‘உடனே நிதானம் இழந்து விடாதீர்கள்’!
‘சகோதரர்களே, . . . நாங்கள் உங்களைக் கேட்டுக்கொள்வது இதுதான்: . . . உடனே நிதானம் இழந்துவிடாதீர்கள்.’—2 தெ. 2:1, 2.
1, 2. இன்று ஏமாற்றுவேலைகள் ஏன் இந்தளவு பரவலாக இருக்கின்றன, இது எவ்விதங்களில் நடக்கின்றன? (இப்பக்கத்திலுள்ள படத்தைப் பாருங்கள்.)
எங்கும் புரளி, எதிலும் மோசடி, பித்தலாட்டம். இவைதான் நாம் வாழும் இந்த உலகத்தின் நிலைமை! இதில் நாம் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. ஏனென்றால், பிசாசாகிய சாத்தான் ஏமாற்றுவதில் பலே கில்லாடி. இந்தப் பொல்லாத உலகமே அவனுடைய ஆதிக்கத்தின்கீழ் இருப்பதாக பைபிள் தெளிவாகச் சொல்கிறது. (1 தீ. 2:14; 1 யோ. 5:19) இந்த உலகத்தின் முடிவு நெருங்க நெருங்க அந்தக் கயவனின் கோபமும் தீவிரமாகிக் கொண்டே வருகிறது; ஆம், அவனுக்கு இன்னும் “கொஞ்சக் காலமே” இருக்கிறது. (வெளி. 12:12) ஆகவே, மக்களுக்கு முன், அதுவும் உண்மை வணக்கத்திற்காக பாடுபடுபவர்களுக்கு முன், தன்னுடைய தந்திர வலைகளை அவன் இன்னும் அகல விரிப்பான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
2 யெகோவாவின் சாட்சிகளையும் அவர்களுடைய நம்பிக்கைகளையும் பற்றி மீடியாக்கள், சில சமயங்களில் அபாண்டமான பொய்களையும் பழிதூற்றும் வார்த்தைகளையும் வாரி இறைக்கின்றன. செய்தித்தாள்களின் தலையங்கங்கள், டெலிவிஷன் நிகழ்ச்சிகள், இன்டர்நெட் வெப் பேஜ்கள் திரித்துக் கூறப்பட்ட தகவல்களைப் பரப்புகின்றன. இதன் விளைவு? சிலர் குழம்பிப்போய், இந்தப் பொய்களை எளிதில் நம்பி விடுகிறார்கள்.
3. சாத்தானின் ஏமாற்றுவேலைகளை எதிர்த்துப் போராட எது உதவும்?
3 நம் எதிரியின் நயவஞ்சக செயல்களை எதிர்த்துப்போராட நம்மிடம் கடவுளுடைய வார்த்தை உள்ளது. இதற்கு நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்! கடவுளுடைய வார்த்தை, “காரியங்களைச் சரிசெய்வதற்கு . . . பிரயோஜனமுள்ளவையாக” இருக்கிறது. (2 தீ. 3:16) முதல் நூற்றாண்டில் வாழ்ந்த தெசலோனிக்கே கிறிஸ்தவர்களில் சிலர், பொய்களை நம்பி மோசம்போனார்கள். அவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் எழுதிய கடிதத்திலிருந்து நாம் பாடங்களைக் கற்றுக்கொள்வது மிக முக்கியம். “உடனே நிதானம் இழந்து பரபரப்பாகிவிடாதீர்கள்” என்று அவர்களை அறிவுறுத்தினார். (2 தெ. 2:1, 2) அப்படியென்றால், பவுலின் அந்த அன்பான அறிவுரையிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம், நம்முடைய வாழ்க்கையில் அதை எப்படிக் கடைப்பிடிக்கலாம்?
காலத்திற்கேற்ற எச்சரிப்புகள்
4. வரப்போகும் “யெகோவாவின் நாள்” பற்றி தெசலோனிக்கே கிறிஸ்தவர்களுக்கு என்ன எச்சரிப்பு கொடுக்கப்பட்டது, நமக்கு எப்படி எச்சரிப்பு கொடுக்கப்படுகிறது?
