Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் பள்ளத்தாக்கிலே தஞ்சம் புகுவீர்!

யெகோவாவின் பள்ளத்தாக்கிலே தஞ்சம் புகுவீர்!

‘யெகோவா . . . யுத்தநாளிலே போராடுவதுபோல் அந்த ஜாதிகளோடே போராடுவார்.’—சக. 14:3.

1, 2. இன்று என்ன யுத்தம் நெருங்கி வந்துகொண்டிருக்கிறது, கடவுளுடைய ஊழியர்கள் என்ன செய்யத் தேவையில்லை?

 அக்டோபர் 30, 1938. அமெரிக்காவில் வசிக்கும் லட்சக்கணக்கானோர் பிரபலமான ரேடியோ நிகழ்ச்சி ஒன்றைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அந்த நிகழ்ச்சியில் த உவர்ல்ட் ஆஃப் த வார்ஸ் என்ற அறிவியல் புனைக்கதையை நாடக பாணியில் படைத்திருந்தார்கள். செய்தி வாசிப்பாளர்களாக நடித்தவர்கள், செவ்வாய் கிரகத்து வாசிகள் பூமிக்கு படையெடுத்து வந்திருப்பதாகவும், இதனால் பூமியே அழியப்போவதாகவும் தத்ரூபமாக விவரித்தார்கள். இது ஒரு கதைதான் என்பதை ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள்; ஆனாலும், நிறைய பேர் இதை நிஜம் என நினைத்து குலைநடுங்கிப் போனார்கள். சிலர், வேற்று கிரக வாசிகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்குத் தயாரானார்கள்.

2 இன்று, ஒரு நிஜ யுத்தம் நெருங்கி வந்துகொண்டிருக்கிறது. ஆனால், மக்கள் யாரும் அதைப் பொருட்படுத்துவதே இல்லை. இது ஏதோ அறிவியல் புனைக் கதையில் வரும் யுத்தம் அல்ல, கடவுளுடைய வார்த்தையான பைபிளில் முன்னறிவிக்கப்பட்டிருக்கும் நிஜ யுத்தம். அதுதான் அர்மகெதோன் யுத்தம், பொல்லாத உலகத்திற்கு எதிராக கடவுள் தொடுக்கும் யுத்தம். (வெளி. 16:14-16) இந்த யுத்தத்தின்போது, பூமியிலுள்ள கடவுளுடைய ஊழியர்கள் வேற்று கிரக வாசிகளோடு போரிட வேண்டியிருக்காது. என்றாலும், கடவுளுடைய வல்லமையான செயல்களை, பிரமிப்பூட்டும் செயல்களைப் பார்த்து அவர்கள் வாயடைத்து போவார்கள்.

3. எந்தத் தீர்க்கதரிசனத்தை ஆராயப் போகிறோம், இதை ஆராய்வது நமக்கு ஏன் முக்கியம்?

3 சகரியா 14-ஆம் அதிகாரத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் தீர்க்கதரிசனத்திற்கும் அர்மகெதோன் யுத்தத்திற்கும் சம்பந்தம் இருக்கிறது. இது சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட தீர்க்கதரிசனமாக இருந்தாலும், இதற்கு நாம் கவனம் செலுத்துவது மிக முக்கியம். (ரோ. 15:4) மேசியானிய அரசாங்கம் 1914-ல் பரலோகத்தில் நிறுவப்பட்டது முதற்கொண்டு கடவுளுடைய மக்களைப் பாதித்துவரும் சம்பவங்களையும் எதிர்காலத்தில் நடக்கப்போகும் வியக்கவைக்கும் சம்பவங்களையும் அந்தத் தீர்க்கதரிசனம் விவரிக்கிறது. “மகா பெரிய பள்ளத்தாக்கு” உருவாவதைப் பற்றியும் “ஜீவதண்ணீர்கள்” பாய்ந்தோடுவதைப் பற்றியும் அது சிறப்பித்துக் காட்டுகிறது. (சக. 14:4, 8) யெகோவாவின் வணக்கத்தாருக்கு பாதுகாப்பு அளிப்பதில் இந்தப் பள்ளத்தாக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், ஜீவதண்ணீர் எதைக் குறிக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ளும்போது, அதைக் குடிப்பதன் அவசியத்தை உணர்ந்துகொள்வதோடு அதைக் குடிக்கவும் விரும்புவோம். எனவே, அந்தத் தீர்க்கதரிசனத்தை மிகக் கவனமாக ஆராய வேண்டும்.—2 பே. 1:19, 20.

