‘கவனித்துக் கேட்டு புரிந்துகொள்ளுங்கள்’
“நான் சொல்வதை நீங்கள் எல்லாரும் கவனித்துக் கேட்டு, அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளுங்கள்.”—மாற். 7:14.
1, 2. இயேசு சொன்ன விஷயங்கள் ஏன் நிறையப் பேருக்குப் புரியவில்லை?
ஒருவர் உங்களிடம் பேசிக்கொண்டு இருக்கிறார். அவர் அன்பாக பேசுகிறார் என்று தெரிகிறது. ஆனால், அவர் சொல்கிற விஷயத்தின் அர்த்தம் எதுவுமே உங்களுக்குப் புரியவில்லை. அது உங்களுக்குப் புரிய வேண்டுமென்றால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? அவர் சொல்கிற வார்த்தைகளுடைய அர்த்தத்தை நீங்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். (1 கொ. 14:9) இயேசு பூமியில் இருந்தபோது எல்லாரும் புரிந்துகொள்கிற விதத்தில் ரொம்ப எளிமையாகத்தான் பேசினார். இருந்தாலும், நிறையப் பேர் அவர் சொன்ன விஷயத்தை புரிந்துகொள்ளவில்லை. அதனால் இயேசு அவர்களைப் பார்த்து, “நான் சொல்வதை நீங்கள் எல்லாரும் கவனித்துக் கேட்டு, அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளுங்கள்” என்று சொன்னார்.—மாற். 7:14.
2 இயேசு சொன்ன விஷயங்கள் ஏன் நிறையப் பேருக்கு புரியவில்லை? ஏனென்றால், அவர்களுக்குத்தான் எல்லாமே தெரியும் என்று நினைத்தார்கள். அவர்கள் இயேசுவிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டுமென்று நினைக்கவில்லை, அவரிடம் குற்றம் கண்டுபிடிக்கத்தான் நினைத்தார்கள். அதனால்தான் இயேசு அவர்களிடம், “உங்களுடைய பாரம்பரியத்தைக் கட்டிக்காப்பதற்காகக் கடவுளுடைய கட்டளையைச் சாமர்த்தியமாய் ஒதுக்கிவிடுகிறீர்கள்” என்று சொன்னார். (மாற். 7:9) இயேசு உண்மையிலேயே என்ன சொல்ல வந்தார் என்று புரிந்துகொள்ள அவர்கள் முயற்சி செய்யவில்லை. அவர்களுடைய தவறை திருத்திக்கொள்ளவும் நினைக்கவில்லை. அதனால்தான், இயேசு சொன்னதை அவர்கள் கேட்டாலும் அது அவர்களுடைய மனதிற்குள் போகவே இல்லை. (மத்தேயு 13:13-15-ஐ வாசியுங்கள்.) அப்படியென்றால், இயேசு சொன்ன விஷயங்களையும் அவர் சொன்ன உதாரணங்களையும் புரிந்துகொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்?
இயேசு சொன்ன உதாரணங்களை புரிந்துகொள்ளுங்கள்
3. இயேசு சொன்ன உதாரணங்களை சீடர்களால் மட்டும் எப்படி புரிந்துகொள்ள முடிந்தது?
3 இயேசுவுடைய சீடர்கள் அவர் சொன்னதை புரிந்துகொண்டார்கள், ஏனென்றால், அவர்கள் மனத்தாழ்மையாக இருந்தார்கள். அதனால் இயேசு அவர்களிடம், “உங்களுடைய கண்கள் காண்பதாலும் உங்களுடைய காதுகள் கேட்பதாலும் நீங்கள் சந்தோஷமானவர்கள்” என்று சொன்னார். (மத். 13:16) இயேசு சொன்ன உதாரணங்களை சீடர்களால் மட்டும் எப்படி புரிந்துகொள்ள முடிந்தது? அதற்கு அவர்கள் 3 விஷயங்களை செய்தார்கள். முதலில், அவர்கள் இயேசுவிடம் நிறைய கேள்விகளை கேட்டார்கள். அவர் சொன்ன விஷயங்களுடைய உண்மையான அர்த்தத்தை புரிந்துகொள்ள முயற்சி செய்தார்கள். (மத். 13:36; மாற். 7:17) இரண்டாவதாக, புதுப்புது விஷயங்களை தெரிந்துகொள்ள ஆர்வமாக இருந்தார்கள். அவர்களுக்கு ஏற்கெனவே தெரிந்த விஷயங்களோடு அதை சம்பந்தப்படுத்தி பார்த்தார்கள். (மத்தேயு 13:11, 12-ஐ வாசியுங்கள்.) மூன்றாவதாக, அவர்கள் கேட்டு கற்றுக்கொண்ட விஷயங்களின்படி நடந்தார்கள், அதை மற்றவர்களுக்கும் சொல்லிக்கொடுத்தார்கள்.—மத். 13:51, 52.