4 அப்போஸ்தலன் பவுல், தெசலோனிக்கே சபையாருக்கு எழுதிய முதல் கடிதத்தில், “யெகோவாவின் நாள்” பற்றி எச்சரித்தார். அவர்கள் இருளில் தடுமாறிக்கொண்டோ அந்த நாளுக்குத் தயாராகாமலோ இருக்க அவர் விரும்பவில்லை. அதனால்தான், ‘ஒளியின் பிள்ளைகளாக’ இருங்கள் என்றும், “விழிப்போடும் தெளிந்த புத்தியோடும்” இருங்கள் என்றும் அறிவுறுத்தினார். (1 தெசலோனிக்கேயர் 5:1-6-ஐ வாசியுங்கள்.) இன்று, நாம் பொய்மத உலகப் பேரரசான மகா பாபிலோனின் அழிவுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறோம். அந்த அழிவு, யெகோவாவுடைய மகா நாளின் ஆரம்பமாக இருக்கும். யெகோவா தம் நோக்கத்தை எப்படி நிறைவேற்றுவார் என்று நமக்குத் தெரியும். அதுமட்டுமா, காலத்திற்கேற்ற நினைப்பூட்டுதல்களை சபை மூலமாக தவறாமல் பெறுகிறோம். இவை, தெளிந்த புத்தியோடு இருக்க பேருதவியாக உள்ளன. திரும்பத்திரும்ப கொடுக்கப்படும் இதுபோன்ற எச்சரிப்புகள், ‘சிந்திக்கும் திறனைப் பயன்படுத்தி பரிசுத்த சேவை’ செய்வதற்கான நம் தீர்மானத்திற்கு உரம் சேர்க்கின்றன.—ரோ. 12:1.
5, 6. (அ) தெசலோனிக்கேயர்களுக்கு எழுதிய இரண்டாம் கடிதத்தில் பவுல் எதைப் பற்றி எழுதினார்? (ஆ) இயேசுவின் மூலம் கடவுள் விரைவில் என்ன செய்யப்போகிறார், நம்மையே என்ன கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும்?
5 அப்போஸ்தலன் பவுல், தெசலோனிக்கே கிறிஸ்தவர்களுக்கு முதல் கடிதத்தை அனுப்பிய சிறிது காலத்திலேயே, இரண்டாவது கடிதத்தையும் அனுப்பினார். வரப்போகும் மிகுந்த உபத்திரவத்தின்போது “கடவுளை அறியாதவர்களையும் . . . நற்செய்திக்குக் கீழ்ப்படியாதவர்களையும்” எஜமானராகிய இயேசு நியாயந்தீர்ப்பார் என அதில் குறிப்பிட்டிருந்தார். (2 தெ. 1:6-8) யெகோவாவின் நாள், சீக்கிரத்தில் வந்துவிடும் என நம்பி தெசலோனிக்கே சபையில் இருந்த கிறிஸ்தவர்கள் சிலர் ‘பரபரப்பானதை’ பற்றி இந்த இரண்டாவது கடிதத்தில் நாம் வாசிக்கிறோம். (2 தெசலோனிக்கேயர் 2:1, 2-ஐ வாசியுங்கள்.) யெகோவா தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு செய்துவரும் செயல்களைப் பற்றி அந்த கிறிஸ்தவர்கள் ஓரளவே தெரிந்து வைத்திருந்தார்கள். இது, தீர்க்கதரிசனத்தைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் பிற்பாடு சொன்னதற்கு இசைய இருந்தது: “நாம் அரைகுறையான அறிவைப் பெற்றிருக்கிறோம், அரைகுறையாகத் தீர்க்கதரிசனம் சொல்கிறோம். ஆனால், நிறைவானது வரும்போது அரைகுறையானது ஒழிந்துபோகும்.” (1 கொ 13:9, 10) இருந்தாலும், கடவுளுடைய சக்தியின் ஏவுதலால் அப்போஸ்தலன் பவுல், பேதுரு, பரலோக நம்பிக்கையுள்ள மற்றவர்கள் கொடுத்த எச்சரிப்புகள், விசுவாசத்தில் நிலைத்திருக்க அவர்களுக்கு உதவியிருக்கும்.
