உங்களுக்கு கிடைத்த சொத்தை உயர்வாக மதிக்கிறீர்களா?
‘‘நாம் கடவுளுடைய சக்தியை பெற்றிருக்கிறோம்; அதனால்தான், அவர் தயவுடன் வெளிப்படுத்தியிருக்கிற விஷயங்களை நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது.’—1 கொ. 2:12.
1. நிறையப் பேருக்கு எது தெரியாமல் போய்விடுகிறது?
“ஏதாவது ஒன்னு நம்மகிட்ட இருக்கிற வரைக்கும் அதோட அருமை தெரியாது, அது இல்லன்னாதான் தெரியும்!”—யாராவது உங்களிடம் இப்படி சொல்லி இருக்கிறார்களா? இல்லை என்றால், நீங்கள் யாரிடமாவது இப்படி சொல்லியிருக்கிறீர்களா? பொதுவாக, பணக்கார வீட்டு பிள்ளைகளுக்கு எல்லாமே சுலபமாக கிடைப்பதால் அதனுடைய அருமை அவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம். இளைஞர்களுக்கு அனுபவம் குறைவாக இருப்பதாலும் வாழ்க்கையில் எது முக்கியம் என்று தெரியாமல் போய்விடலாம்.
2, 3. (அ) கிறிஸ்தவ இளைஞர்கள் எப்படி இருக்கக் கூடாது? (ஆ) நம்மிடம் இருக்கிற சொத்தை உயர்வாக மதிக்க எது உதவும்?
2 இன்று, உலகத்தில் இருக்கிற இளைஞர்கள் பொருள் சேர்ப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். நல்ல வேலை, வசதியான வீடு, புதுப் புது எலக்ட்ரானிக் பொருள்கள் என்று ஆடம்பரமாக வாழ வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்கள், கடவுளை பற்றி நினைப்பதே இல்லை! கிறிஸ்தவ இளைஞர்களே, நீங்கள் எதை வாழ்க்கையில் முக்கியமாக நினைக்கிறீர்கள்? உங்கள் அப்பா-அம்மா யெகோவாவின் சாட்சியாக இருந்தால் அவர்கள் உங்களுக்கு விலைமதிப்பு இல்லாத ஒரு சொத்தை கொடுத்திருக்கிறார்கள். அது என்ன? சின்ன வயதில் இருந்தே யெகோவாவை பற்றி நீங்கள் தெரிந்துகொண்ட விஷயங்கள்தான் அது. (மத். 5:3) உங்களிடம் இருக்கிற இந்த பெரிய சொத்தை நீங்கள் முக்கியமாக நினைக்கவில்லை என்றால், வாழ்நாள் எல்லாம் கஷ்டப்பட வேண்டியிருக்கும்.
3 ஆனால் உங்களுக்கு அப்படி நடக்கக் கூடாது! உங்களிடம் இருக்கிற சொத்தை நீங்கள் உயர்வாக மதிக்க வேண்டும். இப்போது, பைபிள் காலத்தில் வாழ்ந்த சிலருடைய உதாரணங்களை பார்க்கலாம். நம்மிடம் இருக்கிற சொத்தை உயர்வாக மதிக்க அது ரொம்ப உதவியாக இருக்கும்.
கிடைத்த சொத்தை உயர்வாக மதிக்காத சிலர்
4. சாமுவேலுடைய மகன்களை பற்றி 1 சாமுவேல் 8:1-5 என்ன சொல்கிறது?
4 பைபிள் காலத்தில் வாழ்ந்த சிலருக்கு விலைமதிக்க முடியாத ஒரு சொத்து கிடைத்தது. ஆனால் அவர்களில் சிலர் அதை மதிக்காமல் போய்விட்டார்கள். சாமுவேல் தீர்க்கதரிசி யெகோவாவுக்கு உண்மையாக இருந்தாலும், அவருடைய பிள்ளைகள் அப்படி இல்லை. சாமுவேல் சின்ன வயதில் இருந்தே யெகோவாவுக்கு உண்மையாக சேவை செய்தார். (1 சா. 12:1-5) ஆனால் அவருடைய இரண்டு மகன்கள், யோவேலும் அபியாவும், அவரை போல் யெகோவாவுக்கு உண்மையாக சேவை செய்யவில்லை. அவர்கள் அக்கிரமமும், அநியாயமும்தான் செய்தார்கள்.—1 சாமுவேல் 8:1-5-ஐ வாசியுங்கள்.