4. இயேசு சொன்ன உதாரணங்களை புரிந்துகொள்ள என்ன 3 விஷயங்களை நாம் செய்ய வேண்டும்?
4 இயேசு சொன்ன உதாரணங்களை புரிந்துகொள்ள, நாமும் 3 விஷயங்களை செய்ய வேண்டும். முதலில், இயேசு சொன்ன உதாரணங்களை படிக்கவும் அதை பற்றி நன்றாக யோசித்துப் பார்க்கவும் நாம் நேரம் ஒதுக்க வேண்டும். நன்றாக ஆராய்ச்சி செய்ய வேண்டும். நம்மையே சில கேள்விகளையும் கேட்டுக்கொள்ள வேண்டும். இப்படி செய்தால் நம்முடைய அறிவை வளர்த்துக்கொள்ள முடியும். (நீதி. 2:4, 5) இரண்டாவதாக, புதிதாக கற்றுக்கொண்ட விஷயங்களை ஏற்கெனவே தெரிந்த விஷயங்களோடு சம்பந்தப்படுத்தி பார்க்க வேண்டும். கற்றுக்கொண்ட விஷயங்களால் கிடைக்கிற நன்மைகளை பற்றி யோசித்துப் பார்க்க வேண்டும். இதைத்தான் ‘புத்தி’ அதாவது, புரிந்துகொள்ளுதல் என்று பைபிள் சொல்கிறது. (நீதி. 2:2, 3) மூன்றாவதாக, நாம் கற்றுக்கொண்ட விஷயங்களின்படி வாழவேண்டும். அப்போதுதான், நாம் ஞானமாக நடக்கிறோம் என்று சொல்ல முடியும்.—நீதி. 2:6, 7.
5. அறிவு, புரிந்துகொள்ளுதல், ஞானம்—இந்த மூன்றுக்கும் என்ன வித்தியாசம்?
5 அறிவு, புரிந்துகொள்ளுதல், ஞானம்—இந்த மூன்றுக்கும் என்ன வித்தியாசம்? இதை புரிந்துகொள்ள இந்த உதாரணம் உங்களுக்கு உதவும். நீங்கள் நடுரோட்டில் நிற்பதாக வைத்துக்கொள்ளுங்கள். அப்போது ஒரு பஸ் வருகிறது. வருவது பஸ் என்று உங்களுக்கு தெரிகிறது, இதை அறிவு என்று சொல்லலாம். நீங்கள் அங்கேயே நின்றுகொண்டிருந்தால் அந்த பஸ் உங்களை மோதிவிடும் என்று உங்களுக்கு தெரிகிறது, இதை புரிந்துகொள்ளுதல் என்று சொல்லலாம். உடனே நீங்கள் அந்த இடத்தில் இருந்து ஓடிப்போய்விடுவீர்கள், இதை ஞானம் என்று சொல்லலாம். நாம் ஞானமாக நடந்துகொண்டால் நம்முடைய உயிரை பாதுகாத்துக்கொள்ள முடியும். அதனால்தான், ‘ஞானத்தை காத்துக்கொள்’ என்று பைபிள் சொல்கிறது.—நீதி. 3:21, 22; 1 தீ. 4:16.
6. இயேசு சொன்ன 7 உதாரணங்களைப் பற்றி படிக்கும்போது என்ன 4 கேள்விகளை நாம் கேட்டுக்கொள்ளலாம்? (8-ஆம் பக்கத்தில் இருக்கிற பெட்டியை பாருங்கள்.)
