Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

 வாழ்க்கை சரிதை

கடவுளுடைய சேவையில் எனக்குக் கிடைத்த சந்தோஷங்கள்

கடவுளுடைய சேவையில் எனக்குக் கிடைத்த சந்தோஷங்கள்

வருடம் 1947. எல் சால்வடாரில் உள்ள சாண்டா அனா என்ற இடத்தில் மிஷனரிகள் ஒரு வீட்டில் தங்கியிருந்தார்கள். ஒருநாள் காவற்கோபுர படிப்பு நடந்துகொண்டிருந்தபோது, திடீரென்று சிலர் வீட்டிற்குள் கல்லெறிந்தார்கள். பாதிரிகள் தலைமையில் அங்கு ஒரு போராட்டம் நடந்தது. சிலர் தீப்பந்தங்களையும் உருவச் சிலைகளையும் வைத்திருந்தார்கள். இரண்டு மணிநேரம் தொடர்ந்து கல்லெறிந்தார்கள். “கன்னி மரியாள் வாழ்க! யெகோவா ஒழிக!” என்று கோஷம் போட்டார்கள். மிஷனரிகளை ஊரைவிட்டு துரத்துவதற்காக இப்படியெல்லாம் செய்தார்கள். இந்தச் சம்பவம் நடந்தபோது நானும் அந்த வீட்டிற்குள் இருந்தேன். இதெல்லாம் நடந்து 67 வருடங்கள் ஆகிவிட்டன. *

இந்தச் சம்பவங்கள் நடப்பதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்புதான் நானும் ஈவ்லன் ட்ராபர்ட்டும் (என்னோடு மிஷனரி ஊழியம் செய்தவர்) நான்காம் கிலியட் பள்ளியில் பட்டம் பெற்றோம். அந்தப் பள்ளி நியு யார்க்கில் உள்ள இத்தாக்காவில் நடந்தது. அதற்குப் பிறகு, நாங்கள் சாண்டா அனாவில் மிஷனரிகளாக நியமிக்கப்பட்டோம். 29 வருடங்கள் நான் மிஷனரியாக இருந்தேன். நான் ஏன் ஒரு மிஷனரியாக ஆசைப்பட்டேன் என்று முதலில் சொல்கிறேன்.

இளம் வயதில்...

1923-ல் அமெரிக்காவிலுள்ள வாஷிங்டனில், ஸ்போகேன் என்ற இடத்தில் நான் பிறந்தேன். என் அப்பா பெயர் ஜான் ஆல்சன், அம்மா பெயர் ஈவா. அவர்கள் லூத்ரன் சர்ச்சை சேர்ந்தவர்கள். ஆனால், நரகத்தைப் பற்றிய சர்ச் போதனையை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனென்றால், கடவுள் அன்பானவர் என்று பைபிள் சொல்வதை அவர்கள் உறுதியாக நம்பினார்கள். (1 யோ. 4:8) நரகத்தில் மக்கள் வதைக்கப்படுவார்கள் என்று பைபிள் சொல்வதில்லை என்பதை அப்பாவோடு வேலை செய்த ஒருவர் பைபிளிலிருந்து விளக்கினார். சீக்கிரத்திலேயே, அப்பா-அம்மா யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படிக்க ஆரம்பித்தார்கள். மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கிறது என்ற உண்மையைத் தெரிந்துகொண்டார்கள்.

