Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சிலரைக் கொண்டு பலருக்கு உணவளித்தல்

சிலரைக் கொண்டு பலருக்கு உணவளித்தல்

“[இயேசு] ரொட்டிகளைப் பிட்டு சீடர்களிடம் கொடுத்தார், அவர்கள் அதைக் கூட்டத்தாருக்குக் கொடுத்தார்கள்.” —மத். 14:19.

1-3. பெத்சாயிதா அருகே கூடியிருந்த பெரும் கூட்டத்தாருக்கு இயேசு உணவளித்த விதத்தை விவரியுங்கள். (இதே பக்கத்திலுள்ள படத்தைப் பாருங்கள்.)

 கி.பி. 32-ஆம் வருடம், பஸ்காவுக்கு சற்றுமுன் நடந்த ஓரு சம்பவத்தைக் கற்பனை செய்து பாருங்கள். (மத்தேயு 14:14-21-ஐ வாசியுங்கள்.) கலிலேய கடலுக்கு வடக்கேயுள்ள பெத்சாயிதா என்ற கிராமத்தின் ஒதுக்குப்புறமான ஓர் இடத்தில் பெரும் கூட்டம் திரண்டிருக்கிறது. பெண்கள், குழந்தைகள் தவிர சுமார் 5,000 ஆண்கள், இயேசுவையும் அவருடைய சீடர்களையும் பின்தொடர்ந்து அங்கு வந்திருக்கிறார்கள்.

2 அந்தக் கூட்டத்தாரைப் பார்த்து இயேசு மனதுருகி, அங்கிருந்த நோயாளிகளைக் குணப்படுத்துகிறார், கடவுளுடைய அரசாங்கம் பற்றி அநேக விஷயங்களைக் கற்றுக்கொடுக்கிறார். வெகுநேரமானபோது, சீடர்கள் இயேசுவிடம் வந்து “கூட்டத்தாரை அனுப்பிவிடுங்கள். கிராமங்களுக்குப் போய் அவர்கள் ஏதாவது வாங்கிச் சாப்பிடட்டும்” என்று சொல்கிறார்கள். இயேசுவோ, “நீங்களே அவர்களுக்கு ஏதாவது சாப்பிடக் கொடுங்கள்” என்கிறார். அதைக் கேட்ட சீடர்கள் குழம்பி போயிருப்பார்கள், ஏனென்றால் அவர்களிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும்தான் இருக்கின்றன.

3 இயேசு அவர்கள்மேல் இரக்கப்பட்டு ஓர் அற்புதத்தைச் செய்கிறார்; நான்கு சுவிசேஷங்களிலும் பதிவான ஒரே அற்புதம் இதுதான். (மாற். 6:35-44; லூக். 9:10-17; யோவா. 6:1-13) இயேசு தம் சீடர்களிடம் சொல்லி அந்தக் கூட்டத்தாரை பசும்புல் தரையில் ஐம்பதுஐம்பது பேராகவும் நூறுநூறு பேராகவும் உட்கார வைக்கிறார். ஜெபம் செய்துவிட்டு ரொட்டியைப் பிட்டு, மீன்களைப் பங்கிடுகிறார். பிறகு, உணவை அவரே நேரடியாக கொடுக்காமல், ‘அங்கிருந்தவர்களுக்குப் பரிமாறுவதற்காகச் சீடர்களிடம் கொடுக்கிறார்.’ அனைவரும் திருப்தியாகச் சாப்பிட்ட பிறகும் ஏராளமான உணவு மீந்திருக்கிறது; என்னே ஓர் அற்புதம்! இதை யோசித்துப் பாருங்கள்: சிலரைக்கொண்டு, அதாவது தம் சீடர்களைக் கொண்டு பல ஆயிரம் பேருக்கு இயேசு உணவளித்தார். *

4. (அ) எவ்விதமான உணவை அளிப்பதில் இயேசு அதிக ஆர்வம் காட்டினார், ஏன்? (ஆ) இந்தக் கட்டுரையிலும் அடுத்த கட்டுரையிலும் எதைப் பற்றி சிந்திக்கப்போகிறோம்?

