ஞானமான தீர்மானங்கள் எடுத்து உங்கள் ஆஸ்தியைக் காத்திடுங்கள்
“பொல்லாததை அறவே வெறுத்து, நல்லதை இறுகப் பற்றிக்கொள்ளுங்கள்.”—ரோ. 12:9.
1, 2. (அ) கடவுளைச் சேவிக்க வேண்டுமென்று தீர்மானிக்க எது உங்களுக்கு உதவியது? (ஆ) நம் ஆன்மீக ஆஸ்தி சம்பந்தமாக என்ன கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும்?
இந்தப் பூமியில் லட்சக்கணக்கானோர் யெகோவா தேவனைச் சேவிக்கவும் இயேசு கிறிஸ்துவின் அடிச்சுவடுகளை நெருக்கமாகப் பின்பற்றவும் ஞானமாகத் தீர்மானம் எடுத்திருக்கிறார்கள். (மத். 16:24; 1 பே. 2:21) இப்படித் தீர்மானம் எடுத்து கடவுளுக்கு அர்ப்பணித்திருப்பதை நாம் அற்பமாக நினைப்பதில்லை. ஒருசில பைபிள் வசனங்களை மட்டும் படித்துவிட்டு நாம் இந்தத் தீர்மானத்தை எடுக்கவில்லை, பைபிள் சத்தியங்களை அலசி ஆராய்ந்த பிறகே இந்தத் தீர்மானத்தை எடுத்திருக்கிறோம். அதோடு, யெகோவா நமக்கு வாக்குறுதி அளித்திருக்கும் ஆஸ்தியின்மீது நம் நம்பிக்கையைப் பலப்படுத்தியிருக்கிறோம். ‘உண்மையான கடவுளாகிய யெகோவாவையும் அவர் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும் அறிந்துகொள்பவர்களுக்கு’ அந்த ஆஸ்தி கிடைக்கும்.—யோவா. 17:3; ரோ. 12:2.
2 கடவுளோடு நல்லுறவை காத்துக்கொள்ள வேண்டுமென்றால், அவருடைய மனதைக் குளிர்விக்கிற தீர்மானங்களை எடுக்க வேண்டும். எனவே, ஆன்மீக ஆஸ்தி சம்பந்தமாக இந்தக் கட்டுரையில் நான்கு முக்கியமான கேள்விகளைச் சிந்திக்கப் போகிறோம்: எது நம்முடைய ஆஸ்தி? அது நமக்கு எந்தளவு முக்கியம்? அதைப் பெற என்ன செய்ய வேண்டும்? ஞானமான தீர்மானங்களை எடுக்க எது நமக்கு உதவும்?
நம் ஆன்மீக ஆஸ்தி
3. (அ) பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் என்ன ஆஸ்தியைப் பெறக் காத்திருக்கிறார்கள்? (ஆ) ‘வேறே ஆடுகள்’ என்ன ஆஸ்தியைப் பெறுவார்கள்?
3 கிறிஸ்தவர்களில் வெகு சிலரே “அழியாத, மாசில்லாத, மறையாத ஆஸ்தியை” பெறுகிறார்கள். அதாவது பரலோகத்தில் கிறிஸ்துவுடன் சேர்ந்து ஆட்சி செய்யும் ஒப்பற்ற பாக்கியத்தைப் பெறுகிறார்கள். (1 பே. 1:3, 4) இந்த ஆஸ்தியைப் பெறுவதற்கு அவர்கள் ‘மறுபடியும் பிறக்க’ வேண்டும். (யோவா. 3:1-3) அவர்களோடு சேர்ந்து கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்கிற லட்சக்கணக்கான ‘வேறே ஆடுகள்’ என்ன ஆஸ்தியைப் பெறுவார்கள்? (யோவா. 10:16) பாவம் செய்த ஆதாமும் ஏவாளும் இழந்த ஆஸ்தியைப் பெறுவார்கள். ஆம், கஷ்டம், மரணம், துயரம் இல்லாத பூங்காவன பூமியில் முடிவில்லா வாழ்வைப் பெறுவார்கள். (வெளி. 21:1-4) அதனால்தான், “உண்மையாகவே இன்று உனக்குச் சொல்கிறேன், நீ என்னோடு பூஞ்சோலையில் இருப்பாய்” என்று தன்னுடன் கழுவேற்றப்பட்ட குற்றவாளிக்கு இயேசுவால் வாக்குக் கொடுக்க முடிந்தது.—லூக். 23:43.
