நாம் ஏன் பரிசுத்தமாக இருக்க வேண்டும்?
“பரிசுத்தராயிருப்பீர்களாக.”—லேவி. 11:45.
1. லேவியராகம புத்தகத்தை நாம் ஏன் புரிந்துகொள்ள வேண்டும்?
தம்முடைய மக்கள் பரிசுத்தமாக இருக்க வேண்டும் என்று யெகோவா விரும்புகிறார். அதனால், பரிசுத்தமாக இருப்பது எப்படி என்று பைபிளில் சொல்லியிருக்கிறார். முக்கியமாக லேவியராகம புத்தகத்தில் இதைப் பற்றி நிறைய சொல்லியிருக்கிறார். லேவியராகம புத்தகத்தை நாம் நன்றாகப் புரிந்துகொண்டால் யெகோவாவுக்கு பிரியமாக வாழ முடியும்.
2. லேவியராகம புத்தகம் நமக்கு எப்படி உதவும்?
2 லேவியராகம புத்தகத்தை மோசே எழுதினார். இந்தப் புத்தகம் நமக்கு ‘பிரயோஜனமான’ நிறைய விஷயங்களைச் சொல்லிக் கொடுக்கிறது. (2 தீ. 3:16) இந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு அதிகாரத்திலும் சுமார் பத்து தடவை யெகோவாவுடைய பெயர் இருக்கிறது. அவருடைய பரிசுத்தமான பெயரை கெடுக்கும் எதையும் செய்யாமல் இருக்க இந்த புத்தகம் நமக்கு உதவும். (லேவி. 22:32) ‘நான் யெகோவா’ (NW) என்ற வார்த்தைகள் இந்தப் புத்தகத்தில் அடிக்கடி சொல்லப்பட்டுள்ளதால் நாம் அவருக்கு கீழ்ப்படிவது எவ்வளவு முக்கியம் என்பதை இது காட்டுகிறது. இப்போது நாம், லேவியராகம புத்தகத்தில் இருக்கும் சில புதையல்களைத் தோண்டி எடுக்கலாம். யெகோவாவைப் பரிசுத்தமாக வணங்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்தக் கட்டுரையும் அடுத்த கட்டுரையும் விளக்கும்.
ஏன் பரிசுத்தமாக இருக்க வேண்டும்?
3, 4. ஆரோனும் அவருடைய மகன்களும் சுத்தமாக்கப்பட்டது எதை அர்த்தப்படுத்துகிறது? (ஆரம்பப் படம்.)
3 லேவியராகமம் 8:5, 6-ஐ வாசியுங்கள். ஆரோனைத் தலைமை குருவாகவும் அவருடைய மகன்களைக் குருமார்களாகவும் யெகோவா நியமித்தார். ஆரோனை இயேசுவுக்கு ஒப்பிடலாம். அவருடைய மகன்களை 1,44,000 பேருக்கு ஒப்பிடலாம். ஆரோனையும் அவருடைய மகன்களையும் தண்ணீரால் சுத்தமாக்க வேண்டும் என்று மோசேயிடம் யெகோவா சொன்னார். அப்படியென்றால், ஆரோனைப் போலவே இயேசுவையும் சுத்தமாக்க வேண்டுமா? இல்லை. ஏனென்றால் இயேசு பரிசுத்தமானவராக, நீதியுள்ளவராக இருக்கிறார். அவர் “மாசில்லாதவர்” அதாவது, பாவமில்லாதவர் என்று பைபிள் சொல்கிறது. (எபி. 7:26; 9:14) ஆனால், 1,44,000 பேரை சுத்தமாக்க வேண்டுமா?