 4 தம்மைப் பின்பற்றுவோருக்கு ஆன்மீக உணவை அளிப்பதில், அதாவது கடவுளுடைய வார்த்தையிலுள்ள சத்தியங்களை கற்பிப்பதில், இயேசுவுக்கு அதைவிட அதிக ஆர்வம் இருந்தது. ஏனென்றால், அந்தச் சத்தியங்கள் முடிவில்லா வாழ்வுக்கு வழிநடத்தும் என்பதை அவர் அறிந்திருந்தார். (யோவா. 6:26, 27; 17:3) அந்தக் கூட்டத்தார்மீது இரக்கப்பட்டு அவர்களுக்கு ரொட்டியும் மீனும் அளித்ததுபோலவே தம்முடைய சீடர்கள்மீதும் இரக்கப்பட்டு பல மணி நேரம் அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தார். (மாற். 6:34) ஆனால், பூமியில் தமக்குக் கொஞ்சம் காலமே மீந்திருக்கிறது என்றும் பரலோகத்திற்கு திரும்பி செல்லும் சமயம் நெருங்கிவிட்டது என்றும் அவர் அறிந்திருந்தார். (மத். 16:21; யோவா. 14:12) அப்படியானால், பரலோகத்தில் இருக்கும் இயேசு பூமியிலுள்ள தம் சீடர்களுக்கு எப்படி ஆன்மீக உணவை அளிப்பார்? அதே முறையைத்தான் பின்பற்றுவார், அதாவது சிலரைக்கொண்டு பலருக்கு உணவளிப்பார். அப்படியானால், யார் அந்தச் சிலர்? முதல் நூற்றாண்டிலிருந்த பரலோக நம்பிக்கையுள்ள தம் சீடர்கள் அநேகருக்கு, சிலரைக்கொண்டு இயேசு எப்படி உணவளித்தார் என்று இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். இன்று நமக்கு உணவளிக்க இயேசு உபயோகிக்கும் அந்தச் சிலர் யார்? முக்கியமான இந்தக் கேள்விக்கு அடுத்த கட்டுரையில் பதிலைக் காணலாம்.

சிலரைக்கொண்டு ஆயிரக்கணக்கானோருக்கு உணவளிக்கப்பட்டது ( பாரா 4)

இயேசு சிலரைத் தேர்ந்தெடுக்கிறார்

5, 6. (அ) தம்முடைய மரணத்திற்குப்பின் தம் சீடர்களின் ஆன்மீகத் தேவைகளை கவனிக்க இயேசு என்ன முக்கியான தீர்மானத்தை எடுத்தார்? (ஆ) தம்முடைய மரணத்திற்குப்பின் அப்போஸ்தலர்களுக்குக் கொடுக்கப்படவிருந்த மிக முக்கியமான பொறுப்புக்காக இயேசு அவர்களை எப்படித் தயார்படுத்தினார்?

5 ஒரு பொறுப்புள்ள குடும்பத் தலைவர், தன்னுடைய மரணத்திற்குப்பின் தன் குடும்பத்தின் தேவைகளை கவனிக்க ஏற்பாடுகள் செய்வார். அதேபோல், கிறிஸ்தவ சபையின் தலைவராகவிருந்த இயேசுவும் தம்முடைய மரணத்திற்குப்பின் தம் சீடர்களின் ஆன்மீகத் தேவைகளைக் கவனிக்க ஏற்பாடுகள் செய்தார். (எபே. 1:22) உதாரணமாக, அவர் மரிப்பதற்கு சுமார் இரண்டு வருடங்களுக்கு முன் மிக முக்கியமான ஒரு தீர்மானத்தை எடுத்தார். தம் மரணத்திற்குப் பின் அநேகருக்கு உணவளிக்க தாம் பயன்படுத்தப்போகும் சிலரைத் தேர்ந்தெடுக்க ஆரம்பித்தார். என்ன நடந்ததென பார்ப்போம்.

