“அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்ல”
கடவுளிடம் நெருங்கி வாருங்கள்
“அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்ல”
பரந்து விரிந்த இந்தப் பிரபஞ்சத்தோடு ஒப்பிட மனிதர்கள் வெறும் தூசியே. அதனால் ஒருவேளை நீங்கள் இப்படி யோசிக்கலாம்: ‘சகலத்தையும் படைத்த மகா வல்லமையுள்ள கடவுளோடு மனிதர்களால் நெருக்கமான பந்தத்தை அனுபவிக்க முடியுமா?’ கடவுளாகிய யெகோவா விரும்பினால் மட்டுமே நாம் அவரிடம் நெருங்கிவர முடியும். அப்படியென்றால், அவருக்கு விருப்பம் இருக்கிறதா? ஏதென்ஸ் நகரத்தில் இருந்த மேதைகளிடம் பவுல் பேசியபோது அவர் சொன்ன முத்தான வார்த்தைகள் அதற்கு பதில் அளிக்கின்றன. அவை அப்போஸ்தலர் 17:24–27-ல் பதிவாகியுள்ளன. அதில் யெகோவாவைக் குறித்து பவுல் சொல்லும் நான்கு விஷயங்களைக் கவனியுங்கள்.
முதலாவதாக பவுல் சொல்கிறார், ‘உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் கடவுள் உண்டாக்கினார்.’ (24-வது வசனம்) நம்மைப் பரவசப்படுத்தும் படைப்பின் அழகும் வித்தியாசமான ரகங்களும் நம் படைப்பாளரின் ஞானத்திற்கும் அன்பிற்கும் மௌன சாட்சியளிக்கின்றன. (ரோமர் 1:20) இப்படிப்பட்ட கடவுள் அவருக்குப் பிரியமானவர்களைவிட்டு ஒதுங்கி இருக்க விரும்புவார் என்று நினைப்பது சுத்த அபத்தமாக இருக்குமல்லவா?
இரண்டாவதாக, யெகோவா ‘எல்லாருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் சகலத்தையும் கொடுக்கிறார்.’ (25-வது வசனம்) யெகோவா உயிர் காப்பவர். (சங்கீதம் 36:9) உயிர் வாழ உறுதுணையாக இருக்கும் காற்று, தண்ணீர், உணவு ஆகியவை நம்முடைய படைப்பாளர் தந்த பரிசுகள். (யாக்கோபு 1:17) இப்படிப்பட்ட தாராள பிரபுவாக இருக்கும் நம்முடைய கடவுள், தம்மை தனிமைப்படுத்திக்கொள்வார் என்று சொல்வது சரியாக இருக்குமா? நாம் அவரைப் பற்றி அறிந்துகொள்வதையோ அவரிடம் நெருங்கிவருவதையோ அவர் விரும்புவதில்லை என்று சொல்வது நியாயமாக இருக்குமா?
மூன்றாவதாக, ‘மனுஷ ஜாதியான சகல ஜனங்களையும் கடவுள் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணினார்.’ (26-வது வசனம்) யெகோவா பாரபட்சம் பார்க்காதவர். ஓரவஞ்சனை அவரிடம் துளியுமில்லை. (அப்போஸ்தலர் 10:34) சொல்லப்போனால், அவரால் அப்படி நடந்துகொள்ளவே முடியாது. ஏனென்றால், ஆதாம் என்ற ஒரே மனிதனிலிருந்துதான் எல்லா மக்களினங்களும் தோன்றின. அதோடு, ‘எல்லா மனிதரும் காப்பாற்றப்பட’ வேண்டும் என்பதே அவருடைய சித்தம். (1 தீமோத்தேயு 2:4, NW) எனவே, அவரிடம் நெருக்கமான உறவை அனுபவிக்கும் வாய்ப்பு நம் அனைவருக்குமே இருக்கிறது. அதற்கு நிறம், இனம், தேசம் என்ற எதுவும் தடையில்லை.
கடைசியாக, நம்பிக்கையூட்டும் ஓர் உண்மையை பவுல் சொல்கிறார்: யெகோவா “நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே.” (27-வது வசனம்) அவர் மிக உயர்ந்த நிலையில் இருந்தாலும், அவரிடம் நெருங்கிவர விரும்பும் நல்மனம் படைத்தவர்கள் அவரை எப்போது வேண்டுமென்றாலும் அணுகமுடியும். “தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும்” தூரமாய் அல்ல, ஆனால் “சமீபமாயிருக்கிறார்” என பைபிள் நமக்கு உறுதியளிக்கிறது.—சங்கீதம் 145:18.
எனவே, நாம் கடவுளிடம் நெருங்கிய உறவை வளர்த்துக்கொள்ள வேண்டுமென அவர் விரும்புகிறார் என்பது பவுலுடைய வார்த்தையிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. என்றாலும், அவரைத் ‘தேடுகிறவர்களுக்கும்’ ‘தடவியாவது கண்டுபிடிக்க’ முயற்சி செய்கிறவர்களுக்கும் மட்டுமே கடவுள் இந்த வாய்ப்பை அளிப்பதாக பவுல் சொல்கிறார். (27-வது வசனம்) இதைக் குறித்து பைபிள் மொழிபெயர்ப்பாளர்களுக்கான ஓர் ஆராய்ச்சி புத்தகம் இவ்வாறு சொல்கிறது: தேடுவது மற்றும் தடவியாவது கண்டுபிடிப்பது என்ற “இந்த இரண்டு செயல்களுமே கிடைத்துவிடும் வாய்ப்பை ... அல்லது கிடைத்துவிடும் நம்பிக்கையைத் தெரிவிக்கின்றன.” உதாரணத்திற்கு, நீங்கள் ஓர் இருட்டறையில் இருப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். அந்த அறையில் உள்ள பொருள்கள் எல்லாம் உங்களுக்கு அத்துப்படி. ‘ஸ்விட்ச்’ அல்லது கதவு எங்கே இருக்கிறதென நீங்கள் ஒருவேளை தடவித் தடவி பார்த்து தேடினாலும் நிச்சயம் அதைக் கண்டுபிடித்துவிடுவீர்கள் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கும். அது போலவே, நாம் உண்மையில் கடவுளைத் தேடும்போதும் அவரைத் தடவியாவது கண்டுபிடித்துவிடலாம் என்று முயற்சி செய்யும்போதும் நம்முடைய நம்பிக்கை வீண்போகாது என்பதில் உறுதியாக இருக்கலாம். அவரை நிச்சயம் ‘கண்டுபிடிப்போம்’ என்று பவுல் சொல்கிறார்.—வசனம் 27.
கடவுளுடன் நெருக்கமான உறவை அனுபவிக்க ஆசைப்படுகிறீர்களா? நீங்கள் அவரை விசுவாசத்தோடு ‘தேடி,’ ‘தடவியாவது கண்டுபிடிக்க’ முயற்சி செய்தால் நிச்சயம் உங்கள் ஆசை நிறைவேறும். யெகோவாவை கண்டுபிடிப்பது கடினமல்ல, ஏனென்றால், “அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்ல.” (w08 7/1)