தங்களையே மனப்பூர்வமாய் அர்ப்பணித்தார்கள்—ரஷ்யாவில்
ரஷ்யாவில், யெகோவாவின் சாட்சிகளுடைய வேலை பல வருடங்களாகத் தடை செய்யப்பட்டு இருந்தது. 1991-ல் ரஷ்ய அரசாங்கம், அந்தத் தடையை நீக்கி சட்டப்பூர்வ அங்கீகாரத்தைக் கொடுத்தது. நம் சகோதர சகோதரிகள் அன்று அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை! யெகோவாவின் சாட்சிகளுடைய எண்ணிக்கை 10 மடங்காக அதிகரிக்கும் என்று அப்போது யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள். இன்று, ரஷ்யாவில் கிட்டத்தட்ட 1,70,000 சாட்சிகள் இருக்கிறார்கள். இவர்களில் நிறைய பேர், தேவை அதிகமுள்ள இடங்களில் ஊழியம் செய்வதற்காக ரஷ்யாவுக்கு மாறி வந்தவர்கள். (மத். 9:37, 38) இவர்களைப் பற்றிதான் இப்போது தெரிந்துகொள்ளப் போகிறோம்.
சபைக்கு உதவும் சகோதரர்கள்
1991-ல், ரஷ்யாவில் தடை நீக்கப்பட்டபோது கிரேட் பிரிட்டனை சேர்ந்த மேத்யூவுக்கு 28 வயது. அந்த வருஷம் நடந்த மாநாட்டில் அவர் ஒரு பேச்சைக் கேட்டார். அதில், கிழக்கு ஐரோப்பாவில் உள்ள சபைகளுக்கு உதவி தேவைப்படுகிறது என்று அந்தப் பேச்சாளர் சொன்னார். ரஷ்யாவில் இருக்கும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள ஒரு சபையில் மூப்பர்களே இல்லை என்றும் ஒரே ஒரு உதவி ஊழியர்தான் இருக்கிறார் என்றும் அவர் சொன்னார். இருந்தாலும் அங்கு இருக்கும் யெகோவாவின் சாட்சிகள் நூற்றுக்கணக்கான பைபிள் படிப்புகளை நடத்துவதாக சொன்னார். மேத்யூ சொல்கிறார், “அந்த பேச்சை கேட்டதுக்கு அப்புறம், உடனே ரஷ்யாவுக்கு மாறிப் போகணும்னு முடிவு எடுத்தேன். ரஷ்யாவுக்கு மாறிப் போகணுங்கிற என்னோட ஆசையை பத்தி யெகோவாகிட்ட சொன்னேன்.” அதற்காக, மேத்யூ கொஞ்சம் பணம் சேமித்தார், சொல்லப்போனால் அவரிடமிருந்த எல்லாவற்றையும் விற்றார், பிறகு 1992-ல் ரஷ்யாவுக்கு மாறிப் போனார்.
“மொழிதான் எனக்கு ஒரு பெரிய பிரச்சனையா இருந்தது. அதனால, கடவுளை பத்தியும் பைபிளை பத்தியும் மத்தவங்ககிட்ட பேசுறது எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது” என்று மேத்யூ சொல்கிறார். தங்க இடம் கிடைப்பதும் அவருக்கு கஷ்டமாக இருந்தது. “அடிக்கடி வீடு மாற வேண்டியிருந்தது. எத்தனை தடவை வீட்டை மாத்துனேனு எனக்கு ஞாபகம்கூட இல்ல” என்கிறார் மேத்யூ. ஆரம்பத்தில் சில கஷ்டங்கள் இருந்தாலும், “நான் எடுத்த தீர்மானத்திலேயே ரொம்ப நல்ல தீர்மானம், ரஷ்யாவுக்கு மாறி வந்ததுதான். இங்க சேவை செய்றதுனால யெகோவாவையே அதிகமா நம்பியிருக்க கத்துக்கிட்டேன். அவர் என்னை நிறைய விஷயங்கள்ல வழிநடத்துறார்னும் புரிஞ்சுக்கிட்டேன்” என்று அவர் சொல்கிறார். பிறகு மேத்யூ, ஒரு மூப்பராகவும் விசேஷ பயனியராகவும் நியமிக்கப்பட்டார். இப்போது செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பக்கத்திலுள்ள கிளை அலுவலகத்தில் சேவை செய்கிறார்.
