யெகோவா கண்ணோக்கிப் பார்ப்பதை உணருகிறீர்களா?
“கர்த்தரின் கண்கள் எவ்விடத்திலுமிருந்து, நல்லோரையும் தீயோரையும் நோக்கிப்பார்க்கிறது.”—நீதி. 15:3.
1, 2. கண்காணிப்பு கேமராக்களுக்கும் யெகோவாவுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
இப்போதெல்லாம் அநேக நாடுகளில், சாலை போக்குவரத்தைக் கண்காணிக்கவும் விபத்துகளைப் பதிவு செய்யவும் கேமராக்களைப் பொருத்துவது அதிகமாகி வருகிறது. மோதிவிட்டு தப்பியோடும் டிரைவர்களை கையும் களவுமாகப் பிடிப்பதற்கு இந்த கேமராக்கள் உதவுகின்றன. இப்படி எவ்விடத்திலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுவதால், தவறு செய்பவர்கள் தப்பியோட முடிவதில்லை.
2 யெகோவாவின் கண்கள் ‘எவ்விடத்திலும் இருக்கிறது’ என்பதாக பைபிள் சொல்கிறது. (நீதி. 15:3) அப்படியென்றால், நாம் தவறு செய்கிறோமா என அவர் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார் என்று அர்த்தமா? நம்மைக் கையும் களவுமாகப் பிடித்து தண்டிக்க வேண்டும் என்பதற்காக அவர் பார்த்துக்கொண்டிருக்கிறாரா? (எரே. 16:17; எபி. 4:13) இல்லவே இல்லை! நம் ஒவ்வொருவரையும் அவர் நேசிப்பதாலும் நம்முடைய நலனில் அக்கறை காட்டுவதாலுமே நம்மைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்.—1 பே. 3:12.
3. எவ்விதங்களில் யெகோவா நம்மை அன்போடு பார்த்துக்கொண்டிருக்கிறார்?
3 நம்மீது அன்பு இருப்பதால்தான் கடவுள் நம்மைப் பார்த்துக்கொண்டிருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள ஐந்து விஷயங்களை இப்போது கவனிக்கலாம். (1) கெட்ட எண்ணங்கள் தலைகாட்டும்போது எச்சரிக்கிறார். (2) தவறான பாதையில் செல்லும்போது திருத்துகிறார். (3) தமது வார்த்தையிலுள்ள நியமங்களின்படி வழிநடத்துகிறார். (4) பலவிதமான கஷ்டங்களைச் சகிக்க உதவுகிறார். (5) நல்லதைச் செய்யும்போது பலனளிக்கிறார்.
யெகோவா நம்மை எச்சரிக்கிறார்
4. பாவம் செய்வதற்கு முன்பே காயீனை யெகோவா ஏன் எச்சரித்தார்?
4 கெட்ட எண்ணங்கள் தலைகாட்டும்போது கடவுள் நம்மை எப்படி எச்சரிக்கிறார் என்பதை முதலில் பார்க்கலாம். (1 நா. 28:9) உதாரணத்திற்கு, காயீனிடம் அவர் நடந்துகொண்ட விதத்தைக் கவனியுங்கள். அவனை யெகோவா ஏற்றுக்கொள்ளாமல் போனபோது அவன் “மிகவும் எரிச்சல்” அடைந்தான். (ஆதியாகமம் 4:3-7-ஐ வாசியுங்கள்.) ‘நன்மை செய்யும்படி’ கடவுள் அவனுக்கு அறிவுரை சொன்னார். இல்லையென்றால், “பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்” என்று எச்சரித்தார். “நீ அதை அடக்குவாயா?” (NW) என்றும் அவனிடம் கேட்டார். காயீன் இந்த எச்சரிப்புக்குக் கீழ்ப்படிந்து, “மேன்மை” அடைய வேண்டுமென யெகோவா விரும்பினார். அப்படிச் செய்திருந்தால், கடவுளோடு நல்ல பந்தத்தை அவன் தொடர்ந்து அனுபவித்திருக்கலாம்.