6 இந்தக் கட்டுரையிலும் அடுத்த கட்டுரையிலும் இயேசு சொன்ன 7 உதாரணங்களை பற்றி பார்க்கப் போகிறோம். ஒவ்வொரு உதாரணத்தையும் படிக்கும்போது இந்தக் கேள்விகளை கேட்டுக்கொள்ளுங்கள்: இந்த உதாரணத்தின் அர்த்தம் என்ன? (இது அறிவை வளர்க்க உதவும்.) இயேசு இந்த உதாரணத்தை ஏன் சொன்னார்? (இது அர்த்தத்தை புரிந்துகொள்ள உதவும்.) இந்த உதாரணத்தில் இருந்து நான் என்ன கற்றுக்கொள்கிறேன், மற்றவர்கள் அதை கடைப்பிடிக்க நான் எப்படி உதவலாம்? (இது ஞானமாக நடக்க உங்களுக்கு உதவும்.) இதிலிருந்து யெகோவாவைப் பற்றியும் இயேசுவைப் பற்றியும் நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
கடுகு விதை
7. இந்த உதாரணத்தின் அர்த்தம் என்ன?
7 மத்தேயு 13:31, 32-ஐ வாசியுங்கள். இந்த உதாரணத்தின் அர்த்தம் என்ன? கடுகு விதை, கடவுளுடைய அரசாங்கத்தை பற்றிய நற்செய்தியையும் கிறிஸ்தவ சபையையும் குறிக்கிறது. கடுகு விதை ‘எல்லா விதைகளையும்விட மிகச் சிறிய விதையாக’ இருக்கிறது. அதேபோல், கி.பி. 33-ஆம் வருடத்தில் கிறிஸ்தவ சபை ஆரம்பித்தபோது அதில் கொஞ்ச பேர்தான் இருந்தார்கள். சில வருடங்களிலேயே கிறிஸ்தவ சபையில் இருந்தவர்களுடைய எண்ணிக்கை, யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு அதிகமானது. (கொலோ. 1:23) ‘வானத்துப் பறவைகள் வந்து அதன் கிளைகளில் தங்கும் அளவுக்கு அந்தக் கடுகு விதை ஒரு மரமானது’ என்று இயேசு சொன்னார். அதேபோல், கிறிஸ்தவ சபையில் நிறையப் பேர் வந்து சேர்ந்ததால் சபை பெரிதாக வளர்ந்தது. அந்த மரம், பறவைகளுக்கு உணவையும் பாதுகாப்பையும் கொடுத்தது. அதேபோல் புதிதாக வந்தவர்கள், கடவுளைப் பற்றி தெரிந்துகொள்ளவும் அவருடைய பாதுகாப்பில் இருக்கவும் கிறிஸ்தவ சபை உதவியது.—எசேக்கியேல் 17:23-ஐ ஒப்பிடுங்கள்.
8. இயேசு ஏன் இந்த உதாரணத்தை சொன்னார்?
8 இயேசு ஏன் இந்த உதாரணத்தை சொன்னார்? கடவுளுடைய அரசாங்கம் எந்தளவு வளர்ச்சி அடையும், பாதுகாப்பை தரும், எதிர்ப்புகளை சமாளிக்க உதவும் என்பதை புரிய வைக்கத்தான் இயேசு இந்த உதாரணத்தை சொன்னார். 1914-ல் இருந்து கிறிஸ்தவ சபையில், நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. (ஏசா. 60:22) சபைக்குள் வருகிறவர்கள் யெகோவாவோடு நெருங்கிய பந்தத்தை அனுபவிக்கிறார்கள், அவர் கொடுக்கும் பாதுகாப்பையும் அனுபவிக்கிறார்கள். (நீதி. 2:7; ஏசா. 32:1, 2) எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் சபையுடைய வளர்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.—ஏசா. 54:17.
9. (அ) இந்த உதாரணத்தில் இருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (ஆ) இந்த உதாரணத்திலிருந்து யெகோவாவைப் பற்றியும் இயேசுவைப் பற்றியும் நாம் என்ன தெரிந்துகொள்ளலாம்?