4 ஆரோனின் மகன்களைப் போலவே 1,44,000 பேரும் சுத்தமாக்கப்பட வேண்டும். அவர்கள் தண்ணீரினால் ஞானஸ்நானம் எடுத்தபோதே சுத்தமாக்கப்பட்டார்களா? இல்லை. ஞானஸ்நானம் என்பது நம்மையே யெகோவாவுக்கு அர்ப்பணிப்பதை அர்த்தப்படுத்துகிறது, பாவங்கள் மன்னிக்கப்படுவதை அர்த்தப்படுத்துவதில்லை. இவர்கள் “கடவுளுடைய வார்த்தையாகிய தண்ணீரினால்” அதாவது, பைபிளினால் சுத்தமாகிறார்கள். இயேசு சொன்ன விஷயங்களை அவர்களுடைய வாழ்க்கையில் கடைப்பிடிப்பதன் மூலம் சுத்தமாகிறார்கள். (எபே. 5:25-27) ‘வேறே ஆடுகளாகிய’ நாம் எப்படி சுத்தமாக்கப்படுகிறோம்?—யோவா. 10:16.
5. பூமியில் வாழப்போகிறவர்கள் எப்படி பைபிளினால் சுத்தமாகிறார்கள்?
5 பூமியில் வாழப்போகும் ‘திரள் கூட்டமான மக்கள்’ ஆரோனுடைய மகன்களை குறிக்கவில்லை என்றாலும் அவர்களும் பைபிளினால் சுத்தமாகிறார்கள். (வெளி. 7:9) பைபிள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையின் மீதும் அவர்கள் விசுவாசம் வைக்கிறார்கள். இயேசுவின் பலி எவ்வளவு முக்கியம் என்பதை பைபிளிலிருந்து தெரிந்துகொள்கிறார்கள். அதனால், யெகோவாவுக்கு ‘இரவும் பகலும் பரிசுத்த சேவை செய்கிறார்கள்.’ (வெளி. 7:13-15) பரலோகத்தில் வாழப்போகிறவர்களும் பூமியில் வாழப்போகிறவர்களும் தொடர்ந்து பரிசுத்தமாக இருக்க முயற்சி செய்கிறார்கள். அதனால், அவர்கள் சுத்தமான வாழ்க்கை வாழ்கிறார்கள். (1 பே. 2:12) அவர்கள் பரிசுத்தமாகவும் ஒற்றுமையாகவும் இருந்து இயேசுவைப் பின்பற்றும்போது யெகோவா ரொம்ப சந்தோஷப்படுகிறார்.
6. நம்மை நாமே என்ன கேட்டுக்கொள்ள வேண்டும்?
6 இஸ்ரவேலில் இருந்த குருமார்கள் சுத்தமாக இருக்க வேண்டும் என்று யெகோவா சொன்னார். இன்று, நாமும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார். அதனால்தான் நாம் எல்லாவற்றிலும் சுத்தமாக இருக்கிறோம்; சுத்தமான துணிமணிகளை போட்டுக்கொள்கிறோம், நம்முடைய ராஜ்ய மன்றங்களையும் சுத்தமாக வைக்கிறோம். நம்மோடு பைபிள் படிக்கிறவர்கள் இதை எல்லாம் கவனிக்கிறார்கள். அதோடு, நாம் ‘இருதயத்திலும்’ சுத்தமானவர்களாக இருக்க வேண்டும் என்று யெகோவா விரும்புகிறார். (சங்கீதம் 24:3, 4-ஐ வாசியுங்கள்; ஏசா. 2:2, 3.) அதனால், நாம் யெகோவாவுக்கு பிரியமாக வாழ்கிறோமா என்று நம்மையே அடிக்கடி கேட்டுக்கொள்ள வேண்டும். தேவையான மாற்றங்களையும் நாம் செய்ய வேண்டும். (2 கொ. 13:5) உதாரணமாக, ஞானஸ்நானம் எடுத்த ஒருவர் ஆபாச காட்சிகளை வேண்டுமென்றே பார்த்தால், ‘யெகோவாவுக்கு முன்னாடி நான் பரிசுத்தமா இருக்கிறேனா?’ என்று தன்னையே கேட்டுக்கொள்ள வேண்டும். அந்த பழக்கத்தை விட்டுவிட மூப்பர்களிடம் உதவி கேட்க வேண்டும்.—யாக். 5:14.
