‘மிக முக்கியமான காரியங்களை நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள்’
‘மிக முக்கியமான காரியங்களை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்.’—பிலி. 1:10.
1, 2. கடைசி நாட்களைப் பற்றிய என்ன தீர்க்கதரிசனம் இயேசுவின் சீடர்களுடைய மனதைக் கவர்ந்திருக்கும், ஏன்?
ஒருவழியாக பேதுரு, யாக்கோபு, யோவான், அந்திரேயா ஆகியோருக்கு தங்கள் எஜமானரோடு தனிமையில் நேரம் செலவிட வாய்ப்பு கிடைத்தது. ஆலயம் அழியப்போவதைப் பற்றி சற்று முன்தான் இயேசு அவர்களிடம் சொல்லியிருந்தார். இது அவர்களுடைய மனதைக் குடைந்துக்கொண்டே இருந்தது. (மாற். 13:1-4) அதனால், இயேசுவிடம் “‘இவையெல்லாம் எப்போது நடக்கும், உங்களுடைய பிரசன்னத்திற்கும் இந்தச் சகாப்தத்தின் இறுதிக்கட்டத்திற்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லுங்கள்’ என்று கேட்டார்கள்.” (மத். 24:1-3) அப்போது வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சம்பவங்களைப் பற்றி இயேசு சொல்ல ஆரம்பித்தார். அவை, சாத்தானுடைய உலகின் கடைசி நாட்களை அடையாளம் காட்டும் சம்பவங்களாகவும் இருந்தன. அவற்றில் ஒன்று, சீடர்களின் ஆர்வத்தை நிச்சயம் கிளறியிருக்கும். போர்கள், பஞ்சங்கள், அக்கிரமங்கள் ஆகிய கவலைதரும் விஷயங்களைப் பற்றிச் சொல்லிவிட்டு, கடைசி நாட்களை அடையாளம் காட்டும் மற்றொரு நல்ல விஷயத்தைப் பற்றியும் இயேசு சொன்னார்: “கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய இந்த நற்செய்தி உலகமெங்கும் உள்ள எல்லாத் தேசத்தாருக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்; பின்பு முடிவு வரும்.”—மத். 24:7-14.
2 இயேசுவின் சீடர்கள் அவருடன் சேர்ந்து நற்செய்தியைச் சந்தோஷமாக அறிவித்து வந்தார்கள். (லூ. 8:1; 9:1, 2) “அறுவடை மிகுதியாக இருக்கிறது, வேலையாட்களோ குறைவாக இருக்கிறார்கள். அதனால், அறுவடைக்கு வேலையாட்களை அனுப்பும்படி அறுவடையின் எஜமானரிடம் கெஞ்சிக் கேளுங்கள்” என்று அவர் சொன்னதையும் நினைத்துப் பார்த்திருப்பார்கள். (லூ. 10:2) ஆனால், “உலகமெங்கும் உள்ள எல்லாத் தேசத்தாருக்கும்” அவர்களால் எப்படிப் பிரசங்கிக்க முடியும்? அத்தனை வேலையாட்களுக்கு எங்கே போவார்கள்? இயேசுவோடு மலையில் உட்கார்ந்திருந்த அந்த சமயத்தில் அவர்கள் எதிர்காலத்தை மனக்கண்களால் பார்த்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்! அப்போது, மத்தேயு 24:14-லுள்ள வார்த்தைகள் நிறைவேறுவதைப் பார்த்து நிச்சயம் மலைத்துப்போயிருப்பார்கள்.
3. லூக்கா 21:34 இன்று எவ்வாறு நிறைவேறி வருகிறது, நம்மை நாமே என்ன கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும்?