6 இரவு முழுவதும் ஜெபம் செய்துவிட்டு, தம்முடைய சீடர்களிலிருந்து பன்னிரண்டு பேரை அப்போஸ்தலர்களாகத் தேர்ந்தெடுத்தார். (லூக். 6:12-16) அடுத்த இரண்டு வருடங்களில் அந்தப் பன்னிரண்டு பேரோடு நிறைய நேரம் செலவிட்டார்; சொல்லாலும் செயலாலும் அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தார். அவர்கள் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது; அந்தச் சமயத்தில் அவர்கள் ‘சீடர்கள்’ அதாவது மாணவர்கள் என்றே அழைக்கப்பட்டார்கள். (மத். 11:1; 20:17) இயேசு, ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விதத்தில் ஆலோசனைகளைக் கொடுத்தார், ஊழியத்தில் முழுமையான பயிற்சியையும் கொடுத்தார். (மத். 10:1-42; 20:20-23; லூக். 8:1; 9:52-55) தாம் மரித்து பரலோகத்திற்குப் போனபின் அவர்களுக்குக் கொடுக்கப்படவிருந்த மிக முக்கியமான பொறுப்புக்காகவே அவர்களைத் தயார்படுத்தினார்.

7. அப்போஸ்தலர்களின் மிக முக்கியமான பொறுப்பு என்னவென்பதை இயேசு எப்படிச் சுட்டிக்காட்டினார்?

7 அப்போஸ்தலர்களுக்கு என்ன முக்கியமான பொறுப்பு கொடுக்கப்படவிருந்தது? கி.பி. 33-ஆம் வருடத்தின் பெந்தெகொஸ்தே நாள் நெருங்கிவந்த சமயத்தில், அப்போஸ்தலர்கள் “கண்காணிக்கும் பொறுப்பை” பெறுவார்கள் என்பது தெளிவானது. (அப். 1:20) அப்படியானால், அவர்களுடைய முக்கியமான பொறுப்பு என்ன? உயிர்த்தெழுந்த இயேசு அப்போஸ்தலன் பேதுருவிடம் பேசியதிலிருந்து அது தெரியவருகிறது. (யோவான் 21:1, 2, 15-17-ஐ வாசியுங்கள்.) அவர் சில அப்போஸ்தலர்களின் முன்னிலையில் பேதுருவிடம், “என் ஆட்டுக்குட்டிகளுக்கு உணவளிப்பாயாக” என்று சொன்னார். இதன்மூலம் அநேகருக்கு ஆன்மீக உணவை அளிக்க தாம் பயன்படுத்தப்போகும் அந்தச் சிலர் தம்முடைய அப்போஸ்தலர்களே என்பதைச் சுட்டிக்காட்டினார். ‘ஆட்டுக்குட்டிகள்’ மீது இயேசுவுக்கு எந்தளவு அக்கறை இருக்கிறது என்பதையும் அவருடைய வார்த்தைகள் சுட்டிக்காட்டின. *

பெந்தெகொஸ்தே நாள் முதற்கொண்டு அநேகருக்கு உணவளிக்கிறார்

8. கிறிஸ்து யாரைப் பயன்படுத்தி ஆன்மீக உணவை அளிக்கிறார் என்பதை பெந்தெகொஸ்தே நாளன்று கூடியிருந்த புது கிறிஸ்தவர்கள் புரிந்துகொண்டார்கள் என்பதை எப்படிக் காட்டினார்கள்?

