குடும்ப மகிழ்ச்சிக்கு
திருமண பந்தத்தைப் பாதுகாத்திடுங்கள்
மரியா: “கொஞ்ச நாளாவே எனக்கும் என் வீட்டுக்காரருக்கும் சரியா பேச்சுவார்த்தையே கிடையாது. பிள்ளைகளையும் அவர் கண்டுக்கிறதில்ல. a வீட்ல எப்போ இன்டர்நெட் கனெக்ஷன் வந்ததோ அப்போதிருந்தே அவருடைய போக்கு மாறிடுச்சு. கம்ப்யூட்டரில் ‘கண்டதையும்’ பார்க்கிறாருன்னு சந்தேகப்பட்டேன். ஒரு நாள் இராத்திரி பிள்ளைங்க தூங்க போன பிறகு, அவரை உட்கார வச்சு கேட்டேன். ‘அந்த மாதிரி’ படங்கள பார்ப்பதாக அவரும் ஒத்துக்கிட்டாரு. என் தலையில இடி விழுந்த மாதிரி இருந்துச்சு. இப்படிப்பட்ட காரியத்த என் வீட்டுக்காரு செய்வாருன்னு நான் கனவுலகூட நினைச்சுப் பார்க்கல. அவர் மேல வச்சிருந்த எல்லா நம்பிக்கையும் அத்துப்போச்சு. இந்தச் சமயம் பார்த்து, என் ஆபிஸ்ல ஒருத்தன் என் பின்னாடியே சுத்திட்டு இருக்கான்.”
மைக்கேல்: “கொஞ்ச நாளைக்கு முன்னாடி, கம்ப்யூட்டரில் நான் ஸ்டோர் பண்ணி வச்சிருந்த ‘அந்தப் படத்தை’ என் பொண்டாட்டி பார்த்திட்டு நேரா என்கிட்ட வந்து கேட்டா. ‘அந்த மாதிரி’ வெப் சைட்டுக்குள் போறத நானும் ஒத்துக்கிட்டேன். உடனே அவள் எரிமலையாய் வெடித்தாள். எனக்கு ரொம்ப அவமானமா போச்சு, என் மனசு குத்த ஆரம்பிச்சிடுச்சு. எங்க வாழ்க்கை அவ்வளவுதான்னு நினைச்சேன்.”
மைக்கேலுக்கும் மரியாவுக்கும் இடையே என்ன நடந்திருக்கலாமென்று நினைக்கிறீர்கள்? மைக்கேல் ஆபாசக் காட்சிகளைப் பார்த்ததுதான் தப்பு என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், அவரிடம் ஒரு பெரிய கோளாறு இருந்தது. அதைத்தான் அந்தக் கெட்ட பழக்கம் ‘ரெட்-சிக்னல்’ போட்டுக் காட்டியது. இதை மைக்கேலும் உணர்ந்தார். மணவாழ்வில் அவருக்கு இருந்த ஈடுபாடு குறைந்துவிட்டது. b மைக்கேலும் மரியாவும் கரம் பிடித்தபோது இருவரும் அன்பாகவும் ஆனந்தமாகவும் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்றுதான் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால், காலங்கள் செல்லச் செல்ல, பலருடைய வாழ்க்கையைப் போலவே இவர்களுடைய வாழ்க்கையும் கசக்க ஆரம்பித்தது. முதலில் இருந்த நெருக்கம் குறைந்து இறுக்கம் ஜாஸ்தியானது.
ஆண்டுகள் செல்ல செல்ல உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே உள்ள பந்தம் பலவீனம் அடைவதாக உணருகிறீர்களா? இந்தப் பந்தத்தைப் பலப்படுத்த விரும்புகிறீர்களா? அப்படியானால், இந்த மூன்று கேள்விகளுக்கு நீங்கள் பதில் தெரிந்துகொள்ள வேண்டும்? திருமண பந்தத்தைப் பாதுகாப்பது என்றால் என்ன? இந்தப் பந்தத்தைக் குலைப்பதற்கு என்னென்ன சவால்கள் எழலாம்? உங்கள் திருமண பந்தத்தைப் பலப்படுத்த நீங்கள் என்ன செய்யலாம்?
திருமண பந்தம் என்றால் என்ன?