கீழ்ப்படியுங்கள்
7. இயேசு என்ன முன்மாதிரி வைத்தார்?
7 மோசே குருமார்களை நியமித்தபோது அவர்களுடைய வலது காதிலும் வலது கையின் பெருவிரலிலும் வலது காலின் பெருவிரலிலும் ஆட்டுக்கடாவின் இரத்தத்தைப் பூசினார். (லேவியராகமம் 8:22-24-ஐ வாசியுங்கள்.) குருமார்கள் யெகோவாவுக்கு கீழ்ப்படிந்து அவருக்கு சிறந்த விதத்தில் சேவை செய்ய வேண்டும் என்பதை இது அர்த்தப்படுத்தியது. இந்த விஷயத்தில் நம்முடைய தலைமை குருவான இயேசுதான் மிகச் சிறந்த முன்மாதிரி. யெகோவா சொன்னதை கவனமாகக் கேட்டு, அவருடைய விருப்பத்தின்படி செய்து, அவர் காட்டிய வழியில் நடந்தார்.—யோவா. 4:31-34.
8. யெகோவாவின் மக்கள் என்ன செய்ய வேண்டும்?
8 பரலோகத்தில் வாழப்போகிறவர்களும் பூமியில் வாழப்போகிறவர்களும் தலைமை குருவான இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டும். யெகோவா சொல்வதை கேட்டு, அதற்கு முழுமையாகக் கீழ்ப்படிய வேண்டும். அவர் காட்டும் பாதையில் நடக்க வேண்டும். (எபி. 12:13) அப்போதுதான், “கடவுளுடைய சக்தியைத் துக்கப்படுத்தாமல்” இருக்க முடியும்.—எபே. 4:30.
9. ஆளும் குழுவோடு வேலை செய்த மூன்று சகோதரர்கள் என்ன சொன்னார்கள்? யெகோவாவை பரிசுத்தமாக வணங்க இது உங்களுக்கு எப்படி உதவும்?
9 பல வருஷங்களாக ஆளும் குழுவோடு வேலை செய்த மூன்று சகோதரர்கள் (பூமியில் வாழும் நம்பிக்கையுள்ளவர்கள்) என்ன சொன்னார்கள் என்று கவனியுங்கள். ஒரு சகோதரர் இப்படிச் சொன்னார்: “அவங்களோட வேலை செய்றது எனக்கு கிடைச்ச பெரிய பாக்கியம். இத்தனை வருஷம் அவங்க கூட இருந்ததுல அவங்ககிட்டையும் சின்ன சின்ன குறைகள் இருக்கிறத பார்த்தேன். இருந்தாலும் அவங்க கடவுளுடைய அமைப்ப வழிநடத்துறாங்க, அதனால அவங்களுக்கு எப்பவும் கீழ்ப்படியணும்னு தீர்மானமா இருந்தேன்.” இன்னொரு சகோதரர் இப்படிச் சொன்னார்: “‘கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியும்படி’ 2 கொரிந்தியர் 10:5 சொல்லுது. நம்மள வழிநடத்துறவங்களுக்கு ஒத்துழைக்கவும், மனசார கீழ்ப்படியவும் இந்த மாதிரி வசனங்கள் எனக்கு உதவியிருக்கு.” மற்றொரு சகோதரர் இப்படிச் சொன்னார்: “யெகோவா நேசிக்கிற விஷயங்களை நாமும் நேசிக்கணும், அவர் வெறுக்கிறத வெறுக்கணும், எப்பவும் அவரோட வழிநடத்துதலின்படி நடக்கணும், அவருக்கு பிடிச்சத செய்யணும். அப்படி செஞ்சா அமைப்புக்கும் அதை வழிநடத்துற சகோதரர்களுக்கும் கீழ்ப்படியிறோம்னு காட்ட முடியும்.” இந்த சகோதரருக்கு, நேதன் நார் (பின்னர் இவர் ஆளும் குழுவின் அங்கத்தினரானார்) என்ற சகோதரருடைய முன்மாதிரி உதவியது. “ஒரு தேசத்தின் பிறப்பு” என்ற காவற்கோபுர கட்டுரை (ஆங்கிலம்) 1925-ல் வெளிவந்தது. அதிலிருந்த விஷயங்களை ஏற்றுக்கொள்வது நிறைய பேருக்கு கஷ்டமாக இருந்தது. ஆனால், சகோதரர் நேதன் நார் உடனடியாகக் கீழ்ப்படிந்து, அமைப்பு சொன்னதை செய்தார். இது இந்தச் சகோதரரின் மனதை தொட்டது. இந்த மூன்று சகோதரர்கள் சொன்னதை நன்றாக யோசித்துப் பாருங்கள். யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து, அவரை பரிசுத்தமாக வணங்க இது உங்களுக்கும் உதவும்.