8 உயிர்த்தெழுந்த கிறிஸ்து, கி.பி. 33, பெந்தெகொஸ்தே நாள் முதற்கொண்டு அப்போஸ்தலர்களைப் பயன்படுத்தியே பரலோக நம்பிக்கையுள்ள மற்ற சீடர்களுக்கு ஆன்மீக உணவை அளித்துவந்தார். (அப்போஸ்தலர் 2:41, 42-ஐ வாசியுங்கள்.) யூதர்களும் யூத மதத்திற்கு மாறியவர்களும் பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களாக ஆனபோது, கிறிஸ்து யாரைப் பயன்படுத்தி ஆன்மீக உணவை அளித்து வருகிறார் என்பதைப் புரிந்துகொண்டார்கள். எந்தத் தயக்கமும் இல்லாமல், ‘அப்போஸ்தலர்கள் கற்றுக்கொடுத்த விஷயங்களுக்கு முழு கவனம் செலுத்தி வந்தார்கள்.’ “முழு கவனம் செலுத்தி வந்தார்கள்” என்பதற்கான கிரேக்க வினைத்தொடர் “ஒரு விஷயத்தை ஒருமனதோடும் உறுதியோடும் செய்வதை” அர்த்தப்படுத்தலாம் என ஓர் அறிஞர் சொல்கிறார். இந்தப் புது கிறிஸ்தவர்கள் கடவுளுடைய வார்த்தைகளிலிருந்த சத்தியங்களை ஆர்வத்தோடு கற்றுக்கொண்டார்கள், அதை யார் தங்களுக்குக் கற்றுத்தர முடியும் என்பதையும் அறிந்திருந்தார்கள். இவர்கள், இயேசுவின் வார்த்தைகள் மற்றும் செயல்களுக்கான விளக்கத்தை... அவரைப் பற்றி சொல்லப்பட்டுள்ள வசனங்களுக்கான சரியான அர்த்தத்தை... அப்போஸ்தலர்களால்தான் தரமுடியும் என்ற நம்பிக்கையோடு அவர்களையே முழுமையாகச் சார்ந்திருந்தார்கள். *அப். 2:22-36.

9. இயேசுவின் ஆடுகளுக்கு உணவளிப்பதே தங்களுடைய முக்கியமான பொறுப்பு என்பதை அப்போஸ்தலர்கள் நன்கு அறிந்திருந்தார்கள் என்பதை எப்படிக் காட்டினார்கள்?

9 இயேசுவின் ஆடுகளுக்கு உணவளிப்பதே தங்களுடைய முக்கியமான பொறுப்பு என்பதை அப்போஸ்தலர்கள் நன்கு அறிந்திருந்தார்கள். உதாரணத்திற்கு, புதிதாக உருவான சபையில் பிரிவினை உண்டாகும் அளவுக்கு ஒரு பெரிய பிரச்சினை எழுந்தது; அதை அவர்கள் எப்படிச் சரிசெய்தார்கள் என்று பார்க்கலாம். அது சரீர உணவு சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சினை. கிரேக்க மொழி பேசும் விதவைகளுக்கு அன்றாட உணவு கிடைக்காதபோது எபிரெய மொழி பேசும் விதவைகளுக்கு மட்டும் உணவு கிடைத்ததை பார்த்து சிலர் வருத்தப்பட்டனர். இந்தப் பிரச்சினையை அப்போஸ்தலர்கள் எப்படித் தீர்த்தார்கள்? “அவசியமான வேலையை,” அதாவது உணவு வழங்கும் வேலையை மேற்பார்வையிட தகுதியுள்ள ஏழு ஆண்களை நியமித்தார்கள். இயேசு மக்களுக்கு அற்புதமாக உணவளித்தபோது கிட்டதட்ட எல்லா அப்போஸ்தலர்களுமே அதைப் பரிமாறியிருப்பார்கள். ஆனால், இப்போது ஆன்மீக உணவை அளிக்கும் பொறுப்பே அதைவிட முக்கியமானது என்பதை அவர்கள் புரிந்திருந்தார்கள். எனவே, “கடவுளுடைய வார்த்தையைக் கற்பிப்பதற்கு” அதிக கவனம் செலுத்தினார்கள்.—அப். 6:1-6.