9 இந்த உதாரணத்தில் இருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? ஒருவேளை, நாம் இருக்கிற இடத்தில் யெகோவாவின் சாட்சிகள் கொஞ்சம் பேர் மட்டுமே இருக்கலாம். ஊழியத்தில் நாம் சொல்கிற நற்செய்தியை நிறையப் பேர் கேட்காமல் இருக்கலாம். ஆனால், எவ்வளவு தடைகள் வந்தாலும் பிரசங்க வேலையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. இதை புரிந்துகொள்ளும்போது நமக்கு தைரியம் கிடைக்கும். உதாரணத்திற்கு, 1926-ல் சகோதரர் எட்வின் ஸ்கின்னர் இந்தியாவுக்கு வந்தபோது விரல்விட்டு எண்ணும் அளவுக்குத்தான் யெகோவாவின் சாட்சிகள் இருந்தார்கள். ஆரம்பத்தில் நிறைய மக்கள் நற்செய்தியை கேட்கவில்லை. இருந்தாலும், ஸ்கின்னர் பிரசங்க வேலையை தொடர்ந்து செய்தார். நிறைய தடைகள் வந்தாலும் பிரசங்க வேலையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாததை அவர் பார்த்தார். இப்போது, இந்தியாவில் 37,000-க்கும் அதிகமான யெகோவாவின் சாட்சிகள் இருக்கிறார்கள். 2013-ல் நடந்த இயேசுவின் நினைவு நாளுக்கு கிட்டத்தட்ட 1,08,000 பேர் வந்தார்கள். சகோதரர் ஸ்கின்னர்
இந்தியாவிற்கு வந்த அதே சமயத்தில்தான் ஜாம்பியாவிலும் (Zambia) யெகோவாவின் சாட்சிகள் நற்செய்தியை பிரசங்கிக்க ஆரம்பித்தார்கள். இப்போது அங்கு 1,70,000 பிரஸ்தாபிகள் இருக்கிறார்கள். 2013-ல் நடந்த இயேசுவின் நினைவு நாளுக்கு 7,63,915 பேர் வந்திருந்தார்கள். அதாவது, ஜாம்பியா நாட்டு மக்கள்தொகையில் 18 பேருக்கு ஒருவர் என்ற கணக்கில் வந்திருந்தார்கள். இந்த வளர்ச்சியை பார்க்கும்போது நமக்கு எவ்வளவு ஆச்சரியமாக இருக்கிறது!புளித்த மாவு
10. இந்த உதாரணத்தின் அர்த்தம் என்ன?
10 மத்தேயு 13:33-ஐ வாசியுங்கள். இந்த உதாரணத்தின் அர்த்தம் என்ன? இந்த உதாரணம், கடவுளுடைய அரசாங்கத்தை பற்றிய நற்செய்தியையும், அது மக்களுடைய வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்பதையும் காட்டுகிறது. ‘முழு மாவு,’ இந்த உலகத்தில் இருக்கிற எல்லா மக்களையும் குறிக்கிறது. கொஞ்சம் புளித்த மாவு எப்படி முழு மாவையும் புளிக்க வைக்கிறதோ அதேபோல் பிரசங்க வேலையின் மூலமாக நற்செய்தி முழு உலகத்திற்கும் பரவுகிறது. கடுகு விதையின் வளர்ச்சியை எல்லாராலும் பார்க்க முடியும். ஆனால், மாவு புளிப்பதை யாராலும் பார்க்க முடியாது. முழு மாவும் புளித்த பிறகுதான் அது தெரியும்.
11. இயேசு ஏன் இந்த உதாரணத்தை சொன்னார்?