‘இரத்தத்திற்கு விலகியிருங்கள்’
10. இரத்தத்திற்கு விலகியிருக்க வேண்டும் என்ற கட்டளைக்குக் கீழ்ப்படிவது ஏன் முக்கியம்?
10 லேவியராகமம் 17:10-ஐ வாசியுங்கள். இரத்தத்தை சாப்பிடக் கூடாது என்று இஸ்ரவேலர்களிடம் யெகோவா கட்டளையிட்டார். இன்று நாமும் இரத்தத்திற்கு விலகியிருக்க வேண்டும். (அப். 15:28, 29) யெகோவாவுக்கு பிடிக்காததை செய்து சபைநீக்கம் செய்யப்படுவதை நம்மால் யோசித்துக்கூட பார்க்க முடியாது! நாம் யெகோவாவை நேசிப்பதால் அவருக்குக் கீழ்ப்படியவே ஆசைப்படுகிறோம். உயிர் போகும் சூழ்நிலையில்கூட நாம் யெகோவாவுக்குத்தான் கீழ்ப்படிவோம். அவரைப் பற்றி தெரியாத, அவருக்குக் கீழ்ப்படிய விரும்பாத ஆட்கள் சொல்வதைக் கேட்க மாட்டோம். அவர்கள் நம்மை கேலி செய்தாலும், நாம் யெகோவாவுக்கே கீழ்ப்படிவோம். (யூ. 17, 18) இரத்தத்தை ஏற்றிக்கொள்ளாமல் இருக்கவும் அதை சாப்பிடாமல் இருக்கவும் நமக்கு எது உதவும்?—உபா. 12:23.
11. வருஷத்துக்கு ஒருமுறை யெகோவா என்ன செய்ய சொன்னார், ஏன்?
11 இரத்தத்தைக் கடவுள் புனிதமாக நினைக்கிறார். அதனால், பாவங்களை மன்னிப்பதற்கு இரத்தத்தை பயன்படுத்த சொன்னார். உதாரணத்துக்கு, இஸ்ரவேலர்களுடைய பாவங்களுக்காக வருஷத்துக்கு ஒருமுறை தலைமை குரு, காளையின் இரத்தத்தையும் ஆட்டுக்கடாவின் இரத்தத்தையும் எடுத்து மகா பரிசுத்த ஸ்தலத்தில் இருக்கும் உடன்படிக்கை பெட்டியின் மீது தெளிப்பார். (லேவி. 16:14, 15, 19) இஸ்ரவேலர்களின் பாவங்களை மன்னிப்பதற்கு இது உதவியது. அதோடு, இரத்தத்தில்தான் உயிர் இருக்கிறது. அதனால், மிருகங்களை உணவிற்காக கொல்லும்போது அதன் இரத்தத்தை நிலத்தில் ஊற்றி, மண்ணினால் மூட வேண்டும் என்று யெகோவா கட்டளை கொடுத்தார். (லேவி. 17:11-14) இஸ்ரவேலர்களிடம் மட்டுமல்ல பல வருஷங்களுக்கு முன் வாழ்ந்த நோவாவிடமும் இரத்தத்தைச் சாப்பிடக் கூடாது என்று யெகோவா சொன்னார். (ஆதி. 9:3-6) இது நமக்கு பொருந்துமா?
