Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாவம் அதைப் பற்றிய உண்மைகள்

பாவம் அதைப் பற்றிய உண்மைகள்

பாவம் அதைப் பற்றிய உண்மைகள்

ஒரு நோயாளிக்குக் காய்ச்சல் இருக்கிறது என தெர்மாமீட்டர் (வெப்பமானி) காட்டுகிறது. ஆனால், அவர் அந்தத் தெர்மாமீட்டரை உடைத்துவிட்டு தனக்குக் காய்ச்சலே இல்லை என்று சொன்னால் அது சரியாக இருக்குமா? கண்டிப்பாக இல்லை. அதுபோல், பாவத்தைப் பற்றிய கடவுளின் கண்ணோட்டத்தை அநேகர் ஏற்றுக்கொள்ளாததால், பாவம் என்ற ஒன்றே இல்லை எனச் சொல்ல முடியுமா? முடியாது. பாவத்தைப் பற்றி பைபிள் ஏராளமான தகவலைத் தருகிறது. அது உண்மையில் என்ன சொல்கிறது?

எல்லாருமே பாவிகள்

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, அப்போஸ்தலன் பவுல் வருத்தத்தோடு இவ்வாறு எழுதினார்: “நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல் விரும்பாத தீமையையே செய்து வருகிறேன்.” (ரோமர் 7:19) நாம் நேர்மையாய் யோசித்துப் பார்த்தால், நம் நிலையும் இதுதான் என்பதை ஒத்துக்கொள்வோம். பைபிளிலுள்ள பத்துக் கட்டளைகளின்படி நாம் வாழ விரும்பலாம், அல்லது வேறு ஒழுக்கநெறிகளின்படி வாழ விரும்பலாம். என்றாலும் அவற்றை நம்மால் முழுமையாகக் கடைப்பிடிக்க முடிவதில்லை. நாம் யாரும் வேண்டுமென்றே சட்டத்தை மீற நினைப்பதில்லை. ஆனால், நாம் பலவீனராய் இருக்கிறோம். இதன் அர்த்தம் என்ன? பவுலே இதற்குப் பதிலளிக்கிறார்: “நான் விரும்பாததைச் செய்கிறேன் என்றால், அதை நானாகச் செய்யவில்லை, எனக்குள் குடிகொண்டிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது.”ரோமர் 7:20.

பவுல் மட்டுமல்ல, நாம் எல்லாரும் பிறவியிலேயே பலவீனர்களாக இருக்கிறோம்; அதாவது, வழிவழியாக வந்த பாவத்தையும் அபூரணத்தையும் பெற்றிருக்கிறோம். “எல்லாருமே பாவம் செய்து கடவுளுடைய மகிமையான குணங்களைப் பிரதிபலிக்கத் தவறியிருக்கிறார்கள்” என்று பவுல் எழுதினார். மனிதர்களுடைய இந்த நிலைமைக்குக் காரணம் என்ன? அவரே தொடர்ந்து இப்படி எழுதினார்: “ஒரே மனிதனால் பாவமும் பாவத்தினால் மரணமும் இந்த உலகத்தில் வந்தது; இவ்வாறு, எல்லா மனிதர்களும் பாவம் செய்ததால் மரணம் எல்லா மனிதர்களுக்கும் பரவியது.”—ரோமர் 3:23; 5:12.

நம்முடைய முதல் பெற்றோர் கடவுளுடைய சட்டத்தை மீறியதால் அவரிடமிருந்து பிரிந்துவிட்டார்கள்; அதோடு, பரிபூரணத்தையும் இழந்துவிட்டார்கள். இந்தக் கருத்தை அநேகர் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், இதுதான் பைபிள் கற்பிக்கிற உண்மை. இயேசு பூமியிலிருந்தபோது ஆதியாகமம் முதல் அதிகாரத்திலிருந்து மேற்கோள் காட்டிப் பேசினார்; இதன் மூலம் ஆதாம் ஏவாளைப் பற்றிய பைபிள் பதிவைத் தாம் நம்புவதைத் தெரிவித்தார்.ஆதியாகமம் 1:27; 2:24; 5:2; மத்தேயு 19:1-5.