அப்போது எனக்கு 9 வயதுதான். ஆனால், பைபிளிலிருந்து கற்றுக்கொண்ட விஷயங்களை அப்பா-அம்மா உற்சாகமாக சொன்னதெல்லாம் இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. கடவுளுடைய பெயர் யெகோவா என்பதையும் திரித்துவத்தை நம்புவது தவறு என்பதையும் பைபிளிலிருந்து தெரிந்துகொண்டதும் அவர்களுடைய ஆர்வம்  இன்னும் அதிகமானது. இந்த விஷயங்கள் எல்லாம் என்னுடைய மனதிலும் பதிய ஆரம்பித்தது. பைபிளிலிருந்து கற்றுக்கொண்ட விஷயங்கள் எங்களைப் பொய் போதனைகளிலிருந்து ‘விடுதலையாக்கியது.’ (யோவா. 8:32) பைபிளை ஆராய்ச்சி செய்வதென்றால் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதனால், ஆர்வமாக பைபிள் படிப்பில் கலந்துகொண்டேன். எனக்குக் கூச்ச சுபாவம் இருந்தபோதிலும் அப்பா-அம்மாவோடு ஊழியத்திற்குப் போனேன். 1934-ல் அவர்கள் ஞானஸ்நானம் எடுத்தார்கள். நான் 1939-ல் ஞானஸ்நானம் எடுத்தேன். அப்போது எனக்கு 16 வயது.

1941-ல் மிஸ்சௌரியில் உள்ள செயிண்ட் லூயிஸில் நடந்த மாநாட்டில் அப்பா-அம்மாவோடு

ஜூலை 1940-ல் வீட்டை விற்றுவிட்டு, குடும்பமாக முழுநேர சேவையை ஆரம்பித்தோம். இடாஹோ மாநிலத்திலுள்ள கார்டிலான் என்ற இடத்தில் பயனியர் ஊழியம் செய்தோம். கார் ரிப்பேர் செய்யும் கடையின் மாடியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தோம். எங்கள் வீட்டில்தான் கூட்டங்களும் நடந்தன. அப்போதெல்லாம், எல்லா சபைகளுக்கும் சொந்த ராஜ்ய மன்றங்கள் கிடையாது. ஒருவருடைய வீட்டில் அல்லது வாடகைக்கு எடுக்கப்பட்ட இடத்தில்தான் கூட்டங்கள் நடந்தன.

1941-ல் மிஸ்சௌரியில் உள்ள செயிண்ட் லூயிஸில் ஒரு மாநாடு நடந்தது. நாங்கள் குடும்பமாக அதில் கலந்துகொண்டோம். அந்த ஞாயிற்றுக்கிழமை பிள்ளைகளுக்காக விசேஷ நிகழ்ச்சி நடந்தது. 5 முதல் 18 வயதுள்ள பிள்ளைகளை முன்வரிசைகளில் உட்கார சொல்லியிருந்தார்கள். சகோதரர் ரதர்ஃபோர்டுடைய பேச்சின் முடிவில் பிள்ளைகளைப் பார்த்து இப்படிச் சொன்னார்: ‘கடவுளுக்கும் அவர் நியமித்த ராஜாவுக்கும் கீழ்ப்படிய விரும்பும் பிள்ளைகளே! எழுந்து நில்லுங்கள்!’ என்று சொன்னார். நாங்கள் அனைவரும் எழுந்து நின்றோம். அப்போது, “இதோ! கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி அறிவிக்க 15,000-க்கும் அதிகமான புதிய சாட்சிகள்!” என்று சொன்னார். அதைக் கேட்டதும், என்னுடைய வாழ்நாள் முழுக்க பயனியர் செய்வதை விட்டுவிடக் கூடாது என்று தீர்மானித்தேன்.

குடும்பமாக...

இந்த மாநாடு முடிந்து சில மாதங்களில் தெற்கு கலிபோர்னியாவுக்குக் குடிமாறினோம். ஆக்ஸ்நார்ட் என்ற பட்டணத்தில் ஊழியம் செய்ய நியமிக்கப்பட்டோம். அங்கு எங்கள் வண்டியிலேயேதான் தங்கியிருந்தோம். ஒரேயொரு கட்டில்தான் இருந்தது. அதனால், நான் தினமும் ‘டைனிங் டேபிளில்’ மெத்தை போட்டு படுத்துக்கொள்வேன். வீட்டில் தனியறையில் இருந்துவிட்டு, இப்படி வாழ்வது வித்தியாசமாக இருந்தது.

