Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சிங்கார பூமி சீக்கிரத்தில்!

சிங்கார பூமி சீக்கிரத்தில்!

சிங்கார பூமி சீக்கிரத்தில்!

“பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.” —மத்தேயு 6:9, 10.

பரமண்டல ஜெபம் என அநேகரால் அழைக்கப்படும் இந்தப் பிரபலமான ஜெபம் மனித குலத்திற்கு மகத்தான நம்பிக்கை அளிக்கிறது. எப்படி?

இந்த ஜெபம் சொல்கிறபடி, கடவுளுடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது எந்தளவு நிச்சயமோ அந்தளவு பூமியிலே செய்யப்படுவதும் நிச்சயம்; இந்தப் பூமியை மீண்டும் சிங்காரத் தோட்டமாக மாற்றி அதில் மகிழ்ச்சி குடிகொள்ளச் செய்வதே கடவுளுடைய சித்தம். இதை அவருடைய ராஜ்யம் நிறைவேற்றும். (வெளிப்படுத்துதல் 21:1–5) உண்மையில் கடவுளுடைய ராஜ்யம் என்றால் என்ன? அது எப்படி இந்தப் பூமியை சிங்காரத் தோட்டமாக மாற்றும்?

நிஜமான அரசாங்கம்

கடவுளுடைய ராஜ்யம் என்பது ஒரு நிஜமான அரசாங்கம். ஆனால், எந்தவொரு அரசாங்கமும் செயல்பட ஆட்சியாளர்கள், சட்டங்கள், குடிமக்கள் தேவை. கடவுளுடைய அரசாங்கத்திலும் இதெல்லாம் உண்டா? பின்வரும் மூன்று கேள்விகளுக்கு பைபிள் தரும் பதில்களைக் கவனியுங்கள்:

கடவுளுடைய அரசாங்கத்தின் ஆட்சியாளர்கள் யார்? (ஏசாயா 33:22) இந்த அரசாங்கத்தை நிர்வகிப்பதற்காக தம்முடைய மகன் இயேசு கிறிஸ்துவை யெகோவா தேவன் நியமித்திருக்கிறார். (மத்தேயு 28:18) தம்முடைய தந்தையின் வழிநடத்துதலால் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையான ஆட்களை “சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து” இயேசு தேர்ந்தெடுத்திருக்கிறார். இவர்கள் அவருடன் சேர்ந்து பூமியின் மீது ராஜாக்களாக ஆட்சி செய்வார்கள்.வெளிப்படுத்துதல் 5:9, 10.

கடவுளுடைய அரசாங்கம் அதன் குடிமக்களுக்கு என்ன சட்டங்களை விதித்திருக்கிறது? இந்த அரசாங்கம் விதித்திருக்கும் சில சட்டங்களுக்கு அல்லது கட்டளைகளுக்குக் கீழ்ப்பட்டு அதன் குடிமக்கள் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. அவற்றில் முக்கியமான ஒரு சட்டத்தை இயேசு குறிப்பிட்டார். ‘தேவனாகிய யெகோவாவிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; இது முதலாம் பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை, உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக’ என்பதே.—மத்தேயு 22:37–39.

அந்த அரசாங்கத்தின் வேறு சில சட்டங்களோ, சில செயல்களுக்குத் தடைவிதிக்கின்றன. உதாரணத்திற்கு, பின்வரும் தெளிவான எச்சரிக்கையை பைபிள் அளிக்கிறது: “கடவுளுடைய அரசாங்கத்திற்குள் அநீதிமான்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று உங்களுக்குத் தெரியாதா? ஏமாந்துவிடாதீர்கள். பாலியல் முறைகேட்டில் ஈடுபடுகிறவர்கள், உருவ வழிபாடு செய்கிறவர்கள், மணத்துணைக்குத் துரோகம் செய்கிறவர்கள், மற்ற ஆண்கள் தங்களைப் பாலுறவுக்காகப் பயன்படுத்த அனுமதிக்கும் ஆண்கள், ஆண்களோடு உறவுகொள்ளும் ஆண்கள், திருடர்கள், பேராசைக்காரர்கள், குடிகாரர்கள், சபித்துப் பேசுகிறவர்கள், கொள்ளையடிக்கிறவர்கள் ஆகியோர் கடவுளுடைய அரசாங்கத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.”1 கொரிந்தியர் 6:9, 10, NW.

கடவுளுடைய அரசாங்கத்தின் குடிமக்கள் யார்? கடவுளுடைய அரசாங்கத்தின் குடிமக்கள் செம்மறியாடு போன்ற குணமுடையவர்கள் என இயேசு குறிப்பிட்டார். “அவைகள் என் சத்தத்துக்குச் செவிகொடுக்கும், அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும்” என்று அவர்களைக் குறித்து சொன்னார். (யோவான் 10:16) ஒருவர் கடவுளுடைய அரசாங்கத்தின் குடிமகனாய் இருக்க வேண்டுமென்றால், நல்ல மேய்ப்பரான இயேசுவை பின்பற்றுகிறேன் என்று சொன்னால் மட்டும் போதாது, அவருடைய கட்டளைகளின்படி செய்ய வேண்டும். “என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவர்கள் பரலோக அரசாங்கத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். என் பரலோக தகப்பனுடைய சித்தத்தின்படி செய்கிறவர்களே அதில் அனுமதிக்கப்படுவார்கள்” என்று இயேசு சொன்னார்.—மத்தேயு 7:21, NW.