தம்மீது விசுவாசம் வைக்கிறவர்களுக்குப் பாவத்திலிருந்து விடுதலை அளிக்க இயேசு பூமிக்கு வந்தார் என்பது பைபிளின் ஒரு அடிப்படை போதனையாகும். (யோவான் 3:16) பாவத்தின் பிடியில் சிக்கிப் பரிதவிக்கும் மனிதர்களை மீட்பதற்காகக் கடவுள் இந்த ஏற்பாட்டைச் செய்தார்; இந்த ஏற்பாட்டை நாம் ஏற்றுக்கொள்கிறோமா இல்லையா என்பதில்தான் நம் எதிர்காலமே சார்ந்திருக்கிறது. பாவத்தைப் பற்றிய கடவுளின் கண்ணோட்டம் நமக்கு இல்லையென்றால், நம்மை மீட்பதற்காக அவர் செய்திருக்கும் ஏற்பாட்டை நம்மால் புரிந்துகொள்ளவும் முடியாது, அதற்கு நன்றிகாட்டவும் முடியாது.

இயேசுவின் பலிநமக்கு ஏன் தேவை?

முதல் மனிதன் ஆதாமுக்கு என்றென்றும் வாழும் வாய்ப்பை யெகோவா கொடுத்தார். அவன் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல்போனால் மட்டுமே அந்தப் பொன்னான வாய்ப்பை இழந்துபோவான் என்றும் சொன்னார். ஆதாம் கீழ்ப்படியாமல்போனான், அதனால் பாவியானான். (ஆதியாகமம் 2:15-17; 3:6) ஆதாம் கடவுளுடைய சித்தத்திற்கு எதிராகச் செயல்பட்டான், பரிபூரணத்தை இழந்தான், கடவுளிடமிருந்த பந்தத்தை முறித்துக்கொண்டான். கடவுளுடைய சட்டத்தை மீறி பாவம் செய்தபோது கொஞ்சம் கொஞ்சமாக வயதாகி கடைசியில் இறந்துபோனான். வருத்தகரமாக, நாம் உட்பட அவனுடைய சந்ததிகள் எல்லாருமே பாவிகளாக பிறந்திருக்கிறோம்; கடைசியில் இறந்துபோகிறோம். ஏன்?

ஏனென்றால், அபூரணப் பெற்றோர்கள் பரிபூரணப் பிள்ளைகளைப் பெற்றெடுக்க முடியாது. ஆதாமின் சந்ததிகள் அனைவரும் பாவிகளாகப் பிறந்திருக்கிறார்கள்; “பாவத்தின் சம்பளம் மரணம்” என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னார். (ரோமர் 6:23) ஆனால், அந்த வசனத்தின் பிற்பகுதி நமக்கு நம்பிக்கை அளிக்கிறது: “நம் எஜமானராகிய கிறிஸ்து இயேசுவின் மூலம் கடவுள் தரும் அன்பளிப்போ முடிவில்லா வாழ்வு.” அதாவது, இயேசுவுடைய தியாக மரணத்தின் மூலம் கீழ்ப்படிதலுள்ள மனிதர்கள் ஆதாமினால் வந்த பாவத்திலிருந்து கழுவப்படுகிறார்கள். a (மத்தேயு 20:28; 1 பேதுரு 1:18, 19) இதைப் பற்றி நீங்கள் எப்படி உணருகிறீர்கள்?