1999-ல், ஜப்பானை சேர்ந்த ஹிரோ என்ற சகோதரர் ஊழியப் பயிற்சி பள்ளியில் பட்டம் பெற்றார். அப்போது, அவருக்கு
25 வயது. அந்தப் பள்ளியின் போதனையாளர் ஒருவர், தேவை அதிகமுள்ள இடத்துக்குப் போய் ஊழியம் செய்ய சொல்லி அவரை உற்சாகப்படுத்தினார். ரஷ்யாவில் தேவை அதிகம் இருந்ததால், ஹிரோ ரஷ்ய மொழியைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். அவர் இன்னொரு விஷயத்தையும் செய்தார். அவர் சொல்கிறார், “நான் ரஷ்யாவுக்கு போய் 6 மாசம் தங்குனேன். பனிக்காலத்துல அங்க ரொம்ப குளிரா இருக்கும். அதனால, அதை தாக்குப்பிடிக்க முடியுமானு தெரிஞ்சுக்க நவம்பர் மாசத்துல அங்க போனேன்.” அந்தப் பனிக்காலம் முடிந்த பிறகு, ஹிரோ ஜப்பானுக்குத் திரும்பி வந்தார். இந்த முறை ரஷ்யாவிலேயே போய் தங்க பணம் சேமித்தார், அதற்காக எளிமையாக வாழ்ந்தார்.ஹிரோ ரஷ்யாவுக்குப் போய் 12 வருடங்கள் ஆகிவிட்டன. அவர் அங்கிருக்கும் நிறைய சபைகளில் சேவை செய்திருக்கிறார். சில சமயங்களில், 100 பிரஸ்தாபிகள் இருக்கிற சபையில் இவர் மட்டும்தான் மூப்பராக இருந்தார். ஒரு சபையில், ஒவ்வொரு வாரமும் இவரே தேவராஜ்ய ஊழியப் பள்ளி... காவற்கோபுர படிப்பு... 5 சபை புத்தக படிப்பு... ஊழியக் கூட்டத்தில் இருக்கிற பெரும்பாலான பகுதிகளையும் நடத்த வேண்டியிருந்தது. அதோடு, நிறைய மேய்ப்பு சந்திப்புகளையும் செய்ய வேண்டியிருந்தது. ‘சகோதர சகோதரிகள் யெகோவாகிட்ட நெருங்கி போறதுக்கும் விசுவாசத்துல உறுதியா இருக்குறதுக்கும் உதவி செஞ்சதை நினைச்சு எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. ரஷ்யாவுக்கு போறதுக்கு முன்னாடி நான் ஒரு மூப்பராவும் பயனியராவும் இருந்தேன். ஆனா, இங்க வந்ததுக்கு அப்புறம்தான் யெகோவாவோடு ஒரு புது பந்தம் ஏற்பட்டது போல உணர்றேன். எல்லா சமயத்துலயும் யெகோவாவையே அதிகமா நம்பி இருக்கணும்னு கத்துக்கிட்டேன்’ என்று ஹிரோ சொல்கிறார். 2005-ல், ஸ்வெட்லானா என்ற சகோதரியை அவர் கல்யாணம் செய்தார். இப்போது, இவர்கள் 2 பேரும் பயனியர்களாக சேவை செய்கிறார்கள்.
மேத்யூவுக்கு 34 வயது. அவருடைய தம்பி மைக்கேலுக்கு 28 வயது. இவர்கள் கனடாவை சேர்ந்தவர்கள். இவர்கள் ரஷ்யாவுக்கு போனபோது, ஆர்வமுள்ள நிறைய பேர் சபை கூட்டங்களில் கலந்துகொண்டதைப் பார்த்து ரொம்பவே சந்தோஷப்பட்டார்கள். ஆனால், அவர்களை வழிநடத்த ஒரு சில சகோதரர்கள் மட்டுமே இருந்தார்கள். “நான் போன சபைக்கு 200 பேர் வந்திருந்தாங்க. ஆனா, அங்க நடந்த எல்லா கூட்டத்தையும் ஒரு வயசான மூப்பரும் ஒரு இளம் உதவி ஊழியரும்தான் நடத்துனாங்க. இதையெல்லாம் பார்த்தது, அங்க உடனே போய் அந்த சகோதரர்களுக்கு உதவி செய்யணும்னு என்னை தூண்டுச்சு” என்று சொல்கிறார் மேத்யூ. பிறகு, அவர் 2002-ல் ரஷ்யாவுக்கு மாறிப் போனார்.