3 இயேசுவின் இந்தத் தீர்க்கதரிசனம் இன்று நிறைவேறி வருவதை நாம் காண்கிறோம். கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியை பூமியெங்கும் அறிவிக்க லட்சக்கணக்கானோர் கைகோர்த்திருக்கிறார்கள். (ஏசா. 60:22) என்றாலும், இந்தக் கடைசி நாட்களில், சிலருக்கு இந்த வேலையில் கவனம் செலுத்துவது சவாலாக இருக்கும் என இயேசு சொன்னார். கவனத்தைச் சிதறடிக்கும் சில விஷயங்களால் அவர்களுடைய ‘இருதயம் பாரமடையும்.’ (லூக்கா 21:34-ஐ வாசியுங்கள்.) இந்த வார்த்தைகளும் நிறைவேறுவதை நாம் கண்ணாரக் காண்கிறோம். கடவுளுடைய மக்கள் சிலர் வழிதவறிப் போகிறார்கள். வேலை, உயர் கல்வி, சொத்துபத்துகளைச் சேர்ப்பது, போட்டி விளையாட்டுகளுக்கும் பொழுதுபோக்குகளுக்கும் நேரம் செலவிடுவது சம்பந்தமாக அவர்கள் எடுக்கிற தீர்மானங்கள் இதைக் காட்டுகிறது. இன்னும் சிலர் அன்றாட வாழ்க்கையின் அழுத்தங்களாலும் கவலைகளினாலும் சோர்ந்துபோய் விடுகிறார்கள். வாழ்க்கையில் எதற்கு முக்கியத்தும் தருகிறோம் என்பதை நாம் எடுக்கும் தீர்மானங்கள் காட்டிவிடும். எனவே, ‘நான் எதற்காக முயற்சி செய்துகொண்டிருக்கிறேன்? எப்படிப்பட்ட தீர்மானங்களை எடுக்கிறேன்?’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்.
4. (அ) பிலிப்பியிலிருந்த கிறிஸ்தவர்கள் எதைச் செய்வதற்காக பவுல் ஜெபம் செய்தார், ஏன்? (ஆ) இந்தக் கட்டுரையிலும் அடுத்த கட்டுரையிலும் எதைப் பற்றி சிந்திப்போம், என்ன நோக்கத்தோடு?
4 முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள், ஆன்மீகக் காரியங்களுக்கு முதலிடம் கொடுக்க முயற்சி செய்ய வேண்டியிருந்தது. பிலிப்பியிலிருந்த கிறிஸ்தவர்கள் ‘மிக முக்கியமான காரியங்கள் எவையென . . . நிச்சயப்படுத்திக்கொள்வதற்காக’ பவுல் ஜெபம் செய்தார். (பிலிப்பியர் 1:9-11-ஐ வாசியுங்கள்.) பவுலைப் போலவே முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் பலரும் ‘கடவுளுடைய வார்த்தையைப் பயமில்லாமல் அதிக தைரியத்தோடு அறிவித்து வந்தார்கள்.’ (பிலி. 1:12-14) அதேபோல், நம்மில் அநேகர் கடவுளுடைய வார்த்தையை தைரியமாக பிரசங்கித்து வருகிறார்கள். இருந்தாலும், அதிமுக்கியமான இந்தப் பிரசங்க வேலைக்கு இன்னுமதிக கவனம் செலுத்த எது நமக்கு உதவும்? யெகோவாவுடைய அமைப்பு இப்போது செய்து வரும் விஷயங்களைச் சிந்தித்துப் பார்ப்பதே. மத்தேயு 24:14-ஐ நிறைவேற்ற யெகோவா செய்திருக்கும் ஏற்பாட்டைப் பற்றி இந்தக் கட்டுரையில் சிந்திப்போம். அவருடைய அமைப்பின் குறிக்கோள் என்ன? இதைத் தெரிந்துக்கொள்வது நம்மையும் நம் குடும்பத்தையும் என்ன செய்யத் தூண்டும்? கடவுளுடைய சேவையில் நிலைத்திருக்கவும் யெகோவாவின் அமைப்போடு சேர்ந்து செயல்படவும் உதவும் காரியங்களைப் பற்றி அடுத்த கட்டுரையில் சிந்திப்போம்.