நாங்கள் கலிபோர்னியாவுக்கு வருவதற்கு முன்பு டிசம்பர் 7, 1941-ல் ஹவாய் துறைமுகத்தை (Pearl Harbor) ஜப்பான் தாக்கியது. அதற்கடுத்த நாள் இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா கலந்துகொண்டது. அமெரிக்காவைத் தாக்குவதற்காக ஜப்பானின் நீர்மூழ்கிக் கப்பல்கள் கலிபோர்னியாவின் கடலோரப் பகுதிகளில் சுற்றிக்கொண்டிருந்தன. அதனால், இரவு நேரத்தில், கலிபோர்னியாவில் சுத்தமாக வெளிச்சமே இருக்கக் கூடாது என்று அரசாங்கம் உத்தரவு போட்டிருந்தது. எனவே, இரவில் நாங்கள் எல்லா விளக்குகளையும் அணைக்க வேண்டியிருந்தது.

சில மாதங்களுக்குப் பிறகு, செப்டம்பர் 1942-ல் ஒஹாயோவிலிருக்கும் கிளீவ்லாண்ட் நகரத்தில் ஒரு மாநாடு (நியூ வேல்டு தியோக்ரட்டிக் அசெம்பிளி) நடந்தது. நாங்கள் அதில் கலந்துகொண்டோம். சகோதரர் நேதன் நார், “சமாதானம்—அது நிலைத்திருக்குமா?” என்ற பேச்சைக் கொடுத்தார். ‘மூர்க்க மிருகத்தை’ பற்றி வெளிப்படுத்துதல் 17-லிருந்து விளக்கினார். அந்த “மூர்க்க மிருகம் முன்பு இருந்தது, இப்போது இல்லை; என்றாலும், அது அதலபாதாளத்திலிருந்து ஏறி வரப்போகிறது” என்ற வசனத்தை விளக்கினார். (வெளி. 17:8, 11) இந்த வசனத்தில் சொல்லப்பட்ட “மூர்க்க மிருகம்” என்பது, சர்வதேச சங்கத்தைக் குறிக்கிறது என்று அவர் சொன்னார். அது 1939-ல் இல்லாமல் போய்விட்டது. இந்தச் சங்கத்திற்குப் பதிலாக வேறொரு சங்கம் நிறுவப்படும், அப்போது கொஞ்ச காலத்திற்கு சமாதானம் இருக்கும் என்று பைபிள் முன்னறிவித்தது. 1945-ல் இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு, அந்த மூர்க்க மிருகம் “அதலபாதாளத்திலிருந்து ஏறி” வந்தது. அதாவது, ஐக்கிய நாட்டு சங்கம் நிறுவப்பட்டது. அதன்பிறகு, யெகோவாவின் சாட்சிகள் ஊழிய வேலைகளை அதிக அளவில் செய்ய ஆரம்பித்தார்கள். அதனால் லட்சக்கணக்கான மக்கள் அமைப்பிற்குள் வழிநடத்தப்பட்டார்கள்.

என்னுடைய கிலியட் பட்டம்

இந்தத் தீர்க்கதரிசனத்தைப் புரிந்துகொண்டதால் அதிகமாக ஊழியம் செய்ய வேண்டும் என்று தீர்மானித்தேன். அடுத்த வருடம் கிலியட் பள்ளி ஆரம்பிக்கப்படும் என்று அதே மாநாட்டில் அறிவித்தார்கள். அப்போதுதான் மிஷனரியாக வேண்டும் என்ற ஆசை எனக்கு வந்தது. 1943-ல்  ஆரிகான் மாநிலத்தில் இருக்கும் போர்ட்லாந்தில் பயனியராக நியமிக்கப்பட்டேன். அப்போதெல்லாம் நாங்கள் வீட்டுக்கு வீடு ஊழியத்தில் ஃபோனோகிராஃப் (phonograph) ரெக்கார்டை போட்டுக் காட்டுவோம். பிறகு, நம்முடைய பிரசுரங்களைக் கொடுப்போம். அந்த வருடம் முழுவதும் நான் மிஷனரி சேவையைப் பற்றி நினைத்துக்கொண்டிருந்தேன்.

