உங்கள் ஜெபங்களைக் கடவுள் கேட்பதற்கு . . .
இயேசுவிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்
உங்கள் ஜெபங்களைக் கடவுள் கேட்பதற்கு . . .
இயேசு அடிக்கடி தனிமையான ஓர் இடத்திற்குப் போய் ஜெபம் செய்தார்; தமது சீஷர்களையும் இப்படிச் செய்யச் சொல்லி ஊக்கப்படுத்தினார். “[இயேசு] ஒரு இடத்தில் ஜெபம்பண்ணி முடித்தபின்பு, அவருடைய சீஷரில் ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, . . . ஜெபம்பண்ண . . . நீரும் எங்களுக்குப் போதிக்க வேண்டும் என்றான். அதற்கு அவர்: நீங்கள் ஜெபம் பண்ணும்போது: . . . பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக . . . என்று சொல்லுங்கள்” என அவர் சொன்னதாக பைபிளில் வாசிக்கிறோம். (லூக்கா 5:16; 11:1, 2, 4) தம் தகப்பனாகிய யெகோவாவிடம் மட்டுமே ஜெபம் செய்ய வேண்டுமென இயேசு சொல்லிக் கொடுத்தார். யெகோவாவே நம் படைப்பாளர், நம் ‘ஜெபத்தைக் கேட்கிறவர்.’—சங்கீதம் 65:2.
எல்லா ஜெபங்களையும் கடவுள் கேட்கிறாரா?
ஜெபத்தில் திரும்பத்திரும்ப ஒரே வார்த்தைகளை மனப்பாடமாகச் சொல்வது கடவுளுக்குப் பிடிக்காது. “ஜெபம் செய்யும்போது . . . சொன்னதையே திரும்பத்திரும்பச் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்” என்று இயேசு சொன்னார். (மத்தேயு 6:7, NW) நம் பரலோகத் தகப்பனிடம் நாம் சொல்லும் வார்த்தைகள் உதட்டிலிருந்து அல்ல, உள்ளத்திலிருந்து பிறக்க வேண்டும். யாருடைய ஜெபங்களைக் கடவுள் கேட்கிறார் என்பதைத் தம் சீஷர்களிடம் இயேசு ஒருமுறை தெளிவாகச் சொன்னார்; மதப் பாரம்பரியங்களைக் கறாராகப் பின்பற்றியவருடைய, தலைக்கனம் பிடித்தவருடைய ஜெபத்தை அல்ல, ஆனால் உண்மையிலேயே தன்னை மாற்றிக்கொள்ள விரும்பிய ஒரு பாவியின் ஜெபத்தையே கடவுள் கேட்பாரென அவர் சொன்னார். (லூக்கா 18:10–14) எனவே, கடவுள் நம்மிடம் செய்யச் சொல்கிறவற்றை நாம் மனத்தாழ்மையுடன் செய்தால்தான் அவர் நம் ஜெபங்களைக் கேட்பார். ‘என் பிதா எனக்குப் போதித்தபடியே இவைகளைச் சொன்னேன் . . . அவருக்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறேன்’ என்று இயேசு சொன்னார். (யோவான் 8:28, 29) “என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது” என்று அவர் ஜெபமும் செய்தார்.—லூக்கா 22:42.
என்ன விஷயங்களுக்காக நாம் ஜெபம் செய்யலாம்?
கடவுளுடைய பெயருக்குக் களங்கம் கற்பிக்கப்பட்டிருப்பதால் இயேசு இவ்வாறு சொன்னார்: ‘நீங்கள் ஜெபம் பண்ணவேண்டிய விதமாவது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.’ (மத்தேயு 6:9, 10) கடவுளுடைய ராஜ்யம், அதாவது அரசாங்கம், வருவதற்காக நாம் ஜெபம் செய்ய வேண்டும்; ஏனென்றால், விண்ணிலும் மண்ணிலும் தமது நோக்கத்தை நிறைவேற்ற கடவுள் பயன்படுத்தப்போகும் அரசாங்கம் அதுவே. ‘நமக்கு வேண்டிய ஆகாரத்தை அன்றன்று’ தரும்படி கேட்டு கடவுளிடம் ஜெபம் செய்யலாமென இயேசு சொன்னார். வேலை, வீடு, உடை, உடல்நலம் என எல்லாவற்றிற்காகவும் யெகோவாவிடம் நாம் கேட்கலாம். அதோடு, நம்மை மன்னிக்கும்படி கேட்டும் நாம் ஜெபம் செய்ய வேண்டுமென இயேசு சொன்னார்.—லூக்கா 11:3, 4.
மற்றவர்களுக்காக நாம் ஜெபம் செய்ய வேண்டுமா?
மற்றவர்களுக்காக இயேசு ஜெபம் செய்தார். “சிறுபிள்ளைகளின் மேல் அவர் கைகளை வைத்து ஜெபம் பண்ணும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்” என்று பைபிள் சொல்கிறது. (மத்தேயு 19:13) “உன் விசுவாசம் ஒழிந்து போகாதபடிக்கு உனக்காக வேண்டிக் கொண்டேன்” என்று அப்போஸ்தலன் பேதுருவிடம் இயேசு சொன்னார். (லூக்கா 22:32) மற்றவர்களுக்காக, அதுவும் அவர்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காக, நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம் செய்யும்படி தம் சீஷர்களை அவர் ஊக்கப்படுத்தினார்.—மத்தேயு 5:44; லூக்கா 6:28.
நாம் ஏன் ஊக்கமாய் ஜெபம் செய்ய வேண்டும்?
ஜெபம் செய்வதற்காக இயேசு நேரத்தை ஒதுக்கினார்; ‘சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம் பண்ணுங்கள்’ என்று சீஷர்களை ஊக்கப்படுத்தினார். (லூக்கா 18:1) பிரச்சினைகள் நம்மை அழுத்தும்போது நாம் திரும்பத்திரும்ப ஜெபம் செய்வதன்மூலம் நாம் அவரையே நம்பியிருக்கிறோம் என்பதைக் காட்ட வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார். “கேட்கிறவன் [“கேட்டுக்கொண்டே இருக்கிறவன்,” NW] எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்” என்று இயேசு சொன்னார். தம்மை அப்பாவாக நேசித்து, மதித்து நடக்கிறவர்களுக்கு உதவ அவர் தயங்குகிறார் என இது அர்த்தப்படுத்தாது. ஏனெனில், “பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரம பிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா” என்று இயேசு சொன்னார்.—லூக்கா 11:5–13. (w09 2/1)
கூடுதல் தகவல் பெற, பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? a என்ற புத்தகத்தில் அதிகாரம் 17-ஐக் காண்க.
[அடிக்குறிப்பு]
a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.