யெகோவாவுடைய அமைப்பின் பரலோக பாகம் முன்னேறிச் செல்கிறது
5, 6. (அ) யெகோவா தம்முடைய அமைப்பின் பரலோக பாகத்தைப் பற்றிய காட்சியை ஏன் அளித்தார்? (ஆ) தரிசனத்தில் எசேக்கியேல் எதைக் கண்டார்?
5 யெகோவா எல்லா விஷயங்களையுமே பைபிளில் தெரிவிக்கவில்லை. உதாரணத்திற்கு, மூளை எப்படி வேலை செய்கிறது, பிரபஞ்சம் எப்படி இயங்குகிறது போன்ற விஷயங்களைப் பற்றிய நுணுக்கமான தகவல்களைக் குறிப்பிடவில்லை. அவை அதிக ஆர்வத்திற்குரியவையாக இருந்தாலும் அதைத் தெரிவிக்கவில்லை. மாறாக, தம்முடைய நோக்கங்களைப் புரிந்துகொண்டு அதற்கு இசைய வாழ்வதற்குத் தேவையான தகவல்களைக் குறிப்பிட்டார். (2 தீ. 3:16, 17) அப்படியிருக்க, யெகோவா தமது அமைப்பின் காணக்கூடாத பாகத்தைப் பற்றிய சில விவரங்களையும் பைபிளின் மூலம் தந்திருப்பது எந்தளவு சுவாரஸ்யமூட்டுகிறது! ஏசாயா, எசேக்கியேல், தானியேல் எழுதிய புத்தகங்களிலிருந்தும் யோவான் எழுதிய வெளிப்படுத்துதல் புத்தகத்திலிருந்தும் அந்த விவரங்களைப் படிக்கும்போது நாம் சிலிர்த்துப்போகிறோம். (ஏசா. 6:1-4; எசே. 1:4-14, 22-24; தானி. 7:9-14; வெளி. 4:1-11) யெகோவா, பரலோகத்தின் திரையை விலக்கி உள்ளே இருப்பதை உற்றுப் பார்க்க வைப்பது போல் இது இருக்கிறது, அல்லவா? யெகோவா ஏன் இந்த விவரங்களையெல்லாம் அளித்தார்?
6 ஏனென்றால், நாம் ஒரு சர்வலோக அமைப்பின் பாகமாக இருக்கிறோம். யெகோவாவுடைய நோக்கத்தை ஆதரிக்கும் இன்னும் அநேக வேலைகள் நம் கண்களுக்கு மறைவாக நடந்து வருகின்றன. உதாரணத்திற்கு, அவருடைய அமைப்பின் காணக்கூடாத பாகத்தைச் சித்தரித்துக் காட்டும் பிரமாண்டமான பரலோக ரதத்தை எசேக்கியேல் கண்டார். இந்த ரதம் படு விரைவாகச் செல்லும், சட்டென திசையை மாற்றிக்கொள்ளும். (எசே. 1:15-21) அதன் சக்கரங்கள் ஒரு சுற்று சுற்றுவதற்குள், அந்த ரதம் கண்ணுக்கெட்டாத தூரம் சென்றுவிடும். அத்தரிசனத்தில், ரதத்தை ஓட்டுபவரையும் எசேக்கியேலால் ஒருகணம் பார்க்க முடிந்தது. “பளபளக்கும் வெண்கலம் போன்றும், நெருப்பு சூழ்ந்திருப்பது போன்றும் இருக்க நான் கண்டேன். . . . இது ஆண்டவரது மாட்சிமிகு சாயலின் காட்சி.” (எசே. 1:25-28, பொது மொழிபெயர்ப்பு) எசேக்கியேல் இந்தக் காட்சியைப் பார்த்து நிச்சயம் பிரமித்துப் போயிருப்பார்! யெகோவாவுக்கு தம் அமைப்பின் மீது முழு கட்டுப்பாடு இருப்பதையும் தமது சக்தியினால் அதை வழிநடத்தி வருவதையும் எசேக்கியேல் கண்டார். யெகோவாவுடைய அமைப்பின் பரலோக பாகம் முன்னேறி வருவதைப் பற்றிய எப்பேர்ப்பட்ட அருமையான சித்தரிப்பு!