‘யெகோவாவுக்குரிய நாள்’ ஆரம்பமாகிறது

4. (அ) ‘யெகோவாவுக்குரிய நாள்’ எப்போது ஆரம்பமானது? (ஆ) 1914-க்கு முன்பே யெகோவாவின் வணக்கத்தார் எதை அறிவித்து வந்தார்கள், உலகத் தலைவர்கள் என்ன செய்தார்கள்?

4 ‘யெகோவாவுக்குரிய நாள்’ (NW) என்ற வார்த்தைகளுடன் சகரியா 14-ஆம் அதிகாரம் ஆரம்பமாகிறது. (சகரியா 14:1, 2-ஐ வாசியுங்கள்.) அது என்ன நாள்? அதுதான், ‘எஜமானருடைய நாள்.’ ‘உலகத்தின் அரசாட்சி நம் எஜமானருக்கும் அவரது கிறிஸ்துவுக்கும் உரிய அரசாட்சியானபோது’ அந்த நாள் ஆரம்பமானது. (வெளி. 1:10; 11:15) ஆம், 1914-ல் மேசியானிய அரசாங்கம் பரலோகத்தில் நிறுவப்பட்டபோது அது ஆரம்பமானது. “புறதேசத்தாருக்குக் குறிக்கப்பட்ட காலங்கள்” அந்த வருடத்தில் முடிவடையும் என்றும் சரித்திரம் காணாதளவுக்கு கஷ்டங்கள் தலைதூக்கும் என்றும் பல வருடங்களுக்கு முன்பே யெகோவாவின் வணக்கத்தார் அறிவித்தார்கள். (லூக். 21:24) இதைக் கேட்ட ஜனங்கள் என்ன செய்தார்கள்? பரலோக நம்பிக்கையுடையவர்கள் சரியான நேரத்தில் கொடுத்த அந்த எச்சரிப்புக்கு அரசியல்வாதிகளும் மதத் தலைவர்களும் கவனம் செலுத்தாமல் அவர்களைக் கேலி செய்தார்கள். இது சர்வவல்ல தேவனையே கேலி செய்ததற்குச் சமம். ஏனென்றால், இந்தப் பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் ‘பரலோக எருசலேமின்’ அதாவது மேசியானிய அரசாங்கத்தின் பாகமானவர்கள்.—எபி. 12:22, 28.

5, 6. (அ) கடவுளுடைய மக்களின் எதிரிகள் என்ன செய்தார்கள்? (ஆ) ‘மீதியான ஜனம்’ யார்?

5 தேசங்களால் “[எருசலேம்] நகரம் பிடிக்கப்படும்” என்று சகரியா சொன்னார். “நகரம்” என்பது மேசியானிய அரசாங்கத்தைக் குறிக்கிறது. பூமியில் மீந்திருக்கும் பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் இந்த அரசாங்கத்தின் பாகமாக இருக்கிறார்கள். (பிலி. 3:20) முதல் உலகப் போரின்போது, யெகோவாவின் அமைப்பில் இருந்த முக்கிய அங்கத்தினர்கள் ‘பிடிக்கப்பட்டு’ அதாவது கைதுசெய்யப்பட்டு அமெரிக்காவில், ஜார்ஜியாவைச் சேர்ந்த அட்லாண்டாவிலுள்ள ஒரு சிறையில் போடப்பட்டார்கள். ‘வீடுகள் கொள்ளையடிக்கப்பட்டன,’ அதாவது இவர்களும் உத்தமத்தைக் காத்துக்கொண்ட மற்றவர்களும் அநியாயமாக நடத்தப்பட்டார்கள், கொடுமைப்படுத்தப்பட்டார்கள். அவர்கள் அச்சடித்த பிரசுரங்களுக்கும் அவர்களுடைய நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்கப்பட்டன. இது, அந்த ஜனங்களின் செல்வங்களைக் கொள்ளையடித்ததற்குச் சமம்.

