எல்லாவற்றுக்கும் ஒரு காலம் உண்டு
எல்லாவற்றுக்கும் ஒரு காலம் உண்டு
“ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு” என பைபிள் குறிப்பிடுகிறது. இந்த வார்த்தைகளை எழுதிய பூர்வகால ஞானியான சாலொமோன் ராஜா, பிறக்க ஒரு காலமுண்டு, இறக்க ஒரு காலமுண்டு, கட்ட ஒரு காலமுண்டு, இடிக்க ஒரு காலமுண்டு, சிநேகிக்க ஒரு காலமுண்டு, பகைக்க ஒரு காலமுண்டு என்று தொடர்ந்து சொன்னார். கடைசியாக, “வருத்தப்பட்டுப் பிரயாசப்படுகிறவனுக்கு அதினால் பலன் என்ன?” என்று கேட்டார்.—பிரசங்கி 3:1-9.
சிலர் இந்த வார்த்தைகளைப் படித்தவுடனேயே, எல்லாவற்றிற்கும் ஒரு காலம் முன்னரே தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பைபிள் சொல்கிறதென நினைத்துவிடுகிறார்கள்; அதாவது, விதி என்ற கோட்பாட்டை பைபிள் ஆதரிப்பதாக நினைத்துவிடுகிறார்கள். ஆனால், அது உண்மையா? வாழ்க்கையில் நடக்கிற எல்லாவற்றையுமே விதி கட்டுப்படுத்துவதாக பைபிள் சொல்கிறதா? ‘வேதவசனங்கள் எல்லாம் கடவுளுடைய சக்தியினால் அருளப்பட்டிருப்பதால்’ பைபிளின் ஒரு பகுதியில் நாம் வாசிக்கும் விஷயம் அதன் மற்ற பகுதிகளோடு ஒத்துப்போக வேண்டும். ஆகவே, விதியைப் பொறுத்ததில் கடவுளுடைய புத்தகமான பைபிளின் மற்ற பகுதிகள் என்ன சொல்கின்றன என்று பார்க்கலாம்.—2 தீமோத்தேயு 3:16.
எதிர்பாராத வேளைகளும் அசம்பாவிதங்களும்
பிரசங்கி என்ற பைபிள் புத்தகத்தில் சாலொமோன் ராஜா மேலுமாக இப்படி எழுதினார்: “உலகில் வேறொன்றையும் கண்டேன்: ஓட்டப் பந்தயத்தில் விரைவாக ஓடுபவரே வெற்றி பெறுவார் என்பதில்லை. வலிமை வாய்ந்தவரே போரில் வெற்றி அடைவார் என்பதில்லை. ஞானமுள்ளவருக்கு வேலை கிடைக்கும் என்பதில்லை. அறிவுள்ளவரே செல்வம் சேர்ப்பார் என்பதில்லை. திறமை உடையவரே பதவியில் உயர்வார் என்பதில்லை.” (பொது மொழிபெயர்ப்பு) ஏன்? ஏனென்றால், “எதிர்பாராத வேளைகளில் அசம்பாவிதங்கள் எல்லாருக்கும் நேரிடுகின்றன” என்று அவர் எழுதினார்.—பிரசங்கி 9:11, NW.
ஆகவே, வாழ்க்கையில் நடக்கிற எல்லாமே விதியின் கையில் இருப்பதாகச் சாலொமோன் சொல்லவில்லை; மாறாக, முயற்சிகளுக்குப் பலன் கிடைக்குமா கிடைக்காதா என எந்த மனிதனாலும் சரியாகக் கணிக்க முடியாது என்பதைத்தான் அவர் சுட்டிக்காட்டினார். ஏனென்றால், ‘எதிர்பாராத வேளைகளில் அசம்பாவிதங்கள் எல்லாருக்கும் நேரிடும்’ என்றார். எனவே, ஒருவர் சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருப்பதால் அல்லது தவறான நேரத்தில் தவறான இடத்தில் இருப்பதால்தான் பெரும்பாலும் நல்லதோ கெட்டதோ நடக்கிறது.