4. என்ன ஆசீர்வாதங்களை நாம் இப்போதே அனுபவித்து வருகிறோம்?
4 இப்போதும்கூட நம் ஆஸ்தியின் சில அம்சங்களை அனுபவித்துக்கொண்டுதான் வருகிறோம். “கிறிஸ்து இயேசு செலுத்திய மீட்புவிலை” மீது விசுவாசம் வைப்பதால், மனசமாதானத்தையும் கடவுளோடு நட்புறவையும் அனுபவிக்கிறோம். (ரோ. 3:23-25) கடவுளுடைய வார்த்தையில் பொதிந்திருக்கும் வாக்குறுதிகளைப் பற்றித் தெளிவாகப் புரிந்து வைத்திருக்கிறோம். அதோடு, சர்வதேச சகோதரக் கூட்டத்தில் நாமும் ஒருவராக இருப்பது நம்மைச் சந்தோஷத்தில் ஆழ்த்துகிறது, அல்லவா? எல்லாவற்றுக்கும் மேலாக, யெகோவாவின் சாட்சிகளாக இருப்பது எவ்வளவு பெரிய பாக்கியம்! இந்த ஆசீர்வாதங்களை நாம் பெற்றிருப்பதால் ஆன்மீக ஆஸ்தியைப் பொன்னெனப் போற்றுகிறோம்.
5. கடவுளுடைய மக்களை என்ன செய்ய சாத்தான் முயற்சித்திருக்கிறான், அவனுடைய சூழ்ச்சிகளை எதிர்த்து நிற்க எது நமக்கு உதவும்?
5 ஆனால், இந்த ஆஸ்தியை நாம் இழந்துவிடாமல் இருக்க வேண்டுமென்றால், சாத்தானின் சதிவேலைகளில் மாட்டிக்கொள்ளாமல் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால், கடவுளுடைய மக்கள் ஆன்மீக ஆஸ்தியைப் பெறக்கூடாது என்பதற்காக, தவறான தீர்மானங்களை எடுக்கத் தூண்டுவதே அவனுடைய வேலை. (எண். 25:1-3, 9) அவனுக்கு முடிவு நெருங்கிவிட்டதால், நம்மை மோசம்போக்குவதற்காக தீவிரமாகக் களமிறங்கியிருக்கிறான். (வெளிப்படுத்துதல் 12:12, 17-ஐ வாசியுங்கள்.) “பிசாசின் சூழ்ச்சிகளை நீங்கள் உறுதியோடு எதிர்த்து நிற்க” வேண்டுமென்றால், நம் ஆஸ்தியை எப்போதும் உயர்வாய் மதிக்க வேண்டும். (எபே. 6:11) இந்த விஷயத்தில் ஈசாக்குடைய மூத்த மகனின் கெட்ட முன்மாதிரியிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ளலாம்.
ஏசாவைப் போல் இருக்காதீர்கள்!
6, 7. ஏசா யார், என்ன ஆஸ்தியைப் பெறும் வாய்ப்பு அவனுக்கு இருந்தது?
6 சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன்பு, ஈசாக்கு-ரெபெக்காளுக்கு ஏசா, யாக்கோபு என்ற இரட்டை பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்கள் வளர்ந்தபோது, வித்தியாசமான சுபாவமுடையவர்கள் ஆனார்கள், வித்தியாசமான வேலையைத் தெரிவு செய்தார்கள். “ஏசா வேட்டையில் வல்லவனும் வனசஞ்சாரியுமாய் இருந்தான்; யாக்கோபு குணசாலியும் [குற்றமற்றவனாகவும், NW] கூடாரவாசியுமாய் இருந்தான்.” (ஆதி. 25:27) “குற்றமற்றவன்” என்பதற்கான எபிரெய வார்த்தை “உத்தமன், கள்ளங்கபடமில்லாதவன் என்ற அர்த்தங்களைத் தருகிறது” என பைபிள் மொழிபெயர்ப்பாளர் ராபர்ட் ஆல்ட்டர் குறிப்பிடுகிறார்.