5, 6. யோசியாவின் மகன்களுக்கும் பேரனுக்கும் என்ன ஆனது?
5 எருசலேமை ஆட்சி செய்த யோசியா ராஜாவுடைய மகன்களும் ரொம்ப மோசமானவர்களாக இருந்தார்கள். யோசியாவுக்கு யெகோவாமீது ரொம்ப அன்பு இருந்தது. அதனால் யெகோவாவுக்கு பிடித்ததையே அவர் செய்தார். ஒரு சமயம், யெகோவாவுடைய சட்டங்களை அவருக்கு வாசித்து காட்டினார்கள். அப்போது, யெகோவாவுக்கு பிடிக்காத விஷயங்கள் எருசலேமில் நடந்துகொண்டு இருந்ததை புரிந்துகொண்டார். அதை எல்லாவற்றையும் எருசலேமில் இருந்து ஒழித்துக்கட்ட முடிவு செய்தார். அதனால் உடனடியாக, எருசலேமில் இருந்த சிலைகளை உடைத்து நொறுக்கினார். அதோடு, அஞ்சனம் பார்க்கிறவர்களையும் குறிசொல்கிறவர்களையும் அங்கிருந்து துரத்தினார். மக்கள் எல்லாரும் யெகோவாவுக்கு பிடித்ததை செய்ய வேண்டும் என்று சொன்னார். (2 இரா. 22:8; 23:2, 3, 12-15, 24, 25) யோசியா ராஜா யெகோவாவுக்கு உண்மையாக இருந்தார். அதனால் அவருடைய பிள்ளைகளுக்கும், யெகோவாவை உண்மையாக சேவை செய்கிற வாய்ப்பு இருந்தது. அதுதான் அவர்களுக்கு கிடைத்த அருமையான சொத்து! ஆனால், அவருடைய மூன்று மகன்களும் ஒரு பேரனும் அந்த சொத்தை உயர்வாக மதிக்கவில்லை.
6 யோசியாவின் மகன் யோவாகாஸ் ராஜாவாக ஆனபோது, யெகோவாவின் “பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்” என்று பைபிள் சொல்கிறது. அவனுடைய ஆட்சி மூன்று மாதம்தான் நீடித்தது. அப்போது, எகிப்து நாட்டு ராஜா அவனை கைது செய்து எருசலேமிலிருந்து ரொம்ப தூரத்தில் இருந்த ஒரு இடத்திற்கு கொண்டுபோனான். அங்கேயே யோவாகாஸ் செத்துப்போனான். (2 இரா. 23:31-34) யோசியாவின் இன்னொரு மகன் யோயாக்கீம், 11 வருஷம் ஆட்சி செய்தான். யெகோவாவுக்கு உண்மையாக சேவை செய்கிற வாய்ப்பை, அதாவது அந்த சொத்தை, அவன் மதிக்கவில்லை. அவன் ஒரு மோசமான ஆளாக இருந்ததால், “ஒரு கழுதை புதைக்கப்படுகிற” மாதிரி புதைக்கப்படுவான் என்று எரேமியா தீர்க்கதரிசி சொன்னார். (எரே. 22:17-19) யோசியாவின் இன்னொரு மகன் சிதேக்கியாவும், பேரன் யோயாக்கீனும்கூட தங்களுக்கு கிடைத்த சொத்தை மதிக்கவில்லை. அவர்களும் ரொம்ப மோசமான ஆட்களாக இருந்தார்கள் என்று பைபிள் சொல்கிறது.—2 இரா. 24:8, 9, 18, 19.