10. எருசலேமிலிருந்த அப்போஸ்தலர்களையும் மூப்பர்களையும் கிறிஸ்து எப்படிப் பயன்படுத்தினார்?

10 கி.பி. 49-ல் இருந்த ஆளும் குழுவில், மீதமிருந்த அப்போஸ்தலர்களோடு தகுதிபெற்ற சில மூப்பர்களும் இருந்தார்கள். பைபிள் அவர்களை ‘எருசலேமிலிருந்த அப்போஸ்தலர்களும் மூப்பர்களும்’ என அழைக்கிறது. (அப்போஸ்தலர் 15:1, 2-ஐ வாசியுங்கள்.) சபையின் தலைவரான கிறிஸ்து, பைபிள் கோட்பாடுகள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்க... நற்செய்தியைப் பிரசங்கித்து கற்பிக்கும் வேலையை மேற்பார்வையிட... சிறு தொகுதியான இந்தத் தகுதிபெற்ற ஆண்களையே பயன்படுத்தினார்.—அப். 15:6-29; 21:17-19; கொலோ. 1:18.

11, 12. (அ) முதல் நூற்றாண்டு சபைகளுக்கு ஆன்மீக உணவளிக்க இயேசு செய்த ஏற்பாட்டை யெகோவா ஆசீர்வதித்தார் என்பதை எது காட்டுகிறது? (ஆ) கிறிஸ்து யார் மூலமாக சபைகளுக்கு ஆன்மீக உணவை அளித்தார் என்பது மக்களுக்கு எப்படித் தெரிந்திருந்தது?

11 முதல் நூற்றாண்டிலிருந்த சபைகளுக்கு ஆன்மீக உணவை அளிக்க கிறிஸ்து பயன்படுத்திய ஆளும் குழுவை யெகோவா ஆசீர்வதித்தாரா? நிச்சயமாக! எப்படிச் சொல்லலாம்? அப்போஸ்தலர் புத்தகம் இவ்வாறு சொல்கிறது: “இருவரும் [அப்போஸ்தலன் பவுலும் அவருடைய பயணத் தோழர்களும்] நகரம் நகரமாகப் போனபோது, எருசலேமிலிருந்த அப்போஸ்தலர்களும் மூப்பர்களும் தீர்மானித்திருந்த கட்டளைகளை அங்கிருந்தவர்களிடம் தெரிவித்து, அவற்றைக் கடைப்பிடிக்கச் சொன்னார்கள். இதனால், சபைகள் விசுவாசத்தில் பலப்பட்டு வந்தன, விசுவாசிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் பெருகி வந்தது.” (அப். 16:4, 5) இதற்குக் காரணம், எருசலேமிலிருந்த ஆளும் குழுவுக்கு சபைகள் முழு ஆதரவு கொடுத்ததே. சபைகளுக்கு உணவளிக்க தம் மகன் செய்திருந்த ஏற்பாட்டை யெகோவா ஆசீர்வதித்தார் என்பதற்கு இது மாபெரும் அத்தாட்சி. சபைகள் வளரவும் சமாதானத்தை அனுபவிக்கவும் யெகோவாவின் அளவற்ற ஆசீர்வாதம் நிச்சயம் தேவை என்பதை மறந்துவிடாதீர்கள்.—நீதி. 10:22; 1 கொ. 3:6, 7.