7 ஏசாவுக்கும் யாக்கோபுக்கும் 15 வயது இருக்கும்போது அவர்களுடைய தாத்தா ஆபிரகாம் இறந்துவிட்டார். ஆனால், யெகோவா அவருக்குக் கொடுத்த வாக்குறுதி மண்ணில் மறைந்துவிடவில்லை. பிற்பாடு, ஈசாக்கிடமும் அதை உறுதிப்படுத்தினார்; ஆம், ஆபிரகாமின் வித்து மூலம் பூமியில் இருக்கும் சகல ஜனங்களும் தங்களை ஆசீர்வதித்துக்கொள்வார்கள் என்று சொன்னார். (ஆதியாகமம் 26:3-5-ஐ வாசியுங்கள்.) ஆதியாகமம் 3:15-ல் சொல்லப்பட்டுள்ள “வித்து,” அதாவது மேசியா ஆபிரகாமின் சந்ததியில் தான் வருவார் என்பதை அந்த வாக்குறுதி வெளிப்படுத்தியது. அந்த வம்சாவளியில் இடம்பெற ஈசாக்கின் முதல் மகன் ஏசாவுக்கு உரிமை இருந்தது. ஆம், அருமையான ஆஸ்தியைப் பெறும் வாய்ப்பு இருந்தது. அதற்கு அவன் மதிப்பு கொடுத்தானா?
8, 9. (அ) ஆஸ்தியைப் பெறும் விஷயத்தில் ஏசா என்ன தீர்மானம் எடுத்தான்? (ஆ) பல வருடங்களுக்குப் பிறகு ஏசா எதை உணர்ந்துகொண்டான், எப்படிப் பிரதிபலித்தான்?
8 ஒருநாள் ஏசா வெளியிலிருந்து வந்தபோது, “யாக்கோபு கூழ் சமைத்துக்கொண்டிருந்தான்.” உடனே ஏசா, “அந்தச் சிவப்பான கூழிலே நான் சாப்பிடக் கொஞ்சம் தா, இளைத்திருக்கிறேன்” என்றான். அதற்கு யாக்கோபு, “உன் சேஷ்ட புத்திரபாகத்தை [அதாவது, தலைமகன் உரிமையை] இன்று எனக்கு விற்றுப்போடு” என்றான். ஏசா என்ன செய்யத் தீர்மானித்தான்? “இந்தச் சேஷ்ட புத்திரபாகம் எனக்கு என்னத்திற்கு” என்று சொல்லிவிட்டான். ஆம், தலைமகன் உரிமைக்குப் பதிலாக கூழையே தெரிவுசெய்தான். யாக்கோபு அந்த உரிமையைச் சட்டப்படி பெற்றுக்கொள்வதற்காக, “எனக்கு ஆணையிட்டுக்கொடு” என்று சொன்னான். கொஞ்சமும் தயங்காமல் ஏசா அதைக் கொடுத்துவிட்டான். அதன் பிறகு, “யாக்கோபு ஏசாவுக்கு அப்பத்தையும் பயற்றங்கூழையும் கொடுத்தான்; அவன் புசித்துக் குடித்து எழுந்திருந்து போய்விட்டான். இப்படி ஏசா தன் சேஷ்ட புத்திரபாகத்தை அலட்சியம் பண்ணினான்.”—ஆதி. 25:29-34.