நான்கு வருடங்களுக்குப் பிறகு, மைக்கேலும் ரஷ்யாவுக்கு மாறிப் போனார். அங்கு சேவை செய்ய நிறைய சகோதரர்கள் தேவை என்பதைப் புரிந்துகொண்டார். ஒரு உதவி ஊழியராக சபையின் கணக்குகளையும்... ஊழியம் செய்யும் இடங்களையும்... பிரசுர இலாகாவையும்... சபை செயலர் செய்ய வேண்டிய வேலைகளையும் அவரே செய்ய வேண்டியிருந்தது. அதோடு, பொதுப் பேச்சு கொடுப்பது, மாநாடுகள் சம்பந்தப்பட்ட ஏற்பாடுகளைச் செய்வது, ராஜ்ய மன்றங்களைக் கட்டுவது போன்ற வேலைகளையும் மைக்கேல் கவனித்துக்கொள்ள வேண்டியிருந்தது. இன்றும்கூட, அந்த சபைகளுக்கு நிறைய உதவிகள் தேவைப்படுகின்றன. இப்போது, மைக்கேல் ஒரு மூப்பராக சேவை செய்கிறார்; கடினமாக உழைக்கிறார். “அந்த சகோதரர்களுக்கு உதவி செய்றது என் மனசுக்கு ரொம்ப திருப்தியா இருக்கு. இதுதான் என் வாழ்க்கையில நான் செய்ற மிகச் சிறந்த வேலை” என்று அவர் சொல்கிறார்.
மரீனா என்ற சகோதரியை மேத்யூவும், ஓல்கா என்ற சகோதரியை மைக்கேலும் கல்யாணம் செய்துகொண்டார்கள். இவர்கள் 4 பேரும் ஆர்வமுள்ள மற்ற சகோதர சகோதரிகளோடு சேர்ந்து, வளர்ந்துவரும் சபைகளில் தொடர்ந்து சேவை செய்கிறார்கள்.
சுறுசுறுப்பாக சேவை செய்யும் சகோதரிகள்
1994-ல், உக்ரைனை சேர்ந்த டாட்யானா என்ற சகோதரிக்கு 16 வயது. செக் குடியரசு, போலந்து, ஸ்லோவாக்யா போன்ற நாடுகளிலிருந்து 6 விசேஷ பயனியர்கள் உக்ரைனுக்கு சேவை செய்ய வந்தார்கள். இந்த சகோதர சகோதரிகள் சுறுசுறுப்பாக ஊழியம் செய்வதற்காக நிறைய தியாகங்கள் செய்திருந்தார்கள். யெகோவா அவர்களை ரொம்பவே ஆசீர்வதித்திருந்தார். “அவங்க சுறுசுறுப்பா ஊழியம் செஞ்சாங்க. நல்லா பேசி பழகுனாங்க, ரொம்ப பாசமா இருந்தாங்க. அவங்களுக்கு பைபிள் விஷயங்களும் நல்லா தெரிஞ்சிருந்தது. நானும் அவங்கள போலவே இருக்கணும்னு ஆசைப்பட்டேன்” என்று டாட்யானா சொல்கிறார்.