உதாரணத்திற்கு, “ஓட்டப் பந்தயத்தில் விரைவாக ஓடுபவரே வெற்றி பெறுவார் என்பதில்லை” என்ற வாக்கியத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அ.ஐ.மா., கலிபோர்னியாவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 1984-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்ஸ் போட்டி உங்களுக்கு நினைவிருக்கலாம்; அதில் புதுமை படைத்து பிரபலமடைந்த ஒன்றுதான் பெண்களுக்கான 3,000 மீட்டர் ஓட்டப்பந்தயம். அந்தப் பந்தயத்தில் தங்கப் பதக்கத்தைத் தட்டிச்செல்ல விரும்பிய இரண்டு வீராங்கனைகளில் ஒருவர்
பிரிட்டனைச் சேர்ந்தவர், மற்றவர் அமெரிக்காவைச் சேர்ந்தவர். ஆனால், பந்தயத்தில் அவர்கள் ஓடிக்கொண்டிருந்தபோதே திடீரென்று ஒருவர்மீது ஒருவர் மோதிக்கொண்டார்கள். ஒருவர் அங்கேயே விழுந்துவிட்டதால் ஓட்டத்தைத் தொடர முடியவில்லை; மற்றவர் மனமுடைந்துபோனதால் ஏழாவது இடத்தையே பிடிக்க முடிந்தது.இதெல்லாம் விதியின் விளையாட்டா? சிலர் அப்படித்தான் சொல்கிறார்கள். ஆனால், இருவரும் மோதிக்கொண்டது ஒரு விபத்து என்பதுதான் உண்மை; இப்படி அவர்கள் தோற்றுப்போவார்களென யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இருந்தாலும், அவர்கள் மோதிக்கொள்ள வேண்டுமென்பது விதியா? சிலர் அப்படி நினைக்கலாம். ஆனால், விமர்சகர்களின் கருத்தென்ன? சம வலிமைபடைத்த இரண்டு வீராங்கனைகள் ஒருவரையொருவர் முந்த வேண்டுமென்ற வெறியில் ஓடியதால் வந்த வினையே அந்த விபத்து என்று அவர்கள் சொல்கிறார்கள். ஆகவே, “எதிர்பாராத வேளைகளில் அசம்பாவிதங்கள் எல்லாருக்கும் நேரிடுகின்றன” என பைபிள் சொல்வது முற்றிலும் உண்மை. ஒருவர் எவ்வளவு நன்றாகத் திட்டமிட்டு செயல்பட்டாலும் எதிர்பாராத சம்பவங்கள் நடக்கத்தான் செய்கின்றன; அதற்கும் விதிக்கும் சம்பந்தமே இல்லை.
அப்படியென்றால், “ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு” என்று பைபிள் சொல்வதன் அர்த்தம் என்ன? நம்முடைய வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் மாற்ற நம்மால் ஏதாவது செய்ய முடியுமா?
எல்லாவற்றிற்கும் சிறந்த காலம்
கடவுளுடைய தூண்டுதலால் மேற்குறிப்பிட்ட வார்த்தைகளை எழுதிய சாலொமோன், ஒருவருடைய விதியைப் பற்றியோ அவருடைய வாழ்க்கை எப்படி அமையும் என்பதைப் பற்றியோ சொல்லவில்லை. மாறாக, கடவுளுடைய நோக்கத்தைப் பற்றியும் அதில் மனிதர்கள் எப்படி உட்பட்டிருக்கிறார்கள் என்பதைப் பற்றியுமே சொன்னார். இது எப்படி நமக்குத் தெரியும்? அவர் எழுதிய முந்தைய பிந்தைய வசனங்கள் இதையே காட்டுகின்றன. எல்லாவற்றிற்கும் ‘ஒரு காலமுண்டு’ என பல காரியங்களைப் பற்றிச் சொன்ன பிறகு அவர் இவ்வாறு எழுதினார்: “மனுபுத்திரர் பாடுபடும்படி தேவன் அவர்களுக்கு நியமித்த தொல்லையைக் [“வேலையைக்,” NW] கண்டேன். அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்.”—பிரசங்கி 3:10, 11.