5. எவ்விதங்களில் யெகோவா நம்மை எச்சரிக்கிறார்?
5 இது நமக்கும் பொருந்துகிறது. அவருடைய கண்கள் நம் இருதயத்தை ஊடுருவிப் பார்ப்பதால், நம்முடைய எண்ணங்களையும் ஆசைகளையும் அவரிடமிருந்து மறைக்க முடியாது. நம் அன்பான தகப்பன், நாம் சரியான வழியில் நடக்க வேண்டுமென விரும்புகிறார். ஆனாலும், அவர் நம்மைக் கட்டாயப்படுத்துவதில்லை. தவறான வழியில் செல்லும்போது, அவருடைய வார்த்தையின் மூலம் நம்மை எச்சரிக்கிறார். எப்படி? பைபிளைத் தினமும் வாசிக்கும்போது, நம்மிடமிருக்கும் தவறான எண்ணங்களையும் மனப்பான்மையையும் சரிசெய்ய உதவும் வார்த்தைகளை அதில் பார்க்கிறோம். ஏதாவது ஒரு பிரச்சினையால் போராடிக்கொண்டிருந்தால், அதைச் சமாளிக்க உதவும் விஷயங்களை நம் பிரசுரங்களில் வாசிக்கிறோம். அதுமட்டுமல்ல, சபைக் கூட்டங்களில் காலத்திற்கேற்ற ஆலோசனைகளை நாம் பெறுகிறோம்.
6, 7. (அ) நம் ஒவ்வொருவர்மீதும் யெகோவாவுக்கு அக்கறை இருப்பதை எது காட்டுகிறது? (ஆ) தனிப்பட்ட முறையில் யெகோவா அக்கறை காட்டுவதால் நீங்கள் எப்படிப் பயனடையலாம்?
6 இந்த எச்சரிக்கைகள், யெகோவா நம் ஒவ்வொருவரையும் அன்போடு கவனித்துக்கொண்டிருக்கிறார் என்பதற்கு அத்தாட்சி, அல்லவா? பைபிள், பிரசுரங்கள், கூட்டங்கள் ஆகியவற்றின் மூலம் லட்சக்கணக்கானோர் நன்மை அடைகிறார்கள் என்பது உண்மையே. ஆனாலும், நீங்கள் சரியானதைச் செய்வதற்காக தம்முடைய எச்சரிக்கைகளுக்கு கவனம் செலுத்தும்படி யெகோவா சொல்கிறார். இதன் மூலம் உங்களிடம் தனிப்பட்ட முறையில் அக்கறை காட்டுகிறார்.
7 கடவுள் கொடுக்கும் எச்சரிக்கைகளிலிருந்து நாம் எப்படிப் பயனடையலாம்? அவர் நம்மீது உண்மையிலேயே அக்கறையாக இருக்கிறார் என்பதை நாம் நம்ப வேண்டும். பைபிள் சொல்லும் விஷயங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்; அதோடு, கடவுளுக்குப் பிடிக்காத எண்ணங்களைப் பிடுங்கியெறிய முயல வேண்டும். (ஏசாயா 55:6, 7-ஐ வாசியுங்கள்.) கடவுள் கொடுக்கும் எச்சரிக்கைகளுக்குச் செவிசாய்த்தால், அநேக பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும். ஒருவேளை, நாம் கெட்ட எண்ணங்களுக்கு இடங்கொடுத்தால் அப்போதும் அவர் நமக்கு உதவுவாரா?
அன்பான தகப்பன் நம்மைத் திருத்துகிறார்
8, 9. தம் ஊழியர்கள் மூலமாக யெகோவா கொடுக்கும் ஆலோசனை, நம்மீது அவருக்கு அக்கறை இருப்பதை எப்படிக் காட்டுகிறது? உதாரணத்துடன் விளக்குங்கள்.