12. இரத்தத்தைப் பற்றி பவுல் என்ன சொன்னார்?
12 “திருச்சட்டத்தின்படி ஏறக்குறைய அனைத்துமே இரத்தத்தினால் தூய்மையாக்கப்படுகின்றன; இரத்தம் சிந்தப்படாவிட்டால், மன்னிப்பு இல்லை” என்று பவுல் சொன்னார். (எபி. 9:22) மோசே காலத்தில் இஸ்ரவேலர்கள் பாவ மன்னிப்பிற்காக மிருக பலிகளை செலுத்தினார்கள். ஆனால், பாவங்கள் முழுமையாக மன்னிக்கப்பட வேண்டும் என்றால் மிருக பலிகளைவிட உயர்ந்த பலி தேவைப்பட்டது. ஒவ்வொரு முறையும் அவர்கள் செலுத்திய பலிகள் இதை ஞாபகப்படுத்தின. அதனால்தான், “திருச்சட்டம், வரப்போகிற நன்மைகளின் நிஜம் அல்ல, அவற்றின் நிழலே” என்று பவுல் சொன்னார். (எபி. 10:1-4) அப்படியென்றால், பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு என்ன தேவை?
13. நமக்காக இயேசு “தம்மையே தியாகம்” செய்ததைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
13 எபேசியர் 1:7-ஐ வாசியுங்கள். மனிதர்களுக்காக இயேசு “தம்மையே தியாகம் செய்தார்.” யெகோவாவையும் இயேசுவையும் நேசிப்பவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு இயேசுவின் பலி உதவுகிறது. (கலா. 2:20) வருஷத்துக்கு ஒருமுறை தலைமை குரு, பலி செலுத்தப்பட்ட மிருகத்தின் இரத்தத்தை மகா பரிசுத்த ஸ்தலத்திற்கு எடுத்துக்கொண்டு போனார். இரத்தத்தை யெகோவாவிடமே கொடுப்பது போல் இது இருந்தது. (லேவி. 16:11-15) இயேசுவும் உயிர்த்தெழுந்து பரலோகத்துக்கு போன பிறகு தம்முடைய இரத்தத்தின் மதிப்பை யெகோவாவிடம் கொடுத்தார். (எபி. 9:6, 7, 11-14, 24-28) இயேசுவின் பலியில் விசுவாசம் வைக்கும்போது நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படுகிறது. சுத்தமான மனசாட்சியும் கிடைக்கிறது. இயேசுவின் பலிக்காக நாம் எவ்வளவு நன்றியோடு இருக்க வேண்டும்!
14, 15. இரத்தத்தைப் பற்றிய யெகோவாவின் கட்டளைக்கு நாம் ஏன் கீழ்ப்படிய வேண்டும்?
14 இரத்தத்தைச் சாப்பிடக்கூடாது என யெகோவா ஏன் சொல்கிறார் என்று இப்போது உங்களுக்குப் புரிகிறதா? (லேவி. 17:10) யெகோவா இரத்தத்தை உயிருக்குச் சமமாக நினைக்கிறார்; அதைப் புனிதமாக கருதுகிறார். (ஆதி. 9:4) நாமும் இரத்தத்தைப் புனிதமாக கருத வேண்டும். கடவுளோடு நெருங்கிய பந்தத்தை வைத்துக்கொள்ள வேண்டும் என்றால் இரத்தத்திற்கு விலகியிருக்க வேண்டும், இயேசுவின் பலியில் விசுவாசம் வைக்க வேண்டும்.—கொலோ. 1:19, 20.