1944-ல் எனக்கும் ஈவ்லன் ட்ராபர்ட்டுக்கும் கிலியட் பள்ளியில் பயிற்சி பெற அழைப்பு கிடைத்தது. அந்த பள்ளி, 5 மாதங்களுக்கு நடந்தது. எப்படி பைபிளை ஆராய்ந்து படிப்பது என்பதைப் பயிற்சி கொடுத்தவர்கள் விளக்கினார்கள். அவர்கள் நடந்துகொண்ட விதத்திலிருந்தும் நிறைய கற்றுக்கொண்டோம். அந்த சகோதரர்களே எங்களுக்கு உணவு பரிமாறுவார்கள். அவர்கள் காட்டிய இந்த மனத்தாழ்மை எங்களை மிகவும் கவர்ந்தது. ஜனவரி 22, 1945-ல் நாங்கள் கிலியட் பட்டம் பெற்றோம்.

மிஷனரி சேவையில்...

1946-ல் நானும் ஈவ்லனும், எல் சால்வடாரில் மிஷனரிகளாக நியமிக்கப்பட்டோம். லியோ மஹான்-எஸ்தர் தம்பதியும் எங்களோடு நியமிக்கப்பட்டார்கள். அந்த இடம் “விளைந்து அறுவடைக்குத் தயாராக” இருந்தது. (யோவா. 4:35) சாண்டா அனாவில் முதன்முதலில் வட்டார மாநாடு நடந்தது. அந்த மாநாட்டின் பொதுப் பேச்சுக்கு நாங்கள் நிறைய பேரை அழைத்தோம். கிட்டத்தட்ட 500 பேர் வந்திருந்தார்கள். அதைப் பார்த்து இன்னும் வைராக்கியமாக ஊழியம் செய்ய தூண்டப்பட்டோம். இதெல்லாம் சர்ச் பாதிரிகளின் கோபத்தைக் கிளறியது. அப்போதுதான் நாங்கள் தங்கியிருந்த மிஷனரி வீட்டின்மீது கல்லெறிந்தார்கள். அந்த பாதிரிகளுக்குப் பயந்து ஊரைவிட்டு ஓடாமல் தைரியமாக ஊழியம் செய்தோம். பைபிளை படிக்கக் கூடாது என்று பாதிரிகள் மக்களிடம் சொல்லியிருந்தார்கள். சிலரிடம் மட்டும்தான் பைபிள் இருந்தது. ஆனால், நிறைய பேர் பைபிளைப் பற்றி தெரிந்துகொள்ள ரொம்ப ஆர்வமாக இருந்தார்கள். அவர்களுக்கு பைபிள் படிப்பு நடத்த வேண்டும் என்பதற்காக நாங்கள் ஸ்பானிய மொழியைக் கற்றுக்கொண்டோம். யெகோவாவைப் பற்றியும் பூமியை அவர் பூஞ்சோலையாக மாற்றப்போவதைப் பற்றியும் அவர்களுக்குச் சொன்னபோது அவர்கள் ரொம்ப சந்தோஷப்பட்டார்கள்.

கிலியட் பள்ளிக்குப் பிறகு எல் சால்வடாருக்கு நியமிக்கப்பட்ட 5 பேர். இடது பக்கத்திலிருந்து வலது பக்கம்: ஈவ்லன் ட்ராபர்ட், மில்லி பிரேஷியர், எஸ்தர் மஹான், நான், லியோ மஹான்

ரோசா ஆசன்ஸ்யோ என்ற பெண்ணுக்கு நான் பைபிள் படிப்பு நடத்தினேன். அவர் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒருவரோடு வாழ்ந்துகொண்டிருந்தார். பைபிளைப் படிக்க ஆரம்பித்தவுடன் அந்த நபரைவிட்டுப் பிரிந்துவிட்டார். பிறகு அந்த நபரும் பைபிளைப் படித்தார். இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள், ஞானஸ்நானம் எடுத்தார்கள், யெகோவாவுக்கு வைராக்கியமாகச் சேவை செய்ய ஆரம்பித்தார்கள். சாண்டா அனாவில் முதல் பயனியர் ரோசாதான். *