8 யெகோவா நம்மைத் திருத்தும்போது, நம்மீது அவருக்கு அக்கறை இருப்பதை இன்னும் நன்றாகத் தெரிந்துகொள்கிறோம். (எபிரெயர் 12:5, 6-ஐ வாசியுங்கள்.) ஆலோசனை கொடுக்கப்படுவதையோ கண்டிக்கப்படுவதையோ நாம் விரும்புவதில்லைதான். (எபி. 12:11) ஆனாலும், யாராவது பைபிளிலிருந்து ஆலோசனை கொடுத்தால் அவர் ஏன் அதைக் கொடுக்கிறார் என்பதைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம். நம்மைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்ல, யெகோவாவோடுள்ள நம் பந்தம் ஆபத்தில் இருப்பதைப் பார்த்ததால்தான் அவர் ஆலோசனை கொடுக்கிறார். நாம் தவறைத் திருத்திக்கொண்டு யெகோவாவுக்குப் பிரியமாக நடக்க வேண்டும் என்பதற்காகவே தன்னுடைய நேரத்தையும் சக்தியையும் செலவு செய்து ஆலோசனை கொடுக்கிறார். இந்த ஆலோசனை யெகோவாவிடமிருந்து வருகிறது என்பதை நாம் புரிந்துகொண்டால் அதற்கு மதிப்புக் கொடுப்போம்!
9 ஓர் உதாரணத்தைக் கவனியுங்கள். சத்தியத்திற்கு வருவதற்கு முன்பாக ஒரு சகோதரருக்கு ஆபாசத்தைப் பார்க்கும் பழக்கம் இருந்தது. சத்தியத்திற்கு வந்த பிறகு, அந்தப் பழக்கத்தை விட்டுவிட்டார். ஆனாலும், அந்தக் கெட்ட ஆசை அவருக்குள் தணல்போல் அணையாமல் இருந்தது. ஒரு புதிய செல்ஃபோன் வாங்கியவுடன் அந்த ஆசை மறுபடியும் கொளுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது. (யாக். 1:14, 15) ஃபோனில் ஆபாச வெப்சைட்டுகளைப் பார்க்க ஆரம்பித்தார். ஒரு நாள், ஒரு மூப்பரோடு ஃபோனில் சாட்சி கொடுத்துக்கொண்டிருந்தபோது, அந்த ஆபாச வெப்சைட்டுகள் மூப்பரின் கண்களில் பட்டன. அந்த மூப்பர் உடனடியாக அவருக்கு ஆலோசனை கொடுத்தார். அதற்கு அவர் கீழ்ப்படிந்தார், தன்னைத் திருத்திக்கொண்டார், இறுதியில் அந்தக் கெட்ட ஆசையை விட்டொழித்தார். நாம் ரகசியமாகச் செய்யும் பாவங்களைக்கூட யெகோவா பார்க்கிறார். அவரோடுள்ள நம் பந்தத்திற்கு எந்தப் பங்கமும் ஏற்படுவதற்கு முன்பு நம்மை அவர் திருத்துகிறார். யெகோவா நம்மை அக்கறையோடு கவனித்துக்கொள்வதற்கு நாம் எந்தளவு நன்றியுள்ளவர்களாக இருக்கலாம்!
பைபிள் நியமங்களால் நாம் பெறும் நன்மைகள்
10, 11. (அ) கடவுளுடைய ஆலோசனையை நாம் எவ்விதத்தில் பெற்றுக்கொள்ளலாம்? (ஆ) யெகோவாவை நம்பியிருந்ததால் ஒரு குடும்பத்தார் எப்படி நன்மை அடைந்தார்கள்?
10 ‘உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தும்’ என்று சங்கீதக்காரன் பாடினார். (சங். 73:24) பைபிளை ஆராய்வதன் மூலம் யெகோவாவை ‘நினைத்துக்கொண்டால்’, நமக்குத் தேவைப்படும் நியமங்களைக் கண்டடையலாம். அவற்றை வாழ்க்கையில் கடைப்பிடிப்பது, யெகோவாவோடு நல்லுறவு வைத்துக்கொள்வதற்கு மட்டுமல்ல, குடும்பத்தின் அன்றாடத் தேவைகளைக் கவனித்துக்கொள்ளவும் நமக்கு உதவும்.—நீதி. 3:6.