7. தானியேலுக்குக் கொடுக்கப்பட்ட காட்சி நம் நம்பிக்கையை எப்படிப் பலப்படுத்துகிறது?
7 தானியேல் கண்ட காட்சியும் நம் நம்பிக்கையைப் பலப்படுத்துகிறது. அந்தக் காட்சியில், யெகோவா “நீண்ட ஆயுசுள்ள” ஒருவரைப் போல் சித்தரிக்கப்பட்டிருக்கிறார். அவர் அக்கினிஜுவாலையுள்ள சிம்மாசனத்தில் வீற்றிருப்பதை தானியேல் கண்டார். அந்தச் சிம்மாசனத்திற்குச் சக்கரங்கள் இருந்தன. (தானி. 7:9) தம்முடைய அமைப்பு முன்னேறிச் செல்வதையும் தமது நோக்கத்தை நிறைவேற்றுவதையும் தானியேல் புரிந்துகொள்ள வேண்டுமென யெகோவா விரும்பினார். ‘மனுஷகுமாரனுடைய சாயலான ஒருவருக்கு,’ அதாவது இயேசுவுக்கு யெகோவாவுடைய அமைப்பின் பூமிக்குரிய பாகத்தை கண்காணிக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டதையும் தானியேல் கண்டார். கிறிஸ்துவின் ஒப்பற்ற ஆட்சி ஒருசில ஆண்டுகளுக்கு மட்டுமே நீடித்திருக்கும் ஆட்சி அல்ல. மாறாக, “அவரது ஆட்சியுரிமை என்றுமுளதாகும்; அதற்கு முடிவே இராது; அவரது அரசு அழிந்து போகாது.” (தானி. 7:13, 14, பொ.மொ.) யெகோவாமீது நம்பிக்கை வைக்கவும் அவர் நிறைவேற்றுகிற காரியங்களைப் புரிந்துகொள்ளவும் இது நம்மைத் தூண்டுகிறது, அல்லவா? ஓர் அரசருக்குரிய அனைத்து தகுதிகளையும் பெற்ற இயேசுவுக்குத்தான் ‘ஆட்சியுரிமையையும் மாட்சியையும் அரசையும்’ யெகோவா கொடுத்தார். இது தம் மகன்மீது யெகோவாவுக்கு நம்பிக்கை இருப்பதைக் காட்டுகிறது. எனவே, இயேசு ஒரு சிறந்த தலைவர் என்பதில் நமக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.
8. யெகோவா கொடுத்த காட்சியைக் கண்ட எசேக்கியேலும் ஏசாயாவும் எப்படிப் பிரதிபலித்தார்கள், நாம் என்ன செய்யத் தூண்டப்படுகிறோம்?
8 யெகோவாவுடைய அமைப்பின் காணக்கூடாத பாகத்தைப் பற்றிய இந்த விவரிப்பு நம்மை என்ன செய்யத் தூண்டுகிறது? எசேக்கியேலைப் போல, நாமும் யெகோவா நிறைவேற்றும் காரியங்களைப் பார்த்து வியந்து போகிறோம், சிரம் தாழ்த்தி நிற்கிறோம். (எசே. 1:28) யெகோவாவின் அமைப்பைப் பற்றி தியானித்துப் பார்ப்பது ஏசாயாவைப் போலவே நம்மையும் செயல்படத் தூண்டும். யெகோவா செய்துவரும் காரியங்களைப் பற்றி மற்றவர்களிடம் சொல்வதற்கான வாய்ப்பு கிடைத்தபோது தயக்கமின்றி அதை அவர் உடனடியாக ஏற்றுக்கொண்டார். (ஏசாயா 6:5, 8-ஐ வாசியுங்கள்.) யெகோவாவின் உதவியோடு தன்னால் எந்தச் சவாலையும் சமாளிக்க முடியும் என்று ஏசாயா உறுதியாக நம்பினார். அதேபோல், யெகோவாவுடைய அமைப்பின் பரலோக பாகத்தைப் பற்றிய விவரிப்பு நம்மை வியப்பில் ஆழ்த்துவதோடு செயல்படவும் தூண்டுகிறது. யெகோவாவுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதிலேயே குறியாய் இருந்து முன்னேறிச் செல்லும் அந்த அமைப்பைப் பற்றிச் சிந்தித்துப் பார்ப்பது நம் ஆர்வத்தைத் தூண்டுகிறது, அல்லவா?