 12 இதுவரை பார்த்தபடி, இயேசு, சரீர உணவை அளித்த அதே விதத்தில்தான், அதாவது சிலரைக் கொண்டு பலருக்கு உணவளித்த அதே விதத்தில்தான், தம்மைப் பின்பற்றியோருக்கும் ஆன்மீக உணவை அளித்தார். அன்று யார் மூலமாக ஆன்மீக உணவை அளித்து வந்தார் என்பதில் அன்றிருந்தவர்களுக்கு எந்தச் சந்தேகமும் இருக்கவில்லை. ஏனென்றால், அப்போஸ்தலர்கள், அதாவது ஆளும் குழுவின் அங்கத்தினர்கள் தங்களுக்குக் கடவுளுடைய ஆதரவு இருந்ததற்கு அத்தாட்சியாக அநேக அற்புதங்களைச் செய்தார்கள். அப்போஸ்தலர் 5:12 (தமிழ் யூனியன் மொழிபெயர்ப்பு) சொல்கிறது: “அப்போஸ்தலருடைய கைகளினாலே அநேக அடையாளங்களும் அற்புதங்களும் ஜனங்களுக்குள்ளே செய்யப்பட்டது.” * எனவே, ‘யார் மூலமாக கிறிஸ்து தம்முடைய ஆடுகளுக்கு உணவளிக்கிறார்’ என்று யோசிக்க அந்தச் சமயத்திலிருந்த கிறிஸ்தவர்களுக்கு அவசியம் இருக்கவில்லை. ஆனால், முதல் நூற்றாண்டின் முடிவில் நிலைமை மாறியது.

முதல் நூற்றாண்டில், சபைக்கு உணவளிக்க இயேசு யாரைப் பயன்படுத்தினார் என்பதில் எந்தச் சந்தேகமும் இருக்கவில்லை ( பாரா 12)

களைகள் அதிகமாகவும் கோதுமை பயிர்கள் குறைவாகவும் இருந்தபோது

13, 14. (அ) கிறிஸ்தவ சபை தாக்கப்படுவதைப் பற்றி இயேசு என்ன சொன்னார், அது எப்போது நிறைவேற ஆரம்பித்தது? (ஆ) சபை எப்படித் தாக்கப்படும்? (குறிப்பைப் பாருங்கள்.)

13 கிறிஸ்தவ சபை தாக்கப்படும் என்று இயேசு முன்னறிவித்தார். புதிதாக விதைக்கப்பட்ட கோதுமை வயலில் (பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள்), பயிர்களுக்கு இடையே களைகள் (போலி கிறிஸ்தவர்கள்) விதைக்கப்படும் என்று களைகள்-கோதுமை பற்றிய உவமையில் இயேசு சொன்னார். களைகள் பிடுங்கப்படாமல் அறுவடை காலம் வரை, அதாவது “இந்தச் சகாப்தத்தின் இறுதிக்கட்டம்” வரை இரண்டும் சேர்ந்தே வளரும் என்றும் இயேசு சொன்னார். (மத். 13:24-30, 36-43) இயேசுவின் வார்த்தைகள் சீக்கிரத்தில் நிறைவேற ஆரம்பித்தன. *

14 முதல் நூற்றாண்டில் விசுவாசதுரோகம் சபைக்குள் நுழைய ஆரம்பித்தது. ஆனால், பொய் போதனைகள் சபையைக் கறைபடுத்தாதபடி உண்மையுள்ள அப்போஸ்தலர்கள் அதைத் தடுத்தார்கள். (2 தெ. 2:3, 6, 7) இருந்தாலும், கடைசி அப்போஸ்தலரின் மறைவுக்குப்பின், விசுவாசத்துரோகம் வேர்விட ஆரம்பித்தது; பல நூற்றாண்டுகளாக கோதுமையும் களைகளும் சேர்ந்தே வளர்ந்தன. அதோடு, களைகள் அதிகமாகவும் கோதுமை பயிர்கள் குறைவாகவும் இருந்தன. ஆன்மீக உணவை தொடர்ந்து வழங்க, ஒழுங்கமைக்கப்பட்ட தொகுதி எதுவும் இருக்கவில்லை. ஆனாலும், இந்நிலை மாறும். எப்போது?

அறுவடைக்காலத்தில் யார் உணவளிப்பார்?

15, 16. பைபிள் மாணாக்கர்கள், வேதவசனங்களைக் கவனமாக ஆராய்ந்ததால் என்ன நன்மைகள் கிடைத்தன, என்ன முக்கியமான கேள்வி எழுகிறது?

