கடவுள் யார்?
கடவுள் யார்?
இந்தக் கேள்விக்கு நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்? கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் என மக்கள் நம்புகிறார்கள், அவரிடம் பயபக்தியாய் இருக்கிறார்கள்; ஆனால், அவரைப் பற்றி அவர்களுக்கு அதிகமாக எதுவும் தெரியாது. உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இருந்தால், பின்வரும் கேள்விகளுக்கு நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்?
1. கடவுள் நிஜமான நபரா?
2. கடவுளுக்குப் பெயர் இருக்கிறதா?
3. இயேசு சர்வ வல்லமையுள்ள கடவுளா?
4. கடவுளுக்கு நம்மீது அக்கறை இருக்கிறதா?
5. எல்லா வழிபாட்டு முறைகளையும் கடவுள் ஏற்றுக்கொள்வாரா?
நீங்கள் இந்தக் கேள்விகளை மற்றவர்களிடம் கேட்டால், ஆளுக்கொரு பதிலைச் சொல்வார்கள். கடவுளைப் பற்றிய கட்டுக்கதைகளும், தவறான கருத்துக்களும் ஏன் இந்தளவு பெருகியிருக்கின்றன என்பது இப்போது புரிகிறது, அல்லவா?
பதில்கள் ஏன் முக்கியம்?
ஒருசமயம், கடவுள் பக்தியுள்ள ஒரு பெண்ணை இயேசு கிறிஸ்து கிணற்றருகே சந்தித்தார். அப்போது, உண்மையான கடவுள் யார் என்பதை அவள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டுமென அவர் சொன்னார். இயேசு ஒரு தீர்க்கதரிசி என்பதை அந்தப் பெண் ஒத்துக்கொண்டாள். ஆனால், ஏதோவொரு விஷயம் அவள் மனதைக் குடைந்துகொண்டிருந்தது. அவளுடைய மதமும் இயேசுவினுடைய மதமும் வேறு வேறு. இதைப் பற்றி இயேசுவிடம் அவள் பேசியபோது, “நீங்கள் அறியாததை வணங்குகிறீர்கள்” என்று அவர் சொன்னார். (யோவான் 4:19–22, NW) ஆம், மதப்பற்றுள்ள எல்லாருக்குமே கடவுளைப் பற்றி சரியாகத் தெரியாது என்பதை இயேசு அறிந்திருந்தார்.
யாருமே கடவுளைப் பற்றி சரியாகத் தெரிந்துகொள்ள முடியாது என்ற அர்த்தத்தில் இயேசு அப்படிச் சொன்னாரா? இல்லை. அந்தப் பெண்ணிடம் அவர் தொடர்ந்து சொன்னதைக் கவனியுங்கள்: “உண்மை வணக்கத்தார் பரலோகத் தகப்பனை அவருடைய சக்தியின் வழிநடத்துதலோடும் சத்தியத்தோடும் வணங்கப் போகிற வேளை வருகிறது, அது இப்போதே வந்திருக்கிறது; சொல்லப்போனால், இவ்விதத்தில் தம்மை வணங்க விரும்புகிறவர்களையே தகப்பன் தேடிக்கொண்டிருக்கிறார்.” (யோவான் 4:23, NW) கடவுளை அவருடைய சக்தியின் வழிநடத்துதலோடும் சத்தியத்தோடும் வழிபடுகிறவர்களில் நீங்களும் ஒருவரா?
இந்தக் கேள்விக்கு நீங்கள் சொல்லும் பதில் சரிதானா என்பதைத் தெரிந்துகொள்வது மிக மிக முக்கியம். ஏன்? இயேசு ஜெபம் செய்தபோது, திருத்தமான அறிவைப் பெறுவது அதிமுக்கியம் என்பதைச் சுட்டிக்காட்டி, “ஒன்றான மெய்த் தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்” என்றார். (யோவான் 17:3) ஆம், கடவுள் யார் என்ற உண்மையை அறிந்துகொள்வதன் பேரில்தான் உங்கள் வருங்கால வாழ்க்கையே சார்ந்திருக்கிறது!
சரி, கடவுளைப் பற்றிய உண்மையை நம்மால் உண்மையிலேயே தெரிந்துகொள்ள முடியுமா? கண்டிப்பாக முடியும்! ஆனால், எப்படி? ‘நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்’ என்று இயேசு சொன்னார். (யோவான் 14:6) “தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார், தந்தை யாரென்று மகனுக்குத் தெரியும்; மகன் யாருக்கு வெளிப்படுத்த விரும்புகிறாரோ அவருக்கும் தெரியும். வேறு எவரும் தந்தையை அறியார்” என்றும் அவர் சொன்னார்.—லூக்கா 10:22, பொது மொழிபெயர்ப்பு.
ஆகவே, கடவுளைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு ஒரே வழி, அவருடைய மகன் இயேசு கிறிஸ்துவின் போதனைகளைக் கற்றுக்கொள்வதே. சொல்லப்போனால், “நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்; சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” என இயேசுவே நமக்கு உறுதியளித்திருக்கிறார்.—யோவான் 8:31, 32.
அப்படியானால், ஆரம்பத்தில் கேட்கப்பட்ட அந்த ஐந்து கேள்விகளுக்கு இயேசு எப்படிப் பதிலளிப்பார்? (w09 2/1)
[பக்கம் 4-ன் படம்]
உங்களுக்குச் சரியாகத் தெரியாத ஒரு கடவுளையா நீங்கள் வழிபடுகிறீர்கள்?