திருமண பந்தத்தை நீங்கள் எப்படி விவரிப்பீர்கள்? கடமை உணர்வினால் செய்யப்படும் ஓர் ஒப்பந்தம்தான் அந்தப் பந்தம் என்று நிறைய பேர் சொல்கிறார்கள். ஆதியாகமம் 2:22–24) நிச்சயமாகவே, திருமணத்தில் வீசும் புயல்களைத் தாக்குப்பிடிப்பதற்கு இதெல்லாம் நியாயமான காரணங்கள்தான். ஆனால், மணவாழ்வில் மகிழ்ச்சி ததும்ப, தம்பதிகளுக்கு கடமை உணர்வு இருந்தால் மட்டும் போதாது.
உதாரணத்திற்கு, பிள்ளைகளுக்காக அல்லது கடவுளுக்காக அந்த ஒப்பந்தத்தில் நிலைத்திருக்க வேண்டுமென சில தம்பதியினர் நினைக்கலாம். (தம்பதிகள் மிகுந்த சந்தோஷத்தையும் திருப்தியையும் காண வேண்டும் என்ற எண்ணத்தில்தான் யெகோவா தேவன் திருமண வாழ்வை ஆரம்பித்துவைத்தார். புருஷன் தன் ‘இளவயதின் மனைவியோடே மகிழ்ந்திருக்க’ வேண்டுமென்று அவர் விரும்பினார். பெண்ஜாதி தன் கணவனை நேசிக்க வேண்டுமென்றும், அதேசமயம் கணவன் தன்னை நேசிப்பதை அவள் உணர வேண்டுமென்றும் அவர் நோக்கம் கொண்டார். (நீதிமொழிகள் 5:18; எபேசியர் 5:28) அப்படிப்பட்ட ஒரு பந்தம் வளர தம்பதியினர் ஒருவரையொருவர் நம்ப வேண்டும். அதேபோல், ஆயுள் முழுக்க நீடிக்கும் நட்பை வளர்ப்பதும் முக்கியம். இப்படி ஓர் ஆணும் பெண்ணும் இருவருக்கிடையே நம்பிக்கையையும் நட்பையும் வளர்த்துக்கொள்ளும்போது அவர்களுடைய திருமண ஒப்பந்தம் உறுதிப்படும். அப்போது, பைபிள் வர்ணிப்பது போல், அவர்கள் இருவரும் ‘ஈருடலாய் அல்ல ஓருடலாய் இருப்பார்கள்.’—மத்தேயு 19:5, NW.
ஆகவே, உறுதியான வீட்டைக் கட்ட செங்கற்களை ஒன்றோடொன்று இணைக்கும் சாந்து தேவைப்படுவது போல் மணவாழ்வு உறுதியாக இருப்பதற்கு ஒப்பந்தம் எனும் சாந்து தேவை. மணல், சிமெண்ட், தண்ணீர் ஆகியவை சேர்ந்தால்தான் சாந்து. அதேபோல், கடமை, நம்பிக்கை, நட்பு ஆகியவை சேர்ந்தால்தான் ஒப்பந்தம். திருமண பந்தத்தை எது பாதிக்கலாம்?
என்னென்ன சவால்கள்?
ஒப்பந்தத்தை நிறைவேற்ற கடின உழைப்பும் சுயதியாகமும் அவசியம். அப்படியானால், உங்கள் மணத்துணையைப் பிரியப்படுத்த உங்கள் ஆசாபாசங்களைத் தியாகம் செய்ய நீங்கள் மனமுள்ளவர்களாக இருக்க வேண்டும். என்றாலும், மற்றவர்களுடைய விருப்பங்களுக்கு வளைந்துகொடுக்கும் எண்ணத்தை, அதாவது சுயநலம் கருதாமல் மற்றவர்களுக்குக் கொடுக்கும் மனப்பான்மையை, இன்று சமுதாயத்தில் வலைபோட்டு தேட வேண்டியதாயிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், அப்படி வளைந்துகொடுப்பதை சிலர் வினோதமாகப் பார்க்கிறார்கள். ஆனால் நீங்களே யோசித்துப் பாருங்கள், ‘சுயநலமாக இருக்கிற எத்தனை பேர் இன்றைக்கு மணவாழ்வில் சந்தோஷமாக இருக்கிறார்கள்?’ யாருமே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏன்? தியாகம் செய்ய வேண்டிய அவசியம் வரும்போது—முக்கியமாக சிறுசிறு விஷயங்களுக்கு விட்டுக்கொடுக்கையில் எந்தப் பலனும் கிடைக்காதபோது—சுயநலமிக்க ஒருவர் திருமண ஒப்பந்தத்தில் நிலைத்திருக்க மாட்டார். மணவாழ்வில் ஒரு தம்பதிக்கு ஈடுபாடு இருப்பது ரொம்பவே அவசியம்; இல்லையென்றால், அவர்களுடைய உறவு கசந்துவிடும்—அவர்களுக்குள் காதல் மலர்ந்தபோது எவ்வளவுதான் இனிக்க இனிக்கப் பழகியிருந்தாலும் சரி.
