வாசகர் கேட்கும் கேள்விகள்
சில சகோதர சகோதரிகளுக்கு சென்ட் வாசனை ஒத்துக்கொள்ளவில்லை என்றால் என்ன செய்யலாம்?
சில சகோதர சகோதரிகளுக்கு சென்ட் வாசனையே ஒத்துக்கொள்ளாது. முன்பின் தெரியாத ஆட்கள் அதிகமாக சென்ட் போட்டுகொண்டு வரும்போது சென்ட் போடாதீர்கள் என்று அவர்களிடம் சொல்ல முடியாது. ஆனால், சபை கூட்டத்திற்கும் மாநாட்டிற்கும் வருகிற சகோதர சகோதரிகளிடம் சென்ட், கொலோன் (cologne) போடுவதை தவிர்க்க சொல்லலாமா என்று சிலர் கேட்கிறார்கள்.
நம் சகோதர சகோதரிகள் எல்லாரும் கிறிஸ்தவ கூட்டங்களுக்கு வந்து பயனடைய வேண்டும் என்றுதான் நாம் எல்லாருமே ஆசைப்படுவோம். அவர்கள் யாரும் கூட்டத்திற்கு வராமல் இருக்க நாம் ஒரு தடையாக இருந்துவிடக் கூடாது என்று நினைப்போம். (எபி. 10:24, 25) சென்ட் வாசனை கொஞ்சம்கூட ஒத்துக்காததால் யாருக்காவது கூட்டங்களுக்கு வருவது கஷ்டமாக இருந்தால், இதைப் பற்றி சபையில் இருக்கிற மூப்பர்களிடம் அவர்கள் பேசலாம். சபை கூட்டங்களுக்கு சென்ட் போட்டுகொண்டு வரக் கூடாது என்று யாரும் சட்டம் போட முடியாது. சென்ட் போடுவது தவறு என்று பைபிளும் சொல்வதில்லை. இருந்தாலும், சென்ட் வாசனை ஒத்துக்காதவர்களுடைய கஷ்டத்தை சபையில் இருக்கிறவர்களுக்கு மூப்பர்கள் புரிய வைக்கலாம். தேவைப்பட்டால், இது சம்பந்தமாக நம்முடைய பத்திரிகைகளில் வந்த விஷயங்களை சபை தேவைகள் பகுதியில் சொல்லலாம். இல்லையென்றால், இதைப் பற்றி சாதுரியமாக ஒரு அறிவிப்பு செய்யலாம். * (அடிக்குறிப்பை பாருங்கள்.) அதற்காக சபை மூப்பர்கள், இதைப் பற்றி திரும்பத் திரும்ப அறிவிப்பு செய்துகொண்டே இருக்கக் கூடாது. அதுமட்டும் இல்லாமல், கூட்டங்களுக்கு நிறையப் பேர் புதிதாக வரலாம். சபையில் சிலருக்கு சென்ட் வாசனை ஒத்துக்கொள்ளாது என்று அவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம். அவர்களில் யாராவது சென்ட் போட்டுகொண்டு வந்தால் அவர்கள் மனம் கஷ்டப்படுகிற மாதிரி நாம் எதையும் சொல்லிவிடக் கூடாது. அளவாக சென்ட் போட்டுகொண்டு வருகிறவர்கள் தர்மசங்கடமாக உணரும் விதத்திலும் நாம் நடந்துகொள்ளக் கூடாது.
சென்ட் வாசனை ஒத்துக்காதவர்களை, முடிந்தால் ராஜ்ய மன்றத்திலேயே தனியாக ஒரு இடத்தில் உட்கார வைக்க மூப்பர் குழு ஏற்பாடு செய்யலாம். உதாரணத்திற்கு, ராஜ்ய மன்றத்தில் தனியாக ஒரு ரூம் இருந்தால் அங்கு உட்கார்ந்து கூட்டங்களை கேட்க சொல்லலாம். ஒருவேளை இது சரிவரவில்லை என்றால், சபை கூட்டங்களை ஆடியோ பதிவு செய்து அவர்களுக்கு தரலாம். இல்லையென்றால், வீட்டில் இருந்தே ஃபோன் மூலமாக சபை கூட்டங்களை கேட்க ஏற்பாடு செய்யலாம். (உடம்பு முடியாமல் இருக்கிற நிறையப் பேர்கூட ஃபோன் மூலமாகத்தான் கேட்கிறார்கள்.)