11 இயேசு ஏன் இந்த உதாரணத்தை சொன்னார்? நற்செய்தி உலகம் முழுவதும் பரவுவதை யாராலும் தடுக்க முடியாது. (அப். 1:8) அதேசமயம் அந்த நற்செய்திக்கு, ஒருவருடைய மனதையே மாற்றும் சக்தி இருக்கிறது. இந்த விஷயங்களை புரிய வைக்கத்தான் புளித்த மாவு உதாரணத்தை இயேசு சொன்னார். மாவு புளிப்பது ஆரம்பத்தில் தெரியாது, அதேபோல் ஒருவருடைய மனதில் நடக்கிற மாற்றங்களும் ஆரம்பத்தில் தெரியாது, போகப் போகத்தான் தெரியும். இந்த உதாரணத்தில் சொல்லியிருப்பது போலவே உலகத்தில் இன்றைக்கு நிறையப் பேர் நற்செய்தியை கேட்டு அவர்களுடைய வாழ்க்கையையே மாற்றி இருக்கிறார்கள்.—ரோ. 12:2; எபே. 4:22, 23.
12, 13. பிரசங்க வேலையில் ஏற்பட்ட வளர்ச்சிக்கு சில உதாரணங்களை சொல்லுங்கள்.
12 நாம் செய்கிற பிரசங்க வேலைக்கு கிடைக்கிற பலனை பெரும்பாலும் பல வருடங்களுக்குப் பிறகுதான் பார்க்க முடிகிறது. இதற்கு ஒரு அனுபவத்தை கவனியுங்கள். 1982-ல், ஃபிரான்ஸும் அவருடைய மனைவி மார்கிட்டும் பிரேசில் நாட்டு பெத்தேலில் சேவை செய்துகொண்டு இருந்தார்கள். (இப்போது இவர்கள் வேறொரு நாட்டிலுள்ள பெத்தேலில் சேவை செய்கிறார்கள்.) அந்த சமயத்தில் அவர்கள் ஒரு சின்ன கிராமத்தில் ஊழியம் செய்தார்கள். நிறையப் பேருக்கு பைபிள் படிப்பு நடத்தினார்கள். ஒரு அம்மாவுக்கும் அவர்களுடைய 4 பிள்ளைகளுக்கும் படிப்பு நடத்தினார்கள். மூத்த பையனுக்கு 12 வயது. அவனுக்கு ரொம்ப கூச்ச சுபாவம், அவர்களை பார்த்தாலே எங்கேயாவது போய் ஒளிந்துகொள்வான். அந்த தம்பதி வேறு இடத்திற்கு மாறி போனதால் பைபிள் படிப்பை தொடர்ந்து எடுக்க முடியவில்லை. 25 வருடங்களுக்குப் பிறகு அவர்கள் அந்த இடத்திற்கு மறுபடியும் வந்தார்கள். அப்போது, அங்கே ஒரு புதிய ராஜ்ய மன்றம் இருந்தது. அந்த சபையில் 69 பிரஸ்தாபிகள் இருந்தார்கள், அதில் 13 பேர் பயனியர்கள். கூச்ச சுபாவத்தோடு இருந்த அந்த சின்ன பையனை உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? அந்த பையன்தான் சபையின் மூப்பர் குழுவின் ஒருங்கிணைப்பாளராக (Coordinator) இருந்தார். அதையெல்லாம் பார்த்தபோது அந்த தம்பதிக்கு எவ்வளவு சந்தோஷமாக இருந்திருக்கும்! புளித்த மாவு உதாரணத்தில் இயேசு சொன்னது போலவே நிறையப் பேர் நற்செய்தியை கேட்டு, அவர்களுடைய வாழ்க்கையையே மாற்றியிருக்கிறார்கள்.
13 பிரசங்க வேலை தடை செய்யப்பட்ட இடங்களில்கூட நிறையப் பேர் நற்செய்தியை கேட்டு அவர்களுடைய வாழ்க்கையை மாற்றியிருக்கிறார்கள். அந்த இடங்களில் எல்லாம் நற்செய்தி எந்தளவு பரவி இருக்கிறது என்பதைப் பார்க்கும்போது நமக்கு ஆச்சரியமாக இருக்கும்! உதாரணத்திற்கு, 1910-ல் கியூபா நாட்டில் நற்செய்தி முதன் முதலில் பிரசங்கிக்கப்பட்டது. 1913-ல் சகோதரர் ரஸல் அங்கு போயிருந்தார். ஆரம்பத்தில் அங்கே நிறையப் பேர் நற்செய்தியை கேட்கவில்லை. ஆனால் இன்றைக்கு, கியூபாவில் 96,000-க்கும் அதிகமான பிரஸ்தாபிகள் இருக்கிறார்கள். 2013-ல் நடந்த இயேசுவின் நினைவு நாள் நிகழ்ச்சிக்கு 2,29,726 பேர் வந்திருந்தார்கள். அதாவது, கியூபா நாட்டு மக்கள்தொகையில் 48 பேருக்கு ஒருவர் என்ற கணக்கில் வந்திருந்தார்கள். பிரசங்க வேலைக்கு தடை இல்லாத இடமாக இருந்தால்கூட சாட்சிகள் நினைத்துப் பார்க்காத இடங்களிலும் நற்செய்தி பரவியிருக்கிறது. * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.)—பிர. 8:7; 11:5.