ரோசா ஒரு சிறிய மளிகைக் கடை வைத்திருந்தார். ஊழியத்துக்குப் போகும்போது அவர் கடையை மூடிவிடுவார். தன்னுடைய தேவைகளை யெகோவா பார்த்துக்கொள்வார் என்று முழுமையாக நம்பினார். அவருடைய நம்பிக்கை வீண்போகவில்லை. திரும்பி வந்து கடையை திறந்ததும் வாடிக்கையாளர்கள் குவிந்துவிடுவார்கள். மத்தேயு 6:33-ல் உள்ள வார்த்தைகள் எவ்வளவு உண்மை என்பதை தன் சொந்த அனுபவத்தில் தெரிந்துகொண்டார். மரணம் வரை யெகோவாவுக்கு உண்மையாகச் சேவை செய்தார்.

6 மிஷனரிகள் சேர்ந்து ஒரு வாடகை வீட்டில் இருந்தோம். எங்களுக்கு வீட்டை வாடகைக்குக் கொடுக்கக் கூடாது என்று அந்த வீட்டு சொந்தக்காரரிடம் பாதிரியார் சொன்னார்; இல்லையென்றால் அவரையும் அவர் மனைவியையும் சர்ச்சைவிட்டு விலக்கிவிடுவதாகச் சொல்லி மிரட்டினார். பாதிரிகள் நடந்துகொள்ளும் விதம் அவருக்கு சுத்தமாகப் பிடிக்காததால் அவர் எங்களை வீட்டைவிட்டு போகச் சொல்லவில்லை. சர்ச்சைவிட்டு விலக்கினாலும் கவலை இல்லை என்று பாதிரியிடம் அவர் சொல்லிவிட்டார். எவ்வளவு நாள் வேண்டுமானாலும் அந்த வீட்டில் எங்களைத் தங்கிக்கொள்ள சொன்னார்.

 ஒரு இன்ஜினியர் யெகோவாவின் சாட்சியாகிறார்

1955-ல் கட்டப்பட்ட கிளை அலுவலகம்

சான் சால்வடார் என்ற நகரில் ஒரு மிஷனரி சகோதரி ஒரு பெண்ணுக்கு பைபிள் படிப்பு நடத்தினார். அந்தப் பெண்ணின் கணவர் இன்ஜினியராக இருந்தார். அவருடைய பெயர் பால்ட்டாசர் பெர்லா. மதத் தலைவர்களின் வெளிவேஷத்தினால் இவருக்குக் கடவுள் நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. ஆனால் அவர் ரொம்ப நல்லவர். அந்த ஊரில் கிளை அலுவலகம் கட்டியபோது, இலவசமாக அதைக் கட்டிக் கொடுத்தார். அப்போது அவர் ஒரு யெகோவாவின் சாட்சிகூட கிடையாது.

கட்டுமான வேலை செய்யும்போது அவருக்கு யெகோவாவின் சாட்சிகளோடு நெருங்கிப் பழகுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. அவர்களுடைய நடத்தையைப் பார்த்து இதுதான் உண்மையான மதம் என்பதைப் புரிந்துகொண்டார். ஜூலை 22, 1955-ல் இவரும் இவருடைய மனைவி பௌலீனாவும் ஞானஸ்நானம் எடுத்தார்கள். இன்று வரை அவர்களுடைய மகனும் மகளும் யெகோவாவை உண்மையோடு சேவித்துவருகிறார்கள். அவர்களுடைய மகன் 49 வருடங்களாக புருக்லின் பெத்தேலில் சேவை செய்துவருகிறார். இப்போது அங்குள்ள கிளை அலுவலகக் குழுவில் ஒருவராக இருக்கிறார். *

