ஏன் நன்றி சொல்ல வேண்டும்?
ஏன் நன்றி சொல்ல வேண்டும்?
“அன்புள்ள ராகேல்,
நீ செய்த உதவியை என்னால் மறக்கவே முடியாது. உனக்கு ஒருவேளை தெரியாமல் இருக்கலாம், மற்றவர்களை உற்சாகப்படுத்துகிற நல்ல சுபாவம் உனக்கு இருக்கிறது; அது எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது; உன் அன்பு மொழி எனக்குப் புத்துணர்ச்சி அளித்தது. உனக்கு என்னுடைய நன்றி.”—ஜெனிஃபர்.
நீங்கள் நினைத்தே பார்க்காத சமயத்தில் யாராவது நன்றி சொல்லி அனுப்பின வாழ்த்து மடல் உங்களுக்குக் கிடைத்திருக்கிறதா? அதைப் பிரித்து படித்தபோது சந்தோஷத்தில் பூரித்துப் போயிருப்பீர்கள். சொல்லப்போனால், மற்றவர்கள் நம்மை மதிக்க வேண்டும், பாராட்ட வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்ப்பது மனித இயல்புதான்.—மத்தேயு 25:19–23.
நன்றி சொல்வது அதைச் சொல்பவருக்கும் கேட்பவருக்கும் இடையே நல்ல பந்தத்தை வளர்க்கிறது. மேலும், நன்றி தெரிவிக்கும் ஒருவர் இயேசு கிறிஸ்துவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறார். மற்றவர்கள் செய்த நல்ல காரியங்களை இயேசு ஒருபோதும் கவனிக்கத் தவறியதில்லை.—மாற்கு 14:3–9; லூக்கா 21:1–4.
ஆனால், வருத்தமான விஷயம் என்னவென்றால் நன்றி சொல்வதோ, நன்றி மடல் அனுப்புவதோ இன்றைக்கு ரொம்ப அபூர்வமாக இருக்கிறது. கடைசி நாட்களில் மக்கள் ‘நன்றியில்லாதவர்களாக’ இருப்பார்களென பைபிள் எச்சரித்தது. (2 தீமோத்தேயு 3:1, 2) நாம் கவனமாய் இல்லாவிட்டால், இன்று மக்கள் மத்தியில் பரவியிருக்கும் நன்றிகெட்ட சுபாவம் நம்மையும் தொற்றிக்கொள்ளலாம்.
இந்த நல்ல குணத்தைப் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க பெற்றோர் என்ன செய்யலாம்? நாம் யாருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்? மற்றவர்கள் நன்றி தெரிவிக்காவிட்டாலும் நாம் ஏன் நன்றியுள்ளவர்களாய் இருக்க வேண்டும்?
குடும்பத்தில்
பிள்ளைகளுக்கு வேண்டியதையெல்லாம் செய்வதற்காக பெற்றோர் அல்லும்பகலும் உழைக்கிறார்கள். ஆனால், எவ்வளவுதான் செய்தாலும் பிள்ளைகள் அதற்கு நன்றி தெரிவிப்பதில்லை என்று சில சமயங்களில் பெற்றோர்கள் வருத்தப்படலாம். இதைச் சரிசெய்ய அவர்கள் என்ன செய்யலாம்? இதில் மூன்று விஷயங்கள் உட்பட்டுள்ளன.