14, 15. (அ) இந்த உதாரணத்தில் இருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? (ஆ) இந்த உதாரணத்திலிருந்து யெகோவாவைப் பற்றியும் இயேசுவைப் பற்றியும் நாம் என்ன தெரிந்துகொள்ளலாம்?
பிர. 11:6) பிரசங்க வேலையை ஆசீர்வதிக்கும்படி நாம் எப்போதுமே ஜெபம் செய்ய வேண்டும். முக்கியமாக, தடை செய்யப்பட்ட இடங்களில் பிரசங்க வேலையை ஆசீர்வதிக்க வேண்டுமென்று கேட்டு யெகோவாவிடம் ஜெபம் செய்ய வேண்டும்.—எபே. 6:18-20.
14 இந்த உதாரணத்தில் இருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? புளித்த மாவு உதாரணத்தை நன்றாக யோசித்துப் பார்க்கும்போது ஒரு முக்கியமான விஷயத்தை நாம் புரிந்துகொள்கிறோம். நற்செய்தி உலகம் முழுவதும் எப்படி பரவும் என்பதை நினைத்து நாம் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால், அதை யெகோவா பார்த்துக்கொள்வார். அப்படியென்றால் நாம் எதுவுமே செய்ய வேண்டாமா? பைபிள் இப்படி சொல்கிறது: “காலையிலே உன் விதையை விதை; மாலையிலே உன் கையை நெகிழவிடாதே; அதுவோ, இதுவோ, எது வாய்க்குமோ என்றும், இரண்டும் சரியாய்ப் பயன்படுமோ என்றும் நீ அறியாயே.” (15 நாம் சொல்கிற நற்செய்தியை மக்கள் கேட்கவில்லை என்றால் நாம் சோர்ந்து போய்விடக் கூடாது, ஊழியத்தையும் அலட்சியம் செய்யக் கூடாது. ஆரம்பத்தில் மக்கள் கேட்காமல் போனாலும் போகப் போக நமக்கு நல்ல பலன் கிடைக்கும். (சக. 4:10) நாம் நினைத்ததைவிட நிறையப் பேர் நற்செய்தியை கேட்பார்கள். யெகோவாவும் நம்முடைய வேலையை ஆசீர்வதிப்பார்.—சங். 40:5; சக. 4:7.
வியாபாரியும் புதைக்கப்பட்ட பொக்கிஷமும்
16. இந்த இரண்டு உதாரணங்களின் அர்த்தம் என்ன?
16 மத்தேயு 13:44-46-ஐ வாசியுங்கள். இந்த இரண்டு உதாரணங்களின் அர்த்தம் என்ன? இயேசு வாழ்ந்த காலத்தில் வியாபாரிகள் நல்ல தரமான முத்துக்களைத் தேடி ரொம்ப தூரம் பயணம் செய்வார்கள். இந்த உதாரணத்தில் இயேசு சொன்ன ‘விலை உயர்ந்த முத்து,’ கடவுளுடைய அரசாங்கத்தை பற்றிய நற்செய்தியை குறிக்கிறது. கடவுளைப் பற்றி தெரிந்துகொள்ள அதிக ஆர்வமாக இருக்கிற ஆட்களை, அந்த ‘வியாபாரிக்கு’ ஒப்பிடலாம். அந்த வியாபாரி விலை உயர்ந்த முத்தை வாங்குவதற்காக அவரிடம் இருந்த எல்லாவற்றையும் “உடனடியாக” விற்றார். “புதைக்கப்பட்ட” பொக்கிஷத்தைப் பற்றிய இன்னொரு உதாரணத்தையும் இயேசு சொன்னார். அதில் சொல்லப்பட்ட மனிதன் பொக்கிஷத்திற்காக தேடிப் போகவில்லை. ஆனால், அவர் வேலை செய்துகொண்டு இருந்த நிலத்தில் பொக்கிஷத்தைப் பார்த்தபோது அந்த நிலத்தை வாங்குவதற்கு அவரிடம் இருந்த ‘எல்லாவற்றையும் விற்க’ தயாராக இருந்தார்.