சான் சால்வடாரில் மாநாடுகள் நடத்த சகோதரர் பெர்லா ஒரு பெரிய அரங்கத்தை ஏற்பாடு செய்து கொடுத்தார். ஆரம்பத்தில் மாநாட்டிற்குக் கொஞ்சம் பேர்தான் வந்தார்கள். ஆனால், வருடங்கள் செல்ல செல்ல அந்த அரங்கம் நிரம்பி வழிய ஆரம்பித்தது. நான் பைபிள் படிப்பு நடத்திய எத்தனையோ சகோதர சகோதரிகளை அந்த மாநாடுகளில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களிடம் பைபிள் படித்து ஞானஸ்நானம் எடுத்தவர்களை என்னிடம் அறிமுகப்படுத்தினார்கள். என்னிடம் பைபிளைப் படித்தவர்கள் எனக்குப் பிள்ளைகள் என்றால், அவர்களிடம் பைபிள் படித்தவர்கள் எனக்குப் பேரப் பிள்ளைகள். அவர்களை எல்லாம் மாநாட்டில் பார்ப்பது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

மாநாட்டில் சகோதரர் F. W. ஃப்ரான்ஸ் மிஷனரிகளிடம் பேசுகிறார்

ஒரு மாநாட்டில் ஒரு சகோதரர் என்னிடம் வந்து மன்னிப்பு கேட்டார். அவர் யார், எதற்கு மன்னிப்பு கேட்கிறார் என்றே எனக்குத் தெரியவில்லை. “சாண்டா அனாவில் நீங்க இருந்த வீட்டுக்குள்ள கல்லெறிஞ்சவங்கள்ல நானும் ஒருத்தன்” என்று அந்த சகோதரர் சொன்னார். இப்போது அவரும் யெகோவாவைச் சேவிக்கிறார். இதைப் பார்க்கும்போது என் மனதில் சந்தோஷம் பொங்குகிறது. முழுநேர ஊழியத்தை தேர்ந்தெடுத்ததற்காக நான் ரொம்ப சந்தோஷப்படுகிறேன்.

எல் சால்வடாரில் நாங்கள் கலந்துகொண்ட முதல் வட்டார மாநாடு

நான் எடுத்த தீர்மானங்கள்

29 வருடங்களாக நான் எல் சால்வடாரில் உள்ள சாண்டா அனா, சான்சொனாட்டே, சாண்டா டேக்லா,  சான் சால்வடார் ஆகிய இடங்களில் மிஷனரியாகச் சேவை செய்தேன். என் பெற்றோருக்கு வயதாகிவிட்டதால் அவர்களுக்கு என் உதவி தேவைப்பட்டது. அதனால் நன்றாக யோசித்து, ஜெபம் செய்து, ஒரு தீர்மானம் எடுத்தேன். 1975-ல் என் மிஷனரி சேவையை நிறுத்திவிட்டு, பெற்றோரை கவனித்துக்கொள்ள போனேன்.

1979-ல் என் அப்பா இறந்துவிட்டார். என் அம்மாவின் உடல்நிலை இன்னும் மோசமாகிவிட்டது. 8 வருடங்களுக்கு அம்மாவைப் பார்த்துக்கொள்ள வேண்டியிருந்தது; 94 வயதில் அம்மாவும் இறந்துவிட்டார். அப்பா-அம்மாவை பார்த்துக்கொண்ட அந்தக் காலப்பகுதியில் என் உடல்நிலையும் மோசமாகிவிட்டது. ஷிங்கில்ஸ் என்ற ஒரு வியாதியினால் நான் கஷ்டப்பட்டேன். ஆனால், யெகோவா தேவனின் உதவியோடு இந்த எல்லா பிரச்சினைகளையும் சமாளிக்க முடிந்தது. “நரைவயதுமட்டும் நான் உங்களைத் தாங்குவேன்; . . . இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன்” என்று யெகோவாவே என்னிடம் சொன்னதுபோல் உணர்ந்தேன்.—ஏசா. 46:4.