6 அவர்களுடைய எண்ணத்தைச் சரிசெய்வதற்காக, யெகோவாவின் நாள் வருவதற்குமுன் நடக்கப்போகும் சம்பவங்களைப் பற்றி கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் பவுல் விளக்கினார். அதாவது, விசுவாசதுரோகம் பெரியளவில் தலைதூக்கும் என்றும் “அக்கிரமக்காரன்” வெளிப்படுவான் என்றும் சொன்னார். * அதற்குப் பின்னர், எஜமானராகிய இயேசு உரிய நேரத்தில் சாத்தானின் தந்திர வலையில் விழுந்தவர்கள் எல்லோரையும் “ஒன்றுமில்லாமல் செய்துவிடுவார்.” ஏனென்றால், “சத்தியத்தை ஏற்றுக்கொள்ள அவர்களுக்கு விருப்பமில்லை” என்று பவுல் குறிப்பிட்டார். (2 தெ 2:3, 8-10) ஆகவே, நம்மையே இவ்வாறு கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘சத்தியத்தை நான் எந்தளவுக்கு நேசிக்கிறேன்? இதுபோன்ற பிரசுரங்கள் மூலம் உலகம் முழுவதுமுள்ள சபைகளுக்கு அவ்வப்போது அளிக்கப்படும் எல்லாத் தகவல்களையும் நன்றாகப் படித்து வைத்திருக்கிறேனா?’
உங்கள் நண்பர்களை ஞானமாகத் தேர்ந்தெடுங்கள்
7, 8. (அ) ஆரம்பகால கிறிஸ்தவர்கள் என்ன ஆபத்துகளைத் தவிர்க்க வேண்டியிருந்தது? (ஆ) இன்று கிறிஸ்தவர்களுக்கு என்ன முக்கியமான ஆபத்து இருக்கிறது?
7 கிறிஸ்தவர்களுக்கு ஆபத்தாக இருப்பது விசுவாசதுரோகிகளின் போதனைகள் மட்டுமே அல்ல. “பண ஆசை எல்லா விதமான தீமைக்கும் வேராக இருக்கிறது” என்று தீமோத்தேயுவுக்கு பவுல் எழுதினார். “சிலர் இந்த ஆசையை வளர்த்துக்கொண்டு, விசுவாசத்தைவிட்டு விலகி, பலவித வேதனைகளால் தங்களையே ஊடுருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்” என்று அவர் குறிப்பிட்டார். (1 தீ. 6:10) ‘பாவ இயல்புக்குரிய செயல்களும்’ பெரும் ஆபத்துகளை விளைவிக்கின்றன.—கலா. 5:19-21.
8 விசுவாசதுரோகிகளான ‘போலி அப்போஸ்தலர்களை’ குறித்து ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமென பவுல் எச்சரித்தார். ஏனென்றால், அவர்களில் சிலர் “சீடர்களைத் தங்கள் பக்கம் இழுத்துக்கொள்வதற்காக உண்மைகளைத் திரித்துக் கூறுவார்கள்.” (2 கொ. 11:4, 13; அப். 20:30) எபேசுவில் இருந்தவர்கள் ‘கெட்டவர்களை . . . பொறுத்துக்கொள்ளாததால்’ இயேசுவின் பாராட்டைப் பெற்றார்கள். அவர்கள், அப்போஸ்தலர்கள் எனச் சொல்லிக்கொண்டவர்களை “சோதித்துப் பார்த்து” பொய்யர் என்று கண்டறிந்தார்கள். (வெளி. 2:2) தெசலோனிக்கே சபையாருக்கு எழுதிய இரண்டாம் கடிதத்தில் பவுல் இந்த அறிவுரையை வழங்கியிருப்பது ஆர்வத்திற்குரிய விஷயம்: “சகோதரர்களே, எங்களிடமிருந்து கற்றுக்கொண்டவற்றின்படி நடக்காமல் ஒழுங்கீனமாக நடக்கிற எந்தச் சகோதரனையும்விட்டு நீங்கள் விலக வேண்டுமென நம் எஜமானராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரில் இப்போது உங்களுக்குக் கட்டளையிடுகிறோம்.” ‘வேலை செய்ய மனமில்லாதவர்களை’ பற்றியே அவர் அப்படிச் சொன்னார். (2 தெ. 3:6, 10) இப்படிப்பட்ட ஆட்களையே ஒழுங்கீனமாக நடக்கிறவர்கள் என்று பவுல் சொன்னாரென்றால், விசுவாசதுரோகத்தின் பக்கம் மனம் சாய்கிறவர்களைப் பற்றி என்ன சொல்வது! ஆம், இப்படிப்பட்டவர்களோடு சகவாசம் வைத்துக்கொள்வது பெரும் ஆபத்தாக இருந்தது, அதை அவர்கள் தவிர்க்க வேண்டியிருந்தது. இன்று நாம் செய்ய வேண்டியதும் அதுதான்.—நீதி. 13:20.