மனிதர்களுக்கு அநேக வேலைகளைக் கடவுள் கொடுத்திருக்கிறார், அவற்றில் பலவற்றைச் சாலொமோன் குறிப்பிட்டார். விருப்பம்போல் எதை வேண்டுமானாலும் செய்வதற்கான சுதந்திரத்தையும் கடவுள் மனிதர்களுக்குக் கொடுத்திருக்கிறார். ஆனாலும், ஒவ்வொரு வேலைக்கும் ஏற்ற காலம் ஒன்று இருக்கிறது; அதுவே சிறந்த பலனளிக்கும் காலம். உதாரணத்திற்கு, “நட ஒரு காலமுண்டு, நட்டதைப் பிடுங்க ஒரு காலமுண்டு” என்று பிரசங்கி -ல் சாலொமோன் சொன்னதை எடுத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு பயிரையும் நடுவதற்கென்று ஒரு காலம் உண்டு என்பதை விவசாயிகள் அறிந்திருக்கிறார்கள். இந்த எளிய உண்மையை ஒரு விவசாயி புறக்கணித்துவிட்டு, தவறான காலத்திலோ பருவத்திலோ பயிரை நட்டால் என்னவாகும்? அவர் அரும்பாடுபட்டும் நல்ல விளைச்சல் கிடைக்காமல் போகும்போது விதியைக் குற்றப்படுத்த முடியுமா? நிச்சயமாக முடியாது! ஏற்ற காலத்தில் பயிரை நடாமல் போனது அவருடைய தவறு. படைப்பாளர் ஏற்படுத்தியிருக்கும் இயற்கை நியதிகளை அவர் மதித்து நடந்திருந்தால் நல்ல விளைச்சலைப் பெற்றிருந்திருப்பார். 3:2
ஆகவே, கடவுள் மனிதர்களுடைய விதியையோ முடிவையோ நிர்ணயிக்கவில்லை; மாறாக, மனிதருடைய நடவடிக்கைகளைத் தமது நோக்கத்திற்கு இசைவாகக் கட்டுப்படுத்தும் சில நியமங்களையே நிர்ணயித்திருக்கிறார். மனிதர்கள் தங்களுடைய முயற்சிகளுக்குக் கைமேல் பலனைப் பெற வேண்டுமென்றால், கடவுளுடைய நோக்கத்தையும் காலத்தையும் புரிந்துகொண்டு அவற்றிற்கு இசைவாகச் செயல்படுவது அவசியம். மனிதர்களுடைய விதி அல்ல, கடவுளுடைய நோக்கமே முன்தீர்மானிக்கப்பட்டதாகவும் மாற்ற முடியாததாகவும் இருக்கிறது. ஏசாயா என்ற தீர்க்கதரிசியின் மூலம் யெகோவா தேவன் இவ்வாறு சொன்னார்: “என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் . . . வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச் செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்.”—ஏசாயா 55:11.
அப்படியென்றால், பூமிக்கும் மனிதருக்குமான எதிர்காலத்தைப் பற்றிய கடவுளுடைய ‘வசனம்,’ அதாவது அவர் குறிப்பிட்டிருக்கிற நோக்கம் என்ன? அது எப்படி “வாய்க்கும்,” அதாவது வெற்றிகரமாக நிறைவேறும்?
கடவுளுடைய காலத்தைப் புரிந்துகொள்ளுதல்
இதைப் புரிந்துகொள்ள சாலொமோன் ஒரு குறிப்பைச் சொன்னார். “[கடவுள்] சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்” எனக் குறிப்பிட்ட பிறகு, “நித்தியகால நினைவையும் அவர்கள் உள்ளத்திலே வைத்திருக்கிறார்; என்றாலும் கடவுள் ஆதிமுதல் அந்தம்மட்டும் செய்துவரும் கிரியையை மனுஷன் கண்டுணரான்” எனச் சொன்னார்.—பிரசங்கி 3:11; திருத்திய மொழிபெயர்ப்பு.
