நண்பர்களை ஞானமாய் தேர்ந்தெடுங்கள்
ரகசியம் 4
நண்பர்களை ஞானமாய் தேர்ந்தெடுங்கள்
பைபிள் என்ன சொல்கிறது? “ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்.”—நீதிமொழிகள் 13:20.
என்ன சவால்? நம்முடைய திருப்தி எனும் தீபத்திற்கு நண்பர்கள் எண்ணெய் வார்க்கலாம் அல்லது தண்ணீர் ஊற்றலாம். அவர்களது மனோபாவம்... பேச்சு... இவையெல்லாம் வாழ்க்கையைப் பற்றிய நம் கண்ணோட்டத்தைப் பாதிக்கலாம்.—1 கொரிந்தியர் 15:33.
உதாரணமாக, கானான் தேசத்தை உளவு பார்த்துவிட்டுத் திரும்பிய 12 மனிதர்களைப் பற்றிய பைபிள் பதிவைக் கவனியுங்கள். அவர்களில் பெரும்பான்மையோர் “உளவு பார்த்துவந்த நாட்டைப் பற்றித் தவறான தகவலை இஸ்ரயேல் மக்களுக்குக் கொண்டுவந்தனர்.” ஆனால், அவர்களில் இருவர் மட்டும் கானான் தேசத்தைப் பற்றிப் புகழ்ந்து பேசினார்கள், அது “மிகச் சிறந்த நாடு” என்று சொன்னார்கள். ஆனால் அந்தப் பத்து உளவாளிகளின் கெட்ட மனோபாவம்தான் மக்களைத் தொற்றியது. ‘மக்கள் கூட்டம் முழுதும் உரத்த குரலில் புலம்பியது. . . . இஸ்ரேயல் மக்கள் அனைவரும் முறுமுறுத்தார்கள்’ என்று பைபிள் சொல்கிறது.–-எண்ணாகமம் 13:30–14:9, பொது மொழிபெயர்ப்பு.
அதேபோல், இன்றைக்கும் அநேக “ஆட்கள் முறுமுறுக்கிறார்கள், தங்களுடைய வாழ்க்கையைப் பற்றிக் குறைகூறுகிறார்கள்.” (யூதா 16) ஒருபோதும் மனநிறைவு அடையாத நண்பர்கள் வட்டத்தில் இருந்துகொண்டு திருப்தி காண்பது மகா கஷ்டமே.
நீங்கள் என்ன செய்யலாம்? உங்கள் நண்பர்களுடன் உரையாடிய விஷயங்களை மனதில் ஓடவிட்டு அவற்றை அலசிப் பாருங்கள். உங்களுடைய நண்பர்கள் தாங்கள் வைத்திருக்கிற பொருள்களைப் பற்றியே அடிக்கடி பீற்றிக்கொள்கிறார்களா, அல்லது தங்களிடம் ‘அது இல்லை, இது இல்லை’ என்று சதா குறைபட்டுக் கொள்கிறார்களா? நீங்கள் அவர்களுக்கு எப்படிப்பட்ட நண்பர்களாய் இருக்கிறீர்கள்? நண்பர்கள் உங்களைப் பார்த்துப் பொறாமைப்பட வைக்கிறீர்களா, அல்லது இருப்பதை வைத்து திருப்தியுடன் இருக்க உற்சாகப்படுத்துகிறீர்களா?
அரசனாய் அரியணை ஏறவிருந்த தாவீது மற்றும் சவுல் அரசனின் மகன் யோனத்தானின் முன்மாதிரியைக் கவனியுங்கள். தாவீது வனாந்திரத்தில் நாடோடியாய் திரிந்து கொண்டிருந்தார். தனது சிம்மாசனத்தை தாவீது பறித்துவிடுவான் என பயந்து, சவுல் அரசன் அவனைத் தீர்த்துக்கட்ட விரும்பினார். முறைப்படி பார்த்தால், யோனத்தானே அடுத்து அரசனாக அமர வேண்டும்; ஆனால், தாவீதை அடுத்த அரசனாக கடவுள் நியமித்திருந்ததார்; அதை யோனத்தான் ஏற்றுக்கொண்டார்; அதோடு, தாவீதின் உற்ற நண்பராகவும் இருந்தார். அதனால், தன் நண்பனை ஆதரிப்பதில் அவர் திருப்திப்பட்டுக் கொண்டார்.—1 சாமுவேல் 19:1, 2; 20:30-33; 23:14-18.
இதுபோன்ற நண்பர்கள்தான், ஆம், திருப்தியுடன் இருந்து உங்களுடைய நலனில் அக்கறை காட்டுகிற நண்பர்கள்தான், உங்களுக்கு வேண்டும். (நீதிமொழிகள் 17:17) இப்படிப்பட்ட நண்பர்கள் வேண்டுமானால் நீங்களும் இதுபோன்ற குணங்களைக் காட்ட வேண்டும்.—பிலிப்பியர் 2:3, 4. (w10-E 11/01)
[பக்கம் 7-ன் படம்]
நண்பர்கள் உங்களுக்குத் திருப்தி அளிக்கிறார்களா அல்லது உங்கள் திருப்தியை அழிக்கிறார்களா?