அதனால்தான், கடவுளுடைய அரசாங்கத்தின் குடிமக்களாய் இருப்பவர்கள் இயேசுவைப் போலவே கடவுளுடைய பெயரை (யெகோவா) பயன்படுத்தி அதற்கு புகழ் சேர்க்கிறார்கள். (யோவான் 17:26) ‘கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியை’ மற்றவர்களுக்கு அறிவிப்பதன் மூலம் இயேசுவின் கட்டளைக்கு அவர்கள் கீழ்ப்படிகிறார்கள். (மத்தேயு 24:14, NW; 28:19, 20) ஒருவருக்கொருவர் உண்மையான அன்பு காட்டுகிறார்கள்.—யோவான் 13:35.

‘பூமியை நாசமாக்குபவர்களுக்கு அழிவு’

பூமியில் அதிரடி மாற்றங்களைக் கொண்டுவர கடவுளுடைய அரசாங்கம் சீக்கிரத்தில் நடவடிக்கை எடுக்கும் என இன்றைய உலக நிலைமைகள் சுட்டிக்காட்டுகின்றன. அது நமக்கு எப்படித் தெரியும்? ‘தேவனுடைய ராஜ்யம் சமீபமாய் இருக்கிறது’ என்பதைக் குறித்துக்காட்டும் பல அம்சங்கள் அடங்கிய ஓர் அடையாளத்தை இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே இயேசு கொடுத்தார். (லூக்கா 21:31) முந்தின கட்டுரையில் பார்த்தபடி, அந்த அடையாளத்தின் அம்சங்கள் நிறைவேறிவருவது இன்று உலகெங்கும் தெளிவாய்த் தெரிகிறது.

அடுத்து என்ன நடக்கும்? இயேசு பதிலளிக்கிறார்: “உலகமுண்டானதுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும்.” (மத்தேயு 24:21) இது மனிதனால் வருவதில்லை. மாறாக, ‘பூமியை நாசமாக்குபவர்களை நாசமாக்குவதற்காக’ கடவுள் எடுக்கும் நடவடிக்கையாய் இருக்கிறது. (வெளிப்படுத்துதல் 11:18) தங்கள் சுயநலத்திற்காக இந்த உலகத்தை சீரழித்துவரும் பொல்லாதவர்கள் ‘உலகிலிருந்து பூண்டோடு அழிக்கப்படுவர்.’ கடவுள் ஏற்றுக்கொள்ளும் முறையில் அவரை வணங்குகிற நல்மனமுள்ளவர்களோ “அதில் நிலைத்திருப்பர்.”—நீதிமொழிகள் 2:21, 22, பொது மொழிபெயர்ப்பு.

கடவுள் இந்தக் கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு நியாயமான காரணங்கள் இருக்கின்றன. ஏன்? இந்த உதாரணத்தைக் கவனியுங்கள்: உங்களுக்குச் சொந்தமாக ஓர் அடுக்குமாடி கட்டிடம் இருக்கிறது என வைத்துக்கொள்ளுங்கள். அதில் குடியிருக்கும் சிலர் கரிசனையாகவும் கண்ணியமாகவும் நடந்துகொள்கிறார்கள்; வாடகையைச் சரியாகக் கொடுத்துவிடுகிறார்கள், வீட்டையும் நன்றாக வைத்துக்கொள்கிறார்கள். சில குடித்தனக்காரர்களோ வீட்டுக்காரருக்குத் தலைவலியாய் இருக்கிறார்கள். சுயநலமாய் நடந்துகொள்கிறார்கள்; ஒழுங்காக வாடகையும் கொடுப்பதில்லை; வீட்டையும் நாசம் செய்கிறார்கள். எவ்வளவுதான் எச்சரித்தாலும் அவர்கள் திருந்திய பாடில்லை. ஒருவேளை நீங்கள் அந்த வீட்டுக்குச் சொந்தக்காரராக இருந்தால் என்ன செய்வீர்கள்? நிச்சயம் வீட்டைக் காலி செய்யும்படி அவர்களிடம் சொல்வீர்கள்.

அதுபோலவே இந்தப் பூமியையும் அதிலுள்ள எல்லாவற்றையும் படைத்த யெகோவா தேவனுக்கும் இந்தப் பூமியில் யாரைக் குடியிருக்க வைப்பது என்பதைத் தீர்மானிக்கும் உரிமை இருக்கிறது. (வெளிப்படுத்துதல் 4:11) தம்முடைய சித்தத்தை அசட்டை செய்து, மற்றவர்களின் உரிமைகளை மதிக்காத பொல்லாதவர்களை இந்தப் பூமியிலிருந்து நீக்குவதே யெகோவாவின் நோக்கம்.—சங்கீதம் 37:9–11.