கிறிஸ்துவின் அன்பு ‘நம்மைத் தூண்டியெழுப்புகிறது’

இந்தக் கேள்விக்குக் கடவுள் தரும் பதிலை அவருடைய சக்தியின் தூண்டுதலால் அப்போஸ்தலன் பவுல் எழுதினார்: “கிறிஸ்துவின் அன்பு எங்களைத் தூண்டியெழுப்புகிறது; ஏனென்றால், எல்லாருக்காகவும் அவர் ஒருவரே இறந்தார்; . . . அவர் எல்லாருக்காகவும் இறந்திருப்பதால், வாழ்கிறவர்கள் இனி தங்களுக்காக வாழாமல் தங்களுக்கென்று இறந்து உயிர்த்தெழுந்தவருக்காகவே வாழ வேண்டுமென உணர்ந்திருக்கிறோம்.” (2 கொரிந்தியர் 5:14, 15) இயேசுவின் பலி பாவத்தின் பிடியிலிருந்து தன்னை மீட்க முடியும் என்பதை ஒருவர் மதித்துணர்ந்தால்.. அதற்கான நன்றியுணர்வைக் காட்ட விரும்பினால்.. கடவுள் எதிர்பார்க்கிறபடி வாழ்வதற்கு கடும் முயற்சி எடுக்க வேண்டும். இதற்கு, கடவுள் என்ன எதிர்பார்க்கிறார் என அறிந்துகொள்வதும், பைபிள் நெறிகளின்படி மனசாட்சியைப் பயிற்றுவிப்பதும், அவற்றிற்கு இசைவாக வாழ்வதும் அவசியம்.யோவான் 17:3, 17.

நாம் செய்யும் தவறுகள் யெகோவாவுடன் நமக்குள்ள பந்தத்தைக் குலைத்துவிடுகின்றன. தாவீது ராஜா பத்சேபாளுடன் உடலுறவு கொண்டு, அவளுடைய கணவரைக் கொலை செய்தார்; தன்னுடைய தவறை உணர்ந்தபோது, குற்றவுணர்வால் புழுங்கினார். தான் செய்த பாவங்கள் கடவுளை எந்தளவு புண்படுத்தியிருக்கும் என்பதை நினைத்து மிகவும் வருத்தப்பட்டார். அப்படி வருத்தப்பட நியாயமான காரணமும் இருந்தது. “தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவஞ்செய்து, உமது கண்களுக்கு முன்பாக பொல்லாங்கானதை நடப்பித்தேன்” என்று வருத்தத்தோடு கடவுளிடம் சொன்னார். (சங்கீதம் 51:4) மற்றொரு உதாரணம், யோசேப்பு; அவரை போத்திபாரின் மனைவி உடலுறவு கொள்ளும்படி வற்புறுத்தியபோது, “நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி” என்று சொன்னார்; அப்படிச் சொல்ல அவரது மனசாட்சி அவரைத் தூண்டியது.—ஆதியாகமம் 39:9.

அப்படியென்றால், பாவம் என்பது தவறுசெய்து கையும் களவுமாக மாட்டிக்கொள்ளும்போது நமக்குள் ஏற்படுகிற குற்றவுணர்வு அல்ல. ஏதோவொரு சமுதாய நெறியை மீறியதால் அந்தச் சமுதாயத்திற்குப் பதிலளிக்க வேண்டும் என்ற உணர்வும் அல்ல. அது கடவுளோடு நமக்குள்ள உறவைப் பாதிக்கிற விஷயம். பாலுறவு, நேர்மை, மரியாதை, வழிபாடு போன்ற விஷயங்களில் கடவுளுடைய சட்டத்தை மீறினால், அவரோடு நமக்குள்ள பந்தம் கெட்டுவிடும். நாம் வேண்டுமென்றே பாவம் செய்துவந்தால் நம்மையே கடவுளுக்கு எதிரிகளாக ஆக்கிக்கொள்வோம். எனவே, இந்த விஷயத்தை நாம் ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்க வேண்டும்.1 யோவான் 3:4, 8.