9 வருடங்கள் உருண்டோடின. ஈசாக்கு தனக்கு மரணம் நெருங்கிவிட்டதை உணர்ந்தார். அப்போது, ஏசா விற்றுப்போட்ட தலைமகன் உரிமையை யாக்கோபு பெறுவதற்கு ரெபெக்காள் ஏற்பாடுகள் செய்தாள். முட்டாள்தனமாகத் தெரிவு செய்ததை ஏசா உணர்ந்தபோது “என் தகப்பனே, என்னையும் ஆசீர்வதியும். . . . நீர் எனக்கு ஒரு ஆசீர்வாதத்தையாகிலும் வைத்துவைக்கவில்லையா” என்று கெஞ்சி கேட்டான். ஏற்கெனவே யாக்கோபை ஆசீர்வதித்துவிட்டதால் அதை மாற்ற முடியாது என்று ஈசாக்கு சொன்னவுடன், “ஏசா சத்தமிட்டு அழுதான்.”—ஆதி. 27:30-38.
10. ஏசாவையும் யாக்கோபையும் பற்றி யெகோவா எப்படி உணர்ந்தார், ஏன்?
10 இந்த வசனங்களிலிருந்து ஏசாவின் மனப்பான்மையைப் பற்றி என்ன தெரிந்துகொள்கிறோம்? எதிர்காலத்தில் கிடைக்கப்போகிற ஆசீர்வாதங்களைவிட தன் உடலின் ஆசைகளுக்கே ஏசா முக்கியத்துவம் கொடுத்தான். அவன் தன் ஆஸ்தியை மதிக்கவில்லை, கடவுள்மேல் அவனுக்கு அன்பும் இருக்கவில்லை. அதோடு, தன் சந்ததிக்கு என்ன பாதிப்பு வரும் என்றெல்லாம் அவன் கவலைப்படவில்லை. அதற்கு நேர்மாறாக, யாக்கோபு தன் ஆஸ்தியை உயர்வாய் மதித்தான். மனைவியைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில்கூட தன் பெற்றோரின் ஆலோசனையைக் கேட்டான். (ஆதி. 27:46–28:3) இந்தத் தீர்மானத்தில் பொறுமையும் தியாகங்களும் உட்பட்டிருந்தது. அப்படித் தீர்மானம் எடுத்ததன் பலனாக மேசியாவின் மூதாதையானார். ஏசாவையும் யாக்கோபையும் பற்றிக் கடவுள் எப்படி உணர்ந்தார்? “யாக்கோபை நான் சிநேகித்தேன். ஏசாவையோ நான் வெறுத்தேன்” என்று மல்கியா தீர்க்கதரிசி மூலம் யெகோவா சொன்னார்.—மல். 1:2, 3.
11. (அ) ஏசாவின் உதாரணம் கிறிஸ்தவர்களான நமக்கு ஏன் ஒரு பாடமாக இருக்கிறது? (ஆ) பாலியல் முறைகேட்டை ஏசாவின் செயலோடு பவுல் ஏன் சம்பந்தப்படுத்திப் பேசினார்?
11 ஏசாவைப் பற்றி பைபிள் சொல்லும் பதிவிலிருந்து இன்று கிறிஸ்தவர்கள் பாடம் கற்றுக்கொள்ள முடியுமா? கண்டிப்பாக! அப்போஸ்தலன் பவுல் சக கிறிஸ்தவர்களை இப்படி எச்சரித்தார்: “உங்களில் ஒருவரும் பாலியல் முறைகேட்டில் ஈடுபடுகிறவராகவோ, ஏசாவைப் போல் பரிசுத்த காரியங்களுக்குப் போற்றுதல் காண்பிக்காதவராகவோ இல்லாதபடி எச்சரிக்கையாக இருங்கள்; அவன் ஒரேவொரு வேளை உணவுக்காகத் தலைமகன் உரிமையைக் கொடுத்துவிட்டான்.” (எபி. 12:16) இந்த எச்சரிப்பு இன்று நமக்கும் பொருந்துகிறது. பாவ இச்சைகளுக்கு இடங்கொடுத்து நம் ஆன்மீக ஆஸ்தியை இழந்துவிடாதிருக்க, நாம் எப்போதும் பரிசுத்த காரியங்களுக்கு போற்றுதல் காண்பிக்க வேண்டும். பவுல் ஏன் பாலியல் முறைகேட்டை ஏசாவின் செயலோடு சம்பந்தப்படுத்திப் பேசினார்? ஏனென்றால், ஏசாவுக்கு இருந்ததைப் போன்ற மனப்பான்மை ஒருவருக்கு இருந்தால், அவர் பாலியல் முறைகேடு போன்ற தகாத இன்பங்களை நாடி பரிசுத்த காரியங்களை விட்டுவிடுவார்.