யெகோவாவுடைய அமைப்பின் பூமிக்குரிய பாகம்
9, 10. யெகோவாவுடைய அமைப்புக்கு ஒரு பூமிக்குரிய பாகம் ஏன் தேவை?
9 யெகோவா, தம்முடைய அமைப்பின் காணக்கூடாத பாகத்தோடு இணைந்து செயல்படும் ஒரு பூமிக்குரிய பாகத்தை தம் மகன் மூலமாக ஏற்படுத்தியிருக்கிறார். மத்தேயு 24:14-ல் சொல்லப்பட்டிருக்கும் அந்த வேலையை நிறைவேற்ற ஏன் ஒரு பூமிக்குரிய பாகம் தேவைப்படுகிறது? மூன்று காரணங்களைக் கவனியுங்கள்.
10 முதலாவதாக, தம்முடைய சீடர்கள் “பூமியின் கடைமுனைவரையிலும்” சாட்சி கொடுக்க வேண்டியிருக்கும் என்று இயேசு சொன்னார். (அப். 1:8) இரண்டாவதாக, ஆன்மீக உணவை வழங்குவதற்கும் இந்த வேலையில் ஈடுபடுவோரைக் கவனிப்பதற்கும் ஏற்பாடுகள் செய்ய வேண்டியிருந்தது. (யோவா. 21:15-17) மூன்றாவதாக, பிரசங்க வேலையில் ஈடுபடுவோர் யெகோவாவை வணங்க ஒன்றுகூடிவரவும் இந்தப் பிரசங்க வேலையை எப்படிச் செய்வதென கற்றுக்கொள்ளவும் ஏற்பாடுகள் செய்ய வேண்டியிருந்தது. (எபி. 10:24, 25) இதெல்லாம் தானாகவே நடைபெறாது. அப்படியானால், கிறிஸ்துவின் சீடர்கள் செய்யும் வேலை நன்கு ஒழுங்கமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
11. யெகோவாவுடைய அமைப்பின் ஏற்பாடுகளுக்கு நாம் எப்படி ஆதரவு காட்டலாம்?
11 யெகோவாவுடைய அமைப்பின் ஏற்பாடுகளுக்கு நாம் எப்படி ஆதரவு காட்டலாம்? முக்கியமான ஒரு வழி, பிரசங்க வேலையை முன்நின்று வழிநடத்தும் சகோதரர்களை முழுமையாக நம்புவது. ஏனென்றால், யெகோவாவும் இயேசுவும் அவர்களை நம்புகிறார்கள். அந்தச் சகோதரர்கள் இந்த உலகின் பிரச்சினைகளைச் சரிசெய்ய தங்களுடைய நேரத்தையும் சக்தியையும் செலவிட முயலலாம். ஆனால், அப்படிச் செய்வதில்லை. யெகோவாவுடைய அமைப்பின் காணக்கூடிய பாகம் எப்போதும் எதற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறதென இப்போது பார்க்கலாம்.
‘மிக முக்கியமான காரியங்களில்’ கவனம் செலுத்துதல்
12, 13. கிறிஸ்தவ மூப்பர்கள் தங்களுடைய பொறுப்புகளை எப்படி நிறைவேற்றுகிறார்கள், அது உங்களை ஏன் உற்சாகப்படுத்துகிறது?