9. யாராவது சொந்த ஊகங்களையோ குற்றங்குறைகளையோ சொன்னால் ஏன் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்?
9 சீக்கிரத்தில் மிகுந்த உபத்திரவம் வரப்போகிறது, சாத்தானுடைய உலகத்தின் முடிவும் நெருங்கிவிட்டது. ஆகவே, முதல் நூற்றாண்டில் கடவுளுடைய ஏவுதலால் கொடுக்கப்பட்ட எச்சரிப்புகளுக்கு இன்று நாம் செவிசாய்ப்பது மிகவும் முக்கியம். நாம் ஒருபோதும் யெகோவாவுடைய அளவற்ற கருணையின் ‘நோக்கத்தை நிறைவேற்றாமல் இருக்க’ விரும்ப மாட்டோம். அப்படி நிறைவேற்றாமல் போனால், முடிவில்லா வாழ்வைப் பெறும் பாக்கியத்தை இழந்துவிடுவோம். (2 கொ. 6:1) நம் சபையிலுள்ள யாராவது தங்களுடைய சொந்த ஊகங்களையோ மற்றவர்களைப் பற்றிய குற்றங்குறைகளையோ சொல்லி நம்மை அவர்கள் பக்கம் இழுக்க முயன்றால் படு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.—2 தெ. 3:13-15.
‘கற்பிக்கப்பட்டவற்றைப் பற்றிக்கொண்டிருங்கள்’
10. என்ன செய்யும்படி தெசலோனிக்கே கிறிஸ்தவர்களிடம் பவுல் சொன்னார்?
10 கற்பிக்கப்பட்டவற்றைப் பற்றிக்கொண்டு ‘உறுதியோடு நிற்கும்படி’ தெசலோனிக்கேயில் உள்ள சகோதரர்களை பவுல் அறிவுறுத்தினார். (2 தெசலோனிக்கேயர் 2:15-வாசியுங்கள்.) ‘கற்பிக்கப்பட்டவை’ என பவுல் இங்கு எதைக் குறிப்பிட்டார்? நிச்சயமாக பொய்மத போதனைகளை அல்ல, மாறாக இயேசுவின் போதனைகளையும் கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் பவுலும் மற்றவர்களும் எழுதிய விஷயங்களையுமே குறிப்பிட்டார். கொரிந்து சபையிலிருந்த சகோதரர்களுக்கு பவுல் இவ்வாறு எழுதினார்: “எல்லாக் காரியங்களையும் என்னை நினைவில் வைத்துச் செய்வதற்காகவும், நான் உங்களுக்குக் கற்பித்த விஷயங்களை அப்படியே கடைப்பிடித்து வருவதற்காகவும் உங்களைப் பாராட்டுகிறேன்.” (1 கொ. 11:2) ஆம், அந்தப் போதனைகள் நம்பகமான மூலத்திலிருந்து வந்தவை; நம்பிக்கைக்குப் பாத்திரமானவை.
11. என்னென்ன வழிகளில் சிலர் வஞ்சக வலையில் விழுந்துவிடலாம்?