11 பிலிப்பைன்ஸிலுள்ள மஸ்பட் என்ற மலைப்பாங்கான பகுதியிலிருக்கும் பண்ணை நிலத்தில் ஒரு விவசாயி தன்னுடைய குடும்பத்துடன் வாடகைக்குக் குடியிருந்தார். தன்னுடைய பெரிய குடும்பத்தைக் கவனித்துக்கொள்வதோடு, அவரும் அவருடைய மனைவியும் ஒழுங்கான பயனியர்களாக சேவை செய்து வந்தார்கள். திடீரென ஒரு நாள், அந்த நிலத்தின் சொந்தக்காரர் வீட்டைக் காலி செய்யும்படி சொன்னபோது அவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். இவர்கள் நேர்மையற்றவர்கள் என்று யாரோ தவறாக சொல்லியிருந்ததே அதற்குக் காரணம். குடும்பத்தோடு எங்கு போவது என்ற கவலை ஒருபுறமிருந்தாலும், “யெகோவா வழி காட்டுவாரு. என்ன நடந்தாலும் நம்மோட தேவைகள அவர் கவனிச்சுக்குவாரு” என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. அந்த நம்பிக்கை வீண்போகவில்லை. சில நாட்களுக்குப் பின், நிலத்தின் சொந்தக்காரர் ‘நீங்க காலி பண்ண வேண்டாம் இங்கேயே இருங்க’ என்று சொன்னபோது அந்தச் சகோதரர் நிம்மதிப் பெருமூச்சு விட்டார். தங்கள்மேல் அபாண்டமான பழிசுமத்தப்பட்டபோதிலும், அந்தச் சகோதரரும் அவருடைய குடும்பத்தாரும் பைபிள் நியமங்களின்படி மரியாதையாக சாந்தமாக நடந்துகொண்டார்கள். அது, அந்த நிலத்தின் சொந்தக்காரரை மிகவும் கவர்ந்தது. அதனால், அவர்களை அங்கேயே இருக்கும்படி சொன்னதோடு பயிர் செய்வதற்காக கூடுதல் நிலத்தையும் கொடுத்தார். (1 பேதுரு 2:12-ஐ வாசியுங்கள்.) ஆம், கஷ்ட காலத்தில் சகித்திருக்க யெகோவா தம்முடைய வார்த்தையின்மூலம் நம்மை வழிநடத்துகிறார்.
கஷ்டங்களைச் சகிக்க உதவும் நண்பர்
12, 13. எப்படிப்பட்ட சூழ்நிலையில் கடவுளுக்கு நம்மீது அக்கறை இருக்கிறதா என்ற சந்தேகம் வரலாம்?
12 சில சமயங்களில் நாம் பிரச்சினைகளுக்கு மேல் பிரச்சினைகளை எதிர்ப்படலாம். வியாதி, துன்புறுத்தல், குடும்பத்தாரின் எதிர்ப்பு போன்றவை நம்மை சதா வாட்டி வதைக்கலாம். அதுவும், கருத்துவேறுபாடுகள் காரணமாக சபையிலுள்ள யாராவது ஒருவரிடம் மனஸ்தாபம் ஏற்படும்போது நமக்கு எவ்வளவு வேதனையாக இருக்கும்!
13 உதாரணத்திற்கு, புண்படும் விதத்தில் ஒரு சகோதரர் உங்களிடம் பேசிவிடலாம். ‘கடவுளுடைய அமைப்பிலா இப்படியெல்லாம் நடக்குது?’ என்று நீங்கள் ஆத்திரமடையலாம். ஆனால், உங்களைப் புண்படுத்திய அந்தச் சகோதரர் சபையில் கூடுதல் பொறுப்புகள் பெறுவதையும் மற்றவர்கள் அவரை மெச்சிப் பேசுவதையும் பார்க்கும்போது, ‘ஏன் இப்படியெல்லாம் நடக்குது? இதையெல்லாம் யெகோவா பார்க்கிறாரா, இல்லையா? அவர் எதுவும் செய்ய மாட்டாரா?’ என்றெல்லாம் நீங்கள் யோசிக்கலாம்.—சங். 13:1, 2; ஆப. 1:2, 3.