7, 8. (அ) சாலொமோன் எதை மதிக்காமல் போய்விட்டார்? (ஆ) கிடைத்த சொத்தை மதிக்காத இந்த கெட்ட உதாரணங்களில் இருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
7 ஆரம்பத்தில் சாலொமோன் ராஜா, அவருடைய அப்பா தாவீதை போலவே யெகோவாவுக்கு உண்மையாக இருந்தார். ஆனால் கடைசியில், யெகோவாவுக்கு உண்மையாக சேவை செய்கிற வாய்ப்பை, அதாவது தனக்கு கிடைத்த சொத்தை, சாலொமோன் மதிக்காமல் போய்விட்டார். ‘சாலொமோனுக்கு வயதானபோது, அவனுடைய மனைவிகள் அவன் இருதயத்தை அந்நிய தேவர்களைப் பின்பற்றும்படி சாயப் பண்ணினார்கள்; அதனால் அவனுடைய இருதயம் அவன் தகப்பனாகிய தாவீதின் இருதயத்தைப் போல, தன் தேவனாகிய கர்த்தரோடே உத்தமமாய் இருக்கவில்லை’ என்று பைபிள் சொல்கிறது. (1 இரா. 11:4) கிடைத்த சொத்தை மதிக்காததால், யெகோவாவுக்கு சாலொமோனை பிடிக்காமல் போய்விட்டது.
8 இவர்கள் எல்லாருக்குமே யெகோவாவை பற்றி தெரிந்துகொள்ளவும் அவருக்கு பிடித்ததை செய்யவும் வாய்ப்பு இருந்தது. அந்த நல்ல வாய்ப்பை அவர்கள் நழுவ விட்டுவிட்டார்கள்.
ஆனால், பைபிள் காலங்களில் வாழ்ந்த எல்லா இளைஞர்களும் அப்படி நழுவ விடவில்லை. சிலர், அவர்களுக்கு கிடைத்த சொத்தை மிக உயர்வாக மதித்தார்கள். அவர்களை பற்றி இப்போது பார்க்கலாம்.கிடைத்த சொத்தை உயர்வாக மதிக்காத சிலர்
9. நோவாவுடைய மகன்கள் எப்படி நமக்கு நல்ல முன்மாதிரியாக இருக்கிறார்கள்? (ஆரம்ப படம்)
9 நோவாவுடைய மகன்கள் நமக்கு நல்ல முன்மாதிரியாக இருக்கிறார்கள். மக்களை காப்பாற்ற நோவாவுடன் சேர்ந்து கப்பலை கட்டுவதற்கான வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது. அதனால் கப்பல் கட்டினார்கள். யெகோவாவுக்கு கீழ்ப்படிந்து, வெள்ளம் வருவதற்கு முன்பே கப்பலுக்குள் போனார்கள். (ஆதி. 7:1, 7) அவர்கள், ‘பூமியின்மீதெங்கும் வித்தை [மிருகங்களுடைய இனத்தை] உயிரோடு’ காப்பாற்ற எல்லா மிருகங்களையும் கப்பலுக்குள் கொண்டு போனார்கள் என்று ஆதியாகமம் 7:2 சொல்கிறது. அந்த வெள்ளத்தில் இருந்து மிருகங்கள் மட்டுமல்ல, மனிதர்களும் உயிர் தப்பினார்கள். மனிதகுலத்தை காப்பாற்றவும், உண்மை வணக்கத்தை திரும்ப நிலைநாட்டவும் அவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு இருந்தது. நோவாவுடைய மகன்கள் அவர்களுக்கு கிடைத்த அந்த வாய்ப்பை உயர்வாக மதித்தார்கள்.—ஆதி. 8:20; 9:18, 19.
10. நான்கு எபிரெய நண்பர்களும் அவர்களுக்கு கிடைத்த சொத்துக்கு மதிப்பு காட்டினார்கள் என்று எப்படி சொல்லலாம்?
10 இப்போது 4 எபிரெய நண்பர்களை பற்றி பார்க்கலாம். அவர்களுடைய பெயர் அனனியா, மீஷாவேல், அசரியா, தானியேல். கி.மு. 617-ல், பாபிலோனியர்கள் இவர்களை கைதிகளாக கொண்டுபோனார்கள். இந்த 4 பேரும் ரொம்ப அழகாக, திறமைசாலிகளாக இருந்தார்கள். அவர்கள் நினைத்திருந்தால் பாபிலோனில் ராஜாவைப் போல் வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவர்கள் எபிரெயர்கள் என்பதை மறக்கவில்லை. அதோடு, சின்ன வயதில் இருந்து யெகோவாவை பற்றி கற்றுக்கொண்ட விஷயங்களையும் மறக்கவில்லை. அதை ஒரு பெரிய சொத்தாக நினைத்தார்கள், அதற்கு மதிப்பு காட்டினார்கள். பாபிலோனில் இருந்தாலும் யெகோவாவுக்கு பிடித்ததைத்தான் செய்ய வேண்டும் என்று உறுதியாக இருந்தார்கள். அதனால் யெகோவா அவர்களை ஆசீர்வதித்தார்.—தானியேல் 1:8, 11-15, 20-ஐ வாசியுங்கள்.