6 சொற்ப எண்ணிக்கையில் இருந்த கடவுளுடைய மக்களைப் பற்றி விரோதிகள் இல்லாததையும் பொல்லாததையும் சொன்னார்கள், எதிர்த்தார்கள், துன்புறுத்தினார்கள். ஆனாலும், உண்மை வணக்கத்தை அடியோடு துடைத்தழிக்க முடியவில்லை. ஆம், பரலோக நம்பிக்கையுள்ளவர்களில் ‘மீதியான ஜனம், நகரத்தை விட்டு அறுப்புண்டு’ போகவில்லை.

7. பரலோக நம்பிக்கையுள்ள சாட்சிகள் இன்றுள்ள உண்மை வணக்கத்தாருக்கு எப்படி உதாரணமாகத் திகழ்கிறார்கள்?

7 முதல் உலகப்போரின் முடிவில் இந்தத் தீர்க்கதரிசனம் முழுமையாக நிறைவேறி விட்டதா? இல்லை. பரலோக நம்பிக்கையுள்ளவர்களில் மீதியானோரையும், பூமிக்குரிய நம்பிக்கையுள்ள அவர்களுடைய தோழர்களையும் தேசங்கள் இன்னும் அதிகமாக எதிர்க்க ஆரம்பித்தன. (வெளி. 12:17) இரண்டாம் உலகப் போர் அதற்கு ஓர் உதாரணம். எப்படிப்பட்ட துன்புறுத்தல் வந்தபோதிலும் பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் தூண்போல் உறுதியாக நின்றது, இன்றுள்ள கடவுளின் ஊழியர்களுக்குத் தூண்டுகோலாய் இருக்கிறது. சாட்சிகளாக இல்லாத உறவினர்கள், கூட வேலை செய்பவர்கள், கூடப் படிப்பவர்கள் என்று யார் எதிர்த்தாலும் கேலி செய்தாலும் அவற்றையெல்லாம் சகித்து நிற்கிறார்கள். (1 பே. 1:6, 7) அவர்கள் எங்கு வாழ்ந்தாலும் சரி, ‘ஒரே சிந்தையில் உறுதியோடு இருக்கவும்,’ “எதிரிகளைக் கண்டு துளியும் பயப்படாமல்” இருக்கவும் பாடுபடுகிறார்கள். (பிலி. 1:27, 28) ஆனால், இந்த உலகமே அவர்களை வெறுக்கும்போது, பாதுகாப்புக்கு எங்கே போவார்கள்?—யோவா. 15:17-19.

யெகோவா உருவாக்கும் “மகா பெரிய பள்ளத்தாக்கு”

8. (அ) பைபிளில் மலை என்ற வார்த்தை எதைக் குறிக்கிறது? (ஆ) “ஒலிவமலை” எதைக் குறிக்கிறது?

8 எருசலேம், அதாவது அந்த “நகரம்,” பரலோக எருசலேமுக்கு அடையாளமாக இருப்பதுபோல், ‘எருசலேமுக்கு எதிரே இருக்கிற ஒலிவமலைக்கும்’ ஓர் அடையாள அர்த்தம் இருக்கிறது. அந்த மலை எதைக் குறிக்கிறது? அது எப்படி “நடுமையத்திலே . . .  பிளந்து” இரண்டு மலைகளாகும்? அவற்றை ‘என் மலைகள்’ என்று யெகோவா ஏன் சொல்கிறார்? (சகரியா 14:3-5-ஐ வாசியுங்கள்.) பொதுவாக ராஜ்யத்தை அல்லது அரசாங்கத்தைக் குறிக்க மலை என்ற வார்த்தை பைபிளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. கடவுளுடைய மலையிலிருந்து ஆசீர்வாதமும் பாதுகாப்பும் கிடைப்பதாகக்கூட பைபிள் சொல்கிறது. (சங். 72:3; ஏசா. 25:6, 7) ஆக, யெகோவா நிற்கும் அந்த ஒலிவமலை அவருடைய சர்வலோகப் பேரரசாட்சியை, உன்னத அரசாட்சியைக் குறிக்கிறது.

9. “ஒலிவமலை” பிளப்பது எதைக் குறிக்கிறது?

9 ஒலிவமலை இரண்டாகப் பிளப்பது எதைக் குறிக்கிறது? யெகோவா இன்னொரு அரசாட்சியை, துணை ஆட்சியை ஏற்படுத்துவதைக் குறிக்கிறது. இயேசு கிறிஸ்து ஆட்சி செய்யப்போகிற மேசியானிய அரசாங்கமே அது. அதனால்தான், “ஒலிவமலை” பிளந்து உருவாகும் இரண்டு மலைகளையும் ‘என் மலைகள்’ என்று யெகோவா சொல்கிறார். (சக. 14:4) இரண்டுமே அவருக்குச் சொந்தமானவை.