(1) முன்னுதாரணம். எந்த விஷயத்திலும் பிள்ளைகளைப் பயிற்றுவிப்பதற்கு பெற்றோரின் முன்னுதாரணமே சிறந்த வழிகாட்டி. பூர்வ இஸ்ரவேல் தேசத்தில் கடினமாய் உழைத்த ஒரு தாயைக் குறித்து பைபிள் இவ்வாறு சொல்கிறது: “அவள் பிள்ளைகள் எழும்பி, அவளைப் பாக்கியவதி என்கிறார்கள்.” இப்படி நன்றிசொல்ல யாரிடமிருந்து இந்தப் பிள்ளைகள் கற்றுக்கொண்டார்கள்? அடுத்த வசனத்திலேயே அதற்குப் பதில் இருக்கிறது. “புருஷனும் அவளைப் பார்த்து ... புகழுகிறான்” என்று அந்த வசனம் சொல்கிறது. (நீதிமொழிகள் 31:28, 29) அப்பாவும் அம்மாவும் ஒருவருக்கொருவர் நன்றி சொல்லும்போது, அதைப் பார்த்து பிள்ளைகளும் கற்றுக்கொள்கிறார்கள். நீங்கள் நன்றி தெரிவிக்கும்போது, அதைக் கேட்பவருக்குச் சந்தோஷமாக இருக்கிறது, குடும்ப உறவுகள் பலப்படுகிறது, முதிர்ச்சிக்கும் அடையாளமாக இருக்கிறது.
இரண்டு மகள்களுக்குத் தகப்பனான ஸ்டீஃபன் சொல்வதைக் கேளுங்கள். “என்னைப் பார்த்து என் பிள்ளைகள் கற்றுக்கொள்ள வேண்டுமென்பதற்காக, சாப்பாடு செய்ததற்காக என் மனைவிக்கு நன்றி சொல்வேன்.” இதனால் கிடைத்த பலன்? “என் இரண்டு மகள்களும் இப்போது நன்றி சொல்ல பழகிக்கொண்டார்கள்” என்கிறார் ஸ்டீஃபன். உங்களுக்கு கல்யாணமாகியிருந்தால், தினமும் உங்களுடைய துணைவர் செய்யும் சின்னச்சின்ன வேலைகளுக்காகக்கூட நீங்கள் நன்றி சொல்கிறீர்களா? உங்களுடைய பிள்ளைகள் வழக்கமாகச் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்தாலும்கூட அவர்களுக்கு ‘தேங்க் யூ’ சொல்கிறீர்களா?
(2) பயிற்சி. நன்றியுணர்வு என்பது பூக்களைப் போன்றது. அவை பூத்துக்குலுங்க வேண்டுமென்றால், அவற்றை நீதிமொழிகள் 15:28, ஈஸி டு ரீட் வர்ஷன்.
நீங்கள் பேணி வளர்க்க வேண்டும். இந்த நன்றியுணர்வை வளர்த்துக்கொள்வதற்கும் காட்டுவதற்கும் பெற்றோர் எப்படிப் பிள்ளைகளுக்கு உதவலாம்? அதற்கு உதவும் ஒரு முக்கியமான அம்சத்தை ஞானியான சாலொமோன் ராஜா இவ்வாறு சிறப்பித்துக் காட்டினார்: “நல்லவர்கள் பதில் சொல்லுமுன் சிந்திக்கிறார்கள்.”—யாராவது அன்பளிப்பு கொடுக்கும்போது அதற்காக அவர்கள் எடுத்த முயற்சியையும் தாராள குணத்தையும் எண்ணிப்பார்க்கும்படி உங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லித் தருகிறீர்களா? யோசிப்பது என்ற மண்ணில்தான் நன்றியுணர்வு என்ற செடி செழித்தோங்குகிறது. மூன்று பிள்ளைகளுக்குத் தாயான மரியா சொல்கிறார்: “யாராவது பரிசு கொடுத்தால், உங்கள் பிள்ளைகளை கூப்பிட்டு உட்கார வைத்து, பரிசு கொடுத்தவர் அதைக் கொடுக்க என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்பதை விளக்க வேண்டும். ‘அவர் உன்னைப் பற்றி யோசித்திருக்கிறார், உன்மீது அன்பு வைத்திருக்கிறார், அதனால்தான் இதை உனக்குக் கொடுத்திருக்கிறார்’ என்று சொல்லி அவர்களுக்கு புரியவைப்பதற்கு நேரம் தேவை. ஆனால், இப்படிச் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.” இதையெல்லாம் சொல்லிக்கொடுப்பதால், எப்படி நன்றி சொல்ல வேண்டும் என்பதை மட்டுமல்ல ஏன் சொல்ல வேண்டும் என்பதையும் பிள்ளைகள் கற்றுக்கொள்வார்கள்.