அந்தப் பயனியர்களைப் பார்த்து டாட்யானாவும் சுறுசுறுப்பாக ஊழியம் செய்ய ஆரம்பித்தார். அவருடைய பள்ளி விடுமுறையில் உக்ரைன், பெலாரூசில் இருக்கும் ஊழியமே செய்யப்படாத இடங்களுக்கு மற்ற சகோதர சகோதரிகளோடு போனார். அப்படிப் பயணம் செய்தது அவருக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. பிறகு, ஊழியம் செய்வதற்காக ரஷ்யாவுக்கு மாறிப் போக முடிவு செய்தார். முதலில், பயனியர் செய்வதற்கு
ஏற்ற மாதிரி ஒரு வேலையைத் தேடவும் ரஷ்யாவுக்கு மாறிப் போன ஒரு சகோதரியைப் பார்க்கவும் டாட்யானா ரஷ்யாவுக்குப் போனார். அங்கு சில நாட்கள் தங்கினார். பிறகு 2000-ல், ரஷ்யாவுக்கே மாறிப் போனார்.“ஒரு வீட்டை வாடகைக்கு எடுக்குற அளவுக்கு எனக்கு வசதியில்ல. அதனால, ஒரு ரூமை வாடகைக்கு எடுத்து தங்குனேன். அது எனக்கு ரொம்ப கஷ்டமாதான் இருந்தது. திரும்பி வீட்டுக்கே போயிடலாம்னு நிறைய தடவை யோசிச்சிருக்கேன். ஆனா, பயனியர் ஊழியத்தை தொடர்ந்து செய்றதுனால நிறைய பயன் இருக்குங்கிறத யெகோவா எனக்கு புரிய வைச்சார். சொந்த நாட்டை விட்டுட்டு, இத்தனை வருஷம் ரஷ்யாவுல இருந்ததுல எனக்கு நிறைய நண்பர்கள் கிடைச்சிருக்காங்க. அதோடு, நிறைய நல்ல நல்ல அனுபவங்களும் கிடைச்சிருக்கு. எல்லாத்துக்கும் மேல, என்னோட விசுவாசமும் பலப்பட்டிருக்கு” என்று டாட்யானா சொல்கிறார். இவர் இப்போது, ரஷ்யாவில் ஒரு மிஷனரியாக சேவை செய்கிறார்.
ஜப்பானை சேர்ந்த மசாக்கோ என்ற சகோதரிக்கு 50 வயதுக்கு மேல் ஆகிவிட்டது. அவருடைய ரொம்ப நாள் ஆசையே, ஒரு மிஷனரியாக சேவை செய்ய வேண்டும் என்பதுதான். ஆனால், அவருடைய உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் அவருடைய ஆசை நிறைவேறவே இல்லை. இருந்தாலும், உடல்நிலை கொஞ்சம் சரியான பிறகு, அவர் ரஷ்யாவுக்கு போய் ஊழியம் செய்ய முடிவு செய்தார். தங்க ஒரு நல்ல இடமும் நிரந்தரமான ஒரு வேலையும் கிடைப்பது ரொம்ப கஷ்டமாக இருந்தது. இருந்தாலும், தன்னை கவனித்துக்கொள்வதற்கும் பயனியர் சேவை செய்வதற்கும் ஏற்ற சில வேலைகளை செய்தார். ஜப்பானிய மொழியைக் கற்றுக்கொடுத்தார், சுத்தம் செய்யும் சில வேலைகளையும் செய்தார். பயனியர் ஊழியத்தைத் தொடர்ந்து செய்ய மசாக்கோவுக்கு எது உதவியது?
“ஊழியத்துல கிடைக்கிற சந்தோஷத்துனால எனக்கு எந்த கஷ்டமும் பெரிசாவே தெரியல. இப்படி தேவை அதிகம் இருக்கிற இடங்கள்ல சேவை செய்றது ரொம்ப சந்தோஷமா இருக்கு. புது தெம்பு கிடைச்சதுபோல இருக்கு. சாப்பிட உணவு, போட்டுக்க துணிமணி, இருக்க இடம்னு எல்லாத்தையும் யெகோவாதான் கொடுக்குறார்னு என்னால புரிஞ்சுக்க முடியுது. இதெல்லாம் பார்க்குறப்போ எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு” என்று சொல்கிறார் ரஷ்யாவில் 14 வருடங்கள் சேவை செய்த மசாக்கோ. ரஷ்யாவில் மட்டுமல்ல, கிர்கிஸ்தான் நாட்டிலும் ஆங்கிலம், சைனீஸ், உய்கூர் மொழி தொகுதிகளிலும் அவர் சேவை செய்திருக்கிறார். இப்போது, செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் ஒரு பயனியராக சேவை செய்கிறார்.
