Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

‘தேவனைப் பின்பற்றுகிறவர்களாகுங்கள்’

‘தேவனைப் பின்பற்றுகிறவர்களாகுங்கள்’

கடவுளிடம் நெருங்கி வாருங்கள்

‘தேவனைப் பின்பற்றுகிறவர்களாகுங்கள்’

எபேசியர் 4:32–5:2

தயவு. இரக்கம். மன்னித்தல். அன்பு. இப்படிப்பட்ட குணங்கள் இன்று மக்கள் மத்தியில் அபூர்வமாகிவிட்டன. உங்கள் விஷயத்தில்? இத்தகைய தலைசிறந்த குணங்களை வளர்க்க எவ்வளவுதான் முயன்றாலும் உங்கள் முயற்சியெல்லாம் மண்ணைத்தான் கவ்வுகிறதா? உங்களிடம் ஊறிப்போன கெட்ட பழக்கங்களையும் கசப்பான அனுபவங்களையும் பார்த்து நீங்கள் நம்பிக்கை இழந்து போகலாம். ஆம், இனிய பண்புகளை வளர்ப்பதற்கு உங்கள் மனமே முட்டுக்கட்டையாக இருக்கலாம். என்றாலும், பைபிள் ஓர் உண்மையைச் சொல்கிறது: இந்த நல்ல குணங்களை வளர்க்கும் திறமை உங்களுக்குள் புதைந்திருப்பதை படைப்பாளர் அறிவார்.

‘ஆதலால், நீங்கள் பிரியமான பிள்ளைகளைப்போல தேவனைப் பின்பற்றுகிறவர்களாகுங்கள்’ என்று கடவுளுடைய வார்த்தை கிறிஸ்தவர்களை அறிவுறுத்துகிறது. (எபேசியர் 5:1) முத்தான இந்த வார்த்தைகள், தம்மை வணங்குவோர்மீது கடவுள் வைத்திருக்கும் நம்பிக்கையை எதிரொலிக்கின்றன. எப்படிச் சொல்லலாம்? யெகோவா தேவன் மனிதனை தம்முடைய சாயலில், தம்முடைய ரூபத்தில் படைத்திருக்கிறார். (ஆதியாகமம் 1:​26, 27) சொல்லப்போனால், மனிதர்களின் உள்ளத்தில் தம்முடைய பண்புகளை விதைத்திருக்கிறார். a எனவே, ‘தேவனைப் பின்பற்றுகிறவர்களாகுங்கள்’ என்று கிறிஸ்தவர்களை பைபிள் உற்சாகப்படுத்தும்போது, யெகோவாவே அவர்களிடம் இவ்வாறு சொல்வதுபோல் இருக்கிறது: ‘உன்மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. உன்னிடம் எவ்வளவுதான் குறைபாடு இருந்தாலும் ஓரளவுக்கு நீயும் என்னைப்போல ஆகமுடியும்.’

கடவுளுடைய சில குணங்கள் யாவை? அந்த வசனங்களின் சூழமைவு பதிலளிக்கிறது. ‘தேவனைப் பின்பற்றுகிறவர்களாகுங்கள்’ என்று பவுல் அறிவுரை கொடுப்பதற்கு முன், “ஆதலால்” என்று சொல்லி ஆரம்பிப்பதைக் கவனியுங்கள். இது, முந்திய வசனத்தை இணைக்கும் ஓர் இணைப்பு சொல்லாகும். அந்த வசனம், தயவு, மன உருக்கம், மன்னித்தல் ஆகிய குணங்களை குறிப்பிடுகிறது. (எபேசியர் 4:32; 5:1) ‘தேவனைப் பின்பற்றுகிறவர்களாகுங்கள்’ என்று அறிவுறுத்தும் வசனத்தைத் தொடர்ந்து வரும் வசனத்தில், சுயநலமற்ற அன்பை அடிப்படையாக கொண்ட வாழ்க்கை வாழும்படி பவுல் சொல்கிறார். (எபேசியர் 5:2) ஆகவே, தயவு காட்டுவதிலும் கனிவான இரக்கம் காட்டுவதிலும் தாராளமாக மன்னிப்பதிலும் நமக்கு மிகச் சிறந்த முன்மாதிரி யெகோவா தேவனே.

நாம் ஏன் கடவுளைப் போல் இருக்க முயற்சி செய்ய வேண்டும்? பவுலின் வார்த்தைகளில் மறைந்திருக்கும் வலிமையான காரணத்தைக் கவனியுங்கள். ‘பிரியமான பிள்ளைகளைப்போல தேவனைப் பின்பற்றுகிறவர்களாகுங்கள்’ என்று பவுல் சொல்வது நம் நெஞ்சைத் தொடுகிறதல்லவா? தம்மை வணங்கும் மக்களை தம் பிள்ளைகளைப் போல நெஞ்சார நேசிப்பதாக யெகோவா கூறுகிறார். ஒரு சிறு பிள்ளை தன் அப்பாவைப் போலவே இருக்க முயற்சி செய்வதுபோல உண்மைக் கிறிஸ்தவர்களும் தங்கள் பரம தகப்பனைப் போலவே இருக்க தங்களால் இயன்ற அனைத்தையும் செய்கிறார்கள்.

தம்மைப் பின்பற்றும்படி யெகோவா யாரையும் வற்புறுத்துவதில்லை. மாறாக, சுயமாய் தீர்மானிக்கும் திறனை நமக்குக் கொடுத்து நம்மைக் கௌரவித்திருக்கிறார். ஆகவே, கடவுளைப் பின்பற்றுவீர்களா இல்லையா என்பது உங்களைப் பொறுத்தது. (உபாகமம் 30:​19, 20) ஆனால், கடவுளுடைய குணங்களை வெளிக்காட்டும் திறமை உங்களுக்குள் இருக்கிறது என்பதை மட்டும் ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். அதேசமயத்தில், கடவுளைப் பின்பற்றுவதற்கு அவர் எப்படிப்பட்டவர் என்பதை முதலில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். கடவுளுடைய குணங்களையும் வழிகளையும் பற்றி கற்றுக்கொள்வதற்கு பைபிள் உங்களுக்கு உதவி செய்யும். அவரை பின்பற்றுவதற்கு அவருடைய உன்னத குணங்கள் லட்சோபலட்ச மக்களைக் கவர்ந்திருக்கின்றன. (w08 10/1)

[அடிக்குறிப்பு]

a கொலோசெயர் 3:​9, 10 (NW) சொல்கிறபடி, நாம் கடவுளுடைய சாயலில் படைக்கப்பட்டிருப்பதன் அர்த்தம், அவருடைய குணங்கள் நம்மிடம் இருப்பதே. கடவுளைப் பிரியப்படுத்த வேண்டுமென விரும்புகிறவர்கள், ‘புதிய சுபாவத்தை அணிந்துகொள்ளும்படி’ உற்சாகப்படுத்தப்படுகிறார்கள். இந்தச் சுபாவம், அதை ‘சிருஷ்டித்தவருடைய [கடவுளுடைய] சாயலுக்கு ஏற்ப இருக்கிறது.’