பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுங்கள்
சரியானதைச் செய்யவே யோசியா விரும்பினார்
சரியானதைச் செய்வது கஷ்டமென நீ நினைக்கிறாயா? a— ‘ஆமாம் கஷ்டம்’ என்று நீ சொல்லலாம், உன்னைப் போல்தான் நிறையப் பேர் சொல்கிறார்கள். சரியென்று தெரிந்தாலும் அதைச் செய்வதைப் பெரியவர்களும்கூட கஷ்டமென நினைக்கிறார்கள். சரியான தீர்மானங்களை எடுப்பது முக்கியமாய் யோசியாவுக்கு ஏன் கஷ்டமாய் இருந்ததென நாம் பார்க்கலாம். அந்த யோசியா யாரென உனக்குத் தெரியுமா?—
யூதாவை அரசாண்ட ஆமோன் ராஜாவின் மகன்தான் யோசியா. இவர் பிறந்தபோது ஆமோனுக்கு 16 வயதுதான். ஆமோன் கெட்டவராக இருந்தார். அதேபோல்தான் அவருடைய அப்பா மனாசே ராஜாவும் ஒரு காலத்தில் ரொம்ப கெட்டவராக இருந்தார்; சொல்லப்போனால், இந்த மனாசே ராஜா பல வருடங்கள் படுமோசமாக ஆட்சி செய்தார். பிறகு, அசீரியர்கள் இவரைப் பிடித்து, வெகு தூரத்திலிருந்த பாபிலோன் நாட்டுக்குக் கைதியாய் கொண்டு போனார்கள். சிறையில் இருந்தபோது, யெகோவாவிடம் மன்னிப்பு கேட்டு மனாசே கெஞ்சினார்; யெகோவாவும் இவரை மன்னித்துவிட்டார்.
மனாசே விடுதலையாகி எருசலேமுக்குத் திரும்பி வந்தார்; மீண்டும் ராஜாவாக ஆட்சி செய்ய ஆரம்பித்தார். அத்தனை காலமாக தான் செய்துவந்த எல்லா கெட்ட காரியங்களையும் உடனடியாகத் திருத்திக்கொண்டார்; அதோடு, யெகோவாவை வணங்கவும் மக்களுக்கு உதவினார். ஆனால் தன்னுடைய மகன் தன்னைப் பார்த்து திருந்தாததை நினைத்து மனாசே அதிக கவலைப்பட்டிருப்பார். இந்தச் சமயத்தில் யோசியா பிறந்தார். தாத்தா மனாசேயும் பேரன் யோசியாவும் ஒன்றாகச் சேர்ந்து எவ்வளவு நேரம் செலவிட்டார்கள் என்று பைபிள் சொல்வதில்லை. ஆனால், யெகோவாவுக்குச் சேவை செய்ய யோசியாவுக்கு மனாசே உதவி செய்திருப்பாரென நீ நினைக்கிறாயா?—
மனாசே இறந்தபோது யோசியாவுக்கு ஆறு வயதுதான். அப்போது, யோசியாவின் அப்பாவாகிய ஆமோன் ராஜாவானார். ஆமோன் இரண்டு வருடங்கள்தான் ஆட்சி செய்தார்; அதற்குள், அவருடைய ஊழியர்களே அவரைக் கொன்று போட்டார்கள். எனவே, எட்டு வயதில் யோசியா யூதாவின் ராஜாவானார். (2 நாளாகமம், 33-ஆம் அதிகாரம்) அப்போது என்ன நடந்தது தெரியுமா? யோசியா யாருடைய முன்மாதிரியைப் பின்பற்ற விரும்பினார்? அப்பா ஆமோனின் கெட்ட முன்மாதிரியையா? மனந்திருந்திய தாத்தா மனாசேயின் நல்ல முன்மாதிரியையா?—
