படைப்பாளர் கொடுத்த நிரந்தர பரிசு
படைப்பாளர் கொடுத்த நிரந்தர பரிசு
எந்தவொரு கோளமானாலும் சரி, உயிர்கள் வாழ்வதற்கு சில அத்தியாவசியமான அம்சங்கள் தேவை என்பதை விஞ்ஞானிகள் ஒப்புக்கொள்கிறார்கள். அந்த அம்சங்களைப் பற்றி பைபிளின் முதல் அதிகாரம் நேரடியாகவோ மறைமுகமாகவோ குறிப்பிடுவது உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தவில்லையா? அந்த அம்சங்கள் யாவை?
ஆதியாகமம் 1:2 குறிப்பிடுகிறபடி, உயிரினங்கள் வளமுடன் வாழ தண்ணீர் ஏராளமாக இருக்க வேண்டும். நம் கோளத்தில் தண்ணீர் திரவ நிலையில் இருப்பதற்கு, வெப்பநிலை சரியான அளவில் இருக்க வேண்டும். அதற்கு, கோளம் சூரியனிலிருந்து சரியானளவு தூரத்தில் இருப்பது அவசியம். ஆதியாகம பதிவு சூரியனையும் பூமிக்கு அது செய்யும் நன்மைகளையும் பற்றி அடிக்கடி குறிப்பிடுகிறது.
ஒரு கோளத்தில் மனிதர் குடியிருக்க வேண்டுமென்றால், வாயுக்கள் குறிப்பிட்ட அளவில் கலந்த வளிமண்டலம் இருக்க வேண்டும். இந்த முக்கிய அம்சத்தைப் பற்றி ஆதியாகமம் 1:6-8 குறிப்பிடுகிறது. தாவரங்கள் வளர்ந்ததைப் பற்றி ஆதியாகமம் 1:11, 12 விவரிக்கிறது. இத்தாவரங்கள் ஏராளமான ஆக்ஸிஜனை அளிக்கின்றன. ஆதியாகமம் 1:9-12-ல் விவரிக்கப்பட்டுள்ளபடி, ஒரு கோளத்தில் பல்வகை மிருகங்கள் செழித்தோங்குவதற்கு வெட்டாந்தரையான கண்டங்களும், விளைநிலங்களும் தேவை. கடைசியாக, ஒரு கோளம் மிதமான சீதோஷ்ண நிலையில் இருக்க வேண்டுமென்றால், அது சரியான கோணத்தில் சாய்ந்திருப்பதும், அதிலிருந்து மாறாமல் இருப்பதும் அவசியம். பூமியைப் பொறுத்தமட்டில், சந்திரனின் ஈர்ப்புவிசை அதை ஓரளவுக்குப் பூர்த்திசெய்கிறது. இந்தத் துணைக்கோள் எப்படி வந்தது என்பதையும் அது நமக்குத் தரும் நன்மைகள் சிலவற்றையும் பற்றி ஆதியாகமம் 1:14, 16 சிறப்பித்துக் காட்டுகிறது.
பண்டைய எழுத்தாளரான மோசே எவ்வாறு நவீன விஞ்ஞானத்தின் உதவியின்றி மேற்கூறப்பட்ட அம்சங்களைப் பற்றி எழுதினார்? அவற்றின் முக்கியத்துவத்தைப் பற்றி அறிந்துகொள்வதற்கு மற்றவர்களிடம் இல்லாத அதீத திறமை அவருக்கு இருந்ததா? வானத்தையும் பூமியையும் படைத்த படைப்பாளரின் ஏவுதலினால்தான் அதை அவர் எழுதினார் என்பதே அதற்கான விளக்கம். ஆதியாகம பதிவு விஞ்ஞான ரீதியில் திருத்தமாக இருப்பதற்கு அதுவே முக்கிய காரணம்.
இப்பிரபஞ்சத்தில் நாம் பார்க்கிற அதிசயங்கள் அனைத்தும் ஒரு நோக்கத்துடன் படைக்கப்பட்டதாக பைபிள் உறுதி அளிக்கிறது. “வானங்கள் கர்த்தருடையவைகள்; பூமியையோ மனுபுத்திரருக்குக் கொடுத்தார்” என சங்கீதம் 115:16 குறிப்பிடுகிறது. மற்றொரு சங்கீதம் இவ்வாறு சொல்கிறது: “பூமி ஒருபோதும் நிலைபேராதபடி அதின் ஆதாரங்கள்மேல் அதை ஸ்தாபித்தார்.” (சங்கீதம் 104:5) இப்பிரபஞ்சத்தையும் நாம் வாழும் அழகிய கிரகத்தையும் படைப்பாளர் ஒருவர் வடிவமைத்து உருவாக்கியிருந்தால், அதைக் காத்துப் பராமரிக்கவும் அவருக்குத் திறமை இருக்கிறது என்பதை நாம் உறுதியாக நம்ப முடியும். அப்படியானால், பின்வரும் அற்புதமான வாக்குறுதி நிறைவேறுவதைக் காண நீங்கள் நம்பிக்கையோடு காத்திருக்கலாம்: “நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.” (சங்கீதம் 37:29) ஆக கடவுள், ‘பூமியை வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல்’ அவர் செய்திருக்கும் காரியங்களை ஏற்றுக்கொண்டு அதற்கு நன்றியுள்ளவர்களாய் இருக்கிற மனிதர் அதில் ‘குடியிருப்பதற்காகச் செய்து படைத்து, அதை உருவேற்படுத்தினார்’ என்பது மறுக்க முடியாத விஷயம்.—ஏசாயா 45:18.
கடவுளைப் பற்றியும் கீழ்ப்படிதலுள்ள மனிதகுலத்திற்கு நித்தியகால வாழ்க்கையை அருளுவதற்கான அவருடைய நோக்கத்தைப் பற்றியும் கற்றுக்கொடுக்க இயேசு பூமிக்கு வந்தார் என பைபிள் சொல்கிறது. (யோவான் 3:16) கடவுள் சீக்கிரத்திலேயே, ‘பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுக்கப்போகிறார்’; அதேசமயத்தில், இரட்சிப்புக்காக அவர் செய்துள்ள ஏற்பாட்டை ஏற்றுக்கொள்கிற, சமாதானத்தை விரும்புகிற எல்லா தேசத்து மக்களையும் அவர் காப்பாற்றுவார். (வெளிப்படுத்துதல் 7:9, 14; 11:18) மனிதர்கள் கடவுளுடைய படைப்பின் அதிசயங்களைச் சதா ஆராய்ந்து அதில் இன்பம் காண்பது எவ்வளவு ஆனந்தமாயிருக்கும்!—பிரசங்கி 3:11, NW; ரோமர் 8:21.
[பக்கம் 8-ன் படத்திற்கான நன்றி]
NASA photo