11 ஒரு கிறிஸ்தவர் விசுவாசத்தை இழந்து, யெகோவாவுக்கு உண்மையற்றவராக ஆவதற்குக் காரணமான இரண்டு விஷயங்களை, எபிரெய கிறிஸ்தவர்களுக்கு எழுதிய கடிதத்தில் பவுல் குறிப்பிட்டார். (எபிரெயர் 2:1; 3:12-ஐ வாசியுங்கள்.) ‘வழுவிப்போவது’ பற்றியும் ‘விலகிச் செல்வது’ பற்றியும் அவர் சொன்னார். ஒரு படகு கரையிலிருந்து தானாகவே கொஞ்சங்கொஞ்சமாக வழுவிப்போவது முதலில் ஒருவருக்குத் தெரியாமலிருக்கலாம். கரையிலிருந்து வெகுதூரம் சென்றுவிட்ட பிறகே அது தெரியவரும். அதே சமயம், அந்தப் படகை அவரே கரையிலிருந்து தள்ளிவிடுகிறாரென்றால், அது வெகுதூரம் விலகிச் செல்வதற்கு அவரே காரணமாகி விடுகிறார். சாத்தானின் வஞ்சக வலையில் விழுந்து, சத்தியத்தின் மீதுள்ள நம்பிக்கையை இழந்துவிடுபவரின் நிலையை இந்த இரண்டு உதாரணங்கள் படம்பிடித்துக் காட்டுகின்றன.
12. என்னென்ன விஷயங்களால் இன்று நம்முடைய ஆன்மீகக் காரியங்கள் தடைபடலாம்?
12 தெசலோனிக்கே சபையிலுள்ள சிலருக்கு அப்படி நடந்திருக்கலாம். அப்படியென்றால், இன்றுள்ள நிலைமையைப் பற்றி என்ன சொல்லலாம்? நேரத்தை விழுங்கிவிடும் நிறைய விஷயங்கள் நம்மைச் சுற்றிலும் இருக்கின்றன. உதாரணத்திற்கு சோஷியல் நெட்வொர்க்கை அலசுவதில்... மெஸேஜ்களை அனுப்புவதில் அல்லது படிப்பதில்... விளையாட்டு நிகழ்ச்சிகளைப் பற்றி உடனுக்குடன் தெரிந்துகொள்வதில்... விருப்பவேலைகளைச் செய்வதில்... எவ்வளவு நேரம் செலவிடுகிறோம் என சிந்தித்துப் பாருங்கள். இவற்றில் ஏதாவது ஒன்றுகூட ஒரு கிறிஸ்தவரின் கவனத்தைச் சிதறடித்து அவருடைய பக்திவைராக்கியத்தைக் குறைத்துவிடலாம். விளைவு? இருதயப்பூர்வமாக ஜெபிப்பது, பைபிளைப் படிப்பது, கூட்டங்களில் கலந்துகொள்வது, ஊழியத்தில் ஈடுபடுவது போன்ற காரியங்களெல்லாம் தடைபடலாம். இப்படி உடனே நிதானம் இழந்து விடாதிருக்க நாம் என்ன செய்யலாம்?
நிதானம் இழந்துவிடாதிருக்க...
13. பேதுரு சொன்னபடி இன்று அநேகருடைய மனப்பான்மை எப்படி இருக்கிறது, நம்முடைய விசுவாசம் ஆட்டங்காணாமல் இருக்க என்ன செய்யலாம்?
13 நாம் “கடைசி நாட்களில்” வாழ்கிறோம் என்பதையும், அதை ஏற்றுக்கொள்ளாதவர்களோடு நட்பு வைத்துக்கொள்வதால் வரும் ஆபத்தையும் உணர்ந்து கொள்வது மிக முக்கியம். இதைப் பற்றி அப்போஸ்தலன் பேதுரு இவ்வாறு எழுதினார்: “கடைசி நாட்களில், கேலி செய்கிறவர்கள் மக்களிடையே தோன்றுவார்கள்; அவர்கள் தங்களுடைய ஆசைகளின்படி நடந்து, ‘அவர் வருவதாகச் சொல்லியிருந்தாரே, எங்கே காணோம்? நம் முன்னோர்களும் போய்ச்சேர்ந்துவிட்டார்கள். உலகம் தோன்றிய காலத்திலிருந்தே எல்லாம் இருந்தபடிதான் இருக்கிறது’ என்று சொல்லிக் கேலி செய்வார்கள்.” (2 பே. 3:3, 4) தினந்தோறும் பைபிளை ஆழ்ந்து படிப்பது, நாம் “கடைசி நாட்களில்” வாழ்கிறோம் என்பதை உணர்ந்துகொள்ள பேருதவியாக இருக்கும். தீர்க்கதரிசனமாகச் சொல்லப்பட்ட விசுவாசதுரோகம் அன்றும் இருந்தது; இன்றும் இருக்கிறது. “அக்கிரமக்காரன்” தொடர்ந்து கடவுளுடைய மக்களை எதிர்த்துக்கொண்டுதான் இருக்கிறான். யெகோவாவுடைய நாள் நெருங்கி வருவதால், இப்போது நாம் மிகவும் விழிப்புள்ளவர்களாக இருக்க வேண்டும்.—செப். 1:7.