10. இரண்டு மலைகளுக்கிடையே உருவான “மகா பெரிய பள்ளத்தாக்கு” எதைக் குறிக்கிறது?

10 அடையாள அர்த்தமுள்ள இந்த மலை, வடக்கே பாதியும் தெற்கே பாதியுமாக பிளவடையும்போது அவை இரண்டின்மீதும் யெகோவாவின் பாதங்கள் ஊன்றியிருக்கின்றன. யெகோவாவின் பாதங்களுக்குக் கீழே “மகா பெரிய பள்ளத்தாக்கு” உருவாகிறது. இந்தப் பள்ளத்தாக்கு கடவுள் தரும் பாதுகாப்புக்கு அடையாளமாக இருக்கிறது. அதாவது, யெகோவாவின் சர்வலோகப் பேரரசாட்சியின் கீழும் அவருடைய மகனின் மேசியானிய அரசாங்கத்தின் கீழும் யெகோவாவின் ஊழியர்கள் பாதுகாப்பைப் பெறுவார்கள். உண்மை வணக்கம் துடைத்தழிக்கப்பட யெகோவா விடமாட்டார். ஒலிவமலை எப்போது பிளவடைந்தது? புற தேசத்தாரின் காலம் 1914-ல் முடிவடைந்து, மேசியானிய அரசாங்கம் நிறுவப்பட்டபோது பிளவடைந்தது. உண்மை வணக்கத்தார் எப்போது அந்த அடையாளப்பூர்வ பள்ளத்தாக்கை நோக்கி ஓட ஆரம்பித்தார்கள்?

பள்ளத்தாக்கை நோக்கி ஓட ஆரம்பிக்கிறார்கள்!

11, 12. (அ) அடையாளப்பூர்வ பள்ளத்தாக்கை நோக்கி உண்மை வணக்கத்தார் எப்போது ஓட ஆரம்பித்தார்கள்? (ஆ) யெகோவாவின் பலத்த கரம் அவருடைய மக்களோடு இருக்கிறதென எப்படிச் சொல்லலாம்?

11 “என் பெயரை முன்னிட்டு எல்லாத் தேசத்தாருடைய வெறுப்புக்கும் ஆளாவீர்கள்” என்று இயேசு தம் சீடர்களை எச்சரித்தார். (மத். 24:9) முக்கியமாக, 1914-ல் கடைசி நாட்கள் ஆரம்பித்ததிலிருந்து இந்த வெறுப்பு தீவிரமாகி வருகிறது. முதல் உலகப் போரின்போது பரலோக நம்பிக்கையுள்ள மீதியானோருக்கு கடும் எதிர்ப்பு வந்தபோதிலும், அந்த உண்மையுள்ளோர் முற்றிலுமாக அழிக்கப்படவில்லை. பொய் மத உலகப் பேரரசான மகா பாபிலோனின் பிடியிலிருந்து 1919-ல் அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள். (வெளி. 11:11, 12) * அப்போதுதான், உண்மை வணக்கத்தார் பள்ளத்தாக்கை நோக்கி ஓட ஆரம்பித்தார்கள்.

12 பூமியெங்கும் உள்ள உண்மை வணக்கத்தார் 1919 முதற்கொண்டு அந்தப் பள்ளத்தாக்கில் பாதுகாப்பை அனுபவித்து வருகிறார்கள். யெகோவாவின் சாட்சிகளுடைய ஊழியத்திற்கும் பிரசுரங்களுக்கும் பல வருடங்களாக உலகின் பல பகுதிகளில், தடையுத்தரவுகளும் கட்டுப்பாடுகளும் வந்து குவிந்த வண்ணம் இருக்கின்றன. சில நாடுகளில் அவை இப்போதும் இருக்கின்றன. தேசங்கள் என்னதான் முயன்றாலும் உண்மை வணக்கத்தை ஒழித்துக்கட்டவே முடியாது! யெகோவாவுடைய பலத்த கரம் அவருடைய மக்களோடு இருக்கும்.—உபா. 11:2.