15 கோதுமையும் களைகளும் சேர்ந்தே வளரும் காலம் முடிவுக்கு வரும் சமயத்தில், பைபிள் சத்தியங்கள்மீது சிலர் அதிக ஆர்வம் காட்டினர். 1870-களில் நடந்ததை யோசித்துப்பாருங்கள்; சத்தியத்தைத் தெரிந்துகொள்ள விரும்பிய ஒரு சிறு தொகுதி, அதாவது பைபிள் மாணாக்கர்கள், என அன்று அழைக்கப்பட்டவர்கள் ஒன்றுகூடி பைபிள் விஷயங்களைக் கலந்துபேசினர். அவர்கள் களைகளிலிருந்து, அதாவது, கிறிஸ்தவமண்டல பிரிவுகளிலிருந்து தங்களை விலக்கிக்கொண்டனர். அவர்கள் சத்தியத்தைத் தெரிந்துகொள்வதற்காக மனத்தாழ்மையோடு பைபிளைக் கவனமாக ஆராய்ந்தனர்.—மத். 11:25.

16 பைபிள் மாணாக்கர்கள் செய்த ஆராய்ச்சிக்கு கிடைத்த பலன்கள் ஏராளம். உண்மையுள்ள அந்த ஆண்களும் பெண்களும் பொய் போதனைகளை அம்பலப்படுத்தி பைபிள் சத்தியங்களை மற்றவர்களுக்குப் போதித்தனர், பைபிள் பிரசுரங்களை அச்சிட்டு உலகெங்கும் வினியோகித்தனர். ஆன்மீக சத்தியங்கள்மீது பசிதாகமுள்ளவர்கள் இவற்றை வாசித்துவிட்டு இதுதான் சத்தியம் என்று முழுமையாக நம்பினர். அப்படியானால், ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது: ஆடுகளுக்கு உணவளிக்க கிறிஸ்து பயன்படுத்தப் போவதாகச் சொன்ன அந்தச் சிலர், 1914-க்கு முன் இருந்த பைபிள் மாணாக்கர்களா? இல்லை. ஏனென்றால், கோதுமையும் களைகளும் அப்போது சேர்ந்தே வளர்ந்து கொண்டிருந்தன; ஆன்மீக உணவை அளிப்பதற்காக கிறிஸ்து பயன்படுத்தவிருந்த தொகுதி அப்போது தயாராகவில்லை. கோதுமை போன்ற உண்மை கிறிஸ்தவர்களிலிருந்து களைகள் போன்ற போலி கிறிஸ்தவர்களைப் பிரித்தெடுக்கும் காலம் அப்போது வரவில்லை.

17. என்ன முக்கியமான சம்பவங்கள் 1914 முதல் நடக்க ஆரம்பித்தன?

17 அறுவடைக் காலம் 1914-ல்தான் ஆரம்பமானது என முந்தைய கட்டுரையில் பார்த்தோம். அந்த வருடத்திலிருந்து பல முக்கியமான சம்பவங்கள் நடக்க ஆரம்பித்தன. இயேசு ராஜாவாக முடிசூட்டப்பட்டார், கடைசி நாட்கள் ஆரம்பமாயின. (வெளி. 11:15) 1914 முதல் 1919-ன் ஆரம்பம் வரை, இயேசு தம் தந்தையோடு சேர்ந்து ஆன்மீக ஆலயத்தைச் சோதனையிட்டு, சுத்திகரித்தார். * (மல். 3:1-4) 1919 முதற்கொண்டு கோதுமை பயிர்களை சேகரிக்கும் வேலை ஆரம்பமானது. ஆன்மீக உணவை அளிப்பதற்காக ஓர் ஒழுங்கமைப்பட்ட தொகுதியைக் கிறிஸ்து நியமிப்பதற்கான காலம் வந்துவிட்டதா? நிச்சயமாக!