14. ஊழியத்தில் சுறுசுறுப்பாக ஈடுபடுவது எப்படி நம்மைக் காக்கும் அரணாக இருக்கும்?
14 நாம் விழிப்போடிருக்கவும், நிதானம் இழந்து விடாதிருக்கவும் உதவுகிற ஒரு முக்கியமான வழி, தவறாமல் ஊழியம் செய்வது. அநேகருடைய அனுபவம் இதைக் காட்டுகிறது. ஊழியம் நம்மைக் காக்கும் அரணாக இருப்பதால், சபையின் தலைவரான இயேசு கிறிஸ்து தம்மைப் பின்பற்றுவோருக்கு இந்த அறிவுரையைக் கொடுத்தார்: “எல்லாத் தேசத்தாரையும் சீடர்களாக்கி, . . . நான் உங்களுக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் அவர்கள் கடைப்பிடிக்கும்படி அவர்களுக்குக் கற்பியுங்கள்.” (மத். 28:19, 20) அவருடைய அறிவுரைக்கு இசைய நாம் சுறுசுறுப்பாக ஊழியத்தில் ஈடுபட வேண்டும். தெசலோனிக்கே சபையார் பிரசங்க வேலையையும் கற்பிக்கும் வேலையையும் வெறும் கடமைக்காகச் செய்திருப்பார்களா? பவுல் அவர்களிடம் சொன்ன வார்த்தைகளைக் கவனியுங்கள்: “கடவுளுடைய சக்தி உங்களுக்குள் பற்றவைக்கிற ஆர்வத் தீயை அணைத்துவிடாதீர்கள். தீர்க்கதரிசன வார்த்தைகளை அவமதிக்காதீர்கள்.” (1 தெ. 5:19, 20) படித்து மகிழவும், மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளவும் பைபிளில் எண்ணற்ற தீர்க்கதரிசனங்கள் உள்ளன.
15. பயனுள்ள என்ன விஷயங்களை குடும்ப வழிபாட்டில் சேர்த்துக்கொள்ளலாம்?
15 ஊழியத்தில் திறமைகளை வளர்த்துக்கொள்ள நம்முடைய குடும்பத்தாருக்கு உதவ நாம் விரும்புகிறோம். இதற்காக, அநேக சகோதர சகோதரிகள் தங்களுடைய குடும்ப வழிபாட்டில் ஊழியம் சம்பந்தப்பட்ட விஷயங்களையும் சேர்த்துக்கொள்கிறார்கள். ஆர்வம் காட்டியவர்களை மறுபடியும் சந்திக்க என்ன செய்யலாம் என்பதை குடும்பத்தாரோடு கலந்து பேசலாம். உதாரணத்திற்கு, மறுசந்திப்பில் எதைப் பற்றி பேசலாம்? எந்த விஷயங்களைப் பேசினால் வீட்டுக்காரரின் ஆர்வம் தணியாமல் இருக்கும்? எப்போது மறுசந்திப்பு செய்யலாம்? போன்ற விஷயங்களைப் பேசலாம். அநேகர், குடும்ப வழிபாட்டில் கூட்டங்களுக்காகத் தயாரிக்கவும் சிறிது நேரத்தை ஒதுக்குகிறார்கள். நீங்கள் அப்படிச் செய்கிறீர்களா? நன்கு தயாரித்து பதில்கள் சொல்வது உங்களுடைய விசுவாசத்தைப் பலப்படுத்தும், நிதானத்தை இழந்துவிடாமல் இருக்க உதவும். (சங். 35:18) ஆம், தவறாமல் குடும்ப வழிபாட்டில் கலந்துகொள்வது, ஊகங்களிலிருந்தும் வீண் சந்தேகங்களிலிருந்தும் உங்களைப் பாதுகாக்கும்.
16. பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் நிதானத்தை இழந்துவிடாமல் இருக்க எது அவர்களைத் தூண்டுகிறது?
16 பைபிள் தீர்க்கதரிசனங்களைப் படிப்படியாகப் புரிந்துகொள்ள யெகோவா தம்முடைய மக்களுக்கு உதவியிருக்கிறார். இதைச் சிந்தித்துப் பார்க்கும்போது நமக்கு முன்னால் அருமையான பரிசு காத்திருப்பதைப் புரிந்துகொள்வோம். பரலோக நம்பிக்கையுள்ளவர்களுக்கு கிறிஸ்துவோடு சேர்ந்து ஆட்சி செய்யும் எதிர்பார்ப்பு இருக்கிறது. நிதானத்தை இழந்துவிடாமல் இருக்க இது அவர்களைத் தூண்டுகிறது. தெசலோனிக்கேயர்களுக்கு பவுல் எழுதியது இவர்களுக்கும் பொருந்துகிறது. “யெகோவாவின் அன்பைப் பெற்ற சகோதரர்களே, உங்களுக்காக எப்போதும் அவருக்கு நன்றி சொல்ல நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம்; நீங்கள் சத்தியத்தின்மீது விசுவாசம் வைத்ததால் அவர் தமது சக்தியினால் உங்களைப் பரிசுத்தமாக்கி . . . தேர்ந்தெடுத்தாரே” என்று எழுதினார்.—2 தெ. 2:13.
17. இரண்டு தெசலோனிக்கேயர் 3:1-5-ல் உள்ள வார்த்தைகள் உங்களை எப்படி ஊக்கமூட்டுகின்றன?
17 அதே போல, பூமியில் என்றென்றும் வாழும் நம்பிக்கையுள்ளவர்களும் நிதானத்தை இழந்து விடாமல் இருப்பது அவசியம். நீங்கள் பூமியில் வாழும் நம்பிக்கையுள்ளவராக இருந்தால், தெசலோனிக்கேயில் இருந்த பரலோக நம்பிக்கையுள்ளவர்களுக்கு பவுல் எழுதிய உற்சாகமூட்டும் வார்த்தைகளிலிருந்து பயனடையலாம். (2 தெசலோனிக்கேயர் 3:1-5-ஐ வாசியுங்கள்.) பவுலின் அந்த அன்பான வார்த்தைகளை நாம் ஒவ்வொருவரும் பொன்னெனப் போற்றுவோமாக. ஆம், ஊகங்களையும், சந்தேகத்திற்கிடமான கருத்துகளையும் பற்றிய முக்கியமான எச்சரிப்புகள், தெசலோனிக்கேயர்களுக்கு பவுல் எழுதிய கடிதங்களில் இருக்கின்றன. உலக முடிவின் இறுதிக்கட்டத்தில் வாழும் நாம் இந்த எச்சரிப்புகளுக்கு மனமார கீழ்ப்படிவோமாக.
^ கிறிஸ்தவ சபைக்குள் இருந்தே “சிலர் தோன்றி சீடர்களைத் தங்கள் பக்கம் இழுத்துக்கொள்வதற்காக உண்மைகளைத் திரித்துக் கூறுவார்கள்” என்று பவுல் குறிப்பிட்டதை அப்போஸ்தலர் 20:29, 30-ல் நாம் வாசிக்கிறோம். காலப்போக்கில், குருமார்-பாமரர் என்ற பாகுபாடு தலைதூக்கியதை சரித்திரம் ஊர்ஜிதப்படுத்துகிறது. மூன்றாம் நூற்றாண்டிற்குள்ளாக “அக்கிரமக்காரன்” வெளிப்பட்டான்; கிறிஸ்தவ மண்டல குருமார் தொகுதியே அந்த அக்கிரமக்காரன்.—காவற்கோபுரம், செப்டம்பர் 1, 1990, பக்கங்கள் 12-16-ஐப் பாருங்கள்.