Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

கிறிஸ்தவர்கள் இறந்தவர்களை எரிக்கலாமா?

இறந்தவர்களின் உடலை எரிக்கக் கூடாது என்று பைபிளில் எங்கேயும் இல்லை.

இறந்தவர்கள் சிலருடைய உடல்களும் எலும்புகளும் எரிக்கப்பட்டதாக பைபிள் சொல்கிறது. (யோசு. 7:25; 2 நா. 34:4, 5) ஒருவேளை அவர்கள் நல்லடக்கம் செய்வதற்குத் தகுதியில்லாதவர்களாக இருந்திருக்கலாம். ஆனால், பைபிள் காலங்களில் எரிக்கப்பட்ட எல்லோருமே அடக்கம் செய்யப்பட தகுதியில்லாதவர்கள் என்று சொல்லிவிட முடியாது.

சவுல் ராஜா மற்றும் அவருடைய மூன்று மகன்களின் மரணத்திலிருந்து இதைத் தெரிந்துகொள்ளலாம். பெலிஸ்தரோடு போர் செய்தபோது அவர்கள் கொல்லப்பட்டார்கள். கீலேயாத் தேசத்து யாபேஸில் குடியிருந்த இஸ்ரவேலர்கள் இதைக் கேள்விப்பட்டதும், அவர்களுடைய உடல்களை எடுத்துவந்து எரித்து, எலும்புகளை அடக்கம் செய்தார்கள். விஷயம் தெரிந்த தாவீது அவர்களைப் பாராட்டி, நன்றி தெரிவித்தார். ஏனென்றால், அதில் ஒருவர் தாவீதின் ஆருயிர் நண்பர் யோனத்தான், எப்போதும் தாவீதுக்குப் பக்கபலமாக இருந்தவர்.—1 சா. 31:2, 8-13; 2 சா. 2:4-6.

இறந்தவர்களை யெகோவா உயிரோடு எழுப்பப்போகிறார் என்று பைபிள் சொல்கிறது. எரிக்கப்பட்டிருந்தாலும் சரி புதைக்கப்பட்டிருந்தாலும் சரி, யெகோவாவால் அவர்களுக்குப் புதிய உடலைக் கொடுத்து உயிர்த்தெழுப்ப முடியும். நேபுகாத்நேச்சார், மூன்று எபிரெயர்களை அக்கினிச் சூளையில் போடுவதாகச் சொன்னபோது, ‘எரிந்து சாம்பலாகிவிட்டால் கடவுளால் உயிர்த்தெழுப்ப முடியாமல் போய்விடுமோ!’ என்று நினைத்து அவர்கள் கவலைப்படவில்லை. (தானி. 3:16-18) நாசி சித்திரவதை முகாமில் எத்தனையோ சகோதரர்களைக் கொன்று, எரித்திருக்கிறார்கள்; குண்டு வெடிப்பில் அநேகருடைய உடல் சிதறி சின்னாபின்னமாகியிருக்கிறது. ஆனால், யெகோவாவால் இவர்கள் எல்லோரையும் நிச்சயம் உயிர்த்தெழுப்ப முடியும்.—வெளி. 20:13.

யெகோவா ஒருவரை உயிர்த்தெழுப்ப அந்த நபரின் உடலோ உறுப்புகளோ தேவையில்லை. பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களை அவர் எப்படி உயிர்த்தெழுப்புகிறார் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். அவர்கள் இயேசு கிறிஸ்துவைப்போல் “பரலோகத்திற்குரிய உடலில்” உயிர்த்தெழுப்பப்படுகிறார்கள். மனித உடலில் அவர்கள் பரலோகத்திற்குப் போவதில்லை.—1 பே. 3:18; 1 கொ. 15:42-53; 1 யோ. 3:2.

யெகோவா நம்மை உயிர்த்தெழுப்ப வேண்டுமென்றால், அவர்மீது நம்பிக்கையும், அவருடைய வாக்குறுதிகளில் விசுவாசமும் இருக்கிறதா என்பதுதான் முக்கியம். நம் உடல் இருக்கிறதா இல்லையா என்பது முக்கியமல்ல. (அப். 24:15) இதற்குமுன் அவர் எப்படி உயிர்த்தெழுப்பினார், எதிர்காலத்தில் எப்படி உயிர்த்தெழுப்பப் போகிறார் என்பதெல்லாம் நமக்கு முழுமையாகத் தெரியாது. ஆனால், நிச்சயம் உயிர்த்தெழுப்புவார் என்பதில் சந்தேகமே இல்லை. இயேசுவை உயிர்த்தெழுப்பியதன் மூலம் கடவுள் அதை உறுதிப்படுத்தியிருக்கிறார்.—அப். 17:31; லூக். 24:2, 3.

இறந்தவர்களை எரித்தால் சமுதாயம் ஏற்றுக்கொள்ளுமா, சட்டப்படி தவறா, யாருடைய மனதையாவது புண்படுத்துமா என்றெல்லாம் கிறிஸ்தவர்கள் யோசித்துப் பார்ப்பது நல்லது. (2 கொ. 6:3, 4) ஆனாலும், இறந்தவர்களுடைய உடலை எரிப்பதா புதைப்பதா என்பது அவரவருடைய அல்லது குடும்பத்தாருடைய விருப்பம்.