12 கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி பிரசங்கிக்கும் வேலையைக் கண்காணிக்கவும் அதற்கு உத்வேகம் அளிக்கவும் உலகம் முழுவதும் முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவ மூப்பர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தச் சகோதரர்கள் தீர்மானங்களை எடுப்பதற்கு முன் பைபிளின் ஆலோசனையை நாடுகிறார்கள், அதைத் தங்கள் ‘கால்களுக்குத் தீபமும், தங்கள் பாதைக்கு வெளிச்சமுமாக’ பயன்படுத்துகிறார்கள், யெகோவாவின் வழிநடத்துதலுக்காக ஊக்கமாய் ஜெபமும் செய்கிறார்கள்.—சங். 119:105; மத். 7:7, 8.
13 முதல் நூற்றாண்டில் பிரசங்க வேலையை முன்நின்று வழிநடத்திய மூப்பர்களைப் போலவே இன்றுள்ள கிறிஸ்தவ மூப்பர்களும் “கடவுளுடைய வார்த்தை சம்பந்தமான ஊழியத்திற்கு” தங்களையே அர்ப்பணிக்கிறார்கள். (அப். 6:4, அடிக்குறிப்பு) அவர்கள், தங்களுடைய பிராந்தியத்திலும் உலகம் முழுவதிலும் பிரசங்க வேலை பெரியளவில் செய்யப்பட்டு வருவதைப் பார்த்து பேரானந்தம் அடைகிறார்கள். (அப். 21:19, 20) அவர்கள் நிறைய சட்டதிட்டங்களைப் போடுவது கிடையாது. மாறாக, பிரசங்க வேலை தொடர்ந்து நடைபெறுவதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யும்போது பைபிளையும் கடவுளுடைய சக்தியின் வழிநடத்துதலையும் பின்பற்றுகிறார்கள். (அப்போஸ்தலர் 15:28-ஐ வாசியுங்கள்.) இப்படிச் செய்வதன் மூலம் இந்தப் பொறுப்புள்ள சகோதரர்கள் சபையாருக்கு நல்ல முன்மாதிரிகளாகத் திகழ்கிறார்கள்.—எபே. 4:11, 12.
14, 15. (அ) உலகெங்கும் நடக்கும் பிரசங்க வேலையை ஆதரிக்க என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன? (ஆ) பிரசங்க வேலைக்கு நீங்கள் தரும் ஆதரவைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
14 பிரசுரங்கள், கூட்டங்கள், மாநாடுகள் மூலமாக வழங்கப்படும் ஆன்மீக உணவைத் தயாரிப்பதில் உட்பட்டிருக்கும் கடின உழைப்பு அநேகருக்குத் தெரிவதில்லை. ஆயிரக்கணக்கான சகோதர சகோதரிகள் இந்த ஆன்மீக உணவை கிட்டத்தட்ட 600 மொழிகளில் மொழிபெயர்க்க அயராது உழைக்கிறார்கள். அவர்களுடைய இந்த மனப்பூர்வமான சேவையினால் அநேகர் “கடவுளுடைய மகத்தான செயல்களைப் பற்றி” தங்கள் சொந்த மொழிகளில் தெரிந்துகொள்கிறார்கள். (அப். 2:7-11) அநேக இளம் சகோதர சகோதரிகள், நம்முடைய பிரசுரங்களை அதிவேக அச்சு இயந்திரங்களில் அச்சடித்து, பைண்ட் செய்ய கடுமையாக உழைக்கிறார்கள். இந்தப் பிரசுரங்கள் மூலைமுடுக்குகளில் இருக்கும் சபைகளுக்குக்கூட அனுப்பி வைக்கப்படுகின்றன.