திருமண பயிர் செழித்து வளர கடினமாக உழைக்க வேண்டுமென பைபிள் சொல்வது நிதர்சனம். ‘திருமணமானவன் தன் மனைவிக்கு எப்படிப் பிரியமாயிருக்கலாம் என எண்ணி, உலகக் காரியங்களுக்காகக் கவலைப்படுகிறான்’ என்றும், ‘திருமணமான பெண் தன் கணவனுக்கு எப்படிப் பிரியமாயிருக்கலாம் என எண்ணி உலகக் காரியங்களுக்காகக் கவலைப்படுகிறாள்’ என்றும் அது சொல்கிறது. (1 கொரிந்தியர் 7:33, 34, NW) பொதுவாக சுயநலமற்ற தம்பதிகளும்கூட தங்கள் துணையின் கவலைகளைப் புரிந்துகொள்வதோ அவர்கள் செய்யும் தியாகங்களை எண்ணிப்பார்ப்பதோ இல்லை என்பதுதான் வருத்தத்திற்குரிய விஷயம். கணவனோ மனைவியோ மற்றொருவருடைய அருமையைப் புரிந்து நடக்கத் தவறும்போது, அதிகளவில் “சரீரத்திலே உபத்திரவப்படுவார்கள்.”—1 கொரிந்தியர் 7:28.
உங்கள் திருமணம் துன்ப புயலைத் தாக்குப்பிடிக்க வேண்டுமா? சந்தோஷச் சாரலில் பூத்துக் குலுங்க வேண்டுமா? அப்படியானால், உங்கள் பந்தத்தை ஆயுள் முழுக்க நீடிக்கும் பந்தமாகக் கருத வேண்டும். இப்படிப்பட்ட மனப்பான்மையை நீங்கள் எப்படி வளர்த்துக்கொள்ளலாம், உங்கள் துணைவர் உங்களுடன் நிலைத்திருக்க நீங்கள் எப்படி அவருக்கு உதவலாம்?
பந்தத்தைப் பலப்படுத்துவது எப்படி?
கடவுளுடைய வார்த்தையாகிய பைபிள் தரும் ஆலோசனையைத் தாழ்மையுடன் பின்பற்றுவதே அதற்கு முக்கியமான வழி. அப்படிச் செய்தால் நீங்களும் உங்கள் துணைவரும் ‘பயனடைவீர்கள்.’ (ஏசாயா 48:17, NW) நீங்கள் எடுக்க வேண்டிய இரண்டு படிகளை இப்பொழுது சிந்திக்கலாம்.
1. உங்கள் மணவாழ்வுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
‘மிக முக்கியமான காரியங்கள் எவையென நீங்கள் நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும்’ என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (பிலிப்பியர் 1:10, NW) கடவுளுடைய பார்வையில், கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் எப்படி நடத்துகிறார்கள் என்பது மிக மிக முக்கியம். மனைவியை கனப்படுத்துகிற கணவனை கடவுள் கனப்படுத்துவார். தன் கணவனுக்கு மரியாதை கொடுக்கிற மனைவி ‘தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றவளாய்’ இருக்கிறாள்.—1 பேதுரு 3:1–4, 7.
உங்கள் திருமண பந்தத்தை நீங்கள் எந்தளவு உயர்வாய் மதிக்கிறீர்கள்? பொதுவாக, நீங்கள் முக்கியமாக நினைக்கும் ஒரு காரியத்திற்கு நிறைய நேரம் செலவழிப்பீர்கள். ‘போன மாசம், என்னவளுடன் எவ்வளவு நேரம் செலவழித்தேன்? நானும் என் மனைவியும் இன்றுவரை நண்பர்கள் என்பதை அவளுக்கு உறுதிப்படுத்த நான் என்னென்ன செய்திருக்கிறேன்?’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். உங்கள் மணத்துணைக்காக நீங்கள் நேரமே செலவிடுவதில்லை என்றால், திருமண பந்தத்தை நீங்கள் உயர்வாய் மதிக்கவில்லை என்றுதான் அவர் உணருவார்.
திருமண பந்தத்தை நீங்கள் உயர்வாய் மதிக்கிறீர்கள் என்று உங்கள் மணத்துணை நம்புகிறாரா? அதை எப்படித் தெரிந்துகொள்ளலாம்?