13. யெகோவாவின் பள்ளத்தாக்கில் தங்கியிருக்க நாம் என்ன செய்ய வேண்டும், இந்தக் காலத்தில் அது ஏன் ரொம்பவே முக்கியம்?

13 எப்போதும் உண்மையுள்ளவர்களாய் அந்தப் பள்ளத்தாக்கில் நிலைத்திருந்தால் யெகோவாவும் இயேசு கிறிஸ்துவும் நமக்கு பாதுகாப்பு கொடுப்பது உறுதி. ‘தம்முடைய கையிலிருந்து நம்மைப் பறித்துக்கொள்ள’ யாரையும் எதையும் கடவுள் அனுமதிக்க மாட்டார். (யோவா. 10:28, 29) பேரரசரான யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து, மேசியானிய அரசாங்கத்தின் உண்மையுள்ள குடிமக்களாய் நிலைத்திருப்பதற்கு எந்த உதவியையும் செய்ய யெகோவா தயாராயிருக்கிறார். மிகுந்த உபத்திரவம் நெருங்கி வருவதால் அவருடைய உதவி நமக்கு இன்னும் அதிகமாகத் தேவைப்படும். ஆகவே பாதுகாப்பு தரும் யெகோவாவின் பள்ளத்தாக்கில் தங்கியிருப்பது ரொம்ப ரொம்ப முக்கியம்.

‘யுத்தநாள்’ வரப்போகிறது

14, 15. ‘யெகோவாவின் ‘யுத்தநாளில்’ பள்ளத்தாக்கிற்கு வெளியே இருப்பவர்களுக்கு என்ன நடக்கும்?

14 இந்த உலகின் முடிவு நெருங்கி வருகையில், யெகோவாவின் ஊழியர்களை சாத்தான் தீவிரமாகத் தாக்குவான். அப்போது, விரோதிகளுக்கு எதிரான ‘யெகோவாவின் யுத்தநாள்’ வரும். அது சாத்தானின் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். அந்நாளில், சர்வலோகப் பேரரசரான யெகோவா தம் மக்களின் சார்பாக போரிட்டு எதிரிகளை அழித்துவிடுவார். அந்த யுத்தநாளில் யெகோவா மகத்தான யுத்த வீரர் என்பதை உலகமே அறிந்துகொள்ளும்.

15 யெகோவாவின் யுத்தநாளில், ‘பெரிய பள்ளத்தாக்கிற்கு’ வெளியே இருப்பவர்களுக்கு என்ன நடக்கும்? விசேஷித்த “வெளிச்சம் இல்லாமல்,” அதாவது கடவுளுடைய ஆதரவு இல்லாமல் தவிப்பார்கள். அந்த நாளில் தேசங்களின் ராணுவ பலத்திற்கு அடையாளமான, “குதிரைகள், கோவேறு கழுதைகள், ஒட்டகங்கள், கழுதைகள் முதலான எல்லா மிருகஜீவன்களும்” பயனற்றதாகி விடும். அவை குளிரால் செயல்பட முடியாமல் ‘உறைந்து’ (NW) போய்விடும். அதோடு, கொள்ளை நோயையும், ‘வாதையையும்’ யெகோவா வரப்பண்ணுவார். அந்த “வாதை” அடையாள அர்த்தமுடையதாகவோ நிஜமானதாகவோ இருக்கலாம். ஆனாலும் எதிரிகளின் கொட்டத்தை அது அடக்கிவிடும். அந்த நாளில், எதிரிகளின் ‘கண்களும் நாவும் அழுகிப்போகும்’ என்று பைபிள் சொல்கிறது. ஆம், அவர்களால் கடவுளுடைய மக்களைத் தாக்கவோ கடவுளுக்கு எதிராகப் பேசவோ முடியாமல் போய்விடும். (சக. 14:6, 7, 12, 15) எதிரிகள் பூமியின் எந்த மூலையில் இருந்தாலும் அழிவிலிருந்து தப்பிக்க முடியாது. அந்தப் போருக்காக ‘பூமியின் ராஜாக்களையும் அவர்களுடைய படைவீரர்களையும்’ சாத்தான் தன் பக்கம் கூட்டிச் சேர்ப்பான். (வெளி. 19:19-21) ஆனாலும், ‘பூமியின் ஒருமுனை துவக்கிப் பூமியின் மறுமுனைமட்டும் யெகோவாவால் கொலையுண்டவர்கள் கிடப்பார்கள்.’—எரே. 25:32, 33.