இன்று பாவம் என்பதே இல்லாமல் போய்விட்டதா? அப்படி இல்லை. மக்கள் இன்று அதற்கு வேறு பெயர்களை வைத்துவிட்டனர்; அப்படிச் செய்தால் அது அந்தளவு மோசமானதாகத் தெரியாது என்று அவர்கள் நினைக்கிறார்கள். அநேகர் தங்கள் மனசாட்சியை மரத்துப்போகச் செய்துவிட்டனர் அல்லது அதை அசட்டை செய்துவிட்டனர். ஆனால், கடவுளுடைய தயவைப் பெற விரும்புவோர் இப்படிப்பட்ட மனப்பான்மையைத் தவிர்க்க வேண்டும். நாம் பார்த்தபடி, பாவத்தின் சம்பளம் மரணம்; தன்மானம் பாதிக்கப்படுவதோ வெட்க உணர்வோ அல்ல. பாவம் என்பது வாழ்வா சாவா என்பதைத் தீர்மானிக்கிற விஷயம்.

ஆனால், நம்முடைய பாவங்களைக் குறித்து உள்ளப்பூர்வமாக மனந்திரும்பி அவற்றை விட்டுவிட்டால் இயேசுவின் மீட்புப் பலியின் மூலம் மன்னிப்பைப் பெறலாம் என்பது எவ்வளவாய் ஆறுதல் அளிக்கிறது! ஆம், பவுல் இவ்வாறு சொன்னார்: “எவர்களுடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ அவர்கள் சந்தோஷமானவர்கள்; எந்த மனிதனுடைய பாவத்தை யெகோவா ஒருபோதும் கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டாரோ அந்த மனிதன் சந்தோஷமானவன்.”—ரோமர் 4:7, 8.  (w10-E 06/01)

[அடிக்குறிப்பு]

a கீழ்ப்படிகிற மனிதர்களுக்கு இயேசுவின் பலி எப்படி விடுதலை அளிக்கிறது என்பதைப் பற்றிய கூடுதலான விளக்கத்திற்கு பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தில் 47 முதல் 54 வரையுள்ள பக்கங்களைப் பார்க்கவும். இப்புத்தகம் யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.

[பக்கம் 16-ன் பெட்டி/ படம்]

சர்ச் போதனையில் ஒரு திருப்பம்

கத்தோலிக்க சர்ச்சுக்குச் செல்லும் பெரும்பாலோருக்கு லிம்போ போதனை (ஞானஸ்நானம் எடுக்காத குழந்தைகளின் ஆத்துமாக்கள் இறந்த பிறகு செல்லும் இடம் என்ற கத்தோலிக்கப் போதனை) எப்போதுமே குழப்பமாகத்தான் இருந்திருக்கிறது. ஆனால், கத்தோலிக்க வேத பாட நூலிலிருந்தே அது நீக்கப்பட்டு விட்டதால் சமீப ஆண்டுகளில் இந்த நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறது. 2007-ல் கத்தோலிக்க சர்ச் லிம்போ போதனைக்கு அதிகாரப்பூர்வமாகச் “சாவுமணி அடித்துவிட்டது”; ஓர் ஆவணத்தில், “ஞானஸ்நானம் எடுக்காமல் இறந்துபோகும் குழந்தைகள் ஒருவேளை இரட்சிக்கப்பட்டு நித்திய சந்தோஷத்திற்குள் கொண்டுவரப்படலாம் என்றும் அதை நம்புவதற்கு இறையியல் மற்றும் பொது வழிபாடு சம்பந்தமான காரணங்கள் உள்ளன” என்றும் சர்ச் குறிப்பிட்டது.—சர்வதேச இறையியல் குழு.

சர்ச் போதனையில் ஏற்பட்ட இந்தத் திருப்பம் எதற்கு வழிவகுத்தது? “மக்கள்மீது வழிவழியாகச் சுமத்தப்பட்ட சுமை” என்று பிரெஞ்சு பத்திரிகையாளர் ஆன்றி டெங்க் அழைத்த இந்தப் போதனையை சர்ச் கைவிட இந்தத் திருப்பம் வழிவகுத்தது. “சுயநலமான சர்ச் மத்திய காலத்திலிருந்து 20-ஆம் நூற்றாண்டுவரை இந்தப் போதனைக்கு ஆதரவளித்தது; ஏனென்றால், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஞானஸ்நானம் கொடுக்க வைப்பதற்காக லிம்போ போதனையை அது ஆர்வமாய்ப் பயன்படுத்தியது” என்றும் அவர் எழுதினார். ஆனால், சர்ச் போதனையில் ஏற்பட்ட இந்தத் திருப்பம் வேறு சில விவாதங்களைக் கிளப்புகிறது.