14. சகோதரர்கள் நமக்கு ஆலோசனை கொடுப்பதை யெகோவா ஏன் அனுமதிக்கிறார்?
14 நல்ல காரணத்தோடுதான் யெகோவா சில சூழ்நிலைகளை அனுமதிக்கிறார். உதாரணத்திற்கு, ஒருவர் உங்களுக்கு ஆலோசனை கொடுக்கும்போது, தவறு செய்தவரை விட்டுவிட்டு ஏன் எனக்கு ஆலோசனை கொடுக்க வேண்டும் என நீங்கள் நினைக்கலாம். ஆனால், கடவுளுடைய பார்வையில் நீங்கள்தான் அதிக குற்றமுள்ளவராக இருக்கலாம்; அதை நீங்கள் உணராமல் இருக்கலாம். எந்த ஆலோசனை உங்களைப் புண்படுத்திவிட்டதாக நினைத்தீர்களோ, அது உங்களுக்குத் தேவையான ஆலோசனைதான் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு சமயம், சகோதரர் கார்ல் க்ளைனை சகோதரர் ரதர்ஃபோர்ட் நேருக்கு நேர் கண்டித்தார். அதன் பிறகு, சகோதரர் ரதர்ஃபோர்ட் அவருக்கு முகம் மலர வணக்கம் சொன்னபோது பதிலுக்கு அவர் அரைமனதோடு வணக்கம் சொன்னார். தான் கண்டித்ததை அவர் இன்னும் மனதில் வைத்திருந்ததை உணர்ந்த சகோதரர் ரதர்ஃபோர்ட், “பிசாசு உன் பின்னாடியே வந்துட்டு இருக்கான், கவனமாயிரு” என்று எச்சரித்தார். பிற்பாடு, ஆளும் குழுவின் அங்கத்தினராக ஆன சகோதரர் க்ளைன் இப்படிச் சொல்கிறார்: “பொறுப்புள்ள ஒரு சகோதரர் நமக்கு ஆலோசனை கொடுக்கும்போது, அவர்மீது நாம் வெறுப்பை வளர்த்துக்கொண்டால் பிசாசின் வஞ்சக வலையில் சிக்கிவிடுவோம் என்பதை நான் கற்றுக்கொண்டேன்.” *
15. பிரச்சினைகள் வரும்போது நாம் எதை மனதில் வைக்க வேண்டும்?
15 நம்முடைய பிரச்சினைகளுக்கு முடிவே வராததுபோல் தெரிந்தால் நாம் பொறுமை இழந்துவிடலாம். அப்போது, சகித்திருக்க எது நமக்கு உதவும்? ஓர் உதாரணத்தைக் கவனியுங்கள். நெடுஞ்சாலையில் உங்கள் காரை ஓட்டிக்கொண்டு போகும்போது போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்டதாக வைத்துக்கொள்ளுங்கள். எவ்வளவு நேரம் காத்துக்கிடக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாது. ஒருவேளை நீங்கள் பொறுமையிழந்து வேறொரு வழியில் சென்றால், வழி மாறி போய்விடலாம். இதனால் எங்கெல்லாமோ சுற்றி வெகு நேரத்திற்குப் பிறகுதான் சேர வேண்டிய இடத்திற்குப் போய்ச் சேருவீர்கள். மாறாக, பொறுமையோடு அங்கேயே இருந்திருந்தால் சீக்கிரமாகச் சென்றிருப்பீர்கள். அதே போல, பொறுமையோடு கடவுளுடைய வார்த்தையில் இருக்கும் நியமங்களை தொடர்ந்து கடைப்பிடித்தால், பிரச்சினைகள் மத்தியிலும் சகித்திருக்க யெகோவா நமக்கு உதவுவார்.
