Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உதவிக்கரம் நீட்ட தயாரா?

உதவிக்கரம் நீட்ட தயாரா?

“தேர்தல் முடிவுகள் வெளியானதும் வெடித்த கலவரத்தில் ஆயிரக்கணக்கான யெகோவாவின் சாட்சிகள் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளானார்கள்” எனச் சொல்கிறார் வளர்ந்துவரும் ஒரு நாட்டில் மூப்பராகச் சேவை செய்யும் ஃப்ரான்ஸ்வா. “உணவுக்கும் மருந்துக்கும் பற்றாக்குறை ஏற்பட்டது; கிடைத்த ஒருசில பொருள்களின் விலையும் ரொம்ப அதிகமாக இருந்தது. வங்கிகள் மூடப்பட்டன, ஏ.டி.எம். மெஷின்களில் பணம் காலியாயின, சில செயல்படாமல் போயின” என்கிறார் அவர்.

வீடிழந்து தவித்த சாட்சிகள் நாடெங்கும் வெவ்வெறு ராஜ்ய மன்றங்களில் தஞ்சம் புகுந்தனர். கிளை அலுவலக சகோதரர்கள் துளியும் தாமதிக்காமல் அவர்களுக்குப் பணத்தையும் பொருள்களையும் அனுப்பிவைத்தனர். ஆனால், எதிரெதிர் கோஷ்டியினர் சாலைகளை அடைத்து வைத்திருந்தனர். என்றாலும், யெகோவாவின் சாட்சிகள் நடுநிலை வகிப்பதில் பேர்போனவர்கள் என்பது அந்த இரண்டு கோஷ்டியினருக்கும் தெரிந்திருந்ததால் கிளை அலுவலக வண்டிகளைச் செல்ல அனுமதித்தனர்.

ஃப்ரான்ஸ்வா தொடர்கிறார்: “ஒரு ராஜ்ய மன்றத்திற்கு நாங்கள் போய்க்கொண்டிருந்தபோது, திடீரென மறைவிலிருந்து துப்பாக்கித் தோட்டாக்கள் எங்களைக் குறிவைத்தன. நல்லவேளை, எங்கள்மீது குண்டு பாயவில்லை. ஒரு படைவீரர் கையில் துப்பாக்கியுடன் எங்களை நோக்கி ஓடி வருவதைப் பார்த்ததும், சர்ரென்று வண்டியைக் கிளை அலுவலகத்திற்கே திருப்பினோம். உயிரைக் காப்பாற்றியதற்காக யெகோவாவுக்கு நன்றி சொன்னோம். மறுநாள், அந்த ராஜ்ய மன்றத்திலிருந்த 130 சகோதரர்கள் பாதுகாப்பான இடத்திற்குப் போய்ச்சேர்ந்தார்கள். சிலர் கிளை அலுவலகத்திற்கு வந்தார்கள்; நிலைமை சரியாகும்வரை அவர்களை அங்கேயே தங்க வைத்து அவர்களுடைய ஆன்மீகத் தேவைகளையும் மற்ற தேவைகளையும் கவனித்துக்கொண்டோம்.”

“பிற்பாடு, நாடெங்குமிருந்து சகோதரர்கள் தங்களுடைய உள்ளப்பூர்வ நன்றியைத் தெரிவித்து ஏராளமான கடிதங்களை கிளை அலுவலகத்திற்கு அனுப்பினார்கள். வெவ்வேறு இடங்களிலிருந்த சகோதரர்கள் உதவிக்கரம் நீட்டியபோது யெகோவாமீது அவர்களுக்கிருந்த நம்பிக்கை இன்னும் அதிகமானது” என்கிறார் ஃப்ரான்ஸ்வா.

இயற்கைப் பேரழிவுகளும் மனிதரின் நாசகர செயல்களும் கோர முகம் காட்டுகிற சமயங்களில் நம் சகோதர சகோதரிகளிடம், “உங்களைக் கதகதப்பாக வைத்துக்கொள்ளுங்கள், வயிறாரச் சாப்பிடுங்கள்” என்று நாம் வாயளவில் சொல்வதில்லை. (யாக். 2:15, 16) மாறாக, அவர்களுடைய அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முன்வருகிறோம். முதல் நூற்றாண்டிலும் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்தது; பஞ்சக் காலத்தைப் பற்றிய முன்னெச்சரிப்பு கிடைத்தபோது “சீடர்கள் ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த நிவாரண உதவிகளை யூதேயாவில் இருந்த சகோதரர்களுக்கு அளிக்கத் தீர்மானித்தார்கள்.”—அப். 11:28-30.

யெகோவாவின் ஊழியர்களான நாம், கஷ்டத்தில் தவிப்போருடைய பொருளாதாரத் தேவையைப் பூர்த்தி செய்யத் தயாராய் இருக்கிறோம். அதே சமயத்தில், மக்களுக்கு ஆன்மீகத் தேவையும் இருக்கிறது. (மத். 5:3) அந்தத் தேவையை அவர்களுக்கு உணர்த்தி, அதைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காகவே சீடராக்கும் வேலையை இயேசு நமக்குக் கொடுத்திருக்கிறார். (மத். 28:19, 20) அந்த வேலைக்காக நம்முடைய நேரத்தையும், சக்தியையும், வளங்களையும் அளிக்கிறோம். அமைப்பிற்கு வரும் நன்கொடையில் ஒரு சிறிய தொகை பொருளாதாரத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. மீந்திருக்கிரும் தொகை முழுவதும் கடவுளுடைய சேவைக்காகவும் பிரசங்க வேலைக்காகவுமே பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு, கடவுள்மீதும் மக்கள்மீதும் நமக்கு அன்பு இருப்பதைக் காட்டுகிறோம்.—மத். 22:37-39.

யெகோவாவின் சாட்சிகளுடைய உலகளாவிய வேலைக்கு கிடைக்கும் நன்கொடைகள் சிறந்த விதத்தில் பயன்படுத்தப்படுகிறது என்பதில் நிச்சயமாய் இருங்கள். கஷ்டத்தில் தவிக்கும் உங்கள் சகோதரர்களுக்கு உதவிக்கரம் நீட்ட உங்களால் முடியுமா? சீடராக்கும் வேலையை ஆதரிக்க உங்களுக்கு ஆசை இருக்கிறதா? அப்படியானால், ‘நன்மை செய்யும்படி உங்களுக்குத் திராணியிருக்கும்போது, அதை செய்யத் தக்கவர்களுக்குச் செய்யாமல் இருக்காதீர்கள்.’—நீதி. 3:27.