11. இயேசு, அவருக்கு கிடைத்த பொக்கிஷத்தை என்ன செய்தார்?
11 கிடைத்த சொத்தை உயர்வாக மதித்தவர்களில் ரொம்ப நல்ல முன்மாதிரி, இயேசுதான். அவருடைய அப்பா, யெகோவா சொல்லிக் கொடுத்த விஷயங்கள், அவருக்கு ஒரு பெரிய பொக்கிஷம் போல் இருந்தது. அதனால்தான், “தகப்பன் எனக்குக் கற்றுக்கொடுத்தபடியே இந்த விஷயங்களைப் பேசுகிறேன்” என்று சொன்னார். (யோவா. 8:28) அவருக்கு தெரிந்த விஷயங்களை மற்றவர்களுக்கும் சொல்லிக் கொடுத்தார், அவர்களும் அதில் இருந்து பயனடைய வேண்டும் என்று நினைத்தார். அதனால், “நான் மற்ற நகரங்களிலும் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்க வேண்டும், இதற்காகவே அனுப்பப்பட்டிருக்கிறேன்” என்று சொன்னார். (லூக். 4:18, 43) இன்று உலகத்தில் இருக்கிற ஆட்கள் கடவுளை பற்றிய விஷயங்களை ஒரு பெரிய பொக்கிஷமாக நினைப்பது இல்லை. அதனால்தான், நாம் இந்த “உலகத்தின் பாகமாக” இருக்கக் கூடாது என்று இயேசு சொன்னார்.—யோவா. 15:19.
உங்களுக்கு கிடைத்த சொத்தை உயர்வாக மதிக்கிறீர்களா?
12. (அ) 2 தீமோத்தேயு 3:14-17, இன்று இருக்கிற இளைஞர்களுக்கு எப்படி பொருந்துகிறது? (ஆ) நீங்கள் என்னென்ன கேள்விகளை யோசித்துப் பார்க்கலாம்?
12 யெகோவாவை நேசிக்கிற அப்பா, அம்மா உங்களுக்கு இருக்கிறார்களா? அப்படியென்றால், விலைமதிக்க முடியாத ஒரு பெரிய சொத்து உங்களிடம் இருக்கிறது. தீமோத்தேயுவைப் பற்றி பைபிளில் சொல்லியிருக்கிற விஷயங்கள் உங்களுக்கும் பொருந்தும். (2 தீமோத்தேயு 3:14-17-ஐ வாசியுங்கள்.) நீங்கள் குழந்தையாக இருந்த சமயத்தில் இருந்தே யெகோவாவைப் பற்றி உங்கள் அப்பா, அம்மா சொல்லிக்கொடுத்து இருப்பார்கள். யெகோவாமீது அன்பு காட்டுவதற்கும் அவருக்கு பிடித்ததை செய்வதற்கும் சொல்லிக்கொடுத்து இருப்பார்கள். அதுதான் உங்களுக்கு, “ஞானத்தைத் தந்து கிறிஸ்து இயேசு மீதுள்ள விசுவாசத்தின் மூலம்” உங்களை ‘மீட்புக்கு வழிநடத்துவதாக’ இருக்கிறது. யெகோவாவுக்கு சேவை செய்ய, “எல்லா விதமான தகுதிகளையும்” வளர்த்துக்கொள்ள உதவியிருக்கிறது. உங்களுக்கு கிடைத்த இந்த சொத்தை நீங்கள் உயர்வாக மதிக்கிறீர்களா? அதை தெரிந்துகொள்வதற்கு, நீங்கள் இப்படி யோசித்துப் பாருங்கள்: ‘யெகோவாவுக்கு உண்மையா இருந்த நிறைய பேரோட உதாரணத்த பார்க்கும்போது நான் எப்படி உணர்றேன்? நான் ஒரு யெகோவாவின் சாட்சினு சொல்றத பெருமையா நினைக்கிறேனா? இத்தனை கோடி மக்கள்ல, யெகோவா என்னையும் தேர்ந்தெடுத்து இருக்கார்னு நினைக்கும்போது நான் எப்படி உணர்றேன்? எனக்கு கிடைச்ச சொத்து எவ்ளோ மதிப்புள்ளதுனு புரிஞ்சிருக்கிறேனா?’