தங்களுக்குத் தேவையான அனைத்தையும் கொடுப்பது பெற்றோரின் கடமை என்ற எண்ணத்தை பிள்ளைகளின் மனதிலிருந்து கிள்ளியெறிய ஞானமுள்ள பெற்றோர்கள் முயற்சி செய்வார்கள். a வேலைக்காரர்களை நடத்துவதைப் பற்றி நீதிமொழிகள் 29:21-ல் (NW) உள்ள எச்சரிக்கை பிள்ளைகளை வளர்க்கும் விஷயத்திலும் பொருந்துகிறது: “இளமைப் பருவமுதல் உன் வேலைக்காரனுக்கு அவன் விருப்பப்படியே எல்லாவற்றையும் கொடுப்பாயானால், கடைசியில் அவன் நன்றிகெட்டவனாய் ஆகிவிடுவான்.”
சின்னஞ்சிறுசுகளும் நன்றி சொல்ல அவர்களுக்கு எப்படிக் கற்றுத்தரலாம்? மூன்று பிள்ளைகளின் தாயான லிண்டா சொல்கிறார்: “நானும் என் கணவரும் யாருக்காவது நன்றி தெரிவித்து கடிதம் எழுதும்போது அதில் எங்களுடைய பிள்ளைகளும் ஏதாவது படம் வரைந்து, அவர்களுடைய பெயரை எழுதும்படி சொல்வோம்.” அவர்கள் வரையும் படம் பார்ப்பதற்கு பிரமாதமாக இல்லாதிருக்கலாம்; கையெழுத்தும் புரியாமல் இருக்கலாம். ஆனால், இந்தப் பயிற்சிகள் எல்லாமே அவர்களுக்கு வாழ்நாள் பூராவும் கைகொடுக்கும்.
(3) விடாமுயற்சி. நம் எல்லாரிடமும் பிறவியிலேயே ஒட்டிக்கொண்டிருக்கும் சுயநலம் என்ற குணம் நன்றியுணர்வை காட்டுவதற்குத் தடையாக இருக்கிறது. (ஆதியாகமம் 8:21; மத்தேயு 15:19) என்றாலும், கடவுளுடைய ஊழியர்களை பைபிள் இவ்வாறு உந்துவிக்கிறது: ‘உங்கள் மனப்பாங்கை புதுப்பிக்க வேண்டும். கடவுளது சாயலாகப் படைக்கப்பட்ட புதிய மனிதருக்குரிய இயல்பை அணிந்துகொள்ளுங்கள்.’—எபேசியர் 4:23, 24, பொது மொழிபெயர்ப்பு.
“புதிய மனிதருக்குரிய இயல்பை” அணிந்துகொள்ள பிள்ளைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்று சொல்வது சுலபம், செய்வது கடினம் என்பதை அனுபவமுள்ள பெற்றோர்கள் அறிந்திருக்கிறார்கள். முன்பு குறிப்பிடப்பட்ட ஸ்டீஃபன் இவ்வாறு சொல்கிறார்: “அவர்களாகவே நன்றி சொல்ல எங்கள் பிள்ளைகளைப் பழக்குவதற்கு ரொம்ப நாள் எடுத்தது.” ஆனால், ஸ்டீஃபனும் அவர் மனைவியும் மனதைத் தளரவிடவில்லை. “எங்களுடைய விடாமுயற்சியினால் என் பிள்ளைகள் பாடம் கற்றுக்கொண்டார்கள். இப்போது அவர்களாகவே மற்றவர்களுக்கு நன்றி சொல்வதைப் பார்க்கும்போது எங்களுக்கு ரொம்ப பெருமையாக இருக்கிறது” என்கிறார் ஸ்டீஃபன்.