இருதயத்தை இப்போதே தயார்ப்படுத்துங்கள்
12. (அ) சாத்தான் எப்படி நம்முன் சோதனைகளை விரிக்கிறான்? (ஆ) தவறு செய்வதற்கான சூழ்நிலை வரும்போது என்ன பைபிள் உதாரணங்கள் நமக்கு உதவும்?
12 யெகோவாவின் ஊழியர்களான நாம் ஒழுக்கக்கேட்டிற்கு இழுத்துச் செல்லும் மோசமான சூழ்நிலைகளை நிச்சயம் தேடிப்போக மாட்டோம். மாறாக, யாராவது நம்மை தவறான காரியத்துக்கு இழுத்தால், இணங்கிவிடாமல் இருக்க உதவும்படி யெகோவா தேவனிடம் ஜெபம் செய்வோம். (மத். 6:13) ஆனால், சீர்கெட்ட இந்த உலகில் உத்தமராய் வாழ நாம் கடுமையாக முயற்சி செய்யும்போது, யெகோவாவோடுள்ள நம் பந்தத்தை முறித்துப்போட சாத்தான் விடாது முயலுகிறான். (எபே. 6:12) பாவ இச்சைகளில் விழ வைப்பதற்காக என்னென்ன சோதனைகளை நம்முன் விரிக்கலாம் என்பதை இந்தப் பொல்லாத உலகின் கடவுளாகிய பிசாசு அறிந்திருக்கிறான். (1 கொ. 10:8, 13) உதாரணத்திற்கு, உங்களுடைய ஆசையை தவறான வழியில் திருப்தி செய்துகொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தால் என்ன செய்வீர்கள்? ஏசாவைப் போல உங்கள் உடலின் ஆசைக்கு இணங்கிவிடுவீர்களா? அல்லது யாக்கோபின் மகன் யோசேப்பைப் போல விலகி ஓடுவீர்களா? போத்திபாரின் மனைவி தவறு செய்ய தூண்டியபோது அவர் அந்த இடத்தை விட்டே ஓடிவிட்டார்.—ஆதியாகமம் 39:10-12-ஐ வாசியுங்கள்.
13. (அ) இன்று அநேகர் எப்படி யோசேப்பைப் போல நடந்திருக்கிறார்கள், சிலர் எப்படி ஏசாவைப் போல நடந்திருக்கிறார்கள்? (ஆ) ஏசாவைப் போன்றவர்களின் உதாரணம் எதை வலியுறுத்திக் காட்டுகிறது?
13 சகோதர சகோதரிகள் பலர் ஏசாவைப் போன்ற அல்லது யோசேப்பைப் போன்ற சூழ்நிலையை எதிர்ப்பட்டிருக்கிறார்கள். அநேகர் ஞானமாக நடந்து யெகோவாவின் இருதயத்தைச் சந்தோஷப்படுத்தியும் இருக்கிறார்கள். (நீதி. 27:11) ஆனால், சிலர் ஏசாவைப் போல ஆன்மீக ஆஸ்தியை மதிக்காமல் தவறான தீர்மானம் எடுத்திருக்கிறார்கள். ஒழுக்கக்கேட்டில் ஈடுபட்டதால் ஒவ்வொரு வருடமும் நிறைய பேர் நியாய விசாரணை குழுவால் கண்டிக்கப்பட்டிருக்கிறார்கள், சபை நீக்கமும் செய்யப்பட்டிருக்கிறார்கள். உத்தமத்தைக் குலைத்துப்போடும் சூழ்நிலை வரும்வரை காத்திருக்காமல் இப்போதே நம் இருதயத்தைத் தயார்ப்படுத்துவது எவ்வளவு முக்கியம்! (சங். 78:8) சோதனை வரும்போது எதிர்த்து நிற்கவும் ஞானமான தீர்மானங்களை எடுக்கவும் உதவுகிற இரண்டு படிகளை இப்போது பார்க்கலாம்.