16. யெகோவா சோதனைகளை அனுமதிப்பதற்கு மற்றொரு காரணம் என்ன?
16 நாம் பயிற்சி பெற வேண்டும் என்பதற்காக யெகோவா சோதனைகளை அனுமதிக்கலாம். (1 பேதுரு 5:6-10-ஐ வாசியுங்கள்.) கடவுள் ஒருபோதும் நம்மை சோதிப்பதில்லை. (யாக். 1:13) ‘நம் எதிரியான பிசாசுதான்’ பெரும்பாலான பிரச்சினைகளுக்குக் காரணம். சோதனைகள் மத்தியிலும் நாம் ஆன்மீக ரீதியில் முன்னேறுவதற்கு கடவுள் நமக்கு உதவுவார். யெகோவா நம்மீது “அக்கறையாக இருப்பதால்”, ‘சிலகாலத்திற்கு’ மட்டுமே நாம் கஷ்டப்பட அனுமதிப்பார். எனவே, யெகோவா நம்மீது அக்கறையாக இருக்கிறார் என்பதிலும் முடிவுவரை சகித்திருக்க பலம் அளிப்பார் என்பதிலும் நாம் உறுதியோடு இருக்கலாம்.—2 கொ. 4:7-9.
யெகோவா தரும் ஆசீர்வாதம்
17. யெகோவா யாரைக் கண்ணோக்கிப் பார்க்கிறார், ஏன்?
17 இறுதியாக, மிக முக்கியமான ஒரு காரணத்திற்காக கடவுள் நம் எல்லோரையும் கண்ணோக்கிப் பார்க்கிறார். ஆசா ராஜாவிடம் தீர்க்கதரிசியான அனானி இப்படிச் சொன்னார்: “தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது.” (2 நா. 16:9) முழு இருதயத்தோடு தம்மை வழிபடுகிறவர்களிடம் யெகோவா ‘தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணுவார்.’ ஆம், அவர்களைக் காப்பாற்றுவார், ஆசீர்வதிப்பார்.
18. நாம் செய்யும் நற்செயல்களுக்கு யெகோவா பலனளிப்பார் என்று நாம் ஏன் நிச்சயமாய் இருக்கலாம்? (கட்டுரையின் முதல் படத்தைப் பாருங்கள்.)
18 யெகோவாவின் ‘ஆதரவை’ (NW) பெற நாம் ‘நன்மையைத் தேட’ வேண்டும், ‘நன்மையை விரும்ப’ வேண்டும், ‘நன்மையைச் செய்ய’ வேண்டும். (ஆமோ. 5:14, 15; 1 பே. 3:11, 12) அவர் நீதிமான்களைக் கண்ணோக்கிப் பார்க்கிறார்; அவர்களை ஆசீர்வதிக்கிறார். (சங். 34:15) எபிரெய மருத்துவச்சிகளான சிப்பிராள் மற்றும் பூவாளுடைய உதாரணம் இதற்கு அத்தாட்சி அளிக்கிறது. இஸ்ரவேலர்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்தபோது, எபிரெய பெண்களுக்குப் பிறக்கும் ஆண் குழந்தைகளைப் பிரசவத்தின்போதே கொன்றுவிடும்படி பார்வோன் கட்டளையிட்டிருந்தான். அவனுக்குப் பயப்படாமல் கடவுளுக்குப் பயப்பட்டதால், அந்த மருத்துவச்சிகள் ஆண் குழந்தைகளைக் கொன்றுபோடாமல் உயிரோடு காப்பாற்றினார்கள். அதனால் சிப்பிராளும் பூவாளும் பிள்ளைச் செல்வங்களைப் பெற்று சந்தோஷமாக வாழும்படி யெகோவா அவர்களை ஆசீர்வதித்தார். (யாத். 1:15-17, 20, 21) ஆம், அவர்கள் செய்த நற்செயலை அவர் கண்டுகொள்ளாமல் இருந்துவிடவில்லை. நாம் செய்யும் நல்ல காரியங்களை யாருமே பார்ப்பதில்லை என சில சமயங்களில் நாம் நினைக்கலாம். ஆனால், நாம் செய்யும் ஒவ்வொரு நல்ல காரியத்தையும் யெகோவா கவனிக்கிறார், அதற்கேற்ற பலனை அவர் நிச்சயம் அளிப்பார்.—மத். 6:4, 6; 1 தீ. 5:25; எபி. 6:10.