பூமி மீண்டும் ஒரு பூஞ்சோலையாக

சீக்கிரத்தில் இயேசுவின் தலைமையில் கடவுளுடைய அரசாங்கம் இந்தப் பூமியை ஆட்சி செய்யும். அந்தக் காலத்தை, ‘அனைத்தும் புதிதாக்கப்படுகிற காலம்’ என இயேசு அழைத்தார். (மத்தேயு 19:28) அப்போது நிலைமை எப்படி இருக்கும்? பைபிள் தரும் வாக்குறுதிகளைக் கவனியுங்கள்:

சங்கீதம் 46:9.—“அவர் பூமியின் கடைமுனைமட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணுகிறார்.”

ஏசாயா 35:1, NW.“வனாந்திரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, பாலைவனம் புஷ்பத்தைப்போல செழிக்கும்.”

ஏசாயா 65:21–23, NW.“நான் தெரிந்து கொண்டவர்கள் தங்கள் உழைப்பின் பயனை நெடுநாள் அனுபவிப்பார்கள். அவர்கள் வீணாக உழைப்பதில்லை; அவர்கள் பிள்ளைகளை அழிவுக்கென்று பெறுவதுமில்லை.”

யோவான் 5:28, 29 பொ.மொ.—“கல்லறையில் உள்ளோர் அனைவரும் அவரது [இயேசுவின்] குரலைக் கேட்டு வெளியே வருவர்.”

வெளிப்படுத்துதல் 21:4.—“அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின.”

நம்புவதற்கு காரணங்கள்

பைபிளிலுள்ள இந்த வாக்குறுதிகளை நீங்கள் நம்புகிறீர்களா? அநேகர் நம்ப மாட்டார்களென பல வருடங்களுக்கு முன்பே பைபிள் அறிவித்தது. “கடைசி நாட்களில் பரியாசக்காரர் வந்து, தங்கள் சுயஇச்சைகளின்படியே நடந்து, அவர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? பிதாக்கள் நித்திரையடைந்த பின்பு சகலமும் சிருஷ்டிப்பின் தோற்றமுதல் இருந்தவிதமாயிருக்கிறதே என்று சொல்லுவார்கள்” என்று அது சொல்கிறது. (2 பேதுரு 3:3, 4) ஆனால், இப்படிப் பரியாசம் செய்கிறவர்களின் எண்ணமே தவறு. பைபிள் சொல்வதை நம்புவதற்கு இந்த நான்கு காரணங்களைக் கவனியுங்கள்:

(1) கடந்த காலத்தில் பொல்லாதவர்கள்மீது கடவுள் நடவடிக்கை எடுத்திருக்கிறார்; நோவாவின் நாளில் ஏற்பட்ட பெருவெள்ளம் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு.—2 பேதுரு 3:5–7.

(2) தற்போதைய உலக நிலைமைகளை பைபிள் துல்லியமாக முன்னறிவித்தது.

(3) சகலமும் ‘சிருஷ்டிப்பின் தோற்றமுதல் இருந்த விதமாய் இல்லை.’ சமூக ரீதியிலும், ஒழுக்க ரீதியிலும் சுற்றுச்சூழலிலும் வரலாறு காணாத அளவிற்கு நம் கிரகம் சீர்கெட்டிருக்கிறது.

(4) ‘கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தி’ இப்போது உலகெங்கும் அறிவிக்கப்படுகிறது; சீக்கிரத்தில் “முடிவு வரும்” என்பதற்கு இது அடையாளம்.—மத்தேயு 24:14, NW.

கடவுளுடைய வார்த்தையான பைபிளை தங்களோடு சேர்ந்து படிக்கும்படி யெகோவாவின் சாட்சிகள் உங்களை அழைக்கிறார்கள். நீங்கள் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டால், கடவுளுடைய அரசாங்கத்தில் முடிவில்லா வாழ்வை அனுபவிப்பதைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ளலாம். (யோவான் 17:3) ஆம், மனிதகுலத்திற்கு பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது. சந்தோஷமான வாழ்க்கை உங்களுக்கு முன்னே இருக்கிறது! அப்படிப்பட்ட வாழ்க்கையை நீங்கள் அனுபவிக்க விரும்புகிறீர்களா? (w08 8/1)

[பக்கம் 7-ன் சிறு குறிப்பு]

சகலமும் தொடக்கமுதல் இன்றுவரை அப்படியே இருப்பதாகச் சொல்கிறவர்களின் எண்ணமே தவறு

[பக்கம் 8-ன் படம்]

இப்படிப்பட்ட வாழ்க்கையை நீங்கள் அனுபவிக்க விரும்புகிறீர்களா?