இந்த வசனத்திற்கு அநேக விளக்கங்கள் தரப்பட்டிருக்கின்றன. ஆனால், அதிலுள்ள எளிய உண்மை இதுதான்: எதற்காக வாழ்கிறோம் என்றும் கடைசியில் எங்கே போய்ச் சேருவோம் என்றும் நாம் ஒவ்வொருவருமே ஏதோவொரு காலக்கட்டத்தில் ஆழ்ந்து சிந்தித்திருக்கிறோம். பாடுபட்டு உழைப்பதும் கடைசியில் செத்துப்போவதும்தான் வாழ்க்கை என்பதை ஜீரணிப்பது தொன்றுதொட்டே மக்களுக்குக் கஷ்டமாக இருந்து வந்திருக்கிறது. மனிதர்களாகிய நாம் தற்கால வாழ்க்கையை மட்டுமல்ல எதிர்கால வாழ்க்கையைப் பற்றியும் யோசிக்கிறோம்; இவ்விஷயத்தில் மற்றெல்லா உயிரினங்களையும்விட விசேஷமானவர்களாக இருக்கிறோம். நித்தியத்திற்கும், அதாவது என்றென்றைக்கும், வாழ்வதற்குக்கூட நாம் ஏங்குகிறோம். ஏன்? ஏனென்றால், கடவுள் ‘நித்தியகால நினைவை [மனிதர்களின்] உள்ளத்திலே வைத்திருக்கிறார்’ என்று பைபிள் விளக்குகிறது.
மக்கள், என்றென்றும் வாழும் ஏக்கத்தைத் தீர்த்துக்கொள்வதற்காக, சாவுக்குப்பின் வாழ்வு உண்டென நம்புகிறார்கள். நாம் இறந்த பின்பு நமக்குள் இருக்கிற ஏதோவொன்று தொடர்ந்து உயிர்வாழ்வதாகச் சிலர் நினைக்கிறார்கள். மனிதர்கள் அடுத்தடுத்து பல பிறவிகளை எடுத்துக்கொண்டே இருப்பார்களென இன்னும் சிலர் கருதுகிறார்கள். மற்றவர்களோ, வாழ்க்கையில் நடக்கிற எல்லாமே விதி விட்ட வழி அல்லது கடவுள் விட்ட வழி, மனிதர்கள் கையில் ஒன்றுமில்லை என முடிவுசெய்கிறார்கள். ஆனால் வருத்தமான விஷயம் என்னவென்றால், இவர்களுடைய விளக்கங்கள் எதுவும் பூரண திருப்தி அளிப்பதில்லை. ஏனெனில், ‘கடவுள் ஆதிமுதல்
அந்தம்மட்டும் செய்துவரும் கிரியையை மனுஷன் [சொந்த முயற்சியினால்] கண்டுணர முடியாது’ என்று பைபிள் சொல்கிறது.உண்மையைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற துடிப்பு ஒரு பக்கமும் அதைத் தெரிந்துகொள்ள முடியவில்லையே என்ற தவிப்பு இன்னொரு பக்கமும் நெருக்குவதால் சிந்தனையாளர்களும் தத்துவஞானிகளும் காலங்காலமாகவே திண்டாடி வருகிறார்கள். இருந்தாலும், என்றென்றுமாக வாழும் ஆசையைக் கடவுள் நம் உள்ளத்தில் வைத்திருப்பதால், அதைத் திருப்தி செய்வதற்குத் தேவையானவற்றையும் தருவாரென நாம் நிச்சயம் எதிர்பார்க்கலாம். யெகோவா தேவன், ‘தமது கையைத் திறந்து, சகல பிராணிகளின் வாஞ்சையையும் திருப்தியாக்குகிறார்’ என்றல்லவா பைபிள் சொல்கிறது! (சங்கீதம் 145:16) அவருடைய புத்தகமான பைபிளைப் புரட்டினால், வாழ்வையும் சாவையும் குறித்தும், பூமியையும் மனிதரையும் பற்றிய அவருடைய நித்திய நோக்கத்தைக் குறித்தும் திருப்தியான விளக்கங்களைப் பெறுவோம்.—எபேசியர் 3:11. (w09 3/1)
[பக்கம் 5-ன் சிறுகுறிப்பு]
“ஓட்டப் பந்தயத்தில் விரைவாக ஓடுபவரே வெற்றி பெறுவார் என்பதில்லை.” —பிரசங்கி 9:11, பொ.மொ.
[பக்கம் 6-ன் சிறுகுறிப்பு]
ஏற்ற காலத்தில் பயிரை நடாமல் போன ஒரு விவசாயி, நல்ல விளைச்சல் கிடைக்காததற்கு விதியைக் குற்றப்படுத்த முடியுமா?
[பக்கம் 7-ன் சிறுகுறிப்பு]
கடவுள் ‘நித்தியகால நினைவை [மனிதர்களின்] உள்ளத்திலே வைத்திருப்பதால்தான்’ நாம் வாழ்வையும் சாவையும் குறித்து யோசிக்கிறோம்