பாரம்பரியமா, பைபிளா? 12-ஆம் நூற்றாண்டில், உத்தரிக்கும் ஸ்தலத்தைப் பற்றி சர்ச்சில் ஏற்பட்ட விவாதங்களிலிருந்து லிம்போ போதனை பிறந்ததாக வரலாறு காட்டுகிறது. ஒருவர் இறந்த பின்பு அவருடைய ஆத்துமா தொடர்ந்து உயிர் வாழ்கிறது என கத்தோலிக்க சர்ச் போதிக்கிறது; அதோடு, பிள்ளைகள் ஞானஸ்நானம் எடுக்காததால் அவர்களுடைய ஆத்துமா பரலோகத்திற்குப் போக முடியாது, அவர்கள் எந்த தவறும் செய்யாததால் அவர்களுடைய ஆத்துமா நரகத்திற்கும் போகாது என்றும் போதிக்கிறது; எனவே, அந்த ஆத்துமாக்கள் போவதற்காக ஓர் இடத்தை சர்ச் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. இப்படித்தான் லிம்போ போதனை பிறந்தது.

ஆனால், இறந்த பிறகு ஒருவருடைய ஆத்துமா உயிர் வாழ்கிறது என பைபிள் கற்பிப்பதில்லை. மாறாக, ஆத்துமா என்பது ஒரு நபரை அல்லது அவரது உயிரைக் குறிக்கிறது எனக் கற்பிக்கிறது. ஆத்துமா அழியாது என்றல்ல, பாவம் செய்கிற ஆத்துமா “சாகும்” என்று பைபிள் தெளிவாகக் கற்பிக்கிறது. (எசேக்கியேல் 18:4) மேலும், இறந்தவர்கள் உணர்ச்சியற்ற நிலையில் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்றும் அது சொல்கிறது. எனவே, ஆத்துமா அழியும் என்பதால் லிம்போ என்ற ஓர் இடம் இருக்க முடியாது.—பிரசங்கி 9:5, 10; யோவான் 11:11-14.

கிறிஸ்தவப் பெற்றோர்களின் குழந்தைகளைக் கடவுள் பரிசுத்தமானவர்களாகக் கருதுகிறார் என பைபிள் காட்டுகிறது. (1 கொரிந்தியர் 7:14) குழந்தைகள் ஞானஸ்நானம் எடுத்திருந்தால்தான் அவர்களுக்கு இரட்சிப்பு கிடைக்கும் என்றால் பைபிளின் இந்தப் போதனை அர்த்தமற்றதாகிவிடுமே.

லிம்போ போதனை நீதியுள்ள, அன்புள்ள தகப்பனாக இருக்கிற கடவுளை உண்மையிலேயே அவமதிக்கிறது; அப்பாவிகளைத் தண்டிக்கும் கொடுங்கோலராக அவரைச் சித்தரிக்கிறது. (உபாகமம் 32:4; மத்தேயு 5:45; 1 யோவான் 4:8) பைபிளுக்கு முரணான இந்தப் போதனை உண்மைக் கிறிஸ்தவர்களுக்கு அர்த்தமற்றதாக இருப்பதில் எந்த ஆச்சரியமுமில்லை!

[பக்கம் 15-ன் படங்கள்]

கடவுளுடைய வார்த்தையிலுள்ள அறிவுரையின்படி வாழ்ந்தால் கடவுளோடும் மனிதரோடும் நல்ல உறவை அனுபவிக்க முடியும்.