கைகொடுக்கும் குடும்பத்தினர்
மக்கள் பொதுவாக, பணம் சம்பாதிக்கவும் பொருள் சேர்க்கவும்தான் மற்ற நாடுகளுக்கு மாறிப் போவார்கள். ஆனால் சில குடும்பங்கள், ஆபிரகாம்-சாராளைப் போல கடவுளுக்காக ஆதி. 12:1-9) மிக்காயேல்-இங்கா என்ற தம்பதி 2003-ல் உக்ரைனிலிருந்து ரஷ்யாவுக்கு மாறிப் போனார்கள். பைபிளில் ஆர்வம் இருக்கிற நிறைய பேரை அவர்கள் அங்கு கண்டுபிடித்தார்கள்.
மற்ற நாடுகளுக்கு மாறிப் போகிறார்கள். (“ஒரு சமயம், யாருமே ஊழியம் செய்யாத ஒரு இடத்துக்கு நாங்க போனோம். அப்போ, ஒரு வயசானவர் கதவை திறந்தார். ‘நீங்க ஊழியம் செய்றதுக்காக வந்திருக்கீங்களா?’னு கேட்டார். நாங்க ‘ஆமா’னு சொன்னோம். உடனே அவர், ‘நீங்க என்னைக்காவது ஒரு நாள் வருவீங்கனு எனக்கு தெரியும். இயேசு சொன்ன வார்த்தைகள் நிறைவேறாம போகாது’னு சொல்லிட்டு மத்தேயு 24:14-ல் இருக்கிற வசனத்தை சொன்னார். அந்த ஊர்ல, பாப்டிஸ்ட் சர்ச்சை சேர்ந்த 10 பெண்களையும் சந்திச்சோம். பைபிள்ல இருக்கிற விஷயங்களை தெரிஞ்சிக்க அவங்க ரொம்ப ஆர்வமா இருந்தாங்க. என்றும் வாழலாம் புத்தகம் அவங்ககிட்ட இருந்தது. அதை வைச்சுதான் அவங்க ஒவ்வொரு வார கடைசியிலும் பைபிளை படிப்பாங்களாம். அவங்க ரொம்ப நேரம் எங்ககிட்ட கேள்வி கேட்டுட்டு இருந்தாங்க. அவங்க கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் நாங்க பதில் சொன்னோம். அவங்களோடு ராஜ்ய பாடல்கள் பாடுனோம். பிறகு, எல்லாரும் சேர்ந்து சாப்பிட்டோம். இதை எல்லாம் என்னால மறக்கவே முடியாது” என்று சொல்கிறார் மிக்காயேல். தேவை அதிகமுள்ள இடங்களில் சேவை செய்வது யெகோவாவிடம் நெருங்கி போகவும், மக்கள்மீது இருக்கும் அன்பை அதிகரிக்கவும், திருப்தியான வாழ்க்கை வாழவும் உதவியிருப்பதாக மிக்காயேல்-இங்கா தம்பதி சொல்கிறார்கள். இப்போது, மிக்காயேல் ஒரு வட்டாரக் கண்காணியாக சேவை செய்கிறார்.