17. இயேசு ஏன் இந்த உதாரணங்களை சொன்னார்?
17 இயேசு ஏன் இந்த உதாரணங்களை சொன்னார்? உண்மையான கடவுள் யார் என்று தெரிந்துகொள்ள இன்றைக்கு நிறையப் பேர் அந்த வியாபாரியைப் போல அதிக முயற்சி எடுக்கிறார்கள். ஆனால் சிலர், புதைந்து இருந்த பொக்கிஷத்தைப் பார்த்த மனிதனை போல இருக்கிறார்கள். அதாவது, அவர்கள் எந்த முயற்சியும் எடுக்காமலேயே கடவுளைப் பற்றி தெரிந்துகொள்கிறார்கள். இந்த உதாரணத்தில் வருகிற இரண்டு பேருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. அவர்கள் கண்டுபிடித்த முத்தும் பொக்கிஷமும் விலை மதிக்க முடியாதது என்பதை தெரிந்துகொண்ட உடனே அதை வாங்க ரொம்ப முயற்சி எடுக்கிறார்கள், நிறைய தியாகமும் செய்கிறார்கள்.
18. (அ) இந்த உதாரணங்களில் இருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (ஆ) இந்த உதாரணங்களில் இருந்து யெகோவாவைப் பற்றியும் இயேசுவைப் பற்றியும் நாம் என்ன தெரிந்துகொள்ளலாம்?
18 இந்த உதாரணங்களில் இருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (மத். 6:19-21) உங்களையே இப்படி கேட்டுக்கொள்ளுங்கள்: ‘இந்த உதாரணத்துல பார்த்த ரெண்டு பேரை போலவே நானும் இருக்கிறேனா? கடவுளை பத்தியும் பைபிளை பத்தியும் தெரிஞ்சுக்கிறதை பொக்கிஷமா நினைக்கிறேனா? தெரிஞ்சுகிட்ட விஷயங்கள என் வாழ்க்கையில கடைப்பிடிக்க தியாகங்கள் செய்றேனா? இல்லன்னா சொந்த விஷயத்திலேயே மூழ்கிப் போயிருக்கேனா?’ (மத். 6:22-24, 33; லூக். 5:27, 28; பிலி. 3:8) பைபிளில் இருக்கிற விஷயங்களை நாம் பொக்கிஷமாக நினைத்தால் நிச்சயம் அதற்கு நம் வாழ்க்கையில் முதலிடம் கொடுப்போம்.
19. அடுத்த கட்டுரையில் எதை பற்றி பார்ப்போம்?
19 இயேசு சொன்ன இந்த 4 உதாரணங்களின் அர்த்தத்தை புரிந்துகொண்டது நமக்கு எவ்வளவு பிரயோஜனமாக இருந்தது! ஆனால், இதையெல்லாம் புரிந்துகொண்டால் மட்டும் போதாது, அதை நம் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும். இயேசு சொன்ன இன்னும் 3 உதாரணங்களைப் பற்றி அடுத்த கட்டுரையில் நாம் பார்க்கலாம்.
^ பாரா. 13 பாப்புவா-நியூ கினியிலும் (2005 இயர்புக், பக்கம் 63) ராபின்ஸன் க்ரூஸோ தீவிலும் (காவற்கோபுரம், ஜூன் 15, 2000, பக்கம் 9) நடந்த இந்த மாதிரி அனுபவங்களை படித்துப் பாருங்கள்.