இப்படிச் செய்துபாருங்கள்: இந்த ஐந்து அம்சங்களையும் ஒரு பேப்பரில் எழுதிவைத்துக்கொள்ளுங்கள்: பணம், வேலை, திருமணம், பொழுதுபோக்கு, நண்பர்கள். உங்கள் மணத்துணைக்கு எது ரொம்ப இஷ்டம் என்று வரிசைப்படுத்துங்கள். அப்படியே உங்களைப் பற்றியும் உங்கள் மணத்துணையிடம் வரிசைப்படுத்த சொல்லுங்கள். எழுதி முடித்த பிறகு, அந்தப் பட்டியலை உங்களுக்குள் பரிமாற்றம் செய்துகொள்ளுங்கள். திருமணத்திற்கு நீங்கள் போதுமான நேரத்தையோ சக்தியையோ செலவிடுவதில்லை என்று உங்கள் துணை உணர்ந்தால் உங்கள் பந்தத்தை பலப்படுத்த நீங்கள் என்ன மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்பதை இருவரும் கலந்து பேசுங்கள். என் துணைக்கு பிடித்த விஷயங்களில் நானும் ஆர்வம் காட்ட என்ன செய்யலாம்?’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்.
2. உங்கள் கற்புக்கு களங்கம் விளைவிக்கிற எல்லாவற்றையும் தவிருங்கள்.
‘நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரம் செய்தாயிற்று’ என்றார் இயேசு கிறிஸ்து. (மத்தேயு 5:28) ஒருவர் கள்ளத்தொடர்பு வைத்துக்கொள்கையில் திருமண பந்தத்திற்கு பங்கம் விளைவிக்கிறார். இப்படிப்பட்ட செயலே விவாகரத்திற்கு ஆதாரமென பைபிள் சொல்கிறது. (மத்தேயு 5:32) வேறொரு பெண்ணுடன் உடலளவில் உறவு கொள்வதற்கு வெகு காலத்திற்கு முன்பே அவர் மனதளவில் தவறான ஆசைகளை அசைபோட ஆரம்பித்திருப்பார் என்பதையே இயேசுவின் வார்த்தைகள் இங்கு சுட்டிக்காட்டுகின்றன. இப்படிப்பட்ட தவறான ஆசைகளை மனதில் அசைபோடுவதே துரோகம்தான்.
திருமண பந்தத்தைப் பாதுகாத்திட, ‘இனி ஆபாசப் படங்களை பார்க்க மாட்டேன்’ என உறுதி எடுத்துக்கொள்ளுங்கள். மற்றவர்கள் என்ன சொன்னாலும்சரி, ஆபாசப் படங்களைப் பார்ப்பது மணவாழ்வைக் கொன்றுபோடும் விஷமே. ஆபாசப் படங்களைப் பார்க்கும் தன் கணவனைப் பற்றி ஒரு மனைவியின் உள்ளக் குமுறல்: “அந்த மாதிரி படங்கள பார்த்தால்தான் நம் காதல் தீ அணையாமல் இருக்கும் என்று என் வீட்டுக்காரர் சொல்கிறார். ஆனால், அவர் அப்படிச் செய்றது என்னை “சீ”ன்னு நினைக்கத் தோனுது. என்கிட்ட அவருக்குத் திருப்தி கிடைக்கிறதில்லைன்னு யோசிக்க வைக்குது. அவர் அந்தப் படங்களைப் பார்க்கும்போது நான் இராத்திரி பூராவும் அழுதுகிட்டே இருப்பேன்.” இப்படிப்பட்ட ஒருவர் தன் திருமண பந்தத்தை
பலப்படுத்துகிறார் என்று சொல்வீர்களா? அல்லது சீர்குலைக்கிறார் என்று சொல்வீர்களா? மனைவி தன்னுடன் சேர்ந்திருக்க அவர் வழிசெய்வதாக நினைக்கிறீர்களா? அவளை தன் நெருங்கிய தோழியாக நடத்துகிறார் என்பீர்களா?உத்தம புருஷனாகிய யோபு தன் மணத்துணைக்கும் கடவுளுக்கும் உண்மையாயிருக்க தான் கடமைப்பட்டிருப்பதை உணர்ந்து, ‘என் கண்களோடே உடன்படிக்கை பண்ணினேன்’ என்றார். ‘ஒரு கன்னிகையின்மேல் நினைப்பாய் இருக்கக்கூடாது’ என தன் மனதில் உறுதிபூண்டார். (யோபு 31:1) நீங்கள் எப்படி யோபுவை பின்பற்றலாம்?
