திரும்பிய பக்கமெல்லாம் தீமை—ஏன்?
திரும்பிய பக்கமெல்லாம் தீமை—ஏன்?
பிறவியிலேயே நம்மோடு ஒட்டிக்கொண்டுள்ள அபூரணம், அதாவது பாவம் செய்கிற இயல்பு நம்மை ஆட்டிப்படைப்பதால் நாம் தவறு செய்கிறோம்; அல்லது தெரியாத்தனமாக எதையாவது செய்துவிட்டு பின்னர் வருந்துகிறோம்; இதை யாரும் மறுக்க மாட்டார்கள். அபூரணத்தால்தான் நாம் தவறு செய்கிறோம் என்பது வாஸ்தவம் என்றாலும் நம்மைச் சுற்றி நடக்கும் தீமைகளுக்கு அதுதான் காரணமா? தினந்தோறும் நேரிலோ... மீடியாவிலோ... கண்ணாரக் காண்கிற, காதாரக் கேட்கிற சிறிய, பெரிய கெட்ட காரியங்களுக்கு முழுக்க முழுக்க நம் அபூரணம்தான் காரணமா?
மனிதன் அபூரணத்தினால்தான் தவறு செய்கிறான் என்ற உண்மை ஒருபுறம் இருந்தாலும் அவனுக்கென்று சில நெறிகள் இருக்கின்றன... அவற்றை எந்தக் காரணத்திற்காகவும் அவன் மீறக் கூடாது... மனது வைத்தால் கெட்ட காரியங்களில் ஈடுபடாமல் இருக்க அவனால் முடியும்... என்பதே பொதுவான கருத்து. அவ்வாறே, தெரியாமல் பொய் சொல்வதற்கும் வேண்டுமென்றே மற்றவர்களைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் சொல்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது... தற்செயலாய்க் காயப்படுத்துவதற்கும் திட்டமிட்டுக் கொலை செய்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது... என்பதும் அதில் சேர்த்தி. ஆனால், பார்ப்பதற்கு சாதுவாய் இருக்கும் சாதாரண மக்களும்கூட கதிகலங்க வைக்கும் காரியங்களில் ஈடுபடுகிறார்களே... அது ஏன்? மக்கள் ஏன் கெட்ட காரியங்களில் ஈடுபடுகிறார்கள்?
இந்தக் கேள்விக்கு பைபிள் தெளிவாகப் பதிலளிக்கிறது. மக்கள் தெரிந்தே கெட்ட காரியங்களைச் செய்வதற்கான முக்கியக் காரணங்களை அது வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது. அவை பின்வருமாறு:
▪ “இடுக்கணானது ஞானியையும் பைத்தியக்காரனாக்கும்.”—பிரசங்கி 7:7.
மக்கள் சில சமயங்களில் சூழ்நிலை காரணமாக, தாங்கள் செய்ய நினைக்காத தவறுகளைக்கூடச் செய்துவிடுகிறார்கள் என்பதை பைபிள் ஒத்துக்கொள்கிறது. சிலர், ‘இப்படிச் செய்தால்தான் சரிப்பட்டு வரும்... அநீதிக்கும் அக்கிரமத்திற்கும் முடிவு வரும்...’ என்ற நினைப்பில் குற்றச் செயல்களில் ஈடுபடலாம். “பல சந்தர்ப்பங்களில், கட்டுப்படுத்த முடியாததாய்த் தோன்றுகிற அரசியல், சமுதாய, பொருளாதார பிரச்சினைகள் காரணமாக ஒருவன் விரக்தியடைந்து தீவிரவாதத்தில் இறங்கிவிடுகிறான்” என்று நகர்ப்புற தீவிரவாதம் (ஆங்கிலம்) என்ற புத்தகம் சொல்கிறது.
▪ “பண ஆசை எல்லா விதமான தீமைக்கும் வேராக இருக்கிறது.”—1 தீமோத்தேயு 6:10.
“பணம் என்றால், பிணமும் வாய் திறக்கும்” என்ற பழமொழியைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். பணம் கிடைக்கிறதென்றால், மனிதன் தறிகெட்டு நடக்கவும் துணிவான், தனது மானத்தையும் விலைபேசுவான் என்பதையே இந்தப் பழமொழி உணர்த்துகிறது. சிநேகமாக, கனிவாக பழகுவதுபோல் தோன்றும் நபர்கள்கூட பணம் என்று வரும்போது பகைவர்களாக, கொடியவர்களாக மாறிவிடுவதாய்த் தெரிகிறது. அச்சுறுத்தி அநியாயமாய்ப் பணம் பறிப்பது, மோசடி செய்வது, ஆள்கடத்துவது, கொலை செய்வது இவையெல்லாமே பேராசையில்தான் வேரூன்றியிருக்கின்றன.
▪ “மக்கள் தீமை செய்யத் துணிவதேன்? தீமை செய்வோருக்கு விரைவிலேயே தண்டனை அளிக்காததுதான் இதற்குக் காரணம்.”—பிரசங்கி 8:11, பொது மொழிபெயர்ப்பு.