13, 14. யெகோவாவின் சாட்சிகளுடைய குடும்பத்தில் பிறந்திருக்கிற சிலர் என்ன செய்கிறார்கள், அது ஏன் முட்டாள்தனம் என்று சொல்லலாம்? அதற்கு ஒரு அனுபவத்தை சொல்லுங்கள்.
13 யெகோவாவின் சாட்சிகளுடைய குடும்பத்தில் பிறந்த சில பிள்ளைகள், பைபிள் சத்தியங்கள் எவ்வளவு அருமையானது என்பதையும் சாத்தானுடைய உலகம் எவ்வளவு கீழ்த்தரமானது என்பதையும் புரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள். சாத்தானுடைய உலகத்தில் இருக்கிற விஷயங்களை அனுபவித்துத்தான் பார்க்கலாமே என்று சிலர் நினைக்கிறார்கள். இப்படி யோசித்து பாருங்கள்: வேகமாக வந்துகொண்டு இருக்கிற கார் முன் விழுந்தால் அடிபடுமா என்று தெரிந்துகொள்ள அந்த கார் முன் போய் விழுவீர்களா? அப்படி செய்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனமாக இருக்கும்! அதனால், இந்த உலகத்தில் இருக்கிற விஷயங்கள் எவ்வளவு மோசமானது என்பதை தெரிந்துகொள்ள முயற்சிகூட செய்யாதீர்கள்.—1 பே. 4:4.
14 ஜென்னர் என்ற இளைஞர் யெகோவாவின் சாட்சிகளுடைய குடும்பத்தில் பிறந்தவர். அவர் 12 வயதில் ஞானஸ்நானம் எடுத்தார். ஆனால் அவருடைய டீன்-ஏஜில், உலகத்தில் இருக்கிறவர்களைப் போல் வாழ்ந்து பார்க்க ஆசைப்பட்டார். அப்பா, அம்மாவிடம் பொய் சொல்ல ஆரம்பித்தார், நிறைய விஷயங்களை மறைக்கவும் செய்தார். 15 வயது இருக்கும்போது நண்பர்களோடு சேர்ந்து குடித்தார், கெட்ட வார்த்தைகளையும் பேச ஆரம்பித்தார். கொடூரமான கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடிவிட்டு ராத்திரியில்தான் வீட்டிற்கு வருவார். அவர் செய்துவந்த எந்த விஷயமும் அவருக்கு உண்மையான சந்தோஷத்தை தரவில்லை. அவருக்கு வாழ்க்கையே வெறுத்துப் போயிருந்தது. அதனால் மனந்திரும்பி, மறுபடியும் யெகோவாவை சேவிக்க ஆரம்பித்தார். இந்த உலகத்தில் இருக்கிற ஆட்களைப் போல் இருக்க வேண்டும் என்று அவருக்கு அவ்வப்போது ஆசை வந்தாலும், யெகோவா கொடுக்கிற ஆசீர்வாதம்தான் ரொம்ப முக்கியம் என்று சொல்கிறார்.
15. நாம் யெகோவாவின் சாட்சிகளுடைய குடும்பத்தில் பிறந்திருந்தாலும் சரி இல்லை என்றாலும் சரி, எதை நினைத்து சந்தோஷப்படலாம்?