யெகோவாவுக்குத்தான் சேவை செய்ய வேண்டும் என்பதை இளம் யோசியா அறிந்திருந்தார். எனவே, தன் அப்பாவுடைய நண்பர்களின் சொல்படி நடக்காமல், யெகோவாமீது அன்பு வைத்திருந்தவர்களின் சொல்படி நடந்தார். அப்போது யோசியாவுக்கு எட்டு வயதுதான், இருந்தாலும் யெகோவாவை நேசிக்கிறவர்களின் சொல் கேட்டு நடப்பதுதான் நல்லது என அறிந்திருந்தார். (2 நாளாகமம் 34:1, 2) யோசியாவுக்குப் புத்திமதி சொல்லி, அவருக்கு முன்மாதிரியாக இருந்தவர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள உனக்கு விருப்பமா?—
யோசியாவுக்கு நல்ல முன்மாதிரி வைத்த ஒருவர் செப்பனியா தீர்க்கதரிசி. இவர் யோசியாவின் சொந்தக்காரர்; இவர் மனாசேயுடைய அப்பாவின் வம்சத்தில், அதாவது நல்ல ராஜாவான எசேக்கியாவின் வம்சத்தில் வந்தவராக இருக்கலாம். யோசியா ஆட்சி செய்ய ஆரம்பித்த காலத்தில் செப்பனியா ஒரு புத்தகத்தை எழுதினார்; அந்தப் புத்தகம் இன்றைக்கு அவருடைய பெயரிலேயே பைபிளில் இருக்கிறது. சரியானதைச் செய்ய விரும்பாதவர்களுக்கு வரவிருந்த ஆபத்தைப் பற்றி செப்பனியா எச்சரித்தார். அந்த எச்சரிப்பு செய்தியை யோசியா கண்டிப்பாகக் கேட்டு நடந்திருப்பார்.
அந்தக் காலத்தில்தான் எரேமியாவும் வாழ்ந்துவந்தார்; இவரைப் பற்றி உனக்கு தெரிந்திருக்கலாம். எரேமியாவும் யோசியாவும் இளைஞர்கள், அருகருகே வளர்ந்தவர்கள். யெகோவாவுடைய சக்தியின் உதவியால் எரேமியா ஒரு பைபிள் புத்தகத்தை எழுதினார்; அந்தப் புத்தகம்தான் இன்று எரேமியா என்று அழைக்கப்படுகிறது. போரில் யோசியா இறந்தபோது, அதை நினைத்து எரேமியா ரொம்ப வருத்தப்பட்டார்; தன் வேதனையைத் தெரிவிக்க புலம்பல் என்ற ஒரு விசேஷப் பாடலை எழுதினார். (2 நாளாகமம் 35:25) யெகோவாவுக்கு எப்போதும் உண்மையாய் இருப்பதற்கு அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் எந்தளவு ஊக்கப்படுத்தியிருப்பார்கள் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.
யோசியாவைப் பற்றிப் படித்ததிலிருந்து நீ என்ன பாடம் கற்றுக்கொண்டாய்?— அவரைப் போலவே உன் அப்பாவும் யெகோவாவை வணங்காதவர் என்றால், கடவுளைப் பற்றிக் கற்றுக்கொடுக்க உனக்கு வேறு யாராவது இருக்கிறார்களா? ஒருவேளை உன் அம்மாவோ, பாட்டியோ, உறவினரோ உனக்குக் கற்றுக்கொடுக்கலாம். அல்லது, யெகோவாவை வணங்குகிற யாராவது ஒருவர் உனக்கு பைபிள் படிப்பு நடத்த உன் அம்மா ஏற்பாடு செய்யலாம்.
யெகோவாவுக்குச் சேவை செய்கிறவர்களை மட்டுமே நண்பர்களாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை இளம் யோசியா அறிந்திருந்தார். நீயும் அவரைப் போல நடந்துகொள்; எப்போதும் சரியானதையே செய்ய விரும்பு. (w09 2/1)
a நீங்கள் பிள்ளைகளுடன் சேர்ந்து படிக்கிறீர்கள் என்றால், கோடிட்ட இடத்தில் சற்று நிறுத்தி அங்கு கேட்கப்பட்ட கேள்விக்கு உங்கள் பிள்ளையையே பதில் சொல்ல சொல்லுங்கள்.