யோசித்து செயல்படுங்கள்
14. ‘பொல்லாததை அறவே வெறுத்து, நல்லதை இறுகப் பற்றிக்கொள்ள’ என்ன கேள்விகளைக் கேட்டுக்கொள்வது உதவியாய் இருக்கும்?
14 முதல் படி, பின்விளைவுகளை யோசித்துப் பார்ப்பது. நம் ஆன்மீக ஆஸ்தியை அளிப்பவரான யெகோவாவை எந்தளவு நேசிக்கிறோமோ அந்தளவு நம் ஆஸ்தியை மதிப்போம். நாம் ஒருவரை உயிருக்கு உயிராய் நேசிக்கும்போது அவர் மனதை கஷ்டப்படுத்த மாட்டோம். எல்லா விஷயங்களிலும் அவருக்குப் பிடித்த மாதிரியே நடந்துகொள்வோம். எனவே, அசுத்தமான பாவ இச்சைகளில் வீழ்ந்துவிடும்போது அதனால் ஏற்படும் பின்விளைவுகள் நம்மையும் மற்றவர்களையும் எப்படிப் பாதிக்கும் என்று நேரமெடுத்து யோசித்துப் பாருங்கள். ‘சுயநலத்தோடு கெட்ட காரியங்களில் ஈடுபட்டால் யெகோவாவோடுள்ள என் பந்தம் என்ன ஆகும்? என் குடும்பத்தாரை அது எப்படிப் பாதிக்கும்? சபையிலுள்ள சகோதர சகோதரிகளை எப்படிப் பாதிக்கும்? இதனால் மற்றவர்களுடைய விசுவாசத்தைக் குலைத்துவிடுவேனா?’ போன்ற கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும். (பிலி. 1:10) இன்னும் சில கேள்விகளைக்கூட கேட்டுக்கொள்ளலாம்: ‘ஒருசில நிமிட சந்தோஷத்திற்காக என் எதிர்கால வாழ்க்கையைப் பாழாக்க வேண்டுமா? ஏசாவைப் போல், செய்த தவறை உணர்ந்து மனங்கசந்து அழ வேண்டுமா?’ (எபி. 12:17) இதுபோன்ற கேள்விகளைக் கேட்டுக்கொள்வது, ‘பொல்லாததை அறவே வெறுத்து, நல்லதை இறுகப் பற்றிக்கொள்ள’ நமக்கு உதவும். (ரோ. 12:9) முக்கியமாக, யெகோவாமேல் அன்பிருந்தால் நம் ஆஸ்தியை இறுகப் பற்றிக்கொள்வோம்.—சங். 73:28.
15. சோதனைகளைத் தவிர்த்து யெகோவாவோடுள்ள பந்தத்தைப் பாதுகாக்க எது நமக்கு உதவும்?
15 இரண்டாவது படி, சோதனைகளை எதிர்த்துநிற்க தயார்ப்படுத்திக்கொள்வது. யெகோவாவோடுள்ள நம் பந்தத்திற்குப் பங்கம் விளைவிக்கும் காரியங்களை எதிர்த்து போராட யெகோவா நிறைய ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார். பைபிள் படிப்பு, கூட்டங்கள், ஊழியம், ஜெபம் இவை எல்லாம் அந்த ஏற்பாடுகளில் அடங்கும். (1 கொ. 15:58) யெகோவாவிடம் ஜெபத்தில் நம் இருதயத்தை ஊற்றும்போதெல்லாம்... ஆர்வத்தோடு ஊழியத்தில் ஈடுபடும்போதெல்லாம்... சோதனைகளை எதிர்த்துநிற்க நம்மைத் தயார்ப்படுத்துகிறோம். (1 தீமோத்தேயு 6:12, 19-ஐ வாசியுங்கள்.) இப்படித் தயார்ப்படுத்திக்கொள்ள, நாம் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். (கலா. 6:7) நீதிமொழிகள் இரண்டாம் அதிகாரம் இதைச் சிறப்பித்துக் காட்டுகிறது.