15 நாம் சபையோடு சேர்ந்து மும்முரமாக ஊழியத்தில் ஈடுபட நிறைய ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. உதாரணத்திற்கு தேவராஜ்ய பள்ளிகளை நடத்த, ராஜ்ய மன்றங்கள் மற்றும் மாநாட்டு மன்றங்கள் கட்ட, நிவாரணப் பணிகளைச் செய்ய, மருத்துவ உதவியளிக்க, மாநாடுகளை ஏற்பாடு செய்ய என இன்னும் நிறைய வேலைகள் இருக்கின்றன. ஆயிரக்கணக்கான வாலண்டியர்கள் இவைகளை திரைக்குப் பின்னால் இருந்து செய்து வருகிறார்கள். இதையெல்லாம் எதற்காகச் செய்கிறார்கள்? பிரசங்க வேலையைச் சுலபமாக்கவும் அதைச் செய்பவர்களின் ஆன்மீக நலனுக்காகவும் உண்மை வணக்கத்தின் வளர்ச்சிக்காகவுமே. ஆம், யெகோவாவுடைய அமைப்பின் பூமிக்குரிய பாகம் மிக முக்கியமான காரியங்களுக்கே எப்போதும் முதலிடம் கொடுத்து வருகிறது.
யெகோவாவுடைய அமைப்பின் முன்மாதிரியைபைப் பின்பற்றுங்கள்
16. தனியாகவோ குடும்பமாகவோ பைபிளைச் சிறந்த விதத்தில் படிக்க என்ன செய்யலாம்?
16 யெகோவாவுடைய அமைப்பு செய்யும் வேலைகளைப் பற்றி சிந்தித்துப் பார்ப்பதற்கு அவ்வப்போது நேரம் ஒதுக்குகிறோமா? சிலர், குடும்ப வழிபாட்டு சமயத்தில் அல்லது தனிப்பட்ட படிப்பு சமயத்தில் இதைப் பற்றியும் ஆராய்ச்சி செய்து தியானிக்க நேரம் ஒதுக்குகிறார்கள். ஏசாயா, எசேக்கியேல், தானியேல், யோவான் ஆகியோர் கண்ட தரிசனங்களைப் பற்றி படிப்பது நம்மை மெய்சிலிர்க்க வைக்கும். அதோடு, யெகேவாவின் சாட்சிகள்—கடவுளுடைய அரசாங்கத்தை அறிவிப்போர் (ஆங்கிலம்) புத்தகம், வேறு பிரசுரங்கள், டிவிடி-க்கள் போன்றவை அமைப்பைப் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களைப் புரிந்துகொள்ள உதவுகின்றன.
17, 18. (அ) இந்தக் கட்டுரை உங்களுக்கு எப்படி உதவியது? (ஆ) என்ன கேள்விகளை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்?
17 யெகோவா தமது அமைப்பின் மூலம் நிறைவேற்றி வருகிற காரியங்களைப் பற்றி தியானித்துப் பார்ப்பது நமக்கு நல்லது. இந்த அருமையான அமைப்போடு சேர்ந்து நாமும் மிக முக்கியமான காரியங்கள்மீது கவனம் செலுத்த தீர்மானமாய் இருப்போமாக! அப்படிச் செய்வது, பவுலைப் போல மனவுறுதியுடன் இருக்க உதவும். “இந்த ஊழியத்தைக் கடவுளுடைய இரக்கத்தால் பெற்றிருக்கிற நாங்கள் சோர்ந்துபோவதில்லை” என்று அவர் எழுதினார். (2 கொ. 4:1) “நன்மை செய்வதை நாம் விட்டுவிடாமல் இருப்போமாக; நாம் சோர்ந்துபோகாதிருந்தால் ஏற்ற காலத்தில் அறுவடை செய்வோம்” என்றும் சக கிறிஸ்தவர்களை உற்சாகப்படுத்தினார்.—கலா. 6:9.
18 தினசரி வாழ்க்கையில் மிக முக்கியமான காரியங்களை நிச்சயப்படுத்திக் கொள்வதற்காக குடும்பமாகவோ தனி நபராகவோ நாம் ஏதாவது மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கிறதா? அதிமுக்கியமான பிரசங்க வேலையை அதிகம் செய்வதற்காக உங்கள் வாழ்க்கையை எளிமையாக்க முடியுமா அல்லது கவனச்சிதறல்களைத் தவிர்க்க முடியுமா? யெகோவாவின் அமைப்போடு சேர்ந்து செயல்பட உதவும் ஐந்து விஷயங்களை அடுத்த கட்டுரையில் படிக்கலாம்.