18. என்ன நியமிப்பைச் செய்யப்போவதாக இயேசு முன்னறிவித்தார், கடைசி நாட்கள் ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டதால் என்ன முக்கியமான கேள்வி எழுகிறது?

18 முடிவு காலம் பற்றிய தீர்க்கதரிசனத்தில், ‘ஏற்ற வேளையில். . .உணவளிப்பதற்கு’ அதாவது ஆன்மீக உணவளிப்பதற்கு ஓர் ‘அடிமையை’ நியமிக்கப்போவதாக இயேசு முன்னறிவித்தார். (மத். 24:45-47) அப்படியானால், அந்த அடிமை யார்? முதல் நூற்றாண்டில் செய்ததுபோலவே மீண்டும் சிலரைக்கொண்டு பலருக்கு உணவளிப்பார். ஆனால் கடைசி நாட்கள் ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டதால், யார் அந்த சிலர் என்ற முக்கியமான கேள்வி எழுகிறது. இந்தக் கேள்விக்கும் இயேசு சொன்ன தீர்க்கதரிசனத்தின் மற்ற கேள்விகளுக்கும் பதிலை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

 

^ பாரா 3: மற்றொரு சமயம், பெண்கள், பிள்ளைகள் தவிர 4,000 ஆண்களுக்கு அற்புதமாக உணவு அளித்தபோதும் இயேசு, உணவை “சீடர்களிடம் கொடுத்தார். சீடர்கள் கூட்டத்தாருக்குக் கொடுத்தார்கள்.”—மத். 15:32-38.

^ பாரா 7: பேதுரு வாழ்ந்த காலத்தில் உணவளிக்கப்பட்ட “ஆட்டுக்குட்டிகள்” எல்லோரும் பரலோக நம்பிக்கையுள்ளவர்கள்.

^ பாரா 8: புது கிறிஸ்தவர்கள், “அப்போஸ்தலர்கள் கற்றுக்கொடுத்த விஷயங்களுக்கு முழு கவனம் செலுத்தி வந்தார்கள்” என்ற குறிப்பு, அப்போஸ்தலர்கள் தவறாமல் கற்றுக்கொடுத்து வந்தார்கள் என்பதைக் காட்டுகிறது. அவர்களில் சிலர் கற்றுக்கொடுத்த விஷயங்கள் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் பதிவாகியுள்ளது.

^ பாரா 12: அப்போஸ்தலர்கள் தவிர மற்றவர்களும் கடவுளுடைய சக்தியைப் பெற்று அற்புதங்கள் செய்தார்கள். ஆனால், பெரும்பாலும் ஓர் அப்போஸ்தலரின் மூலமாக, அல்லது ஓர் அப்போஸ்தலரின் முன்னிலையில் அவர்கள் கடவுளுடைய சக்தியைப் பெற்றார்கள்.—அப். 8:14-18; 10:44, 45.

^ பாரா 13: கிறிஸ்தவ சபைக்கு வெளியே இருந்தும் உள்ளே இருந்தும் தாக்குதல் வரும் என்று அப்போஸ்தலர் 20:29, 30-லுள்ள பவுலின் வார்த்தைகள் காட்டுகின்றன. முதலில், உண்மை கிறிஸ்தவர்கள் மத்தியில் போலி கிறிஸ்தவர்கள் (“களைகள்”) “நுழைவார்கள்.” இரண்டாவதாக, உண்மை கிறிஸ்தவர்கள் “மத்தியிலிருந்தே” சிலர் விசுவாசத்துரோகிகளாகி “உண்மைகளைத் திரித்துக் கூறுவார்கள்.”

^ பாரா 17: இதே பிரசுரத்தில் பக்கம் 11-லுள்ள “இதோ! . . . எல்லா நாட்களிலும் நான் உங்களோடுகூட இருக்கிறேன்” என்ற கட்டுரையில் பாரா 6-ஐப் பாருங்கள்.