நண்பர்களுக்கும் அக்கம்பக்கத்தாருக்கும்
சில சமயங்களில் நாம் நன்றி சொல்ல தவறிவிடலாம். அதற்கென்று நமக்கு நன்றியுணர்வே இல்லை என்று சொல்ல முடியாது; ஒருவேளை மறந்திருக்கலாம். அப்படியானால், நன்றியுணர்வு மனதில் இருந்தாலே போதுமா அல்லது அதை வாய் திறந்து சொல்ல வேண்டுமா? இந்தக் கேள்விக்குப் பதில் தெரியவேண்டுமா? இயேசுவையும் சில தொழுநோயாளிகளையும் பற்றிய ஒரு சம்பவத்தை இப்போது சிந்தித்துப் பார்க்கலாம்.
எருசலேமுக்குச் சென்றுகொண்டிருந்தபோது பத்து தொழுநோயாளிகளை இயேசு சந்தித்தார். “அவர்கள் ... உரத்த குரலில், “இயேசுவே, போதகரே, எங்களுக்கு இரக்கம் காட்டுங்கள்!” என்றார்கள். அவர் அவர்களைப் பார்த்தபோது, “நீங்கள் போய் குருமார்களிடம் உங்களைக் காட்டுங்கள்” என்று சொன்னார். “அவர்கள் அங்கு போய்க்கொண்டிருந்த வழியிலேயே சுத்தமானார்கள். அவர்களில் ஒருவன் தான் குணமடைந்ததைக் கண்டு, உரத்த குரலில் கடவுளை மகிமைப்படுத்திக்கொண்டே திரும்பி வந்தான். பின்பு, இயேசுவின் பாதத்தில் முகங்குப்புற விழுந்து அவருக்கு நன்றி சொன்னான்; அவன் ஒரு சமாரியன்.”—லூக்கா 17:11–16, NW.
அந்த ஒன்பது பேர் நன்றி தெரிவிக்காமல் போனபோது இயேசு கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டாரா? பதிவு தொடர்கிறது: “அப்பொழுது இயேசு: “சுத்தமானவர்கள் பத்துப்பேர் அல்லவா, மற்ற ஒன்பதுபேர் எங்கே? தேவனை மகிமைப்படுத்துகிறதற்கு, இந்த அந்நியனே ஒழிய மற்றொருவனும் திரும்பிவரக் காணோமே” என்றார்.—லூக்கா 17:17, 18.
மற்ற ஒன்பது தொழுநோயாளிகளும் பொல்லாதவர்கள்
அல்ல. இயேசுமீது தாங்கள் வைத்திருந்த விசுவாசத்தை அவர்கள் வெளிப்படையாகக் காட்டினார்கள், அவருடைய அறிவுரைக்கு மனப்பூர்வமாகக் கீழ்ப்படிந்தார்கள்; ஏன், தாங்கள் குணமானதை ஆசாரியர்களிடம் காட்டுவதற்காக எருசலேமுக்கும் போனார்களே. இயேசு இரக்கப்பட்டு செய்த உதவியைக் குறித்து அவர்களுக்கு நன்றியுணர்வு இருந்தது, ஆனால் அதை வாய்திறந்து சொல்ல தவறிவிட்டார்கள். அவர்களுடைய செயல் இயேசுவுக்கு ஏமாற்றத்தை அளித்தது. நம்மைப் பற்றியென்ன? யாராவது நமக்கு நல்லது செய்தால், அவர்களுக்கு உடனடியாக நன்றி சொல்கிறோமா? பொருத்தமான சந்தர்ப்பங்களில், ‘தேங்க்யூ கார்டு’ அனுப்புகிறோமா?“அன்பு பண்புள்ளது; அன்பு சுயநலமற்றது” என்று பைபிள் சொல்கிறது. (1 கொரிந்தியர் 13:5, டுடேஸ் இங்லிஷ் வர்ஷன்) ஆகவே, உள்ளப்பூர்வமாக நன்றி தெரிவிப்பது நல்ல பண்பு மட்டுமல்ல, அன்பின் வெளிக்காட்டாகவும் இருக்கிறது. கிறிஸ்துவைப் பிரியப்படுத்த விரும்புகிறவர்கள் அத்தகைய அன்பையும் நன்றியையும் தேசம், இனம், மதம், என்ற எந்தப் பாகுபாடுமின்றி எல்லாருக்கும் காட்ட கடமைப்பட்டிருக்கிறார்கள் என்பதையே இந்தத் தொழுநோயாளிகளின் உதாரணம் நமக்குக் கற்பிக்கிறது.
உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘கடைசியாக நான் எப்போது என் பக்கத்து வீட்டுக்காரருக்கு, என்னோடு வேலை செய்பவருக்கு, படிப்பவருக்கு, ஆஸ்பத்திரி ஊழியருக்கு, கடைக்காரருக்கு அல்லது எனக்கு உதவி செய்த ஒருவருக்கு நன்றி சொன்னேன்?’ ஒரு நாளைக்கு எத்தனை முறை நீங்கள் நன்றி சொன்னீர்கள் அல்லது நன்றி சொல்லி கடிதம் எழுதினீர்கள் என்று ஓரிரு நாட்களுக்கு ஏன் எழுதிவைக்கக்கூடாது. அப்படி எழுதிவைப்பது நீங்கள் எந்த அம்சத்தில் இன்னும் முன்னேற வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள உதவும்.
சொல்லப்போனால், நம் நன்றியைப் பெறுவதற்கு எல்லாரையும்விட அதிக தகுதியுள்ளவர் யெகோவா தேவனே. ‘எல்லா நன்மைகளையும் வரத்தையும்’ அவரே கொடுக்கிறார். (யாக்கோபு 1:17, ERV) கடவுள் உங்களுக்குச் செய்த ஏதோவொரு உதவிக்காக கடைசியாக நீங்கள் எப்போது அவருக்கு உங்கள் மனமார்ந்த நன்றியைச் சொன்னீர்கள்?—1 தெசலோனிக்கேயர் 5:17, 18.
மற்றவர்கள் நன்றி சொல்லாவிட்டாலும் நாம் ஏன் சொல்ல வேண்டும்?
நாம் மற்றவர்களுக்கு ஏதாவது உதவி செய்கையில் அவர்கள் ஒருவேளை நமக்கு நன்றி தெரிவிக்காமல் இருக்கலாம். அப்படி அவர்கள் தெரிவிக்காவிட்டாலும் நாம் ஏன் தெரிவிக்க வேண்டும்? அதற்கு ஒரு காரணத்தைக் கவனியுங்கள்.
நன்றியில்லாதவர்களுக்கு நாம் உதவி செய்யும்போது மகா தயவு பொருந்திய நம்முடைய படைப்பாளரான யெகோவா தேவனைப் பின்பற்றுகிறோம். யெகோவா காட்டும் அன்பை அநேகர் இன்று மதிக்காவிட்டாலும், அவர் தொடர்ந்து அவர்களுக்கு நன்மை செய்கிறார். (ரோமர் 5:8; 1 யோவான் 4:9, 10) அவர் “சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்.” நன்றிகெட்ட உலகத்திலும் நன்றியுள்ளவர்களாக இருக்க முயற்சி செய்யும்போது, நாம் ‘பரலோக பிதாவின் புத்திரர்கள்’ என நிரூபிப்போம்.—மத்தேயு 5:45. (w08 8/1)
[அடிக்குறிப்பு]
a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட பெரிய போதகரிடம் கற்றுக்கொள் புத்தகத்தை அநேக பெற்றோர் தங்கள் பிள்ளைகளோடு சேர்ந்து வாசித்து அவர்களுக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறார்கள். அதில் 18-ஆம் அதிகாரத்தின் தலைப்பு, “மறக்காமல் நன்றி சொல்கிறாயா?”
[பக்கம் 23-ன் சிறு குறிப்பு]
ஒரு நாளைக்கு எத்தனை முறை நீங்கள் நன்றி சொன்னீர்கள் என்பதை ஓரிரு நாட்களுக்கு எழுதிவையுங்கள்
[பக்கம் 23-ன் படம்]
நன்றி சொல்லும் விஷயத்தில் உங்கள் பிள்ளைகளுக்கு முன்மாதிரியாக இருங்கள்
[பக்கம் 23-ன் படம்]
நன்றி தெரிவிக்க சின்னஞ்சிறுசுகளையும்கூட பயிற்றுவிக்க முடியும்