அதிகாரத்தில் இருப்பவர்கள் பார்க்கவில்லை என்றால் எந்தத் தவறை வேண்டுமானாலும் செய்யலாமென நினைக்கும் மனோபாவத்தையே இந்த வசனம் சுட்டிக்காட்டுகிறது. நெடுஞ்சாலையில் வேகக் கட்டுப்பாட்டை மீறி வாகனம் ஓட்டுவது, பரீட்சையில் ‘காப்பி’ அடிப்பது, பொது நிதியைக் கையாடல் செய்வது, இதைவிட இன்னும் மோசமான காரியங்களில் மக்கள் ஈடுபடுவது இந்த எண்ணத்திலேயே! கெடுபிடியான சட்டங்கள் அமலில் இல்லாதபோது அல்லது ‘மாட்டிக்கொள்வோம்’ என்ற பயம் இல்லாதபோது பொதுவாக சட்டம், ஒழுங்கைக் கடைப்பிடிக்கும் நபர்கள்கூட குற்றச் செயல்களில் ஈடுபடத் துணியலாம். “தாங்கள் செய்கிற தவறுகளுக்குத் தண்டனை பெறாமல் குற்றவாளிகள் சுலபமாகத் தப்பித்துக்கொள்வதைப் பார்த்து நல்லவர்களும் படுமோசமான குற்றங்களைச் செய்யத் துணிந்துவிடுகிறார்கள்” என்கிறது விவாதங்களும் உண்மைகளும் (ஆங்கிலம்) என்ற பத்திரிகை.
▪ “ஒவ்வொருவனுடைய கெட்ட ஆசைதான் அவனைக் கவர்ந்திழுத்து, சிக்க வைத்து, சோதிக்கிறது. பின்பு அந்த ஆசை கருத்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கிறது.”—யாக்கோபு 1:14, 15.
நாம் எல்லாருமே அவ்வப்போது தவறான சிந்தனைகளுக்கு ஆட்படுவோர்தான். அன்றாடம் பல்வேறு சோதனைகளையும் சபலங்களையும் நாம் எதிர்ப்படுகிறோம். “மனிதர்களுக்குப் பொதுவாக வருகிற சோதனையைத் தவிர வேறெந்தச் சோதனையும் உங்களுக்கு வரவில்லை” என ஆரம்ப கால கிறிஸ்தவர்களுக்குச் சொல்லப்பட்டது. (1 கொரிந்தியர் 10:13) இருந்தாலும், ஒருவர் தவறு செய்வதும் செய்யாததும் அவர் எடுக்கிற தீர்மானத்தைப் பொறுத்தது. அதாவது, தன் மனதிலிருக்கும் கெட்ட சிந்தனையை அவர் முளையிலேயே கிள்ளி எறிந்தாரென்றால் தவறு செய்ய மாட்டார்; ஒருவேளை அதற்கு நீரூற்றி, அதை வளர்த்தாரென்றால் எளிதில் தவறு செய்துவிடுவார். கெட்ட சிந்தனை தனக்குள் ‘கருத்தரிக்க’ ஒருவர் இடமளித்தால் அது நிச்சயம் கெட்ட செயல்களைப் பிறப்பிக்கும்; இதைத்தான் கடவுளுடைய தூண்டுதலால் யாக்கோபு எழுதிய வசனம் எச்சரிக்கிறது.
▪ “ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான்.”—நாம் யாருடன் பழகுகிறோமோ, அவர்கள் நல்லவர்களாக இருந்தாலும் சரி கெட்டவர்களாக இருந்தாலும் சரி, அவர்களுடைய பழக்கவழக்கங்கள் நம்மைத் தொற்றிக்கொள்வது உறுதி. பல சமயங்களில் மக்கள் தாங்கள் செய்ய நினைக்காத காரியங்களைச் செய்துவிடுகிறார்கள். அதனால் விபரீத விளைவுகளைச் சந்திக்கிறார்கள். அதற்குக் காரணம், அவர்களுடைய சகாக்களின் அழுத்தம் அல்லது அநேகர் சொல்வதுபோல், கெட்ட நண்பர்களின் சகவாசம். பைபிளில், ‘மூடன்’ என்று சொல்லும்போது புத்தியில்லாதவனைக் குறிப்பதில்லை; மாறாக, கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளிலுள்ள ஆலோசனைகளை அலட்சியப்படுத்துகிறவனையே குறிக்கிறது. இளைஞர்களாக இருந்தாலும் சரி பெரியவர்களாக இருந்தாலும் சரி, பைபிள் தராதரங்களின் அடிப்படையில் நண்பர்களையும் சகாக்களையும் தேர்ந்தெடுக்காவிட்டால் நாம் ‘நாசமடைவது’ உறுதி.
மக்கள் ஏன் கெட்ட காரியங்களைச் செய்கிறார்கள்... அதிலும் சாதாரண மக்கள் ஏன் கதிகலங்க வைக்கும் காரியங்களைச் செய்கிறார்கள்... என்பதை மேற்கூறப்பட்ட வசனங்களும் இன்னும் அநேக வசனங்களும் ரத்தினச்சுருக்கமாக விளக்குகின்றன. தீமைக்குப் பின்னால் இருக்கும் காரணங்களைத் தெரிந்துகொள்வது நமக்குப் பிரயோஜனமாக இருந்தாலும் இதற்கு ஒரு விடிவுகாலம் பிறக்குமா என்பதுதான் கேள்வி! ஆம், நிச்சயம் பிறக்கும்!! மக்கள் கெட்ட காரியங்களில் ஈடுபடுவது ஏன் என பைபிள் சொல்வதோடு அவை சுவடு தெரியாமல் மறைந்துவிடும் என்றும் வாக்குறுதி அளிக்கிறது. சரி, அது என்ன வாக்குறுதி? இன்றைக்கு உலகத்தில் நடக்கும் எல்லாக் கெட்ட காரியங்களுக்கும் முடிவு வருமா? பதில்... அடுத்த கட்டுரையில்! (w10-E 09/01)