15 யெகோவாவின் சாட்சிகளுடைய குடும்பத்தில் பிறக்கவில்லை என்றாலும், யெகோவாவுக்கு சேவை செய்கிற ஒரு பெரிய வாய்ப்பு உங்களுக்கு இருப்பதை மறந்துவிடாதீர்கள். இந்த உலகத்தில் இருக்கிற கோடிக்கணக்கான மக்களில் கொஞ்சம் பேர்தான் யெகோவாவைப் பற்றி தெரிந்திருக்கிறார்கள். அதில் நீங்களும் ஒருவராக இருப்பது எவ்வளவு பெரிய பாக்கியம்! (யோவா. 6:44, 45) யெகோவாவைப் பற்றி, உங்கள் அப்பா-அம்மா சொல்லிக் கொடுத்து இருந்தாலும் சரி வேறு யாராவது சொல்லிக் கொடுத்து இருந்தாலும் சரி, அவரை பற்றி தெரிந்துகொண்டதை நினைத்து சந்தோஷப்படுங்கள். (1 கொரிந்தியர் 2:12-ஐ வாசியுங்கள்.) ஜென்னர் சொல்கிறார்: “வானத்தையும் பூமியையும் படைச்ச யெகோவாவுக்கு முன்னாடி நான் ஒன்னுமே இல்ல. இருந்தாலும் அவரோட சாட்சியா இருக்குறதுக்கு என்னை தேர்ந்தெடுத்து இருக்கார்.” (சங். 8:4) ஒரு சகோதரி சொல்கிறார்: “டீச்சருக்கு ஒரு ஸ்டூடண்ட் (student) ஸ்பெஷலா இருந்தா, அதை நினைச்சு அந்த ஸ்டூடண்ட் பெருமைப்படுவான். ஆனா யெகோவாவுக்கே நாம ஸ்பெஷலா இருக்கிறத நினைக்கும்போது, இன்னும் எவ்ளோ பெருமைப்படலாம்!”
நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?
16. கிறிஸ்தவ இளைஞர்கள் என்ன செய்ய வேண்டும்?
16 உங்களிடம் இருக்கிற அந்த அருமையான சொத்தை பற்றி நினைத்துப் பாருங்கள். யெகோவாவுக்கு சேவை செய்வதை உங்களுடைய வாழ்க்கையின் லட்சியமாக வையுங்கள். கடந்த காலத்தில், யெகோவாவுக்கு உண்மையாக இருந்தவர்களைப் பற்றி யோசித்துப் பாருங்கள். அவர்களைப் போல் நீங்களும் யெகோவாவுக்கு உண்மையாக இருங்கள். இன்று உலகத்தில் இருக்கிற இளைஞர்களுக்கு, வரப்போகிற நல்ல எதிர்காலத்தை பற்றி தெரியாது. அதனால், அவர்களுடைய வாழ்க்கையை வீணாக்கிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களைப் போல் இருக்காதீர்கள்.—2 கொ. 4:3, 4.
17-19. நாம் ஏன் உலகத்தில் இருக்கிற ஆட்களைப் போல் இருக்கக் கூடாது?
17 உலகத்தில் இருக்கிறவர்களில் இருந்து வித்தியாசமாக இருப்பது கஷ்டம்தான். ஆனால், அப்படி இருப்பதுதான் புத்திசாலித்தனம். ஒலிம்பிக்ஸ் போட்டியில் கலந்துகொள்ள போகிற விளையாட்டு வீரரை பற்றி யோசித்துப் பாருங்கள். அவருடைய முழு கவனமும் ஒலிம்பிக்ஸ் போட்டியில் கலந்துகொள்வதிலேயே இருக்கும். அதற்காக கடுமையாக பயிற்சி செய்வார். அவருடைய நேரம், சக்தி எல்லாவற்றையும் விளையாட்டுக்காகவே செலவு செய்வார். அவருடைய லட்சியத்தை அடைய மற்றவர்களில் இருந்து வித்தியாசமாகத்தான் இருப்பார்.
