கடவுளுடைய ராஜ்யம் உங்கள் இருதயத்தில் இருக்கிறதா?
வாசகரின் கேள்வி
கடவுளுடைய ராஜ்யம் உங்கள் இருதயத்தில் இருக்கிறதா?
ஆம், என்பதே இக்கேள்விக்கு விடை என்று இன்று அநேகர் நம்புகிறார்கள். உதாரணமாக, “கடவுளுடைய ராஜ்யம் என்பது . . . நம் இருதயங்களில் கடவுள் செலுத்தும் ஆட்சியே” என்று த கேத்தலிக் என்ஸைக்ளோப்பீடியா ஆணித்தரமாகச் சொல்கிறது. பொதுவாக மத குருமாரும் இதைத்தான் கற்பிக்கிறார்கள். கடவுளுடைய ராஜ்யம் மனிதருடைய இருதயத்தில் இருப்பதாக பைபிள் உண்மையிலேயே கற்பிக்கிறதா?
சொல்லப்போனால், கடவுளுடைய ராஜ்யம் மனிதருடைய இருதயத்தில் இருக்கிறது என்ற கருத்தை முதன்முதலில் தோற்றுவித்தவர் இயேசுவே என்பதாகச் சிலர் நினைக்கிறார்கள். “[கடவுளுடைய ராஜ்யம்] இதோ! உங்களிடையே உள்ளது” என்று இயேசு சொன்னது மெய்தான். (லூக்கா 17:21, கத்தோலிக்க பைபிள்) சில மொழிபெயர்ப்புகள் இந்த வசனத்தை, “கடவுளுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறது” என மொழிபெயர்த்திருக்கின்றன. இவை இயேசு சொன்னதைத் திருத்தமாக மொழிபெயர்த்திருக்கின்றனவா? கடவுளுடைய ராஜ்யம் மனிதரின் இருதயத்தில் இருக்கிறது என்ற அர்த்தத்தில்தான் அவர் சொன்னாரா?
மனித இருதயத்தைக் குறித்து நாம் முதலில் சிந்திக்கலாம். அடையாள அர்த்தமுள்ள இருதயத்தைப்பற்றி பைபிள் குறிப்பிடுகையில், ஒருவருடைய மனதின் ஆழத்தையே அதாவது, அவருடைய எண்ணங்கள், மனப்பான்மைகள், உணர்ச்சிகள் ஆகியவற்றின் இருப்பிடத்தையே அது அர்த்தப்படுத்துகிறது. கடவுளுடைய ராஜ்யத்தைப் போன்ற மேன்மையான ஒன்று மனிதரின் இருதயத்தில் இருக்கிறது என்ற கருத்து கேட்பதற்கு இனிமையாக இருக்கலாம்; உதாரணமாக, அது ஆட்களை அடியோடு மாற்றி அவர்களை மதிப்புமிக்கவர்களாக ஆக்குகிறது என்ற கருத்து கேட்பதற்கு இனிமையாக இருக்கலாம். ஆனால், இது நம்பத்தக்க கருத்துதானா?
பைபிள் நமக்கு இவ்வாறு சொல்கிறது: “எல்லாவற்றைப் பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்?” (எரேமியா 17:9) இயேசுவும்கூட இவ்வாறு சொன்னார்: “மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும், களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும் . . . புறப்பட்டுவரும்.” (மாற்கு 7:20-22) சற்று சிந்தித்துப் பாருங்கள்: இந்த உலகத்தையே ஆட்டிப்படைக்கிற துன்பங்கள் அனைத்திற்கும் காரணம் மனிதருடைய பாவமுள்ள இருதயம்தானே? அப்படிப்பட்ட இருதயத்தில் கடவுளுடைய பரிபூரண ராஜ்யம் எப்படித் தோன்ற முடியும்? சொல்லப்போனால், முட்பூண்டுகளில் அத்திப்பழங்கள் உண்டாவது எப்படிச் சாத்தியமில்லையோ அப்படியே மனித இருதயத்தில் கடவுளுடைய ராஜ்யம் தோன்றுவதும் சாத்தியமில்லை.—மத்தேயு 7:16.
இரண்டாவதாக, லூக்கா 17:21-ல் பதிவு செய்யப்பட்டுள்ள வார்த்தைகளை இயேசு யாரிடம் பேசிக்கொண்டிருந்தார் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். ‘தேவனுடைய ராஜ்யம் எப்பொழுது வருமென்று, பரிசேயர் அவரிடத்தில் கேட்டபொழுது, அவர்களுக்கு அவர் பிரதியுத்தரம் சொன்னார்’ என்பதாக அதற்கு முந்தைய வசனம் காட்டுகிறது. (லூக்கா 17:20) அந்தப் பரிசேயர் இயேசுவின் விரோதிகள். சொல்லப்போனால், மாய்மாலக்காரராகிய அவர்கள் கடவுளுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டார்கள் என இயேசு தெளிவாகவே சொன்னார். (மத்தேயு 23:13) கடவுளுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதற்கே தகுதியில்லாத அந்தப் பரிசேயர்களின் இருதயத்தில் அந்த ராஜ்யம் இருக்குமா? இருக்கவே இருக்காது! அப்படியானால், இயேசு சொன்ன வார்த்தைகளின் உண்மையான அர்த்தம் என்ன?
இயேசு சொன்ன இந்த வார்த்தைகளை பல பைபிள் மொழிபெயர்ப்புகள் கவனமாய் மொழிபெயர்த்துள்ளன; கத்தோலிக்க பைபிள் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. சில பைபிள்கள், கடவுளுடைய ராஜ்யம் “உங்கள் மத்தியில் உள்ளது” எனவும் மொழிபெயர்த்துள்ளன. பரிசேயர் உட்பட அங்கு கூடியிருந்த மக்களிடையே கடவுளுடைய ராஜ்யம் எப்படி இருந்திருக்க முடியும்? இதைக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்: இயேசுவைத்தான் அந்த ராஜ்யத்தின் அரசராக யெகோவா தேவன் நியமித்திருந்தார். வருங்கால அரசரான இயேசு அந்த மக்களின் நடுவில் இருந்தார். அவர், கடவுளுடைய ராஜ்யத்தைப்பற்றி கற்பித்தார், அநேக அற்புதங்களையும் செய்தார். இவ்விதமாக, அந்த ராஜ்யம் எதையெல்லாம் சாதிக்கும் என்பதை முன்கூட்டியே செய்து காட்டினார். அப்படியானால், அந்த ராஜ்யம் அவர்களிடையே இருந்தது என்று சரியாகவே சொல்லலாம்.
ஆகவே, கடவுளுடைய ராஜ்யம் மனிதரின் இருதயத்தில் இருக்கிறது என்ற கருத்திற்கு பைபிளில் எந்த ஆதாரமும் இல்லை என்பது இதிலிருந்து தெளிவாகிறது. அதே சமயத்தில், இந்த ராஜ்யம் ஒரு நிஜ அரசாங்கமாகும்; தீர்க்கதரிசிகள் முன்னறிவித்த விதமாக, இந்த அரசாங்கம் பூமியில் மிகப் பெரிய மாற்றங்களை நிகழ்த்தப் போவது நூற்றுக்கு நூறு உண்மை.—ஏசாயா 9:6, 7; தானியேல் 2:44. (w08 1/1)