ஆபாசப் படங்களைப் பார்ப்பதைத் தவிருங்கள்; அதோடு, எதிர்பாலாருடன் தேவையில்லாத நெருக்கத்தை வளர்த்துக்கொள்ளாதபடி உங்கள் இதயத்தைக் காத்துக்கொள்ளுங்கள். அப்படி விளையாட்டு காதல் புரிவதில் எந்தத் தவறுமில்லை என நிறைய பேர் நினைக்கிறார்கள். ஆனால், “எல்லாவற்றைப் பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்?” என்று கடவுளுடைய வார்த்தை எச்சரிக்கிறது. (எரேமியா 17:9) உங்கள் இருதயம் என்றாவது உங்களை அப்படி ஏமாற்றியிருக்கிறதா? பின்வரும் கேள்விகளைச் சிந்தித்துப் பாருங்கள்: ‘யார்மீது என் மனம் சாய்கிறது—என் துணை மீதா அல்லது துணையின் தோழி மீதா? சுவாரஸ்யமான ஒரு செய்தி இருந்தால், முதலில் அதை யாரிடம் சொல்கிறேன்—மனைவியிடமா அல்லது மாற்றான் மனைவியிடமா? ‘அவளிடம் அதிகமாக வச்சிக்காதீங்க’ என்று என் துணை சொன்னால், எப்படி பிரதிபலிப்பேன்—ஆத்திரப்படுவேனா? அல்லது அன்பாய் எடுத்துக்கொள்வேனா?’
இப்படிச் செய்துபாருங்கள்: வேறு யார் மீதாவது உங்கள் கண் போனால், அவருடன் அளவோடு “அளவளாவுங்கள்.” அவருடன் உங்கள் தொடர்பை தொழில் ரீதியோடு நிறுத்திக்கொள்ளுங்கள். உங்கள் துணையைவிட அவர் எந்தெந்த விதத்தில் ‘ஸ்பெஷலாக’ இருக்கிறார் என்று யோசித்துக்கொண்டிருக்காதீர்கள். அதற்குப் பதிலாக உங்கள் துணையிடம் உள்ள ‘ஸ்பெஷாலிட்டிக்கு’ கவனம் செலுத்துங்கள். (நீதிமொழிகள் 31:29) உங்கள் துணைமீது காதல் வசப்பட்டதற்கான காரணங்களை உங்கள் மனத்திரையில் ஓடவிடுங்கள். ‘அவரிடம் உங்களுக்குப் பிடித்த குணங்கள் இப்போது காணாமல் போய்விட்டனவா அல்லது உங்கள் கண்களுக்குத் தெரிவதில்லையா?’ என்று உங்களைக் கேட்டுக்கொள்ளுங்கள்.
நடவடிக்கை எடுங்கள்
மைக்கேலும் மரியாவும் தங்கள் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஆலோசனை பெற தீர்மானித்தார்கள். ஆனால், ஆலோசனை பெறுவது முதல்படிதான். தவறைத் திருத்திக்கொள்வதற்கு மனமுள்ளவர்களாய் இருப்பது அதைவிட முக்கியம்; அப்போதுதான் திருமண பந்தத்தை பாதுகாத்திட முடியும். மைக்கேலும் மரியாவும் இதைத்தான் செய்தார்கள். அதுமட்டுமல்ல, தங்கள் மணவாழ்வு செழிக்க தேவையான படிகளை எடுக்கவும் முன்வந்தார்கள்.
உங்கள் திருமண ஓடம் அமைதலாகப் போய்க்கொண்டிருந்தாலும் சரி தத்தளித்துக்கொண்டிருந்தாலும் சரி, அதைக் கரை சேர்ப்பதில் நீங்கள் குறியாய் இருக்கிறீர்கள் என்பதை உங்கள் துணை அறிந்திருக்க வேண்டும். இதை அவருக்கு உணர்த்த தேவையான எல்லா நடவடிக்கைகளையும் எடுங்கள். இதையெல்லாம் செய்ய நீங்கள் தயார்தானே? (w08 11/1)
a பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
b இங்கு சொல்லப்பட்டுள்ள உதாரணம் ஓர் ஆணைப் பற்றி இருந்தாலும் பெண்ணுக்கும் பொருந்தும்.
உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள் . . .
-
என் துணையோடு நேரம் செலவிட நான் எதையெல்லாம் தவிர்க்க வேண்டும்?
-
திருமண பந்தத்தைக் காப்பதில் எனக்கும் அக்கறை இருக்கிறது என்பதை என் துணைக்கு எப்படிக் காட்டுவது?