பணத்தைக் கடவுள் வாரி வழங்குகிறாரா?
பணத்தைக் கடவுள் வாரி வழங்குகிறாரா?
‘நீங்கள் பணக்காரராகிவிட வேண்டுமென்று கடவுள் விரும்புகிறார். கராஜில் கார்கள், தொழிலில் லாபம் என அனைத்தையும் அவர் வாரி வழங்குவார். அதனால், அவர்மேல் நம்பிக்கை வைத்து, உங்கள் பர்ஸைத் திறந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு பணத்தையும் அவருக்குக் கொடுங்கள்.’
பிரேசிலில் உள்ள சில மதப் பிரிவினர் இப்படித்தான் போதிப்பதாக அங்கு அச்சிடப்படும் செய்தித்தாள் ஒன்று குறிப்பிடுகிறது. அநேகர் இதை மறுயோசனையின்றி நம்பிவிடுகிறார்கள். அமெரிக்காவில் கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் மத்தியில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின்படி, “மக்கள் செல்வச் செழிப்புடன் வாழ வேண்டுமென்று கடவுள் விரும்புகிறார் என 61 சதவீதத்தினர் சொன்னார்கள். 31 சதவீதத்தினரோ . . . கடவுளுக்கு நம்முடைய பணத்தைக் கொடுத்தால் அவர் அதிக பணத்தைக் கொடுத்து நம்மை ஆசீர்வதிப்பார் என்று நம்புவதாக ஒத்துக்கொண்டார்கள்” என டைம் பத்திரிகை குறிப்பிடுகிறது.
இப்படிப்பட்ட கருத்துகள் பெருவாழ்வு இறையியல் தத்துவத்தைச் சார்ந்தவையாகும்; முக்கியமாக, பிரேசில் போன்ற லத்தீன்-அமெரிக்க நாடுகளில் இக்கருத்துகள் அதிவேகமாகப் பரவி வருகின்றன. அதுமட்டுமல்ல, கடவுள் பணமும் பொருளும் கொடுத்து ஆசீர்வதிப்பார் என உறுதியளிக்கிற சர்ச்சுகளுக்கு மக்கள் திரண்டு செல்கிறார்கள். ஆனால், தம்மை வழிபடுவோருக்குக் கடவுள் உண்மையிலேயே சொத்துசுகம் கொடுப்பதாக வாக்குக் கொடுக்கிறாரா? முற்காலத்தில் வாழ்ந்த கடவுளுடைய ஊழியர்கள் எல்லாருமே செல்வந்தர்களாக இருந்தார்களா?
கடவுளுடைய ஆசீர்வாதத்தைப் பெற்றவர்கள் செல்வச்செழிப்புடன் வாழ்ந்ததைப் பற்றி எபிரெய வேதாகமத்தில் நாம் அடிக்கடி வாசிப்பது உண்மையே. உதாரணமாக, உபாகமம் 8:18-ல் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “உன் தேவனாகிய கர்த்தரை நினைப்பாயாக; அவரே . . . ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறதற்கான பெலனை உனக்குக் கொடுக்கிறவர்.” இது, கடவுளுக்குக் கீழ்ப்படிந்து நடந்தால் அவர் பெருவாழ்வு அளிப்பார் என்ற உறுதியை இஸ்ரவேலருக்கு அளித்தது.
தனி நபர்களைப் பற்றி என்ன சொல்லலாம்? நேர்மையான மனிதனாகிய யோபு பெரும் செல்வந்தராக இருந்தார். சாத்தான் அவரை ஏழ்மை நிலைக்குத் தள்ளியபோதிலும், யெகோவா அவருக்கு “இரண்டத்தனையாய்” செல்வத்தைக் கொடுத்து உயர்த்தினார். (யோபு 1:3; 42:10) ஆபிரகாமும்கூட செல்வச் சீமானாய் இருந்தார். அவருக்கு ‘மிருகஜீவன்களும் வெள்ளியும் பொன்னுமான ஆஸ்திகளும்’ இருந்ததாக ஆதியாகமம் 13:2 கூறுகிறது. தன்னுடைய சகோதரனின் மகனான லோத்துவை நான்கு கிழக்கத்திய ராஜாக்களின் படைவீரர்கள் ஒன்றுசேர்ந்து கைப்பற்றிச் சென்றபோது, ஆபிரகாம் ‘தன் வீட்டில் பிறந்து வளர்ந்து பயிற்சி பெற்ற முந்நூற்றுப் பதினெட்டுப் பேரைத் திரட்டிக்கொண்டு’ சென்றார். (ஆதியாகமம் 14:14, பொது மொழிபெயர்ப்பு) ஆயுதங்களைப் பயன்படுத்தும் அளவுக்குப் “பயிற்சி பெற்ற” 318 பேர் இருந்தார்கள் என்றால் ஆபிரகாமின் குடும்பம் மிகப் பெரியதாக இருந்திருக்க வேண்டும். அவர் எக்கச்சக்கமான ஆட்டு மந்தைகளையும் கால்நடைகளையும் வைத்திருந்த சீமானாக இருந்ததால்தான் அத்தனை பெரிய குடும்பத்தை அவரால் பராமரிக்க முடிந்தது.
ஆம், முற்காலத்தில் கடவுளுக்கு உண்மையாய் இருந்த ஊழியர்கள் பலர் செல்வந்தர்களாக இருந்தார்கள். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, தாவீது, சாலொமோன் போன்றோர்
அவர்களில் சிலர். என்றாலும், கடவுளை வழிபடுகிற ஒவ்வொருவரையும் அவர் பணக்காரராக்குவார் என இது அர்த்தப்படுத்துகிறதா? மறுபட்சத்தில், ஏழ்மையில் வாடுகிற ஒருவருக்குக் கடவுளுடைய ஆசீர்வாதம் இல்லை என்று அர்த்தமா? இக்கேள்விகளுக்கான பதில் அடுத்தக் கட்டுரையில். (w09 09/01)