‘போகும் வழி அவருக்குத் தெரியும்’
கை ஹாலிஸ் பியர்ஸ், மார்ச் 18, 2014 செவ்வாய்க்கிழமை அன்று இறந்தார். அவர் ஆளும் குழுவின் அங்கத்தினராக இருந்தார். இறந்தபோது அவருக்கு 79 வயது. 1,44,000 பேரில் இவரும் ஒருவராக இருந்ததால், இறந்ததற்குப் பிறகு பரலோகத்திற்கு உயிர்த்தெழுப்பப்பட்டார். இப்போது அவர் பரலோகத்தில் இருக்கிறார்.—எபி. 2:10-12; 1 பே. 3:18.
நவம்பர் 6, 1934-ல் அமெரிக்காவில் இருக்கிற கலிபோர்னியாவில் பிறந்தார். 1955-ல் ஞானஸ்நானம் எடுத்தார். அவருடைய அன்பு மனைவி பென்னீ-ஐ 1977-வது வருடம் கல்யாணம் செய்தார். அவருடைய பிள்ளைகளை அன்பாக வளர்த்தார். மற்றவர்களிடமும் அன்பான, பாசமான ஒரு அப்பாவைப் போல் நடந்துகொண்டார். 1982-ல் அவரும் அவருடைய மனைவியும் பயனியர்களாக சேவை செய்ய ஆரம்பித்தார்கள். 1986-ல் அவர் ஒரு வட்டாரக் கண்காணியாக ஆனார். 11 வருடம் அமெரிக்காவில் வட்டாரக் கண்காணியாக சேவை செய்தார்.
1997-ல் அவரும் அவருடைய மனைவியும் அமெரிக்காவில் இருக்கிற பெத்தேலில் சேவை செய்ய ஆரம்பித்தார்கள். சகோதரர் பியர்ஸ் ஊழிய இலாக்காவில் வேலை செய்தார். 1998-ல் அவர் ஆளும் குழுவின் 6 குழுக்களில் ஒன்றான பெத்தேல் ஊழியர்களின் குழுவில் (பெர்சனல் கமிட்டி) உதவியாளராக சேவை செய்தார். அதற்குப் பிறகு அவர் ஆளும் குழு அங்கத்தினராக நியமிக்கப்பட்டார். அதைப் பற்றி அக்டோபர் 2, 1999-ல் நடந்த யெகோவாவின் சாட்சிகளுடைய வருடாந்தரக் கூட்டத்தில் அறிவித்தார்கள். அவர் மொத்தம் 4 குழுவில் வேலை செய்திருக்கிறார். (பெத்தேல் ஊழியர்களின் குழு, எழுத்துக் குழு, பிரசுரிக்கும் குழு, ஒருங்கிணைப்பாளர்களின் குழு.)
சகோதரர் பியர்ஸ் எப்போதும் சிரித்த முகத்தோடு எல்லாரிடமும் ‘ஜாலியாக’ பேசுவார். வித்தியாசமான கலாச்சாரத்தை சேர்ந்த எல்லா சகோதர சகோதரிகளுக்கும் அவரை ரொம்ப பிடிக்கும். ஆனால், அதைவிட முக்கியமான ஒரு விஷயம் என்ன தெரியுமா? அவர் எல்லாரிடமும் அன்பாக, மனத்தாழ்மையாக நடந்துகொள்வார்; கடவுளுடைய சட்டங்கள்மீது அதிக மதிப்பு வைத்திருந்தார்; யெகோவாமீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தார். சூரியன்கூட உதிக்காமல் போகலாம், ஆனால் யெகோவாவுடைய வார்த்தைகள் நிறைவேறாமல் போகாது என்பதை உறுதியாக நம்பினார். அதனால்தான், உலகத்தில் இருக்கிற எல்லாரும் யெகோவாவைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டார்.
சகோதரர் பியர்ஸ் யெகோவாவுடைய சேவையில் கடினமாக உழைத்தார். காலையில் சீக்கிரமாகவே எழுந்துவிடுவார், ராத்திரியில் ரொம்ப நேரம்வரை வேலை செய்வார். அவர் நிறைய நாடுகளுக்கு போயிருக்கிறார். அவர் எங்கெல்லாம் போனாரோ அங்கெல்லாம் இருந்த சகோதர சகோதரிகளை உற்சாகப்படுத்தினார். அவருக்கு எவ்வளவு வேலை இருந்தாலும் சரி, யாராவது அவரிடம் உதவி கேட்டோ, ஆலோசனை கேட்டோ வந்தால் உடனே அவர்களுக்காக நேரம் ஒதுக்குவார். பைபிளில் இருந்து அவர் சொன்ன விஷயங்களை, அவரோடு பேசி பழகிய விதத்தை, அவர் காட்டிய அன்பை யாராலும் மறக்க முடியாது.
சகோதரர் பியர்ஸின் குடும்பத்தில் இப்போது அவருடைய மனைவி, 6 பிள்ளைகள், பேரப் பிள்ளைகள், பேரப் பிள்ளைகளுடைய பிள்ளைகள் எல்லாரும் இருக்கிறார்கள். நிறையப் பேர் யெகோவாவின் சாட்சியாக ஆவதற்கு அவர் உதவி செய்திருக்கிறார். நிறையப் பேரை உற்சாகப்படுத்தி இருக்கிறார். அவர்களையும் அவருடைய சொந்த பிள்ளைகளாகத்தான் நினைத்தார். இவர் இறந்து 4 நாட்களுக்குப் பிறகு (மார்ச் 22, 2014) சகோதரர் மார்க் சான்டர்சன் (ஆளும் குழுவில் ஒருவர்) இவரைப் பற்றி ஒரு பேச்சு கொடுத்தார். அந்த பேச்சில் சகோதரர் பியர்சுக்கு இருந்த பரலோக நம்பிக்கையைப் பற்றி சொன்னார். அதற்குப் பிறகு இயேசுவின் இந்த வார்த்தைகளை வாசித்தார்: “என் தகப்பனுடைய வீட்டில் தங்குவதற்கு நிறைய இடங்கள் இருக்கின்றன . . . உங்களுக்காக ஓர் இடத்தைத் தயார்படுத்துவதற்கு நான் போகிறேன். நான் போய் உங்களுக்காக ஓர் இடத்தைத் தயார்படுத்திய பின்பு, மறுபடியும் வந்து என் வீட்டிற்கு உங்களை அழைத்துக்கொண்டு போவேன்; அப்போது, நான் இருக்கும் இடத்திலேயே நீங்களும் இருப்பீர்கள். நான் போகும் இடத்திற்கான வழி உங்களுக்குத் தெரியும்.”—யோவா. 14:2-4.
சகோதரர் பியர்ஸ் நம்மோடு இல்லாததை நினைத்தால் நமக்கு கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆனால், இப்போது அவர் பரலோகத்தில் இருக்கிறார் என்பதை நினைக்கும்போது நமக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. சகோதரர் பியர்சுக்கு, அவர் நிரந்தரமாக ‘தங்கப் போகும் இடத்திற்கான வழி தெரிந்திருந்தது.’