‘நாடிக்கொண்டே இருங்கள்’
16, 17. ஞானமான தீர்மானங்களை எடுக்க எது உதவும்?
16 ஞானத்தையும் யோசிக்கும் திறனையும் அடைய முயலும்படி நீதிமொழிகள் இரண்டாம் அதிகாரம் ஊக்குவிக்கிறது. அப்போது எது சரி, எது தவறு என்பதையும் சுயக்கட்டுப்பாட்டுக்கும் சுகபோகத்திற்கும் உள்ள வித்தியாசத்தையும் உணர்ந்துகொள்வோம். பைபிள் சொல்கிறது: “என் மகனே, நீ உன் செவியை ஞானத்திற்குச் சாய்த்து, உன் இருதயத்தைப் புத்திக்கு [அதாவது, விவேகத்திற்கு] அமையப்பண்ணும்பொருட்டு, நீ என் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, என் கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்தி, ஞானத்தை [அதாவது, புரிந்துகொள்ளுதலை] வா என்று கூப்பிட்டு, புத்தியைச் சத்தமிட்டு அழைத்து, அதை வெள்ளியைப்போல் நாடி, புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடுவாயாகில், அப்பொழுது கர்த்தருக்குப் பயப்படுதல் இன்னதென்று நீ உணர்ந்து, தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய். கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று அறிவும் புத்தியும் வரும்.”—நீதி. 2:1-6.
17 நீதிமொழிகளில் சொல்லப்பட்டுள்ள நிபந்தனையின்படி செய்யும்போது நம்மால் ஞானமான தீர்மானங்களை எடுக்க முடியும். ஆம், யெகோவாவுடைய வார்த்தை நம் எண்ணங்களையும் சிந்தைகளையும் செதுக்கி சீராக்க அனுமதித்தால், கடவுளுடைய வழிநடத்துதலுக்காக தொடர்ந்து ஜெபித்தால், கடவுளுடைய வார்த்தையில் பொதிந்திருக்கும் இரத்தினங்களை விடாது தேடினால் சோதனைகளை நம்மால் எதிர்த்துநிற்க முடியும்.
18. தொடர்ந்து என்ன செய்யத் தீர்மானமாய் இருக்கிறீர்கள், ஏன்?
18 அறிவை, புரிந்துகொள்ளுதலை, விவேகத்தை, ஞானத்தை பெற கடும் முயற்சி செய்கிறவர்களுக்கு யெகோவா அவற்றை அபரிமிதமாகத் தருகிறார். அவற்றைப் பெற எந்தளவு முயற்சிக்கிறோமோ, அவற்றை எந்தளவு பயன்படுத்துகிறோமோ, அந்தளவு அவற்றைத் தந்த யெகோவாவோடுள்ள நம் பந்தம் பலப்படும். ஏதாவது சோதனை வரும்போது யெகோவாவோடுள்ள நம் பந்தம் ஒரு தடுப்புச்சுவராக இருந்து நம்மைப் பாதுகாக்கும். யெகோவாவோடு நெருக்கமாக இருந்தால், அவருக்குப் பயந்து நடந்தால், தவறைத் தவறிக்கூட செய்ய மாட்டோம். (சங். 25:14; யாக். 4:8) எனவே, யெகோவாவோடு நட்பு வைத்து, பரம ஞானத்தைப் பயன்படுத்தினால் எப்போதும் சரியான தீர்மானங்களை எடுப்போம்! அது யெகோவாவின் இதயத்தை மகிழ்விக்கும்! நம் ஆன்மீக ஆஸ்தியை பாதுகாக்கும்!