உக்ரைனை சேர்ந்த யூரி-ஓக்சனா என்ற தம்பதிக்கு 30 வயதுக்கு மேல் ஆகிவிட்டது. அவர்களுடைய மகன் அலெக்சேக்கு இப்போது 13 வயது. இவர்கள் 3 பேரும் 2007-ல், ரஷ்யாவில் இருக்கும் கிளை அலுவலகத்தை சுற்றிப் பார்க்க போனார்கள். ரஷ்யாவில், ஊழியம் செய்யப்படாத நிறைய இடங்கள் இருப்பதை அங்கு இருந்த வரைபடத்தில் (map) பார்த்தார்கள். “அதை பார்த்ததுக்கு அப்புறம் அங்க ஊழியம் செய்றதுக்கு நிறைய ஆட்கள் தேவைனு புரிஞ்சுக்கிட்டோம். ரஷ்யாவுக்கு மாறி போக முடிவு செஞ்சோம்” என்று சொல்கிறார் ஓக்சனா. அவர்கள் வேறு என்ன செய்தார்கள்? “‘அயல் நாட்டில் உங்களால் ஊழியம் செய்ய முடியுமா?’ போன்ற கட்டுரைகளை நம்ம பிரசுரங்கள்ல வாசிச்சோம். * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) ரஷ்யாவுல போய் ஊழியம் செய்றதுக்கு, அங்கு இருக்கிற கிளை அலுவலகம் ஒரு இடத்தை சிபாரிசு செஞ்சாங்க. அவங்க சொன்ன இடத்துல எங்களுக்கு ஒரு வீடு பார்க்குறதுக்காகவும் அப்படியே வேலை தேடுறதுக்காகவும் அங்க போனோம்” என்கிறார் யூரி. பிறகு, 2008-ல் அவர்கள் ரஷ்யாவுக்கு மாறிப் போனார்கள்.
அவர்களுக்குக் வேலை கிடைப்பது ஆரம்பத்தில் கஷ்டமாகத்தான் இருந்தது. அதோடு, நிறைய தடவை அவர்கள் வீட்டையும் காலி செய்ய வேண்டியிருந்தது. “நாங்க சோர்ந்துபோயிட கூடாதுனு அடிக்கடி ஜெபம் செஞ்சோம். யெகோவா எங்களுக்கு உதவி செய்வார்னு நம்புனோம். தொடர்ந்து ஊழியம் செஞ்சோம். இப்படி, கடவுளுடைய அரசாங்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு நாங்க முதலிடம் கொடுத்ததுனால யெகோவா எங்களை நல்லா கவனிச்சுக்கிட்டார். குடும்பமா நாங்க யெகோவாகிட்ட நெருங்கி போறதுக்கும் எங்களுக்குள்ள இருக்கிற பந்தத்தை பலப்படுத்துறதுக்கும் இது உதவியா இருந்தது” என்று சொல்கிறார் யூரி. (மத். 6:22, 33) தேவை அதிகமுள்ள இடத்தில் சேவை செய்வது அலெக்சேக்கு எப்படி இருந்தது? “அவனுக்கு நிறைய நன்மை கிடைச்சிருக்கு. தன்னோட 9 வயசுலயே யெகோவாவுக்கு தன்னை அர்ப்பணித்து அவன் ஞானஸ்நானம் எடுத்திருக்கான். ஊழியம் செய்ய நிறைய ஆட்கள் தேவைப்படுறதுனால, பள்ளி விடுமுறை சமயத்தில அவன் துணை பயனியர் ஊழியம் செய்றான். அவனுக்கு யெகோவா மேல இருக்கிற அன்பையும் ஊழியத்துல இருக்கிற ஆர்வத்தையும் பார்க்கும்போது எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்று சொல்கிறார் ஓக்சனா. இப்போது, யூரி-ஓக்சனா தம்பதி விசேஷ பயனியர்களாக சேவை செய்கிறார்கள்.
“என்னோட ஒரே வருத்தம்”
இவர்கள் எல்லாரும் சொல்வது போல, தேவை அதிகமுள்ள இடங்களுக்கு மாறிப் போக நாம் யெகோவாவையே முழுமையாக நம்ப வேண்டும். புது இடங்களில் இவர்களுக்கு என்ன கஷ்டம் வந்தாலும், மற்றவர்கள் நற்செய்தியைக் காதுகொடுத்து கேட்கும்போது அவர்கள் அளவில்லா சந்தோஷமடைகிறார்கள். தேவை அதிகமுள்ள இடங்களுக்கு போய் உங்களால் ஊழியம் செய்ய முடியுமா? முடியும் என்றால், நீங்களும் யூரி சொன்னது போல் சொல்வீர்கள்: “என்னோட ஒரே வருத்தம், இதை முன்னாடியே செய்யாம போயிட்டேனே என்பதுதான்!”
^ பாரா. 20 அக்டோபர் 15, 1999 காவற்கோபுரம் பக்கங்கள் 23-27-ஐ பாருங்கள்.