1990-ல் வாஷிங்டனில் இருக்கும் ஒமாக் என்ற இடத்திற்குக் குடிமாறினேன். ஸ்பானிய மொழி பேசிய ஆட்களுக்கு பைபிள் படிப்பு நடத்தினேன். அவர்களில் நிறைய பேர் ஞானஸ்நானம் எடுத்தார்கள். நவம்பர் 2007-ல் வாஷிங்டனில் இருக்கும் ச்செலான் என்ற இடத்தில் ஸ்பானிய மொழி பேசும் சபைக்கு மாறிப்போனேன். ஏனென்றால், எனக்கு வயதாகிவிட்டதால் என்னால் வீட்டைப் பார்த்துக்கொள்ளவோ அதைச் சுத்தமாக வைத்துக்கொள்ளவோ முடியவில்லை. அந்தச் சபையில் இருந்தவர்கள் என்னை கவனித்துக்கொண்டார்கள். அவர்களுக்கு நான் எப்போதும் நன்றியோடு இருக்கிறேன். அந்தச் சபையிலேயே நான்தான் ரொம்ப வயதானவள். அதனால், என்னை அவர்களுடைய சொந்த பாட்டியைப் போல் கவனித்துக்கொண்டார்கள்.

“கவனச்சிதறல் இல்லாமல்” யெகோவாவைச் சேவிக்க ஆசைப்பட்டதால் திருமணம் செய்ய வேண்டாம் என்று தீர்மானித்திருந்தேன். (1 கொ. 7:34, 35) ஆனாலும், எனக்கு நிறைய பிள்ளைகள் இருக்கிறார்கள். என்னிடம் பைபிள் படித்தவர்கள் எல்லாம் எனக்குப் பிள்ளைகள்தானே! இந்த உலகில் நாம் ஆசைப்படும் எல்லாமே நமக்குக் கிடைத்துவிடாது. அதனால், யெகோவாவை முழு இருதயத்தோடு சேவிக்க வேண்டும் என்ற என் ஆசைக்கு முதலிடம் கொடுத்தேன். பூஞ்சோலை பூமியில் என்னுடைய எல்லா ஆசைகளும் நிறைவேறும். சங்கீதம் 145:16-ல் இருக்கும் வார்த்தைகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். யெகோவா ‘சகல பிராணிகளின் வாஞ்சையையும் திருப்தியாக்குவார்.’

என் மனம் இன்னும் இளமையாக இருப்பதற்கு பயனியர் சேவைதான் காரணம்

நான் முதன்முதலில் எல் சால்வடாருக்கு வந்தபோதுதான் அங்கு ஊழியம் செய்ய ஆரம்பித்திருந்தார்கள். சாத்தான் எத்தனையோ தடைகளைக் கொண்டுவந்தாலும், இன்று 39,000-க்கும் அதிகமான பிரஸ்தாபிகள் அங்கு இருக்கிறார்கள். இதை எல்லாம் பார்க்கும்போது யெகோவாமீது எனக்கு இருக்கும் நம்பிக்கை இன்னும் அதிகமாகியிருக்கிறது. தம்முடைய ஊழியர்கள் எடுக்கும் முயற்சிகளை யெகோவா எப்போதும் ஆசீர்வதிக்கிறார்; அவருடைய சக்தியைத் தந்து உதவுகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. நான் 91 வயதாக இருந்தும்கூட, ஆரோக்கியமாக இருக்கிறேன். அதனால், நான் தொடர்ந்து பயனியர் செய்கிறேன். எனக்கு வயதாகிவிட்டாலும் என் மனம் இன்னும் இளமையாகத்தான் இருக்கிறது.

^ பாரா. 4 யெகோவாவின் சாட்சிகளுடைய இயர்புக் 1981-ல் (ஆங்கிலம்) பக்கங்கள் 45-46-ஐ பாருங்கள்.

^ பாரா. 19 இயர்புக் 1981-ல் (ஆங்கிலம்) பக்கங்கள் 41-42-ஐ பாருங்கள்.

^ பாரா. 24 இயர்புக் 1981-ல் (ஆங்கிலம்) பக்கங்கள் 66-67, 74-75-ஐ பாருங்கள்.