16. கடவுளுடைய யுத்தநாள் நெருங்கி வருவதால் என்ன கேள்விகளைக் கேட்டுக்கொள்வது முக்கியம், நாம் என்ன செய்ய வேண்டும்?

16 போர் என்றாலே இரு சாராருக்கும் பாதிப்பு ஏற்படும். அதாவது, உணவு பற்றாக்குறை ஏற்படலாம். சொத்துபத்துகளை இழக்கலாம். வாழ்க்கைத் தரம் குறையலாம். உரிமைகள் பறிக்கப்படலாம். அப்போது நாம் என்ன செய்வோம்? பயத்தில் நிலைகுலைந்து போவோமா? கஷ்டம் வரும்போது விசுவாசத்தை விட்டுவிடுவோமா? நம்பிக்கையிழந்து சோர்ந்திடுவோமா? மிகுந்த உபத்திரவத்தின்போது, யெகோவாவின் காக்கும் வல்லமையில் முழு நம்பிக்கை வைப்பதும் அவருடைய பள்ளத்தாக்கிலேயே தங்கியிருப்பதும் எவ்வளவு முக்கியம்!ஆபகூக் 3:17, 18-ஐ வாசியுங்கள்.

‘ஜீவதண்ணீர்கள் புறப்படும்’

17, 18. (அ) “ஜீவதண்ணீர்கள்” என்றால் என்ன? (ஆ) ‘கிழக்குச் சமுத்திரம்’ மற்றும் ‘மேற்குச் சமுத்திரம்’ எதைக் குறிக்கின்றன? (இ) இப்போது என்ன செய்ய தீர்மானமாய் இருக்கிறீர்கள்?

17 அர்மகெதோனுக்குப் பிறகு, மேசியானிய அரசாங்கத்தின் சிம்மாசனத்திலிருந்து “ஜீவதண்ணீர்கள்” தொடர்ந்து பாய்ந்தோடும். நாம் முடிவில்லா வாழ்வைப் பெறுவதற்காக யெகோவா செய்யும் ஏற்பாடுகளே அந்த “ஜீவதண்ணீர்கள்.” சகரியாவின் தீர்க்கதரிசனத்தில் ‘கிழக்குச் சமுத்திரம்’ சவக்கடலையும், ‘மேற்குச் சமுத்திரம்’ மத்தியதரைக் கடலையும் குறிக்கிறது. இரண்டுமே மக்களை அடையாளப்படுத்துகிறது. சவக் கடல் என்பது மனிதகுலத்தின் பொதுக் கல்லறையில் இருப்பவர்களைக் குறிக்கிறது. மத்தியதரைக் கடலில் உயிரினங்கள் நிறைய வாழ்வதால், அது அர்மகெதோனிலிருந்து தப்பிப்பிழைக்கும் “திரள் கூட்டமான” மக்களை அடையாளப்படுத்துகிறது. (சகரியா 14:8, 9-ஐ வாசியுங்கள்; வெளி. 7:9-15) இந்த இரண்டு சாராருமே, அடையாளப்பூர்வ ஜீவதண்ணீரை, அதாவது ‘வாழ்வளிக்கும் தண்ணீரை,’ குடித்து பயனடைவார்கள். ஆம், ஆதாம் செய்த பாவத்தினால் விளைந்த மரணத்திலிருந்து விடுதலை பெறுவார்கள்.—வெளி. 22:1, 2.

பாதுகாப்பு தரும் யெகோவாவின் பள்ளத்தாக்கிலே தங்கி இருக்க தீர்மானமாய் இருங்கள்

18 யெகோவாவின் பாதுகாப்பு நமக்கு இருப்பதால், இந்தப் பொல்லாத உலகிற்கு வரும் அழிவிலிருந்து தப்பித்து, கடவுளுடைய நீதியான உலகிற்குள் நுழைவோம். தேசங்களின் வெறுப்புக்கு நாம் ஆளானாலும், கடவுளுடைய அரசாங்கத்தின் குடிமக்களாக இருக்க தீர்மானமாய் இருப்போமாக! பாதுகாப்பு தரும் யெகோவாவின் பள்ளத்தாக்கில் எப்போதும் தங்கி இருப்போமாக!

^ வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது! புத்தகத்தில் பக்கங்கள் 168-170-ஐப் பாருங்கள்.