைகூறவோ கூடாது.—பிரசங்கி 2:24; 3:1-4.
சமநிலையான வாழ்க்கையில் மகிழ்ச்சி காணுங்கள்
சீஷனாகிய யாக்கோபு இவ்வாறு எழுதினார்: “நாம் எல்லாரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம்.” (யாக்கோபு 3:2) சமநிலையோடு இருக்க நாம் கடினமாக முயலுகையில், இந்த வசனம் உண்மை என்பதை உணர்ந்துகொள்கிறோம். சமநிலை காக்க எது நமக்கு உதவும்? நம் சொந்தக் குறைநிறைகளை நன்கு அறிந்திருப்பது அவசியம். இப்படி அறிவது சுலபமல்ல. ஏனெனில் நம்மை அறியாமலேயே நாம் சமநிலை தவறலாம். முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்களோடு நெருங்கிய கூட்டுறவு வைத்துக்கொள்வதும் அவர்கள் தரும் சமநிலையான ஆலோசனையைக் கேட்பதும் ஞானமானது. (கலாத்தியர் 6:1) சபையிலுள்ள நம்பகமான ஒரு நண்பரிடமோ அனுபவமுள்ள மூப்பரிடமோ அத்தகைய ஆலோசனையைக் கேட்கலாம். பைபிள் வசனங்களோடுகூட, அவற்றின் அடிப்படையில் அவர்கள் கொடுக்கும் ஆலோசனையும் ஒரு “கண்ணாடி” போல் இருக்கிறது; அதைக்கொண்டு, யெகோவாவின் முன்னிலையில் நாம் உண்மையிலேயே எப்படி இருக்கிறோம் என்பதைச் சரிபார்த்துக்கொள்ளலாம்.—யாக்கோபு 1:22-25.
மகிழ்ச்சிகரமான விஷயம் என்னவெனில், நாம் சமநிலையற்ற விதத்தில் வாழ்க்கையை ஓட்ட வேண்டியதில்லை. யெகோவாவின் துணையோடும் விடாமுயற்சியோடும் நாம் சமநிலை காக்க முடியும், அதன் மூலம் சந்தோஷத்தையும் பெற முடியும். கிறிஸ்தவ சகோதர சகோதரிகளிடம் வைத்திருக்கிற நமது பந்தமும் உறுதிப்படும்; நாம் பிரசங்கிக்கிற ஆட்களுக்கு மேம்பட்ட முன்மாதிரியையும் வைக்க முடியும். எல்லாவற்றிற்கும் மேலாக, சமநிலை காக்கும் அன்புள்ள கடவுளாகிய யெகோவாவை மிக நெருக்கமாகப் பின்பற்ற முடியும்.—எபேசியர் 5:1.
[பக்கம் 28-ன் படத்திற்கான நன்றி]
©Greg Epperson/age fotostock