19. ஒரு சகோதரியின் நற்செயலை யெகோவா எப்படி ஆசீர்வதித்தார் என்பதை விளக்குங்கள்.
19 ஊழியத்தில் ஈடுபடுவதற்காக நாம் செய்கிற முயற்சிகளை யெகோவா பார்ப்பதில்லை என ஒருவேளை நாம் நினைக்கலாம். ஆனால், ஆஸ்திரியாவில் வசிக்கும் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சகோதரியின் நற்செயலை யெகோவா எப்படி ஆசீர்வதித்தார் என்பதைக் கவனியுங்கள். இந்தச் சகோதரிக்கு ஹங்கேரியன் மொழி பேசும் ஒருவருடைய விலாசம் கிடைத்தது. உடனே அங்குச் சென்று பார்த்தார், வீட்டில் யாருமே இருக்கவில்லை. இப்படிப் பலமுறை சென்றும் யாரையும் பார்க்க முடியவில்லை. சில சமயங்களில், யாரோ வீட்டில் இருப்பதுபோல் தெரியும், ஆனால் யாரும் குரல் கொடுப்பதில்லை. அங்கு போனபோதெல்லாம் பைபிள் பிரசுரங்கள், கடிதங்கள், ஃபோன் நம்பர் போன்றவற்றை அந்த வீட்டில் வைத்துவிட்டு வந்தார். கிட்டத்தட்ட ஒன்றரை வருடத்திற்குப் பிறகு, ஒரு பெண் கதவைத் திறந்து அன்போடு வரவேற்றார். “தயவுசெஞ்சு உள்ள வாங்க. நீங்க வெச்சுட்டுப்போன எல்லாத்தையும் நான் வாசிச்சேன். உங்களுக்காகத்தான் காத்துகிட்டு இருந்தேன்” என்று சொன்னார். அந்தப் பெண்ணுக்கு கீமோதெரப்பி சிகிச்சை அளிக்கப்பட்டிருந்ததால் அவரால் வெளியே வந்து யாரிடமும் பேச முடியவில்லை. பிறகு, அவருக்கு பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது. நம் சகோதரியின் விடாமுயற்சியை யெகோவா ஆசீர்வதித்ததைப் பார்த்தீர்களா!
20. யெகோவா நம்மை அக்கறையோடு கவனிக்கிறார் என்பதைப் பற்றி நீங்கள் எப்படி உணருகிறீர்கள்?
20 இதுவரை சிந்தித்தபடி, நாம் செய்கிற நல்ல காரியங்களைக் கவனித்து அதற்கேற்ற பலனை அளிப்பதற்காகவே யெகோவா நம்மைக் கண்ணோக்கிப் பார்க்கிறார். ஆகவே, நம்மிடமுள்ள குற்றங்குறைகளை கண்டுபிடித்து அவற்றை எழுதி வைத்துக்கொள்வதற்காக அவர் நம்மைப் பார்க்கிறார் என நாம் பயப்பட வேண்டியதில்லை. மாறாக, அவர் நம்மீது உண்மையிலேயே அக்கறையுள்ளவராக இருப்பதால் நாம் அவரிடம் நெருங்கி வரலாம்!
^ பாரா. 14 சகோதரர் கார்ல் க்ளைனின் வாழ்க்கை சரிதையை அக்டோபர் 1, 1984, ஆங்கில காவற்கோபுரத்தில் காணலாம்.