15 இரத்தம் ஏற்ற வேண்டிய சூழ்நிலை நமக்கு எப்போது வேண்டுமானாலும் வரலாம். அதுபோன்ற நேரங்களில், ‘இரத்தத்தின் சிறு கூறுகளை ஏற்றுக்கொள்ளலாமா? எந்த மருத்துவ சிகிச்சையை எடுத்துக்கொள்வது?’ போன்ற கேள்விகள் நம் மனதில் வரலாம். அதுபோன்ற சூழ்நிலை வரும்வரை காத்திருக்காமல், முன்பே அதைப் பற்றி யோசித்துப் பார்த்து, ஜெபம் செய்து, தீர்மானம் எடுப்பது நல்லது. அப்படிச் செய்தால், நம் தீர்மானத்தில் உறுதியாக இருக்க முடியும்; மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு தவறான முடிவெடுக்காமல் இருக்க முடியும். யெகோவாவுக்குப் பிடிக்காத விஷயத்தைச் செய்து, அவருடைய மனதைக் கஷ்டப்படுத்த நாம் யாருமே விரும்புவதில்லை. ஒருவேளை மற்றவர்களுடைய உயிரைக் காப்பாற்றுவதற்காக இரத்த தானம் செய்யும்படி மருத்துவர்கள் நம்மிடம் சொல்லலாம். ஆனால், யெகோவா “இரத்தத்தை” புனிதமாக பார்க்கிறார். அதை எதற்கு பயன்படுத்த வேண்டும் என்று முடிவெடுக்கும் உரிமை அவருக்கு மட்டுமே இருக்கிறது. அதனால், ‘இரத்தத்திற்கு விலகியிருங்கள்’ என்ற யெகோவாவுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிய நாம் தீர்மானமாக இருக்க வேண்டும். இயேசுவின் இரத்தத்தின் மூலமாகத்தான் நமக்கு பாவத்தில் இருந்து மன்னிப்பு கிடைக்கும்; நமக்கு முடிவில்லா வாழ்வும் கிடைக்கும். (யோவா. 3:16) அதனால், நம்முடைய பரிசுத்த நடத்தையின் மூலம் இயேசுவின் பலியை உயர்வாக மதிக்கிறோம் என்பதை காட்டுவோமாக!
“நான் பரிசுத்தர்”
16. யெகோவாவின் மக்கள் ஏன் பரிசுத்தமாக இருக்க வேண்டும்?
16 இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து விடுவித்தபோது யெகோவா இப்படிச் சொன்னார்: “நான் உங்கள் தேவனாயிருக்கும்படி உங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின கர்த்தர், நான் பரிசுத்தர்; ஆகையால், நீங்களும் பரிசுத்தராயிருப்பீர்களாக.” (லேவி. 11:45) யெகோவா பரிசுத்தமாக இருப்பதால், இஸ்ரவேலர்களும் பரிசுத்தமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார். இன்று நாமும் பரிசுத்தமாக இருக்க வேண்டும். லேவியராகம புத்தகம் இதைத் தெளிவாகக் காட்டுகிறது.
17. லேவியராகம புத்தகம் உங்களுக்கு எப்படி உதவியிருக்கிறது?
17 லேவியராகம புத்தகத்தில் இருக்கும் சில விஷயங்களை இதுவரை பார்த்தோம். அது நிச்சயம் உங்களுக்குப் பிரயோஜனமாக இருந்திருக்கும். லேவியராகம புத்தகத்தின் மீது உங்கள் மதிப்பு அதிகரித்திருக்கும். நாம் ஏன் பரிசுத்தமாக இருக்க வேண்டும் என்று புரிந்துகொள்ள உதவியிருக்கும். கடவுளுடைய சக்தியினால் எழுதப்பட்ட இந்தப் புத்தகத்தில் வேறென்ன புதையல்கள் இருக்கின்றன? யெகோவாவுக்கு பரிசுத்த சேவை செய்வதைப் பற்றி இந்தப் புத்தகம் வேறென்ன சொல்கிறது? அடுத்தக் கட்டுரையில் பார்ப்போம்.