18 இன்று நிறையப் பேர், தங்களுக்கு இஷ்டப்பட்ட விதத்தில் வாழ்கிறார்கள். அவர்கள் செய்வது எல்லாம் எதில் போய் முடியும் என்று யோசித்துப் பார்ப்பதில்லை. ஆனால், நாம் அப்படி இல்லை. நாம் செய்கிற ஒவ்வொரு விஷயமும் யெகோவாவோடு உள்ள பந்தத்தை எப்படி பாதிக்கும் என்று யோசித்துப் பார்க்கிறோம். உதாரணத்திற்கு, மற்றவர்களைப் போல் ஒழுக்கங்கெட்ட வாழ்க்கை வாழ்ந்தால் “உண்மையான வாழ்வை” அடைய முடியாது என்று நமக்கு தெரியும். (1 தீ. 6:19) பாரா 15-ல் பார்த்த சகோதரி இப்படி சொல்கிறார்: “நாம நம்புற விஷயத்தை செய்றதுல உறுதியா இருந்தா, அதை நினைச்சு நாம நிச்சயம் சந்தோஷப்படுவோம். சாத்தானோட உலகத்துல இருக்கிறவங்கள்ல இருந்து வித்தியாசமா இருக்குறோம்னு காட்டுவோம். அப்போ, யெகோவா நம்மள பார்த்து ரொம்ப சந்தோஷப்படுவார், பெருமைப்படுவார்! மத்தவங்கள்ல இருந்து வித்தியாசமா இருக்கிறதை நினைச்சு நாமும் ரொம்ப சந்தோஷப்படுவோம்!”
19 இந்த உலகத்தில் கிடைக்கிற சந்தோஷத்தை அனுபவிக்க வேண்டும் என்று நினைத்து உங்கள் வாழ்க்கையை வீணாக்காதீர்கள். (பிர. 9:2, 10) நாம் ஏன் இந்த உலகத்தில் வாழ்கிறோம், எதிர்காலத்தில் எப்படிப்பட்ட வாழ்க்கை கிடைக்கப்போகிறது என்று நமக்கு தெரியும். அதனால், நாம் சரியான தீர்மானம் எடுக்க வேண்டும். “உலக மக்கள் தங்களுடைய வீணான சிந்தையின்படி நடப்பதுபோல்” நாம் நடக்காமல் இருக்க வேண்டும். ஏனென்றால், நாம் வாழ்கிற வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருக்கிறது!—எபே. 4:17; மல். 3:18.
20, 21. சரியான தீர்மானம் எடுத்தால், நம் எதிர்காலம் எப்படி இருக்கும்? நாம் என்ன செய்ய வேண்டும் என்று யெகோவா விரும்புகிறார்?
20 சரியான தீர்மானம் எடுத்தால், இப்போது மட்டுமல்ல கடவுள் கொண்டு வரப்போகிற புதிய உலகத்திலும் சந்தோஷமாக இருப்போம், சாவே இல்லாமல் வாழ்வோம். நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு யெகோவா நம்மை ஆசீர்வதிக்கப் போகிறார். (மத். 5:5; 19:29; 25:34) ஆனால், யெகோவா சொல்வது போல் செய்தால் மட்டும்தான் அவர் நம்மை ஆசீர்வதிப்பார். (1 யோவான் 5:3, 4-ஐ வாசியுங்கள்.) யெகோவாவுக்கு உண்மையாக சேவை செய்ய நாம் எடுக்கிற முயற்சிகள் எதுவும் வீண்போகாது!
21 யெகோவா நம்மை இப்போதே அதிகமாக ஆசீர்வதித்திருக்கிறார். அவரை பற்றியும் பைபிளைப் பற்றியும் நமக்கு தெளிவாக சொல்லிக் கொடுத்து இருக்கிறார். எதிர்காலத்தில் அவர் என்ன செய்யப்போகிறார் என்றும் சொல்லி இருக்கிறார். நம்மை யெகோவாவின் சாட்சி என்று சொல்லிக்கொள்வது நமக்கு கிடைத்த பெரிய பாக்கியம். யெகோவா நம்மோடு இருந்து நமக்கு உதவி செய்வதாக சொல்லி இருக்கிறார். (சங். 118:7) இதெல்லாம் நமக்கு கிடைத்திருக்கிற பெரிய சொத்து. இளைஞர்களாக இருந்தாலும் சரி பெரியவர்களாக இருந்தாலும் சரி, உங்களுக்கு கிடைத்திருக்கிற இந்த பெரிய சொத்தை உயர்வாக மதிப்பீர்களா? யெகோவாவுக்கு “என்றென்றும் மகிமை” சேர்ப்பீர்களா?—ரோ. 11:33-36; சங். 33:12.