நம் அமைப்பு சில வருடங்களாகவே நம் ராஜ்ய ஊழியத்தில் மண்டல மாநாட்டு நினைப்பூட்டுதலில் இதைப் பற்றி சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ஏனென்றால் பெரும்பாலான மாநாடுகள், நாலாபக்கமும் மூடியிருக்கிற அரங்கத்தில் நடக்கின்றன. முக்கியமாக மண்டல மாநாடு நடக்கிற அரங்கத்தில் சென்ட் வாசனை ஒத்துக்காதவர்கள் உட்காருவதற்காக தனியாக ஒரு இடம் கிடையாது. அதனால், நாம்தான் இந்த விஷயத்தில் மற்றவர்களை புரிந்து நடக்க வேண்டும். சென்ட் போட விரும்புகிறவர்கள் அதை அளவாகப் போடுவது நல்லது. இருந்தாலும் இந்த ஆலோசனையை சபையில் யாரும் ஒரு சட்டமாக போட்டுவிடக் கூடாது.
ஆதாம் ஏவாள் பாவம் செய்ததால் இந்த மாதிரியான உடல்நல பிரச்சினைகளை நாம் எல்லாருமே அனுபவிக்க வேண்டியிருக்கிறது. இருந்தாலும், மற்றவர்கள் நம்முடைய கஷ்டத்தை புரிந்து நடக்கும்போது நமக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது! முக்கியமாக, நம் சகோதர சகோதரிகளுக்காக சென்ட் போடுவதை நிறுத்துவது ஒரு பெரிய தியாகம்தான். ஆனால், மற்றவர்கள்மீது அன்பு இருப்பதால் இந்த தியாகத்தை செய்ய நாம் தயாராக இருக்கிறோம் இல்லையா?
பொந்தியு பிலாத்து வாழ்ந்தார் என்பதற்கு பைபிளைத் தவிர வேறு ஆதாரங்கள் இருக்கிறதா?
இயேசுவை விசாரணை செய்து மரண தண்டனை கொடுத்தது பொந்தியு பிலாத்து. அதனால், பைபிளைப் படிக்கிறவர்களுக்கு அவர் யாரென்று நன்றாகத் தெரியும். (மத். 27:1, 2, 24-26) பைபிளில் மட்டுமல்ல, நிறைய சரித்திர பதிவுகளிலும் அவரைப் பற்றி சொல்லி இருக்கிறது. சரித்திர புத்தகங்களில், “யூதேயாவை ஆட்சி செய்த ஆளுநர்களிலேயே இந்த ஆளுநரை [பொந்தியு பிலாத்துவை] பற்றித்தான் நிறைய தகவல்கள்” இருக்கிறது என்று தி ஆன்கர் பைபிள் டிக்ஷ்னரி (The Anchor Bible Dictionary) சொல்கிறது.
பிலாத்துவின் பெயர், யூத சரித்திராசிரியர் ஜொஸிஃபஸ் எழுதிய புத்தகங்களில் அடிக்கடி வருகிறது. பிலாத்து, யூதேயாவில் ஆளுநராக இருந்தபோது அவருக்கு வந்த மூன்று முக்கியமான பிரச்சினைகளைப் பற்றி ஜொஸிஃபஸ் எழுதியிருக்கிறார். அவருக்கு வந்த நாலாவது பிரச்சினையைப் பற்றி யூத சரித்திராசிரியர் ஃபிலோ எழுதி இருக்கிறார். திபேரியு ராஜா ஆட்சி செய்த காலத்தில், இயேசுவிற்கு மரண தண்டனை கொடுத்தது பொந்தியு பிலாத்துதான் என்று ரோம எழுத்தாளரான டாசிட்டஸ் (ரோம பேரரசர்களுடைய சரித்திரத்தைப் பற்றி எழுதியவர்) உறுதிப்படுத்தி இருக்கிறார்.
1961-ல், இஸ்ரேலில் இருந்த செசரியாவில் ஒரு பழமையான ரோம அரங்கத்தில் புதைப்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஒரு கல்வெட்டை கண்டுபிடித்தார்கள். அதில், பிலாத்துவின் பெயர் லத்தீன் மொழியில் எழுதப்பட்டு இருந்தது. அந்த கல்வெட்டைத்தான் இந்தப் படத்தில் நாம் பார்க்கிறோம். அந்த கல்வெட்டு உடைந்திருப்பதால் அதில் இருக்கிற சில வார்த்தைகள் சரியாகத் தெரியவில்லை. ஆனாலும் அதில் இப்படி இருந்திருக்கலாம் என்று சொல்கிறார்கள்: “மதிப்புமிக்க கடவுட்களுக்கு (இந்த) திபேரிய கட்டிடத்தை, யூதேயாவின் ஆளுநர் பொந்தியு பிலாத்து அர்ப்பணித்தார்.” இதில் சொல்லி இருக்கிற கட்டிடம், ரோம் மாகாணத்தை ஆட்சி செய்த பேரரசன் திபேரியுவிற்காக கட்டப்பட்ட கோயிலாக இருக்கலாம்.
ஒரு சகோதரி பைபிள் படிப்பு எடுக்கும்போது, ஞானஸ்நானம் எடுக்காத ஒரு சகோதரர் அங்கு இருந்தால் அவர் முக்காடு போட வேண்டுமா?
ஒரு சகோதரி பைபிள் படிப்பு எடுக்கும்போது ஞானஸ்நானம் எடுத்த, இல்லையென்றால் ஞானஸ்நானம் எடுக்காத ஒரு சகோதரர் அங்கு இருந்தால் அவர் முக்காடு போட வேண்டுமென்று, ஜுலை 15, 2002 காவற்கோபுரத்தில் (“வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்”) சொல்லப்பட்டிருந்தது. ஆனால், இதைப் பற்றி இன்னும் அதிகமாக சிந்தித்துப் பார்த்தபோது இதில் ஒரு மாற்றம் தேவை என்பது தெரிகிறது.
ஒரு சகோதரி பைபிள் படிப்பு எடுக்கும்போது, ஞானஸ்நானம் எடுத்த ஒரு சகோதரர் அங்கு இருந்தால் அவர் முக்காடு போட வேண்டும். அப்போதுதான், யெகோவா ஏற்பாடு செய்திருக்கிற தலைமை ஸ்தானத்திற்கு அவர் மதிப்பு கொடுக்கிறார் என்று அர்த்தம். (1 கொ. 11: 5, 6, 10) சபையில் தலைமை தாங்கி நடத்துகிற பொறுப்பையும், கற்பிக்கிற வேலையையும் சகோதரர்களுக்குத்தான் யெகோவா கொடுத்திருக்கிறார். பைபிள் படிப்பு எடுக்கும்போது, ஒரு சகோதரர் செய்ய வேண்டிய கற்பிக்கிற வேலையை அந்த சகோதரி செய்வதால், அவர் முக்காடு போட வேண்டும். ஒருவேளை, அந்த சகோதரரால் பைபிள் படிப்பு நடத்த முடியும் என்றால், அந்த சகோதரி அவரையே நடத்த சொல்லலாம்.
ஆனால், ஒரு சகோதரி பைபிள் படிப்பு எடுக்கும்போது, அவருடைய கணவரைத் தவிர, ஞானஸ்நானம் எடுக்காத வேறு ஒரு சகோதரர் அங்கு இருந்தால், பைபிளின்படி அவர் முக்காடு போட வேண்டிய அவசியமில்லை. ஒருவேளை, முக்காடு போட வேண்டுமென்று அவர் மனசாட்சி சொன்னால் அப்போது அவர் முக்காடு போட்டுக்கொள்ளலாம்.
^ பாரா. 2 விழித்தெழு! ஆகஸ்ட் 8, 2000, பக்கம் 8-10-ல் உள்ள “வியாதிப்பட்டோருக்கு உதவி” என்ற கட்டுரையைப் பாருங்கள்.